அணு ஆயுத தடை ஒப்பந்தமும் அமைதிப் பரிசும்




நிகான் ஹெடாங்க்யோ (Nihon Hidankyo, என்ற சமூக இயக்க அமைப்பிற்கு 2024 ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.

ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது அணு குண்டுகளை வீசி 1,20,000 நபர்கள் இறந்த நிகழ்வின் 79ம் ஆண்டில் இருக்கிறோம். அதன் கதிர்வீச்சுக்களாலும், அதன் எரியூட்டலாலும் கிட்டத்தட்ட 1,20,000 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ந்யூக்ளியர் ஆயுதங்கள் அணுகுண்டுகளைக் காட்டிலும் பேரழிவைக் கொண்டு வருபவை. எனவே இத்தகைய ஆயுதங்கள் பயன்படுத்தலாகாது என்ற கொள்கைக்காகவும், அதை ஒட்டிய செயல்பாடுகளுக்காகவும் அமைதிக்கான நோபல் வழங்கப்பட்டுள்ளது. ஆல்ப்ரெட் நோபலின் கருத்து அமைதி சார்ந்ததே என்றும், தனி மனித முன்னெடுப்புக்களில் அவர் நம்பிக்கைக் கொண்டிருந்தார் என்றும் அந்தக் குழுவின் தலைவர் சொல்கிறார். ந்யூக்ளியர் போர் மனித நாகரீகத்தைச் சிதைத்து சூழல் சீர்கேடுகளையும் கொண்டு வரும்.

ஆனால், அணு ஆயுத வல்லரசுகள் தங்கள் ஆயுதங்களை அதிகரித்துக் கொண்டு வருகின்றன. இதுவரை இதில் ஆர்வம் காட்டாத அரசுகளும் ந்யூக்ளியர் ஆயுதங்களைச் சேகரித்து வருகின்றன. எந்த நிமிடமும் இந்தப் படுகொலை ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்திலேயே உலகம் உறைந்திருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் இத்தகைய பேரழிவு ஆயுதங்களுக்கு எதிராகச் செயல்படும் ஒரு அமைப்பிற்கு இந்த பரிசினை வழங்குவதன் மூலம் ஒரு முக்கியச் செய்தியை நோபல் குழு சுட்டியிருக்கிறது.

சுமார் 80 ஆண்டுகளாக எந்தப் போரிலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதில், ‘ந்யூக்ளியர் விலக்கம்’ (Nuclear Taboo) என்ற வார்த்தைகளால் இந்த அமைப்பு ஏற்படுத்தியுள்ள நற்தாக்கம் புலனாகிறது. ஆயினும், நடக்கும் போர்கள், சூழல்கள், மனிதனுக்குச் சரிவரப் புரிந்துள்ளதா என்பதிலும் பதட்டம் ஏனோ வருகிறது.

அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட இரண்டாம் உலகப் போரில் நாகசாகி, ஹிரோஷிமா சந்தித்த பேரழிவு நாம் அறிந்ததே. அந்தப் போரினால் பாதிப்பிற்குள்ளான பொது மக்கள் இணைந்து ‘ஹிபாகுஷா’ (Hibakusha) என்ற பெயரில், தங்கள் வாழ்க்கை, உடல் நலம் போன்றவை சேதமுற்றிருப்பதையும், அணு ஆயுதங்கள் பேரழிவைக் கொண்டு வந்து மனித குலத்திற்கு எதிராகச் செயல்படும் என்பதையும், அவற்றைத் தடை செய்ய வேண்டும் என்பதையும் குறிக்கோளாகக் கொண்டு ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். அணு ஆயுதங்களால் ஏற்படும் அழிவுகளை உலகின் கண் முன் சாட்சியங்களாகக் காட்டினார்கள். இந்த அமைப்பும், அதன் செயல்பாட்டாளர்களும் மனித குலத்திற்கு அணு ஆயுத ஆபத்துக்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆற்றி வரும் செயல்களைப் பாராட்டி இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் அமைதி பரிசுக் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சாட்சிகளை ஆயிரக்கணக்கில் இந்த அமைப்பினர் உலகிற்குக் காட்டினார்கள், தீர்மானம் போட்டார்கள், துண்டுப் பிரசுரங்கள் வினியோகித்தார்கள், ஐக்கிய நாடுகளுக்கும், அமைதி கூடுகைகளுக்கும் தங்கள் உறுப்பினர்களை அனுப்பி, ‘ஏன் ந்யூக்ளியர் ஆயுதங்களை விலக்க வேண்டும்’ என்பதைத் தெளிவு படுத்தினார்கள்.

இன்றைக்கு இருக்கும் ஹிபாகுஷா நாளை இல்லாமல் போனாலும், வரலாற்றை, போர் கொண்டு வந்த பேரழிவை, மக்களின் துயரை ஜப்பானின் இளைய தலைமுறை நன்றாகத் தெரிந்து வைத்துள்ளது. அவர்கள் பேரெழுச்சியாக அணு ஆயுதங்கள் வேண்டாம் என்ற சிந்தனையை விதைத்து வருகிறார்கள்.

1956ல் உள்ளூர் அமைப்பாக இயங்கிய ஹிபாகுஷா, ந்யூக்ளியர் ஆயுதங்களால் ஏற்பட்ட கதிர்வீச்சால் பாதிக்கப்பட்ட மக்களையும் இணைத்துக் கொண்டு “அணு ஆயுதங்களைத் தடை செய்” என்ற கோஷத்துடன் மிகப் பெரும் ஜப்பானிய சமூக இயக்கமாக உருவெடுத்தது.

மார்ச் 1954ல் லக்கி ட்ரேகன்-5 என்ற மீன்பிடி கப்பல் பசிபிக் கடலுக்குச் சென்று பின்னர் கரை திரும்பியது. பசிபிக் கடலில் பிகினி பவளப்பாறைகளில் அமெரிக்கா செலுத்திய ஹைட்ரஜன் அணுகுண்டால். கப்பலில் சென்ற மாலுமிகள் மற்றும் உதவியாளர்கள் கதிர்வீச்சு அபாயத்திற்கு உள்ளாகி பல உடல் நலக் கோளாறுகளுடன் அவதிப்பட்டார்கள். அணு மற்றும் ஹைட்ரஜன் ஆயுதங்களால் பாதிக்கப்பட்ட அவர்கள் ‘அணு மற்றும் ந்யூக்ளியர் ஆயுதங்களால் பாதிப்புக்குள்ளானோரின் ஜப்பானிய கூட்டமைப்பு; என்ற ஒன்றைத் தொடங்கினார்கள். அது ‘நிகான் ஹெடாங்க்யோ’ என்று ஜப்பானிய மொழியில் சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

எந்தவொரு அமைப்பும் சந்திக்கும் சிக்கல்களை இவர்களும் சந்தித்தார்கள். 1950 களில் தொடங்கப்பட்ட இதில், நிர்வாக உரசல்கள் 1960 களில் ஏற்பட்டன. 1970 தொடக்கத்தில் தனித்த ஒரு சமூக நிர்வாகக் குழுவாக இது வடிவெடுத்தது. ‘இனி இன்னொரு ஹிபாகுஷா இல்லை’ என்ற வாக்கியத்துடன், அணு ஆயுதப் போர்களினால், வீடிழந்து, உறுப்புக்கள் இழந்து, சொந்தங்களைப் பறிகொடுத்து, வாழ்வாதாரத்தை இழந்து, கதிர்வீச்சு அபாயங்களுக்குள்ளாகும் மனிதர்களை இந்த அமைப்பு ஒன்று திரட்டியது.

இந்த அமைப்பு தங்கள் எதிரிகளை, அதாவது அணு ஆயுதங்களை ஆதரிப்போரை மட்டும் எதிர் கொள்ளவில்லை. தங்கள் அரசிற்கும் எதிராக நிற்க நேரிட்டது. அமைப்பு தொடங்கிய 1950 களில் அவர்களுக்கென்று சரியான வரை திட்டமோ, செயல் திட்டமோ இருக்கவில்லை. பனிப்போர் இந்த அமைப்பின் உயர்ந்த நோக்கத்தை வலுவாக்கியது.

‘ஒரு நாட்டின் மக்கள், போரினால் ஏற்படும் சேதங்களை. நாட்டின் நலம் பொருட்டு ஏற்றுக் கொள்ள வேண்டும்’ என்ற அரசின் கொள்கையை இவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை. தேவையற்ற போரில் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அரசு அதன் விளைவுகளை மக்களை ஏற்கச் சொல்வது சரியல்ல என்று வாதாடினார்கள். துயரப்படுவோரின் நலம் காக்கும் திட்டங்கள் மட்டுமே போதாது, அவர்களுக்குச் சரியான, முறையான இழப்பீடும் வழங்க வேண்டும் என்றும் இவர்கள் கோருகிறார்கள்.

மனித நேயம், அவனது அமைதியான வாழ்வு, இரண்டும் முக்கியமானவை. அணு ஆயுதங்கள் கொண்டு வரும் சூழல் சீர்கேடுகள் புவிக்கும் நல்லதல்ல. ஆயினும், அமைதிக்காக ந்யூக்ளியர் ஆயுதங்கள் தேவைப் படுகின்றன! இது முரண் இல்லை, பகைவரைத் தடுக்கும் ஒரு வழிமுறை. உலகம் முழுதும் மனிதர்கள் அனைவரும் சமமாக, சம உரிமைகளோடு, சமமான கல்வி, செல்வம் பெற்று வாழ முடிந்தால், எல்லைகளில்லை, சண்டைகளில்லை, ஆயுதங்களும் இல்லாமல் போய்விடும். ‘எல்லைகளற்ற தேசங்கள்’ என்ற ஒரு கருதுகோள் இருக்கிறது- அதன்படி உலகக் குடியுரிமை மட்டுமே இருக்கும். இனம், பால், மொழி, மதம், நிற பேதங்கள் கிடையாது.

சாந்தி நிலவ வேண்டும், உலகிலே சாந்தி நிலவ வேண்டும். இதற்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த 2024 நோபல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

உசாவி: The Nobel Peace Prize 2024 – Press release – NobelPrize.org


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “அணு ஆயுத தடை ஒப்பந்தமும் அமைதிப் பரிசும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.