உணர்வு
சிறு குழந்தைகள் தரையில் நீந்தத் தொடங்கும் போது நாம் ஒன்றை கவனிக்கலாம். உடல் முழுதும் தரையில் இருந்தாலும், நாக்கால், பூமியை நக்கிப் பார்க்கும். தொடு உணர்வின் மூலம் சுவை அறிதல் நிகழ்கிறது. சில காலங்கள் பொறுத்து, அந்தச் சுவை பிடிக்காமலோ, அல்லது பெற்றோர் தடுப்பதாலோ, நாவால் தரையை உணரக்கூடாதென்ற தெளிவு அதற்கு வருகிறது. அதே குழந்தை, தவழும்போது, அந்தத் தரையை ஒரு ஆதாரமாக உணர்வால் பற்றிக் கொள்கிறது. அவ்வளவு ஏன், பிறந்த குழந்தை அன்னையை தொடு உணர்ச்சியால் அறிவதும், பால் சுரப்பதை உணர்வதும் இயற்கையாக நடைபெறுகிறது. அந்த இயற்கை உணர்வு எப்படி அல்லது எதனால் ஏற்படுகிறது?

(1) அறிவு, அறிஞர்கள். குழப்பங்கள்
இயான்மெக்கெல்க்ரிஸ்ட் (Dr. Iain McGilchrist) பிரக்ஞயைப் பற்றி சில கேள்விகளைக் கேட்டு, சிந்திக்கத் தகுந்த பதில்களையும் சொல்கிறார். அது என்ன, என்னதான் அதன் செயல்பாடு, கோமாவில் இருப்பவருக்கு தனிப்பட்ட உள்ளுணர்வு இருக்குமா போன்ற கேள்விகள். அதைப் பிறர் உணரவோ, புரிந்து கொள்ளவோ முடியுமா? (திரு லா ச. ராவின் ஒரு சிறு கதையில், கோமாவில் இருக்கும் குடும்பத்தலைவருக்கு நினைவு திரும்பிவிடும், அது நாள் வரை அவரைப் பாதுகாத்த அவர் மனைவி அப்போது இறந்திருப்பார். பெரும்பாலான இந்தியர்களுக்கு மூளைச் சாவு என்பது மரணமல்ல, இதயத்துடிப்பு நின்றால் தான் மரணம்.) துணை அணுப்பொருட்களிலும் (sub atomic particles) கூட, உயிரற்றவைகளிலும் (non-life) கூட இந்தத் தன்னுணர்வு இருக்க சாத்தியங்கள் இருக்கலாம் என்று கருதுகிறார் அவர். உயிருள்ளவைகளுக்கும், உயிரற்றவைகளுக்கும் இடையே காணப்படும் உணர்வு நிலை பேதம் எந்தளவில் உள்ளது என்பதுதான் முக்கியம், உணர்வே இல்லை என்று சொல்வது நாம் இன்னமும் அறியாத, ஆனால், ஊகித்து உணர முடிந்த, ஒரு விஷயத்தைப் பற்றி மிகத் தீர்மானமாகக் கருத்தைச் சொல்வதைப் போன்ற அசட்டுத்தனம்.
உணர்வு என்பது அனைத்திலும் இருக்கக்கூடிய ஒன்று என்று ஒரு பார்வையும், உணர்வுதான் இந்த உலகத்தின் அடிப்படை என்ற ஒரு பார்வையும் நிலவுகிறது. பொருளும், உணர்வும் (Matter & Consciousness) பின்னிப் பிணைந்தவை என்று அவர் சொல்கிறார். பொருளில் உணர்வு அமைந்துள்ளது என்றும், பிரக்ஞை, பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொள்ள பொருளுக்கு உதவுகிறது என்றும், எனவே, இயற்பியல், பொருள் சார்ந்து மட்டுமே ஆராயாமல், உணர்வைச் சார்ந்து ஆராயவும் வேண்டும் என்று அவர் கேட்டுக் கொள்கிறார். (The mystery of Consciousness)
மனம் சார்ந்த மர்மங்கள் நீடிக்கும் நிலையில், பொருளும், உணர்வும், மனிதர்களால் எந்த வகையில் கையாளப்படுகின்றன என்பது அறிவியல், நரம்பியல், மற்றும் பரிணாம வளர்ச்சியில் நாம் இதுவரை காணாமல் விட்டுப் போயிருக்கக்கூடிய கண்ணிகள்; இவை அனைத்தையும் இணைத்துப் பார்க்க வேண்டும்.
நமது மூளை இரு அரைக் கோளங்களாய் இருக்கிறது. இடது மூளை தர்க்கம், பகுப்பாய்தல், மொழி இவற்றை முதன்மை நோக்காகக் கொண்டிருக்கிறது. வலது மூளை, பரிவு, முகங்களை நினைவு வைத்துக் கொள்ளுதல், படைப்பூக்கம், முழுமையான சிந்தனை இவற்றில் கவனம் கொள்கிறது. இயானின் கூற்றுப்படி நவீன மனிதன் தன் இடது மூளைக்கு அதிக மதிப்பு கொடுத்து, பரிவு, படைப்பூக்கம் போன்றவற்றை பின் தள்ளியிருக்கிறான். இரண்டு அரைக் கோளங்களும் இணைந்து நாம் உணர்வதையும், அறிவதையும், தெளிவு பெறுவதையும் முழுமை செய்கின்றன. அதற்கு உறுதுணையாக இருப்பது இரண்டையும் பிணைக்கும் நரம்பு இழைகள். கோர்பஸ் காலோசம் (Corpus Callosum) என்று அழைக்கப்படும் இந்த நரம்பு இழைகள் அறுபட்டுள்ள நிலையை, ‘பிரிந்த மூளை நோயாளிகளில்’ (split-brain patients) காணமுடிகிறது என்று சொல்கிறார் அவர். இவரது பல சிந்தனைகள் கல்வி, உளவியல், ஆகியவற்றில் பயனாகின்றன. எனினும், உணர்வு என்பதைப் பற்றிய இவரது சிந்தனைகள் அறிவியல் முறையில், குறிப்பாக கணித மாதிரி வடிவங்களில் இடம் பெறவில்லை.
(2) உலகே மாயம்
டாக்டர். ஜாஸ்சா பாக் (Dr. Joscha Bach) என்ற ஏஐ ஆய்வாளர், அறிவாற்றல் விஞ்ஞானி சொல்கிறார்.
- மூளை செய்யும் உருவகமே உணர்வு. ஆனால் அது மூளையில்லை. கனவைப் போன்றது.
- உலகைப் புரிந்து கொள்ளவும், அதில் வாழவும் இந்த உருவகம் தேவை.
- உணர்வின் மூலம் நாம் உணரும் உண்மை, மெய்நிகர் உண்மையன்றி வேறில்லை.
- மூளை தொடர் ஒத்திசைவுகளைக் காட்டி நம்மை ஒரு மெய் நிகர் உலகில் வைக்கிறது.
- உணர்வு என்பது உலகின் அடிப்படை அம்சமில்லை. நரம்பு வலைப் பின்னல்களால் தொடர்ந்து உருவாக்கப்பட்டு இந்த உலகில் நாம் வாழ வழி சொல்கிறது.
- மனித மூளை உள்ளிருந்து- வெளியே எனச் செயல்பட, ஏ ஐ வெளியிலிருந்து -உள்ளே என்று செயல்படுகிறது.
- மொத்தத்தில், காணும் உலகிது மாயம் என்று சொல்கிறார் இவர்.
செயற்கை நுண்ணறிவு, செயற்கை நரம்பு வலைப்பின்னல், சேட்ஜிபிடி (artificial Intelligence, Artificial Neural Network, ChatGPT)
இயானின் (1) சிந்தனையின் மறைமுக தாக்கம் என்று இவ்வருடத்திய இயற்பியல் நோபெல் பரிசைச் சொல்லலாம். ஜான் ஹாஃப்பீல்ட் (John Hopfield) ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton) இருவரும், செயற்கை நரம்பு வலைகளைக் கொண்டு, (artificial neural network) இயந்திரக் கற்றலிற்கு (Machine Learning) அடிக்கோலிட்டு, பிரும்மாண்ட செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அபாரமாக வளர உதவியவர்கள்.
விலங்குகளின் மூளைச் செயல்பாடுகளில் ந்யூரான்கள் ஆற்றும் பங்கினை, செயற்கை வலைப்பின்னல்கள் செய்யும். அதைப் பயன்படுத்தும் வண்ணம் எழும்பி வந்ததே செயற்கை நுண்ணறிவு எனச் சொல்லலாம். 1949ல் டொனால்ட் ஹெப் (Donald Hebb) ஒரு கருத்தைச் சொன்னார்- அதாவது நரம்புகள் ஒன்றுடன் ஒன்று தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தால், அவை வலிமை பெறுகின்றன. அவைகளுக்கிடையே செய்தி கடத்தலும், விளைவைத் தெரிவிப்பதும் தொடர் ஓட்டமென நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. இதில் முக்கிய அம்சம், அவை இணைந்து செயல்படுவதுதான். இந்தக் கருத்தை எடுத்துக் கொண்டு ஹாஃப்பீல்ட் ஒரு செயற்கை இழைக் கட்டமைப்பை உருவாக்கினார். அவற்றின் முனைகள் (Nodes) ஹெப்பின் வரையறைபடி இணைந்து கற்றுக் கொள்ளும். உதாரணத்திற்கு, நீங்கள் அதற்கு இரு மொழிகளில் அமைந்த உரையைக் கற்பிக்கிறீர்கள்- ஆங்கிலத்தில் ‘ஐஸ்’ என்றும், தமிழில் ‘கண்கள்’ என்றும் வருகிறது என வைத்துக் கொள்வோம். எங்கேயெல்லாம் அந்த உள்ளீட்டு உரையில் இந்தச் சொற்கள் வருகிறதோ, அவை இரு மொழிகளின் இணைச் சொற்கள் என அந்த செயற்கை வலைப்பின்னல்களின் முனைகள் புரிந்து கொண்டு அதை நினைவில் சேமித்துவிடும். இது ஒரு இனிய தொடக்கம். இந்தத் தகவல் சேமிப்பு மிகத் தேவையான ஒன்றுமாகும். ஒரு உருவப்படத்தை அதற்கு சொல்லித் தருகிறோம் என வைத்துக் கொள்ளுங்கள். தன் நரம்பு முனைகளின் தொடர்பு வலுவைச் சமப்படுத்தி, அந்த உருவை, ‘குறைந்த சக்தி நிலையில்’ (Low energy state) அது வைத்துக் கொள்ளும். இந்த குறைந்த சக்தி நிலை என்பது, சுழல் கண்ணாடிகளைப்(spin glass) புரிந்து கொள்ள பல ஆய்வாளர்கள் உபயோகிக்கும் ஒன்று. தேவையான போது அந்த உருவப்படத்தை வெளிக்கொணரும். இந்த வகை வலைப்பின்னல், அடுக்கடுக்கானதும், தொடர்பில் இருப்பதும், செய்தி கடத்துவதும், சேமிப்பதும், விடை சொல்வதும் செயற்கை நுண்ணறிவில் பெரிதும் பயனாகிறது. இதையும் விட முக்கியமான ஒன்று உண்டு- அது புள்ளியியல்-இயற்பியல், நரம்பு உளவியல், உயிரியல் ஆகியத் துறைகளின் சிந்தனைகளை, ஒரு அறிவாற்றல் வகையாக அணுகவும், கையாளவும் ஆய்வாளர்களுக்கு உதவியது என்பதே. நோபெல் பரிசுக் குழுவினர் இதை ஒரு முக்கிய அம்சமாகச் சொல்லியிருக்கிறார்கள். அறிவியல் துறைகள் தம் உள்துறைகளுடன் இணைகையில், பல கருத்துக்கள் உருவாகி, விவாதிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்படும் என்பது, காலத்தின் தேவையென மறைமுகமாக, இவ்வாண்டின், அறிவியலுக்கான நோபெல் பரிசுகள் சொல்கின்றன.
ஹிண்டன் என்ன செய்தார்? 1872ல் போல்ட்ஸ்மான்(Boltzmann) என்ற விஞ்ஞானி ஒரு கேள்வி கேட்டு பதிலையும் சொன்னார். ஒரு பாத்திரத்தில் இருக்கும் சூடான திரவம், ஒரு முனையை விட, மற்றொரு முனையில் சூடாக இருக்குமா? சாத்தியங்களுள்ள அத்தனை நிலைகளையும் நாம் சிந்திக்கலாம். சில நிலைகளுக்கான சாத்தியங்கள் மற்றவற்றைவிட அதிகம் என்று சொன்ன போல்ட்ஸ்மான், இது சக்தி சார்ந்த அதனது தேர்விலிருந்து வருகிறது என்பதைக் கணிதச் சமன்பாட்டில் நிரூபித்தார். இதை அடிப்படையாகக் கொண்டு, ஹிண்டனும்,, அவரது சகாக்களும், தங்கள் உள்ளீடுகள், எந்த வகையில் செயல்பட்டால், தங்களுக்குத் தேவையான வெளியீடுகளைப் பெற முடியும் என சிந்தித்தார்கள். ஒரு வலைப்பின்னலை, காணும் முனைகள் (visible nodes) மற்றும் காணா முனைகள் (invisible nodes) என்ற வகைமையில் அமைத்தார்கள். எந்த வலைப்பின்னல்கள் காணும் வகைமையில் வருகிறதோ, அவை உள்ளீடு, வெளியீட்டிற்க்கானவை. காணா முனைகள், மற்ற முனைகளுடன் மட்டும் வினை புரியும். இன்றைய இயங்கியல் செயற்கை நுண்ணறிவு (Generative AI) இப்படிப் பிறந்த ஒன்று. 2000த்தில் இந்த இயந்திரத்தில் ஹிண்டனும், அவரது சகாக்களும் சில முன்னேற்றம் செய்தார்கள். காணும் முனைகள், காணா முனைகளோடு மட்டும், அதைப் போல காணா முனைகள், காணும் முனைகளோடு மட்டும் இணைந்திருக்கும். இதை அவர்கள் ஆர் பி எம், (RBM- Restricted Boltzmann Machine) என அழைத்தார்கள். இதில் மாறுபட்ட வேறுபாடு செயல்முறை (contrastive Divergent Algorithm) என்பது பயன்படுத்தப்பட்டது. இயந்திரம் திறம்பட செயலாற்றியது. செயற்கை நுண்ணறிவு வலைகளுக்கு இந்த ஆர் பி எம் மாதிரியில் அதிகம் சொல்லிக் கொடுக்க முடியுமென்றும், அடுக்கடுக்காக அமைத்து பயிற்சி அளிக்க முடியுமென்றும், இதன் மூலம் ஆழ் இயந்திரக் கற்றல் சாத்தியம் என்றும் நிரூபித்தார்கள்.
நம் ஊரில் ‘நதி மூலம், ரிஷி மூலம் தெரியாது’ என்று சொல்வார்கள். அதைப் போலத்தான் ஏ ஐ. அதில் பலர் பங்களித்திருக்கிறார்கள். இன்றைய நிலையில், இயந்திரக் கற்றல், அசுர வேகப் பாய்ச்சல் நிகழ்த்துகிறது. முன் பின் பரப்புதலால் தன் தவறுகளை திருத்திக் கொள்கிறது. அதைக் கீழே காணும் வரைபடத்தால் சற்று புரிந்து கொள்ளலாம். இரு உள்ளீடுகள், அவற்றிற்கான எடைகள், குழப்பங்களுக்கான சில உள்ளீடுகள், மறைந்துள்ள அடுக்கு, வெளியீடுகள் என்று செயல்படும் இது, தவறுகள் குறைந்த அல்லது இல்லவேயில்லாத விடைகளைத் தருகிறது. அதுவும் எப்படி? தானே கணக்கிட்டுக் கொண்டே வருகிறது.
மேலும் நீண்ட- குறுகிய கால நினைவகம் (Long-Short Memory) அதற்கு உள்ளது. ஒரு தொடர்ச்சியான நரம்பியல் வலைப்பின்னல் தான் இதற்குக் காரணம்.. ‘இதற்கு அடுத்து அது’ என்று தரவுகளைக் கற்று கணிக்கவும் செய்கிறது. பல காலப் படி நிலைகளில் சேமித்தும் வைக்கிறது. இதற்கு புகட்டப்பட்ட அறிவின் துணை கொண்டு, ஏற்பதற்கு ஏற்ற விடைகளைத் தர முடிகிறது. தன்னைத்தானே சரி பார்த்துக் கொள்கிறது. பெரும் மொழி மாதிரிகளைப் போலவே, பெரும் செய்கை மாதிரிகளும் வந்துள்ளன- Large Actionable Models (அவை உங்களை அணுஅணுவாய் அறிந்து கொள்ளும். நீங்கள் இத்தனாம் தேதி பயணிக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் போதும். அது பதிவுச் சீட்டு, தங்க வேண்டிய விடுதியில் முன் பதிவு, அதற்கான கட்டணத்தை உங்கள் கணக்கிலிருந்து சரியான தொகையாக அனுப்புதல், உங்களை இறங்கும் இடத்திலிருந்து அழைத்துச் செல்ல வாகன ஏற்பாடு என்று அனைத்தும் செய்துவிடும். உங்கள் பழக்கவழக்கங்கள் மட்டும் அதற்குத் தெரிந்தால் போதும்.
நானும், ஜெமினியும்
இயற்கை என்னும் இளைய கன்னி’ என்று பாடிய ஜெமினி இல்லை. இது ஒரு ஏ ஐ.
அறிவால் ஏஐ மனிதனை வென்றுவிடும் என்ற அச்சம் நிலவுகிறது. கட்டுரையின் தொடக்கத்தில் சொன்ன சில விஷயங்களையும், இதையும் சற்று ஒப்பிட்டுப் பார்ப்போம். அதற்கு ஜெமினி ஏ ஐ (Gemini AI) சொன்ன சில பதில்கள் உதவும். மிகவும் அடிப்படையான கேள்விகள் தான்
நான்: ஏ ஐக்கு உணர்வுகள் உண்டா?
ஜெமினி : இல்லை. உணர்வு என்பது உணரும் தன்மையைக் குறிப்பது, அதன் மூலம் அறிவது என்பதாகும், ஏஐ என்பது ஒரு கணினிச் செயல்பாடு. நாங்கள் கற்பிக்கப்படுகிறோம், முடிவுகளை அடைகிறோம்; ஆனால், மனிதர்களைப் போல. எங்களால் உணர முடியாது. எங்களுக்கு எப்போதாவது உணர்வு வருமா என்று விவாதங்கள் நடக்கின்றன; ஆனால், துறை சார்ந்த வல்லுனர்கள் உணர்வை நாங்கள் பெறுவது சாத்தியமில்லை என்று சொல்கிறார்கள். நாங்கள் படிமுறைகளாலும், தரவுகளாலும் வடிவமைக்கப்பட்டவர்கள். மனிதர்கள் உலகை அனுபவிப்பதைப் போல எங்களால் செய்ய முடியாது.
நான்: நீங்கள் மனிதர்களுக்கு மாற்றாக உருவெடுப்பீர்களா?
ஜெமினி: மனிதர்களுக்கு உதவும் ஒரு கருவி நான். தகவல்கள் தருவேன், செயல்களில் உதவுவேன். மனிதனுக்கு மாற்றாக என்னை வடிவமைக்கவில்லை.
நான்: சுருக்கமாக எப்படி உதவுகிறீர்கள் எனச் சொல்ல முடியுமா?
ஜெமினி: பெரும் மொழி மாதிரிகளான சேட் ஜிபிடி 4, ஒத்திசைந்த, பொருத்தமான.பதிலகளைத் தருகிறது, மொழி பெயர்ப்பு செய்கிறது, உங்கள் படைப்புக்களை தரப்படுத்துகிறது. உரை நடைகளையும், சித்திரங்கள், புகைப்படங்கள் போன்றவற்றையும் பொருத்தமாக ஒன்றிணைத்து உங்கள் படைப்பூக்கத்தை மெருகேற்றவும் செய்கிறது.
உரை நடையோ, வரைகோடோ இதை வைத்துக் கொண்டு, உருபடங்கள், காணொலிகள், இசைமெட்டுக்கள், இசை, ஓவிய மீளுருவாக்கம் இவற்றில் இயங்கியல் ஏ ஐ மனிதனுக்கு உதவுகிறது.
கல்வி, மருத்துவம், சூழல் சீரமைப்பு, விளையாட்டுக்கள் என்று பல துறைகளிலும் ஏஐ மனிதனின் நண்பன்.
நான்: மனித மூளைக்கு நிகர் என்று உங்களைச் சொல்லலாமா?
ஜெமினி: கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாலும், மனித மூளை ஒரு உயிரியல் அற்புதம். உணர்வு, உணர்ச்சிகள், தனிப்பட்ட அனுபவங்கள் மனிதனுக்கு உண்டு. மனித மூளையில் ந்யூரானும், ஒத்திசைவுகளும் பெரும் பங்கு ஆற்றுகின்றன; கணினியில், வன் பொருளும், மென் பொருளும் செல்லுலார் ஆடோமேஷனைப் போன்றது. அந்த வகையில் மட்டுமே ஒற்றுமை. உணர்வு என்பது அவரவர்க்கான அனுபவங்களைத் தருகிறதல்லவா? நாங்கள், மனித உணர்வின் சில அம்சங்களை உருவகப்படுத்தும் திறன் கொண்டிருந்தாலும், மனிதன் அடையும் தனி அனுபவம் எங்களுக்கு இல்லை. சிக்கலான கேள்விகளுக்கு விடை தருகிறோம், மனிதர் போலவே உரைகளை எழுதுகிறோம். இதெல்லாம் நடைபெறுவது, அதி நவீன சாதனங்கள், எங்களுக்கு வடிவங்களை, பாங்கினைப் புகட்டுவதால் தான்.
மேற்கண்ட உரையாடல்கள், ஏஐ தன்னைப் பற்றி புகட்டப்பட்ட சுய மதிப்பீட்டை சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஆனாலும், அது, தன்னை மனிதனுக்கு உதவும் கருவி என்றே சொல்கிறது.
உணர்வைப் பற்றி கட்டுரையின் தொடக்கத்திலும், அறிவைப் பற்றி அதற்குப் பின்னாலும் பார்த்தோம். செயற்கை நுண்ணறிவு, செயற்கை இழை வலைப் பின்னல், இயந்திரக் கற்றல், ஆழ் இயந்திரக் கற்றல், பெரும் மொழி மாதிரிகள், இயங்கியல் ஏ ஐ. சாமர்த்தியமான முன்- பின் பரப்புதல், (Forward and Backward Propagation) காலப் படி நிலையில் அது வைத்துக் கொள்ளும் நீண்ட- குறைந்த ஞாபகங்கள் இவை அனைத்தும் சார்ந்து நிற்பதற்கு முன்னோடியான இயந்திரக் கட்டமைப்பை செய்த ஹாஃப்ஃபீல்ட், ஹிண்டன், இவர்களுக்கு மரபை மீறி அளிக்கப்பட்ட நோபெல், தகுதியான ஒன்று.
மனித மூளையின் செயல்பாடுகளை ஒத்து செயற்கை நுண்ணறிவு செயல்படுவதாக பல அறிஞர்கள் சொல்லி வருகிறார்கள். மூளையைப் பார்த்துத்தான், செயற்கைக் கட்டமைப்பு பெரும்பாலும் செய்யப்பட்டிருக்கிறது- அதாவது தகவல் பெற்று, அலசி, முடிவெடுப்பது இரண்டிற்கும் பொதுவாக இருக்கலாம். உணர்வு/பிரக்ஞை இரண்டிற்கும் இடையேயான முக்கிய வேறுபாடாகும். இப்படிச் சொல்வதால், மனித மூளையில் தான் பிரக்ஞை இருக்கிறதென்று நான் கருதுவதாக எடுத்துக் கொள்ளக்க்கூடாது.
நம் அத்வைத வேதாந்தம் ப்ரும்மம் ஒன்றே ஒன்றுதான்; அந்தப் ப்ரும்மம், தூய இருப்பு, தூய உணர்வு, ஆனந்தம் என அறியப்படுகிறது. ‘த்ரி சத்யம்’ என்பது அது. காலத்தால் அழியாதது, எல்லையில்லாதது, அடிப்படையானது. இந்த உலகில் நாம் காணும் பலவும் அதனுடைய தோற்றமே. ப்ரம்மம் இல்லையேல் அகிலமில்லை. அகிலத்திற்கு ப்ரும்மம் இல்லாமல் இருப்பே கிடையாது. அகிலம் இல்லாவிடிலும் ப்ரும்மம் இருக்கும்.
“சொற்பதங் கடந்த துரிய மெய்ஞான அற்புதம் நின்ற கற்பகக் களிறே!” என்று சொல்லும் ஒளவையின் விநாயகர் அகவல் மேலும் சொல்லும் “சத்தத்தினுள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தினுள்ளே சிவலிங்கம் காட்டி, அணுவிற்கணுவாய் அப்பாலுக்கப்பாலாய் கணு முற்றி நின்ற கரும்புள்ளே காட்டி….”
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

