டச்சு ஆங்கில இந்திய நாகரீகங்களின் வணிகவியம்

தானம் போகோ நாச: திஸ்த்ரோ கதயோ பவந்தி வித்தஸ்ய
யோ ந ததாதி ந புங்க்தே தஸ்ய த்ருதியா கதிர்பவதி

ஆக்கும், காக்கும், அழியும் என்பவை செல்வத்தின் முக்குணங்கள்.
ஆக்கவோ, காக்கவோ பயன்படா செல்வம் அழியும்.

நன்றி: பிரிடிஷ் லைப்ரரி

ஓவியர் ஸ்பிரிடியோன் ரோமா(Spiridione Roma)  “கிழக்கு அதன் செல்வங்களை பிரிட்டானியாவிற்கு வழங்குகிறது (The East offering its riches to Britannia)” என்னும் பிரமாண்டமான ஓவியம் லண்டனில் உள்ளது.  1778ல் வரையப்பட்டது. இது இந்திய வம்சாவளியினர் காண வேண்டிய ஓவியம். இன்றைக்கு லண்டனில்  அயலக, காமன்வெல்த், மேம்பாட்டு(Foreign, Commonwealth and Development Office) அலுவலகத்தின் சுவரில் தொங்கிக் கொண்டுள்ளது.  பத்து அடி அகலமும், 7 அடி உயரமும் உடைய பெரிய ஓவியம்.

இந்த ஓவியத்தில் கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிக கப்பல் தெரிகின்றது. அதில் கிழக்கிந்திய நிறுவனத்தின் கொடி பறக்கின்றது. இந்தியாவினையும், சீனாவினை பிரதிநிதித்துவம் செய்யும் இரண்டு பெண்கள் பிரிட்டானியாவிற்கு பொருட்களை வழங்க வரிசையில் நிற்கின்றனர். இந்தியா என்னும் பெண் முத்துக்களை அளிக்கிறது, அதை பிரிட்டானியா ஆவலுடன் எடுத்துக்கொள்கிறார். சீனா என்னும் பெண்  மிங் குவளையை வழங்குகிறது. அவளுக்குப் பின்னால் இருக்கும் நிழல் உருவங்கள் பருத்தி மூட்டைகளைத் தாங்கி நிற்கின்றன. “சொல் திறன், திறமை ” ஆகியவற்றின் ரோமானிய கடவுளான மெர்க்குரி அந்த காட்சியை மேற்பார்வையிடுகின்றார். லண்டனையும், அதன் ஆற்றலையும் குறிக்கும் வகையில் தேம்ஸ் தந்தை வடிவில்  கீழே இடதுபுறத்தில் அமர்ந்து உள்ளார்.

இந்த ஓவியத்தினைக் கண்டால்  1778ம் ஆண்டில் மேலை மரபின் பார்வையில் இந்திய நாகரீகம் ஏழ்மையில் இல்லை செல்வத்துடன் உள்ளது, தனது செல்வத்தினைப்  பணிந்து மேலை மரபுக்குக் கொடையாக அளிக்கின்றது. இந்த ஓவியம் இந்திய நாகரீகத்தின் , மேலை நாகரீகத்தின் வரலாற்றினைப் புரட்டிப் போட்ட நூற்றாண்டுகளின் வணிகவிய சாராம்சத்தினைக் காட்டும். 

மெர்க்கண்டலிசம் எனப்படும் வணிகவியம் இந்திய நாகரீகத்துக்கும், மேலை நாகரீகத்துக்கும் முக்கிய வரலாற்று நிகழ்வு.  இந்திய மரபில் திரண்டு உருவாகாத வணிகவியமும், ஆங்கில மரபில் திரண்டு உருவான வணிகவியமும் இரு நாகரிகங்களையும் காலமெனும் பரமபத விளையாட்டில் காய்களாக நகர்த்தி விளையாடியது. 

வணிகவியம் அல்லது மெர்க்கண்டலிசம் 

17 ஆம் நூற்றாண்டின் போது, ஐரோப்பாவில் அரசுகள் தங்கள் கால்களை அழுத்தமாக ஊன்றி கரங்களை உலகை நோக்கி விரித்தன, அதிகாரம் மையத்தில் குவிதல் விசை கொண்டது.  அதன் செயல்பாட்டிற்கு இரண்டு வகுப்புகள் முக்கியமானவையாக மாறின.  ஐரோப்பாவில் அக்காலத்தில் பெரும்பாலும் முடியாட்சிகளே இருந்தன. அதிகாரம் முடியாட்சியில் இருந்தே வழங்கப்பட்டது.

ஒன்று அரசு அதிகாரிகள்.  உறுதியாக அரசுகள் கால் ஊன்ற அரச நிர்வாகத்துக்கு நிறைய அரசு அதிகாரிகளை உருவாக்கியது. இரண்டாவதாக அரசு புதிய நிதியை உருவாக்க அதன் கரங்களாக புதிய  வணிகர்கள் உருவாகிக் கொண்டே இருந்தார்கள்.   இந்த இரண்டு புதிய வகுப்புகளால்  தயாரிக்கப்பட்ட பல்வேறு துண்டுப் பிரசுரங்கள்,  கட்டுரைகளின் தொகுப்பிலிருந்து  பொருளாதாரத்தில் பல புதிய கொள்கைகள் உருவாயின. பொருளாதாரத்தினை அச்சாகக் கொண்டு ராணுவ கொள்கை, நகர நிர்மாணக் கொள்கை, தொழில் கொள்கை, மக்கள் வாழ்க்கைத் தரம் சார்ந்த கொள்கைகள் சுழன்றன. 

வணிகர்கள் ஆங்கில/டச்சு நாகரீகத்தில் முதன்மையான பொருளாதார விசையாக எழுந்தனர். அந்த விசை உருவாக்கிய பொருளாதாரக் கருத்துக்கள் வணிகவியம் எனப்பட்டது.  

அதே நேரம் முதலாளித்துவ வர்க்கம் சிறிய அளவில் இருந்த பிரான்ஸ் , ஜெர்மனியில், பொருளாதார வாதங்கள் முதன்மையாக அரச அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டன. இதன் விளைவாக, பிரெஞ்சு வணிகவியம் பொதுவாக “கோல்பெர்டிசம் (Colbertism)” என்று அழைக்கப்பட்டது. பிரெஞ்சு நிதி அமைச்சரான ஜீன்-பாப்டிஸ்ட் கோல்பர்ட் பெயரிடப்பட்டது. ஜெர்மன் வணிகவியம் “கேமரலிசம் (Cameralism)” என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மன் அரசவையின் பெயரில் இருந்து இந்த பெயர் முளைத்தது. 

வணிகவியத்தின் இயங்கு முறை 

1. நாடு மற்ற நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ததை விட (வாங்கிய) அதிகமான பொருட்களை ஏற்றுமதி செய்ய (விற்க) விரும்பியது. இதன் மூலம் அதிகப் பணம் நாட்டிற்கு வரும், குறைந்த பணம் வெளியில் போகும்.

2. பிற நாடுகளுக்கு விற்கக்கூடிய பொருட்களை உற்பத்தி செய்ய உள்நாட்டுத் தொழில்கள் , வணிகங்களை அரசாங்கம் ஊக்குவித்தது. இதனால் அதிகப் பணம் வந்தது.

3. வெளிநாட்டுப் பொருட்களுக்கு அதிக வரிகளை (கட்டணங்கள் என அழைக்கப்படும்) வசூலிப்பதன் மூலம் மற்ற நாடுகளிலிருந்து இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் முயன்றது. இதனால் பணம் நாட்டை விட்டு வெளியேறுவது தடுக்கப்பட்டது.

4. தங்கள் பொருட்களுக்கான மூலப்பொருட்கள், சந்தைகளைப் பாதுகாக்க உலகின் பிற பகுதிகளில் காலனிகளை நிறுவ நாடு முயன்றது. இந்த வழியில், அவர்கள் வளங்களுக்காக அல்லது வாங்குபவர்களுக்காக மற்ற நாடுகளை நம்பியிருக்க வேண்டியதில்லை.

5. தங்கம், வெள்ளி (விலைமதிப்பற்ற உலோகங்கள்)  திரள்வது தேசியச் செல்வம் மற்றும் அதிகாரத்தின் அடையாளமாகப் பார்க்கப்பட்டது. குவிப்பதன் வழியே  நாடுகள் மற்றவர்களை விட அதிகமாக இருக்க விரும்பின.

டச்சு வணிகவியத்தின் வரலாற்று பின்னனி

தற்போதைய நெதர்லாந்து, பெல்ஜியம், லக்சம்பர்க் ஆகிய நாடுகள் கிட்டத்தட்டக் கடல் மட்டத்திலோ அல்லது கடல் மட்டத்துக்கு கீழேயோ உள்ளன. கடல் மட்டத்துக்குத் தாழ்வாக இருப்பதால் “low lands” or “nether lands”  எனப் பெயர் வந்தது. இவை துவக்கத்தில் சாதாரணக் கிராமங்களைப் போன்றவைதான். இவர்கள்தான் மெர்க்கண்டலிசம் என்னும் விசை பெரிதாக வளர காரணமானவர்கள்.

16 ஆம் நூற்றாண்டில் “low countries”  நிலப்பரப்பு ஸ்பானிஷ் ஹப்ஸ்பர்க்ஸின் ஆட்சியின் கீழ் இருந்தது. 1568 ஆம் ஆண்டில், முதலாம் ஆரஞ்சு வில்லியம் அவர்களின் தலைமையில் ஸ்பானிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகக் கிளர்ச்சி தொடங்கியது. இது பல ஆண்டுகள் தொடர்ந்து நீடித்தது. அன்றைய “low-counties” என்பதில் தெற்குப் பகுதியில் இருந்தவர்கள் வடக்கு நோக்கி இடம் பெயர்ந்தனர்.  

டச்சு நகரங்கள் ஸ்பானிய அதிகாரத்திலிருந்து விடுதலை பெறத் தொடர்ந்து 1568-1648 வரை போரில் ஈடுபட்டன.  1580 இல் ஸ்பானிய, போர்த்துகீசியச் சிம்மாசனங்கள் ஒரே ஆட்சியாளரின் கீழ் இணைக்கப்பட்டது. பின்னர் ஐக்கிய டச்சு நகரங்கள் தென்னமெரிக்கக் கண்ட கடற்கரை தொடங்கி ஆசியா கண்டம் வரை பல சந்தர்ப்பங்களில் போர்த்துக்கீசியர்களுடன் மோதினர். குறிப்பாக தென்னிந்தியாவிலும், இந்தோனேசியாவின்  “மசாலா தீவுகளிலும்”, எல்மினா, மலாக்கா, கொழும்பு உள்ளிட்ட பல முக்கியமான துறைமுகங்களிலிருந்து போர்த்துக்கீசியர்களை விரட்டியடித்தனர். தங்களது சொந்த வர்த்தக மேலாதிக்கத்தை நிறுவுவதில் அவர்கள் வெற்றி பெற்றனர். 1624 ஆம் ஆண்டில், அவர்கள் தென்னாப்பிரிக்காவில் கேப் டவுனை (1652) நிறுவினர். வட அமெரிக்காவில் நியூ ஆம்ஸ்டர்டாமை (1624, இப்போது நியூயார்க் என்று அழைக்கப்படுகிறது) நிறுவினர்.

1500களின் இறுதியில் ஸ்பானிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியின் பகுதியாக 1574ல் தங்களுக்கென தனியாக நிறுவனங்களையும், அடையாளங்களையும் அறிவிக்கத் தொடங்கியது.  அவர்கள் லைடன்(Leiden) நகரில் 1575ல் ஒரு பல்கலைக்கழகத்தை நிறுவினர். 

இலக்கணம், சொல்லாட்சி, தர்க்கம், இசை, மதக்கல்வி போன்றவை கற்றுக் கொள்ள லைடன் உதவியது. பிரபுக்களின் வாரிசுகள் , பணக்கார வணிகக் குடும்பங்களின் வாரிசுகள், மதகுருமார்கள் , மதம் சம்பந்த தொழில் உடையவர்கள், பிரபுக்களின் ஆதரவு பெற்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் போன்றோர் ஸ்பானிய ஆட்சிக்கு உட்பட்ட லியூவெனில் (Leuven)  படித்துக் கொண்டிருந்தார்கள். லைடன் நகரத்தில் பல்கலைக்கழகம் வந்தது பெரும் மாற்றாக இருந்தது.

லைடன் பல்கலைக்கழகம் 1580ம் ஆண்டே கணிதத்திற்கான பேராசிரியராக ருடால்ஃப் ஸ்னெலை நியமித்தது. டச்சுக்காரர்கள் நடைமுறை கணிதத்தில் ஆர்வம் கொண்டிருந்தனர்.  இது ஆக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் போன்றவை தங்களுக்குத் தனிக் கணிதத்துறையை உருவாக்குவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்தது. நடைமுறை கணிதம் நோக்கிய டச்சு அறிவு அவர்களுக்கு அடுத்த நூறு ஆண்டுகளில் அவர்களது வாழ்வில் பல வழிகளில் உதவியது.

முக்கோணவியல் (Trigonometry), மடக்கைகளில் (Logarithm)  உருவான கணித நுட்பங்கள் கடல்வழி வழி செலுத்தலை (Navigation), வரைபடவியலை (Cartography) மேம்படுத்தியது. இது டச்சு வர்த்தகத்துக்குப் பெரும் உதவி செய்தது. 

எண்கணிதம் (Arithmetic) , ஆரம்பக்கால நிகழ்தகவு கோட்பாடு (Probability) போன்றவை வங்கி ,காப்பீட்டு அமைப்புகளை உருவாக்க உதவியது.  

இயலுறு தோற்றம் (Perspective) , விகிதாசாரம் (Proportion)  போன்றவற்றில் உருவான கணிதக் கருத்துக்கள் டச்சு ஓவியக் கலையை வளர்த்தது. டச்சு ஓவிய படைப்புகளின் யதார்த்தத்திற்குப் பங்களித்தது. டச்சு கட்டிட கலை மரபிலும்  நகரத் திட்டமிடல், கட்டிட வடிவமைப்பு போன்றவற்றில் கணிதக் கோட்பாடுகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த அறிவுத்தொகை நெதர்லாந்தின் பெரிய பிரபு குடும்பம், வணிகக் குடும்பத்திலிருந்து வந்ததால் அவர்கள் அறிவு நடைமுறையாதல், அரச கொள்கையாதல் ஒரு விதத்தில் ஓரளவு சாத்தியமாக இருந்தது.

அதற்குச் சிறந்த உதாரணமாக ஜோஹன் டி விட் (Johan de Witt)  வாழ்வு இருந்தது. அவரது அப்பா ஹாலந்து பிராந்தியத்தில் உள்ள ஊரின் மாநகரத்தந்தையாக இருந்தர். அந்த உயர் குடும்ப பின்னணி  டி விடின் கல்விக்கு அடித்தளமாக அமைந்தது. அவர் கணிதத்தில் சிறந்து விளங்கினார். அவர்தான் நவீனப் பகுப்பாய்வு வடிவவியல்  (Analytic Geometry)  கணிதத்தின்  முதல் பாடப்புத்தகத்தினை ( Elementa Curvarum Linearum) எழுதினார். அது பின்னாளில் நியூட்டன் போன்ற ஆங்கில அறிஞர்களுக்கே பாடப் புத்தகமாக இருந்துள்ளது.

 டி விட் காலத்தில் நெதர்லாந்து முழு நாடல்ல. அது ஐக்கிய மாகாணங்களின் (United Provinces) கூட்டமைப்பு என்ற பெயரிலிருந்தது. அந்தச் சூழலில் கூட்டமைப்பில் இருந்த ஹாலந்து பிராந்தியத்தின் ஆட்சியாளராக அவர் வந்தார்.  அவர் ஆட்சியைப் பிடித்த நேரத்தில் போர்கள் பலவற்றில் கூட்டமைப்பு  ஈடுபட்டுக் கொண்டிருந்தது. டி விட் தனது அரசியல் திறமையால்  சமாதானப் பேச்சு வார்த்தைகளை நடத்த முடிந்தது. அவர் ஆட்சிக்கு வந்ததும், குடியரசின் நிதி மற்றும் நிதிநிலை விஷயங்களைக் கையாள அவரது கணிதத் திறனைப் பயன்படுத்தினார். 

இதெல்லாம் வாசித்து டச்சுக்காரர்கள் பிரச்சனைகளே இல்லாத சொர்க்கப் பூமியில் இருந்தமையால் வளர்ந்தார்கள் எனச் சித்திரம் வர வாய்ப்புள்ளது. ஆனால் அப்படி நடக்கவில்லை. 1672 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி ஜோகன் டி விட்டும் அவரது சகோதரரும் டச்சு நாகரீகத்தின் உள்ளே நடந்த அதிகாரப் பூசலில் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டு கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார்கள். கொன்றவர்களும் டச்சுக்காரர்களே. அதையும் ஓவியமாக வரைந்து அருங்காட்சியகத்தில் வைத்துள்ளார்கள்.

நன்றி: விக்கிமீடியா

ஒரு பக்கம் அதிகாரப் பூசல் உக்கிரமாக  நடந்தாலும் தங்கள் நாட்டின் செல்வ வளத்தினை, கலைகளை, கணிதத்தினை , கடல் பலத்தினை விட்டு விடாமல் கட்டிக் காத்தார்கள். அதிகாரப் பூசல்களில் கவனம் சென்றாலும் மற்றத் துறைகளை அழித்துக் கொண்டு  கை விட்டு விடவில்லை.

டச்சு வணிகவிய பேரரசு

படம் நன்றி: https://ericrossacademic.wordpress.com/

டச்சுக்காரர்கள் உண்டாக்கிய மேம்பட்ட கப்பல் கட்டும் நுட்பங்கள் , வழிசெலுத்தல் திறமைகள் அவர்கள் போக்குவரத்து செலவுகளை வெகுவாகக் குறைத்தது. 16-17ம் நூற்றாண்டுகளில் இருந்த பிற நாகரீகங்களின்  கப்பல் குழுமங்களை விட டச்சு கப்பல் நிறுவனங்கள் கூடுதல் லாபம் ஈட்டின. ஆம்ஸ்டர்டாம் ஐரோப்பாவின் முக்கிய வர்த்தக மையமாக மாறியது, அங்குப் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு, சேமித்து வைக்கப்பட்டு, மீண்டும் ஏற்றுமதி செய்யப்பட்டன. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் (VOC) ஆசிய வர்த்தகத்தில் ஏகபோக உரிமையை வைத்திருந்தது, முதலீட்டாளர்களுக்கும் மாநிலத்திற்கும் மகத்தான லாபத்தை ஈட்டியது.  

டச்சு கப்பல்களில் நடந்த வர்த்தகம் , அந்த வர்த்தகத்தால் உருவாக்கப்பட்ட வரிவிதிப்பு வருமானம் (சுங்க வரிகள், கலால் வரிகள்)  டச்சு நாகரீக முன்னேற்றத்துக்குப் பெரிதும் உதவியது. 

உலகின் முதல் பங்குச் சந்தையான ஆம்ஸ்டர்டாம் பங்குச் சந்தை  போன்ற புதிய நிதி திரட்டும் வழிகளை உருவாக்கி வர்த்தகத்தில் உள்ள நிதி செலவுகளைக் குறைத்தார்கள். 1600களில் வரையப்பட்ட பங்குச் சந்தையின் செதுக்கு ஓவியம் கீழே உள்ளது.  இது 1602 இல் நிறுவப்பட்டது. இது உலகின் பழமையான நவீன பங்குச் சந்தையாகக் கருதப்படுகிறது. டச்சு கிழக்கிந்திய கம்பெனியின் வர்த்தகப் பங்குகளுக்காக குறிப்பாக உருவாக்கப்பட்டது. தொடர் பத்திர வர்த்தகம் (continuous trade) , விருப்பத்தேர்வுகள் (options) போன்ற பல நவீன பங்குச் சந்தைக் கருத்துக்களை முன்னோடியாகக் கொண்டிருந்தது

நன்றி: விக்கிமீடியா

மற்ற ஐரோப்பியச் சக்திகளுடன் ஒப்பிடுகையில், டச்சுக்காரர்களுக்கு மலிவான விலையில் தொழிலாளர் சக்தி கிடைத்தது. இதற்கு முக்கிய காரணம் தெற்கு டச்சு பகுதிகளிலிருந்து வடக்குப் பகுதிக்கு நடந்த தொடர் குடியேற்றம் என வரலாற்றாய்வாளர்கள் சொல்கின்றார்கள்.

டச்சு நாகரீகத்தின் முக்கிய ஏற்றுமதிகள்

1. ஜவுளி  

2. பதப்படுத்தப்பட்ட மீன் குறிப்பாக ஹெர்ரிங்

3. பால் பொருட்கள், பாலாடைக்கட்டி மற்றும் வெண்ணெய்

4. கப்பல்கள், கடல்சார் உபகரணங்கள்

5. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

6. பீர்.

7. பீங்கான் (Delftware)

8. கண்ணாடி பொருட்கள்

9. காகிதம்

வணிகவியம் மேலோங்கும் பொழுது டச்சு நாகரீகம் அதன் வாழ்வாதாரம், அதன் செல்வம் , வேலைவாய்ப்பிற்காக வர்த்தகத்தையே பெரிதும் சார்ந்திருந்தது. டச்சு நாகரீகத்திடம் இயற்கை வளம் குறைவு. காற்றின் சக்தியை தங்கள் தொழிலுக்கு எரிபொருளாகப் பயன்படுத்தினர். காற்றினால் இயங்கும் மர ஆலையின் (Saw Mill) கண்டுபிடிப்பு இராணுவப் பாதுகாப்பிற்காகவும், வர்த்தக பரிமாற்றத்துக்கும் ஏற்ற  பெரிய கப்பல்களை உருவாக்க உதவியது. கார்னெலிஸ் கார்னெலிசூன் என்னும் டச்சு விவசாயி முதன் முதலில் காற்றினால் இயங்கும் மர ஆலையை உருவாக்கினார். 1597ல் அவருக்கு இந்த படைப்புக்கான அறிவுசார் உரிமம் (patent) வழங்கப்பட்டது. இந்த வகைக் கண்டுபிடிப்புகளின் வீரியத்தில் 17 ஆம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் 3,000 முதல் 4,000 வரையிலான காற்றாலைகளை வைத்திருந்தனர்

நன்றி: Saw mill patent drawing in the resolutions of the States of Holland, 1593

வெப்பம் இல்லாமல், சர்க்கரையைச் சுத்திகரிக்கவோ, செங்கற்களை உற்பத்தி செய்வதோ, கண்ணாடி ஊதுவதோ இயலாது. இந்தத் தொழில்களில் டச்சுக்காரர்கள் கொடிகட்டிப் பறந்தனர். இந்தத் தொழிலுக்காக டச்சு நாகரீகம் முற்றா நிலக்கரி (Peat) என்னும் எரிபொருளைப் பயன்படுத்தியது. இன்றைய நவீன யுகம் எப்படிப் பெட்ரோலையும், இயற்கை எரிவாயுவையும் சார்ந்துள்ளதோ, அது போல டச்சு நாகரீகத்துக்கு முற்றா நிலக்கரியும் (Peat), காற்றும் இருந்தது. லைடன் நகருக்கு அருகில்  முற்றா நிலக்கரி உற்பத்தி செய்யும் இடத்தின் படம் கீழே உள்ளது.

  நன்றி:  Noord-Hollands Archief

ஒரு கட்டத்தில் டச்சு ஆட்சி நாகசாகியிலிருந்து நியூ ஆம்ஸ்டர்டாம் வரை, ஆர்டிக் வட்டம் முதல் தென்னாப்பிரிக்கா வரை பரவியிருந்த பேரரசை உருவாக்கியது. சாதாரணக் கடலோடும் கிராமங்களின் தொகுப்பாக இருந்தது தன்னை மேலை உலகமே வியக்கும் வகையில் மாற்றிக்கொள்ள முடிந்தது. அதன் குடிமக்கள் அன்றைய வரலாற்றில் யாருமே கண்டிராத உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அடைந்தார்கள்.

ஆங்கில நாகரீகத்தின் புலனாய்வு

இந்த டச்சு வெற்றி அந்த நாட்டின் அண்டை வீடான ஆங்கிலேய நாகரீகத்திடம் பொறாமையையும், புதிரையும் தூண்டியது. அந்தக் கால அரசியல் பொருளாதாரம் அறிவானது  நாட்டின் செழுமை அதன் இயற்கை வளங்களால் தீர்மானிக்கப்படுகிறது என்று நம்பியது. ஆனால் சிறிய நெதர்லாந்தில் சிறிய மக்கள் தொகை, சிறிய நிலப்பரப்பு,அங்குத் தங்கம், வெள்ளி, இரும்புத் தாது, மரம் போல எதுவுமே இல்லை. ஆனால் டச்சுக்காரர்கள் இங்கிலாந்து, பிரான்ஸ் அல்லது ஸ்பெயினை விட பணக்காரர்களாக மாறிக் கொண்டிருந்தனர். இது அந்தக் காலக்கட்டத்தில் நிகழ்ந்த மோதல்களின்  போது அதிகமாக வெளிப்பட்டது. பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளின் மன்னர்கள் தங்களைத் தாங்களே திவாலாக்கும் அளவுக்குக் கையிருப்பினைக் கொண்டு செலவு செய்து ,தங்கள் குடிமக்களின் உயிரைச் சுரண்டும் அளவுக்கு வரி விதித்து  தங்கள் இராணுவம் அல்லது கடற்படையை வளர்த்தார்கள், அதேசமயம் டச்சு அரசாங்கம்  பெரிய நிலப் படைகளையும் கடற்படைகளையும் இதையெல்லாம் செய்யாமல் விரைவாகத் திரட்டினார்கள். இது பெரும் புதிரை உருவாக்கியது. 

அந்த காலத்தில் இருந்த ஆங்கில அறிஞர்கள் டச்சு புதிரை எவ்வாறு பின்பற்றுவது, தாண்டி செல்வது என்பது பற்றி பெருமளவில் விவாதித்தனர். விவாதத்தில் டச்சுக்காரர்கள் வெளிநாடுகளுடன்  “சாதகமான வர்த்தக சமநிலை (favorable balance of trade)” பேணுவதன் மூலம் தங்களது உயரிய வாழ்க்கை தரத்தினை அடைந்ததாக அடைந்ததாக முடிவு வந்தது. 

டச்சுக்காரர்கள் விலையுயர்ந்த “அதிக மதிப்புள்ள” உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்வதார்கள். அக்காலத்தில் குறிப்பாக  துணி ,கருவிகள், துப்பாக்கிகள் அந்த பட்டியலில் இருந்தது. மலிவான ‘குறைந்த மதிப்புள்ள’ கச்சாப் பொருட்களை மட்டுமே இறக்குமதி செய்வதார்கள். கம்பளி துணி நெய்ய கச்சாப்பொருள்கள், இரும்புதாது போன்றவற்றினை உதாரணமாக சொல்லலாம். இதன் விளைவாக, டச்சுக்காரர்கள் அவர்கள் இறக்குமதி செய்ததை விட அதிகமான மதிப்பை ஏற்றுமதி செய்தனர். 

பிற வெளிநாட்டினர் டச்சுப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கினர். அதன் வழியே வெளிநாட்டுப் பணம் (தங்கம் & வெள்ளி) தொடர்ந்து உறிஞ்சப்பட்டது. இதனால், டச்சுக்காரர்கள் பணக்காரர்களாக இருந்தனர் , ஆங்கிலேயர்கள், பிரஞ்சு போன்றோர் எப்பொழுதும் பணப்பற்றாக்குறையுடன் இருந்தனர்  என விளக்கப்பட்டது. 

ஆங்கில நாகரீகத்தின் வணிகவியம்

இந்தப் புலனாய்வுக்குப் பின்னர் ஆங்கில மரபு சுறுசுறுப்பாகத் தனக்கான செல்வத்தினைத் திட்டம் தீட்டியது. ஆங்கில மரபு திட்டம் தீட்டுகையில் அங்கு முழுமையான ஒற்றை அதிகாரம் உருவாகவில்லை. இன்றைக்கு நாம் கண்முன் காணும் nation-state அமைப்பு அன்று இங்கிலாந்தில் இல்லை. அரசருக்கும், பிரபுக்கள் சபைக்கும் அடிக்கடி மோதல்கள், புரோட்டஸ்டாண்ட்/கத்தோலிக்கப் பிரச்சனைகள், தேவாலயம்/அரசர் என உள்ளூர் பிரச்சனைகள் ஓராயிரம் நிகழ்ந்து கொண்டிருந்தது.  அதன் நடுவே தன்னை ஓர் உலக நாகரீகம் என உணர்ந்தமையால் இந்தச் சண்டைகள் நடுவே தனக்கான தொழில் பார்வை, செல்வம் சேர்ப்பது குறித்த பார்வையை உருவாக்கினர். எந்த வம்பு தும்பும் தங்கள் நாகரீகத்தின் செல்வத்தினைக் காலி செய்யாமல்,அதே நேரம் உள்பூசல்கள் வழியாக அதிகாரப் பகிர்வினையும் உருவாக்கிக் கொண்டனர். அதற்கு 1000 ஆண்டுகள் வேண்டுமென நினைக்கவில்லை. 17ம் நூற்றாண்டு முடிவதற்குள் தோராயமான வடிவத்தினை உருவாக்கிக் கொண்டனர்.

ஆங்கில மரபில் வணிகவிய  கொள்கை சூத்திரம் நோக்கிப் பாய்ச்சல் நிகழ்ந்தது. ஏற்றுமதிகள் அதிக மதிப்புள்ள பொருட்களாக இருந்து நிறையப் பணத்தைக் கொண்டு வர வேண்டும். இறக்குமதி செய்ய வேண்டிய பொருள்கள் தொழில்களுக்கு முற்றிலும் அவசியமான  கச்சாப்பொருள்கள், அதுவும் சொந்த நாட்டில் இல்லாத பொருள்கள் ஆக இருக்க வேண்டுமெனக் கொள்கைகளை உருவாக்கினர்.

அடுத்தகட்டமாக அரசின் நேரடிப் பங்கு தீவிரமாக இருக்க வேண்டுமெனக் கோரிக்கை வைக்கப்பட்டது. “வணிகத் தொழில் பாதுகாப்பு” என்பதை அரசாங்கக் கொள்கையின் மையப் பகுதியாக ஆக்க வேண்டும் என வணிகர்கள் கோரிக்கை எழுப்பினார்கள். ஏற்றுமதியாளர்களுக்கு மானியங்கள், இறக்குமதி மேல் பெரிய அளவின் கண்காணிப்பும் கோரினர்.

வணிகர்கள் அரசினை சாலைகள், துறைமுகள் மீது முதலீட்டினை செலுத்த வற்புறுத்தினர். ஏற்றுமதிக்கு அடித்தளமாக இவை ஊக்குவிக்கப்பட்டது. அரசாங்கத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஏகபோக வணிக உரிமைகளை கோரினர்.  பட்டய கம்பனிகள் (Charter Companies) உள்ளூரில் தேவையில்லாத போட்டியை தடுக்கும் என்று பல வணிகர்கள் நம்பினர். இது கிழக்கிந்திய கம்பனி போல கம்பனிகளின் வளர்ச்சிக்கு வித்திட்டது.

வெளிநாட்டில் ஆங்கில வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும் சர்வதேச போட்டியாளர்களைத் தடுப்பதற்கும் அரசு தனது இராஜதந்திர , இராணுவ அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டுமென கோரிக்கைகள் எழுந்தன. வெளிநாட்டு அரசாங்கங்கள் தங்கள் சந்தைகளை ஆங்கில பொருட்களுக்கு திறக்கவும், அதே நேரம் ஆங்கிலேய போட்டியாளர்களுக்கு தடை செய்யவும் ஆங்கில அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் கூடுதல் கோரிக்கைகள் எழுந்தன. 

கோரிக்கைகளின் வடிவம் ஒன்று உதாரணமாக 1623ல் இந்தோனேசியாவில் நடந்த வணிகப் பூசல் ஒன்றினைச் சொல்லலாம். அந்த ஆண்டு டச்சுக்காரர்கள் இந்தோனேஷியாவின் அம்போனில் டச்சுக் கோட்டையை ஆக்கிரமிக்கப் போவதாகக் குற்றம் சாட்டி பத்து ஆங்கிலேயர்களைச் சித்திரவதை செய்து  கொன்றனர். “அம்போனியாவில் நடந்த கொடுமைகள் (The Atrocities at Amboyna)” என்ற தலைப்பில், கிழக்கிந்திய நிறுவனம் தனது பக்கக் கதையைச் சொல்லி துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டது. அந்த பிரசுரம் இங்கிலாந்தில் டச்சுக்காரர்களுக்கு எதிரான மனநிலையை அதிகப்படுத்தியது.  டச்சுக்காரர்கள் இந்தத் துண்டுப் பிரசுரம் காரணமாக உருவான  பொதுமக்கள் சீற்றத்திலிருந்து பாதுகாப்பு வேண்டி  முதலாம் சார்லஸ் மன்னரிடம் முறையிட வேண்டியிருந்தது 

நன்றி: பிரிடிஷ் லைப்ரரி

வணிகவியம் பொதுவாக உள்நாட்டு வர்த்தகம், தொழில் , வேலைவாய்ப்பை மேம்படுத்துவதில் மட்டும் கவனம் செலுத்தவில்லை, அதன் அதிகக் கவனம் வர்த்தகத்தின் சமநிலையைத் தங்கள் நாட்டின் கஜானாவோடு இணைத்து அதைப்  பாதுகாப்பதில்தான் இருந்தது. தங்கள் நாட்டுக் கஜானாவில் தங்கம், வெள்ளி ஆகியவற்றின் தொடர்ச்சியான வருகையை உறுதி செய்வதே முதன்மை குறிக்கோளாக இருந்தது.  

ஆங்கில வணிகவியத்தினை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம். “ ஆங்கில உலோகப்பற்றினர் ( The English Bullionists)”  ஆதிக்கம் தோராயமாக 1580 களில் இருந்து 1620 வரை நீடித்தது, “பாரம்பரிய வழியினர் (Traditionalists)”  ஆதிக்கம் 1620 முதல் 1700 வரை நீடித்தது, 1680 களில் இருந்து 1750 வரை “சுதந்திர வணிக வழியினர்”  ஆதிக்கம் இருந்தது.  ஆங்கில மரபு ஏற்றுமதி, இறக்குமதி கொள்கைகள், நிலத்திலிருந்து வரும் வருவாய், தொழிலாளியின் உழைப்பிலிருந்து வரும் வருவாய், கலால் வரி, சுங்க வரி, நாட்டு மக்கள் தொகை, கடல் வணிகப் பாதைகளுக்கான செலவுகள் என ஒருங்கிணைந்த  பார்வையை உருவாக்குவது மெல்ல நிகழ்ந்தது. காலம் மாற வணிகம் விரியப் புதிய நிலங்கள்  ,புதிய வருவாய் வரப்  படிப் படியாகப் புதிய கொள்கைகளை உருவாக்கிக் கட்டி வளர்த்தனர். ஒரு கண் மூடி அமர்ந்து, கண் திறந்ததும் கொள்கைகள் வானிலிருந்து கொட்டவில்லை. மாறாக ஒட்டு மொத்த நாகரீகமும் தனது செல்வத்தினை, வளத்தினை, வாழ்க்கைத் தரத்தினை குறித்துச் சிந்தித்து ஆக்கவும், பாதுகாக்கவும் வழிகளை அலசி ஆராய்ந்து உருவாக்கினர். 

இந்திய வணிகவிய பார்வை

இதையெல்லாம் இவர்கள் புலனாய்வு செய்கையில், தங்களை மறு சீரமைப்பு செய்து கொள்கையில்  இந்திய மரபின் வணிகர்கள், கச்சாப் பொருள் உற்பத்தியாளர்களான விவசாயிகள், மதிப்புக் கூட்டிய பொருளை உற்பத்தி செய்த நெசவுத் தொழில் நிபுணர்கள்  என்ன செய்து கொண்டிருந்தார்கள்  என நமக்குக் கேள்வி வருகின்றது.

அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்னும் பெரிய உண்மை கண்ணில் நிற்கின்றது. இந்தியா போன்ற பெரிய உலக நாகரீகம் ஒன்று தனது செல்வம், தொழில் பற்றி மாறி வரும் உலக நடப்புக்கு ஏற்ப எந்தக் கொள்கையும் இல்லாமல் சும்மா இருக்க முடியும் என்பதே பெரும் அதிர்ச்சியான நிகழ்வு.  ஆனால் சும்மாதான் இருந்தது. 

ஆக்கும், காக்கும், அழியும் என்பவை செல்வத்தின் முக்குணங்கள். ஆக்கவோ, காக்கவோ பயன்படா செல்வம் அழியும் என சுபாஷிதம் சொல்கின்றது. ஆக்கவோ, காக்கவோ தேவையான இந்தியாவில் தொழில் புரட்சி , நகரமயமாக்கல் பற்றி பேச்சே  நடத்தவில்லை.  எப்போதுமே இச்சையிலிருந்து கருத்து தோன்றி, கருத்திலிருந்து செயல் தோன்றுவது நடைமுறை. ஒரு நாகரீகமாகச் செல்வத்தினை ஆக்கவும், காக்கவும் செய்யவேண்டும் எனக் கருத்தில்லையெனில் நாகரீகத்திடம் எப்படிச் செல்வம் தங்கும்?

ஆனால் மேலை மரபு 16ம் நூற்றாண்டில் ஆரம்பித்து 19ம் நூற்றாண்டு வரை பொருளியலில், தொழில் புரட்சியில் அரச அதிகார அமைப்பு, வணிக அமைப்பு, தத்துவ அமைப்பு, கல்வி அமைப்பு ஆகியவற்றினை பரிசோதித்து, கட்டி அமைத்து, அமைப்பில் பிழைகளை கண்டு,  பிழை திருத்தி பெரும் செல்வம் சேர்த்து நவீனத்துவம் நோக்கி சென்றது. 

இப்பொழுதும் இந்திய மரபில் தொழில் புரட்சியும் , வணிகமும், நகரமயமாக்கல் எதுவுமே பக்குவமடையாமல் வெறும் பேச்சு அளவிலேயே உள்ளது. அந்த அளவில் அடுத்தடுத்த தளத்துக்குச் சென்றதாக அறிவித்துக் கொள்வதில்தான் இருக்கின்றது. இன்றைக்கும் பாதி நேரம் இந்திய நடைமுறை சிந்தனையின் வடிவம் விவசாய யுகத்துடையதாகவே இருக்கும்.  

இன்றைக்கு  நகரங்களில் வாழும் இந்திய நாகரீக வம்சாவளியினரிடம் உங்கள் வர்த்தகக் கடல் வழிகள் எவை , உங்கள் நாகரீகத்தின் கடலோடும் திறம் என்ன எனக் கேட்டால் பதில் தெரியாது. ஆனால் அவர் உலகில் கடலோடுவதை, வர்த்தக வழிகளைச் சிந்தித்து, பல நூறு ஆண்டுகள் உழைத்துக் கட்டமைக்கக் கூடிய நாகரீகத்துக்கு இணையாக வாழ்க்கைத்தரம் வேண்டுமெனக் கேட்பார்.  அவரது இந்தியா நாகரீகம் குறித்த உடோப்பிய கனவுகள் அனைத்தும் விவசாய யுகத்தில் கனிந்ததாக இருக்கும். அவரது தனிப்பட்ட வாழ்க்கைத் தரம் குறித்த கனவுகள் ஸ்காண்டினேவியன் தேசம் போல, அமெரிக்கா போல சுவை கேட்டு இருக்கும்.  விவசாய யுக உட்டோப்பிய கனவுகள் கொண்டு ஸ்காண்டிநேவியன் வாழ்க்கைக்கு செல்ல இயலாது. 

சுவையான கனி வேண்டும், ஆனால் கனி தரும் மரம் உள்ள தோப்பை யார் உருவாக்கி காபந்து செய்வது? ஏற்கனவே தோப்பு உருவாக்கத் தெரிந்தவனிடம் கைக்கட்டி சேவகம் செய்து கொடுப்பதை வாங்கி உண்டு மகிழ்வதே எளிய வழி. இன்னொரு வழி கடினமானது அதற்குத் தோப்பினை உருவாக்கிக் கட்டிக் காக்கும் பொறுமையும், நிதானமும், பக்குவமும், நீண்ட நாள் பார்வையும் வேண்டும்.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.