1

அம்மாவின் வாழ்வும் வயதும்
வேடுகட்டித்தரும் பருக்கைகள்
அடுப்பங்கரைக்குழி சிறுவாட்டுக்காசுகள்
அந்தியில் வறுத்துத்தரும் அரிசி மணிகள்
குதிருக்குள் பழுக்க வைத்த மாம்பழங்கள்
அத்தனையும் எனக்காக
அவளுக்காக ஒன்றே ஒன்று செய்வேன்
வேடுகட்டிய மத்தியான முட்டையை
காகிதத்தில் சுருட்டி
கால்சட்டை யில் சுமந்து வீடடைவேன்
பகிர்ந்துண்போம் நீள்வட்டத்தை
ஏடறியா அம்மா
சுவைத்துக்கொண்டிருப்பாள்
வேடுகட்டிய காகிதச் சொற்களையும்
2
பெரியேரி வற்றும் ஒவ்வொருமுறையும்
பல திட்டுகளாக மாறிவிடும்
ஒருபுறம் அல்லிக்கிழங்கை பன்றிகளும்
ஒருபுறம் திட்டுகளை நாங்களும் முண்டிக்கொண்டிருப்போம்
களிமண் கவிச்சிவாசனையில்
வானத்தை வட்டமடிக்கும் கழுகுகள்
தாழப்பறந்துவரும் கொக்குகளையே துளைக்கும் ரவை குண்டுகள்
தீயில் வாட்டிய நாட்டுக்கத்தரி போல்
வெயிலில் வெந்து உப்பிக் கிடக்கும் தட்டுக்கூடை கெலுத்திகள்
இப்போதெல்லாம் நாட்டுத் துப்பாக்கிகள் சப்தங்கள் கேட்பதே இல்லை
குருணை கலந்த கெண்டைக்குஞ்சுகளால்
நாசூக்காக கொல்லப்படுகிறது
தாழப்பறந்த கொக்குகளும்
உயரப்பறந்த கழுகுகளும்
3
வகுப்பு பத்துக்குப் பின்
செயங்கொண்டம் வரை செல்ல வழியனுப்பியது உள்ளூர் பள்ளி
தொலைவு என்றாலும் பேருந்தை உருட்டி உருட்டியே சென்றுவிடுவேன்
சாதிப்பட்டையங்களாக காட்சியளிக்கும்
பள்ளி நிழற்குடையில்
எப்போதுமே அமர விரும்பியதேயில்லை
நினைவு பேதலித்த
பெண்ணொருத்தியின் வசையை
கடந்து செல்வது தினசரியென்றாலும்
மகிமைபுர பள்ளி நுழைவு தேவாலய தரிசனம் தான்
சாதிக்கயிற்றால் இறுகிய பள்ளியை
சற்றும் தளர்த்த வில்லை சிலுவை
மா,நாவல்,நெல்லி,
ஆலம்,நெட்டிலிங்க மரங்களில்
காய்களையும் கனிகளையும் விட
அதிகப்படியாக பெயர்கள் பொறித்த சுவடுகளே இருக்கும்
எந்தத் திரைப்படங்களிலும்
காட்டப்படாத வன்முறைகள்
எந்நேரம் வேண்டுமானாலும் நடக்கும்
அப்படித்தான் ஒருநாள்
அப்பமொன்றை சப்பிக்கரைக்கும் நிமித்தத்தில் ஏதேதோ நிகழ்ந்து விட்டிருந்தது
ஒற்றைப் பள்ளிச் சிறுவனை
பத்து வாலிபர்கள் கூடித் தாக்கும் பேரவலம் அது
ஆசிரியர்கள் கையிலுள்ள பைபிள்களும் மூடப்பட்டிருந்தன
அவன் புத்தகத்திற்கு பதிலாக
கத்தியை எடுத்து வந்திருக்கலாம்
என்று நினைத்த நேரம்
அத்தனை புத்தகங்களும்
அவன் மனதில் எரிந்து சாம்பலாகி இருந்தது
4
எவ்வளவு நேரம்
எத்தனை முறைகள்
கோவில் மணி
நாக்கில் கொக்கி போட்டு இழுத்தாலும்
வலிக்கிறதென சொல்லாது
டிங் டாங் என்றுதான் சொல்லும்
சொரணையற்ற நாக்கு
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
