வெற்றி

முழு மூடன்!

துரியோதனனின் முடியிலிருந்து இன்னும் சில நீர்த்துளிகள் சொட்டிக் கொண்டிருந்தன. அவனது இமைகள் பாதி மூடி இருந்தன. அவன் கண்கள் வெளிறி இருந்தன. அவனது மூச்சு சீராக வந்து கொண்டிருந்தது. கைகளை மார்பிற்கு குறுக்காக கட்டி இருந்தான். அதற்குக் கீழே செதுக்கியது போன்ற வயிறு இறுகி இருந்தது. இடுப்பிலே கச்சத்தைத் தவிர வேறு உடை இல்லை. அவனது தொடைகள் தூண் போல நிலைத்திருந்தன. அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை. அவன் அந்தரங்கமோ அலுத்திருந்தது.

துச்சாதனன். கர்ணன். மாமா. தம்பியர். லட்சுமணன். துருமசேனன். மைந்தர். ஜயத்ரதன். பிதாமகர்.

துரியோதனன் அரைக்கண்ணால் சுற்றி இருந்த அனைவரையும் பார்த்தான்.

என் மனதில் என்னவெல்லாம் தோன்றும் என்று என்னை விட இந்தக் கண்ணனே அறிவான். இவனால்தான் இந்தத் தோல்வியே. முகத்தில் வழக்கமான புன்னகை. 18 நாட்களாக அதே மாறாத புன்னகை. சிசுபாலனின் மீது ஆழியை ஏவும்போதும் இதே புன்னகைதான். இத்தனை நாள் கடும் போருக்குப் பிறகும் இவன் உடையில் சிறு மாசும் இல்லை. அதே அழகிய வெண்பட்டாடை. தலையில் மயில்பீலி. அலங்காரம் செய்து கொள்ள இவனுக்கு மட்டும் எங்கே நேரம் கிடைக்கிறது? லட்சுமணனும் இப்படித்தான், உடையில் சிறு அழுக்கும் பட பொறுக்கமாட்டான்.

அர்ஜுனன் கண்ணனையே பக்திப் பரவசத்துடன் நோக்கிக் கொண்டிருந்தான். பேசாமல் இவன் கண்ணனுக்கு அடிமையாக இருக்கலாம், சொந்த அறிவே கிடையாது. உடல் மொழியில் சோர்வும் குற்ற உணர்வும் தெரிந்தது. அது சரி யாராவது ஒருவரையாவது நேர்மையாக வென்றிருந்தால்தானே!. ஜயத்ரதன். பூரிசிரவஸ். கர்ணன். இவனுக்கும் கர்ணனின் மூக்குதான்.

சகதேவன் எங்கோ வெறித்துக்கொண்டிருந்தான். தான் பீமனைத் தவிர்த்து விடுவேனோ என்ற அச்சம் அவன் முகத்தில் தெரிந்தது. ஐவரில் அவன் மட்டுமே அறிவுடையவன். நம் பக்கம் விகர்ணன் போல.

நகுலன் கண்களில் மட்டுமே சினேகம் தெரிந்தது. ஐவரில் ஆசைகள் அற்றவன் அவனே. அவன் காதோரம் ஓடி இருக்கும் நரை கூட அவனுக்கு அழகாகவே இருந்தது. துச்சாதனனுக்கும் அதே போல நரை ஓடும் காதோர முடி. இப்போதும் செதுக்கியது போலிருக்கும் தன் உடலின் அழகு மட்டுமே இந்த நகுலன் கண்களுக்கு புலப்பட்டுக் கொண்டிருக்கும். நகுலன் தன்னிச்சையாக தண்ணீரைப் பார்த்து தன் தலைமுடியை ஒதுக்கிக் கொள்ள, துரியோதனன் தன் புன்னகை வெளிவராமல் அடக்கிக் கொண்டான். லட்சுமணனும் இப்படித்தான், தன் அலங்காரம் சற்று குறைந்தாலும் சகிக்க மாட்டான், உடனே திருத்திக் கொள்வான்.

யுதிஷ்டிரன் பெரும் சாதனை புரிந்துவிட்ட மாவீரன் போல முகமெங்கும் வழியும் பெருமிதத்தோடு எங்கோ வெறித்துக் கொண்டிருந்தான். பெருமிதத்திற்கு என்ன இருக்கிறது மூடா! வழக்கம் போல் எதிராளி வெற்றி பெற வாய்ப்பல்லவா அளித்திருக்கிறாய்?

அறத்தின் வழியில் நடக்க வேண்டியதுதான் யுதிஷ்டிரா, அதற்காக எனக்கு எத்தனைதான் வாய்ப்பு தருவாய்? அறமும் அறிவும் விரோதிகள் அல்ல, அறவழியிலும் அறிவோடு நடக்கலாம். இதை எப்போதுதான் உணரப் போகிறாய்? கண்ணனும் பீமனும் அர்ஜுனனும் இல்லை என்றால் – இந்த பீமார்ஜுனர்களைக் கூட சமாளித்துவிடலாம், கண்ணன் ஒருவன் இல்லை என்றால் நீ எந்தக் காலத்திலும் வெல்ல முடியாது.

ஐவரில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து போரிடு, உனக்கு விருப்பமான ஆயுதத்தை நீ தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்கிறாய். கதைப் போரில் பல ஆண்டுகளாக கடும்பயிற்சி எடுத்திருக்கிறேன். பீமனால் கூட என்னை வெல்ல முடியாது. கதையையும் உன்னையும் தேர்ந்தெடுத்தால் நீ என்ன செய்வாய்?

யுதிஷ்டிரன் துரியோதனனின் பார்வையை உணர்ந்தான். அவன் முகம் மாறியது. அவன் உடல்மொழியில் அச்சம் தெரிந்தது. துரியோதனின் கண்களைப் பார்க்க முடியாமல் பூமியை நோக்கினான். மூடனுக்கு இப்போதுதான் தன்னைத் தேர்ந்தெடுத்துவிடுவானோ என்று தோன்றி இருக்கும்.

மூடத்தனத்துக்கும் ஒரு எல்லை வேண்டும் யுதிஷ்டிரா! நாட்டை வைத்து சூதாடுவது எல்லாம் ஏதோ சூதர் பாடலில் யாரோ நளனாமே, அவனைப் பற்றி பாடிக் கேட்டதுதான். எந்த அரசன் தன் நாட்டை பகடை மேல் வைப்பான், உன் ஒருவனைத் தவிர? சரி நாட்டை எல்லாம் இழந்தாய், அத்தோடு எழுந்து போயிருக்க வேண்டியதுதானே? திராவிடத்திலோ, காமரூபத்துக்கு அப்பாலோ, யவன நாட்டிலோ உன் தம்பியர் துணையோடு புதிய அரசு ஒன்றை உருவாக்கி இருக்கலாமே? சகதேவனைப் பணயம் வைப்பானேன்! அவனைப் பணயம் வைத்த பிறகு நான் அறவழித் திலகம், எனக்கு என் தம்பியர் யாவரும் சமமே என்று நிரூபிக்க எல்லாரையும் பணயம் வைக்க வேண்டியதாயிற்று. பிறகு உன்னையும். பிறகு அவளையும். இப்போது படை இழந்து துணைவரை இழந்து ஏறக்குறைய தனி ஆளாக இருக்கும் எனக்கு சுலபமாக வெல்ல வாய்ப்பு தருகிறாய்.

ஆனால் இனி இவர்களை வென்றால் என்ன, முடி சூட்டிக் கொண்டால் என்ன? அசலையையும் விருஷாலியையும் துச்சளையையும் இனி ஏறெடுத்துப் பார்க்க முடியுமா?

மற்போரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இவன் துச்சனின் மார்பைப் பிளந்தது போல் இவன் மார்பை என் கைகளாலேயே பிளந்து இவன் ரத்தத்தை இவர்கள் முன்னிலையிலேயே குடிக்க வேண்டும்.

துரியோதனன் பீமனைப் பார்த்தான். பீமனின் உதட்டோரத்தில் இளக்காரம் தெரிந்தது. சித்ரன். உபசித்ரன். சாருசித்ரன். சித்ராயுதன். சித்ராட்சன். சித்ரகுண்டலன். சித்ராங்கன். சித்ரசேனன். சித்ரவர்மன். அய்யோ பேரைச் சொல்லியே தீரவில்லையே! இவனை…

ஒன்று நன்றாகத் தெரிகிறது. இவன் கையில் பழைய சக்தி இல்லை. 13 ஆண்டுகளாக நல்ல உணவு இல்லாததின் குறையோ? இதை எப்படி உணராமல் போனேன்? முதல் நாளே இவனைத் தேடிச் சென்று போரிட்டிருந்தால் போர் வேறு வழியில் சென்றிருக்குமோ?

18 நாளில் ஒரு முறை கூட இவனோடு நேருக்கு நேர் கதைப்போரிடவில்லை! போரிடச் செல்லும்போதெல்லாம் இவன் ஏதாவது ஒரு தம்பியைக் கொன்றுவிடுகிறான். மன உளைச்சலில் முழு வீச்சோடு போரிட முடிவதில்லை, யாராவது வந்து பின்னுக்கு இழுத்துச் சென்று விடுகிறார்கள். பேர்க் குழப்பத்தால் எப்போதும் பேரைச் சொல்லி அழைக்காமல் தான் உட்பட அனைவராலும் மூத்தவனே என்றே அழைக்கப்படும் கர்ணன். வில்லை வளைக்க வராது, ஆனால் பேர் மட்டும் தனுர்தரன். கோபமே வராத சாந்தமூர்த்தி ரௌத்ரகர்மன். தேவையே  இல்லாமல் பொய் சொல்வதால் அசத்தியசந்தன் என்று அழைக்கப்படும் சத்தியசந்தன். பாம்பைக் கண்டால் அலறி அடித்துக் கொண்டு ஓடும் நாகதத்தன்.

பீமனோடுதான் போரிட வேண்டும். உண்மையில் இவனால் எனக்கு எதிராக மூன்று நாழிகைக்கு மேல் நிற்க முடியாது. 13 வருஷ வெறி ஆரம்பத்தில் வெளிப்படத்தான் செய்யும், அதை தடுத்து நின்றுவிட்டால் பிறகு சுலபமாக வென்றுவிடலாம். இவன் விதிகளை எல்லாம் மதிக்கமாட்டான், என் தொடையை உடைக்கத்தான் பார்ப்பான்.  தொடையை மூன்று நாழிகை காத்துக் கொண்டால் போதும், பிறகு வெற்றிதான். ஆனால் வென்று என்ன செய்ய? துர்மதன். துர்முகன். துர்விதன். துர்ஜயன். துர்தரன்.

ஆஹா பாஞ்சாலியை இந்தத் தொடை மேல் உட்காரச் சொன்னத் தருணம்! இன்று நினைத்தாலும் மார்பு விரிகிறது, இனி மேல் இந்தப் பாண்டவர்கள் வென்றால்தான் என்ன, அந்தத் தருணம் இல்லாமல் போய்விடுமா? விகர்ணன் நியாயத்தைப் பேசவும் தயங்க மாட்டான், எனக்காக உயிர் கொடுக்கவும் தயங்கவில்லை.

எண்ணம் எப்போது தோன்றியது, வார்த்தை எப்போது வெளிவந்தது என்றே தெரியவில்லை. துரியோதனன் “பீமன். கதை” என்று முனகினான். பீமன் முகத்தில் இருந்த அத்தனை உணர்ச்சிகளும் மறைந்தன. சகதேவன் கண்ணில் அச்சம் ஒழிந்தது. யுதிஷ்டிரன் கண்ணில் இருந்த அச்சம் ஒரு கணம் மறைந்து மீண்டும் தோன்றியது. துரியோதனன் அது சரி, தன்னை தேர்ந்தெடுக்கவில்லை என்ற நிம்மதி, பீமனுக்கு என்னாகுமோ என்ற பயம், என்ன இருந்தாலும் பீமன்தானே செல்லப் பிள்ளை என்று எண்ணிக் கொண்டான். பீமரதன், பீமவேகன், பீமபலன், பீமவிக்ரன் நால்வருக்கும் முழுப் பேரை வைத்து அழைத்தால் கோபம் வந்துவிடும்; ரதன், வேகன், பலன், விக்ரன் என்றுதான் அழைக்க வேண்டும்.

பீமன் தன் கதையை எடுத்துக் கொண்டு களத்திற்குள் பாய்ந்தான். துரியோதனனோ மெதுவாக கொஞ்சம் புழுதியை எடுத்து தன் கைகளில் பூசிக் கொண்டான். கதையை எடுத்து இரண்டு முறை சுழற்றிப் பார்த்துக் கொண்டான். நாடும் வேண்டாம் மண்ணும் வேண்டாம். இவனைக் கொல்வேன். அது போதும். அப்புறம் காட்டுக்கு போய்விடுவேன். இந்த யுதிஷ்டிரனே பெண்களின் சோக முகங்களைப் பார்த்துக் கொண்டு அரசாளட்டும். உக்ரசிரவஸ். உக்ரசேனன். உக்ராயுதன். உக்ரசாயி.

பீமன் பொறுமையை இழந்து கொண்டிருந்தான். இன்னும் கொஞ்சம் தாமதப்படுத்த வேண்டும். துரியோதனன் பலராமரிடம் சென்று வணங்கினான். பலராமர் அவன் தலையைத் தொட்டு ஆசீர்வதித்தார். பிறகு திரும்பி கிருஷ்ணனிடம் குருவணக்கம் என்ற முறைமை பீமனுக்கு ஏன் தெரியவில்லை என்று முனகினார். தானே முன் வந்து கதைப் போரின் விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும், இடுப்புக்கு கீழே கதை பிரயோகிக்கப்படக் கூடாது என்று அறிவித்தார். வெறியில் பீமன் தன் சபதத்தை மறந்து போக இருந்த சின்ன வாய்ப்பும் போய்விட்டது, இவரே நினைவுபடுத்துகிறார். கிருஷ்ணனின் முகத்தில் புன்னகை மாறவில்லை.

18 நாளும் என்ன நடந்தது என்று தெரியாதா உங்களுக்கு? விதிகளைக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தால், இவர்கள் வெல்வது எப்படி? பீமன் ஒளிந்து கொண்டிருப்பான், நான் தேடி வந்திருப்பேன் குருநாதரே! என் தொடையைப் பிளந்துயிர் மாய்ப்பேன் என்று இவன் சூளுரைத்திருப்பது மறந்துவிட்டதா? இல்லை துச்சாதனனின் மார்பைப் பிளந்து ரத்தத்தைக் குடித்ததை அறிய மாட்டீர்களா? துர்தர்ஷன். துர்மர்ஷன். துர்விமோசனன்.துர்விஷாஹன்.

கண்ணன் அப்படியே திரும்பி பீமனைப் பார்த்தான். பீமனின் உடல் மொழியில் நிதானம் வந்தது. அவன் கண்கள் கூர்மை கொண்டன. தாமதித்து அவனை கொஞ்சம் நிலை பெயர வைத்தது வீணாகிவிட்டது, மீண்டும் சமன்நிலைக்கு வந்துவிட்டான் என்று துரியோதனன் உணர்ந்து கொண்டான். அவன் மனதில் மீண்டும் உத்திகள் மாறின. துச்சலன். துச்சகன்.

கதையோடு பீமன் மீது பாய்ந்தான். பீமன் அதை எதிர்பார்க்கவில்லை, தற்காப்பு போரில்தான் துரியோதனன் ஆரம்பிப்பான் என்று நினைத்திருந்தான். கொஞ்சம் பின்வாங்கினான். சுபாகு. சுஹஸ்தன். சுலோசனன். சுனபன். சுஷேணன். சுவர்மன். சுவர்ச்சஸன்.  சுவகன். ஆக்ரோஷம் அதிகரித்தது. மீண்டும் பாய்ந்தான். பீமன் தடுமாறினான்.

பலராமர் “என்ன பீமனுக்கு பயிற்சி இல்லையா? முதல் நொடியிலேயே தடுமாறுகிறானே?” என்றார். கண்ணன் தன் பார்வையை திருப்பவே இல்லை. ஆனால் அந்தக் கேள்வி பீமனை சுதாரிக்க வைத்தது. கதையை தரையோடு களத்தின் எதிர்முனைக்கு உருட்டி எறிந்தான். ஒரு கையை தரையில் ஊன்றி குரங்கு போல கதை இருந்த இடத்துக்கு தாவினான். துரியோதனனின் கதை பீமன் இருந்த இடத்தை விசையோடு அறைந்தது. பீமன் கீழே இருந்த கதையை எடுத்துக் கொண்டு மீண்டும் நிலைத்து நின்றான். விந்தானுவிந்தர்கள் இப்படித்தான் அரசவையில் கூட குரங்கு வேலை செய்வார்கள். துச்சன் அதட்டிக் கொண்டே இருப்பான்.

பீமன் இடத்தை விட்டு நகரவில்லை. முழங்கால்களை லேசாக வளைத்துக் காத்திருந்தான். எச்சரிக்கையாக இருக்கிறான், அதிரடித் தாக்குதல் பயன்படாது. அவனுக்கு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள நேரமும் கொடுக்கக் கூடாது. நந்த உபநந்தர்கள். துரியோதனன் தன் தொடையைத் தட்டினான்.

பீமன் ஆக்ரோஷத்தோடு பாய்ந்தான். யுதிஷ்டிரன் களத்திலிருந்து தன் கண்களை அகற்றி எங்கோ பார்த்தான். ஆனால் அவன் உடலின் ஒவ்வொரு பாகமும் கண்ணாக மாறி துரியோதனனின் தொடையைப் பார்த்துக் கொண்டிருந்தது. பலராமரின் புருவம் உயர்ந்தது.

துரியோதனன் வெகு லாவகமாக கதையின் பாதையிலிருந்து விலகிக் கொண்டான். தன்னைத் தாண்டிச் சென்ற பீமனின் தோளில் அடித்தான். ஆனால் பீமன் கால் தடுமாற, இலக்கு நகர்ந்துவிட்டதால் கதை அவன் தோளை வெறுமனே உரசிச் சென்றது.

ஜலகந்தன். ஜராசந்தன். குந்ததரன். குந்தாசி. குந்தபேதி. துரியோதனன் வெறி பிடித்தவன் போல பீமனைத் தாக்கினான். பீமன் சுழன்று சுழன்று தாக்குதலைத் தடுத்தான். ஐந்து முறை தடுத்த பிறகு எதிர் திசையில் சுழன்று வந்து துரியோதனனை அடித்தான். இத்தனை வலுவான அடியை துரியோதனன் எதிர்பார்க்கவில்லை. கதையால் தடுத்துக் கொண்டாலும் அவன் பின்னடைய நேர்ந்தது. பலராமர் கையைக் கொட்டி ஆர்ப்பரித்தார்.

கவனம். இவனைக் குறைத்து எடை போட முடியாது. பயிற்சிக் குறைவு இருக்கலாம், ஆனால் வெறி அதிகமாக இருக்கும். இவனைக் களைப்படையச் செய்ய வேண்டும். தற்காப்புப் போர், ஆனால் அவனை அங்கும் இங்கும் குதிக்கச் செய்ய வேண்டும். அயோபாகு, மஹாபாகு, சுபாகு, தீர்க்கபாகுவின் பழி.

துரியோதனன் பின்னோக்கி நகர்ந்தான். பீமன் புரியாமல் அவனை நோக்கினான். துரியோதனன் மேலும் பின்னோக்கி நகர்ந்தான். பீமனுக்கு இன்னும் புரியவில்லை என்றாலும் தான் முன்னேறித் தாக்க ஆரம்பித்தான். துரியோதனன் பீமனைத் தடுக்க மட்டுமே செய்தான். அதுவும் அவ்வப்போது வலுக் குறைந்த தடுத்தல், துரியோதனன் கதை பீமன் கதையோடு நிலை நிற்காமல் கொஞ்சம் பின்னே சென்றது. துரியோதனன் களத்தின் எல்லைக்கே பின்வாங்கினான். பீமனுக்கு உற்சாகம் ஏறியது. யுதிஷ்டிரன் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. கிருஷ்ணனிடம் பீமன் வெகு விரைவில் துரியோதனனைத் தளர வைத்துவிட்டானே என்று சொன்னது துரியோதனனுக்குக் கேட்டது. கிருஷ்ணன் முகத்தின் புன்னகை மாறவே இல்லை.

ஆதித்யகேது. ஊர்ணநாபன். பூரிவலன். பாவசி. பாஷி. அபயன். பலகி. கவசி. நிஷாங்கி. ப்ரமதி. திடீரென்று துரியோதனன் பீமனின் வலது கையைத் தாக்கினான். தன்னிச்சையாக பீமன் கதையோடு கையை பின்னிழுக்க ஒரு சிறு திறப்பு ஏற்பட்டது. துரியோதனன் அந்தத் திறப்பின் வழியாக களத்தின் மையத்துக்கு சென்றுவிட்டான். மனதில் இருந்த புன்னகை வெளித்தெரியாமல் முகத்தை இறுக்கிக் கொண்டு திரும்பி பீமனை நோக்கினான். பலராமர் மீண்டும் கையைத் தட்டி ஆர்ப்பரித்தார்.

சதஸ். வத்வேகன். ஜயத்சேனன். ஸ்ருதாவன். ஸ்ருதந்தன். அக்ரயயி. பலவர்தனன். திருதரதஸ்ரயன். கிராதன். சகன். பீமனுக்கு தன் ஆட்டம் புரிந்து விடக் கூடாது. இந்த முறை களத்தின் மையத்தை விட்டு நகராமல் பீமனின் தாக்குதல்களைத் தடுத்தான். ஆனால் முழுவதும் தற்காப்புப் போர்தான். தானாக முன்னேறி பீமனை அடிக்க முற்படவில்லை.

பீமன் சோர்வடைய ஆரம்பித்திருந்தான். துரியோதனன் தானும் களைப்படைந்தது போல கதையை பூமியில் ஒரு கணம் ஊன்றினான். பீமன் வாய்ப்பை பயன்படுத்தி துரியோதனனின் தலையைத் தாக்கினான். ஊன்றி இருந்த கதை கண்ணிமைக்கும் நேரத்தில் மேலெழுந்து பீமனின் கதையை விசையோடு தடுத்தது. பீமன் நிலை தடுமாறி விழப்போனவன் சமாளித்து தன்னிச்சையாக இடப்பக்கம் மூன்றடி தள்ளி குதித்தான். அவன் நின்றிருந்த இடத்தில் துரியோதனனின் கதை பூமியை அறைந்தது. சகதேவன் நகுலனின் கையை இறுகப் பிடித்துக் கொண்டான்.

கிருஷ்ணன் தன் இடது தொடை மீது ஆள்காட்டி விரலால் கோடு போட்டான். பீமனின் ஓரக்கண்ணில் அது தெளிவாகத் தெரிந்தது. அவன் அகக்கண்ணில் சபாமண்டபமும் தெரிந்தது. விரைந்து துரியோதனனின் இடது தொடையைத் தாக்கினான். வீர்யாவன். அலோலூபன். குண்டதரன். சலன். சகன். விக்தனன். துரியோதனனின் தொடைக்கு முன் அவன் கதை காவலாக வந்து நின்றது, பீமனின் கதை அதைத் தாண்ட முடியவில்லை.

பலராமர் கையை உயர்த்தி கத்தினார், ஆனால் அது வெறும் கூச்சலாகத்தான் இருந்தது, வார்த்தைகள் வரவில்லை. கிருஷ்ணன் அவர் தோளில் தன் கையை வைத்து அழுத்தினான். அவர் மெதுவாக அடங்கினார்.

பீமன் மீண்டும் மீண்டும் துரியோதனனின் இடது தொடையைத் தாக்கினான். ஆனால் ஒவ்வொரு முறையும் துரியோதனனின் கதை அவனைத் தடுத்தது. பீமன் கை சிறிது தளர்ந்தபோது துரியோதனன் அவன் வலக்கையை அடித்தான். பீமன் நகர்ந்தாலும் கதையின் பூண் அவனது கையில் மேல் பலமாகப் பட்டது. பீமனின் கை அதற்குப் பிறகு சற்று சளைத்த மாதிரி இருந்தது.

யுதிஷ்டிரன் போரைப் பார்க்க முடியாமல் எங்கோ தொலைவில் நோக்கினான். சகதேவனும் நகுலனும் தங்கள் இறுகப் பற்றிய கைகளை விடவே இல்லை. கிருஷ்ணன் முகத்திலும் கவலை தெரிய ஆரம்பித்தது. சற்றும் கவலை இல்லாமல் இருந்தவன் அர்ஜுனன் ஒருவனே. அவன் கண் களத்திலும் மனம் கிருஷ்ணனிடமும் இருந்தது.

இன்னும் ஒரு நாழிகை போர் புரிந்தால் போதும், இவனை வென்றுவிடலாம். ஆனால்; அசலை. துச்சளை. விருஷாலி. அன்னை. தந்தை. இவர்கள் முகத்தில் இனி எப்படி விழிக்க? இவனைக் கொன்று அரியணை ஏறி தம்பியரும் கர்ணனும் துச்சாதனனும் பீஷ்மரும் துரோணரும் இல்லாத சபையில் நான் என்ன செய்யப் போகிறேன்?

துரியோதனன் மீண்டும் தன் இடது தொடையை நோக்கி விரைந்து வந்த கதையை நோக்கினான். தன்னிச்சையாக தடுக்கச் சென்ற தன் கை வீச்சை குறுக்கிக் கொண்டான்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “வெற்றி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.