சகுனங்களும் சம்பவங்களும் – 5

ஒரு குறுந்தொடர் – ஜெய் மஹேந்திரன்

இந்தத் தொலைக்காட்சி சீரியலை மலையாளம் என்பதால் பார்க்க ஆரம்பித்தேன். சுகாசினி மணிரத்தினம் இருக்கிறார் என்னும் அடிவயிற்றைப் பிசையும் பயம் கலந்த எச்சரிக்கை இருந்தாலும் கூட பார்க்கத் துவங்கினேன்.

கேரளாக்காரார்கள் ஏமாற்றவில்லை. ‘தலைமைச் செயலகம்’ போன்று தட்டையாக இல்லை; ‘பேட்டைக்காளி’ போல் ஒற்றைத்தனமாக இல்லை; ’சட்னி சாம்பார்’ போல் யோகி பாபுவை மட்டும் நம்பி இல்லை. நிறைய நிஜம்; பல்வேறுவிதமான கதாபாத்திரம்; அப்புறம், அந்த ஹீரோவின் பயணம் – ஆரம்பம் ஏறுமுகம்; நடுவே அதல பாதாளம்; அதன் பின் மீட்சி – சிறப்பான சம்பவம்.

இந்தியன் -2 அல்லது மூன்று – இப்படித்தான் இருந்திருக்க வேண்டும். சாமானியனின் உணர்வைத் தொட்டு, அன்றாட வாழ்வைப் பின்னிப் பிணைந்து, சமரசங்களுடன் சுவாரசியமாக வந்திருக்க வேண்டிய இயக்குநர் ஷங்கர் எல்லாம் பேஸ்தடித்து விழுந்து வாரி சறுக்கும்போது, அண்டை மாநிலக்காரர் சிக்சர் அடிக்கிறார்.

கதையின் மையப்பகுதி வருவாய்த் துறையின் அலுவலகத்தில் நடைபெறுகிறது, அங்கு அதிகாரிகளும் பொதுமக்களும் கோப்புகள் நிறைந்த மேசைகளில் சிதறிக்கிடக்கின்றனர், குழப்பம் என்பது விதிமுறை. ஜெய் மகேந்திரனில் உள்ள மகேந்திரன் சைஜு, துணை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அமைச்சருடன் (மணியன்பிள்ளை ராஜு) அடிக்கடி தொடர்பில் இருக்கும் ஒரு அரசியல் கட்சியின் செல்வாக்கு மிக்க உறுப்பினராவார். சட்டவிரோதமாக நடத்தப்பட்ட கடையை இடிக்கும்படி வருவாய்த் துறையின் உத்தரவால் உருவாக்கப்பட்ட குழப்பத்தின் காட்சியில் மகேந்திரன் நுழைவதில் தொடர் தொடங்குகிறது. கடையை நடத்தும் வயதான பெண்மணி (பாலி வல்சன்) ஒரு பெரிய துளையிடப்பட்ட கரண்டியால் அதிகாரிகளை மிரட்டி, மகேந்திரன் அழைத்துச் செல்லும் வரை போலி வாக்குறுதிகளை அளித்து சமாதானப்படுத்துகிறார்.

இது ஒரு தந்திரமான அதிகாரியின் வக்கிரமான முறைகளை நிறுவ, மக்களுக்கு உதவுவதற்கும் விஷயங்களைச் சாதிப்பதற்கும் இடையில் சமநிலையை உருவாக்குவதற்கான ஒரு அறிமுகம் ஆகும். அவர் உங்கள் விதியைக் கடைப்பிடிக்கும் ஹீரோவோ அல்லது நீதிக்கான போராளியோ அல்ல, அதிர்ஷ்டவசமாக, அதிகாரத்துவ உலகில் நடக்கும் அனைத்து தவறுகளுக்கும் எதிராக ஏகபோகங்களை வெளிப்படுத்துவதில்லை. அவர் போட்டிக் கட்சி உறுப்பினர்களைத் தவிர்த்து, பெரும்பாலான மக்களுடன் பழகுவது போலவும், அவரது மனைவியுடன் (மியா ஜார்ஜ்) வசதியான உறவைக் கொண்டிருப்பதாகவும், ஸ்கை ப்ளூ ஸ்கூட்டரில் எல்லா இடங்களிலும் செல்வதாகவும் தெரிகிறது. திருவனந்தபுரத்தின் அடையாளங்கள், விவரிக்க முடியாத இடமான வீடு, அலுவலகம், செயலகம், அருங்காட்சியகம் மற்றும் தலைநகரின் பரபரப்பான சாலைகளுக்கு இடையே மகேந்திரனின் பயணங்களின் பின்னணியில் உள்ளன.

நான் இந்த அலுவலகங்களுக்குச் (சென்னையில்) சென்றிருக்கிறேன். பார்ப்பனர் என சான்றிதழ் பெற லஞ்சம் கேட்டவர்களைப் பார்த்து வியந்து அசூயை கொண்டிருக்கிறேன். எதற்கும் ஆள்; எவற்றுக்கும் காசு என்பது வருவாய்த் துறை இலட்சணம். இந்தியாவின் எந்தப் பிரிவும் லஞ்சமும் லாவண்யமும் நிறைந்தது. அதை நகைச்சுவையாகப் பார்க்க கொஞ்சம் தைரியமும் நிறைய சாதுரியமும் தேவை. அது இங்கே சாத்தியம் ஆகியிருக்கிறது. 

இன்றைய நாளில் எவர் வேண்டுமானாலும் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வனும் வெற்றிமாறனின் விடுதலையும் எடுத்து விடலாம். எனினும், தாலுகா அலுவலகம், அதன் அரசியல், உள்ளே நிலவும் சித்தாந்தம், மேலிட மந்திரி, உள்கட்சி பூசல், தலைமை அதிகாரியின் கையாலாகாத்தனம் – இதுவெல்லாம் காமெடியாகச் சொல்கிறார்கள். அடுத்தது என்ன ஆர்வமூட்டுகிறார்கள். நெஞ்சில் தங்க வைக்கும் குணச்சித்திரங்களை கறுப்பும் வெளுப்புமாக இல்லாமல், அசலான பழுப்பு நிறத்தில் மனதில் தைக்கிறார்கள்.

நீங்கள் பஞ்சாயத் (ஹிந்தியில்) பார்த்து இருப்பீர்கள். அதைத் தமிழில் ‘தலைவெட்டியான் பாளையம்’ என்று எடுத்ததை நினைத்து வெறுப்பு கலந்த விரக்தியில் இருப்பீர்கள். அதற்கு இது நல்ல ஜண்டு பாம் மருந்து. 

சுஹாசினியை அளவாக நடிக்க வைத்திருக்கிறார். அரசாங்கத்தின் தகிடுதத்தங்களை குற்றப்பத்திரிகையாக அல்லாமல் நெஞ்சில் நிற்கும் அவலச்சுவையோடு பட்டியல் போட்டிருக்கிறார். மலையாளத்தின் முன்னணி நடிகர்களைக் கோர்த்திருக்கிறார். செங்கொடியோ முதலியமோ, அதன் நச்சுகளைத் தெளித்திருக்கிறார். குடிமகன் பார்வை மட்டுமல்ல… அந்தப் பக்கம் இருக்கும் கோப்பாளர் பார்வை; அங்கே நிலவும் அவலம்; அதிகார வர்க்கத்தின் கைத்தளை; ஊடகத்தின் நச்சரிப்பு – எல்லாம் உண்டு. இதற்கு சைஜு குருப் என்னும் முக்கிய நடிகரைப் பாராட்ட வேண்டும். அவர் சுகாசினியை ஆற்றுப்படுத்துகிறார். 

தமிழிலேயே இந்த வெப் சீரீஸ் என்பது தகிடதத்தோம் தகிடத்திமி என தத்தக்கா பித்தக்கா ஆட்டம். இது மேற்கத்திய ஆங்கில லோகத்தில் கைவசமாக்கிய மந்திரம். இதை ஒருவாறாக ராகுல் ரிஜி நாயர் கைவசமாக்குகிறார்.

இது கஞ்சன்ஜங்கா வெற்றி!

ஆய் கதை (AI #2)

எனக்கு பேயை விட பேய் படத்தைப் பார்க்க பயம். முக்கியமாக நகைச்சுவைப் பேயைக் கண்டால் புளிய மரத்தில் ஏறிக் கொள்வேன்.

புளிய மரம் என்றால் இருவர். “சிவகாமி அம்மாள் தன் சபதத்தை நிறைவேற்றிவிட்டாரா?” என்று கல்கியைப் பார்த்துக் கேட்ட ஜே.ஜே. ஒருவர்.

சு.ரா. புளிய மரம் தோற்றுவித்தார். சடகோபன் ஆகிய இன்னொருவர் பதினாறு ஆண்டுகள் பேசாமல் புளிய மரத்திற்க்குள்ளே தவம் புரிந்தவர். ஆதிசேஷனின் அவதாரமாகிய லட்சுமணன், திருப்புளியாழ்வாராக தோன்றி 1,296 பதிகங்களை எழுதியவர்.

பாசுரம் என்று எழுதுவது வைணவப் புளி வழக்கு. பதிகம் என்றால் தேவாரமும் திருமுறையும் என்பது சைவப் புளி வழக்கு, 

புளித்துப் போன வழக்கு என்று நவீன விமர்சகர் உபயோகிப்பதில்லை. தேய்வழக்கு என்பார்; தட்டை என்கிறார்; பழைய பஞ்சாங்கம் என்றார்.

‘சுவத்துக் கீரையை வழிச்சுப் போடடி சொரணைகெட்ட வெள்ளாட்டி’ என்னும் பழமொழியில் வருவது புளிக்கீரை. “அரைச்ச மாவ அரைப்போமா” என்பது முளைக்கீரை. 

புளியை இக்காலத்து புள்ளிங்கோ கிட்டே படிக்கச் சொன்னால் புல்லிங்கோ ஆக்கி விடுவார். அசோகமித்திரன் கூட விடுதலைப் புலிகள் பற்றி புளிக்கலைஞன் எழுதியிருக்கிறார் என சாட்ஜிபிடி சொல்வதை நம்பி தமிழ் விக்கியில் எழுதுவார். 

அவர்களின் உச்சரிப்பை சரியாக்குவதற்கு ஆர்டிஃபிஷியல் இண்டெல்லிஜன்ஸ் (அப்பாடி… தலைப்பு வந்தாச்சு) இருக்கிறது.

அந்த ஆ.யி. இல்லாமல் பாடல் இயற்றியவர் ஆவூர் மூலங்கிழார். பாடப்பட்ட புளி தின்று கொட்டைப் போட்ட பெருமான்: மல்லி கிழான் காரியாதி – இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் இருந்த மல்லி என்னும் ஊர்க்குத் தலைவன். 

அதற்கு முன்னால் நான் படித்தது கி.ரா.: ‘வேட்டி’, நெசவு செய்து எல்லோரின் மானத்தைக் காக்கும் நெசவாளிகள் வாழ்வில் மானம் காற்றில் பறப்பதை எள்ளலோடு சொல்லும் கதை. தூங்கா நாயக்கர் நெசவாளி. அவருக்கு இருப்பதோ ஒரே ஒரு வேட்டி. அதைத் துவைத்துக் காயப் போட்டு மறுபடி மறுபடி உடுத்திக் கொள்வார். அவ்வளவு வறுமை. ஒரு நாள் காற்றாட வெளியே வரலாம் என்று செல்கிறார்.

வழியில் ஒரு புளிய மரம். சில புளியம் பழங்கள் விழுந்து கிடக்கின்றன. வாயூர ஆசைப்பட்டு உட்கார்ந்து எடுக்க முயல்கிறார். பழைய வேட்டி ரெண்டாக ஒரு சாண் நீளத்துக்குக் கிழிந்து விடுகிறது. 

தியாகி பென்சன் கிடைக்காமல் போய் விடுகிறது என்ற குறிப்பையும் கதை சுட்டும். கிழிந்தது நாயக்கர் வேட்டி மட்டுமா? தேசத்தின் விடுதலையும் அல்லவா?

இப்பொழுது புறநானூற்றில் 177 ஆம் பாடல்.

தலைப்பு: யானையும் பனங்குடையும்! 

ஒளிறுவாள் மன்னர் ஒண்சுடர் நெடுநகர்,
வெளிறுகண் போகப் பன்னாள் திரங்கிப்,
பாடிப் பெற்ற பொன்னணி யானை,
தமர்.எனின், யாவரும் புகுவ, அமர்எனின்,
திங்களும் நுழையா எந்திரப் படுபுழைக், 5

கள்மாறு நீட்ட நணி நண இருந்த
குறும்பல் குறும்பின் ததும்ப வைகிப்,
புளிச்சுவை வேட்ட செங்கண் ஆடவர்
தீம்புளிக் களாவொடு துடரி முனையின்,
மட்டுஅறல் நல்யாற்று எக்கர் ஏறிக், – 10

கருங்கனி நாவல் இருந்துகொய்து உண்ணும்,
பெரும்பெயர் ஆதி, பிணங்களிற் குடநாட்டு,
எயினர் தந்த எய்ம்மான் எறிதசைப்
பைஞ்ஞ்ணம் பெருத்த பசுவெள் அமலை,
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய, 15

இரும்பனங் குடையின் மிசையும் பெரும்புலர்
வைகறைச் சீர்சா லாதே.

திணை: பாடாண்திணை – ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

துறை: இயன் மொழி. (வந்தார்க்கு கறியும் சோறும் வாரி வழங்கிய கொடை இயல்பைப் பாடுகின்றார் புலவர்) 

காரியாதி சோற்றையும் கள்ளையும் பலருக்கும் அளிப்பது மற்ற வேந்தர்கள் களிறுகளைப் பரிசாக அளிப்பதைவிட மிகச் சிறந்தது என்று இப்பாடலில் காரியாதியின் விருந்தோம்பலையும் வள்ளல் தன்மையையும் புகழ்ந்து பாடுகிறார்.

உரை: அரசர்கள் போர் புரிகிறார்கள். அதனால் வாள்கள் எல்லாம் பளபளவென்று மின்னுகிறது. அங்கே சண்டையின் நடுவே சிந்து சமவெளி எப்பொழுது ஓயுமோ என மாதக்கணக்காய் காத்திருந்து யானையை பரிசாகப் பெற்று பெற்று வீட்டுக்குக் கொண்டு வரலாம்.  அது வேந்தர்களிடம் பரிசு பெறும் முறை. ஆனால் மல்லி கிழான் காரியாதியிடம் பரிசு பெறுவது அப்படிப்பட்டதல்ல.

மல்லி கிழான் காரியாதியின் அரண்மனைக்குள் அவனுக்கு வேண்டியவர்கள் எளிதில் புகலாம். ஆனால், சண்டை என்று வந்துவிட்டால், அந்த அரண்மனையில், நள்ளிரவின் நிலவொளி கூட நுழைய முடியாதவாறு பல பொறிகள் பொருத்தப்பட்டுள்ளன. அங்கே, கள்ளை ஒருவருக்கொருவர் மாறி மாறிக் கொடுக்கும் வகையில் நெருங்கிய பாதுகாப்பான பல இடங்கள் உள்ளன. அங்கு, கள்ளை நிரம்ப உண்டு, பிறகு, புளிச்சுவையை விரும்பிய, சிவந்த கண்களை உடைய ஆடவர் இனிய புளிப்புடைய களாப் பழங்களையும் துடரிப் பழங்களையும் உண்பார்கள். அப்பழங்களைத் தின்று சலிப்பு ஏற்பட்டால், காட்டாற்றின் கரையில் மரங்கள் உள்ள மணற்குன்றில் ஏறிக் கரிய நாவல் பழங்களைப் பறித்து உண்பார்கள். மூங்கில் காடுகள் செறிந்த குடநாட்டில், வேடர்கள் வேட்டையாடிக் கொண்டுவந்த முள்ளம்பன்றியின் கொழுமையான தசைத்துண்டுகளுடன் வெண் சோற்று உருண்டைகளை விருந்தாக வருபவர்க்கெல்லாம் காரியாதி கொடுப்பான். அவர்கள் அதைப் பெரிய பனங்குடையில் வாங்கி உண்பார்கள். இவ்வாறு, மல்லி கிழான் காரியாதியின் அரண்மனையில், பொழுது புலரும் விடியற்காலை நேரத்தில் நடைபெறும் விருந்தின் சிறப்புக்கு வேந்தர்களின் யானைக்கொடை கூட ஒப்பாகாது.

இப்படியெல்லாம் பாட்டுப் பாடி பரிசில் வாங்கியது புளித்தகதை.

இப்படியெல்லாம் பிறந்த நாள் வாழ்த்தும் பாராட்டு பதிவும் போட்டு லைக்கும் ஷேரும் வாங்குவது முகப் புத்தக புளிக் கதை. 

பொங்கினால் புளி, மங்கினால் மாங்காய் என்பது தமிழர் வழக்கம். அதாவது மழை மிக அதிகமாகப் பெய்தால் புளி அதிகமாகக் காய்க்கும். வெயில் அதிகமாக இருந்தால் மாங்காய் மற்றும் மாம்பழ விளைச்சல் அதிகமாக இருக்கும்.

பட்டும் படாமல் புழங்குதலை தமிழ் வழக்கில் ஓடும் புளியம் பழமும் போல என வழங்குவர். ஏனெனில் புளியின் ஓடானது அதன் சதையோடு ஒட்டுவதில்லை

புளி எனக்குப் புளித்ததல்ல – அதைக் குறித்து ‘குத்திக்கல் தெரு’வில் கூட எழுதியிருக்கிறேன்.

கரிசல் காட்டு கடுதாசியில் தன்னை விட்டுப் பிரிந்து செல்லும் மகனிடம் அம்மா சொல்லுவாள் “போகும் போது புளியமரத்தின் கீழ் இளைப்பாறு, வரும் போது வேப்பமர நிழலில் இளைப்பாறு”!

புளி என்றால் நனவோடை.
புளி மா என்றால் நிரை-நேர்; புளிமாங்காய் – நிரை-நேர்-நேர்; புளிமாங்கனி – நிரை-நேர்-நிரை
புளி உங்கள் புனைவில் இருந்தால் இனிப்பும் கசப்பும் மட்டும் இல்லாத நிதர்சனம்.
புளிய மரத்தில் பிசாசு வரவேண்டும்.
புளிய மரம் உள்ள கிராமத்தில் குழந்தைகள் விளையாடும்.
காதல் புளித்து கல்யாணம் ஆகலாம்.
கலாச்சாரம் புளித்து கமலா ஹாரிஸ் ஆகலாம்.
புலிக்குப் பிறந்தது புளியாகுமா?


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.