(1)

தினம்
விடியலை விழித்திருந்து
தவற விடாது வரவேற்கும்
மரங்களாலும்
பறவைகளாலுமே
உலகம் நம்பிக்கையாகிறது
எனக்கு.
(2)
ஒரு பிணத்தின் மீது
உட்கார்ந்து விட்டு
’தான்பாட்டுக்கு’ பறந்து போகிறதே
இந்த ஈ,
எழுப்பி விட்டது போல்
பிணத்தை?
(3)
பின்திரும்பிப் பார்க்கிறேன்
என்னைப்
பின்திரும்பிப் பார்க்காது
பறந்து போகும் பறவையை-
ஏமாற்றத்தைத்
தவிர்க்க முடியாமல்
(4)
ஒன்றுமில்லையை
நிராகரிக்க
ஒன்றுமில்லையாய்
நிராகரிப்பை
நிராகரிக்க
நிராகரிப்பில்லையாய்
(5)
அடுத்தடுத்த
இரு கணங்களுக்கிடையேயுள்ள
இடைவெளியில்
எப்படியாவது நுழைந்து
நிலைபெற்று விடப் பார்க்கிறேனே
என் சாசுவதத்திற்கு
நான் !
(6)
ஒரு சொல்லின் சூட்சுமம்
முழுதும் அறிந்தோமா?
அறிந்து விட்டால்
சொல்லற்று
மெளனமாகிப் போவோமா?
(7)
அலையும் இலைகளில்
நிலத்தில்
எப்படி பரபரக்கிறது பார்
நிழல் மரம்
நிற்பது போல்
தோன்றினாலும்!
(8)
வெளியில்
ஓர் ஓவியமாய்த்
தெரிகிறது அது
தன்னை ஓர்
ஓவியமாய் வரைந்து
அது-
அந்தியில்
ஒரு மரம்.
(9)
என்னிடமிருந்து
என் அர்த்தத்தில்
புறப்பட்ட சொல்
உன்னிடம் சேரும் போது
உன் அர்த்தத்தில்
உன் சொல்-
இடையில்
பொதுவாய் நிலவிய
மெளனம் போலில்லாமல்.
(10)
அற்றை
முழுநிலவு நினைவில்லை
இற்றை
முழுநிலவின் நனவில்.
(11)
தனிமையில்
உட்கார்ந்திருந்தேன்.
அருகில் வந்து சத்தமேயில்லாமல்
அமர்ந்திருந்தது
என் நிழல்.
(12)
ஒளியின்
இருள் வைரம்
எதற்குள்
புதைந்து?
(13)
இராவில்
ஒரு பூவின் விழிப்பு
எப்படி மணக்கிறது!
(14)
எப்படி எப்போதும்
என்னிடம் முன்னமே
வந்து சேர்கிறேன்?
(15)
நிழலோடும்
நினைவோடும்
பழகியிருக்கிறாயா
நீ?
என்ன வித்தியாசம்?
(16)
உலரிலைகளை
ஏன் இப்படி
அலைக்கழிக்கிறது காற்று
உயிர் கொடுக்கிறேனென்று?
(17)
’முடிக்கப்படாதது’
முடிக்கப்பட வேண்டியதைத்
தீர்மானிக்க முடியாமல்-
முடிக்கப்படாமலேயே
(18)
ஒரே ஒரு பார்வையில் குறி வை
கோடி கோடி நட்சத்திரங்களை,
ஒரே ஒரு நிலவைக் குறி வைப்பதை விட-
சவாலா விடுகிறாய்?
(19)
அந்திச் சூரியனின்
செவ்வொளியில்
நாற்றங்கால் மேடையில்
நடனமிடும்
பசுமையில் பூத்து
வெண் நாரைகளின்
ஒயில்
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
