வூப்பி-பை

முட்டையையும் வனிலாவையும் உப்பிய வெண்ணை கலந்த சக்கரைப் பாகுடன் சேர்த்து அடித்துக் கொண்டே சாரா கண்ணாடிக் கதவுகளுக்கு அப்பாலிருந்த புழக்கடையைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பல வருடங்களுக்கு முன், இது போன்ற ஒரு அக்டோபர் தினத்தில் பெய்தது போல், மழை பலமாகக் கொட்டிக் கொண்டிருந்தது. சரியாக பதினெட்டு இலையுதிர் காலங்களுக்கு முன், வலியும் பேரானந்தமும் கலந்த ஒரு மூட்டத்தில் அழுக்கு படிந்த ஹாஸ்பிடல் ஜன்னல்களுக்கு அப்பால் இதே போல் பார்த்துக் கொண்டே நியூ இங்லண்ட் வானிலையை அதன் ஷணச் சித்தத்திற்காக அவள் கரித்துக் கொட்டியிருக்கிறாள். இதற்கு முன்னால் அவள் வூப்பி-பை செய்ததில்லை என்பதால் அது சரியாக வர வேண்டும் என்ற கவலை அவளை உறுத்திக் கொண்டிருந்தது. டிம்மிற்கு மிகவும் பிடித்த இனிப்பது, செல்லக்குட்டி டிம்மிக்கு இன்று பதினெட்டு வயதாகப் போகிறது. பெரியவனாகி விட்டதாக உலகுக்கு அறிவிக்கும் வயது என்று நினைத்துக் கொள்கையில் ஈரப் பதத்துடன் இருக்கும் அந்த சாக்லேட் சொர்க்கத்துத் துண்டம் அவன் வாயில் ஒவ்வொரு முறை உருகுகையிலும் கோணங்கள் மிக்க அவன் முகத்தை ஒளிர வைத்த, இன்னமும் சிறு பையனுடையதைப் போலிருந்த சிரிப்பையும் அவள் கற்பனை செய்து பார்த்தாள். பேக்கிங் அவளுக்கு அவ்வளவாக வராததால் பை சரியாக வர வேண்டுமென்று சமையல் தெய்வங்களுக்கு ஒரு கும்பிடு வைத்தாள்.

அடுத்த வருடம் இந்நேரம் டிம் காலேஜுக்குப் போயிருப்பான். ஃபோனில் அவன் பிறந்த நாளைக் கொண்டாடுவது வினோதமாக இருக்கும். ஊத்தவாய் வாடையுடன் அவன் பிறந்த நாளன்று கொடுக்கும் ஸ்பெஷல் அணைப்பின் மிதமான ஸ்பரிசத்திற்காக அவள் ஏங்கப் போகிறாள். அதற்கு அவன் வேடிக்கையான பெயர் கூட வைத்திருந்தான் “டிம்மீஸ் மமா பேர் ஹக்”. பன்னிரெண்டு வயதில் அதை விவரித்து அவளது பேட்டண்ட் ஒன்றின் உருவில் அவன் அதை தட்டச்சுகூட செய்திருந்தான். போலி அறிவியல் துல்லியங்களுடன் (அணைப்பழுத்தம் 10.2 N/m2) மிளிர்ந்த அந்தப் போலிப் பேட்டண்டிற்கு கேலி அறிவியல் மகத்துவத்தில் தன் பிறந்த நாளைப் பொதித்துவைக்கும் வகையில் அவன் TB-BH 10/23 -1 என்ற பேட்டண்ட் வரிசை எண்ணையும் அளித்திருந்தான். பொறியியல் முறைமைக்கான செயற்கட்டளைகளுடன் வந்த இவ்வன்பு காண்பித்தலுக்கான அத்தியாவசிய முன்நிபந்தனையாக அவன் வைத்திருந்த “துலக்கப்படாத பற்களின்” ரத்தினச் சுருக்க எச்சரிக்கையை ஒவ்வொரு முறை வாசிக்கையிலும் அவர்கள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். அடுத்த வருடம் கஷ்டமாக இருக்கப் போவதை அவள் யூகித்தாள். ப்ரயன் அவன் பழைய வேலை நிமித்தப் பயணங்களை மீண்டும் ஆரம்பித்து விடுவான். அவளுக்கே அவளுக்காக இருந்தாலும் வீடு வெறிச்சோடித்தான் இருக்கும். ஏற்கனவே அது என்னவோ போலிருந்தது. இரண்டாவது குழந்தை விஷயத்தில் அவர்கள் எப்போதும் இருதலைக்கொள்ளி எறும்புகளாகவே இருந்தார்கள். இருவருமே வெற்றிபெற்ற மருத்துவத் துறை வல்லுநர்கள், பணியில் மேலும் முன்னேறத் துடிப்பவர்கள். இரண்டாவது குழந்தையைப் பராமரிக்கத் தேவையான நேரமும் கவனமும் தங்களுக்கு இருக்குமா என்ற சந்தேகம் அவர்களுக்கு எப்போதுமே இருந்ததால் பல வருடங்களாக அதைத் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தார்கள். இறுதியில் டிம்மி மட்டும் போதும் என்று முடிவு செய்தார்கள். திரும்பிப் பார்க்கையில் அது சரியான முடிவு என்றே அவர்களுக்குத் தோன்றியது. சில சமயங்களில் டிம்மியைப் பார்த்து கொள்வதற்கே மென்னியை பிடித்தது. 

சமையல் தெய்வங்களும் மற்ற தெய்வங்களைப் போல் சாராவின் அரைகுறை வேண்டுதல்களைக் கண்டுகொள்ளவில்லை. பை சொதப்பி விட்டது. அவர்கள் வெளியே சாப்பிட முடிவெடுத்து டெசர்ட்டிற்கு வூப்பி-பை ஆர்டர் செய்தார்கள். சாரா இன்னமும் தன் சமையற் குளறுபடியை அசைபோடுகையில்தான், பெரிய ப்ளாக் மூன் துண்டத்தை வாயில் திணித்துக் கொண்டிருக்கும் ப்ரயனின் முகத்தில் ஓடிய அதே பையனின் சிரிப்பை முதல் முறையாகக் கவனித்தாள். முகபாவங்கள் போன்றவை முற்றிலும் மரபணுக்கள் வழியாகக் கடத்தப்படுவதில்லை என்பதை நன்கறிந்தாலும் இந்த வினோதமான வூப்பி-பை முகபாவம் ப்ரயனிடமிருந்துதான் டிம்மிக்கு வந்திருக்கிறது என்று நம்புவது சுகமாக இருந்தது. அதன் சின்ன விஷயத்தனமே அவளை நெகிழ்த்தி அவளுக்கு அதை ஒரு பெரிய விஷயமாக்கியது. இம்மாதிரியான முக்கியமற்ற விஷயங்கள் நிலைத்து நீடிப்பது ஏதோ ஒரு விதத்தில் இறவாமையைச் சுட்டியது விசித்திரமாக அவளுக்கு ஆறுதல் அளித்தது. 

எதைச் செய்தாலும் விலாவாரியாக திட்டமிட்டுச் செய்பவர்களாக இருந்ததால் டிம்மின் பதினெட்டாம் பிறந்த நாளுக்குத் தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பது பெக்மன்களுக்குத் துல்லியமாகத் தெரிந்திருந்தது. முந்தைய டிசெம்பரில் நியூ யார்க்கில் அரிதான இசைத்தட்டுகளை விற்பனை செய்யும் கடையொன்றில் ப்ரயன் டேவ் மாத்யூசின் இரண்டு விலைமதிப்பில்லா அரிய எல்.பி ரெக்கார்ட்டுகளைக் கண்டெடுத்து. அதன் $800 பேய் விலையையும் மீறி டிம்மின் அடுத்த பிறந்தநாளுக்குப் பரிசாக வாங்கிவந்தான். டிம்முடனான அவனது மிக அன்யோன்யமான சந்தோஷக் கணங்கள் பலதும் ராக் கான்சர்ட் கணங்கள் தாம். கரகோஷம் போடும் கூட்டத்தின் அநாமதேயத்தில் அவர்கள் இருவரும், தங்களிடையே நிலவிய இன்னமும் வார்த்தைகளில் விவரிக்கப்படாத பந்தத்தை, இருவருக்குமே மிகப் பிடித்தமான டேவின் இசை உருவாக்கிய மாயத்தில் உணர்ந்து கொண்டார்கள். ராக் இசைக்கே உரிதான களியாட்டச் சூழலில் அவன் ஸ்டைரோஃபோம் கப்பிலிருந்து பீரைக் குடித்துப் பார்க்க டிம் ப்ரயனை எப்படியோ தாஜா செய்துவிட்டது போலான தருணங்களால் வலுப்பட்ட பந்தமது. அவர்களுக்கு மட்டுமே தெரிந்த இந்த ரகசியத்தை சாராவிடமிருந்து அவர்கள் கவனமாகப் பாதுகாத்தார்கள், அவள் இந்த அப்பா-மகன் பாண்டிங் சாக்குபோக்குகளை எல்லாம் ஏற்றுக்கொள்ளமாட்டாள் என்பதால். 

“லெகோ ரூமில்” ப்ளாக்குகளை அவர்கள் கலவரத்துடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு ஒலித்துக் கொண்டிருந்த “ஜிம்மி திங்” பாடலின் கிட்டார் கோவைகள் இந்நினைவுகளைக் கிளர்த்தெழுப்பின. லெகோ அறை என்பது பல பிறந்தநாட்கள் வழியே படிப்படியாக இயல்பாக உருவான ஒன்று. அவர்கள் மேலும் மேலும் ப்ளாக்குகளை சேர்க்கச் சேர்க்க அந்தக் கட்டுமானம் பூதாகாரமாக வளர்ந்து கொண்டிருந்தது. அதற்கு அவர்கள் “Life Desired – WIP” என்று பெயரிட்டிருந்தார்கள். அது ஒரு உருவாகிக் கொண்டிருக்கும் படைப்பு என்பதில் சந்தேகமில்லை. அந்த லெகோ பாழ்நிலத்தை ஆக்கிரமிக்கும் ஆயிரக்கணக்கான அசெம்ப்ளிகளை அவர்கள் மூவரால் மட்டுமே அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும். டிம்மின் விழைவுகளின் பரிணாம வளர்ச்சிக்கு ஏற்ப அது உருமாறிக் கொண்டிருந்தது. கடந்த காலத்து விழைவுகளை அவர்கள் பட்டியலிடுகையில் அவற்றில் முதலிலிருந்தே வேலைக்கு ஆகாது என்று புறந்தள்ளிய சில கேலிக்குரிய விழைவுகளை நினைவுகூர்வது அவர்கள் மூவருக்குமே பிடித்தமானது. ரெட் சாக்ஸ் உடையணிந்த டிம் பேஸ் பால் வர்ல்ட் சீரீஸில் விளையாடுவது, எம்மா வாட்சனுடன் ஆஸ்கர்களுக்குச் செல்வது, டேவ் மாத்யூஸ் பாண்டில் டிரம்மராகப் பணியாற்றுவது போன்ற பதின்மர்களுக்கே உரிய நடைமுறைக்கு ஒவ்வாத பெரிய விழைவுகள். 

இம்முறை அவர்கள் டிம்மின் பிரௌன் பல்கலையின் மூலக்கூறு உயிரியல் திட்டத்தில் நுழையும் டிம்மின் சமீபத்திய மிகைவிழைவிற்கான நினைவாஞ்சலியை அக்கட்டுமானத்தில் சேர்க்கப் போவதாக முடிவு செய்திருந்தார்கள். பிரௌன் பல்கலையின் பிரத்தியேக சீல் பிரவுன், கார்டினல் ரெட் மற்றும் வெள்ளைக் கட்டிடங்களுடன் ப்ரூனோ கரடிச் சிலையின் மிகப் பெரிய லெகோ நகலியும் அப்புதிய சேர்க்கையில் இடம்பெற வேண்டும் என்பதையும். சாராவிற்கு அவ்வறையில் நேரம் போவதே தெரியாது; அம்மாக்களுக்கே உரிய வெறியுடன் அவள் மணிக்கணக்காக லெகோ வடிவங்களை உருவாக்கிக் கொண்டிருப்பாள். டிம்மும் ப்ரயனும்தான் அவளை அவ்வப்போது தட்டி எழுப்புவார்கள். பரிணமித்தபடியே இருக்கும் அந்நெகிழி நினைவுச்சின்னம் புகைப்படங்களைக் காட்டிலும் பலவீனமாக இருந்ததால் அவற்றை விட முக்கியமானதாக இருந்தது அவளுக்கு. இவ்வருடம் பிரௌன் பல்கலையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்ததால் விவரங்களைச் சரியாக லெகோத் துண்டங்களில் கைப்பற்ற கூடுதல் வெறியும் சேர்ந்து கொண்டது. நடுப்பகல் கழிந்தும் அவள் மும்முரமாக கட்டி உடைத்துக் கொண்டிருந்தாள். ப்ரயன் சத்தமின்றி அறையை விட்டு வெளியேறி டிம்மும் அவனும் டேவ் மாத்யூஸ் பாண்டின் தலைசிறந்த ஆல்பம் என்று கருதிய “Before the Crowded Streets” வைனில் இசைத்தட்டை ஓட விட்டான். சென்ற டிசெம்பரில் தான் வாங்கி வந்த பரிசுகளை சாராவிடம் காண்பித்த போது அவள் சிரித்து விட்டாள். டிம்மின் பதினெட்டாவது பிறந்த நாளைச் சாக்காக வைத்து ஆடம்பரமான பரிசை தனக்கு வழங்கிக் கொண்டதற்காக அவனைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள்.

 ***

ட்வின் ரிவர்ஸ் கசீனோவிற்குப் போய்ச் சேர்வதற்குள் சாரா பீட்டில்ஸ்சை கிட்டத்தட்ட வெறுக்கவே தொடங்கி விட்டாள். அவனுக்கு மட்டுமே தெரிந்த ஏதொவொரு காரணத்திற்காக ப்ரயன் “ஸம்திங்” பாட்டை மீண்டும் மீண்டும் லூப்பில் ஓட்டிக் கொண்டிருந்தான். சில சமயங்களில் குதிரைகளுக்கு இடும் ப்ளிங்கர்களை போட்டுக் கொண்டது போல் வெறித்தனமாக ஒன்றைப் பிடித்து கொண்டுவிடுவான். அம்மாதிரியான பிடிவாத மூடுகளுக்குள் செல்லுகையில் அவனிடம் தர்க்கபூர்வமாக வாதாடிப் புரியவைக்க முடியாது என்பதால் சாரா வழக்கமாக “சாமி” இறங்குவதற்காகக் காத்திருப்பாள். சாமியும் அனேகமாக ஒன்றிரெண்டு மணி நேரங்களுக்குள் இறங்கி விடும் வழக்கம்தான். இம்முறை டிம்மிற்கு மிகவும் பிடித்த பீட்டில்ஸ்சின் சம்திங் சாமியே சன்னதம் கொண்டிருந்தது. உடன்சேர்ந்து பாடக்கூட முயற்சித்தாள், ஆனால் பத்து முறைகளுக்கு மேல் அவளால் தாக்குபிடிக்க முடியவில்லை. சலிப்பால் தலை வலிக்கத் தொடங்கியது. ஒரு வழியாக கசீனோ வந்து சேர்ந்தது அவளை ஆசுவாசப்படுத்தியது என்றாலும் Texas Hold’em விளையாடும் மேஜைகளில் அடுத்த இருக்கையில் எவனாவது புகைபிடிப்பான் என்பதை நினைத்துப் பார்ப்பது அவளை எரிச்சலூட்டியது. டிம்மிற்குப் போக்கர் ரூலெட் விளையாட ரொம்பப் பிடிக்கும். பல வருடங்களாக வேகஸிற்குப் போவதைப் பற்றிக் கனவுக் கோட்டைகள் கட்டிக் கொண்டிருந்தான். பன்னிரெண்டாவது பிறந்த நாளன்று தொடங்கிய ஒரு மணி நேர Texas Hold’em கூத்து இப்போது மணிக்கணக்காக ஓடும் ஒரு நிரந்திர பெக்மன் குடும்ப வழக்கமாகி விட்டது. பணயம் சிறிதென்றாலும் நிஜப் பணம் கைமாறியதென்னவோ உண்மைதான்; சாராவும் ப்ரயனும் பெற்றோருக்கே உரிய தாராளத்துடன் திருட்டுத்தனமாக டிம் அதிகம் இழக்காத வகையில் பார்த்துக் கொண்டார்கள். பதினெட்டாவது பிறந்த நாளுக்கு நிஜக் கசீனோ ஒன்றிற்குப் போவதாக டிம்மிற்கு அவர்கள் வாக்களித்திருந்தார்கள். வேகஸ் இல்லை என்றாலும் இதோ கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக அவர்கள் ரோட் ஐலண்டிற்கு வந்திருந்தார்கள். வெற்றி பெறுவதற்கான டிம்மின் திட்டப்படி சாரா எண்களுக்கு வெளியே இருக்கும் கட்டங்களை மட்டும் ஆடினாள். கிறிஸ்துமஸ் முன்னிரவொன்றில் டிம் அவளுக்குப் பொறுமையாக விளக்கிய நிகழ்தகவுகளை நினைவுகூர முயன்றாள். தேசத்தின் பிரசித்தி பெற்ற ஆராய்ச்சி கூடங்களில் அதி நவீன ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கும் தன் அம்மாவால் ஏன் சேர்வுசார் கணிதத்தின் எளிய அடிப்படைகளைக் கூட புரிந்துகொள்ள முடியவில்லை என்பது டிம்மிற்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இதை விவாதிக்கையில் தன் அதிகப்பிரசங்கி மகனின் ஷூ-லேஸ்களைக் கட்டித் தருவதற்கான சாமர்த்தியம் தனக்கு இன்னமும் இருக்கிறது என்று சாராவே முடித்து வைப்பாள். ரூலட்டில் ஜெயித்ததைப் போக்கரில் இழப்பதற்குள் ஆறு மணி ஆகிவிட்டது. டிம்மின் நண்பர்களுடன் உணவருந்த வேண்டும் என்பது நினைவுக்கு வர, கசீனொவிலிருந்து கிளம்பினார்கள். 

சாரா ப்ரயன் இருவருக்குமே அந்தக் குழந்தைகளோடு இருப்பது பிடிக்கும். வீட்டில் பார்க்காத டிம்மின் ஒரு பக்கத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் சில பைத்தியக்காரக் கதைகளைக் கூறி எப்போதும் சிரிக்க வைக்க வைப்பவர்கள் அவர்கள். டிம் “ப்ரோஸ்” என்று பெயர்சூட்டியிருந்த அவன் ஆண் நண்பர்கள் இன்று அதிகம் கலாட்டா செய்யாதிருந்தார்கள். ப்ரயனுடன் அவர்கள் சகஜமாகப் பழகுவார்கள், அவனைத் தங்களின் ஃபாண்டசி ஃபுட்பால் லீகில்கூட சேர்த்திருந்தார்கள். டிம்முடன் அவர்கள் கொட்டமடித்த “ப்ளே டேட்டுகள்” ஹைஸ்கூலில் சீனியர்களாக இருப்பவர்கள் எட்டு வயது பிள்ளைகளைப் போல நடந்து கொள்வார்கள் என்பதற்காகவும் பிரசித்தி பெற்றவை. சில சமயங்களில் ப்ரயனும் தன் பதின் பருவ மாயத்தை மீட்டெடுக்கும் முயற்சியில் அவர்களுடன் ராக் பாண்ட் ஆடுவான். மணிக்கணக்காக தங்கள் விருப்பத்துக்குரிய பாடல்களை அவர்கள் சந்தோஷமாகச் சின்னாபின்னமாக்கிக் கொண்டிருப்பார்கள். நண்பிகளோ அக்டோபருக்குள் முடித்தனுப்ப வேண்டிய கல்லூரி விண்ணப்பங்களைப் பற்றி சாராவிடம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். அடுத்த இலையுதிர் காலத்திற்குள் இந்த அருமையான நண்பர் குழு அதன் நபர்கள் நாட்டின் வெவ்வேறு மூலைகளுக்குப் பெயர்ந்து விட்ட சீரற்ற நினைவுகளாகி விடும், ஒருங்கிணைக்க முடிந்தாலும் அவை பிறிதொன்றாகவே இருக்கும். சாராவிற்கு ஒரு கணம் ஏதோ ஒரு சகுனத்தின் முன்னறிவிப்பை பார்த்துக் கொண்டிருப்பது போலிருந்தது. அதிலிருந்து தன்னை வலுக்கட்டாயமாகத் துண்டித்துக் கொண்டு ஜென்னி வெஸ்ட் கோஸ்ட் கல்லூரிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்ததைப் புரிந்துகொள்ள முயற்சித்தாள். டிம்மிற்கு ஜென்னியின் மீது பல வருடங்களாகவே மிகப் பெரிய சொல்லப்படாத “கிரஷ்” இருந்தது. சென்ற வருடம்தான் “பிராம்” கொண்டாட்டத்திற்குத் தனது துணையாக வர அவளிடம் சம்மதம் கேட்கத் துணிந்தான். உயர்நிலைப் பள்ளிக் காதல்கள் எத்தனை சதவீதத்தில் திருமணத்தில் முடிகிறது என்ற புள்ளிவிவரத்தை அண்மையில் பிரௌன் பல்கலை ஆசிரியர் ஒருவர் தன்னிடம் கூறிக் கொண்டிருந்தது சாராவிற்கு நினைவுக்கு வந்தது. ஆனால் பெருங்காதலின் முதல் முன்னறிவுப்புகள் போலிருந்த இவ்விடலைக் காதல்களால் அவள் எப்போதுமே நெகிழ்த்தப்பட்டாள். மானுட இயல்பின் ஏதோவொரு உண்மையை அவை வெளிப்படுத்துகின்றன என்றே அவள் அர்த்தப்படுத்திக் கொண்டாள். அவற்றுள் பெரும்பான்மையானவை நிலைத்த பந்தங்களாக நீடிக்காது என்பதெல்லாம் அவளுக்கு ஒரு பொருட்டாகப் படவில்லை. சொல்லப்போனால் சட்டெனப் பிரகாசமாக பூத்து மறையும் அவற்றின் தற்காலிகத்தனமே அவற்றை பிரியத்துக்குரியவை ஆக்கின. 

அவர்கள் விடைபெறத் தயாரான போது டிம்முக்கான “ஹாப்பி பர்த்டே” பாடலைக் குழந்தைகள் ஒருமுகமாக முழங்கினார்கள். அருமையான ரோஜாப் பூங்கொத்தன்றை அளித்து ஜென்னி சாராவை ஆச்சரியப்படுத்தினாள். திரும்பி வருகையில் அவர்கள் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ப்ரயன் இசை எதையும் ஓட விடாதது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. சவுத் ஸ்ட்ரீட்டிலிருந்த டிம்மின் ஹை ஸ்கூலைக் கடந்து அவர்கள் ராக் ஹில் மைதானத்திற்கு வந்து சேர்ந்தார்கள். அந்த ஜனவரி தினத்தைப் போல் இன்றும் மழை பெய்து கொண்டிருந்தது. அன்றைப் போல் இன்றும் ப்ரையன் சாராவிற்காக அனிச்சையாக குடையை விரித்தான். ஈரப் பளிங்கின் மீது சாரா ஜென்னியளித்த பூங்கொத்தை வைத்தாள். பூவையும் பளிங்கையும் மழை இடையறாது அறைந்து கொண்டிருந்தது. பற்றற்ற அதன் விடுபட்ட மூர்க்கம் அவள் மனதில் முடிந்திருந்த ஏதோவொரு முடிச்சை அவிழ்த்தது. நாள் முழுதும் கட்டுக்குள் வைத்திருந்த கண்ணீர்த் துளிகள் தங்கு தடையின்றி விழத் தொடங்கின. பலரது நீண்ட வாழ்நாட்களைக் காட்டிலும் அவனது குறுகிய பதினெட்டு வயது ஆயுட்காலத்திற்குள் டிம் அதிகமான அர்த்தமுள்ள அனுபவங்களை பொதித்து வைத்து போய்விட்டான். வேர்விட்டது போல் அவர்கள் அதே இடத்தில் கணிசமான நேரம் வலியின் அலைகளை தங்கள் மீது கவியவிட்டபடி அசையாது நின்று கொண்டிருந்தார்கள். ஜென்னி பூ கொடுத்தாள் என்பது தெரிய வந்தால் டிம் எப்படி அடக்க முடியாமல் சிரித்திருப்பான் என்ற எண்ணம் எழ, ப்ரயனே அம்மோனத்திலிருந்து மென்மையான புன்முறுவலுடன் தன்னை முதலில் விடுவித்துக் கொண்டான். இறுகப் பற்றியபடி சாராவை காருக்கு நடத்திச் சென்றான். கல்லறை வாயில்கள் வழியாக அவர்கள் வெளியே வருவதற்குள், மழை முற்றிலும் ஓய்ந்திருந்தது; நாள் முழுவதும் பெய்த இருண்ட மழைக்கு மன்னிப்பு கேட்பது போல் அரை முகத்துடன் நிலவு குற்ற உணர்வுடன் பிரகாசித்தது. இழப்பு என்ற ஒற்றைவண்ண வடிகட்டியையும் மீறி அன்றைய நிகழ்வுகள் சாராவைக் கட்டுப்படுத்தப்பட்ட மகிழ்ச்சியுடன் கடந்து சென்றன. அவளது பேக்கிங் மகாதோல்விக்கும் தற்போதைய ஆற்றுப்படுத்தமுடியா நினைவிற்கும் இடையே சுவையான க்ரீம் ஃபில்லிங்கைப் போல் அவை சாண்ட்விச் செய்யப்பட்டிருந்தன. “பரவாயில்லை இன்று அனைத்துமே சரியாகவே நடந்தது” என்று தனக்குதானே சொல்லிக் கொண்டு அவள் சிரித்தாள். சட்டென்று எங்கிருந்தோ வரும் பொருத்தமற்ற நினைவைப் போல வூப்பி-பைக்கான ஒரு ஏக்கம் அவளுள் மலர்ந்தது. 


குறிப்பு

சாம் பெர்ன்ஸ் (Sam Berns, இக்கதையின் டிம்) என் மகனின் ஆத்மார்த்த நண்பன். அவர்கள் பதினோராம் வகுப்பில் இருந்த போது சாம் ப்ரொஜீரியா என்ற துரித மூப்பு நோயால் மரிந்தான். துக்ககரமான அக்காலகட்டத்தில்தான் இக்கதையின் முதல் வரைவு எழுதப்பட்டது. இக்கதையால் கைப்பற்ற முடியாத அளப்பறிய கண்ணியத்தை இயல்பாகவே கொண்டிருக்கும் சாமின் பெற்றோர் இன்னமும் அந்நோய்க்கான தீர்விற்காகப் போராடிக் கொண்டிருக்கிறார்கள், அண்மையில் நியூ யார்க் டைம்ஸ் பத்தியொன்று (ஜூலை 24, 2024) அவர்கள் அத்தீர்வை நெருங்கி விட்டார்கள் என்று பிரஸ்தாபித்ததை வாசித்த உவகையில் இக்கதையின் வரைவைத் தூசிதட்டி முடித்தேன். இதை பெர்ன்ஸ் குடும்பத்துக்கு சமர்ப்பிக்கிறேன். 

Sam Berns with his parents in March 2009, when he was 12 years old (HBO)

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.