மூலம் : பெத் கோடர்
தமிழாக்கம் : தீபா ராம்பிரசாத்
பிரச்சனை வலது காலில் முன்னெலும்பின் திசையில் அமைந்த தசையில் துவங்கியது.
உடலின் வெளிப்புறத்தில் அமைந்த பொருட்களைக் கொண்டு ஒரு கலையகம் துவங்குவதற்கான முயற்சியில் கலார் இருந்தாள்: தொடையெலும்புகள் மற்றும் சதைகளாக ஆகியிருக்கும் நெருக்கமாகப் பின்னிப் பிணையப்பட்ட கண்ணாடிகள் மற்றும் கூழாங்கற்களால் ஆன பொருட்கள் அவைகள்.
வலது காலின் வாசம் அவளுக்குப் பிடிக்கும், ஏனெனில், கரடி ரோமத்தின் வாசத்தை அது ஒத்திருக்கும் என்பதால்.
அரக்கனின் ஒவ்வொரு உடல் பகுதியும் ஒவ்வொரு வாசத்தைக் கொண்டிருந்தது. அவனின் நுரையீரல் காற்றால் அலைக்கழிக்கப்பட்ட கடற்கரை போலிருக்கும். வலது கரம், இலைத்தழைக்கூளம் போலவும், மேல் பின்பகுதி குளத்துப் பூக்களைப் போலவும் இருக்கும்.
ஒரு கண்ணாடித்துண்டை அவள் தன் விரல்களால் அழுத்தியபோது, அது எலும்பில் முட்டியது. சற்றே உறைந்து தடித்தது. சற்றைக்கெல்லாம் அந்தத் துண்டு அரக்கனின் உடற்தொகுப்பிலிருந்து வெளியேறி விழுந்தது. அது அதற்கு முன்பு எப்போதும் நிகழ்ந்ததில்லை.
“நான் உன்னைக் கோபமூட்டிவிட்டேனா?” கலார் கேட்டாள். ஆனால், அரக்கன் எதுவும் பேசவில்லை. தான் கண்டுகொண்டிருந்த கனவில் தொலைந்தது போலிருந்தான்.
~ * ~
கலார் எப்போதும் அரக்கனில் வாழ்ந்தவளில்லை. ஒரு பெண்ணாக அவள் அவளது சகோதரிகளுடன் துவக்கத்தில் குகைகளில் தான் வாழ்ந்திருந்தாள். பிறகு, தங்கக் குளத்தில் சிறிது காலமும், பைன் மரக் கூம்பில் சில காலமும், கரடியில் உள்ளுக்குள் சில காலமும் வாழ்ந்திருந்தாள்.
என்னதான் இப்படி பலவற்றில் அவள் உறங்கிக்கழிந்திருந்தாலும், அரக்கனில் உறங்கி வாழ்தல் தான் அவளுக்குப் பிடித்திருந்தது. உறக்கத்தில் அவள் அரக்கனின் கனவுகளையே காண நேர்ந்தது ஒரு காரணம்.
“உன்னுடைய பன்னிறப் பல்பொருள் பட்டை(மொசைக்) பழமையானது இல்லை போலும்” என்றாள் சூளா. அவள் அரக்கனின் உடற்தொகுப்பில் எட்டாவது வரிசையில் வாழ்பவள்.
“நான் கவனமாகத்தான் இருந்தேன்” என்றாள் கலார்.
“உனது மந்திரங்களை நீ சரியாகத்தான் சொல்கிறாயா?” என்றாள் சூலா. அது ஏதோ கலார் அந்த இடத்திற்குப் புதியதாக வந்தவள் போலவும், அதுகாறும் பன்னிரண்டு ஆண்டுகள் அரக்கனின் உடற்தொகுப்பில் அவள் வாழ்ந்தவள் இல்லை என்பது போலவும் இருந்தது. அரக்கனுள் தங்கள் வாழ் நாளில் பெரும்பகுதியைச் செலவிட்டவர்கள் அனைவருமே ஏதோ அரக்கனின் அத்தனை ரகசியங்களையும் தெரிந்து கொண்டவர்கள் போலவும், எந்த நரம்புகள் அரக்கனின் இதயத்தைச் சென்று சேர்வன என்பதை அறிந்தவர்கள் போலவும் நடிப்பது வாடிக்கையாகிவிட்டிருந்தது. அது ஏனென்றே தெரியவில்லை.
“அரக்கனின் கனவுகள் இப்போதெல்லாம் மிகவும் சோதிக்கின்றன. இல்லையா?” கலார் கேட்டாள்.
“உனக்கு என்ன காணக் கிடைக்கிறதோ அதை வைத்து நீயாக சலனம் கொள்வது தேவையற்றது” என்றாள் சூலா ஒரு சின்னஞ்சிறு புன்னகையுடன்.
அந்த அவமானத்தைக் கலார் கடந்து சென்றாள். சூலாவை விடவும் தான் அரக்கனின் கனவுகளை அதிகம் கண்டிருக்கிறோம் என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது. அரக்கனின் உடற்தொகுப்பில் முதல் வரிசை வாழ்பவர்களைக் காட்டிலும் கூட அது அதிகமாக இருக்கலாம். ஆயினும், அன்றைய இரவில் தான் அரக்கன் அவளிடம் முதன் முதலில் பேசினான்.
~ * ~
அந்தக் கனவு மிகவும் சுருக்கமாக இருந்தது. அரக்கன் நிலாப்பூக்கள் நிறைந்த வயலில் ஒடினான், அந்த நிலாப்பூக்களின் காம்புகள் அவனது ரத்த நாளங்கள் போல் தோற்றமளித்தன. அந்தப் புற்களின் ஒவ்வொரு இழையும் அவனது கணுக்காலில் கத்தி போல் கிழிப்பதாகக் கலார் உணர்ந்தாள். காற்றின் பெருமூச்சு அவளுக்குக் கேட்டது. அரக்கனின் உடற்தொகுப்பு முறுக்கிக்கொள்ளும் ஓசையை அவன் பேசுகையில் உணர்ந்தாள்.
“கலார், எனக்கு வலிப்பது உனக்குத் தெரியுமா?” என்றான் அரக்கன் அவளது கனவில். அவளது உடல் நடுங்கியது.
தன்னுடைய பன்னிறப் பல்பொருள் பட்டை(மொசைக்) அரக்கனின் எலும்பை துளைத்துச் சென்று அதனால் அரக்கனுக்கு வலிப்பதை அவள் உணர்ந்திருக்கவில்லை. அரக்கனின் உடற்தொகுப்பில் முதல் வரிசையில் வாழ்பவர்கள் எல்லோருமே அரக்கனுக்கு எதுவுமே தெரியவராது என்று தான் உறுதியளித்திருந்தார்கள்.
அரக்கனுக்கு பதில் சொல்ல அவள் முயற்சித்தாள். உறக்கத்தில் இருந்ததால், அவளது உதடுகள் அசையவில்லை. மூச்சு விட சிரமப்பட்டபடி அவள் உறக்கம் கலைந்து எழுந்திருந்தாள்.
“என்னை மன்னித்துவிடு” என்றாள். ஆனால் அதற்குள் அரக்கன் உறங்கியிருந்தான்.
அரக்கன் மரணிக்கும் தருவாயில் இருப்பதாகக் கலாருக்குத் தோன்றியது. அப்படி நினைப்பதும் கூட புனிதத்தைப் பாழடிப்பதற்கு ஈடான குற்றமாக இருக்கலாம். அரக்கனது உடற்தொகுப்பில் சில பகுதிகள் அசைவதை, நகர்வதை அவதானித்திருக்கிறாள். அவள் இதற்கு முன் வாழ்ந்திருந்த கரடியிடமும் இப்படித்தான் நடந்திருந்தது.
~ * ~
ஒவ்வொரு பன்னிரண்டு நாளும், அவர்கள் அரக்கனின் உடலிலிருந்து வெளியேறும் காரட்களாலும், காளான்களாலும் நிறைந்த சாலட்களை உண்டார்கள். மற்ற நாட்களில், சாண்ட்விச்களை உண்டார்கள். அவர்கள் எவ்வெவற்றால் உருவாகியிருக்கிறார்களோ, அவைகளில் வாழ யாருக்கும் ஆர்வமிருக்கவில்லை.
தன் தட்டு நிறைய உணவுடன் அமர்ந்திருக்கும் சூலாவின் அருகில் அமர்ந்தபடி, “நீ அரக்கனின் கனவுகள் குறித்து என்ன நினைக்கிறாய்? அவன் என்ன சொன்னான்?” என்றாள் கலார்.
சூலா, தன் வாயில் இருந்த உணவுகளை விழுங்கும் முன்னரே பேசினாள். “நீ என்ன உணர்த்த முயல்கிறாய்? அரக்கன் ஏதும் பேசவில்லையே? அங்கே வெறும் நிலாப்பூக்கள் மட்டுமே இருந்தன”
“இல்லை. தனக்கு எங்கோ வலிப்பதாக அரக்கன் சொன்னான். அது என் பன்னிறப் பல்பொருள் பட்டைகளாகத்தான் (மொசைக்) இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்” என்றாள் கலார்.
சூலா இப்போது கலாரைப் பரிதாபமாகப் பார்த்தாள். “குழந்தைகள் தான் தாங்கள் கனவுகளில் காண நேர்பவைகள் குறித்து கதைகள் உருவாக்குவார்கள், கலார்” என்றாள்.
~ * ~

அரக்கனின் வலது காலில், தான் இட்டிருந்த பன்னிறப் பல்பொருள் பட்டைகளைக் (மொசைக்) கலார் வெளியேற்றினாள். அந்த இடத்தைத் தன் விரல்களால் தடவி சாந்தப்படுத்தினாள். அடுத்து, அவள் அரக்கனது இடது காலில் இட்டிருந்த பன்னிறப் பல்பொருள் பட்டைகளைக் (மொசைக்) எடுக்க இடது காலில் ஏறினாள். ஆனால், அதற்குள் அந்தப் பன்னிறப் பல்பொருள் பட்டை(மொசைக்) அரக்கனின் எலும்புக்குள் ஊடுருவியிருந்தது.
அவள் தனது விரல்களால் அரக்கனின் தொடையெங்கும் தொட்டுத் தடவினாள். அரக்கனின் எலும்புகள் சுலபமாக முறியத்தக்க வகையில் பலவீனப்பட்டிருப்பதை உணர்ந்தாள். அடுத்த நாள் காலையில், அரக்கனின் எப்போதும் சீராகத் துடிக்கும் இதயம் முதன் முறையாகத் தடுமாறியது. ஆங்காங்கே நின்று நின்று துடித்தது.
கலார் அரக்கனின் இடது கால் சதைத் திரளில் ஒரு குஞ்சு போல் அடைந்துகொண்டாள். அரக்கனிடமிருந்து வீசும் வாசத்தை முகர்ந்தாள். அரக்கனின் எலும்புத்துகள்களை, கடற்கரையில் சிப்பிகள் சேர்ப்பது போல் கவனமாகச் சேர்த்தாள்.
அந்த இரவில், அரக்கன் கலாரைக் கனவாகக் கண்டான். இருவருமாக, அவர்கள் முதலில் ஒரு சிறிய குகையிலும், பிறகு ஒரு தங்கக் குளத்திலும், அதன் பிறகு பைன் மரக்கூம்பிலும், அதன் பிறகு மரணிக்கும் தருவாயிலுள்ள கரடியிலும் வாழ்ந்தார்கள்.
“எனது இல்லமாக இருந்ததற்காக உனக்கு என் நன்றிகள். கரடியைக் காட்டிலும் உன்னைத்தான் அதிகம் நினைத்திருப்பேன்.” என்றாள் கலார்.
“எனது காயங்களை அற்புதமாகப் பராமரித்ததற்கு என் நன்றிகள். என்னைப் பற்றிக் கவலைப்படாதே. அரக்கர்களுக்கு மரணம் குறித்து எந்த பயமும் இல்லை. மரணம், எங்களுக்கெல்லாம் இன்னுமொரு நீள் உறக்கம் தான்.” என்றான் அரக்கன்.
அவள் கண்விழித்தபோது, அரக்கனின் நுரையீரல் சுவாசிப்பதை நிறுத்தியிருந்தது.
அவள் தனது இதயத்தில் உணர நேர்ந்த கால்களின் படபடப்பைக் கொண்டு, தன் கனவை வேறு யார் கண்டிருக்கக்கூடும் என்று யோசிக்கலானாள்.
***
“The Giant’s Dream.” The Magazine of Fantasy and Science Fictionhttps://weightlessbooks.com/the-magazine-of-fantasy-and-science-fiction-jul-aug-2023/
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
