விஷக் கிணறு

சுனில் கிருஷ்ணனின் “விஷக் கிணறு & பிற கதைகள்” தொகுப்பில் 11 சிறு கதைகள் உள்ளது. 152 பக்கங்கள்.  இதில் கடைசி 5 கதைகள் கரோனா காலம் பற்றிய கற்பனை மீதானது. அவை வைரல் கதைகள் என்று ஒரு தலைப்பில் தொகுத்துள்ளன.

கிணறு  நல்லதொரு உருவகம். ​​அதில் பல அர்த்தங்களை ஏற்றி பார்க்கலாம்.

1. வாழ்க்கை/அறிவின் ஆதாரம்: கிணறுகள் மானுட உயிருக்கு  தண்ணீரை வழங்குகின்றன. அவசியமானவை. அந்த தன்மையை ஞானத்தின் மூலமென அடையாளப்படுத்தலாம்.

2. மறைந்திருக்கும் ஆழம்: கிணற்றின் ஆழமும், அதன் இருண்ட தன்மையும், மனித மன இருளையும், அதில்ம் மறைக்கப்பட்ட விஷயங்களையும் அடையாளப்படுத்தலாம்.

3. சமூகம் கூடும் இடம்: பல கலாச்சாரங்களில், கிணறுகள் மைய சந்திப்பு இடங்களாக இருந்தன, எனவே அவை சமூக தொடர்புகளை அடையாளப்படுத்தலாம்.

4. சுய-கண்டுபிடிப்புக்கான பயணம்: கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கும் செயல் புரிதலைப் பெறுவதற்குத் தேவையான தன்முயற்சியைக்  அடையாளப்படுத்தலாம்.

இந்தத் தொகுப்பின் கதைகள் அனைத்தும் மனித அக ஆழத்தையும், இருளையும் பேசுகின்றன. பொதுவாகக் கிணற்று நீர் உயிருக்கு ஆதாரம், அதுவே கதைத் தொகுப்பில்  விஷமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இதில் முதல் கதை லித்தியம். லித்தியம் ஒரு மருந்து. க்ரோனிக் டிப்ரஷன் என்னும் உளம் சார்ந்த நிலைக்கு மருந்தாக உள்ளது. இக்கதை மகேஸ்வரி,நாதன் இருவரின் வாழ்வினை ஐந்து பார்வைகளில் சொல்கின்றது. நாதனின் பார்வை, மகேஸ்வரியின் பார்வை இரண்டும் கணவனின் பார்வை, மனைவியின் பார்வையைச் சொல்கின்றது. பிறகு லித்தியம் மாத்திரையும், மகேஸ்வரியின் பர்ஸும், அவர்கள் படுக்கையறையின் மின்விசிறியும் உடன் சேர்ந்து கதை சொல்கின்றது. கணவன் மனைவி உறவினை வேறு வேறு கண்ணோட்டத்தில் பார்த்துச் சொல்லும் உத்தி இக்கதையில் உள்ளது. நேரடியான கதை ஓட்டம் என்பதைப் பல கண்ணோட்ட முறை இன்னமும்  விரிவாக்குகின்றது. அருகருகே இருந்தும் தனித்திருக்கும் தம்பதிகள். தனித்து இருந்தும் தனிமையைப் பொருள் கொள்ளச் செய்யும் செயல் இல்லாது போவதால் உருவாகும் அழுத்தம். அழுத்தத்தில் விடுபடத் துணைக்கு லித்தியம். 

அடுத்த கதை சிதல்(கரையான்). நம்மூரில் ஒரு மனநிலை உள்ளது. ஊர் வளரத் திட்டம் இல்லாது, தன் வீட்டை மட்டும் ஊரில்  பெரிதாகக் கட்டிக் கொண்டு அங்கே காலா காலத்துக்கும் சொகுசாகச் செல்வாக்காக வாழமுடியும் என்னும் மனநிலை. ஊர் செழிப்பில்லை , ஊரில் பிழைப்பில்லை என்றால் வீட்டைப் பராமரிக்கக் கூட முடியாது போகும் என்ற எண்ணமே இல்லாது வாழ்பவர்கள். அது ஒரு சிதல். கதையில் இரண்டு பாத்திரங்கள். ஒன்று ஜெயசந்திரன் செயலற்றுப் போன ஊரில் செயல் உருவாக்கம் செய்ய வீட்டை வாங்கத் தயாராகின்றான். அவனுக்குக் காலமாற்றத்துக்குத் தக்கச் சிந்தனை உள்ளது  வெறும் நாஸ்டாலாஜியாவில் சிக்கிக் கொண்ட செந்தி, தானாக மேல் செல்ல இயலாது சிக்கிக் கொண்டவன். யாராவது நல்லபடியாகச் சூழலை, சூழலின் அர்த்தம் உருவாக்கிக் கொடுத்தால், அங்குப் போய் வாழத்தெரிந்தவன். சிதலானால் சேர்ந்து அழிபவன். அவன் ஊர் செழிப்பாக இருக்கையில் இருந்தான், இன்றைக்கு வேறு ஒரு நகரம் செழிப்பாக இருப்பதால் அங்கு உள்ளான். அவனுக்கு நகரத்திலிருந்து பார்க்கையில் பழைய ஊர் சிதல் எனத் தெரிகின்றது. நாளைக்கு நகரத்திலிருந்து வேறு ஊர்க்குச் செல்ல நேர்ந்தால் செந்தி நகரத்தினை சிதலாக பார்ப்பான். ஆக்க முடியாமல் அனுபவிக்க ஆசைப்படுபவர்கள்.

இந்திர மதம் இந்தத் தொகுப்பின் சிறந்த கதை. மருத்துவம் புறவய யதார்த்தம் மீது கேள்விகளை எழுப்பி ஆராய்வது. அதில் நிபுணத்துவம் பெறுகையில் மேலும் மேலும் கேள்விகளை எழுப்பி முன் செல்லுதலே முக்கியம். நிபுணத்துவம் அடிப்படை கோட்பாடுகளை, புத்தகங்களைக் கொண்டது. இக்கதையில் மருத்துவர் ஒருவர் தனது புத்தக வாசிப்பினை இறைத் தூதர்களின் புத்தகமாகக் கொள்வதால் அதை விட்டு விலக இயலவில்லை. கடும் பற்று. அவரை பொறுத்தவரை நிபுணத்துவம், புறவய யதார்த்தமெல்லாம் இல்லை. புத்தகத்தில் சொல்லப்பட்டதை மட்டும் செய்வார். அதில் நிபுணர், வித்தகர். அவரது மாணவன் இதைக் கண்டு , இதன் தொடர்ச்சியான அனுபவங்களைக் கண்டு அதிலிருந்து விடுபட்டு அசல் நிபுணத்துவம் நோக்கிச் செல்கின்றான். ஆசிரியர் தேங்கிப் போகின்றார். 

இயல்வாகை கதையில் உலகினை கருப்பு வெள்ளையாக காணும் மருத்துவர் ஒருவர் அதன் வர்ணங்களை காண செல்கின்றார். அது எளிய பெண்ணொருத்தியின் சொல்லால் நிகழ்கின்றது. கடும் குழப்பங்களில் இருந்து அது அவருக்கு பெரும் விடுதலையை அளிக்கின்றது. 

விஷக்கிணறு என்னும் தலைப்பில் உள்ள சிறுகதை 4 பகுதிகளாக உள்ளது. இக்கதையின் கதாபாத்திரங்கள் தங்கள் மனதில் தாங்களே உற்பத்தி செய்து கொள்ளும் யதார்த்தத்தில் தங்களை வைத்துக்  கொள்கின்றார்கள். உலகின் புறவய யதார்த்தத்தின் மீது அவர்கள் தங்களது மனம் போன போக்கில் ஏற்றிக் கொள்ளும் எண்ண ஓட்டங்களில் கரைந்து போகின்றார்கள். பயம், குற்ற உணர்வு, தன்னை உலகின் மிக பெரும் நல்லவனாக கற்பனை செய்து கொள்ளுதல் போன்ற எதிர்நிலை சிந்தனை வழியாக ஆழமான, இருள் உலகம் ஒன்றினை இந்தக் கதை காட்டுகின்றது.

விஷக்கிணறு கதையில் மனைவியை இழந்த முதியவர் ஒருவரும், தமிழகத்தின் படைப்பாளி ஒருவனும்  தற்செயலாக மலேஷிய தேசத்தின் அருங்காட்சியகத்தில் சந்திக்கின்றார்கள். அந்த சந்திப்பு எழுத்தாளனிடத்து இரு படைப்புகளை உருவாக்குகின்றது. 

முதியவர் குற்ற உணர்வு என்னும் விஷக்கிணறுக்குள் இருக்கின்றார், அதில் இருந்து அவரை வெளியில் இழுக்க அவரது சுற்றம் முயலுகின்றது. அவரது மகளும், மருமகனும், பேரப்பிள்ளைகளும் பெருமுயற்சி எடுக்கின்றார்கள். மலேஷியாவின் கோலா சிலாங்கூர் என்னும் சுற்றுலா தளத்துக்கு கூட்டி வருகின்றார்கள். மலை பகுதி. சுற்றி மகிழ்ச்சியும், கொண்டாட்டமும் உள்ள இடம். அவர் மனதை மீட்க நடக்கும் முயற்சிகளில் ஓன்று. பெரியவரோ விஷக்கிணற்றுக்குள் நின்று கொண்டு மகளையும், மருமகனையும் உள்ளே இழுத்துக் கொண்டுள்ளார். 

தன்னுடைய படைப்பால் அன்றி, கலக குணத்தால் மட்டுமே வாசகர்களை சென்றடைந்த தமிழக எழுத்தாளன் முதியவரை சந்திக்கின்றான். அவனின் கலக குணத்தினால் ஈர்க்கப்பட்ட வாசகன் அவனை மலேஷியா வரை கூட்டி வருகின்றான். அந்த வாசகன் படைப்பாளியின் ஒரு படைப்பினை கூட நினைவு கூர்ந்து பேசவில்லை.

குடி, பெண், கஞ்சா என எதிர்நிலையில் உச்சம் தொட கீழே சென்று தனது படைப்பூக்கத்தினை மேலே கொண்டு வர செய்து எழுத்தாளன் எழுதிய இரண்டு படைப்புகள் இந்தக் கதையில் வருகின்றது. 

சுனில் கதைக்குள் கதை என்னும் உத்தியை கையாள்கின்றார்.

கதைக்குள் கதையாக வரும் முதல் கதை கீழைத் தத்துவமும்,மேலை தத்துவமும் கொண்டுள்ள அடிப்படை கோட்பாடுகளை இணைக்க முயல்கின்றது. அதில் தனது நடனத்தில் காலத்தினை இணைத்து அதே நேரம் மானுடம் வாழத் தோட்டம் அமைக்கும் கடவுள் உள்ளார். பின்னர் தோட்டத்தினை விட்டு மானுடர்கள் வெளியேறுகின்றார்கள். பிரபஞ்சமே நடனமாவது ஒரு தோட்டக்காரன் வேலை போலச் சுருங்கையில் பொருத்தமாக இல்லை.

கதைக்குள் கதையாக வரும் இரண்டாம் கதை ஓப்பன்ஹைமர் அணுகுண்டு உருவாக்கிய சூழலைக் களமாகக் கொண்டது. கதை ஓப்பன்ஹைமர் கூட இருக்கும் விஞ்ஞான உதவியாளனது பார்வையில் சொல்லப்படுகின்றது. ஒப்பன்ஹைமர் கதை சொல்வதில்லை. ஒப்பன்ஹைமர் என்னென்ன நினைக்கின்றார், என்னென்ன செய்கின்றார் என்பதைப் பற்றி உதவியாளனது மனவோட்டமே கதை.

அதில் ஓப்பன்ஹைமர் லாஸ் அலமோஸ் என்னும் உலகில் இருந்து துண்டிக்கப்பட்ட இடத்தில் இருந்து  தனது அணுகுண்டு ஆய்வினைத் தர்மமாக ஆற்றுகின்றார். அதை முடித்து வெளியேறுகின்றார். அதில் வரும் தொழில் சிக்கல்களையும், உளக்குழப்பங்களையும், அறச் சங்கடங்களையும் முடிந்த அளவு எதிர்கொண்டு கையாள்கின்றார்.

அதே நேரம் ஓப்பன்ஹைமர்  கூட இருக்கும் விஞ்ஞான உதவியாளனுக்கு தான் ஆக்டிவிஸ்டா, விஞ்ஞானியா, பொது ஜனமா என தெரியவில்லை. உதவியாளருக்கு உலகியல் அறம் நகரும் விதம் பிடிபடவில்லை. பொதுவான மிடில்க்ளாஸின் “நல்லவன் சிந்தனைகள்” வழியே ஓப்பன்ஹைமரை பார்த்து அக பதிவினை ஆற்றுகின்றார். 

உதவியாளன் தன்னை முழு விஞ்ஞானியாக அறிந்து இருந்தால் அணுகுண்டு விளைவுக்கு  மாற்று விஞ்ஞானம் யோசித்து செயலூக்கம் கொண்டிருப்பார். அவர் தன்னை ஆக்டிவிஸ்டாக அறிந்து இருந்தால் முழுக்க அணுகுண்டுக்கு எதிராகப் போராடி இருக்க வாய்ப்பிருந்தது. 

ஆனால் அந்த உதவியாளன் மாசச் சம்பளம் வாங்கிக் கொண்டு, அணுகுண்டு சோதனையில் முழுக்க ஈடுபட்டுக் கொண்டு, அதே நேரம் சும்மா உள்ளம் மட்டும் மருகி கொண்டு மிடில்க்ளாஸ் பாவனை எடுக்கும் பாத்திரமாகவே பட்டது. அதே பாத்திரம் பொது ஜனமாக இருந்தால் இது தோன்றி இருக்காது. மாறாக ஓப்பன்ஹைமரே பாராட்டும் விஞ்ஞான உதவியாளனாக இருந்து கொண்டு மருகி கொண்டே இருப்பதாக அந்தப் பாத்திரம் உள்ளது. அந்த எளிய மருகும் மனநிலை பெரும் விஷக்கிணறுதான். 

வைரல் கதைகள் மாபெரும் தொற்று நோய் மொத்த மானுடத்தினையும் போர்வையாக மூடுகையில் மானுடம் காலம், செயல், அறிவு, தற்செயல், விருப்பு/வெறுப்பு ஆகிய எல்லைகளுக்குள் அதைக் கையாளும் விஷயத்தினைப் பேசுகின்றது. கதாசிரியர் பிராகிருதிஸ்தான் என்னும் கற்பனை உலகினை உருவாக்கி அங்கு நிஜமாகக் கூடிய சாத்தியங்களைப் புனைவாக்குகின்றார். இச்சாதாரி கதை மனிதனின் உயிர் பற்றின் எல்லைகளைக் காட்சிப்படுத்துகின்றது. நஞ்சு கதை எது சுதந்திரம், எது சிறை என மானுடம் யோசிக்கின்றது என்பதைக் கேள்வியாக்குகின்றது எப்போதும் முடிவிலே இன்பம் என்ற கதை இன்பம் என்பதும் நோயா என பயோ ரிடக்‌ஷன் பார்வையை முன் வைத்துப் பேசுகின்றது. வசுதைவ குடும்பகம் கதை சுருங்கும் உலகில் வைரஸோ, கருத்தியலோ எளிமையாக மனிதரது புறம், அகம் என்பதை எல்லைகளைக் கடந்து தொடும் என்பதைக் காட்டுகின்றது. புவியியல் தூரம் என்பது கருத்தியலுக்கும், வைரஸுக்கும் எளிதில் கடக்கக் கூடியது என்பதைக் காட்டுகின்றது. ஊடகங்கள், அதி விரைவு வாகனங்கள் எல்லாவற்றையும் மறுவரையறை செய்கின்றது.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகள் இருளை நோக்கிப் பேசுபவை. இருளை அறிபவன் ஒளியை நோக்கிச் செல்லலாம். அந்த வகையில் இக்கதைகள் வாசிக்கப் படவேண்டியது.

மேலும்:

  1. சுனில் கிருஷ்ணன் : விஷக் கிணறு & பிற கதைகள்- வாசிப்பு- அனீஷ் கிருஷ்ணன் (suneelkrishnan.in)
  2. விஷக் கிணறு – வல்லினம் (vallinam.com.my)
  3. விஷக்கிணறு- சுனீல் கிருஷ்ணன் | எழுத்தாளர் ஜெயமோகன் (jeyamohan.in)

நூல் விவரங்கள்

பின்னட்டை:

அரிதினும் அரிதாக நிஜம் கற்பனையை எட்டிப்பிடித்து கடந்து முன்செல்லும். ‘வைரஸ் கதைகள்’ எழுதப்பட்டபோது அவை முற்றிலும் கற்பனையில் உதித்தவை. ஆனால் எழுதி முடித்து பதிவேற்றம் செய்யப்படும் குறுகிய காலகட்டத்திற்குள் அவை அன்றாடமாகிவிட்டன. கண்முன் ஒரு டிஸ்டோபிய உலகம் சுருள் அவிழ்ந்த காலகட்டம். உங்களிடம் ஒரே ஒரு உயிர்காக்கும் கருவியுள்ளது. மூவரில் ஒருவருக்கு மட்டுமே அதை பொருத்த முடியும். எப்பேர்பட்ட அறநெருக்கடிக்கு நாம் தள்ளப்பட்டோம். தியாகங்களுக்கும் தேர்வுகளுக்கும் என்ன பொருள்? யார் உயிர் வாழ்வது என்பதை எவர் செய்வது? நாம் உருவாக்கும் தீர்வுகள் அதற்கு காரணமான சிக்கலை காட்டிலும் பூதாகாரமாக இருந்தால் என்ன செய்வது? உயிர் பிழைத்திருப்பதே இத்தனைக் கொண்டாட்டமாக இருக்க கூடுமா? எத்தனை கேள்விகள்!

‘விஷக்கிணறு’ அவற்றுள் சில கேள்விகளை எதிர்கொள்கிறது.



Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “விஷக் கிணறு”

  1. நிர்மல் உங்களின் விஷக் கிணறு புத்தக விமர்சன கட்டுரையை இப்போதுதான் படித்தேன். ஒரு கிணற்றை எவ்வாறு ஒரு உருவமாகக் காணலாம் என்பதை விளங்கியிருக்கும் விதமும் அதை இத்தொகுப்பில் உள்ள கதைகளுடன் பொருத்தி விஷக் கிணறு என்ற தலைப்பை எப்படிப் பார்க்கலாம் அல்லது ஆசிரியர் எப்படிச் சித்தரிக்கிறார் என்று சொன்ன விதமும் நன்றாக இருக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கதைகளில் ஒளித்துவைத்திருக்கும் அத்துணை கூறுகளையும் நீங்கள் அனாயசமாக கண்டுகொள்கிறீர்கள் என்றே எனக்குப்பட்டது. அது ஒரு படைப்பாளிக்குத் தான் கண்டுகொண்டதை வாசகனுக்கும் கடத்திவிட்ட மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது. இத்தொகுப்பில் உள்ள கதைகளைப் படிக்கவேண்டும் என்ற எண்ணத்தை விதைத்திருக்கிறீர்கள். நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.