தனது ‘மூளைப் புயல்கள்’ (Brain Storms) மூலம், சிந்தனை, கனவு, நனவு, நினைவுகள், நம் புலன்களின் உணர்ச்சி அனைத்துமே மூளையில் நடைபெறும் செயல்பாடுகள் என்றும், நரம்பு வலைப் பின்னல்களே அனைத்துக்குமான காரணம் என்றும், சைதன்யம் அல்லது உணர்வு (1) (Consciousness) என்பது அறிவாற்றலே என்றும் சொல்லி புகழ் பெற்ற மெய்யியலாளரான டேனியல் டென்னெட் (Daniel Dennett) இந்த ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி மறைந்தார். (1942-2024) உணர்விற்கு/பிரக்ஞைக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்று சொன்னவர் அவர்; தான் மிக உணர்வோடு இருக்கிறோம் என்று அவர் உணர்ந்திருந்ததும், அவரைவிடவும் உணர்வு பூர்வமாக அவரது நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களும் இருந்ததும் ஒரு முரணன்றி வேறென்ன?

‘அறிவியலே அனைத்திற்குமான விடைகளைக் கொண்டிருக்கிறது’ என்று தீவிரமாக நம்பியவர் அவர். தீவிர பொருள்முதல் வாதம், தீவிர டார்வீனிசம் இவற்றின் பற்றாளர். தான் சிறந்த அறிவுஜீவி என்று நம்பியவர்; உண்மையில் ஒரு மனிதர் ஒப்பீடற்ற அறிஞராகத் திகழ முடியுமா? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு துறையில் சிறப்பான திறமை இருக்கும்; அதைக் கொண்டு அவர் மட்டுமே அறிவாற்றல் மிக்கவர் எனச் சொல்லமுடியாதல்லவா? ‘கற்றது கை மண் அளவு, கல்லாதது உலகளவு.’ மிகச் சிறந்த அறிவியல் அறிஞராக அறியப்படும் ஐன்ஷ்டைன் குவாண்ட இயலை புரிந்து கொள்ளவோ, ஏற்றுக் கொள்ளவோ முதலில் மறுத்தார். ஆழமான கணிதங்கள் அவரைத் தொடக்கத்தில் சிரமப்படுத்தின. இயற்பியலிலும், கணிதத்திலும் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்த அவரது முதல் மனைவி அவருக்கு கணித ஆசானாகவும் இருந்தார்.
ஒருக்கால், நம் டென்னெட்டிடம் தன்னைச் சந்தேகிக்கும் ‘ஜீன்’ இல்லையோ? ஆனால், அவர் நம்மை நாமே ஆய்ந்து அறியும்படி செய்கிறார். ஒரு மெய்யியலாளராக இது அவருக்கு வெற்றிதான். நம்மை மறு சிந்தனைகளுக்கு இட்டுச் சென்ற அவரை நாம் போற்றும் போது, அவர் சொன்னவற்றையும் ஆராய வேண்டும். ‘உணர்வு’ ஒரு மாயை என்பது அவரது கோட்பாடு. ‘கிருஸ்மஸ் தாத்தாவைப் போல, ஆட்டுக்குட்டி முட்டை இட்டு, கோழிக் குட்டி வந்தது போல’, அது என்று அவர் சொல்லி வந்தார்.
உணர்வு என்பது நம் இருப்பின் மறுக்க முடியாத ஒரு உண்மை என ரெனெ டெகார்ட்ஸ் (René Descartes) சொல்கிறார். டென்னெட்டோ, ‘உணர்வு விளக்கப்படுகிறது’ (Consciousness Explained) என்ற நூலை எழுதி, பல காலங்களாகத் தான் சொல்லி வந்த உணர்வெனும் மாயையை நிறுவப் பார்க்கிறார்.
2017ல் அவர் வெளியிட்ட புத்தகம் From Bacteria to Bach and Back: The Evolution of Minds என்பதாகும். இதில் அவர் டார்வீனியத்தை உயர்த்திப் பிடிக்கிறார். உயிர்கள் உருவாக மேலிருந்து இறை என்ற ஒன்று தேவையில்லை; பரிணாம வளர்ச்சியால் பல்லுயிர்கள், கை, கால்கள், போன்றவை அந்தந்த உயிரிகளுக்குத் தக்கபடி, அந்தந்த சூழல்களில் உருவாகின என்பதைத் திட்டவட்டமாகச் சொல்கிறார்.
உவமைகளின் காதலராகிய இவர், இயற்கைத் தேர்வுகள், ‘புரிதல் அற்ற திறனைக்’ (Competence Without Comprehension) கொடுக்கும் என எழுதுகிறார். மிக எளிய பாக்டீரியாகூட, தான் வாழ, தன் இனம் பெருக, சூழலிலிருந்து தேவையானவற்றை எப்படிப் பெற்றுக் கொள்வதென்று அறிந்திருக்கிறது. காலம் செல்லச் செல்ல, சிந்தனையும், நோக்கமும் அற்று, பரிணாமம் ‘ஹோமோ சேப்பியனை’ உருவாக்கியுள்ளது. இந்த இனத்திற்கு புரிதலும், திறனும் உள்ளன. ஆயினும், மனிதனிடத்தில் ‘புரிதலில்லாத திறன்’ இன்னமும் தொடர்கிறது. நம் மூளையில் நடக்கும் தகவல்- அலசல் செயல்பாடுகளில், நமது ‘உணர்வு’க்கு மிகக் குறைந்த பங்கேயுள்ளது. எந்த எண்ணங்கள் தேவையோ அதை மட்டுமே வைத்துக் கொள்ளும் வகையிலும், அதிகத் தரவுத் தகவல்களால் நிரப்பாமலும், நம் மூளை செயல்படுமாறு இயற்கை, தேர்வு செய்துள்ளது.
கணினியைப் பயன்படுத்தும் ஒரு நபரை ஒத்தது நமது ‘உணர்வு’ என்று குறிப்பிடும் இவர், கணினித் திரையில் நாம் காணும் சின்னங்களுக்கு, அதன் மென் பொருள், வன் பொருள் ஆகியவற்றுடன் உள்ள தொடர்பைப் போன்றது, நம் அறிதிறன் என்கிறார். மூளையின் உள்ளே நடை பெறும் சிக்கலான மின்வேக இயக்கங்கள் புலப்படாமல், நம் கண்ணோட்டங்கள், உணர்ச்சிகள், நினைவுகள் கணினித் திரையில் காணும் குறியீடுகளைப் போல், எளிமைப்படுத்தப்பட்டு, கேலிச் சித்திரங்களைப் போலக் காட்சிப்படுகின்றன எனவும் சொல்கிறார்.
டென்னெட் சொல்வது எதுவும் புதுமையானதோ அல்லது விவாதங்களுக்கு உட்படாததோ இல்லை. புதிய தர்க்க முலாப் பூச்சுக்களான விசித்திரச் சொற்கள், புத்திசாலித்தனமாகக் கட்டமைக்கப்படும் உரைகள், உரை நடைகள் மூலம் தன் கருத்துக்களைச் சொன்னார். விழிப்புணர்வின் அடிப்படையென அமைவது உணர்வுகள் என்று பல அறிஞர்கள் சொல்லி வந்திருக்கிறார்கள். ‘தன் உணர்வற்ற தூண்டுதல்களைக்’ கொண்டாடிய சிக்மண்ட் ஃப்ராய்ட் இவரை ஈர்த்தவர்.
கணினிப் பயனாளருக்கு, கணினித் திரைபிம்பங்கள் எப்படியோ, அப்படித்தான் உணர்வு என்று இவர் சொல்வது மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட ஒப்பீடு எனத் தோன்றுகிறது. ‘பயனர்- மாயை’ (User-Illusion) என்ற சொல்லாடல் மூலம் மாயையை அவர் சைதன்யம் என்று சொல்கிறார். மாயை என்று சொல்வது தவறான கண்ணோட்டத்தைக் குறிப்பதாகத் தோன்றுகிறது. நமது மூளையைப் பற்றி, நமது மனதைப் பற்றி, அவ்வளவு ஏன், இந்த உலகைப் பற்றி நாம் கொண்டிருக்கும் நம் எண்ணங்கள், குறைவு பட்ட ஒன்றாக இருந்தாலும், அவை பொய்யாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
உதாரணமாக சீனாவில் உய்குர் குடியினரை, யாரும் மூளைச்சலவை செய்யவில்லை என்ற செய்தியும், அவர்கள் சீனக் குடிமக்கள் போலவே நடத்தப்படுகிறார்கள் என்ற செய்தியும் எவ்வளவு தூரம் ஏற்கத் தகுந்தது என்பதை எடுத்துக் கொள்வோம். சில கூற்றுக்களின் அடிப்படையில் இந்தச் செய்தியை ஆராய்கிறோமல்லவா? அந்த சக மனிதன் எந்த நிலையில் இருக்கிறான் என உணர்கிறோம் அல்லவா? நம் எண்ணம் இதைப் பொறுத்து குறைவு/ மிகை என அமையலாம். ஆனால், பொய்யாக, மாயமாக எப்படி இருக்கும்?
டென்னெட் உணர்வை உள்ளடக்கத்துடன் ஒன்றிணைக்க முயல்கிறார். ‘சப்ஜெக்டை’, (Subject)‘ஆப்ஜெக்டாக்கும்’ (Object) விநோதம் இது. ஒரு புத்தகம் மின்சாரத்தைப் பற்றி எழுதப்படுகிறது என வைத்துக் கொள்வோம். நான் மின்சக்தியை கண்களால் காணவில்லை என்று சொல்லி அந்தப் புத்தகத்தையே மறுப்பேனென்றால்? அப்படித்தான் அவர் விவாதம் செய்கிறாரோ எனத் தோன்றுகிறது.
ஒவ்வொன்றும் ஒவ்வொருவருக்கும் எந்த விதத்தில் உணரப்படுகிறதோ அந்த நிலை அவரவருடையது. இனிப்பு என்பது சுவை, சுவை உணரிகள் ஒவ்வொருவருக்கும் கொடுக்கும் உணர்வு மாறுபடும். இதை ‘க்வாலியா’ (Qualia) என்று மெய்யியலாளர்கள் அழைக்கிறார்கள். இத் தருணத்தில் எனது ‘க்வாலியா’ நல்ல ஃபில்டர் காஃபியின் நறுமணத்தோடும், ‘மீனாக்ஷி மே முதம் தேஹி’ பாடலோடும் இருக்கிறது. நாம் இத்தகு க்வாலியாக்களுக்கு பொருள் சார்ந்தும், காரணம் சார்ந்தும் அதிக முக்கியத்துவம் தருகிறோம் என்று அவர் சொல்வது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. இதைத் தொடர்ந்து விநோதமான ஒன்றையும் அவர் சொல்லும் போதுதான் நாம் சற்று அதிர்ந்து போகிறோம். க்வாலியாக்கள் புனைகதைகள் என்றும், மோசமான கோட்பாட்டின் கலை வடிவங்கள் என்றும் அவர் சொல்கிறார். நம்மிடம் இந்த க்வாலியாக்கள் இல்லை என்றால், நாம், மனிதனைப் போல, அவனது நடவடிக்கைகளையும் தோற்றத்தையும் கொண்டிருந்தாலும், மூச்சு விடும் ஒரு உற்பத்தி எனத் தான் பொருள் படுவோம். தான் ஒரு ‘ஜோம்பி’(Zombie) என்று கருதாத வாசகரைக் கற்பனையில் கொண்டு வரும் டென்னெட், “நீங்கள் மிகத் திடமாக உங்களை ஜோம்பியில்லை என நம்புவதற்கு, அந்த நம்பிக்கை தான் ஆதாரம். சுயப் பெருமிதத்தோடு நீங்கள் கொண்டிருக்கும் இந்த அபிப்ராயத்தை விட்டுவிட்டீர்கள் என்றால், கோட்பாட்டின் அடிப்படையில் ‘ஜோம்பியாக’ இருப்பதற்கான சாத்தியங்கள் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்வீர்கள்.”
நீங்கள் உணர்வோடு இருக்கிறீர்களா? மீண்டும் சிந்தியுங்கள்!
உணர்வு என்று ஒன்றும் கிடையாது என்று இவர் சொல்வதாக இவரை விமர்சனம் செய்பவர்கள், தன்னைச் சீண்டுபவர்கள் எனவும் சொல்கிறார். இவர் திட்டவட்டத் தெளிவாக உணர்வைப் பற்றி சொல்லவில்லை; நாம் அதை அதிகமாக உயர்த்திப் பிடிப்பதால், அது ஒன்றும் அவ்வளவு பொருட்படுத்தத் தக்கதல்ல என்றும், அது இல்லை என்று சொல்வதற்கு இணையாக சிறப்பற்ற ஒன்றும் என்றும் சொல்லவருகிறார் போலும்!
குடிவழிமுறைகள், குல வழிமுறைகள், தொன்மங்களால் எழும் வழிமுறைகள் என எத்தனையோ மனித குலத்தில் இருக்கிறது. இது ஏதோ பின் தங்கிய நாடுகளில் மட்டும் காண்பதில்லை. வெவ்வேறு அரிதாரங்கள் பூசிக் கொண்டு வேறு வடிவங்களில் உலகெங்கும் நிலவுகிறது. சில நம்பிக்கைகள், சில செயல்முறைகள் நமக்கு அதிர்ச்சியைத் தரலாம். முதல்முறை, தலையில் தேங்காயை உடைக்கும் ஒரு வேண்டுதலைப் பார்க்கையில், ஒரு கிராமமே அந்தப் பூசாரியிடம் தலைகளை ஒப்படைத்து நேர்த்திக் கடன் செலுத்தியதைப் பார்க்கையில் நானும் அதிர்ந்தேன். பின்னர் என் கவனம், நம்பிக்கையாளரிடம் சென்றது. டென்னெட் இவைகளைக் கேள்வி கேட்கிறார். மனிதன் ஏன் இன்னமும் மிக இயல்பான அறிவோடு செயல்படுவதில்லை என்ற ஆதங்கம் அவருக்கு. அறிவியலை, மதி கெட்ட விபரீதங்களிடமிருந்தும், மதத்திடமிருந்தும் காப்பது அவரது நோக்கம். மர்மங்களுக்கு விடை தெரியும் வரை, இத்தகைய மூட நம்பிக்கைகளும், இன்ன பிறவும், நிலவும் என்று அவர் சொன்னார். அவர் இறை மறுப்பாளர். மிகச் சிக்கலாக, இறுகிய முடிச்சுக்களுடன் இருக்கும் புதிர்களை அறிவியல் அவிழ்த்துவிடும் என்றும், இப்போதே, அதற்கான அறிகுறிகள் தெளிவாகத் தெரிகிறதென்றும், உணர்வும், உயரிய சிம்மாசனத்திலிருந்து இறங்கிவிடும் என்றும் சொல்கிறார் அவர்.
சிந்தனைகளைச் சொன்னவரேயன்றி, அதை, அவர் நம்பும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கவில்லை. அறிவியல் தளங்களிலும் சில பரப்புரைகள் சரியான ஆதாரமின்றி வந்து விடுகின்றன. முடிந்த முடிபாக அறுதியிட்டுச் சொல்வது எளிதல்ல. இப்படிச் சொல்வோரை அவர் பழிக்கிறார்: “நீங்கள், மர்மங்கள் விளக்கப்படுவதை விரும்பவில்லை.” இவரது ‘குறைப்புக் கண்ணோட்டத்தை’ (Reductionist Vision) தர்க்க முறையில், சட்ட ஆதாரங்களுக்கு உட்பட்டு எதிர்க்க, மற்றவருக்கு உரிமைகள் உள்ளது என்பதை இவர் ஒத்துக் கொள்ளவில்லை.
சிலர், சில பழக்கங்கள், சில மர்மங்கள் ஆகியவற்றில் காட்டும் ஈடுபாட்டைப் போன்றதே, டென்னெட் அவற்றைப் பூரணமாக மறுதளிப்பதும். இது அவரை தத்தளிக்கும் நிலையில் காட்டுகிறது. எனினும், நாம் அவரது கருத்தான உணர்வு என்பது மாயை என்பதை ஏற்காவிட்டாலும், அவர் தனது கருத்தில் உறுதியோடு, அதை ஆரத்தழுவிக் கொண்டு, அறிவை நோக்கிப் பேசிக் கொண்டு, நம்மை நம் மந்தத்திலிருந்து விடுவித்ததை ஒப்புக் கொள்வோம். (பிரக்ஞையை மாயை என இவர் சொல்வது கடவுள் உண்மை என்று சொல்வதை விட அசத்தக்கூடிய ஒன்று- ஜான் ஹோர்கான்)
ஒருங்கிணைப்பட்ட தகவல் தியரியின் படி, (Integrated Information Theory) எந்த ஒரு அமைப்பில், கணித வரைமுறையின்படி அதன் பகுதிகளுக்குள் தகவல் பரிமாற்றம் நிகழ்கிறதோ, அவைகளுக்கு உணர்வு உண்டு.
க்ரிஸ்டாஃப் கோச் (Christof Koch) சொல்கிறார் : அடர் கரு சக்தியே ப்ரக்ஞை..
நாம் ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். ஒரு பேனாவைக் கொண்டு அந்தப் பேனாவை நாம் வரைய முடியும். அந்தப் பேனா, அலை பாய்ந்து கொண்டிருந்தால், அதை இயக்குவது கடினம். நாம் நம் மனதை எப்போதுமே பார்த்து வருகிறோம்- ஏனெனில், நம் சிந்தனைகள் ஓய்வதில்லை’ அது மட்டுமல்ல, அவைத் தொடர் சிந்தனைகளாகவும் இருப்பதில்லை. தாவிச் சென்று கொண்டேயிருக்கும். மனதின் இந்த இயல்பை அறிந்துள்ள நம்மால், நம் மனதை இன்னது தானென்று வகைப்படுத்திக் காட்ட முடியுமா? அதற்கென்று நாம் அறியும் உருவம் இல்லை. அதனால்தான், ஷ்ரோடிங்ஞர், மனதை, குவாண்டத் தன்மையான அலைகளுக்கு ஒப்பிட்டு எழுதினார். மனமும், புத்தியும் வெவ்வேறானவை.
ஜேம்ஸ் வில்லியம்ஸ் தனது “The Stream of Consciousness.” நூலில் சொல்கிறார்: நம் எண்ணங்களை உள்முக பகுப்பாய்வு செய்வது என்பது, சுற்றும் பம்பரத்தின் இயக்கத்தை அதன் சுழற்சியிலேயே அளவிடுவது போன்றது.
ப்ரக்ஞை என்பதில் உணர்ச்சிகள், எண்ணங்கள் அனைத்தும் அடங்கும். ஆனால், அது, அவையல்ல. ப்ரக்ஞையின் உள்ளடக்கங்களாக அவை இருக்கின்றன. இந்த இருமை இருப்பது தான் மாயை என்று இந்தியர்கள் சொல்கிறார்கள்.
திரு சம்பதானந்த மிஸ்ரா (2) என்பவர் ரிஷிஹூட் பல்கலையில் சம்ஸ்க்ருத துறையில், சைதன்யம், சம்ஸ்க்ருதம் ஆகியவற்றின் ஆய்வாளராகவும், துறைத்தலைவராகவும் இருக்கிறார். அவரது நேர்காணலை இங்கே பார்க்கலாம். (2) அவதானக் கலைகள், நினைவு, ஜீவன், சம்ஸ்காரம், வாசனை, கர்மா, ஒற்றைப் பரமன் என்ற கருத்துக்களைத் தொட்டுச் செல்லும் உரையாடல் அது.
எல்லையற்ற பரம்பொருள், தன்னிலிருந்து சிருஷ்டி செய்யும் போது, அதன் சைதன்யத்தை, அதாவது அளவிட முடியாத ஒன்றை, அளவீடுகளுக்குள், மாயையினால் காட்டுகிறது. பூரணமான ஒன்றிலிருந்து, எல்லையற்ற ஒன்றிலிருந்து பலவாகக் காட்டுவது மாயையின் செயல். அதை உணர்கையில் எல்லைக் கோடு அழிந்து விடுகிறது. நமது ஐந்து உடல்களும் (புற உடல், பிராண உடல், மனம், புத்தி, காரணமான சித்) தத்தமற்கு உண்டான நினைவுகளைக் கொண்டுள்ளன. செய்கை, அதன் ஈர்ப்பு, அதனால் ஏற்படும் வினைப்பயன், ஆகியவை ஒவ்வொருவர் பிரக்ஞையிலும் பதிகிறது. அந்த வினைப்பயன் தீரும் வரை ஜீவனின் பிறவி தொடர்கிறது.
‘தேவி சூக்தத்தில் அருமையான செய்யுள்கள் இருக்கின்றன. ஓரிரண்டைப் பார்ப்போம்.
“யா தேவி ஸர்வபூதேஷு சேதனேத்பிதீயதே
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம: (02)
எந்த தேவியானவள் அனைத்து உயிர்களிலும், தாவரங்களிலும், மரம் செடி, கொடிகளிலும், பறப்பன, ஊர்வன, மிதப்பன மற்றும் மிருகங்கள், மனிதர்கள் என அனைத்து ஜீவராசிகளிலும் உறைந்திருக்கும் உயிர்ச் சத்தாக, ஜீவசக்தியாக, ஆன்மாவாக அமைகிறாளோ, அந்த தேவியை பணிகிறோம், பணிகிறோம், பணிகிறோம்.
“சிதிரூபேண யா க்ருத்ஸன மேதத் வ்யாப்யஸ்திதா ஜகத்
நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நம:”
சைதன்யமாக, ஆன்மா, உயிர், ஜீவன், உணர்ச்சி அல்லது நம் புத்தியை ஆட்டுவிக்கும் சக்தி என்ற அந்த உணர்வாய் உறைபவளே, நம் ஆன்மாவே அந்த தேவிதான். அப்படி சகல ஜீவராசிகளிலும் இவ்வாறே நிலைத்து வியாபித்துப் பரவி இருக்கின்ற அவளுக்கு வந்தனம், வந்தனம், வந்தனம்.
2024 இயற்பியல் நோபல் பரிசு, செயற்கை நுண்ணறிவு, எண்ணங்களின் கணக்கீட்டுக் குறியீடுகள் இவற்றை இணைத்து மற்றொரு கட்டுரையில் பார்ப்போம்.
- சொல்வனம் இதழ் 322, 323
(2) https://youtu.be/zvSST4kc8y4?si=5KFqA3Wr_s5rht2C
உசாவிகள்:
https://www.scientificamerican.com/article/an-epitaph-for-daniel-dennett-philosopher-of-consciousness/ by John Horgan
https://www.aanmeegam.in/slogas/ya-devi-sarva-bhuteshu
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

பானுமதி அவர்களின் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் பொதுவாகவே புரிந்துகொள்ளக் கடினமாக இருக்கும். காரணம் அவற்றின் கருப்பொருளும், அவர் இயங்கும் சராசரியை விட உயர்ந்த அறிவுத்தளமும் ஆகும். இன்றைய கட்டுரை சுயமாக எழுதப்பட்டதாக இருப்பினும் அதே அளவு கடினத்தனமை கொண்டதாக இருக்கிறது. இறுதியாக அவர் என்ன சொல்ல வருகிறார் என்பது தெரியவில்லை. என்னைப் போன்ற எளிய வாசகர்களுக்காக அவர் கொஞ்சம் இறங்கிவரக் கூடாதா?
என்றாலும், இந்தக் கட்டுரையின் தலைப்பு எனக்குப் பிடிக்கிறது. ‘யாதேவி’ என்று தொடங்கும் தேவி ஸ்துதிமாலையை, என் தாத்தா தன்னுடைய கம்பீரமான குரலில் பாடுவதை என் இளமையில் தினந்தோறும் கேட்டு வளர்ந்தவன் நான்…..
உங்கள் பதிவிற்கு நன்றி. நீங்கள் சொல்லியிருப்பதை கவனத்தில் வைத்துக் கொள்கிறேன்.
Excellent Article Banumathi Madam, congratulations
Thanks a lot, mam