
“அவன் அறியப் போகும் யாரோ ஒருவரின் உடல் அவனுடையது என ஆகும். தன் முழங்காலில் உள்ள தழும்பும், முதுகில் இருக்கும் மச்சமும் இனி இருக்கப் போவதில்லை. அவன் கொடையாளியின் உடலைப் புதிதாக அறிய வேண்டும். அப்பொழுது தன் மூளை திணறாதா? அது அவ்வளவு விரைவாகப் புது உடலை ஏற்றுக் கொள்ளுமா? இதில் இருவரில் யார் இல்லாமல் போகப் போகிறார்கள்? தலையால் வாழும் ஒருவன், உடலால் இறக்கப் போகிறான். தலையால் சாகப் போகும் ஒருவன் உடலால் வாழப் போகிறான். இவன் தன் மூளையுடன் அவ்வுடலில் இணையும் போது இறந்தவன் உடலாகத் தொடருவான் தானே? புறத் தோற்றம் மாறுகையில் அகம் அதை ஒட்டி வடிவமைக்கப்படுமா? அகம் அதை மறுதளித்தால் வாழ்வு வீணாகிவிடாதா? மனம் என்பதில் எண்ணங்கள் ஒழியாது வந்து கொண்டேயிருக்கின்றதே.? அது உடலில் எந்தப் பகுதியில் இருக்கிறது? தலை மாற்று அறுவை சிகிச்சையில் மூளையுடன் மனமும் என்ன ஆகும்? அறிவு, சிந்தனை, எண்ணங்கள் எல்லாம் ஒரே இடத்தில் தான் எழுகின்றனவா? அனைத்துமே இரண்டாக எழுந்தால் அதற்கு மாற்று உண்டா?”
சொல்வனத்தில் நான் எழுதிய முதல் சிறுகதை, அது வெளியானபோது நான் வானில் பறந்தேன். அதற்கு திரு கோரா எழுதிய விமர்சனத்தைப் பின்னர் தான் பார்த்தேன். ஆங்கில இந்து நாளிதழில் நான் பார்த்த ஒரு சிறு செய்திக் குறிப்பு இக்கதையை எழுதத் தூண்டியது. அப்போது எனக்கு டேனியல் டென்னேட்டைத் (Daniel Dennett) தெரியாது. சில கூறுகளில் அவரது ‘மூளைப் புயல்கள்’ (Brain Storms) படைப்புடன் மேலே குறிப்பிட்ட கதை ஒத்துப் போவதால், அதை இங்கே தொடக்கமாகக் குறிப்பிட்டேன்.

உணர்வு, அடையாளம் இரண்டையும் பற்றிய ஆழமான தத்துவக் கேள்விகளை எழுப்பிய மெய்யியலாளர் அவர். 1978ல் அவரது கட்டுரைத் தொகுப்பான ‘ப்ரைன் ஸ்டார்ம்ஸ்’(Brain Storms) வெளி வந்தது. அனைத்து அறிவியல் துறைகளுக்கும் இடையே கொடுக்கல்- வாங்கல் நடை பெறுவது உத்தமமானது என்றும், மெய்யியலாளர்கள், உளவியல், மொழியியல், கணினியியல் துறைகளின் வல்லுனர்களுடன் பேசிப் பழகி தம் அறிவை ஆழப்படுத்த வேண்டுமென்றும் அவர் விரும்பினார். ‘மூளைப் புயல்களின்’ 40வது வருடாந்தர வெளியீட்டின் போது, இக்கட்டுரைகள் கரடுமுரடான மொழியோ, கலைச் சொற்களோ அதிகம் இடம் பெறாமல், அனைவருக்கும் புரியும் வண்ணம் இருக்க வேண்டும் என்று எண்ணி எழுதியதாகத் தெரிவித்தார்.

இதன் சில பகுதிகள் மிகவும் சிந்திக்கத் தக்கவை. ‘நான் எங்கிருக்கிறேன்?’ (Where am I?) என்ற கட்டுரை அதி முக்கியத்துவம் வாய்ந்தது. 1979ல் இதை ஹாலிவுட் திரைப்படமாக்கச் செய்த முயற்சி, (இதைச் சிறிது ஒத்த ஒரு அறிவியல் புனைவுச் சிறுகதை சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இதழில் வெளிவந்துள்ளதால்) கைவிடப்பட்டது. 1981ல் பிபிசி அறிவியல் ஆவணப்படத்தில் (BBC Science Documentary) இக்கட்டுரையின் முக்கியக் காட்சிகள் படமாக்கப்பட்டு வெளியாகியது. டென்னெட் எழுதுகிறார்- “நான் அதில், சுழலும் கணினி நாடாக்களின் முன்புறத்தில் உள்ள பீடத்தின் மீது ஒரு அபாரமான நீரூற்று/ மரத்தொட்டியில் (Fountain/ Vat) உள்ள எனது மூளையைப் பார்க்கிறேன். நான் வியப்புறுகிறேன் ‘நான் இங்கே, தொட்டியிலுள்ள எனது மூளையைப் பார்க்கிறேன் என்று ஏன் சொல்கிறேன்? அப்படியில்லாமல், ‘நான் இங்கே, ஒரு மரத் தொட்டியில், என் கண்களால் பார்க்கப்படுகிறேன் என ஏன் சொல்லவில்லை?’ உடலும், உணர்வாகவும் இங்கே நிற்கும் நான் என் மூளையைப் பார்க்கிறேன் என்று சொல்கிறேனே தவிர, இங்கே நிற்கும் என்னை என் மூளை தொட்டியிலிருந்து பார்க்கிறது என ஏன் நான் சொல்லவில்லை என்பது மகத்தான கேள்வி அல்லவா? பின்னர் இந்தக் கட்டுரை ஜாவானீய (Javanese) பொம்மலாட்டமாகவும், டக்ளஸ் ஹாஃப்ஸ்டாடர் (Douglas Hofstadter) என்ற கணினி அறிவியாலளரும், டென்னெட்டும் நடித்த முழு நீள திரைப்படமாகவும் வந்தது.
‘தொட்டியில் மூளை’ என்ற கருதுகோள் தன்னுடையது அல்ல என்று சொல்லும் இவர், 1973ல் Gil Harman வெளியிட்ட ‘தாட்ஸ்- சிந்தனைகள்’ (Thoughts) தன்னுள் பதிந்து போயிருக்கலாம் என்று விரித்துரைக்கிறார். ‘தாட்ஸ்’ லிருந்து ஒரு சிறு பகுதி:
“ஒருக்கால், உங்களுக்கு உடல் இல்லாதிருக்கலாம். ஒரு விபத்தில் உங்கள் மூளையை மட்டுமே காப்பாற்றி, பாதுகாப்பாக ஆய்வகத்தில் வைத்திருக்கலாம்; உங்களை மகிழ்விக்க 20ம் நூற்றாண்டிலிருந்து சில நாடாக்கள் இயங்கலாம்; இந்த அனுபவங்களைப் பெற மூளை தேவை என்று அனுமானிக்க வேண்டியுள்ளது. இதுவும் கூட மாயையின் தோற்றமாக இருக்கலாம்!”
1976ல் வாஸர் (Vassar) கல்லூரியில் ஒரு கலந்துரையாடல் நிகழ்விற்காக, டஃப்ட்ஸ் பல்கலையிலிருந்து (Tufts Univ) டேனியல் சென்று கொண்டிருந்தபோது இந்தக் கதையை அவர் புனைந்தார். அன்று மாலை அவர் அதைக் குறிப்பிடும் போது, தன் மாணாக்கர்களுடன் இதன் குறியீடுகள், பின் விளைவுகள் என்று உரையாடல் நகைச்சுவையுடன் நடை பெற்றது. ‘நான் ஊகிக்கிறேன்- ‘எங்கிருக்கிறேன் நான்?’ என்ற இந்தக் கட்டுரை பல மெய்யியல் வகுப்புப் பாடத்திட்டங்களில், என்னுடைய பிற கட்டுரைகளைவிட அதிகமாக இடம் பெற்றுள்ளது என.’ ‘வாஸர் கல்லூரியின் சில மாணவர்களுக்கும் இதற்கான மதிப்பு உண்டு.’
‘எங்கிருக்கிறேன் நான்?’ கட்டுரை
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் என் வழக்கு வெற்றியடைந்துள்ளதால், என் வாழ்க்கையின் மிக ஆர்வமான, கிளர்ச்சியான, ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இது, ஆராய்ச்சியில் ஈடுபடும் மெய்யியலாளர், மூளை நரம்பியல் நிபுணர், செயற்கை நுண்ணறிவுத் துறையாளர் ஆகியோருக்கு மட்டுமானதல்ல, பொது மக்களுக்குமானது.
பல ஆண்டுகளுக்கு முன் பென்டகன் அதிகாரிகள் (Pentagon) இரகசியமானதும், ஆபத்தானதுமான ஒரு செயலுக்காக, ஒரு தன்னார்வலராக என்னை இணையச் சொல்லிக் கேட்டார்கள். ‘ஸ்டெட்’ (STUD- Supersonic Tunneling Underground Device) எனப்படும் ஒலிவேகத்தைவிட அதிகமாக இயங்கும் சுரங்கக் கருவி ஒன்றை பல்லாண்டுகளாக, பல பில்லியன்கள் செலவழித்து நாசாவும், (NASA) ஹோவார்ட் ஹ்யூஸும் (Howard Hughes) அமைத்துள்ளார்கள். அது பூமியின் மையப்பகுதி வரை அதி வேகமாக சுரங்கத்தில் சென்று, ஏவுகணை குழிகளில் (red’s missile silos) அணு ஆயுதத்தை வைப்பதற்காக என்று பென்டகன் அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். (அந்தக் குழிகளில் நேராக நிறுத்தப்பட்ட உருளை வடிவத்தில் ஏவுகணை நிறுத்தப்படும், அதில் அணு ஆயுதங்கள் நிரப்பப்படும்)
துல்சா, ஓக்லஹோமாவில், (Tulsa,Oklahoma) ஒரு மைல் ஆழத்தில் அவர்கள் ஏற்கெனவே அந்த ஆயுதத்தை வெற்றிகரமாக வைத்துவிட்டார்கள். இப்போது அதை மீட்டெடுக்க வேண்டும். ‘என்னை ஏன் தேர்வு செய்தீர்கள்?’ என நான் கேட்டேன். இந்தத் திட்டத்தில் சில முன்னோடியான மூளை ஆய்விற்கு சந்தர்ப்பம் இருப்பதாகவும், என்னுடைய துணிச்சலும், உற்சாகமும், இன்ன பிறவும், நான் மூளை தொடர்பான செய்திகளில் அதிக ஆர்வமுள்ளவனாகவும் இருப்பதால், இந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியது என்று சொன்னார்கள். இனி, எப்படி மறுப்பேன்? எந்தக் கருவியை மீட்டெடுக்க பென்டகன் என்னை அணுகியதோ, அது, புது விதமான அதி பயங்கர கதிர்வீச்சுள்ள ஒன்று. கண்காணிப்பு இயந்திரங்களின் அறிக்கைபடி, அந்தக் கருவியின் தன்மையும், புவியில் ஆழப் புதைந்துள்ள சில பொருட்களுடன் அது நடத்தும் சிக்கலான வினைகளும் ஏற்படுத்தும் கதிர் வீச்சுக்கள், மூளையின் சில திசுக்களை மிக மோசமாகப் பாதிக்கும். இந்தக் கொடூர அலைகளிலிருந்து மூளையைப் பாதுகாக்க எந்தக் கவசமும் இல்லை-உடலின் மற்ற செல்களை, உறுப்புகளை இந்தக் கதிர் வீச்சு பாதிக்காது. தன் மூளையை வசிப்பிடத்தில், குறிப்பாக ஆய்வகத்தில் விட்டுவிட்டுச் செல்லும் ஒருவர்தான் அந்தக் கருவியை மீட்டெடுத்து வர முடியும்! அந்த மூளை ஒரு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு, தன் இயல்பான கட்டுப்பாட்டுச் செயல்களை, மிக விரிவான வானொலி இணைப்புகள் (Radio Links) மூலம் செய்ய முடியும். என் மூளையை முற்றிலுமாக அறுவை சிகிட்சை செய்து அகற்றி, அதை உயிர் காக்கும் சாதனங்களுடன் பிணைத்து, மனித விண்கல மையம், (Manned Spacecraft Center) ஹூஸ்டனில், (Houston) பாதுகாப்பாக வைப்பார்கள். மூளைக்குச் செல்லும் செய்திகள், அதிலிருந்து வெளியாகும் கட்டளைகள் என்ற பாதைகளை அகற்றுகையில், சிறிதான நுண்ணிய ஜோடி(Microminiaturized transceivers) வானொலி பரிமாற்றிகள் பொருத்தப்படும் – ஒன்று துல்லியமாக மூளையிலும், மற்றொன்று, நரம்பு அடிக்கட்டைகள் (Nerve Stumps) கொண்ட வெற்று மண்டை ஒட்டிலும் இணைக்கப்படும். அனைத்து இணைப்புகளும் பாதுகாக்கப்படும், எந்தத் தகவலும் தொலைந்து விடாது. முதலில் எனக்கு இதை ஏற்றுக்கொள்ள தயக்கமாக இருந்தது. இது சரியாகச் செயல்படுமா? ஹூஸ்டனின் மூளை அறுவை சிகிச்சை நிபுணர்கள் எனக்கு ஊக்கம் கொடுத்தார்கள்: ‘உங்கள் தலை ஒட்டினுள், ஒரு அங்குலம் உங்கள் மூளை நகர்ந்தால், அது உங்கள் மனதை பாதிக்காது- ஒருவகையில் நரம்பு நீட்சி என இதைப் புரிந்து கொள்ளுங்கள். என்ன ஒன்று, நாங்கள், நரம்பு இழைகளால் எல்லையற்ற வகையில் அவற்றிற்கு அலைவரிசை இணைப்பின் மூலம் நெகிழ்த் தன்மை கொடுக்கப் போகிறோம்.’
ஹூஸ்டனில் உள்ள உயிர் காக்கும் அமைப்பிருக்கும் ஆய்வகத்தில் என் மூளையை வைக்கப் போகிற, பளிச்சிடும் அந்தத் தொட்டியை எனக்கு அவர்கள் காட்டினார்கள். ஆனால், நான் இன்னும் சம்மதிக்கவில்லை. மிகப் பெரிதான அந்த உதவிக் குழுவில் அறிவாளிகளும் இருந்தார்கள்- நரம்பியலாளர்கள், குருதியியல் நிபுணர்கள், உயிர் இயற்பியலாளர்கள், மின் பொறியியலாளர்கள், இவர்களுடன் பல நாட்கள் பேசினேன், விவாதித்தேன், நிகழ்த்திக் காட்டச் சொன்னேன். இதை முயலலாம் என்று ஒப்புக் கொண்டேன். மிக விரிவான, மகத்தான, இரத்தப் பரிசோதனைகள், மூளை ஸ்கேன்கள், பிற பரிசோதனைகள். நேர்காணல்கள், இத்யாதிகள் நடந்தன. என் சுயசரிதையை விரிவாக விவரங்களுடன் எழுதிக் கொண்டார்கள். எனக்குப் பிடித்தமான ஸ்டீரியோ பதிவுகள், என் நம்பிக்கைகள், பயங்கள், ருசிகள் ஆகியவற்றின் பட்டியலை என்னைக் கேட்டுக் கேட்டு தயாரித்தார்கள். உளப்பகுப்பாய்வு பற்றியும் எனக்கு வேகமாகப் பயிற்றுவித்தார்கள்.
அறுவை சிகிச்சை நடந்தது- நான் மயக்க மருந்தில் இருந்ததால், அதைப் பற்றி நினைவில்லை. கண் விழித்ததும், காலம் தோறும் கேட்கப்படும் தேய்வழக்கான கேள்வியான ‘நான் எங்கிருக்கிறேன்?’ என்ற வினாவை எழுப்பினேன். செவிலி என்னைப் புன்னகையுடன் பார்த்து ‘ஹூஸ்டனில்’ என்றார். ஏதோ ஒரு வகையில் இது உண்மை எனத் தோன்றியது. அவர் ஒரு ஆடியைக் கொடுத்தார். என் தலை ஓட்டில் இருந்த டைடானியத் துறைமுகங்களினூடாக சிறிய உணர்கொம்புகள் தலை நீட்டிக் கொண்டிருந்தன.
‘என் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது என நினைக்கிறேன்; என் மூளையைப் பார்க்க வேண்டும்.’ எனக்கு இலேசான தலை சுற்றலும், தடுமாற்றமும் இருந்ததால், என்னை அவர்கள் நீண்ட நடைபாதையில் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்றனர். கண்ணாடி வழியே பெரும் இஞ்சியைப் போல், தொட்டியில் மிதக்கும், சந்தேகத்திற்கு இடமற்ற அந்த மனித மூளையைப் பார்த்தேன். ஆனால், அது அச்சிடப்பட்ட மின் தகடுகளாலும், சிப்களாலும், ப்ளாஸ்டிக் குழாய்களாலும், இன்ன பிற பரிவார தேவதைகளாலும் சூழப்பட்டிருந்தது. ‘இது என்னுடையதா?’ என்று கேட்டேன். “மரத் தொட்டியின் பக்கலில் உள்ள வெளிக்கடத்தியை அணையுங்கள்; உங்களுக்கே தெரிய வரும்” என்று திட்ட இயக்குனர் சொன்னார். நான் ஸ்விட்சை அணைத்தேன்- குமட்டல், தடுமாற்றம், மந்தம், சரிவு எனத் தடுமாறி தொழில் நுட்பர் ஒருவரின் கரங்களில் விழுந்தேன். நல்லவர் ஒருவர் உடனடியாக அந்தக் குமிழை இயங்கு நிலைக்கு மாற்ற என் சமநிலையை அடையும் போது இவ்வாறு சிந்தித்தேன்- ‘நான் இங்கே ஒரு மடக்கு நாற்காலியில் அமர்ந்து கொண்டு, கண்ணாடித் தடுப்பின் வழியே மிதந்து கொண்டிருக்கும் என் மூளையைப் பார்க்கிறேன்.’ எனக்குள் சொல்லிக் கொண்டேன்- நான் இப்படி நினைத்திருக்க வேண்டாமா- ‘நான் இங்கே, குமிழிகள் வெளியாகும் திரவத்தில் மிதந்து கொண்டு, என்னைப் பார்க்கிறேன் என்று?’ இந்த இரண்டாவது சிந்தனையை நினைக்க முயன்றேன். இதை அந்தத் தொட்டியின் மூலம் அந்த இடத்திற்குச் செலுத்த மீள மீள முயன்றாலும், அதை ஒரு உறுதியான மெய்ப்பாட்டுடன் செய்ய முடியவில்லை. ‘நான் இங்கிருக்கிறேன், டேனியல் டென்னெட், திரவத்தில் மிதந்து கொண்டு, என் கண்களாலேயே பார்க்கப்பட்டுக் கொண்டு..’ இல்லை, இது வேலைக்காகவில்லை. புதிராக, குழப்பமாக இருக்கிறது. ஒரு இயற்பியலாளரைப் போல நிரூபணங்களைத் தேடும் தத்துவவாதியான நான், நினைவுக் குறியானது, எனது மூளையில் எங்கோ தோன்றுகிறது என ஐயத்திற்கு இடமின்றி சிந்தித்தேன். இருந்தும், ‘நான் இங்கே’ என்ற என்ணம் எழுகையில், அது நிகழ்ந்த இடம் ‘இங்கே’, தொட்டியின் வெளியே, எங்கே நின்றுகொண்டு டேனியலான நான் அதை வெறித்துக் கொண்டிருந்தேனோ, அங்கே தான் நிகழ்ந்தது.
நான் தொட்டிக்குள் இருப்பதாக நினைக்க முயன்றும் தோல்விதான் கிட்டியது. ஒரு சில மனப் பரிசோதனைகளின் மூலம் அந்த இரண்டாம் எண்ணத்தை நிகழ்த்த முயன்றேன். ‘சூரியன் அங்கே ஒளிர்கிறான்’ என்று ஐந்து முறை வேகவேகமாக வெளிப்படும் இடங்களை மாற்றிப் பார்த்தேன். அந்த இடங்கள்- சூர்ய ஒளி படும் ஆய்வக மூலை, மருத்துவ மனையின் புல்வெளி தெரியும் இடம், ஹூஸ்டன், செவ்வாய், வியாழன். இந்த அண்டப் பெருவெளியில் ‘அங்கே’ என்று சஞ்சரிப்பது எனக்குக் கடினமாக இல்லை. அந்த ‘அங்கே’யிலிருந்து எளிதாக என் கையில் உள்ள இடதுபுறத் தழும்பிற்கும் வந்தேன். ‘ஏன் “இங்கே- தொட்டியில்” என்பது என்னால் இயலவில்லை?’ இங்கே ஹூஸ்டனில், இங்கே ஆய்வகத்தில், இங்கே ஆய்வகத்தின் ஒரு பகுதியில் என்ற சிந்தனைகள் எளிதாக இருக்க, ‘அந்தத் தொட்டியில்’ என்பது வெறும் மனவாய்மொழியாக, அர்த்தமற்றுப் போனது. இதைப் பற்றி நினைக்கையில் என் கண்களை மூட முயற்சி செய்தேன். இது ஒரு பறக்கும் வினாடிக்கு மட்டுமே நிலைத்தது; நிலை நிறுத்த முடியவில்லை. உறுதியாக என்னால் சொல்ல முடியவில்லை. அப்படியான உறுதி இல்லை என்பதும் என்னைத் தொல்லை செய்தது. நான் ‘இங்கே’ என்று நினைக்கும் போது, ‘இங்கே’ என்பதன் பொருளாக ‘எங்கே’ என்பதை நான் எப்படி அறிகிறேன்? உண்மையில் நான் வேறோர் இடத்தை நினைத்துக் கொண்டு, நான் நினைத்தது இதுவென்று சிந்திக்க முடியுமா? அதாவது, நான் ஒரு இடத்தைக் குறிக்கும் போது, அது மற்றோர் இடத்தைக் குறிப்பதாக நினைக்கலாகுமா? நடத்தையியலாளர்கள், மெய்யியலாளர்கள், உடல் இயற்பியலாளர்கள் போன்றோர், காலங்காலமாக முயன்றும், பிரிக்க இயலாத ஒன்றான, மனிதனுக்கும், அவன் மன வாழ்விற்கும் இடையே நிலவும் நெருக்கத்தின் சில முடிச்சுக்களை அவிழ்க்காமல் மேலே உள்ள இந்த வினாவை எப்படி எதிர்கொள்வது? ஒருக்கால், ‘இங்கே’ என்று நான் சொன்னபோது, திருத்தமுடியாத வகையில் ‘எங்கே’ என்பதைத்தான் சொல்கின்றேனா? இப்போதைய சூழ்நிலையில், ஒன்று, நான், மனப் பழக்கத்தின் ஆற்றலுள்ள விசையால், முறையான, குறியீட்டுத் தவறுகள் நிறைந்த ஒன்றால் ஆக்கிரமிக்கப்பட்டு இருக்கலாம்; அல்லது ஒரு மனிதன் எங்கிருக்கிறானோ, அங்கே அவனது மூளை, அவனது ஆன்மாவின் உறைவிடமான அந்த மூளை, வசிக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. இந்தக் குழப்பங்களின் நச்சரிப்பு தாங்காமல், நான் மெய்யியலாளர்கள் மேற்கொள்ளும் சூழ்ச்சி விளையாட்டின் பால் என் கவனத்தைத் திருப்பி, பெயர் சூட்ட ஆரம்பித்தேன்.
என் மூளையைப் பார்த்து உரக்கச் சொன்னேன்- “யோரிக், நீ எனது மூளை. இந்த நாற்காலியில் அமர்ந்துள்ள இந்த உடலுக்கு “ஹேம்லெட்” என்று பெயர் வைக்கிறேன். இங்கே நாம் அனைவரும் இருக்கிறோம்- யோரிக், ஹேம்லெட். டென்னெட். இப்போது ‘நான் எங்கிருக்கிறேன்?’ ‘நான் எங்கிருக்கிறேன்?’ என்று சிந்திக்கும் போது, அந்த எண்ணக் குறி எங்கே தோன்றுகிறது? தொட்டியில் இருக்கும் அந்த மூளையிலா, என் இரு காதுகளுக்குமிடையே உள்ள இடத்தில் தோன்றுவதாகத் தோன்றுகிறதே, அங்கேயா? இல்லை, எங்கேயும் தோன்றவில்லையா? இதன் நடைமுறை அல்லது தற்காலிக ஒருங்கிணைப்புச் செயல்களில் எனக்குப் பிரச்சனை இல்லை; ஆனால், இடம் சார்ந்த ஒருங்கிணைப்புகளும் தேவை தானே? நான் மாற்றிற்கான பட்டியலைத் தயாரித்தேன்.
- எங்கே ஹேம்லெட் போகிறாரோ, அங்கே டென்னெட் போகிறார். தத்துவவாதிகளால் பெரிதும் அறியப்பட்ட மூளை மாற்று சிந்தனைச் சோதனைகள் இக்கருத்தை எளிதாக மறுதலித்தன. டாம், டிக் இருவரில், டிக்கின் முன்னாள் உடலைப் பெற்றுள்ள டாம், டாமைப் பற்றிய அனைத்து விவரங்களையும் சரியாகச் சொல்வார். என்னுடைய இந்த உடலும், நானும் பிரியலாம், ஆனால், மூளையிலிருந்து என்னைப் பிரிப்பது? இந்த மூளை மாற்று சிந்தனைச் சோதனையின் முக்கிய விளக்கம் என்னவென்றால், ஒருவர் மூளையைக் கொடுக்க விரும்பலாம், பெறுவதற்கு அல்ல. இதை உடல் மாற்று என்றே சொல்லலாம்.
- எங்கே யோரிக் போகிறாரோ, அங்கே டென்னெட் போகிறார். இந்த எண்ணம் எடுபடவேயில்லை. நிறைவான மதிய உணவிற்காக, தந்திரமாக என் அறைக்குத் திரும்பும் திட்டம் உள்ள நான், தெளிவாகவே மரத் தொட்டிக்கு வெளியில் உள்ள நான், அதிலுள்ள மூளையைப் பார்த்துக் கொண்டிருக்கும் நான், எப்படி எங்கேயும் போக முடியாத யோரிக் போவதைப் பற்றி சிந்திக்க முடியும்? இந்தக் கேள்வியானது இன்னமும் முக்கியமான சிந்தனைக்கு இடம் கொடுத்தது. என் உள்ளுணர்விற்கு உதவிகரமாக, சட்ட ரீதியான விவாதத்திற்கு அதைக் கொணர்ந்தேன்.
நான் எனக்குள் விவாதித்தேன்- நான், கலிபோர்னியாவிற்குப் பறந்து சென்று, ஒரு வங்கியைக் கொள்ளையடித்து, அதில் மாட்டிக் கொண்டேன் என்றால், கலிபோர்னியாவிலா அல்லது இந்த உடலின் மூளை இருக்கும் இடமான டெக்சஸிலா நான் விசாரணை செய்யப்படுவேன்? கலிபோர்னியா மாநிலத்தில் உடல் மட்டும் இருக்கும், மூளை வேறு மாநிலத்தில் இருப்பதால், அல்லது மூளை ஓரிடம், உடல் ஓரிடம் என்ற சூழலால், எந்த மாநிலத்தின் சிறைப்பறவை நான்? இடம் சார்ந்த சட்ட எல்லைகளின்படி என்னைத் தண்டிக்க முடியாது என்றாலும், மாநிலங்களுக்கிடையேயான விதியின் படி கூட்டாட்சி முறை வழியில் இது குற்றமெனக் கொள்ளப்படும். என்னை ஒரு வேளை குற்றவாளி என்று தீர்ப்பளித்துவிட்டால், ஹேம்லெட்டை உள்ளே தள்ளுவதால் மட்டுமே கலிபோர்னியாவிற்கு திருப்தி கிடைத்து விடுமா? ஏனெனில், அவர்களுக்குத் தெரியும், அங்கே யோரிக் திரவத்தில் மிதந்து கொண்டு சொர்க்கத்தில் வாழ்கிறார் என்று. ஒரு வேளை, யோரிக்கை, டெக்சஸ் சிறைபிடித்தார்கள் என்றால், ரியோவிற்குச் செல்லும் அடுத்த படகில் பயணிக்க ஹேம்லெட்டை அனுமதித்து விடுவார்களா? இந்த மாற்று சரியெனப்பட்டது. எனக்கு கடுங்காவல் தண்டனையோ, கொடூரமான, வழக்கத்தில் இல்லாத தண்டனையோ விதிக்கப்படாத பட்சத்தில், என் மூளையைப் பாதுகாக்கும் கடமை அந்த மாநிலத்திற்கு இருக்கிறது. ஒரு வேளை, ஹூஸ்டனிலிருந்து லீவென்வொர்த்திற்கு உயிர் காக்கும் கருவிகளோடு என் மூளையை அவர்கள் இடம் மாற்றலாம். மானக்கேட்டினால் ஏற்படும் அவமானச் சிந்தனையை நான் பொருட்படுத்த மாட்டேன். என்னை ஒரு சுதந்திர மனிதனாக உணர்வேன். கட்டாயப்படுத்தி மனிதர்களை வெவ்வேறு நிறுவனங்களுக்கு மாற்றுவதில் அரசுக்கு ஆர்வம் இருந்தால், எந்த நிறுவனத்திலும் அவர்களால் யோரிக்கை இடம் பெறச் செய்ய முடியாமல் போகும்- விளைவு என்னை அவர்கள் இடமாற்றம் செய்ய முடியாது. இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவது மாற்றிற்கான குறிப்பொன்று தோன்றியது.
- தான் எங்கிருப்பதாக டென்னெட் நினைக்கிறாரோ அங்கே அவர் இருக்கிறார். இது பொதுவாகச் சொல்லப்படும் ஒன்று. கண்ணோட்டமிடுவது, அதன் உள் அடக்கத்தில் தீர்மானிக்கப்பட்டு, அந்தக் கண்ணோட்டம் அல்லது வினை என்பது அந்த இடத்தைச் சார்ந்து ஏற்படும் என்பதால், நிகழ்வு நடக்கும் இடம், அந்த மனிதர் இருக்கும் இடமாகவும் ஆகிறது. இது குழப்பங்களைத் தந்தாலும், என்னைப் பொறுத்த வரையில், நான் சரியான திசையில் தான் செல்கிறேன் எனத் தோன்றியது. இடத்தைப் பொறுத்த மட்டில், தவறு நிகழ சாத்தியமற்ற, ‘பூ விழுந்தால் நான் வென்றேன், தலை விழுந்தால் நீ’ என்பதும், ஒருவரை அந்த நிலையில் வைத்துவிடும் சிக்கலைக் கொண்டதே. நான் எங்கிருக்கிறேன் என்பதில் நான் அடிக்கடி தவறினேனே, நிலையற்று இருந்தேனே? ஒருவரால் தொலைந்து போக முடியாதா என்ன? புவி இடம் சார்ந்து தொலைந்து போவது என்பது மட்டுமே ஒருவர் தொலைந்து போவதற்கான வழி இல்லை. கடுங்காட்டில் வழி தவறும் ஒருவருக்கு, தான் தொலைந்து போய்விட்டோம், முன்பிருந்த இடத்திலில்லை என்ற அறிவு இருக்கும். அது ஆறுதலாகக் கூட இருக்கும்; (பய உணர்ச்சி, பதட்டம் இவை தனி) தன்னுடைய, தான் நன்கறிந்த உடலில் அவர் இங்கிருக்கிறார். இதற்கு நன்றி பாராட்டுவதா அல்லது? இன்னமும் மோசமான நிலைகளை கற்பனை செய்யலாம், நான் அத்தகையதொரு மோசமான நிலையில் இல்லை என்பதில் எனக்கு உறுதியில்லை.
இடம் என்பது, மனிதன் அங்கே இருக்கிறான் என்பதுடன் சம்பந்தப்பட்டிருந்தாலும், அதுவே அவ்வளவு தெளிவான ஒன்றில்லை. ஒருவரின் கண்ணோட்டத்தின் உள்ளடக்கம், ஒருவரின் எண்ணங்களுக்கும், நம்பிக்கைகளுக்கும் இணையாக அல்லது சமமாக இருக்க அவசியமில்லை என்பது வெளிப்படை. உதாரணமாக, ஒரு அரங்கில், பாதுகாப்பாக இருக்கையில் அமர்ந்து கொண்டு படம் பார்த்துக் கொண்டிருப்பவர், ஒரு காட்சியில், அவரே ஒரு நிலநடுக்கத்தில் மாட்டிக் கொள்வது போல செயற்கையாகக் காட்டப்பட்டால், ஏன் அலறுகிறார், கூச்சலிடுகிறார்? நிகழ்விடம் எங்கோ, அது கருவி செய்த மாயம், இங்கே இருந்த மனிதர் அங்கே எப்படிச் சென்று அந்தத் துயரத்தை அனுபவிப்பதாக உணர்ந்தார்? அவரது கண்ணோட்டத்தில் மாயத்தன அனுபவம் நிகழ்ந்துள்ளது. மற்றைய நிகழ்வுகளில் இக்கண்ணோட்ட மாறுபாடுகளை நான் மாயத்தன அனுபவம் என்று சொல்ல மாட்டேன். தொழிற்சாலைகளிலும், ஆய்வகங்களிலும் பணி செய்யும் தொழிலாளர்கள், இயந்திரக் கைகளைப் பொருத்திக் கொண்டு, ஆபத்தான பொருட்களைக் கையாளும் போது, அவர்களின் கண்ணோட்டம், பின்னூட்டக் கட்டளைகளை ஏற்றுச் செயல்படுவதாக இருக்கும்; அந்தந்த மனிதர்களின் கண்ணோட்டத்திலிருந்து, சுறுசுறுப்பான வகையில் மாறுபடும்- இது சினிமாவில் பார்த்த மாய நிலையை விட ஆழமான ஒன்றாகும். தங்கள் உலோகக் கரங்களால் அவர்கள் தூக்கும், இயக்கும், பொருட்கள், நழுவக் கூடியவை, நிறை மிகுந்தவை என அவர்கள் உணர்வார்கள். எங்கிருக்கிறோம் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும்; அனுபவத்தினால், தவறான நம்பிக்கைகள் ஏற்படாது. இருந்தும், அவர்கள் உற்று நோக்கும் அந்த தனித்த அறையில் அவர்கள் இருப்பதான ஒரு தோற்றம் உண்டாகலாம். மன முயற்சியால், அவர்கள் தங்கள் கண்ணோட்டத்தை அல்லது செயலை முன்னும், பின்னுமாக மாற்றிக் கொள்வார்கள். இது கண்கட்டு வித்தை போன்ற ஒன்றல்ல- விரைவில் மாறும் ‘நெக்கர் க்யூப்’ (Neckar Cube) அல்லது ‘எஸ்சர் படமோ’ (Escher Drawing) அல்ல. மன விளையாட்டின் மூலம் இந்தத் தொழிலாளிகள் தங்களைத் தாங்களே முன்னும் பின்னுமாக பயணிக்க வைக்கிறார்கள் என்று சொல்வது சற்று மிகையோ எனவும் தோன்றுகிறது.
இருந்தும் அவர்களின் உதாரணம் எனக்கு நம்பிக்கை தந்தது. என் உள்ளுணர்வையும் மீறி நான் அங்கே அந்தத் தொட்டியில் உண்மையில் இருக்கிறேன் என்றால், என்னை நானே பயிற்றுவித்து இதை பழக்கமாக்கிவிட முடியும். நான் அந்தத் தொட்டியில் அருமையாக மிதந்து கொண்டு வெளியில் நிற்கும் பரிச்சயமான என் உடலிற்குத் தன்னிச்சைச் செயல்களைச் சொல்லலாம். இந்தச் செயல்பாட்டின் இலகுத் தன்மையோ அல்லது கடினத் தன்மையோ, ஒரு மனிதனின் மூளை இருக்கும் இடத்துடன் பிணைக்கப்பட்டதல்ல. இதை நான் அறுவை சிகிச்சைக்கு முன்பாக பயிற்சி செய்திருந்தால், இதை இரண்டாம் இயற்கை என கண்டுகொள்ளக்கூடும். நீங்கள் கூட ஒரு ஒளியியல் மாயையை (tromp o’liel) முயற்சி செய்யலாம். விரைந்து பற்றிக்கொள்ளும் ஒரு கடிதத்தை நீங்கள் எழுதுவதாகக் கற்பனை செய்யுங்கள்- அதை ‘டைம்’ வெளியிட்டுவிட்டது. விளைவு அரசு உங்கள் மூளையை, மேரிலேன்ட், பெதஸ்டாவிலுள்ள (Bethasda) ‘பயங்கர மூளை மருத்துவ மையத்தில்’ (Dangerous Brain Clinic) சிறை வைத்துவிட்டது. உங்கள் உடல் சுதந்திரமாக உழைத்து, சம்பளம் பெற்று, அதை அரசாங்கத்திற்கு வரியாகச் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்போது, உங்கள் உடல் ஒரு அரங்கத்தில் அமர்ந்து கொண்டு, டேனியல் டென்னெட்டின், விசித்திரமான, உங்கள் அனுபவத்துடன் இயைபான ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. முயலுங்கள். பெதிஸ்டாவில் இருக்கிறீர்கள், ஆசையோடு உங்கள் உட,லுக்கு வாருங்கள், தொலை தூரம், இருந்தும், வெகு அருகே! அரசினுடையதோ, அல்லது நீங்களாகச் செய்து கொள்வதோ, வெகுத்தொலைவு கட்டுப்பாடுகளால் மட்டுமே, உங்கள் பணிவான கைத்தட்டலை நீங்கள் கட்டுப்படுத்த முடியும். ‘முதிய உடலைச் சுமந்து கொண்டு, கழிவறைக்குச் சென்று, பின்னர் ஓய்வறையில் இனிமையான, நீங்கள் பெறத்தக்கதான, பானத்தைப் பருக முடியும். கற்பனை செய்வது கடினமே, உங்கள் இலக்கை நீங்கள் அடைவது மிகப் பெரிய ஆறுதல் தானே?
என் நினைவுகளில் தொலைந்து நான் ஹூஸ்டனில் இருந்தேன்; ஆனால், அதிக நேரத்திற்கல்ல. அந்தத் துணிகர செயலிற்கு என்னை அனுப்புவதற்கு முன்னால், மருத்துவர்கள் என் செயற்கை நரம்பமைப்பை பரிசோதிக்க விரும்பினார்கள். முதலில் சிறிது தலைச் சுற்றல் இருந்தது. புதுச் சூழலுக்கு நான் தயாரானேன்- அப்படி ஒன்றும் அது என் பழைய சூழலிலிருந்து மாறுபடவில்லை! என் வசிப்பிடம் சரியான ஒன்றல்ல; சிற்சில ஒருங்கிணைவுகளில் எனக்கு இன்று வரை சிரமம் இருக்கிறது. ஒளியின் வேகம் அதிகரித்தது, ஆனால், வரைமுறைக்குள் இருந்தது. என் மூளையும், உடலும் விலகி விலகி செல்லச் செல்ல, நேர வித்தியாசங்களால், நுண்மையான பின்னூட்டங்கள் சீரற்றுப் போயின. தாமதமான அல்லது எதிரொலிக்கும் நிலையில் ஒருவர் கிட்டத்தட்ட பேச்சற்று போவது போல், என் மூளையும், உடலும் சில மைல்கள் பிரிந்திருப்பதால் மெய்நிகராக என்னால், என் கண்களைக் கொண்டு நகரும் பொருளைப் பார்க்க முடியவில்லை. பலவற்றில் என் குறைபாடுகள் அரிதாகத்தான் அறிய வரும். சென்ற ஆண்டுகளைப் போல, ஒரு மெதுவான, கோண வளைவில் வரும் பந்தினை என்னால் உறுதியுடன் கையாள முடியவில்லை. சில ஈடுகளும் இருக்கின்றன. மது எப்போதும் போலவே இனிமையாக இருந்தது, நான் எத்தனை குடித்தாலும் குடி போதையில் ஆழவில்லை அது என் உணவுக்குழாயை வெதுவெதுப்பாய்ச் செய்த அதே சமயம், என் கல்லீரலையும் அரித்துக் கொண்டிருந்தது. நான் இவ்வாறு வரம்பு இல்லாமல் குடிப்பதை என் நண்பர்கள் ஒரு வித ஆர்வத்துடன் பார்ப்பார்கள். என் விநோத சூழலைக் காட்டிக் கொடுக்காமல், குடி போதையில் தள்ளாடுவதாக நடிப்பேன். அதே போல், சுளுக்கிய கைக்காக ஆஸ்பிரின் மருந்தை எடுத்துக் கொள்வேன். அந்த வலி அதிகமானால், கோடீனை (ஓபியம் கலந்த மருந்து) ஹூஸ்டன் மருத்துவர்களை ஆய்வகத்திலிருந்து செலுத்தச் சொல்வேன். உடல் நிலை சரியாக இல்லாத போது தொலைபேசி செலவுகள் எகிறும்.
இப்போது என் துணிகர செயலிற்கு வருவோம். நிலத்தடிக்கு நான் செல்ல மருத்துவர்கள் அனுமதித்தார்கள். நானும் தயார்தான். ஹூஸ்டனில் என் மூளையை விட்டுவிட்டு ஹெலிகாப்டரில் துல்சாவிற்குப் பயணித்தேன். அப்படித்தான் எனக்குத் தோன்றியது. என் தலையை விட்டு மூளை பிரிந்திருக்கிறது என்று தான் என்னால் சொல்ல முடியும். பயணத்தின் போது நான் முன்னர் கவலை கொண்டவை யாவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னான எனது பதட்டங்கள் நிறந்த ஊகங்கள் என்ற சிந்தனை எழுந்தது. நான் நினைத்தது போல இது ஒன்றும் மீமெய்யியலோ, விநோதமோ இல்லை. எங்கிருக்கிறேன் நான்? தெளிவாக இரண்டு இடத்தில்- தொட்டியின் உள்ளும், வெளியும். கனெக்டிகட்டில் ஒரு பாதமும், ரோட் தீவில் மற்றொரு காலுமாக இருக்கும் நபரைப் போல நான் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் இருக்கிறேன். இப்படியெல்லாம் கேள்விப்படும் பல பரவலான தனி மனிதக் கூட்டத்தில் நானும் சேர்ந்து விட்டேன். இந்தப் பதிலை நினைக்க நினைக்க இதுதான் உண்மை என்றும் தோன்றியது. ஆனால், விநோதமாக, இது உண்மை எனத் தோன்றத் தோன்ற, எந்தக் கேள்விக்கான சரியான விடை என்று இது தோன்றியதோ, அதன் முக்கியத்துவம் குறைந்தது. முன் உதாரணங்கள் இல்லாமலில்லை, ஆயினும், ஒரு தத்துவக் கேள்வி, இந்த விதியைச் சந்திப்பது வருத்தம் தருவது தான். இந்தப் பதில் எனக்கு முழு நிறைவைத் தரவில்லை. சில கேள்விகளுக்கு விடை தெரிய வேண்டுமென விரும்பினேன். என்னுடைய பல பாகங்கள் எங்கிருக்கின்றன என்பதோ, இந்த நேரத்தில் என் கண்ணோட்டம் என்ன என்பதோ வரையறை செய்ய முடியாத கேள்விகளாயினும், அப்படியான கேள்விகள் இருந்தன எனவும் உணர்ந்தேன். துல்சாவின் கீழே அணு ஆயுதத்தைத் தேடி நிலத்தடியில் பயணிக்கும் நான், என் முழுமையல்ல என்பதை மறுக்க முடியவில்லை.
அந்த அணு ஆயுதத்தைக் கண்டுபிடித்த பிறகு என் மூளையை ஹூஸ்டனில் விட்டுவிட்டு வந்ததற்கு நான் மகிழ்ச்சியுற்றேன்; ஏனெனில், அவர்கள் பிரத்யேகமாக வடிவமைத்துத் தந்த கெய்கரைக் (Geiger) கொண்டு டயல் (dial) செய்ய முடியவில்லை. என் சாதாரண வானொலியில், கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு என் நிலையையும், முன்னேற்றத்தையும் தெரிவித்தேன். என் செய்தியைப் பின்பற்றி, அந்த வாகனத்தைப் பிரிக்கச் சொன்னார்கள். நான் எனது வெட்டுச் சாதனத்தை இயக்க ஆரம்பிக்கையில், ஒரு பயங்கரம் நிகழ்ந்தது. என் காதுகள் கேட்கும் திறனை முழுதும் இழந்தன. முதலில் என் வானொலிக் காதுக்கருவிகள், (செவியில் இருந்த வானொலி பரிமாற்றிகள்) உடைந்துள்ளன என நினைத்தேன். என் தலைகவசத்தைத் தட்டும் போதும், எனக்கு சப்தம் கேட்கவில்லை. என் கேட்கும் பரிமாற்றிகள் செயல் படவில்லை. என் குரலையும், என்னால் கேட்க முடியவில்லை, ஹூஸ்டனிலிருந்து பேசுவதும் கேட்கவில்லை. பேச முடிந்ததால், என்ன நடந்ததென்று அவர்களுக்கு சொல்ல ஆரம்பித்தேன். பாதி வாக்கியத்திலேயே ஏதோ தவறென்று உணர்ந்தேன். நான் பேசுவதும் பாதிக்கப்பட்டுவிட்டது. என் வலது கரம் தளர்வுற்று முடமானது- மற்றொரு பரிமாற்றியும் செயலிழந்து விட்டது. நிச்சயமாக பெரும் சிக்கலில் இருந்தேன். நிலமை இன்னமும் மோசமானது. சில நிமிஷங்களுக்குப் பிறகு என்னால் பார்க்க முடியாமலும் போனது. என் விதியை நொந்து கொண்டேன்; என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிய அறிவியலாளர்களைச் சபித்தேன். செவிடனாய், ஊமையாய், குருடனாய், துல்சாவிலிருந்து ஒரு மைலுக்கும் கீழான கதிர்வீச்சுள்ள ஒரு குழியில் மாட்டிக் கொண்டுவிட்டேன். என் கடைசி மூளை இணைப்பும் அறுந்தது. திடீரென ஒரு புதிய, அதிர்ச்சியான நிகழ்வைச் சந்தித்தேன்.
தொடரும்
உசாவி: சொல்வனம், https://thereader.mitpress.mit.edu/daniel-dennett-where-am-i/ By: Daniel Dennett
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

என்ன மாதிரியான எழுத்து வன்மை உங்களுடையது! மொழிபெயர்ப்பில் இத்தனை ஒரிஜினலாலிட்டியை AI முயன்றாலும் கொண்டு வர முடியாது! மிகச் சுவையான கட்டுரை! அடுத்த பதிவுக்காக க் காத்திருக்கிறேன்!
உங்கள் பதிவு தொடர்ந்து செயல்பட ஊக்கமளிக்கிறது. மிக்க நன்றி, சர்