மறக்கப்பட்ட தியாகி: கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை

இந்தியாவில் இரண்டு நூற்றாண்டுகளாக நிலவி வந்த காலனிய ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியர்கள் முனைப்போடு பல போராட்டங்களை முன்னெடுத்தனர். இந்தியர்களின் அரசியல் உரிமைகளை போராடி பெறுவதற்காக 1885–இல் இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. பின்னாட்களில் வெகு மக்கள் ஆதரவுடன் கூடிய இந்திய விடுதலை இயக்கமாக பரிணமித்தது. அது சமயம் காங்கிரஸ் தலைவர்களாய் இருந்த கோபால கிருஷ்ண கோகலே மற்றும் பால கங்காதர திலகருக்கு இடையிலான கருத்து வேறுபாட்டின் காரணமாக 1907-இல் காங்கிரஸ் இயக்கம் கோகலே தலைமையில் “மிதமான போக்குள்ள தேசியவாதிகள்” என்றும் திலகர் தலைமையில் “தீவிர போக்குள்ள தேசியவாதிகள்” என்றும் இரண்டாகப் பிளவுபட்டது. திலகர் அவர்கள் தன்னாட்சி, ஆன்மிகம் மற்றும் கலாச்சாரத்தை முன்னிறுத்தி மக்களை ஒன்றிணைத்து பல காத்திரமானப் போராட்டங்களை அரசுக்கு எதிராக நடத்தினார். திலகருடன் நெருங்கிப் பழகிய சாவர்க்கர் சகோதர்கள் (சூரத் பிளவுக்கு முன்பே) 1899-ஆம் ஆண்டு “மித்ர மேளா” எனும் புரட்சிகர ஆயுதப் போராட்ட அமைப்பினை நிறுவினர். இச்சங்கமானது 1904-ல் “அபினவ் பாரத் சமீதி” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அபினவ் பாரத் சமீதியில் தமிழகத்தைச் சார்ந்த வ.உ.சி., வ.வே.சு. அய்யர், எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி மற்றும் பலர் உறுப்பினராக செயல்பட்டனர்.

அபினவ் பாரத் சமீதியைச் சார்ந்த எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியவர்கள் தென்காசி, செங்கோட்டை மற்றும் தூத்துக்குடிப் பகுதியைச் சார்ந்த நண்பர்களுடன் இணைந்து 10-04-1910-இல் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய இயக்கத்தை நிறுவினார். இந்த சங்கத்தின் இரு முக்கிய நோக்கங்கள்; மக்களிடையே சுதேசிய கொள்கையை பரப்புரை செய்வது மற்றும் ஆயுதமேந்திய கிளர்ச்சியின் வழியாக வெள்ளையர் ஆதிக்கத்தை ஒழிப்பது. இதன் தொடர்ச்சியாக, திருவனந்தபுரம் சமஸ்தானத்திற்கு உட்பட்ட செங்கோட்டைப் பகுதியில் பாரதமாதா சங்கம் நிறுவப்பட்டு அதன் தலைவராக தர்மராஜய்யர் என்பவர் செயல்பட்டார். அச்சங்கத்தின் உறுப்பினர்களாக R. வாஞ்சி அய்யர், சாவடி S. அருணாசலம் பிள்ளை, கஸ்பா S. V. அழகப்ப பிள்ளை, சங்கரகிருஷ்ணய்யர், ஹரிஹர அய்யர், ஜகநாத அய்யங்கார், வெங்கடராம அய்யர், வேம்பு அய்யர் என்ற மகாதேவ அய்யர் மற்றும் பிச்சுமணி அய்யர் ஆகியோர் செயல்பட்டனர். இந்த சங்கத்தினர் திட்டமிட்டு, அதன் உறுப்பினரான வாஞ்சி அவர்களைக் கொண்டு திருநெல்வேலி ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதியாக பதவிவகித்த ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷை 17-06-1911-இல் சுட்டுக் கொன்றனர். பிரிட்டிஷார் மத்தியில் ஒரு அதிர்வை ஏற்படுத்திய ஆஷ் கொலை என்பது வரலாற்று ஆய்வாளர்களால் “திருநெல்வேலி சதிவழக்கு” என்று அழைக்கப்படுகிறது. பாரதமாதா சங்கமானது ஒரு ரகசிய இயக்கமாக செயல்பட்டதால் இந்த சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் உறுப்பினர்களைப் பற்றிய தகவல்கள் பொது வெளியில் மிக குறைவாகவே காணக் கிடைக்கின்றன. இந்த வழக்கு பற்றிய தகவல்களை தொகுத்து ஒரு விறுவிறுப்பான நாவல் பாணியில் தினமணி பத்திரிகையின் இணைப்பு இதழான தினமணி கதிரில் திரு. ரகமி அவர்கள் (3-6-1984 முதல் 18-11-1984 வரை) தொடர் கட்டுரையாக எழுதியுள்ளார். இது தவிர ஆய்வாளர்கள் ஆ. சிவசுப்பிரமணியன் மற்றும் ஆ.ரா. வெங்கடாசலபதி ஆகியோர் இக்கொலை சம்பந்தமான வரலாற்று நூல்களை எழுதியுள்ளனர். இந்த கொலைவழக்கில் சம்பந்தப்பட்டவர்களை குறித்து எதிர்நிலை விமர்சனப் போக்கில் மரு. நா. ஜெயராமன் ஒரு புத்தகத்தினை எழுதியுள்ளார். இந்த ஆக்கங்களின் வாயிலாக இந்த கொலைவழக்கு சம்பந்தமான ஆதாரபூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளலாம். அதேசமயம் இந்த சம்பவத்தோடு தொடர்புடைய தியாகிகளைப் பற்றிய தகவல்கள் மிக அரிதாகவே காணக்கிடைக்கின்றது. அந்தக் குறையினை களையும் பொருட்டு, ஆஷ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வாஞ்சியின் நண்பரும் பாரதமாதா சங்கத்தில் உறுப்பினருமான தியாகி செங்கோட்டை கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை அவர்களின் தியாக வாழ்வினைக் குறித்த தகவல்களை வெளிக்கொணர்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை அவர்கள் தென் திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சிக்கு உட்பட்ட சிறு நகரான செங்கோட்டையில் வாழ்ந்த, வேய்ந்தமுத்து பிள்ளை மற்றும் கோதைநாச்சியார் தம்பதியருக்கு மகனாக 15-04-1893 ஆம் ஆண்டு பிறந்தார். அழகப்ப பிள்ளை அவர்கள் தனது பள்ளிப்படிப்பை செங்கோட்டையில் பூர்த்தி செய்தார். மேற்படிப்பிற்க்காக பரோடா பொறியியல் கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார். தனது இளம் வயதிலேயே பாப்பு அம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்து நடராஜன் மற்றும் கோதையம்மாள் ஆகிய இரு குழந்தைகளுக்கு தந்தையானார். இளம்வயதில் இவருக்கு அதே ஊரினைச் சார்ந்த சங்கரன் (வீர வாஞ்சி) மற்றும் சாவடி அருணாசலம் பிள்ளை ஆகியோர் நண்பர்களாக இருந்தனர். அழகப்ப பிள்ளை அவர்கள் இளம்வயதில் வாசிப்பு ஆர்வமும் சுதந்திர வேட்கை கொண்டவராகவும் விளங்கினார்.

அபினவ் பாரத் சமீதியின் உறுப்பினரான எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரியின் வழிகாட்டுதலின் படி செங்கோட்டையில் பாரதமாதா சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த சங்கத்தின் இளம் உறுப்பினரான (17 வயது) அழகப்ப பிள்ளையவர்கள் சுதேசிய சிந்தனைகளை பரப்புரை செய்யவும், பிடி அரிசி திட்டத்தின் மூலம் சங்கத்திற்கான நிதித் தேவைகளை பூர்த்தி செய்தும் வந்தார். அழகப்ப பிள்ளை அவர்களின் வாசிப்பு ஆர்வத்தை அறிந்த வாஞ்சி அவர்கள், பிள்ளை அவர்களை பாண்டிச்சேரி, பிரிட்டிஷ் மற்றும் திருவிதாங்கூர் பகுதியில் வெளியான பத்திரிகைகளின் சந்தாதாரராகி ஒரு சிறிய நூலகத்தை துவங்கும் பொருட்டு வேண்டுகோள் விடுத்தார். அதனை ஏற்று பிள்ளை அவர்கள் தன்னுடைய வீட்டின் (239/141, சேர்வைக்காரன் புதுத் தெரு) முன்பகுதியில் ஒரு சுதேசிய நூலகத்தினை தொடங்கினார். அந்த நூலகத்தில் பத்திரிகைகள் தவிர்த்து பாண்டிச்சேரியில் இருந்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக வெளியிடப்பட்ட பல புத்தகங்களும் வாசிப்பிற்காக வாங்கப்பட்டது. அழகப்ப பிள்ளையின் நூலகத்திற்கு, வாஞ்சி அவர்கள் பாரத மாதா கை விலங்குடன் இருப்பது போன்ற படத்தினை அன்பளிப்பாக வழங்கினார். பாரதமாதா சங்கத்தின் ரகசிய கூட்டங்கள் தர்மராஜா அய்யர், சாவடி அருணாசலம் பிள்ளை மற்றும் கஸ்பா அழகப்ப பிள்ளை அவர்களின் இல்லங்களில் நடைபெறுவது வழக்கம். 14-04-1911 சித்திரை மாதம் முதல் தேதி வெள்ளிக்கிழமை சாவடி S. அருணாசலம் பிள்ளை அவர்களுடைய இல்லத்தில் புரட்சியாளர்கள் ஒரு ரகசிய கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தனர். இக்கூட்டத்தில் எருக்கூர் நீலகண்ட பிரம்மச்சாரி, R. வாஞ்சி அய்யர், சாவடி S. அருணாசலம் பிள்ளை, கஸ்பா அழகப்ப பிள்ளை, ஓட்டப்பிடாரம் மாடசாமிப்பிள்ளை மற்றும் பலர் பங்கேற்றனர். 

தூத்துக்குடியில் சுயராஜ்ய தினத்தினை கொண்டாடும் பொருட்டு ஊர்வலம் சென்ற வ.உ.சி மற்றும் சுப்பிரமணிய சிவா கைது செய்யப்படத்தைக் கண்டித்து, பொதுமக்கள் 13-03-1908 இல் நடத்திய போராட்டத்தை துப்பாக்கிச் சூடு நடத்தி கலைத்தவரும், வெள்ளையர்களுக்கு எதிராக வ.உ.சி. அவர்கள் 16-10-1906 இல் தொடங்கி நடத்திவந்த சுதேசி கப்பல் நிறுவனத்துக்கு அலுவல் ரீதியாக தொடர் நெருக்கடிகள் தந்தவருமான திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் வில்லியம் எஸ்கோர்ட் ஆஷ் மீது சுதேசிகள் தீரா பகைமை கொண்டிருந்தனர். இது தவிர, ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலைமையில் டிசம்பர் 12, 1911-ல் “தில்லி தர்பார்” நிகழ்ச்சி நடப்பதற்கு பிரிட்டிஷ் அரசு முடிவு செய்திருந்தது. இதனால் மேலும் வெகுண்ட சுதேசிகள் (பாரத மாதா சங்கத்தினர்) மேற்குறிய சம்பவங்களுக்கு ஒரு வலுவான எதிர்ப்பை பதிவு செய்யும் முகமாக தங்கள் பரம எதிரியான மாவட்ட ஆட்சியர் ஆஷினை கொல்ல ரகசிய கூட்டத்தின் முடிவில் தீர்மானம் செய்தனர். இதன் பின்பு வாஞ்சி அழகப்ப பிள்ளயை 1911 ஆம் ஆண்டு மே மாத இறுதியில் சந்தித்தார். அப்பொழுது அழகப்ப பிள்ளை அவர்கள் தான் பரோடா பொறியியல் கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இருப்பதாகவும், சாவடி அருணாசலம் பிள்ளை கல்கத்தா மருத்துவ கல்லூரியில் சேர இருப்பதாகவும் வாஞ்சியிடம் தெரிவித்தார். இதனை கேட்ட வாஞ்சி தானும் சிறிது நாட்களில் அமெரிக்கா போகப் போவதாக (ஞான் மரிக்காம் போவுன்னது என்று மலையாளத்தில் சொன்னதை, தான் தவறாக புரிந்து கொண்டதாக அழகப்ப பிள்ளை பின்னாட்களில் பதிவு செய்திருக்கிறார்) அழகப்பனிடம் கூறினார்.

ஆஷும் அவருடைய மனைவியான மேரி லிலியன் பாட்டர்சனும் கொடைக்கானலில் படிக்கும் தங்களுடைய குழந்தைகளைப் பார்ப்பதற்காக 1911 ஆம் ஆண்டு ஜூன் 17-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு திருநெல்வேலி ஜங்ஷனிலிருந்து தொடர்வண்டியில் பயணப்பட்டனர். இத்தகவலை முன்கூட்டியே அறிந்த வாஞ்சி, ஆஷ் பயணித்த தொடர்வண்டியில் ஏறினார். வண்டி மணியாச்சி நிலையத்தை அடைந்த பின்பு ஆஷை, வாஞ்சி சுட்டுக் கொன்றார். ஆஷைக் கொன்று விட்டு தப்பியோடிய வாஞ்சி, அருகில் இருந்த கழிவறைக்குள் சென்று தன்னுடைய வாய்க்குள் துப்பாக்கியை வைத்து சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

ஆஷின் கொலையை தொடர்ந்து திருநெல்வேலி நகரம் பரபரப்படைந்தது, கொலையாளியின் சட்டைப்பையில் இருந்த கடிதத்தின் வழியாக அவருடைய ஊரையும் கொலைக்கான நோக்கத்தினையும் போலீசார் அறிந்துகொண்டனர். போலீஸ் குழு ஒன்று வாஞ்சியின் சொந்த ஊரான செங்கோட்டைக்கு கொலை நடந்த மறுதினம் 18-ஆம் தேதி விரைந்து, அவருடைய வீட்டை சோதனையிட்டது. அதற்கு மறுதினம் 19-06-1911 இல் செங்கோட்டை இரண்டாம் நிலை நீதிபதியின் அனுமதியோடு காவல்துறை ஆய்வாளர் குமாரபிள்ளை அவர்கள் தலைமயில் வாஞ்சியின் தோழரான கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை அவர்களின் வீடு (239/141, சேர்வகைக்காரன் புதுத் தெரு) தீவிர சோதனைக்குள்ளாக்கப்பட்டது. சோதனையின் போது அவருடைய வீட்டிலிருந்து தேசத்துரோக துண்டறிக்கைகளும், பத்திரிகைகளும், சில புத்தகங்களும், 1910-ஆம் ஆண்டைச் சார்ந்த ஒரு நாட்க்குறிப்பும் கிடைத்தன. அதுசமயம் அழகப்ப பிள்ளை அவர்கள் செங்கோட்டையை விட்டு, தலைமறைவாகி இருந்தார். போலீஸ் அவரை தேடும் வேட்டையில் ஈடுபடத் தொடங்கியது. ஐந்து நாட்கள் தொடர் தேடுதலுக்கு பின்னர் 24-06-1911 இல் வடகரை எனும் கிராமத்திலுள்ள ஒரு தோப்பில் வைத்து அழகப்ப பிள்ளை கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி மாவட்ட மஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆஷ் கொலை வழக்கில் தனி நீதிபதி தாமஸ் ICS நியமிக்கப்பட்டார். குற்றம்சாட்டப்பட்ட 13 பேரும் நீதிபதியின் முன்பு வரிசையாக ஆஜர்படுத்தப்பட்டனர். அழகப்ப பிள்ளை அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர் வரிசையில் 12-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். பின்பு இவ்வழக்கானது திருநெல்வேலி சப் டிவிஷினல் மஜிஸ்ட்ரேட் தம்பு அவர்களின் அமர்வுக்கு மாற்றப்பட்டது. 1911 ஆகஸ்ட் 1-இல் ஆஷ் கொலை சம்பந்தமாக குற்றம் சாட்டப் பெற்ற 13 பேர் மீதும் திருநெல்வேலி சப் டிவிஷினல் மஜிஸ்ட்ரேட் தம்பு அவர்களின் முன்னிலையில் இ.பி.கோ. 121A (சதிவழக்கு) பிரிவின் கீழ் குற்றப்பத்திரிக்கைத் தாக்கல் செய்யப்பட்டது. இதன் காரணமாக ஆஷ் கொலை வழக்கானது பின்நாட்களில் “திருநெல்வேலி சதிவழக்கு” என்றே குறிப்பிடப்பட்டது. குற்றம் சாட்டப் பெற்றவர்களுக்கு மரணதண்டனை அல்லது ஆயுள் தண்டனையாவது கிடைக்கும் வகையில் இ.பி.கோ. 302 மற்றும் 109 ஆகிய பிரிவுகளின் கீழ் இரண்டாவது குற்றப்பத்திரிகையானது ஆகஸ்ட் 18-இல் மீண்டும் தம்பு அவர்களிடமே தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்குகளின் ஆரம்பகட்ட விசாரணை ஆகஸ்ட் 18-இல் ஆரம்பித்து 30-இல் முடிவடைந்தது. விசாரணையின் முடிவில் தம்பு அவர்கள் வழக்கினை சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு மாறுதல் செய்து உத்தரவிட்டார்.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்ட திருநெல்வேலி சதி வழக்கினைச் சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர்களான சர். அர்னால்ட் வெய்ட், சர். சங்கரன் நாயர் மற்றும் ஐலிங் ஆகிய மூவர் அடங்கிய தனிப்பிரிவு (புல் பென்ச்) விசாரித்தது. குற்றவாளிகளின் சார்பில் புகழ்பெற்ற வழக்கறிஞர்களான ஆந்திர கேசரி சர். டி. பிரகாசம் மற்றும் சீனிவாச்சாரியார் போன்றோர் வாதாடினர். அழகப்ப பிள்ளை அவர்கள் குடும்பத்தினர் மற்றும் வழக்கறிஞர்களின் அறிவுறுத்தலின் பெயரில் அப்ரூவர் அளித்த அத்தனை தகவல்களும் பொய் என்று வாக்குமூலம் அளித்தார். சுமார் 80 நாட்கள் (11-09-1911 முதல் 02-02-1912 வரை) நடந்த விசாரணையின் முடிவில் பிப்ரவரி 15, 1912-இல் தீர்ப்பு வழங்கப்பட்டது. மூன்று நீதிபதிகளுமே தங்களுடைய தீர்ப்பில் இ.பி.கோ. 302 மற்றும் 109 ஆகிய பிரிவுகளின் கீழ் தொடரப்பட்ட மரண தண்டனைக்கு ஏதுவான வழக்கினைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இ.பி.கோ. 12A பிரிவின் கீழ் தொடரப்பட்ட வழக்கினுடைய தீர்ப்பில் கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை, சாவடி S. அருணாசலம் பிள்ளை, வேம்பு அய்யர் மற்றும் தேசிகாச்சாரி ஆகிய நால்வரையும் குற்றச்சாட்டிலிருந்து விடுதலை செய்தும் எஞ்சிய ஒன்பது பேருக்கு தண்டனை வழங்கியும் தீர்ப்பளித்தனர்.

கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை அவர்கள் கைது செய்யப்பட்டு சிறைவாசம் அனுபவித்து விடுதலை செய்யப்பட்டது வரையிலான 236 நாட்களும் (24-06-1911 முதல் 15-02-1912 வரை) அவர் சொல்லொண்ணா சித்ரவதைகளை அனுபவித்தார். அவருடைய குடும்ப உறுப்பினர்களும் தொடர்ச்சியான போலீஸ் சித்திரவதைக்கு உள்ளாகினர். அழகப்ப பிள்ளை அவர்களை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும் பொருட்டு மிகுந்த பொருட்செலவு செய்ததன் மூலம் மிகுந்த பொருளாதார சிரமத்திற்கும் உள்ளாக்கப்பட்டனர். வழக்கிலிருந்து முற்றிலுமாக விடுபட்டாலும் இந்திய சுதந்திரம் பெரும் வரையிலும் உளவுத்துறை மற்றும் காவல்துறையின் கண்காணிப்பிலேயே இருந்தார். தன்னுடைய உயர் படிப்பினை தொடர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார். உப்பு சத்யாகிரகம் (12-03-1930 – 6-04-1930) நடைபெற்ற போது முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அழகப்ப பிள்ளை அவர்கள் கைது செய்யப்பட்டார். அதே போன்று 1942 இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பிக்கப்பட்ட சமயம் காவல்துறை இவரை முன்னெச்செரிக்கை நடவடிக்கைக்காக கைது செய்தது. கொலைவழக்கின் பொருட்டு சிறை சென்றவர் எனும் காரணத்தினால் ஊர்மக்களின் ஏளனத்திற்கும் உள்ளானார். இவ்வாறு உடல், மனம் மற்றும் பொருளாதார ரீதியிலான துன்பங்களுக்கு இவரும் இவருடைய குடும்பமும் ஆட்பட்டது. 

காவல்துறையின் நெருக்கடி மற்றும் ஊர்மக்களின் ஏளனப்பேச்சை சகிக்க இயலாமல் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கம்பெருமாள் கோவில் அருகிலுள்ள வீரராகவபுரம் கிராமத்திற்கு சென்று வாசிக்கலானார். அந்த கிராமத்தில் ஒரு அம்மன் கோவில் கட்டினார். அங்கு சிறிது காலம் விவசாயம் செய்துவந்தார். பின்னர் தன் சொந்த கிரமான செங்கோட்டைக்குத் திரும்பினார். செங்கோட்டை வந்தபின்பு திருக்குறள் மற்றும் தேவாரம் குறித்த ஆய்வுகளில் ஈடுபடலானார். 8-8-1957 அன்று செங்கோட்டை முத்துசாமி பூங்காவில் வாஞ்சிநாதனுக்கு மணி மண்டபம் கட்ட அப்போதைய முதல்வர் காமராஜர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. காமராஜர் அவர்கள் அந்த விழாவில் கலந்து கொண்ட தியாகி கஸ்பா S.V. அழகப்ப பிள்ளைக்கு புகழ்மாலை சூட்டினார். இந்திராகாந்தி அவர்கள் 15-08-1972 இல் சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான பென்சன் திட்டத்தை அறிவித்தார். தியாகி பென்ஷனை வாங்க மறுத்து அழகப்ப பிள்ளை அவர்கள் அரசுக்கு கடிதம் எழுதினார். 

1970 ஆம் ஆண்டு தொடக்கத்தில், திருச்சி வானொலி நிலைய நிகழ்ச்சி அமைப்பாளர்களாக பணியாற்றிய செல்வம் மற்றும் திருவேங்கடம் ஆகிய இருவரும் அழகப்ப பிள்ளையின் சுதந்திர போராட்ட செயல்பாடுகளை பேட்டி கண்டு அதனை வானொலியில் ஒளிபரப்பு செய்தனர். பத்திரிக்கையாளர் ரகமி அவர்கள் 1973 ஆம் ஆண்டு ஜூன் மாதம் கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை மற்றும் A.S. ஹரிஹர அய்யர் இருவரையும் நேரில் பேட்டி கண்டு அதனை சுதேசமித்ரன் பத்திரிகையின் சுதந்திர தின வெள்ளி விழா சிறப்பு மலரில் வெளியிட்டார். பிள்ளை அவர்கள் தன்னுடைய இறுதிக்காலத்தில் எளிமையான ஆன்மீக வாழ்க்கையினை வாழ்ந்தார். இவர் குடும்பத்திற்கு சொந்தமான வீரகேரள விநாயகர் கோவிலை பராமரித்து நிர்வகித்து வந்தார். தியாக வாழ்வு வாழ்ந்த அழகப்ப பிள்ளை அவர்கள் வயது மூப்பின் காரணமாக 16-06-1975 அன்று (ஆஷ் நினைவு தினத்திற்கு முந்திய நாள்) இயற்கை எய்தினார். இந்த வருடம் அவருடைய 50 ஆம் ஆண்டு நினைவு தினம்.

இந்திய சுதந்திர வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை அவர்களின் தியாக வாழ்வினைக் கவுரவிக்கும் வகையில் செங்கோட்டை S.M.S.S. அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் சார்பில் நடப்பட்ட நினைவுக் கல்லில் அவருடைய பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது. அழகப்ப பிள்ளை அவர்களின் நினைவினைப் போற்றும் வகையில் 15-08-2003 இல் செங்கோட்டை நகரசபையில் அன்னாரின் உருவப்படம் அவர்களின் மகள் தியாகி E. கோதையம்மாள் முன்னிலையில் திருமதி S. ராஜசரஸ்வதி அவர்கள் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. மேலும் அழகப்ப பிள்ளை அவர்களின் மகள் தியாகி E. கோதையம்மாள் அவர்கள் தன்னுடைய தந்தையின் வழியில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு அவரின் தியாக மரபை நிலைநாட்டினார்.

ஆஷ் படுகொலை என்பது ஆரிய சனாதன தர்மத்தினைக் காப்பதற்காக உயர்சாதி இந்துக்கள் இணைந்து செய்த தனிமனித பலாத்காரம் என்று சிலரால் விமர்சிக்கபப்டுகிறது. ஆஷ் கொலைக்கான காரண காரியங்களை நுட்பமாக ஆராயும் பொழுது, இக்கொலையானது ஆஷ் மீது சுதேசிகள் கொண்டிருந்த தீரா பகையின் விளைவாகவே நடந்ததென்பது புலனாகும். மேலும், ஆஷ் மீது ஏற்பட்ட பகையானது சாதி மற்றும் மதம் என்ற நோக்கில் அல்லாது, ஆஷ் சுதேசிகளின் பொருளாதாரம் மற்றும் உயிருக்கு ஏற்படுத்திய அச்சுறுத்தலின் விளைவாகவே உருவானது என்பதனையும் உணரமுடிகிறது. மேலும் ஆஷ் கொலைக்குப் பின் பாரதமாதா சங்க உறுப்பினர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் சந்தித்த இன்னல்கள் மற்றும் அடக்குமுறைகளை நோக்கும் பொழுது, பாரதமாதா சங்கத்தினரை விடுதலைப் போராட்ட தியாகிகள் என்ற வரையறைக்குள் வைத்து பார்ப்பதில் தவறேதும் இல்லை.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

6 Replies to “மறக்கப்பட்ட தியாகி: கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை”

  1. Thank you for the thorough essay on கஸ்பா S.V. அழகப்ப பிள்ளை, a lesser-known freedom fighter from Sengottai in the Tenkasi district. We appreciate your dedication in gathering and presenting the necessary documents from various sources. Your work is invaluable in helping both the current and future generations learn about the freedom fighters of Tamil Nadu. Please continue writing such insightful essays.

  2. Thank you for the thorough essay on S. V. Alagapa Pillai, a lesser-known freedom fighter from Sengottai in the Tenkasi district. We appreciate your dedication in gathering and presenting the necessary documents from various sources. Your work is invaluable in helping both the current and future generations learn about the freedom fighters of Tamil Nadu. Please continue writing such insightful essays.

  3. சிறந்த கட்டுரை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள திரு விஜய திருவேங்கடம் எங்களது குடும்ப நண்பர். முதுமை காரணமாக அவரால் தளத்தில் தன் கருத்தை பதிவு செய்ய முடியவில்லை. அவர் அனுப்பிய செய்தியை நான் இங்கே தந்துள்ளேன். அவர் இரண்டு செய்திப் பிழைகளைச் சொல்கிறார்:

    “நன்றி.
    இந்த அருமையான பதிவில் இரண்டு பிழைகள்.வானொலிப் பதிவும் ஒலிபரப்பும் 1973 ஜுன் மாதம்.தியாக தீபங்களாகிய சாவடி அருணாசலம் பிள்ளையையும் ஹரிஹர ஐயரையும்
    நேர்காணல் நிகழ்த்தியது நான்-விஜய திருவேங்கடம்-மட்டுமே.
    திரு செல்வம் அந்த செங்கோட்டைப் பயணத்திலும் பதிவிலும் பங்கேற்கவில்லை.
    பதிவுக்கு ஆவன செய்துஅருகில் இருந்தவர் என் ஆருயிர் நண்பர் செங்கோட்டை திரு ஜனார்த்தனன்.
    இந்தத் தகவல் செய்திப் பிழைத் திருத்தம் சொல்வனத்தில் இடம் பெறுமென எண்ணுகிறேன்.
    நன்றி.
    விஜய திருவேங்கடம்
    மேனாள் நிலைய இயக்குநர்,
    அ.இ.வானொலி,
    சென்னை”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.