
நீண்ட வாக்கியத்திலிருந்து கைவிடப்படும் ஒரு வார்த்தையை போன்று
புகைவண்டியிலிருந்து இறங்கும் அவரை
இப்போது என்னால் பார்க்க முடிகிறது.
//
அற்புதமான வரிகள்.
தனித்திருந்து துயரம் வளர்க்கும் அந்த அப்பா திலீப் சித்ரேயாகவும் இருக்கக் கூடும்.
போபால் யூனியன் கார்பைட் விஷவாயு விபத்தில் அவருடைய மகன் பாதிக்கப்பட்டு மெல்ல இறந்த தீராத துக்கம் அது.
திலீப்புக்கும் அருண் கொலட்கருக்கும் நல்ல நட்பு இருந்ததாகத் தெரிகிறது. அருண் பற்றி biopic ஆவணப் படம் தயாரிக்க யார்யாரோ முயன்றாலும் திலீப் நட்பின் அடிப்படையில் அதை உருவாக்கினார். தன் ஜெஜூரி கவிதைகளை அருண் திரையில் வாசித்த அபூர்வமான நிகழ்வு அந்தப் படப்பிடிப்பு. உழைப்பு, பண விரயம் என்று திலீப் அந்தப் படத்துக்காகப் பாடுபட்டார்.வீட்டுக்குப் போய் ‘படத்தை வெளியிட வேண்டாம்’ என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் அருண் கொலட்கர்.
மொழிபெயர்த்த ராமலக்ஷ்மிக்குப் பாராட்டுகள்.
(நலிந்த தேனீர், நீர்த்த தேனீராக வந்திருக்கலாம்)
– இரா. முருகன்
சிறப்பாக வந்துள்ள கதை. ரூபம், அரூபம், பகா எண்கள், இயற்கையில் அமைந்துள்ள புலப்படா கணிதம், மஞ்சுள் பார்க்கவ், டி ஃப் ஐ ஆர், சௌரி என்று செல்லும் கதை, ஒரு கட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அறிவு, இன்றையத் தேவை என்பதைச் சொல்கிறது. மனிதன் வடிவமைத்த ஒன்று அவனை மீறுவதையும், கண்காணிப்பதையும், இயல்பாக அவனுக்குள்ள சிந்திக்கும் மற்றும் படைப்புத் திறனிற்கான வாய்ப்புகளை அது மறுப்பதையும் சிறப்பாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர். அந்த ‘நெட்வொர்க்’ வெல்வதும் கோடிடப் படுகிறது.
– பானுமதி. ந.
தாவிரவியலுக்கும், நமக்கும் என்ன சம்மந்தம் என்று கடந்து போகும் பலரைச் போல நானும் இருந்தேன். இந்த கட்டுரையை இன்று படித்ததும் என்னைக் கட்டிப் போட்டு விட்டது. பகல் இரவு நீளத்தை கணக்கிட்டு காலக்கணக்கை அறிந்து மலரும் குறிஞ்சி, அதன் வருகையை அறிந்து தனது தேன் கூடுகளை முன்னரே தயார் செய்து கொள்ளும் தேனீக்கள், அதன் விதைகளை உண்ண காத்திருக்கும் பறவைகள், பூச்சிகள் என்று இயற்கையில் ஒன்றுக்கொன்று எப்படி தொடர்புடையவை என்று அற்புதமாக விவரித்திருக்கிறார் கட்டுரையாளர். வாழ்த்துக்கள். பிரசுரம் செய்த சொல்வனம் குழுவினருக்கும் பாராட்டுக்கள்.
– கங்காதரன் சுப்ரமணியம்
நிர்மல் உங்களின் விஷக் கிணறு புத்தக விமர்சன கட்டுரையை இப்போதுதான் படித்தேன். ஒரு கிணற்றை எவ்வாறு ஒரு உருவமாகக் காணலாம் என்பதை விளங்கியிருக்கும் விதமும் அதை இத்தொகுப்பில் உள்ள கதைகளுடன் பொருத்தி விஷக் கிணறு என்ற தலைப்பை எப்படிப் பார்க்கலாம் அல்லது ஆசிரியர் எப்படிச் சித்தரிக்கிறார் என்று சொன்ன விதமும் நன்றாக இருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கதைகளில் ஒளித்துவைத்திருக்கும் அத்துணை கூறுகளையும் நீங்கள் அனாயசமாக கண்டுகொள்கிறீர்கள் என்றே எனக்குப்பட்டது. அது ஒரு படைப்பாளிக்குத் தான் கண்டுகொண்டதை வாசகனுக்கும் கடத்திவிட்ட மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது. இத்தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறீர்கள். நன்றி.
– சு.வெங்கட்
இந்த உலகியல் வாழ்வைத் துறந்து ஆன்மிகத்தின் வழியே செல்வது என்பது ஆண் பெண் இருவருக்குமே மனதளவில் ஒரு போராட்டமாகவே இருக்கும். அதிலும் மரபார்ந்த கலாச்சாரத்தைக் காப்பது பெண்களின் வழியே என்ற சமூகத்தின் பார்வையும் அதன் கட்டுப்பாடுகளும் ஒரு பெண்ணுக்கு அடிமை சங்கிலியே. அதில் எந்த விதமான பெருமையும் பெண்களுக்கு இல்லை. அதை உடைத்துக் கொண்டு செல்வது என்பது இயலாத காரியம். கருவறையில் இருக்கும் பெண் தெய்வங்களைத் தொழும் இந்த சமூகம் எப்படி ஒரு பெண்ணின் ஆன்மீக நாட்டத்தை ஏற்காமல் விலக்கி வைக்கிறதென்பது ஒரு புதிர்தான். அதிலும் இஸ்லாமியச் சமூகத்திலிருக்கும் ஒரு பெண் கிருஷ்ணரையும், நடராஜரையும் மனதளவில் ஏற்று அந்த ஆன்மிக வழியே செல்வதென்பது நினைத்துப்பார்க்க முடியவில்லை. கே.வி. சைலஜா அவர்களின் பார்வையில் இந்த நாவலில் அந்த நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றை அவர் புனைவு வழியே நிகழ்த்தியிருக்கிறார் என்பது தெரிகிறது. கே.வி. சைலஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ஜெகதீஷ் உங்களின் வாசிப்பு மிக ஆழமாக கதாபாத்திரங்களின் உணர்வுகளை மிகத் துல்லியமாகக் கண்டுகொண்டு அதனை தன் தனிப்பட்ட அனுபவங்களின் வாயிலாக சிந்தித்து இக்கட்டுரையை எழுதியிருக்கிறீர்கள். ஒரு புனைவு நாவலிலிருந்து எதைக் கவனிக்கவேண்டும் எதை தன் ரசனையுரையில் அடிக்கோடிட்டுக் காட்டி அந்த நாவலின் மேன்மையைச் சொல்லவேண்டும் என்பதில் நீங்கள் தேர்ந்தவராக இருக்கிறீர்கள். இந்நாவலில் சொல்லப்பட்டிருக்கும் வேறு சில பெண்களின் கதைகளும் அவர்களின் உளவியல் சார்ந்த இடங்களும் சொல்லப்பட்டிருக்கும் காரணங்களாக நீங்கள் மேற்கோள்காட்டியிருப்பது , சஹிதாவின் நிலையை அவர் வெளியேறியபின் விரித்துப்பார்ப்பது என இக்கட்டுரை உங்களின் ரசனையின் தரத்தையும் ஒரு தேர்ந்த படைப்பாளியாகவும் காட்டுகிறது.
– சு.வெங்கட்
அபாரமான கதை. நல்ல கற்பனை.
சூதாட்டத் சருக்கத்தில் பாஞ்சாலியின் புடவை போல சற்று நீண்டு விட்டது.
சில உரையாடல்களை மட்டும் குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
கதைகளாகவும் கர்ணன் வாரி வழங்கிக் கொண்டிருக்கிறான்
– சித்ரா பாலசுப்ரமண்யன்
சீவர் கதைகள் என்ன அளவுக்குத் தமிழில் பிராபல்யம் பெற்றவை என்று எனக்குத் தெரியாது. ஆனால் 1954 இல் எழுதப்பட்ட கதை இன்றைய வோக் அரசியலுக்கு முன்னோடி. மீ டூ இயக்கத்தை இது எதிர்பார்த்த கதை. தவிர பின்புலத் தகவல்களில் அதில் உள்ள கூர்மை இன்றைய எழுத்தாளர்களில் பலருக்கு இன்னும் அமையாத நேர்த்தி- தமிழ் எழுத்தாளர்களைச் சொன்னேன். சிலரே இத்தகைய தகவல் அடர்த்தியோடு களனை விவரிக்கிறார்கள். இது எழுத்துக்குப் பயிற்சி கொடுக்கும் கதை.
– மைத்ரேயன்
தப்பி ஓடுதல் – சொல்வனம் | இதழ் 328 | 13 அக் 2024 (solvanam.com)
வாசகருக்குப் பஞ்சு மிட்டாயையும் கொடுக்கக் கூடாது, பொருள்விளங்கா உருண்டையையும் கொடுக்கக் கூடாது. எளிதான வாசிப்புள்ளதில் புரதச் சத்து இருந்தால் நல்லது- கேப்பைக் களி, கம்பு அடை போல. கடினமானதில் சுவை அசாதாரணமாக இருக்க வேண்டும். தேங்காய்- இளநீர் போல முயற்சிக்குத் தக்க பலன் வேண்டும்.
இந்தக் கட்டுரையில் முன்னதில் களம் தெரிந்தவர்களுக்குப் பலன் இருக்கும். ஆனால் மென்கில் அப்படி ஒன்றும் சத்துள்ள எழுத்தாளர் இல்லை, அவர் செய்த முயற்சி அந்த நாட்டுக்கும், அந்தக் காலச் சூழலுக்கும் சற்றுப் புதிது, தவிர துப்பறியும் நாவல்களில் அற விசாரம் அத்தனை நேராக முன்பு அமையவில்லை. ரேமண்ட் சாண்ட்லர் ஆகட்டும், டாஷியெல் ஹாமிட் ஆகட்டும் தம் தார்மீகப் பார்வையைக் கதைக்குள் பொதித்து, துப்பறிவாளரை ஓர் பொருளாதார/ பண்பாட்டு அகதியாக, சமூக ஒழுங்கிலிருந்து/ அந்தஸ்து ஏணிகளிலிருந்து அப்புறப்பட்டவராக உருவகித்து அப்படிப்பட்ட நிலையிலும் தன்னுள்ளிருந்து இயங்கும் சீர்மைக்கும், ஒழுக்கச் சிந்தனைக்கு அப்பாற்பட்ட மனித நேயத்துக்கும் மட்டுமே கட்டுப்பட்ட மனிதராக, அந்த நிலையிலிருந்து அடித்தளமோ, மேல்நிலையோ எந்த நிலையிலுள்ள மனிதரையும் சீர் தூக்கி அணுகும் நபராகப் படைத்திருந்தனர். அந்த நபர் அதே நேரம் கொடுமை/ பாழ்நெறி/ கொலை/அழிவு ஆகியனவற்றால் பீடிக்கப்பட்டு இயங்கும் மனிதரை மட்டுமே ஒறுக்க முயலும் ஆளாகவும் இருப்பார். பிறரை சூழல்களில் சிக்கி இயங்குவதால், சிலந்தி வலையில் சிக்கிய பூச்சியாகப் பார்த்து அனுதாபத்தோடு அணுகுபவராகவும் இருப்பார். எந்நிலையிலும் சுயலாபத் தேட்டையை முன்வைக்காத, அதே நேரம் அசட்டுத்தனமான தியாகங்களில் மாட்டாதவராகவும் அந்தத் துப்பறிவாளர் இருப்பார்.
அப்படிப்பட்ட தனிநபர் மனநிலைச் சித்திரிப்புகளை அதிகம் நம்பாமல் புறச் சூழல், நிறுவன அமைப்புகள், அவற்றில் சில தனிமனிதர்களின் புத்தி பிறழ்ந்த/ நெறி தவறிய/ சுயலாபத் தேட்டைகள் ஊடுருவி அந்த நிறுவனங்களை எப்படிக் கருக்கழித்து, கறை படிந்த, களிம்பேறியவையாக ஆக்குகின்றன என்று சித்திரிக்கும் நாவல்கள் ஸ்காண்டிநேவிய குற்ற நாவல்கள். அவற்றில் மான்கெல் தோற்றுவாய் நாவல்களை எழுதவில்லை. வேறு சிலர் அந்தப் புண்ணியத்தைக் கட்டிக் கொண்டனர். அதை எல்லாம் என் கட்டுரை ஒன்றில் முன்பு சுட்டி சொல்வனம் பிரசுரித்தாயிற்று.
எனவே இரு கட்டுரைகளில் முந்தையது சாதா தோசை. பிந்தையது பொருள் விளங்கா உருண்டை. அதற்கு ஃப்ராய்டியம், கிருஸ்தவம், உளநிலை மருத்துவம், தவிர உலக நிலையின் தாக்கம் யூரோப்பியத் தனிமனிதச் சிந்தனைகளை/ உளப்பாங்கை எப்படித் தாக்கியது என்று விவரித்து ஓர் அறிமுகம் கொடுத்துப் பிரசுரித்தால் ஏற்பு கிட்டலாம். அதற்கு உழைப்பு, முனைப்பு தேவை.
– மைத்ரேயன்
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
