கு. அழகர்சாமி கவிதைகள்

(1) மர்மம்  கொள்ளும் காகித உறை

தெரியாத
ஒரு முகவரி
தெரியாது
தன்னைத் தேடிக் கொண்டிருக்க,
யாருடைய கை
இப்படி தன்வாயை மூடி
ஒட்ட வைத்து
தன்னை மேசை மீது
விட்டுப் போனதென்று
தனக்கே தெரியாது
மேசை மீது கிடக்கும்
ஒரு காகித உறைக்குள்
என்ன இருக்கும் ?
ஒரு அனாமதேயக் கடிதம்?
ஒரு செல்லாத காசோலை?
ஒரு போலி இரசீது?
தப்பிப் பிழைத்தவனின்
ஒரு தற்கொலைக் குறிப்பு?
இறந்தவனின் கையெழுத்தில்லாத உயில்?
எதுவும் தெரியாததை எழுத வேண்டி
எழுதப்படாத
ஒரு வெற்றுக் காகிதம்?
ஒன்றுமே இல்லாமல்
உள்ளே
வெறும் வெற்றாய்?-
மூடுமந்திரமாய்ப் புதிர் கொள்ளும்
காகித உறை.
பிரித்துப் பார்த்து விடலாம்.
ஆனால் பிரிக்காமலேயே
புதிரவிழ்க்க அது
சவால் விடுவது போல் தோன்ற,
காகித உறை
துப்பறியும் மர்மம் கொள்வதை
எவ்வளவு முயன்றும்
தவிர்க்க முடியவில்லை என்னால்,
மர்மம் துலக்க
யோசிக்காமல் இருக்க முடியாமல்
யோசிப்பதால் மர்மமாய்,
கபால உறைக்குள்
மர்மம் கொள்ளும்
என் மூளை.


மாமலை

(1)

விதையுள்
உறங்கிக் கிடக்கும்
ஒரு பெருமரம் போல்
என் முதலெட்டில்
புதையுண்டு
அடுத்தடுத்து
எடுத்து வைத்த எட்டுகளில்
மெல்ல எழும்பி
கடைசி எட்டில்
தலை நிமிர்ந்து
மாமலையென்று
உயர்ந்து நிற்பதாய்
உச்சியிலிருந்து
அடிவாரம் நோக்கி
உறுதி செய்து கொள்கிறேன்
அந்த
மாமலையை
நான்.
(2)

அந்த
மாமலையை
நெருங்க நெருங்க
என் அகத்துள்
ஆழ்ந்து ஆழ்ந்து
ஓங்கும்
மெளனத்தை மறைத்தது
மால்நிற மாமலை.
மெளனத்தின் மறைந்தது
மால்நிற மாமலை.


(3) பிறகு

(1)

’பிறகைப்’
பிடித்து விடப் பார்க்கிறேன்
பிறகு-
தற்போது
’தற்போதைத்’
தவற விட்டு விட்டதால்-
(2)
’பிறகும்’-
பிறகாகிப் போவது
பிறகே.

(3)
‘பிறகு’ போல்
புகலில்லை எதுவும்
உடனடியாய்-


(4) கேள்வியும் பதிலும்

(1)

ஒரு கேள்வி
தன்னைப்
பாதிக் கிணறு
தாண்டிய ஒரு பதிலை
கீழே விழுந்து விடாமல்
இன்னொரு கேள்வி கேட்க வைத்து
கைப்பிடித்து
காப்பாற்றி கரையேற்றி விட்டது.

(2)

?

முற்றுப் புள்ளியாய்
உறங்கிக் கொண்டிருந்த ஒரு பதில்
சர்ப்பமாய் எழுந்து பார்த்தது
ஒரு கேள்வியாய்-
தன் ஸ்திதியில்
திருப்தியுறமால்





Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.