தெலுங்குப் பாடல் தெலுசாகிவிட்டது. கன்னட வசனம் கவர்ந்தாகி விட்டது. அந்த வரிசையில் மலையாளம் செப்ப வேண்டும். அதற்கு வீட்டுப்பாடம் செய்ய வேண்டும். விஷ்ணுபுர நாயகர், இரா. முருகன் போன்றோரிடம் விசாரிக்க வேண்டும். அப்புறம் பார்க்கலாம்.
இந்த முறை எளிமையான தேர்வு. ஜெர்மன் வழி ஆங்கிலம். கதே எழுதிய “ஃபாஸ்ட்”. காவியத்தனமான பாடல் வரிகள் கொண்ட இசை நாடகம். ஆடலும் பாடலும் வரிசைகட்டினாலும் வசனமும் மறைபொருளும் கொண்ட அரங்க நிகழ்வு. உலக இலக்கியத்திற்கு ஜெர்மனியின் மிகப்பெரிய பங்களிப்பு. வரலாற்று இடைக்காலத்துக்கேயுரிய மர்மமும், பரோக் உருவகங்களும், மறுமலர்ச்சி கால முகமூடிகளும் காமெடியா டெல்’ஆர்டே எனப்படும் இத்தாலிய தோற்பாவைக்கூத்துகளும் கிரேக்க சோக நாடகத்தின் மூலம் நவீன மறுபரிசீலனைக்கு உள்ளாக்கும் படைப்பு. இந்த ஆக்கத்தில் பல விஷயங்கள் பின்னிப் பிணைகின்றன: இறையியல் + புராண, தத்துவம் + அன்றைய அரசியல் + பொருளாதார, அறிவியல் + அழகியல் + இசை = இலக்கியம்.

சில நறுக்குகள்:
உங்கள் துயரத்தை காதலிப்பதை நிறுத்துங்கள்,
அது பிணந்தின்னிக் கழுகு போல் உங்களைத் தின்றுவிடும்!
உடலும் ஆன்மாவும்… நன்றாகப் பொருந்துகின்றன
எனினும் அவர்கள் நித்திய வாதத்தில் உள்ளனர்
அன்புள்ள நண்பரே, அனைத்து கோட்பாடுகளும் பழுப்பு நிறத்தில் உள்ளன,
அப்புறம் பச்சை – வாழ்க்கையின் தங்க மரம்
ஐயோ, நான் தத்துவமும், சட்டமும் மருத்துவமும் படித்திருக்கிறேன்,
அப்புறம் என் வருத்தத்திற்காக இறையியலும் கூட
தீவிர வைராக்கியத்துடன் அவற்றை நன்றாகப் படித்தேன்,
ஆனால் இங்கே நான் கேவலமான முட்டாள்,
நான் முன்பு இருந்ததை விட புத்திசாலி இல்லை.
கலை கற்பாந்தமாயிருக்கும்
லத்தீனில் “ars longa, vita brevis”
நம் வாழ்க்கை கற்பூரமாயிருக்கும்
கடவுள்: பூமியில் எதுவும் சரியாக இல்லையா?
சாத்தான்: இல்லை இறைவரே! நான் அதை எப்பொழுதும் போல கிஞ்சித்தும் ரசிக்கவில்லை. மனிதர்களின் அனைத்து துயரங்களிலும் நான் பரிதாபப்படுகிறேன். உண்மையில் ஏழைகளை துன்புறுத்துவதை வெறுக்கிறேன்.
கற்பனை, தன் படைப்பின் சித்திரவதைகளுக்கு, தன்னைத்தானே கண்டிக்கும் குழியின் முன், மனிதன் நடுங்க மாட்டான் – என்பதை செயல்களால் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
அவன் தனக்கான குறுகிய பாதையில் முன்னேறி மேலேறும்போது, எவருடைய வாயில் நரக நெருப்பு எரிகிறது?!
நிதானமாக உச்சத்தை அணுகி, ஒன்றுமில்லாமல் உருகும் அபாயத்தை ஏற்றுக்கொள்ளுங்கள்.
பின்னர் நீங்கள் நம்பிக்கையையும் நித்திய அன்பையும் பற்றி பேசுவீர்கள், ஏகத்திய ஒற்றை, சக்திவாய்ந்த தூண்டுதலைப் பற்றி பேசுவீர்கள். அது உங்கள் இதயத்திலிருந்து அவ்வளவு எளிதாகப் பாயுமா?
நிரம்பி வழியும் உங்கள் இதயத்தை நிரப்பவும்,
நீங்கள் ஆழ்ந்த பேரின்பத்தை உணரும் போது,
நீங்கள் விரும்புமாறு அழைக்கவும்:
நல்லதிர்ஷ்டம்! இதயம்! அன்பு! அல்லது கடவுள்!!
அதற்கு என்னிடம் பெயர் இல்லை!
உணர்வுதான் எல்லாமே;
எல்லாமே பெயரொலியும் மாயப்புகையும்
சொர்க்கத்தின் பிரகாசம்

இந்த நாடகத்தை மூன்றே பேர் கொண்ட மாணவர்கள் குழுவினர் சென்ற வாரம் பாஸ்டனில் அருமையாக நிகழ்த்தினார்கள்
மனித முயற்சிகள் அனைத்தும் எதற்கும் வழிவகுக்காது, மகிழ்ச்சியும் ஒழுக்கமும் நவீன உலகில் சாத்தியமில்லை என்பது ஒரு பக்கம்.
உலகம் மிகவும் சீரழிந்ததாக சாத்தான் நினைக்கிறார். மனிதகுலம் தனக்குத்தானே கொண்டு வரும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் அவரது சொந்த சோதனைகள் கூட சமமாக முடியாது என்பார் பிச்சி.
சாத்தானைப் பொறுத்தவரை கற்றல் மனிதகுலத்தின் மீது ஒழுக்கத்தை மட்டுமே சுமத்துகிறது, அதே நேரத்தில் மகிழ்ச்சியின்மையைத் தவிர வேறொன்றையும் கொணராது.
அதற்குப் பதிலாக, இந்த இளைஞர் ஒழுக்கத்தை விட்டுவிட்டு, சுதந்திரமானதும் அகநிலை ரீதியான மகிழ்ச்சியான வாழ்க்கையையும் வாழ வேண்டும், அத்தகைய வாழ்க்கை சாபத்தை நோக்கி இட்டுச் சென்றாலும் கூட. அனைத்து கற்றலையும் கைவிட்டு, அதன் வரம்புகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு வெளியே வாழ மாணவரை தூண்டுகிறது அகப்பேய்.
மனிதகுலத்திற்கு அதன் இருத்தலியல் நெருக்கடியிலிருந்து ஒரு வழியை வழங்க, உணர்ச்சிகள் கண்டிப்பாக பகுத்தறிவுச் சிந்தனையை வெல்ல முடியும் என்று வாதிடுகிறது நிழற்பேய். .
நம்பிக்கையை விமர்சிக்கும் பகுத்தறிவு தத்துவவாதிகளின் வாதத்தைக் கிஞ்சித்தும் கதே ரசிக்கவில்லை: உணர்வு என்பது பகுத்தறிவை விட மனிதகுலத்தின் திறன்களின் உண்மையான வெளிப்பாடு என்கிறது இந்த நாடகம்.
கதேவிற்கு நவீன உலகில் உணர்ச்சிகளின் இடம் முக்கியம். ஆனால், அதற்கு முந்தைய பகுத்தறிவுவாத சிந்தனைப் பள்ளியானது பாரம்பரிய கற்றலையும் நூல்களின் அறிவையும் அடித்தளமாக நம்பியிருந்தது. கதேவின் “புயலும் மன அழுத்தமும்” சித்தாந்தப் பள்ளி மூலம், வாழ்க்கையின் உணர்ச்சிப் புயல்களில் உண்மையைக் கண்டறிய வேண்டும் என்று கதே வாதிட்டார்.

ஒரு நபர் – டாக்டர் டோன்சி மாதவ் அனந்த் பை
”தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான்என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை”
பாரா (எழுத்தாளர் பா. ராகவன்) பொருள்: பிறர் நலம் காத்தலே சம்சாரியின் முதற்பணி.
1898-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சிண்டிகேட் வங்கி தற்போது கனரா வங்கியுடன் இணைக்கப்பட்டுவிட்டாலும் அந்த வங்கியை உருவாக்கிய ‘25 பைசா சேமிப்புத் திட்டம்!’ டாக்டர் டோன்சி மாதவ் அனந்த் பை (Dr. Tonse Madhav Ananth Pai) வரலாற்றை இப்பொழுதுதான் காணப்பெற்றேன்.
கர்நாடகாவில் கடற்கரைப் பகுதியான உடுப்பியில் மால்பி (Malpe) மீனவக் குடும்பத்தில் 1898-ல் பிறக்கிறார் பை. பெங்களூரில் மருத்துவம் படித்து முடிக்கிறார். ஜப்பானுக்குச் சென்று மருத்துவத்தில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்பது தோன்சேவின் ஆசை. தன் ஆசையை அவருடைய பெற்றோரிடம் எடுத்துச் சொல்ல, பெற்றோர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுகின்றனர். தோன் சேவின் அம்மா, ‘நீ இந்தக் கிராமத்திலேயே இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்’ என்று தோன்சே-விடம் சொல்ல, அவரும் மேற்படிப்பு ஆசையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, அந்தக் கிராமத்திலேயேத் தங்கி மருத்துவம் செய்யத் தொடங்குகிறார்.
ஆறு மாதங்களிலேயே, அந்த கிராமத்தில் மூக்குச்சளியும் காய்ச்சலும் வயிற்றுப்போக்கும் அஜீரணமும் மட்டுமே வழக்கமான நோய்களாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றனர் மீனவர்கள். மருத்துவருக்கு கட்டணமாகத் தர அவர்களிடம் என்ன பணம் இருந்துவிடும்!?
அவர் போதுமான அளவு சம்பாதிக்காததற்கு ஒரு காரணம், அவரைச் சுற்றியுள்ளவர்களும் போதுமான அளவு சம்பாதிக்காததுதான் என்பதை அவர் உணர்கிறார். அதை மாற்ற இந்தியா இதுவரை கண்டிராத அல்லது கற்பனை செய்து பார்க்காத ஒரு சமூகப் புரட்சியை அவர் வியூகம் வகுக்கத் தொடங்கினார்.
தாய்மார்களால் ம்ட்டுமே குழந்தைகள் தவறாமல் மருத்துவரிடம் கொண்டு வரப்படுகிறார்கள்; அவர்களின் கணவர்கள் குடிக்கிறார்கள். கிடைத்த காசை சேமிக்காமல் வீணடிக்கிறார்கள். அந்தத் தந்தையரைப் போல் மகன்களும் சீரழிந்து போகமல் இருக்கும் திட்டத்தை தாய்க்குலத்திடம் முன்வைக்கிறார்.
”உங்களின் காலணாவை என்னிடம் கொடுங்கள்.” ஒவ்வொரு முறை வரும்பொழுதும் வெறும் இருபத்தைந்து பைசாவை சேமிப்பாக எடுத்துக் கொள்கிறார். அதன் மூலம் வங்கிக் கணக்கைத் துவக்க 25 பைசா போதும் என்னும் புதிய பொருளாதார உத்தியை முதன் முதலாக செயலாக்கம் செய்கிறார். தன்னிடம் மருந்து கலவை செய்பவர், செவிலி போன்றோரை விட்டு, அவர்களிடம் வாரந்தோறும் காலணாவை வைப்பு நிதியில் போடச் செய்கிறார். கணவன் இல்லாத நேரம் பார்த்து அவர்களைக் கேட்க வைக்கிறார்,
வீட்டில் எந்த சிறுவாடு இருந்தாலும் காணாமல் போய்விடும். கணவரே தண்ணியடிப்பதற்கோ சூதாடுவதற்கோ செலவழித்து சூறையாடி விடுவார். மருத்துவர் பை நத்தும் டசிண்டிகேட் வங்கியிடம் இருந்தால் பத்திரமாக இருக்கும். நம் மகனின், மகளின் படிப்பிற்கும் வருங்காலத்திற்கும் உதவும். எனவே, மனைவியர் வைப்புத் தொகையைப் பெருக்குகின்றனர்.
உடுப்பியில் 1925 இல் கனரா தொழில்துறை வங்கி ஆட்சிக்குழு (Canara Industrial and Banking Syndicate Ltd) என்னும் நிதி நிறுவனத்தில் பணம் சட்டியில் சேர்கிறது. வெறுமனே வைப்புத் தொகையை வைத்து என்ன பிரயோசனம்!?
பசங்களுக்கு போஷாக்கான உணவு தேவை. பால் கொடுக்கச் சொல்கிறார். பால் கறக்க மாடு வாங்க வைக்கிறார். எல்லோருக்கும் ஆடு, மாடு கடன் தருகிறார். ஒருவரைப் பார்த்து இன்னொருவரும் செயலில் இறங்குகிறார்கள். ஊரே கொழிக்கிறது. பாலும் தேனும் ஓடுவது சாமானியர்களால்தான்.
அப்பொழுது அவரது பயணங்களில் ஒன்றில், அவர் ஒரு வியாபாரியைச் சந்தித்தார், அவர் அரசாங்கத்திடமிருந்து நூல் உரிமம் பெற இவரிடம் உதவி கோருகிறார். அந்த கனவானின் பெயர் திரூபாய் அம்பானி. ரிலையன்ஸ் துவங்குவதற்கு முதல் போடுகிறார் பை.
வாழ்நாளில் தனி நபராக, மணிப்பால் உட்பட்ட அதிக எண்ணிக்கையிலான பல்வேறு கல்வி நிறுவனங்களை நிறுவி நடத்தியவராக பை கருதப்படுகிறார்.
ஒரு தகவல் – ஹார்ப்பர்ஸ் கண்டுபிடிப்புகள் (ஃபைண்டிங்ஸ்)
ஹார்ப்பர்ஸ் பத்திரிகை 174 ஆண்டுகளாக அச்சிதழாக வெளிவருகிறது. அந்த மாதாந்தரியின் கடைசி பக்கங்கள் அமெரிக்கா வந்த புதிதிலேயே என்னைக் கவர்ந்தது.
மலையாள மனோரமா வருடந்தோறும் பஞ்சாங்கம் – அல்மனாக் வெளியிடும். அதாவது சென்ற வருட சாதனைகள், செய்திகள், தகவல்கள் கொண்ட ஆண்டுக் குறிப்புகள். என் வாழ்நாளின் இலட்சியம் அந்த இதழில், அதற்காக செயல்படுவது.
ஆனால், ஹார்ப்பர்ஸின் புள்ளிவிவரங்கள் அதற்கும் மேல் சென்று ஒரு தொடர்கதையை நானூறு வார்த்தைகளில் சொல்லும். நாவலுக்குரிய விஷய கனத்தையும் பல தசாப்தங்களின் ஆய்வுகளையும் அரைப் பக்கத்தில் டக்கென்று உணர்த்தியது. சற்றே மலைப்பு + நிறைய தேடல் + தெரியாதது மலையளவு = நிதர்சன நிலவரம்.
”ஆண் நாத்திகர்களை முகக் குறிப்புகளின் அடிப்படையில் கிறிஸ்தவர்களிடமிருந்து வேறுபடுத்தலாம். ஈரானிய ஆண்களை விட ஹிஸ்பானிக் ஆண்கள் அனைத்து நீள் தாடிகளையும் சாதகமாகப் பார்க்கிறார்கள். பாரசீக வெறுப்புப் பேச்சைக் கண்டறியும் இயந்திரக் கற்றல் மாதிரியை அறிஞர்கள் வெளியிட்டனர். எதிர்பாலினத்தவரை விரும்பும் பெண்களை விட தற்பால் உறவுகளில் உள்ள டச்சுப் பெண்கள் குற்றங்களில் சந்தேகிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதேசமயம், தற்பால் உறவுகளில் உள்ள டச்சு ஆண்களை விட எதிர்பாலினத்தவரை விரும்புவர்கள் சந்தேகத்திற்குரியவர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். தங்கள் வாழ்க்கையில் அதிக பாகுபாடுகளை உணரும் ஆண்களிடம் ஈர்க்கப்பட்ட ஆண்கள், புணர்ச்சிக்குப் பிறகு மனக்கலக்கத்தை உணர்வதற்கு வாய்ப்புகள் அதிகம். விந்து பீய்ச்சலுக்குப் பிறகு காய்ச்சல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட ஒருத்தனை சவூதி மருத்துவர்கள் குணப்படுத்தினார்கள். வாய்வழி குழி திரவங்களை உறிஞ்சும் சுவையான கருவிகளுடன் வாய் இணைக்கப்பட்ட மனிதர்கள், வாய் வழியாக கொரியன் கார மிளகுச்சாறுகளையும் காட்பரீஸ் சாக்லெட் பொடிகளையும் உட்கொண்டவுடன், இன்பம் மற்றும் துன்பத்திற்கு பதிலளிக்கும் வகையிலான ஒன்றுடன் ஒன்றும் தனித்துவமானதுமான மூளைப் பகுதிகளின் செயல்பாட்டை வெளிப்படுத்தினார்கள். ஜப்பானிய இளைஞர்களின் உணவு மிட்டாய்களாகி வருகிறது. அமெரிக்கர்கள் தங்களுக்குத் தானே மிகவும் கடுமையாக விஷம் வைத்துக் கொள்கிறார்கள். இடைத்தோற்றத் முன்மூளை உள்ளறை; கருவகத்தில் புண்களைக் கொண்ட மக்காக்கு குரங்குகள் அரை-சித்தப்பிரமை நடத்தையைக் காட்டுகின்றன. டெக்சாஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர்கள், சிறையில் இருக்கும் நேரத்தை விட, முன்பதிவின் போதே தற்கொலை செய்துகொள்வதற்கான வாய்ப்பு 5,000 சதவீதம் அதிகம்.”

மேலே சொன்னது எல்லாமே நிஜம். அப்படியே தகவல். ஆதாரத்துடன் சொல்வர்கள். நறுக்கு தெறித்தது போல் இருக்கும். ஒரு வார்த்தை கூட அதிகம் கிடையாது. பிழையும் இருக்காது. ஒரு வரிக்கும் அடுத்த வரிக்கும் பகீர் தொடர்பு இருக்கும். மீண்டும் மீண்டும் படித்து யோசிக்க வைக்கும்.
ஹார்ப்பரில் நல்ல கதை ஒன்றையும் மாதந்தோறும் போடுகிறார்கள்.
Discover more from சொல்வனம் | இதழ் 359 | 25 ஜன 2026
Subscribe to get the latest posts sent to your email.
