சொர்க்கம்

மைலாப்பூர் சித்திரக் குளத்தருகில், மூன்றாவது குறுக்குத் தெருவில், பத்தாம் இலக்கம் கொண்ட இந்த கடைசி வீட்டிற்கு நீங்கள் வந்திருக்கிறீர்களா?  காலை எட்டு மணிக்கு முன்னே வந்தால், வாசலில் உள்ளே நுழைய கொஞ்சம் சிரமப்படுவீர்கள். காரணம் இரண்டு வரிசைகள் நின்று கொண்டிருக்கும். டவல், சோப்பு டப்பா சகிதம் குளிக்க ஒரு வரிசை. டாய்லெட் போக இன்னொரு வரிசை. ஆண், பெண் என்கிற பேதமெல்லாம் இங்கில்லை. நூறு வருட பழமையான அந்த வீட்டில், பத்து குடித்தனங்களுக்கு ஓரே டாய்லெட், ஒரே பாத்ரூம். ஒலிம்பிக்ஸ் போட்டியைவிட மிகக் கடுமையான டைமிங் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தது. யாராவது ஐந்து நிமிடத்திற்கு மேல் வெளியே வரவில்லை என்றால், பின்விளைவுகளை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். என்ன சார், முகம் சுளிக்கிறீர்கள்? சென்னையில் இந்த இடத்தில், இவ்வளவு குறைந்த வாடகைக்கு யார் சார் வீடு கொடுப்பார்கள்? யாரும் காலி செய்து கொண்டு போகமாட்டார்கள். அப்படியே தப்பித்தவறி யாராவது காலி செய்து கொண்டு போனால், அடுத்த அரைமணி நேரத்தில் இன்னொரு குடும்பம் வந்திருக்கும், இன்னும் அதிக ஜனத்தொகையுடன்.  

வாசலில் நுழைந்ததும் அப்படியே இடது பக்கம் திரும்பினால் என் ஜாகை. நீங்கள் ஹெல்மெட் போட்டுக் கொண்டு வந்தீர்கள் என்றால் தலை தப்பிக்கும். இல்லையென்றால், பரமபத வாசலில் நுழைவது போல, பயபக்தியுடன் தலையை குனிந்து உள்ளே வரவேண்டும். எட்டடிக்கு பத்தடியில் ஒரு ரூம். அந்த ரூமில், தெருவை  ஒட்டினாற் போல் ஒரு பெரிய ஜன்னல். மந்தமாருதம், மலயமாருதம், அடைபட்ட சாக்கடையின் துர்நாற்றம் எல்லாம் அதன் வழியாகத்தான் வரும். எதிர்பக்கம் ஒரு அலமாரி. என் சொத்து பூராவும் அங்கேதான் இருந்தது. ரூமுக்கு அடுத்து, எட்டடிக்கு ஐந்தடியில் ஒரு கிச்சன். குக்கர் வைத்து சமைத்தீர்கள் என்றால், மூன்று விசிலுக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. நான்கு, ஐந்து என்று போனால் மேலிருந்து காரை பெயர்ந்து விழும் வாய்ப்பிருக்கிறது. காபி, டீ, இத்யாதிகளுக்கு கிச்சனை பயன்படுத்தினால் உத்தமம். அதைத்தான் நான் செய்து வந்தேன். வெளியே தான் சாப்பாடு, டிபன் எல்லாம்.

என்ன, ரொம்ப கஷ்டமாக படுகிறதா உங்களுக்கு? இதுதான் சார் சொர்க்கமாக தெரிகிறது எனக்கு. என் அம்மையும் அப்பனும் பக்கத்திலேயே இருக்கும் போது வேறு என்ன வேண்டும்? காலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்து, காலைக்கடனை முடித்து விட்டு மெரினா பீச்சில் ஒருமணி நேரம் வாக்கிங். திரும்ப வந்தவுடன் முதல் ஆளாக குளித்துவிட்டு,  கோவிலுக்குப் போய் தரிசனம் செய்துவிடுவேன். அப்படியே ராயர் மெஸ்ஸில் டிபன், காபி. வீட்டிற்கு வந்தவுடன் அன்றைய செய்தித்தாள், பத்திரிகை, புத்தகம் என்று மதியம்வரை பொழுது போய்விடும். மத்தியானம் வேறொரு ஹோட்டலில் சாப்பாடு. பிறகு ஒரு குட்டி தூக்கம். மாலையில் இலக்கிய உரை, சொற்பொழிவு, கச்சேரி என்று ஏதாவது ஒன்று. இரவில் இரண்டு சப்பாத்தி, ஒரு டம்ளர் பால். அவ்வளவுதான் அன்றைய பொழுது கழிந்தது. பத்து மணிக்கு பாயை விரித்து படுத்தேன் என்றால் இடியே இடித்தாலும் எழுந்திருக்க மாட்டேன். எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாத வாழ்க்கை. எனவே அதனால் உண்டாகும் துயரங்களும், ஏமாற்றங்களும் இல்லை. 

ஒவ்வொரு மாதமும் 5-ம் தேதி வாடகையை வசூலிக்க வீட்டு ஓனர் கந்தசாமி வந்துவிடுவார். இன்றைய ஆன்லைன் பேமேண்ட் சமாச்சாரங்களில் அவருக்கு நம்பிக்கையில்லை.  ஒருசிலர் ஆட்சேபணை தெரிவித்தாலும் விடமாட்டார். எல்லார் வீட்டுக்கும் போய்விட்டு கடைசியாக என் ரூமுக்கு வருவார். குறைந்தது அரை மணி நேரமாவது அரட்டை அடிப்பார். போவதற்குமுன் உரிமையோடு காபியைக் கேட்டு வாங்கிக் குடித்துவிட்டுப் போவார். 

ஒருநாள் காலை கந்தசாமி ரூமுக்கு வந்தார். இந்த மாத வாடகை வாங்கிவிட்டாரே, எதற்கு மீண்டும் வந்திருக்கிறார் என்று நினைத்தேன். வழக்கத்திற்கு மாறாக, கவலை தோய்ந்த முகத்துடன் இருந்தார். என்ன விஷயம் என்று விசாரித்தேன். ஒரு கடிதத்தை நீட்டினார். அது அரசாங்கத்திலிருந்து வீட்டைக் காலி செய்யும்படி வந்த உத்தரவு. அந்த இடம் கோவிலுக்கு சொந்தமான இடம். அதை கந்தசாமி அத்துமீறி ஆக்ரமிப்பு செய்திருக்கிறார். உடனடியாக காலி செய்யவில்லை என்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதியிருந்தது. கீழே ‘பாலசுப்பிரமணியம்’ என்று பச்சை இங்க்கில் அதிகாரியின் கையெழுத்து, முத்திரையுடன் இருந்தது. 

“என்ன சார் இது? முதல்லே,  உங்கிட்டே வீட்டு ஒரிஜினல் டாகுமெண்ட்ஸ் எல்லாம் பத்திரமா இருக்கா? லாயர் கிட்டே காமிச்சீஙகளா?” என்று கேட்டேன். “எல்லாம் பத்திரமா பாங்க் லாக்கர்லே இருக்கு. நோட்டீஸ் வந்தவுடனே ஒரு தடவை லாயர்கிட்டே கொண்டு போய் காமிச்சேன். அவர் செக் பண்ணிட்டு எல்லாம் சரியாதான் இருக்குன்னு சொன்னார். நீங்க எதுக்கும் ஒரு தடவை நேரில் போய் பார்த்திட்டு வந்துடுங்க. நானும் எனக்கு தெரிஞ்சவங்க மூலமா என்னன்னு விசாரிக்கிறேன்னு சொன்னார். அதான் உங்களை கூட்டிக்கிட்டு போலாம்னு வந்தேன்”, என்றார் கந்தசாமி. “சரி வாங்க போகலாம்” என்று சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.

எனக்கு தெரிந்தவருடைய மருமகன் அங்கே கம்யூட்டர் டிபார்ட்மெண்டில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுடைய நம்பரை வாங்கிக் கொண்டு போய் பார்த்தோம். அவன் அந்த நோட்டீஸை தனது மொபைல்போன் காமிராவில் படம் எடுத்துக் கொண்டு, “சார், எனக்கு ஒரு நாள் டைம் குடுங்க. சம்பந்தப்பட்ட டிபார்ட்மெண்டிலே விசாரித்துவிட்டு உங்களுக்கு போன் பண்றேன்” என்றான். அன்று ராத்திரியே அவனிடம் இருந்து போன் வந்தது. “சார், இந்த விவகாரத்துல கொஞ்சம் பெரிய தலைங்க சம்பந்தப்பட்டிருக்காங்கன்னு தெரியுது. எதுக்கும் கொஞ்சம் கேர்ஃபுல்லா ஹாண்ட்டில் பண்ணுங்க. இந்த நோட்டீஸ் சைன் பண்ண ஆபிசரைப் போய் பாருங்க. என்கிட்ட பேசினதை தயவுசெய்து சொல்லிடாதீங்க. எனக்கு இன்னும் கன்பர்மேஷன் ஆகல்லே” என்று கெஞ்சினான். “கவலைப்படாதே” என்று சொல்லி போனை வைத்தேன். 

மறுநாள் ஒரு பதினோரு மணியளவில் அந்த ஆபீசரின் அறையை விசாரித்துக் கொண்டு போனோம். வெளியே நின்று கொண்டிருந்த ப்யூன் “மீட்டிங்க்கிலே இருக்காங்க. கொஞ்ச லேட்டாகும். என்ன விஷயமா வந்திருக்கீங்க?” என்று கேட்டார்.  ஒரு சிட்டில் என்னுடைய பெயரையும், மொபைல் நம்பரையும் எழுதி, “சார் கிட்ட குடுங்க” என்றேன். உள்ளே போன வேகத்திலேயே திரும்பி வந்த ப்யூன், “உள்ளே கூப்புடுறார்” என்றார். கந்தசாமியிடம் “நீங்க கொஞ்சம் இங்கேயே இருங்க. நான் போய் தனியா பார்த்து பேசிட்டு வறேன்” என்றேன். நான் உள்ளே போனதும், உதவியாளருடன் பேசிக்கொண்டிருந்த ஆபிசர்,  “சரவணன்,  நான் இவரோட கொஞ்சம் தனியா பேசணும். அஞ்சு நிமிஷத்திற்கு பிறகு கூப்பிடுறேன்” என்று சொல்லி அனுப்பினார். 

அவர் வெளியே போனவுடன், “அப்பா, எப்படி இருக்கீங்கப்பா?” என்று கேட்டான் நான் பெற்ற பிள்ளை பாலசுப்பிரமணியம். “இப்பவாவது கேக்கணும்னு தோணித்தே? எனக்கென்னடா கொறச்சல்? நான் நல்லாத்தான் இருக்கேன். எனக்கென்ன இனிமே சொத்து சேர்த்து, ஆடம்பரமா வாழணும்னு ஏதாவது அவசியமா? வர பென்ஷனை வச்சுக்கிட்டு சந்தோஷமா இருக்கேன்” என்றேன். “என்ன விஷயமா வந்தீங்கப்பா?” என்று கேட்டான். அந்த நோட்டீஸை காட்டி, “என்னடா இது? உன்னோட கையெழுத்து போட்டு வந்திருக்கு?” என்று கேட்டேன். அதை வாங்கிப் பார்த்தவன், “இதுக்குன்னு தனியா இன்வெஸ்டிகேஷன் செக்சன் இருக்குப்பா. அவங்க விசாரிச்சு என்னோட உத்தரவுக்கு அனுப்புவாங்க. கையெழுத்து போடறது மட்டும்தான் என் வேலை. வேறே ஒண்ணும் தெரியாதுப்பா” என்றான். “என்னடா இப்படி பொறுப்பே இல்லாம பதில் சொல்றே? தாத்தா, பாட்டன் காலத்திலேருந்து வந்த சொத்துடா இது. திடீருன்னு இவங்களுதில்லைன்னு சொன்னா எப்படி? டாகுமெண்ட்ஸ் எல்லாம் சரியாத் தான் இருக்குன்னு லாயர் சொல்றார். என்ன தில்லுமுல்லு நடக்குது இங்கே?” என்று சத்தம் போட்டேன். “சத்தியமா சொல்றேன். எனக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைப்பா” என்றான் அழாக்குறையாக. “கையெழுத்து போட்ட உனக்கே சம்பந்தமில்லைன்னா, பின்னே யாருக்குத்தான் இதுலே சம்பந்தம் இருக்கு. யாரைப் போய் பார்க்கணும்?” என்று கேட்டேன் . “மேலே போய் பாருங்கப்பா” என்றான். “மேலேன்னா? என்ன, அந்த ஈஸ்வரனைப் போய் பாக்க சொல்றியா?” என்று மேலே கையைக் காட்டிக் கேட்டேன். “இவரோட பேரும் ஈஸ்வரன் தாம்ப்பா. காளீஸ்வரன். என்னோட மேலதிகாரி” என்றான். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. “வரேன்” என்று சொல்லி விட்டு கிளம்பினேன்.

வெளியே வந்ததும் கந்தசாமி “என்ன சொன்னார் சார்? என்று கேட்டார். “இவரால ஒண்ணும் பண்ண முடியாதுன்னுட்டார். இவரோட மேலதிகாரியைப் போய் பாக்கணுமாம். வாங்க போகலாம்” என்று காளீஸ்வரனைப் பார்க்கப் போனோம். அறையில் அவர் இல்லை. எங்கோ இன்ஸ்பெக்ஷனுக்கு போய்விட்டாராம். எதுக்கும் நாளை சாயந்திரம் மூணு மணிக்கு மேலே வந்து பாருங்க என்றார் அவருடைய ப்யூன்.

இரவு பாயை விரித்து படுத்துக்கொள்ள ஆயத்தமாகிக் கொண்டிருந்தேன். மொபைல் போன் ஒலித்தது. என் பிள்ளை தான் பேசினான். “அப்பா, விசாரித்ததில் மினிஸ்டரோட சகலை இதில் சம்மந்தப்பட்டிருக்கறதா தெரியுது. அக்கம் பக்கத்திலே இருக்கிற வீடுகள் இவரோட பெயரிலும், பினாமி பெயரிலும் இருக்காம். இந்த வீட்டையும் வளைச்சுப் போடணும்னு பாத்துக்கிட்டுருக்காரு. போலி டாகுமெண்ட்ஸ் எல்லாம் தயார் பண்ணி இருக்கறதா தகவல்” என்றான். “என்னடா, போலி டாகுமெண்ட்ஸ் வச்சுக்கிட்டு எந்த சொத்தை வேணா வளைச்சிப் போட்டுட முடியுமா என்ன? அவ்வளோ வீக்காவா இருக்கு நம்ம ஸிஸ்டம்?” என்றேன். “அப்படி இல்லேப்பா. கோர்ட்டு கேஸுன்னு இழுத்தடிக்கும். டைம் பிடிக்கும் கேஸை ப்ரூவ் பண்ண” என்றான். கூடவே “ஜாக்கிரதையாக இருங்கப்பா” என்றான். “நான் ஜாக்கிரதையாக இருப்பது இருக்கட்டும். உன் நிலமையை யோசிச்சுப் பாத்தியா? இந்த விஷயம் ஒரு நாளைக்கு வெளியே வந்தா உனக்கு என்ன ஆகும்? அவங்களெல்லாம் தப்பிச்சுடுவாங்க. உனக்குத்தான் கஷ்டம். அப்படி என்ன கூழைகும்பிடு போட்டு இழுத்த இழுப்புக்கெல்லாம் போகணும்? கவர்ன்மென்ட் உத்தியோகத்திலே நேர்மையான அதிகாரிகள் இல்லையா என்ன? எல்லாம் நாம நடந்துக்கற விதத்திலே இருக்குடா. முடியாது போங்கடான்னு சொன்னா என்ன செஞ்சிடுவாங்க? தண்ணியில்லாத காட்டுக்கு மாத்துவாங்க. போய் இருந்து பாத்துட்டு வாயேன். என்ன ஆயிடப் போறது” என்றேன். மறுமுனையில் சத்தமே இல்லை. “சரி வைச்சிடுறேன்” என்று சொல்லி தொடர்பை துண்டித்தேன். 

மறுநாள் மாலை காளீஸ்வரனைப் போய் பார்த்தோம். பார்க்கவே அதிகார தோரணையோடு, கழுத்தில் தடிமனாக தங்க செயின், கையில் மோதிரங்கள் என்று பகட்டாக இருந்தார். நாங்கள் போனதும் எதற்கு வந்திருக்கிறீர்கள் என்பதுபோல் பார்த்தார். அவரிடம் நோட்டீஸைக் காண்பித்து “சார், இவங்களுக்கு சொந்தமான வீட்டைக் காலி பண்ண சொல்லி நோட்டீஸ் வந்திருக்கு. இதுலே ஏதோ குழப்பம் இருக்கும் போல தெரியுது. ஒருவேளை வேறு யாருக்கோ அனுப்ப வேண்டிய நோட்டீஸ் தவறுதலா இவருக்கு வந்துடுச்சோன்னு சந்தேகமா இருக்கு. அது விஷயமா உங்ககிட்டே பேசணும்” என்றேன். 

அதை வாங்கிப் பார்த்தவர் “உங்க பேருதானே கந்தசாமி? இது உங்க விலாசம்தானே? சர்வே நம்பர் சரியா இருக்கா?” என்று அடுக்கடுக்காக கேள்விகள் கேட்டார். ஆமாம் என்பதுபோல் தலை அசைத்தார் கந்தசாமி.

“பின்னே என்ன சந்தேகம் உங்களுக்கு? இது உங்களுக்கு அனுப்பிச்ச நோட்டீஸ்தான். எல்லா விஷயமும் தெளிவா எழுதியிருக்கே. கோவிலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செஞ்சிருக்கீங்கன்னு” என்றார். 

“இது எப்படி சார் சாத்தியம்? நூறு வருஷங்களுக்கு மேல் பரம்பரை பரம்பரையாக ஆண்டு அனுபவிச்ச சொத்து சார். ஒரிஜினல் டாகுமெண்ட்ஸ், EC எல்லாம் க்ளியரா இருக்கு. திடீருன்னு அத்துமீறல், ஆக்கிரமிப்புன்னு சொன்னா எப்படி”. 

“நீங்க நூறு வருஷம்னு சொல்றீங்க. கோவில் ஆயிரம் வருஷத்துக்கு மேலாக இருக்கே? இருநூறு வருஷத்துக்கு முன்னாடி கோவிலுக்கு எழுதி வைச்சதா பத்திரம் சொல்லுதே” என்றார். 

“அந்த டாகுமெண்ட்ஸ் ஜெராக்ஸ் காப்பி குடுக்க முடியுமா சார்” என்று கேட்டேன். 

“உங்களுக்கு குடுக்க முடியாது. கோர்ட்டுல தாக்கல் செய்வோம். அப்ப அவங்ககிட்ட அப்ளை பண்ணி வாங்கிக்குங்க” என்றார். 

“என்ன சார் இது? அக்கிரமமா இருக்கு. தீடீர்ன்னு ஒரு நோட்டீஸ் அனுப்புவீங்க, வீட்டைக் காலி பண்ணும்பீங்க, அதுக்கான எந்தவித ஆதாரங்களையும் குடுக்க மாட்டிங்க. எங்கே போய் முட்டிக்கிறது நாங்க?”

“கோர்ட்டுக்கு போங்க. அங்கே சொல்ல வேண்டியதை சொல்லுங்க. நாங்க எங்க தரப்பு வாதத்தை வைக்கிறோம்” என்றார். 

“கோர்ட்டுக்கு போறதுன்றது சாமான்ய ஜனங்களால ஆகிற காரியமா, சார்? இழுத்தடிக்குமே,  சார்” என்றேன்.

“நாங்க என்ன பண்ண முடியும்? கோர்ட் எங்கள் கட்டுப்பாட்டிலேயா இருக்கு? முடிஞ்சா யாரையாவது பிடிச்சு கேஸை சீக்கிரமா நகர்த்த முடியுமான்னு பாருங்க” என்றார்.

சரி, இவரிடம் இனி பேசி பிரயோஜனம் இல்லை. எழுந்து நின்று, போவதற்கு முன் ஒருமுறை அவரை உற்று நோக்கியபடியே, “நீங்க என்ன அந்த மினிஸ்டரோட சகலைக்கு உறவா?” என்றேன். ஒருகணம் பொட்டில் அறைந்ததுபோல துணுக்குற்றவர், “என்ன…என்ன சொல்றீங்க?” என்று தடுமாறினார். மீண்டும் அழுத்தம் திருத்தமாக நிறுத்தி நிதானமாக, “நீங்க….என்ன…அந்த…மினிஸ்டரோட…சகலைக்கு…உறவா? இல்ல… அவர்…போடுற….பிஸ்கெட்டுக்கு…வாலாட்டிக்கிட்டிருக்கீங்களா?” என்று கோபம் கொப்பளிக்க கேட்டேன். 

“இந்த நாயை கழுத்தைச் பிடிச்சு வெளியே தள்ளுங்கடா” என்று ஆவேசமாக கத்தினார் காளீஸ்வரன். அவருடைய உதவியாளர் ஒடி வந்து என் கையைப் பிடித்து தரதரவென்று  இழுத்துக் கொண்டு போய் வெளியே தள்ளி விட்டார். வாசலில் நின்றுகொண்டிருந்த ப்யூன், “சார், தயவு செஞ்சு போயிடுங்க. பிரச்சினை பண்ணாதீங்க” என்றார். ஏதோ நாங்கள்தான் தவறு செய்தவர்கள் போல கூனிக்குறுகி இருவரும் வெளியே வந்தோம். 

வீட்டுக்குப் போகையில் “கவலைப்படாதீங்க. நம்ம மேலே தப்பு இல்லேன்னும்போது எதுக்கு பயப்படணும். நாம கேஸ் போடுவோம். நீங்க உங்க லாயரைப் பாத்து பேசுங்க” என்று கூறினேன். கந்தசாமி தயங்கியபடியே “லாயரோடு பேசிட்டு உங்களுக்கு சொல்றேன்” என்றார்.

அடுத்த நாள், தஞ்சாவூரில் ஒரு நெருங்கிய உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை. கல்யாணத்தை முடித்துக் கொண்டு, கோயில், குளம் என்று சுற்றிவிட்டு ஒருவாரம் கழித்து மீண்டும் சென்னை வந்து சேர்ந்தேன். இரவு ஹோட்டலில்  சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது, போனில் என் பையன் கூப்பிட்டான். “அப்பா, இன்னைக்கு காலையில அந்த கந்தசாமி அவரோட லாயரோட வந்து காளீஸ்வரனைப் பார்த்தார். டீல் பேசிமுடிச்சுட்டாங்க. மார்க்கெட் ரேட்டைவிட கொஞ்சம் கம்மி விலைக்கு வித்துட்டார். நாளைக்கு ஒரு தொகை அட்வான்ஸா கைமாறுது. ஆறு மாசத்தில் மிச்சதொகையும் செட்டில் பண்றாங்க. ஆனா….”

“என்னடா, ஆனா…ஆவன்னான்னு இழுக்கறே?”

“ஆனா, இந்த வார கடைசிக்குள்ளே வீட்டைக் காலி பண்ணியாகணும்னு கண்டிஷனா சொல்லிட்டார்ப்பா.”

“எப்படிடா முடியும்? இந்த வாரம் முடியறதுக்கு இன்னும் ரெண்டு நாள் தானே இருக்கு? எல்லாரும் எங்கே போவாங்க? ஸ்கூல், காலேஜ் படிக்கிற பசங்க நிறைய பேர் இருக்காங்க. அட்மிஷனுக்கு என்ன பண்ணுவாங்க?” 

“எல்லாரும் இல்லேப்பா. நீங்க மட்டும். நீங்க மட்டும் உடனடியாக காலி பண்ணியாகணுமாம். இல்லேன்னா இந்த டீலே கான்சல்ன்னு காளீஸ்வரன் கண்டிப்பா சொல்லிட்டார். நீங்க அவரை கண்டபடி பேசிட்டீங்களாம். உங்க மேலே ஏகப்பட்ட கடுப்பிலே இருக்கார்”

ஈஸ்வரா. என்ன சோதனை இது?

“அப்பா, நீங்க வேணா இங்க வந்துடுங்க”

“இப்பகூட ‘நான் வேணாம்னு’ தானே உன் வாயிலேருந்து வார்த்தை வருது”

“அப்படி சொல்லலேப்பா. எங்ககூட வந்து தங்கிக்கங்கன்னு சொல்றேன்”.

“இல்லேடா. எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லே. இவ்வளவு வருஷம் தனியா இருந்து பழகிடுத்து. நான் நிம்மதியா இருக்கேன். என்னாலே அங்கே அண்ணாநகர்லே வந்து இருக்க முடியாது. இந்த இடம் தான் எனக்கு சொர்க்கம். நீ ஒண்ணும் மண்டையப் போட்டு குழப்பிக்காதே. எப்போ முடியறதோ அப்போ போன் பண்ணிப் பேசு. எல்லோரையும் விசாரிச்சதா சொல்லு” என்று சொல்லிவிட்டு வைத்தேன். 

காலையில் கந்தசாமி தயக்கத்துடன் ரூமுக்கு வந்தார். அவரை உட்கார வைத்து, அவர் கேட்காமலேயே காபி போட்டுக் கொடுத்தேன். அவருக்கு இன்னும் தர்ம சங்கடமாகிவிட்டது. எங்கே, எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று தயங்கினார். அவரை மேலும் கஷ்டப்படுத்த விரும்பாமல், “கந்தசாமி, நீங்க என்ன சொல்லப் போறீங்கன்னு எனக்குத் தெரியும். விஷயத்தைக் கேள்விப்பட்டேன். நீங்க கொஞ்சம் அவசரப்பட்டுட்டீங்கன்னு தோணுது. கேஸு நிக்காதுன்னு அவங்களுக்கும் தெரியும். உங்களை பயமுறுத்தி சொத்தை புடுங்கறதுதான் அவங்க நோக்கம். ம்…எல்லாம் முடிஞ்சு போச்சு. இனிமே அதைப்பத்தி பேசி பிரயோஜனம் இல்லை. கவலைப்படாதீங்க. என்னாலே உங்க டீலுக்கு எந்த பங்கமும் வராது. ரெண்டு நாள்ல நான் வீட்டை காலி பண்றேன்” என்றேன். 

எழுந்து என் கையைப் பிடித்துக் கொண்டவர், “சார், என்னை மன்னிச்சுடுங்க. எனக்கு வேறே வழி தெரியல்லே. கோர்ட்டு கேஸுன்னு அலைய எனக்கு ஆள் பலமும் இல்லே, பண பலமும் இல்லே. பசங்க எல்லாம் வெளியூர்லே இருக்காங்க. ஒண்டிக்கட்டையா இந்த வயசுல என்னாலே அலைய முடியாது. அதுதான் வித்துடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றார். “உங்க நிலமை எனக்கு புரிகிறது” என்றேன். “சார், நான் என்னோட செலவுல ஒரு ப்ரோக்கரைப் பிடிச்சு உங்களுக்கு ஒரு இடம் ஏற்பாடு பண்ணித்தரேன்” என்றார். “தேவையில்லை. எனக்கு உடம்புல பலமும், மனசுல தெம்பும் இருக்கு. எனக்கு பிடிச்ச இடமா நானே பாத்துக்கறேன். அப்படி உங்க உதவி தேவைப்பட்டா தயங்காம கேக்கறேன். கவலைப்படாதீங்க, எல்லாம் நல்லபடியா நடக்கும். தைரியமாக போயிட்டு வாங்க” என்று கை குலுக்கினேன். கண்களில் கண்ணீரே வந்து விட்டது கந்தசாமிக்கு.

ரூமைப் பூட்டிக்கொண்டு தெருவில் இறங்கி நடந்தேன். இந்த மைலாப்பூரில் இன்னொரு சொர்க்கம் இல்லாமலா போய்விடும்? போய் தேடிக் கண்டு பிடிக்கிறேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

5 Replies to “சொர்க்கம்”

  1. அருமை. இன்றய அரசியல்வாதிகளின்அட்டுழியத்தை யதார்த்தமாக காட்டியுள்ளார்ஆசிரியர்.
    அந்த பெரியவருக்கு என்னுடைய மைலாப்பூர் அபார்ட்மென்ட்டை வாடகைக்குகொடுக்க நான் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.