அக்கரைப் பச்சை

சரண் ஃபிராங்பர்ட் ரயில் நிலையத்தில்  சந்தித்த அனைவருமே அவனது ஆங்கிலத்தை மிகக்கடுமையாக எதிர் கொண்டிருக்கின்றனர்.  ’’ஸ்பீக் இன் ஜெர்மன்’’ என்பதையே அவன் திரும்பத்திரும்ப அன்று கேட்டிருக்கிறான். ஜெர்மன் மொழியில் எழுதப்படிக்கத் தெரிந்திருந்தாலும் சரளமாகப் பேசப்பழகி இருக்கவில்லை அவன்.

என்னைக் காணொளியில் அழைத்து’’ people are very rude here maa’’ என்றவனைக் குறித்து மிகவும் கவலையாக இருந்தது.

பின்னர் யாரிடமும் கேட்பதில்லையென முடிவு செய்து அவனாகவே அங்கிருந்த கடைகளில் தேடி ஒரு சாண்ட்விச்சும் குளிர்பானமும் வாங்கிக்கொண்டு ரயிலுக்குக் கட்டணம் செலுத்தி விட்டுக் காத்திருந்தான். அப்போது அவன் அனுப்பிய, ஆளரவமற்ற அந்த ரயில் நிலையத்தின் ஒரு பெஞ்சில், சூட்கேஸ்கள் சூழ, தன்னந்தனியே அவன் அமர்ந்திருக்கும் புகைப்படம் என்னைப் பெரிதும் தொந்தரவுக்கு உள்ளாக்கியது.

சரணை ஐரோப்பாவிற்கு அனுப்பி இருக்கக் கூடாதோ என அப்போதுதான் முதல் முறையாகத் தோன்றியது.

மகன் சரண் கோவை பல்கலைக்கழகமொன்றில் பொறியியல் பட்டப்படிப்பு முடிக்கும் தருவாயில் பல்கலைக்கழகமே நடத்தும் வேலைவாய்ப்பு நிகழ்வுகளில் கலந்து கொள்ள விரும்பினான். அந்தப் பல்கலைக்கழகத்தை அது ஏற்படுத்திக் கொடுக்கும் நல்ல வேலை வாய்ப்புக்கென்றே பலர் தேர்ந்தெடுக்கின்றனர். நான் பெரும்பாலும் மகன்களின் விஷயத்தில் என் அபிப்பிராயத்தை திணித்ததில்லை என்றாலும் அவன் முதுகலை படிக்க வேண்டும் என்பதைச் சொன்னேன். வேலைக்குச் சென்று சம்பளம் வாங்கி விட்டால் பின்னர் மேற்கொண்டு படிப்பதில் ஆர்வம் குறைந்துவிடும் என்று நான் நம்பினேன்.  மேலும் சரண் உடனே வேலைக்குப்போய் ஒன்றும் ஆவதிற்கில்லை,   அவனுக்கும் இளையவன் தருண் காட்டியல் படித்துக்கொண்டிருந்தான். சரண் வேலைக்குப்போய் நடத்திவைக்கும் ஏதொன்றும் வீட்டில் காத்துக்கொண்டு இருக்கவில்லை, எனவே அவனும் ஒத்துக்கொண்டு  முதுகலை படிக்கச் சம்மதித்தான். 

ஆனால் இந்தியாவில் எங்கும் அவனுக்குப் படிக்க விருப்பமில்லை. அவன் படித்த கோவைப் பல்கலைக்கழகமும் அவனுக்கு அத்தனை பிடித்தமாயில்லை. ஏராளம்  பொருளற்ற சட்ட திட்டங்களும் அதைக் காட்டிலும் மீறல்களும் நிறைந்திருந்த கல்வி நிறுவனம் அது. உதாரணமாக ஒன்றைச் சொல்லலாம். அந்த ஆயிரக்கணக்கான ஏக்கரில் பரந்து விரிந்திருக்கும் வளாகத்தில் இயங்கிய எந்தக் கேண்டீனிலும் முட்டை உள்ளிட்ட எந்த அசைவ உணவுமே சமைக்கவும் விற்கவும் படவில்லை. அசைவ உணவை விடுதிஅறையில் கொண்டு வந்து சாப்பிடவும்  யாருக்கும் அனுமதியில்லை.  அப்படி மாணவர்கள் யாரேனும் தெரியாமல் அசைவ உணவைக் கொண்டு வந்து சாப்பிடுவது தெரிய வந்தால் கருணையின்றி அவர்கள் எந்த வருடத்தில் படித்துக் கொண்டிருந்தாலும் அப்படியே இடை நிறுத்தி அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். சரண் அங்கு படித்த நான்கு வருடங்களில் அப்படி வெளியேற்றப் பட்டவர்களை நானும் அறிவேன்.

ஆனால் சில வருடங்களாக அந்தப் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு விருந்தினர்களின் வருகை அதிகமானதைத் தொடர்ந்து அங்கே இப்போது அசைவ உணவு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. கேண்டீனிலும் விற்கப்படுகிறது. அசைவ உணவு  உண்டதற்காக வெளியேற்றப்பட்ட மாணவர்களுக்கான அநீதி அல்லவா இது?

இப்படி பலவற்றைச் சொல்லலாம். தண்ணீர்த் தட்டுப்பாட்டினால் ஒருமுறை மாணவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ரகளை செய்து வளாகத்தை அடித்து உடைத்த  விசாரணையில் முதற்காரணம் என்று குற்றம் சாட்டப்பட்ட ஒரு மாணவனை வெளியேற்ற முடிவானது. அவன் பெற்றோர் அதற்காக வரவழைக்கப் பட்டிருந்தனர். அந்த விசாரணைக்குப் பெற்றோர் தரைத்தளத்தில் காத்துக் கொண்டிருக்கையிலேயே அவர்களைச் சந்திக்காமல் அந்த மாணவன் மூன்றாம் தளத்திலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டான். முனைவர் பட்ட ஆய்வின் அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. மிகச் செல்வாக்குள்ளோரின் பல்கலைக்கழகம் அது.

அவனது துறையில் ஒரு சில ஆசிரியர்களும் துறை சார்ந்த நிபுணத்துவமோ அல்லது அறிவோ இல்லாதிருந்தார்கள். ஒரு பேராசிரியை வகுப்புக்கு வந்து, பின்னர்  கூகுளில் தேடி ஒரு PPT தேர்வு செய்து அதை அப்படியே வாசித்துக் காட்டி வகுப்பெடுப்பார்கள். ’’இதை நாங்களே செய்து கொள்வோமே எதற்கு நீங்கள்?’’ என்று கேள்வி கேட்ட சரணின் நண்பன் கண்டிக்கவும் தண்டிக்கவும் பட்டான். இப்படி ஒவ்வொரு ஆசிரியரும் ஒவ்வொரு ரகம்.

சரணும் ஒரு சில சூட்டிகையான மாணவர்களுமாகக் கூட்டாக விவாதித்தும் யூ டியூபில் காணொளிகளைப் பார்த்தும்தான் 4 வருடங்களும் படித்துத் தேறினார்கள்.  இந்தியாவில் எங்கும் இனி போய் மாட்டிக் கொள்வதில்லை என்பதில் சரண் உறுதியாக இருந்தது போலவே அமெரிக்கா செல்லவும் அவனுக்கு மனத்தடை இருந்தது.  அமெரிக்காவிற்கு அவன் விண்ணப்பங்கள் கூட அனுப்பவில்லை. 

ஐரோப்பிய பல்கலைக்கழகங்கள் அதுவும் அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு மட்டும் விண்ணப்பித்தான்,

எந்த  நிறுவனத்தையும், விஸா ஆலோசகர்கள் அல்லது முகவர்களையும் அவன் அணுகவில்லை அவனாக ஒருமுறைக்கு பலமுறை எல்லாவற்றையும் விசாரித்துப் பல மின்னஞ்சல்கள் கொடுத்து விவரங்களைச் சேகரித்தான்,  முன்பே அவன் ஜெர்மன் மொழியைக் கற்றிருந்தான். வெளிநாடு சென்று படிக்கத்தேவையான ஆங்கிலமொழிப் புலமைக்கான சர்வதேச தரநிலைப்படுத்தப்பட்ட தேர்வு எழுத வேண்டியிருந்தது. 

நானும் சரணுமாகக் கோவையில் அந்த 9 புள்ளி அளவுகோலில் தேர்வு நடத்தப்படும்  மையத்துக்குச் சென்றோம். ஒரு அடுக்ககத்தின் ஒரு நிலையில் இருந்தது அந்தத் தேர்வு மையம்.  நல்ல மழைநாள் அன்று. மூன்றாம் தளத்தில் சரண் உள்ளே அனுமதிக்கப்பட்ட பின்னர் உடன் வந்திருக்கும் குடும்பத்தினர், பெற்றோர் எங்கும் அமரக் கூடாது என்று  சொல்லப்பட்டது. அங்கே அமர இருக்கைகளும், நிற்க இடமும் இல்லை. பனிக்கட்டி போலக் குளிர்ந்திருந்த மொசைக் போடப்பட்ட மொட்டைமாடிக்குச் செல்லும் படிக்கட்டில் நாள் முழுக்க அமர்ந்திருந்தேன்.

என்னுடன் தன் மகள் தேர்வெழுதுவதற்காக உடன் வந்திருந்த ஒரு கேரளத்து சேச்சியும் இருந்தார்கள். தன் மகள் இரண்டாம் முறையாக எழுதுகிறாள் என்றும் சரணுக்கு இது எத்தனையாவது முயற்சி என்றும் கேட்டார்கள். நான் புன்னகைத்து அவன் அன்றுதான் வருகிறான் என்றேன்.

இந்தியாவில் ஏன் இப்படி தேர்வு மையங்கள் குறைந்த பட்ச  மனித நேயம் கூட இல்லாமல் இருக்கின்றன என்பது புரியவில்லை. சமீபத்திய நீட் தேர்வின் கடும் சோதனைகளையும், யூ பி எஸ் ஸி தேர்வு மையங்களின் கெடுபிடிகளையும் சமூக ஊடகங்களில் பார்த்தேன். ராணுவப் பயிற்சியில் கூட இத்தனை கடினமான போக்கு இருக்காது. 

அன்று அந்தப் பனிக்கட்டி சில்லிப்பில் அமர்ந்திருந்து என் கால்கள் விறைத்துப்போயின.

சரண் விரும்பிய ஆஃபன்பர்க் பல்கலைக்கழகம் செல்ல 7 புள்ளிகள் போதுமானதாக இருந்தது. சரண்  எளிதாக அந்தத் தேர்வில்  8 புள்ளிகள் பெற்றான். 

பின்னர் ஆஃபன்பர்க் பல்கலைக்கழகத்திலிருந்து அவனுக்கு அழைப்பு வந்து பிற சம்பிரதாயமான விஷயங்கள் நடந்தன. அவன் அங்கே MS படிக்கத் தேர்வானான்.  ஒன்றரை வருடத்தில் 3 பருவங்களுக்கான முதுகலைப்படிப்பு அது, அதற்குத் தேவையான வங்கிக்கணக்கு உருவாக்குவதிலிருந்து எல்லாமே தயாரானது. விஸா ஏற்பாடுகளுக்குச் சென்னை செல்லவேண்டி இருந்தது, கல்லூரிக்கு விடுப்பெடுத்துக்கொண்டு நானும் அவனுமாகச் சென்னை சென்றோம்.

விஸா அலுவலகத்திலும் உடன்வந்த குடும்பத்தினர் அமரவோ ஏன் நிற்கவோ   இடமும், அனுமதியும் இல்லை. நான் உள்ளிட்ட ஏராளமானோர் நெடுஞ்சாலை ஓரத்தில் மரத்தடியில், அமர்ந்தும் நின்றும் கொண்டிருந்தோம்.

விஸா சம்பிரதாயங்கள் முடிந்தாலும் கொரோனா காலத்துக்குப் பிறகான கெடுபிடிகள் மிச்சமிருந்தன, மேலும் பல இந்தியர்கள் போலியான ஆவணங்களைக் கொண்டு பல நாடுகளில் படிக்கச் சென்றிருப்பது அப்போது தெரியவந்து ஊடகங்களில் செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததால் சரணுக்கு விஸா வரத் தாமதமானது.

எனக்குத் தெரிந்த  அடிக்கடி ஐரோப்பாவிற்கு வியாபார நிமித்தமாகச் சென்று வரும் நண்பர்களிடமும்,  ஐரோப்பிய நண்பர்களிடம் விசாரித்தும் எந்தத் தகவலும் தெரியவில்லை. சென்னை விஸா அலுவலகத்துக்கு அனுப்பிய மின்னஞ்சல்களுக்கும் அழைப்புகளுக்கும்   பதிலும் இல்லை. 

ஆனால் அதற்குள் சரணின் வகுப்புக்கள் ஆஃபன்பர்கில் தொடங்கின.  பாடங்களைத் தவறவிடுவதைக் குறித்து அவன் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான். ஒரு மாத வகுப்புக்கள் முடிந்த பின்னரே  விஸா வந்தது.

அதற்குள் அங்கே அவனுக்கு வீடு பார்ப்பது, தேவையான பொருட்களை வாங்கி அந்த விமானச்சேவை அனுமதிக்கும் எடையைச் சரிபார்த்து எடுத்து வைப்பது, இந்திய ரூபாயை யூரோவாக மாற்றிக் கைச்செலவுக்கு வைத்துக்கொள்வது  என்று ஏறக்குறைய ஒரு கல்யாணத்தை விமர்சையாக நடத்தி  முடிக்கும் அளவுக்கான வேலைகளைச் செய்தோம். இவை எல்லாமே எனக்கு மிகப்புதியவை.

 கொச்சியிலிருந்து விமானம்  ஏறுவதாக முடிவானது. 

ஒரு பெருமழையின் இரவில், கடும் போக்குவரத்து நெரிசலில் காரில்  ஊர்ந்து ஊர்ந்து சென்று கொச்சி விமான நிலையத்தை அதிகாலை அடைந்து சரணை  அனுப்பி வைத்தேன். 

பள்ளி இறுதி வகுப்புகளிலும் பொறியியல் பல்கலைக் கழகத்திலும்  விடுதியில் தங்கிப்படித்த சரணைப்  பிரிந்து தான் இருந்தேன்.  எனினும்  வாராவாரமோ மாதாமாதமோ சென்று பார்த்து விடுவேன். அல்லது வீட்டுக்கு அவ்வப்போது விடுமுறை நாட்களில் சரண் வருவான்.

விடுதியிலிருந்து வீட்டுக்கு அவன் வரும் மாலைகளில் பேருந்து நிறுத்தத்தில் இருக்கும் அரசமரத்தடியில் காத்து நிற்பேன். பேருந்திலிருந்து இறங்கி வரும் அவனுடன் கைகளைக் கோர்த்துக்கொண்டு கதைகள் பேசியபடி வீடு வருவோம் ஆனால் இனி அவனை அப்படி அடிக்கடி பார்க்க முடியாது என்னும் உண்மை எனக்களித்த கவலையை, அடிவயிற்றின் இனம்புரியாத கலக்கத்தை மறைத்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தேன். மகன்கள் உலகத்தை அறிந்துகொண்டு சுயமாகக் காலூன்றிக் கொள்வதும் மிக முக்கியமல்லவா? இறகுகளுக்குள் பொத்தி வைத்துப் பாதுகாத்த காலம் முடிந்து குஞ்சுகளுக்கு இறகுவிரியும் நேரத்தில் அதைக் குறித்து கவலைப்பட வேண்டியதில்லை தானே?

இளைய மகன் தருணும் டேராடூனில் காட்டியல் படித்துக்கொண்டிருந்ததால் இருவரும் உடன் இல்லாத காலமாகி விட்டிருந்தது. எனினும் காணொளி அழைப்புகளில் இருவருடனும் பேசிக்கொண்டிருப்பது பெரும் ஆறுதலாக இருந்தது.

சரண் அடுத்த நாள் ஃபிராங்பர்ட்   விமான  நிலையத்துக்குச் சென்று,  அங்கிருந்து  ரயில் நிலையம் வருவதற்குள் கடும் பசியில் இருந்திருக்கிறான். சைவ உணவுக்காரனான அவனுக்குத் தேவையான உணவு கிடைக்கவில்லை.   நிறையப் பொருட்களைக் கைகளில் வைத்துக்கொண்டு ரயில் நிலையத்தில் இருந்தவனுக்கு அங்கே வழி சொல்லவும் உதவவும் யாருமில்லை. 

அப்போதுதான் அவனுக்கு தொடர்பு மொழியிலும் சிக்கலாகி, யாரும் அங்கு உதவாமல் பெரும் சிரமத்துக்கு ஆளாகினான். எப்படியோ ரயில் பிடித்து, ஆஃபன்பர்கில் இறங்கி டாக்ஸி பிடித்து வீட்டு முகவரியை அடையாளம் சொல்லி வந்து சேர நள்ளிரவாகி விட்டிருக்கிறது. அந்த வீடு மிக நீண்ட தேடலுக்குப் பிறகே கிடைத்திருந்தது, ஆனால் அங்கு வாடகைக் காரில் சென்று இறங்கிய பின்னர் தான் அது நாலாவது மாடியில் இருக்கும் வீடு என்பதும் அங்கே லிப்ட் இல்லாததும் தெரியவந்தது. 

ஒவ்வொரு சூட்கேஸாக நான்கு மாடிகள் சுமந்து சென்று, அவனது அறைச்சாவியை வைத்திருந்த அடுத்த அறைக்காரனை உறக்கத்திலிருந்து எழுப்பி அறைக்கதவைத் திறப்பதற்குள் அதிகாலை ஆகி விட்டது. சரணுக்கு மொத்தத்தில் ஐரோப்பா வந்தது முழுக்க பிரியமில்லாத ஒன்றாக அந்தப் பயணம் ஆக்கி விட்டிருந்தது.

சரண் சிறுவனாக இருந்தபோது அபுதாபியில் இருந்ததால் அவனுக்கு அந்தச் சுத்தமான நாட்டின் மீது பிரியம் இருந்தது. அடிக்கடி அங்கே இருந்த நாட்களைக் குறித்து சிலாகித்து கொண்டிருப்பான். அபுதாபியிலிருந்து திரும்ப இந்தியா வந்த புதிதில் சாலையில் எங்கும் அவன் காலைக் கீழே வைக்கமாட்டான், இடுப்பில் அமர்ந்தபடி ’’ஏன் ரோடெல்லாம் இப்படி பிஞ்சிருக்கு’’? என்பதையே திரும்பத் திரும்பக் கேட்பான். இரவுகளில் ஏசி இல்லாத பொள்ளாச்சி வீட்டுக்குள் வரப்பிடிக்காமல் ஒரே அழுகையாக இருக்கும். அவன் உறங்கும் வரை தோளில் சாய்த்துக்கொண்டு தெருவில் நடந்து நன்கு உறங்கிய பின்னரே வீட்டுக்குள் கொண்டு வந்து படுக்க வைப்பேன்

மழை நாட்களில் சாலையில் நடந்தால் சரண் உறுதியாக வாந்தி எடுப்பான். அவனால் வெகுகாலத்திற்கு அபுதாபியின் தூய்மையையும் இந்தியாவின்  நிலையையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்கவே முடியவில்லை. ஆனால் ஐரோப்பா அதற்கு மாற்றாகப் பசுமை சூழ்ந்திருக்கும் இந்தக் கிராமத்து வீட்டையும் குடும்பத்தையும் எண்ணி  அவனை ஏங்க வைத்தது.

அந்த முதல் நாள் அனுபவமும், அந்தப் பயணமும், சந்தித்த மனிதர்களுமாக  அவனுக்கு ஐரோப்பாமீது பெரும் கசப்பு உண்டாகி இருந்தது.

ஐந்து தனித்தனி அறைகளும் பொதுவான குளியலறை மற்றும் சமையலறையும் கொண்ட அந்த வீடு அவனுக்குப் போதுமானதாகத்தான் இருந்தது.  சமையலறையின் குளிர்சாதனப்பெட்டி முழுக்க அடைக்கபட்டிருந்த பிறரின் மதுபாட்டில்களை நகர்த்தி வைத்து அவனது காய்கறி பழம் பால் பாக்கெட்டுகளை வைத்துக்கொண்டான்,

கொண்டு வந்த பொருட்களைப் பிரித்து அடுக்கி வைத்துக் கொண்டு  எல்லாருடனும் அலைபேசியில் பேசிவிட்டு, எதோ எளிமையாகச் சமைத்து சாப்பிட்டுவிட்டு உறங்கிய அவனை நள்ளிரவில் பலமாகக் கதவைத்தட்டி  திறக்கச்சொன்ன அடுத்த அறை மாணவன்  போதைப்பொருளை அடைத்துச் சுருட்டும் அலுமினியம் ஃபாயில் காகிதம் அவனிடம் இருக்கிறதா என்று கேட்டிருக்கிறான்.

தனக்கு அந்தப் பழக்கம் இல்லை எனவே அந்த ஃபாயிலும் இல்லை என்ற சரணை அவன் விநோதமாகப் பார்த்துவிட்டுத் திரும்பச் சென்றிருக்கிறான்.

விவரம் தெரிந்த பிறகு ஒரு இந்திய குக்கிராமத்தில் 23 வயது வரை வளர்ந்த சரண் இப்படியான கலாச்சார அதிர்ச்சிகளுக்கு மனதளவில் தயாராகத்தான் இருந்தான்.

அன்றே கடைவீதியிலிருந்து  வாங்கி வந்த ஒரு ரோஸ்மேரிச்செடியும் பெப்பரோமியா செடியும் அந்த அறையின் ஜன்னலோரமாகச் சிறு தொட்டிகளில் வளர்ந்தன. அவை இந்தக் கிராமத்து வீட்டின் பசுமை நினைவுகளின் நீட்சியாகவும் துணையாகவும் அவனுக்கு அமைந்தன

மறுநாள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் இருந்த ஆஃபன்பர்க் நகரத்தின் பெயரையே கொண்டிருந்த  பல்கலைக்கழகத்துக்குச் சென்றான். மிக அருமையான பாடத்திட்டமும் மிகமிகத் தகுதிவாய்ந்த பேராசிரியர்களும் இருந்தார்கள். பல்கலைக்கழகத்தின்  அழுத்தமேதும் இல்லாத அருமையான  அந்தக் கற்கும் சூழல் ஐரோப்பாவைக் குறித்த  சரணின் மனக்கசப்பை மெல்ல மெல்ல குறைத்தது.

புத்திச்சாலியான அவனுக்கு ஏற்ற பல்கலைக்கழகமும் அருமையான பேராசிரியர்களும் அமைந்ததில்  எனக்கும் மகிழ்ச்சி.

மகன்கள் இருவரும் பள்ளி இறுதிவரை படித்த சின்மயா சர்வதேச உறைவிடப்பள்ளி இந்தியாவின் முதன்மையான சிறந்த பள்ளிகளில் ஒன்று. படிப்பு தொடர்பான எந்த மன அழுத்தமும் இல்லாமல் இளமையை மகிழ்ந்து கொண்டாடியபடி இருவரும் அங்கே படித்தார்கள். அங்கு மிகச்சிறந்த ஆசிரியர்களும், வெகுசிறப்பான எளிய முறையில் கற்பிக்கப்பட்ட கல்வியும், அனுபவமும் இருவருக்கும் கிடைத்தது. அங்குதான் இருவருமே 12 -வது வகுப்பில் Knowledge and traditional practices of India என்னும் வெகு சுவாரஸ்யமான பாடத்தை கற்றுக்கொண்டார்கள். 

இருவரின் ஆளுமை உருவாக்கத்தில்  இயற்கைச் சூழல் நிறைந்த இந்தக் கிராமத்து வீடும், அவர்கள் வளர்கையில்  என்னிடம் கேட்ட ஏராளமான கதைகளும், வாசித்த நூல்களும், அந்தப்பள்ளியும் பெரும்பங்கு வகித்தன.

இந்தப் பல்கலைக்கழகமும்  சரணுக்கு மிகவும் உகந்ததாக இருந்தது. பாடங்கள் மிக எளிமையாக இருந்தன என்றான்,   தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டி இருக்காத, தோளில் கைபோட்டு கொள்ளும் சுவாதீனமும், பெயர் சொல்லி அழைக்கும் உரிமையும் இருந்த ஆசிரியர்களால் சரணின் கல்வி அனுபவம் மிக அருமையானதாகியது. அவன் ஆசிரியர்களில் ஒருவரான எரிக் அவன் பிரியத்துக்குரியவரானார்,  அவரின் தனித்த பிரியத்துக்கும் சரண் உள்ளாகி இருந்தான்

வார இறுதிகளில் ஒரு மழலையர் பள்ளியில் துய்மைப் பணி செய்யச் செல்வான். அங்கே பணியில் இருக்கையில் என்னிடம் காணொளியில் அங்கும் இங்குமாக வீசி எறியப்பட்டிருக்கும் அந்தக் குழந்தைகளின் குட்டிக்குட்டி காலணிகளையும் அவர்களின் வண்ணமயமான பெட்டிகள், பொம்மைகள் விளையாட்டுப் பொருட்களை எல்லாம் காட்டிக் கொண்டு வேலை செய்வான். கலைந்து கிடக்கும்  அவற்றை ஒழுங்குபடுத்தி அந்த அறைகளை இயந்திரம் கொண்டு துடைத்துத் தூய்மை செய்யும் பணி அது. அதை விரும்பிச்செய்தான்.  ஆசிரியர்களின் அறை குழந்தைகளின் அறையைவிட அலங்கோலமாக இருப்பதையும் காட்டுவான்.  5 அறைகள் கொண்ட அப்பள்ளியை வார இறுதியில் மட்டும் ஒரு நாளைக்கு 2 மணி நேரம்  சுத்தம் செய்யும் அந்த வேலைக்குக் கணிசமான தொகையைச் சன்மானமாகப் பெற்றான்.  

சரண் வகுப்பில் இணைந்ததே தாமதமாகத்தான் என்பதால் சில மாதங்களிலேயே தேர்வு வந்தது.  மிக நல்ல  மதிப்பெண்கள்  பெற்றுத்  தேர்வானதால் அந்தப் பல்கலைக்கழகம் அளிக்கும் மூன்று சர்வதேச உதவித்தொகையில் ஒன்று சரணுக்கு அளிக்கப்பட்டது. அடுத்த பருவத்திற்கான கட்டணமும் முழுக்க ரத்து செய்யப்பட்டது. இந்தியாவில் அந்த முதுகலைப்படிப்பை சரண் படித்திருந்தால்  ஏராளமாகச் செலவாகி இருக்கும். ஆனால் ஆஃபன்பர்க் பல்கலைக்கழகத்தில் ஏறக்குறைய அவன் படிப்பு இலவசம் என்றே சொல்லலாம். அத்தனை பெரிய தொகை அளிக்கப்பட்டது.  இங்கே இப்போதெல்லாம் மழலையர் பள்ளிகளிலேயே லட்சக்கணக்கில் கல்விக்கட்டணம் கேட்கப்படுகிறது.

அந்தப் பல்கலைக்கழகத்தைச் சரணுடன் உரையாடுகையில் பலமுறை காணொளியில்  பார்த்திருக்கிறேன்.

விஸ்தீரணமான, பசுமை நிறைந்த, தூய்மையாகப் பராமரிக்கப்பட்ட வளாகம்.   மாணவர்களுக்கெனப் பொதுவாக ஒரு பெரிய அறையில்  அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்  புத்தம் புதிய நோட்டுப் புத்தகங்கள், பென்சில் பேனாக்கள் உள்ளிட்ட அனைத்தையும் எப்போதும்  தேவைப்படும் யார் வேண்டுமானாலும் இலவசமாக எடுத்துக்கொள்ளும்  வசதி இருந்தது.

பெண்களுக்கான சானிடரி நாப்கின் வழங்கும், உபயோகப்படுத்திய  நாப்கின்களை எரிக்கும் இயந்திரங்களும், ஆணுறை  வழங்கும் தானியங்கி இயந்திரங்களும் வளாகமெங்கும் இருந்தன.

ஒரு மிதிவண்டி வாங்கினான், பல்கலைக்கழகம் செல்ல அது அவனுக்கு வசதியாக இருந்தது, தேவையான செலவுகள் மட்டும்தான்  செய்தாலும் இந்திய ரூபாயில் யூரோவை மனதுக்குள் மாற்றிச் செலவுகளுக்குத் திகைப்படைவதும் வழக்கமாகி விட்டிருந்தது அவனுக்கு.

அதைப்போலவே செலவுக்கணக்கு எழுதி வைத்துக் கொள்ள தொடங்கினான்.  ’’யாருக்கு இந்தக் கணக்கைக் காண்பிக்கப்போகிறாய்’’? என்றால் ’’எனக்குத்தான்’’ என்பான்  புன்னகையுடன்,

பச்சை மிளகாய் வாங்க 2 மணிநேரம் ரயிலில் செல்வான். காய்கறிகள் கிடைக்காமல் அலைந்து திரிந்து வாங்கி வருவான், எனினும் ஐரோப்பாவில்  மணக்க மணக்க அரிசி பருப்புசாதமும், வெண்பொங்கலும், சாம்பாரும் ரசமும், கூட்டும் அப்பளமும், பொரியலுமாக  முழுமையான கோயமுத்தூர் சமையல் செய்து சாப்பிடுவான். அவ்வப்போது நண்பர்கள் கூடி இருக்கையில் அவனுக்கு நன்றாகச் செய்யத் தெரிந்த  சேமியா கேசரியும் செய்வதுண்டு

அவனது வீட்டில் ஒரு அறையில் வீட்டுச் சொந்தக்காரருக்குத் தெரியாமல் தன் காதலியையும் அவ்வப்போது அழைத்துவந்து நாட்கணக்கில் உடன் வைத்துக் கொள்ளும் ஒருவன் இருந்தான். குளியலறைக்குள்  இருவருமாகச்  சென்று கதவைச் சாத்திக்கொண்ட அவர்கள் மணிக்கணக்காக வெளியே வராமல் இருக்கையில் மற்ற அறைவாசிகளுடன் சரணும் எப்போது கதவு திறக்கும் என்று பழி கிடப்பான். 

ஆஃபன்பர்க் பல்கலைக்கழகம் அங்கிருக்கும் தனித்த முதியோர்களின் நலனைப் பொறுப்பேற்று கொண்டிருந்தது. விருப்பமுள்ள மாணவர்கள் அவர்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் துணையாக இருக்கலாம் என்றும் சொல்லப்பட்டதால்  சரண் மழலையர் பள்ளிக்குச் செல்லாமல் சில வார இறுதிகளில் ஏதேனும் ஒரு வீட்டுக்குச் சென்று அங்கிருக்கும் வயதானவர்களுடன்   நடைப்பயிற்சிக்கு துணையாகப் பேசிக்கொண்டே செல்வது,  சீட்டு விளையாடுவது, தேநீர் தயாரித்து அவர்களுக்குக் கொடுத்து தானும் அருந்திக் கொண்டு இருப்பது என நேரம் செலவழித்தான். அந்த அனுபவங்கள் அவனை மேலும் செம்மையாக்கின என்பதை அவனிடம் அதைக் குறித்தெல்லாம் பேசிக்கொண்டிருக்கையில் என்னால் உணர முடிந்தது , வாழ்க்கைப் பாடங்கள் அவை. 

மழலையர் பள்ளிக்குச் செல்வது அதில் கிடைக்கும் சன்மானத்தை மகிழ்ந்து செலவழிப்பதை தவிர்த்துவிட்டு, முதியோர்களுடன் நேரம் செலவழிப்பதாகவே இருந்தது அதன் பின்னரான அவன் வார இறுதிகள் அனைத்துமே.

அப்படி சந்தித்த ஒரு முதியவர் மரச்சிற்பங்கள் செய்து வந்தவர்,  செயலாக இருந்த நாட்களில்  அவர் செய்த சிற்பங்களைச் சரணுக்கு காட்டியபடி அவற்றின் நுணுக்கங்களை அவைகுறித்த சுவாரஸ்யமான நினைவுகளை அவனுடன் பகிர்ந்துகொள்வார். மனைவியை இழந்த ஒரு முதியவர் சரணிடம் தன் இளமைக்கால காதல் கதைகளைப் பகிர்ந்து கொண்டார். அதை முழுக்க என்னிடம் சொல்ல முடியாது  என  வெட்கத்தில் சிவந்த முகத்துடன்  சொல்லிவிட்டான்.

 சரண் வாங்கிய மிதிவண்டி பழுது செய்யவேண்டி வந்தபோது அதை இலவசமாகச் செய்து கொடுத்த ஒரு முதிய தம்பதியினர் அவனுடன் நெருக்கமானார்கள். அடிக்கடி அவர்கள் வீட்டுக்குச் சரண் போவதும் அந்தக் கனிந்த பழம் போன்ற அம்மாள் வேடிக்கையாகப் பேசிச் சிரித்துக்கொண்டிருக்கும் கணவருக்கும் சரணுக்குமாகச் சேர்த்து  உலர்ந்த சூரியகாந்தி இதழ்களைக்கொண்டு தயாரித்த சுவையான தேநீரும் கொறிக்கச் சிற்றுண்டிகளும் கொண்டு வந்து கொடுத்துவிட்டு அவரும் உரையாடலில் இணைந்து கொள்ளுவார். எனக்கு இதைக்கேட்கையில் ஏதோ  ஒரு நாவலை வாசிப்பது போலவோ,  இந்திய கிராமத்திலிருந்து படிக்க வந்திருக்கும் ஒரு இளைஞனுக்கும், ஐரோப்பிய தமப்திகளுக்குமான நட்பைப் பற்றிய  திரைப்படத்தின் காட்சியைப் பார்ப்பது போலவோ இருக்கும்.

ஒருவேளை சரண் கதை எழுதுவானென்றால் இங்த முதியவர்களின் வாழ்வனுபவங்களைக் கொண்டு அவனால் ஒரு நல்ல சுவாரஸ்யமான நாவலை எழுதிவிட முடியும் என்று நினைத்துக்கொள்வேன். இத்தனை செறிவான அனுபவங்கள் கொண்ட வாழ்க்கையிலிருந்து ஒரு எழுத்தாளன் உருவாகி வந்தே ஆக வேண்டுமில்லையா?

அந்த வருட டிசம்பரில் ஆஃபன்பர்க் நகர தனித்த முதியவர்கள் மற்றும் முதிய தம்பதியினருடன் பல்கலைக்கழகமும் மாணவர்களும் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.  சரணும், அதில் ஆர்வமுடன் கலந்து கொண்டான்.

அங்கிருக்கும் வயதான தம்பதியினர், குழந்தைகள் வேறெங்கோ வாழ்ந்து வருகையில் ஏதேனும் முக்கிய நிகழ்வுகளில் மட்டுமே சந்தித்துக் கொள்கிறார்கள். மற்றபடி முழுத்தனிமையில் இருக்கும் அவர்களுக்கு அப்படியான  விழாக்கால கூடுகைகள் அளிக்கும் மகிழ்ச்சியை சரணால் அறிந்துகொள்ள  முடிந்தது.

அந்தக் கிருஸ்துமஸ் இரவில் சரண் நகரம் முழுக்க சுற்றித்திரிந்து பலவகையான கிருஸ்துமஸ் அலங்காரங்களை, கொண்டாட்டங்களைப் பார்த்து எனக்கும் அவற்றைப் புகைப்படமாக அனுப்பினான். மிக வித்தியாசமாக ஒரு கிருஸ்துமஸ் மரம் வீழ்ந்த மரக்கட்டைகளைக் கொண்டு செய்யப்பட்டிருந்தது,

ஒரு முதியவருடன்  அன்றைய பின்னிரவு வரை ஆங்கில எழுத்துக்களில் தொடங்கும் நாடுகளின் பெயரைக் கண்டுபிடித்துச் சொல்லும் விளையாட்டில் இருந்தான். சரணுக்கு மறக்க முடியாத கிருஸ்துமஸ் இரவு அது. 

அங்கு உபயோகப்படுத்தின, நல்ல நிலையில் இருக்கும்  குளிர்சாதனப்பெட்டி, லேப்டாப், ரேடியோ உள்ளிட்ட பலவகையான பொருட்கள் இலவசமாகக் கிடைக்கும் முகவரிகள் அன்றாடம் நாளிதழில் வெளியாகும் அப்படி அவனுக்குத்  தேவையானவற்றை அந்தந்த வீடுகளில் முன்பே நேரம் சொல்லி அனுமதி வாங்கி பெற்றுக்கொண்டு வருவான்.     

மேலும் சிலர் அவர்களுக்குத் தேவையில்லாமலான, பொருந்தாத உடைகள், பூந்தொட்டிகள், நாற்காலிகள் கடிகாரங்கள் உள்ளிட்ட   பொருட்களை அழகாகப் பேக் செய்து வீட்டு வாசலில் வைத்திருப்பார்கள். அவற்றையும் நண்பர்களாக இணைந்து சைக்கிளில் சுற்றி வந்து   தேவைப்படுபவற்றை எடுத்துக்கொள்வார்கள்.

அப்படியொரு  சுழல் நாற்காலியை எடுக்கச்சென்ற சரண் அதைச் சைக்கிளில் வைக்க முடியாததால் அந்த வீட்டுப் பெண்மணியிடன்  தான் எடுத்துக்கொள்ள முடியாததைச் சொல்லிவிட்டு சற்று நேரம் அவனைக்குறித்தும் அவன் படிப்பைக் குறித்தும் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீடு திரும்பினான்.

என்னைக் காணொளியில் அழைத்து இதை  அவன் சொல்லிக் கொண்டிருக்கையில் அவனது அறையில் அழைப்பு மணி ஒலித்தது. நான் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே சரண் கதவைத் திறந்தான். பருமனான உடல்கொண்ட அந்த  ஜெர்மானிய பெண்மணி   காரில் கொண்டு வந்த அந்த நாற்காலியை மாடிப்படிகளில் சுமந்தபடி ஏறி வந்து நேராகவே  சரணிடம் கொடுக்க வந்திருந்தார். பேரன்னை  அவர். 

’’people are not really rude’’ இல்லையா சரண்? என்று கேட்டேன் ’ஆம்’ என்றான் புன்னகையுடன்.

அவனது வகுப்பில் ஆந்திரப் பெண்ணொருத்தி, கேரள மாணவர்கள் இருவர், அதில் ஒரு மாணவனின் இந்தியக்காதலி அடிக்கடி ஜெர்மனி வந்து போவதால் அந்த லட்சுமி, நைஜீரியாவைச் சேர்ந்த, தலைமுடியை ஆயிரக்கணக்கான சிறுபின்னல்களாக்கி இருக்கும் டேனியல், முகம்மது வெல்லா என்னும் எகிப்தியன் என்று சரணுக்கென்று நண்பர்குழாம் ஒன்று அமைந்தது.

அனைவருமாக அவ்வப்போது வெளியே செல்வதும், வாலிபால் விளையாடுவதும், நீச்சல்குளத்தில் நீந்துவதும் வாடிக்கையானது. சரண்  அசைவம் உண்ணாத,  மது அருந்தாதவனானாலும் எல்லாருடனும் அவனால் அணுக்கமாகிவிடமுடிந்தது. கூச்ச சுபாவியான அவனைச் சில நடனங்களிலும் பார்த்து வியந்தேன். மகிழ்ந்தேன் 

இந்தியப்பெண்கள் அங்கு பெரும்பாலும் மாலைவேளையில் கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறார்கள்,  அந்த ஆந்திரப்பெண் பூஜிதா ஆஃபன்பர்க் பல்கலைக்கழகத்தில் இருக்கும் ஒரு பொதுவான பெரிய கரும்பலகையில் சாக்கட்டி கொண்டு இந்திய நெளிக்கோலங்களை  பெரிதாக வரைவதை ஐரோப்பிய மாணவர்கள் வியந்து பார்ப்பதை சொல்லுவான்.

சரணுடன் கென்யாவிலிருந்து வந்து படித்த சில மாணவர்களுக்குக் கணினி அறிவியலில் அடிப்படைகள் கூடத் தெரியாமல் இருந்ததால் எரிக் சரணிடம் அவர்களுக்கு ஓய்வு நேரங்களில் உதவச்சொல்லி கேட்டுக்கொண்டார்.   அவர்களுக்கு வகுப்பு முடிந்த பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் சிலமணி நேரங்கள் செலவழித்து பாடம் சொல்லிக்கொடுக்க துவங்கினான்.

சரண் மிகப்பொறுமையாகப் பாடம் சொல்லிக்கொடுப்பவன். பொறியியல் படிக்கையில் அவனுக்கு அந்தப் பல்கலைக்கழகத்தில் சிறப்புப்பாடமாகப் பகவத் கீதை இருந்தது. மகாபாரதம் முழுக்க   வாசித்தவனாகையால் அவனுக்கு அந்த வகுப்பில் மிகுந்த ஆர்வமிருந்தது. அந்தப் பாடத்தின் தேர்வுக்குப் பிற மாணவர்களுக்கு அவன் பாடம் எடுப்பதை சிலர் பதிவு செய்து கொண்டார்கள்.   அத்தனை நேர்த்தியாகச் சுவாரஸ்யமாக இருக்கும் அவன் சொல்லிக்கொடுப்பது,  ஒரு ஆசிரியையாக, அன்னையாக எனக்கு அதில் ஏகத்துக்கும் பெருமை உண்டு. சரண் ஆசிரியப்பணிக்கு வர வேண்டும் என்னும் விருப்பமும் எனக்குண்டு. எனினும் என் விருப்பத்தை மகன்கள்மீது ஒருபோதும் திணித்ததில்லை ஆதலால் அந்த ஆசை நிறைவேறக் காத்திருக்கிறேன்.

 Master of science in Enterprise and IT security என்னும் முதுகலைப்படிப்பின் ஆய்வாக சரண் இறுதியில் செய்தது Social blockchain குறித்த ஒரு முக்கியமான ஆய்வு.  மனிதர்களுக்கிடையேயான பொதுவான தொடர்புமொழியைக் குறித்த ஆய்வு அது.

அந்த   ஆய்வேட்டின் முதல் பக்கத்தில் பழைய வேதகாமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாபேல் கோபுரம் கட்டப்பட்ட கதையை குறிப்பிட்டு தொடங்கி இருந்தான். 

வெள்ளப்பெருக்கிற்குப்பின்  சினயார் சமவெளிக்கு வந்த. ஒரே விதமான சொற்கள் கொண்ட ஒரே மொழி பேசும் மனிதர்கள்   ஒருவருக்கொருவர் எளிதாக தொடர்பு கொண்டு வானளாவிய கோபுரமொன்றை கட்டியெழுப்புகிறார்கள், ஆண்டவர் இறங்கி வந்து அவர்களது தொடர்பு மொழியில் குழப்பம் உண்டாக்கியதால், கோபுரம் கட்டுவதைக் கைவிட்டுவிட்டு உலகெங்கிலும் மனிதர்கள் சிதறுண்டு போனதைச்சொல்லும் அந்தக்கதையிலிருந்து அந்த ஆய்வு தொடங்கப்பட்டிருந்து. அந்த ஆய்வேட்டை சரண் எனக்குச் சமர்ப்பித்திருந்தான்.    

ஆஃபன்பர்க் பல்கலைக்கழக வளாகமெங்கும் இளஞ்சிவப்பில்  மக்னோலியாக்கள் மலர்ந்திருந்தபோது மலரிதழ்கள் சிதறிக்கிடந்த  ஒரு பெஞ்சில் அந்த ஆய்வேட்டை வைத்து எனக்கொரு புகைப்படம் அனுப்பி இருந்தான்.   

பேரன்னையர் மகன்களைப் படிகளாக்கி விண்புகுவர் என்று மகாபாரதத்தில் சொல்லப்பட்டிருக்கும். நான் அப்படியான ஒரு அன்னை. மகன்களால் நிறைந்த வாழ்வு எனக்கு அருளப்பட்டிருக்கிறது. 

ஆய்வில் ஈடுபட்டிருக்கும் போதே அவனது பேராசிரியர் ஒருவரின் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு blockchain தொழில்நுட்பம் பயிற்றுவிக்கும் திட்டத்தில் இணைந்து கொள்ளும் வாய்ப்பு அவனுக்கு வந்தது. அதை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டான்.

படிப்பை முடித்த கையோடு இந்தியா வரக்கூட சமயம் இல்லாமல் ஆஃபன்பர்க் பல்கலைக்கழகமும் ஐரோப்பிய அரசும் இணைந்து செயல்படுத்தும் அந்தத் திட்டத்தின்  பொறுப்பதிகாரிகளில் ஒருவராகச் சரணும் பணியில் இணைந்து கொண்டான்.  

இந்தியாவில் இருப்பது போன்ற எந்தப் பணிச்சுமையும் நேரக்கட்டுப்பாடும், மன அழுத்தமும், தொல்லைகளுமின்றி பணி செய்கிறான்.  மூன்று நாட்கள் அலுவலகத்தில், இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தபடியே பணி, வார இறுதிகளில் ஓய்வு. ஒரு நாளைக்கான பணி நேரத்தை அவன் வசதிப்படி நீட்டித்தும் குறைத்தும் கொள்ளலாம். நான் 2 தசாப்த காலம் கல்லூரியில் பணி செய்து இப்போது வாங்கும் சம்பளத்தைக் காட்டிலும் மும்மடங்கு அதிக சம்பளம் வாங்குகிறான். 

சம்பளத்தின் கணிசமான ஒரு பகுதியைப் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் படிப்பிற்கும், ஆதரவற்றோரின் உணவுக்கும்  வலிநிவாரண சிகிச்சை தேவைப்படுவோருக்கும்    கொடுக்கச்சொல்லி தவறாமல்  எனக்கு அனுப்பி விடுகிறான்.

 வரும் ஏப்ரலில் ஹாலந்தில் நடைபெரும் ட்யூலிப் மலர்க் கண்காட்சிக்குச் சரண் அங்கிருக்கும் போதே செல்லவிருக்கிறேன். அது ஒரு பெருங்கனவெனக்கு. அதன்பின்னர் சரண் இந்திய வரலாமென்று இருக்கிறான்.

ஐரோப்பாவில் என்ன வசதி இருந்தாலும் எத்தனை அதிக சம்பளம் கிடைத்தாலும் சரணுக்கு அங்கு பணியில் தொடர விருப்பமில்லை. இந்தியாவில் கணினிக்குற்றங்கள் நடப்பது அதிகரித்திருப்பதால் இந்திய காவல் துறையின் சைபர் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுவதற்கான தேர்வை எழுதவிருக்கிறான். சரண் என்ன செய்வதாயிருந்தாலும் அவனுக்கு மனப்பூர்வமான  வாழ்த்துக்கள்.

 அக்கரைக்கு இக்கரை  பச்சை.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “அக்கரைப் பச்சை”

  1. Logamadevi – Transitioning into adulthood through trials, tribulations, and life-transforming experiences – is well articulated here. I have been reading your articles on both Solvanam and Jeymo’s blogs. I have found your articles very insightful, and well-narrated. I work for the same school your son went to, but part of the Management discipline :). Hope to meet you @ Vishnupuram meeting (when I start attending regularly) 🙂 Regards –

    1. இந்தியாவில் அரசு பள்ளி கல்லூரிகளில் படித்து விட்டு விளிம்பு நிலை மனிதனாக இருக்கும் எனக்கு இந்த கட்டுரை கடுமையான மண உளச்சல் தருகிறது… சான்றோன் ஆன மகனின் என்ற பொழுது உங்களுக்கு உவகையளிக்களாம் எங்களுக்கு என்ன ? வழக்கமான தாவரவியல் கட்டுரை என்று உள்ளெ வந்து விட்டேன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.