
மடிக்கணினியில் அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள் காமாட்சிசுந்தரி. அவ்வப்போது அப்பாவின் மடியில் அவள் அமர்ந்திருக்கும் புகைப்படம் தாங்கிய சிறிய ஃபோட்டோ ஃப்ரேமை விழிகளால் வருடிக் கொண்டாள். காமாட்சிக்கு அவளது அப்பாவின் நினைவுகள் ஆலமரத்தின் விழுதுகள் போல, சிந்தையில் துவங்கி இதயத்தில் வேர் ஊன்றிப் பரந்தவை. அவளது நிஜ வாழ்விற்கு இணையாக ஓடும் மெய்நிகரான வாழ்க்கை அது. மனக்கிடங்கில் எண்ணற்ற அறைகளில் ஒளித்து வைத்திருக்கிறாள். வெளி உலகம் ஏதேனும் குறியீடு காட்டினால் மனக்கிடங்கில் உள்ள அவ்வறைகளில் ஏதேனும் ஒன்றில் சென்று ஒளிந்து கொள்வாள்.
“காமாட்சி் நேரம் ஆச்சு கெளம்பு.” என்று அவசரப் படுத்திய அவளது அம்மா, “இன்னைக்காவது உன் கண்ணுல இருந்து தண்ணி வருமா?” என்று கேட்டாள். பதில் ஏதும் கூறாமல் கணினியை மூடி வைத்தாள். இன்று பெரியம்மாவிற்குப் பதினாறாம் நாள் திதி. அம்மா சொன்ன வார்த்தைகள் அவளது சிந்தையின் கடைசி அறையில் போய் அமர்ந்து கொண்டது. ஏனெனில், விழிகளை மூடியபடி காமாட்சி, தன் மனத்தின் ஓர் அறையில் அப்பாவோடு ஓடிக் கொண்டிருந்தாள். இல்லை. ஆடிக் கொண்டிருந்தாள். “தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்” என்று அப்பா, பாடிக்கொண்டே ஆடிய நினைவுகளில் உலாவிக் கொண்டிருந்தாள். காமாட்சிக்கு அப்பொழுது ஐந்து வயது. அப்பா தனது பெரிய தொப்பையின் மேல் காமாட்சியை அமர்த்திக் கொண்டு பாடிக்கொண்டே ஆடிக்கொண்டிருந்தார்.
சிறு வயதில் காமாட்சியின் உலகம் என்பது பள்ளியும், தோழர்களும், தோழிகளும், அப்பாவும், அம்மாவும்.
கண்டிப்பான அம்மா, செல்லம் மட்டுமே தரும் அப்பா. அப்பாவிற்குக் காமாட்சி தான் உயிர். காமாட்சி ஐந்து நிமிடம் தொடர்ந்து அழுதால், ஐந்து நிமிடங்கள் தாண்டிய அடுத்த நொடியில் அப்பாவும் அழுது கொண்டிருப்பார். அவளுக்கு மட்டுமே அந்த அன்பின் ஸ்பரிசம் புரியும்.
மனக்கிடங்கின் மற்றொரு அறையில் அப்பாவின் அழுகுரல் கேட்க அங்கே ஓடினாள்…
மேரு ஹாஸ்பிடலின் ஆபரேசன் தியேட்டர் முன் அப்பாவும் அம்மாவும் அமர்ந்திருந்தனர். காமாட்சிக்கு டான்சல்ஸ் ஆபரேஷன் நடக்கப் போகிறது. அம்மா அழவேயில்லை. ஆனால் அப்பா, ஏதோ தன் மகளுக்குக் கேன்சர் ஆப்ரேஷன் நடக்கப் போவது போல அழுது கொண்டிருந்தார். அவருக்கு அம்மா சமாதான வார்த்தைகள் சொல்லித் தேற்றிக் கொண்டிருந்தாள்.
மற்றொரு அறையில் அம்மாவின் தொலைப்பேசி உரையாடல் கேட்க, அங்கே சென்றாள்…
அம்மா தாத்தாவோடு பேசிக் கொண்டிருந்தாள். பள்ளி விடுமுறை நாட்களில் அரங்கேறும் கூத்து அது. ஒவ்வொரு ஆண்டும் பள்ளியின் முழுஆண்டு விடுமுறைக்குத் தன் தாத்தா ஊருக்குச் செல்வாள் காமாட்சிசுந்தரி. சென்றடைந்ததிலிருந்து மூன்றாவது நாள் தொலைப்பேசியில் தாத்தா அழைப்பார் அவளது அம்மாவை, ‘காமாட்சிக்குக் காய்ச்சல்’ என்று. அம்மா வந்து திரும்பிக் கூட்டிச் செல்லும் வழியில் பாதி காய்ச்சல் ஓடி விடும். அப்பாவைக் கண்டதும் மீதியும் பறந்து விடும்.
“என்னடா குட்டி. ஏன் காய்ச்சல்?” அப்பா கேட்க,
“நீ அங்க இல்லயேப்பா” என்று கண்ணீர் முட்டும் காமாட்சியின் விழிகளில். அதில் அப்பாவின் கண்ணீரும் கலந்துவிடும்.
“இவளுக்கு வெறும் வாய் மட்டும் தான் அம்மா அம்மான்னு சொல்லும். மனசெல்லாம் அப்பா தான்.” அம்மாவின் பொறாமை மிகுந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே வெளியே வந்தாள்.
காற்றில் ஆடும் தென்னங்கீற்றின் ஓசை வந்த திசையில் திரும்பி அவ்வறையைத் திறந்தாள். பச்சைப் பசேல் என்று நீட்ட நீட்டமாக வளர்ந்த தென்னங்கீற்று உள்ளே செல்ல வழி விடாமல் படர்ந்து இருந்தது. அதன் கிளைகளில் ஒன்றைப் பிடித்து ஏறிச் சென்றவள் மரத்தின் கிளைகளின் நடுவில் அமர்ந்து கொண்டாள். காற்றின் விசையில் மேல் நோக்கிய பெண்டுலம் போல இடமும் வலமும் ஆடிக் கொண்டிருந்தது அத்தென்னைமரம். கீழே எட்டிப் பார்த்தாள்.
தென்னை மரத்தின் அடியில் தன் பொம்மையைக் குளிப்பாட்டி விளையாடிக் கொண்டிருந்தாள் ஏழு வயது நிரம்பிய காமாட்சி. காற்றின் விசையில் ஒரு காய்ந்த தேங்காய் அம்மரத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு கீழே சென்று கொண்டிருந்தது. செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்த அப்பாவின் கண்ணில் அது பட, அதற்கு நேரே அமர்ந்திருந்த தன் மகளின் சிரம் காக்க காற்றை எதிர் கொண்டு பறந்து வந்து தேங்காயைப் பிடித்தபடி தன் இடுப்பையும் ஒடித்துக் கொண்ட அவர் தான் அவளுக்கு சூப்பர் மேன்.
தென்னங்கிளையைப் பிடித்த படி அவ்வறையை விட்டு வெளியே வந்தாள் காமாட்சி. பிறகு “ம்… “ கொட்டும் தன் குரல் வந்த அறையைத் திறந்தாள்…
இருட்டாக இருந்தது. மெல்லிய இரவு-விளக்கு மின்னிக் கொண்டிருந்தது. அவ்வொளியோடு அப்பாவின் குரல் கேட்டது. “தங்கம், வைரம், முத்து, பவளம், வைடூரியம், மாணிக்கம், கோமேதகம்” என்று தனக்குத் தெரிந்த விலையுயர்ந்த கற்களின் பெயரை ஒவ்வொன்றாக அப்பா சொல்ல, அதற்கு “ம்” கொட்டிக் கொண்டே உறங்கிக் கொண்டிருந்தாள் காமாட்சி. அப்பாவுக்குத் தெரிந்த தாலாட்டு அது மட்டுமே.
இரவுகள் அனைத்தும் இப்படியாக அவள் உறங்கியதில்லை. நித்தம் சிற்சில வாக்குவாதங்கள் அம்மாவுக்கும் அப்பாவுக்கும். சில சமயம் சண்டை பெரிதாகும். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இடையே பரஸ்பர அன்பைத் தாண்டிய எதிர்பார்ப்பின் எல்லைக் கோடுகள் மிக நீளம். அதில் அப்பா கோட்டின் ஒரு முனை. அம்மா எதிர் முனை. இடையில் காமாட்சி. எத்தனையோ இரவுகள் இவர்கள் இருவரையும் சமாதானம் செய்ய இயலாமல் அயர்ச்சியில் உறங்கிப்போயிருக்கிறாள்…
ஓசை எழுப்பாமல் அவ்வறையை விட்டு வெளியேறினாள்.
வெளியே வந்ததும் சில்லென்ற வேப்பமரக் காற்று வீசியது. சட்டென வேப்ப மரக் கிளைகள் அவளைச் சுற்றிப் படர்ந்து அவளை இழுத்தது. வேப்பமரம் இட்டுச் செல்வது ஞாயிற்றுக்கிழமைக்கு என்று அவளுக்குத் தெரியும். காமாட்சியை அம்மரம் தன் கிளைகளில் ஒன்றின் மீது அமர்த்திக் கொண்டது. கிளையின் மேல் அமர்ந்தபடி கீழே நடப்பதைப் பார்த்து ரசித்தாள்…
வாரத்தின் ஏழு தினங்களில் ஞாயிற்றுக்கிழமை என்றால் காமாட்சிக்கு ஒரு ஆத்மார்த்த ஆனந்தம். ஞாயிற்றுக் கிழமைகளில் அப்பா, மது அருந்திவிட்டுக் கறிக்குழம்போடு உணவருந்திய பின், வேப்பமரத்தடியில் இளைப்பாறக் கயிற்றுக் கட்டிலில் படுத்துக் கொள்வார். காமாட்சி, அப்பாவின் தொப்பை மேல் தலை சாய்த்துக் கொண்டு அப்பா சொல்லும் கதைகளைக் கேட்பதற்குத் தயாராக இருப்பாள். வேப்பமரமும் ‘அந்தக் கதைகளைக் கேட்க நானும் ரெடி’ என்று கூறுவதைப் போல சாமரமாக உருவெடுத்துக் காற்று வீசும். பல்லாயிரம் முறை கேட்டாலும் காமாட்சிக்கு சலிக்காத கதைகள் அவை. கிளையின் மேல் தலை சாய்ந்திருந்தபடி இருந்த காமாட்சியும் கதை கேட்கத் தயாரானாள்…
அப்பா துவங்கினார்…
“உன் தாத்தா இருக்காரே, என்னய மாதிரி எல்லாம் இல்லடா குட்டி. ரொம்ப ஸ்ட்ரிக்ட். பேண்ட்ட கழட்டி விட்டு தொடையிலயே அடிப்பாரு. நீ தெனமும் எட்டணா வாங்கிட்டுப் போறியே அப்பாகிட்ட இருந்து, ஆனா எனக்கும் பெரியப்பாவுக்கும் தினமும் ஆறு சிட்டம் நூல் சுத்தினா தான் சாப்பாடே தருவாரு.” “உன் பாட்டி…” என்று ஆரம்பித்துவிட்டு எட்டிப் பார்த்துக் கொண்டார் அம்மா வருகிறாளா என்று. தணிந்த குரலில், “பாட்டியோட கைமணம் இருக்கே, யப்பா! கோயமுத்தூர் பஸ் ஸ்டாண்டு வர மணம் வீசும்டா குட்டி.” என்று புகழ்ந்து தள்ளினார். “அப்போ அம்மா சமையல்?” என்று காமாட்சி கேட்க , “ம்க்கும்.. உங்கம்மா வெச்ச கொழம்புச் சட்டிக்குள்ள குதிச்சு எந்துருச்சாக் கூட மணம் வராது” என்று அப்பா கூற இருவரும் குலுங்கிச் சிரித்தார்கள். சிரிக்கும் பொழுது அப்பாவின் தொப்பை மேலும் கீழும் ட்ராம்போலைன் போலக் குதிக்க, அதன் மேல் இருந்த காமாட்சியின் தலையும் குலுங்கிக் குதித்தது.
அப்பா, அவரது அண்ணனைப் பற்றியும் அவருடைய அண்ணனின் ஐந்து பிள்ளைகள் பற்றியும் நிறைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார் காமாட்சியிடம். அவர்கள் அனைவருமே காமாட்சிக்குக் கற்பனை பிம்பங்கள். அப்பாவின் அண்ணனின் குடும்பத்தைக் காமாட்சி கண்டதில்லை. “ஏதோ சாதியாம், கீழ மேலன்னு. எனக்கு ஒன்னும் புரியல.” என்பாள் பள்ளித் தோழிகளிடம். அவளுடைய பெரியப்பா பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அவளுள் இல்லாமல் இல்லை. இருப்பினும் எல்லோருக்கும் மேல் காமாட்சிக்கு அவளது அப்பா தான் உயிர். அவளது உலகத்தில் அவள் சுவாசிக்க அப்பா மட்டுமே போதுமானவராக இருந்தார்.
அவர் கூறும் கதைகளிலேயே அவளுக்குப் பிடித்தமான பகுதி அவளது பெரியப்பா-பெரியம்மாவிற்குப் பிறந்த முதல் மகள் பற்றிய வரலாறு.
“அப்போ அப்பா காலேஜூ படிச்சுட்டு இருந்தேன்டா குட்டி. அண்ணிக்கு அதாவது உன் பெரியம்மாவுக்கு மொதல் பிரசவம். காலேஜூ முடிஞ்ச ஒடனே ஓடினேன் ஆஸ்பத்திரிக்கு. ஒரு குட்டி ஊஞ்சல்ல, செவப்பா, சின்னதா ஒரு உருவம். கண்ண மூடித் தூங்கிட்டு இருந்துச்சு. என்னா முடி!. கரு கருன்னு.”
“என்ன மாதிரியாப்பா?”
“ஆமாடா குட்டி. உன்ன மாதிரியே தான்.”
“ஆனா நான் செவப்பா இல்லியேப்பா”
“நீ கருப்பு வைரமடா” என்று திருஷ்டி எடுத்துக்கொண்டே ஒரு முத்தமிட்டு, “அப்போ பாப்பா தூங்கிட்டு இருந்தா. நான் தூக்கப் போனேனா. அப்போ அண்ணி சொன்னாங்க, ‘ தம்பி, இப்போ தான் அழுது அழுது ஒரு வழியா தூங்கினா’ அப்புடீன்னு. நான் தூக்கினா அழ மாட்டா அண்ணின்னு சொல்லி தூக்கினேன் பாரு, கண்ணு மூடின படி தான் இருந்திச்சு ஆனா வாயப் பொளந்துட்டு சிரிச்சா”. இந்த வரியை முடிக்கும் பொழுது அப்பா அழுவார் என்பது காமாட்சிக்குத் தெரியும். கிளையின் மேல் இருந்த காமாட்சியின் கண்ணீரும் கீழே பயணித்து அப்பாவின் கண்ணீரோடு கலந்தது. அப்பாவின் தொப்பை மேல் தலை சாய்ந்து படுத்திருந்த காமாட்சியின் கை அனிச்சையாக அப்பாவின் கண்களைத் துடைக்கச் சென்றது.
“அப்புறம்?” என்று இரு காமாட்சிகளும் குரல் எழுப்ப, அப்பாவின் தொப்பை மேல் இருந்த காமாட்சி அன்னாந்து பார்த்தாள். வேப்ப மரத்தின் மேல் இருந்த காமாட்சி கிளைகளுக்குள் ஒளிந்து கொண்டாள்.
அப்பா தொடர்ந்தார்…
“பெரியம்மாவுக்கு ஒரே ஆச்சர்யம். சித்தப்பா தூக்கினதும் சிரிக்குறா பாருன்னு என்னையே பேரு வைக்கச் சொன்னாங்க. அந்த அழகான சிருச்ச மொகத்துக்கு அப்பா வச்சப் பேரு என்ன?” என்று கேட்க, “காமாட்சிசுந்தரி” என்று இரு காமாட்சிகளும் ஒன்றாக ராகம் பாடினார்கள்.
தன் அண்ணன் மகளின் மீது எல்லையில்லா அன்போடு இருந்தார் அப்பா. அவள் பிறந்து ஒரு வருடம் கழிந்து யாரும் எதிர்பாராமல், உடல்நலக் குறைவால் இறந்து போனாள் அவள். இறந்த பின் சில நாட்கள் கழித்து, ஒரு முறை அப்பாவின் கனவில் காமாட்சிசுந்தரி வந்து, அவள் இறந்த நாளன்று மௌனவிரதம் இருந்து தன் கல்லறைக்கு வந்தால் அவளே அவருக்கு மகளாகப் பிறப்பாள் என்று கூறினாளாம். அதன்படி அப்பா ஒவ்வொரு வருடமும் அவள் கனவில் சொன்னதைக் கடைபிடித்தார். திருமணத்திற்குப் பிறகு தனக்குப் பிறந்த மகளுக்குக் ‘காமாட்சிசுந்தரி’ என்று பெயரிட்டார். அவருடைய சொந்தங்கள் யாரும் அவர் கண்ட கனவை நம்பவில்லை. ‘எல்லாமே காலம் உணர்த்தும் டா குட்டி’ அப்பா எப்போதும் சொல்லும் வாக்கியம்.
‘குட்டி’. எப்பொழுதுமே காமாட்சி, அப்பாவுக்குக் ‘குட்டி’ தான். அவளது பெயரிட்டு அழைத்த நினைவு என்று ஒன்று கூட இல்லை காமாட்சிக்கு. வேப்பமரம் காமாட்சியை ஞாயிற்றுக்கிழமையை விட்டு வெளியே இறக்கி விட்டது.
“அப்பா” என்று பன்னிரண்டு வயது காமாட்சியின் அழுகுரல் வந்த திசையில் திரும்பினாள்… தயங்கிக் கொண்டே அந்த அறைக்குள் சென்றாள்…
புதிய வீடு. அதுவரை அவளது பாதங்கள் பதிந்திடாத வீடு. அவளது அப்பாவின் பிறந்த வீடு. எரிந்த கல் கீழே விழாத அளவிற்குக் கூட்டம். கூடி இருந்தவா்கள் வழி விட முன்னேறிச் சென்றாள் காமாட்சி. சுற்றும் முற்றும் பார்த்தாள். கூடி நின்று கொண்டிருந்த அனைவரிலும் தன் அப்பாவின் சாயல்கள் நிரம்பி வழிந்தன.
நடு வீட்டில் அப்பா புன்னகையோடு படுத்திருந்தார். வெண்ணிற மேல்சட்டை. நீல நிற கால்சட்டை. இரண்டும் அவரது முந்தய வருட பிறந்த நாளுக்கு அம்மா வாங்கிப் பரிசளித்தது. ஆனால் அது காமாட்சி தேர்ந்தெடுத்தது. அவரது தொப்பை மேல் இணைந்திருந்தபடி இருந்த அவரது விரல்களைத் தொட்டாள். சில்லென்று இருந்தது. அப்பாவுக்கு சூடாக இருப்பது தான் பிடிக்கும். சின்ன மழைக்காலக் குளிர் கூட அவருக்கு ஆகாது. தன் இரு கைகளைக் கொண்டு தேய்த்து சூடு கொடுக்க முயன்றாள். சற்று பார்வையை நிமிர்த்தி முகத்தைப் பார்த்தாள். விழிகளை மூடிப் படுத்திருந்தார் அப்பா. நாசிகளில் வெள்ளைப் பஞ்சும், தலையில் இருக்கிக் கட்டப் பட்டிருந்த வெள்ளைத் துணியையும் கண்டாள். அவரது கன்னங்களுக்குத் தன் உள்ளங்கைகளைக் கொடுத்து
“அப்பா” என்றாள்.
“அய்யோ!!!” என்று கூடியிருந்த அனைவரும் அழத் துவங்கினார்கள்.
கிள்ளிப் பார்த்தாள். அடித்துப் பார்த்தாள் . அப்பா எழவில்லை. “அப்பா என்னய விட்டுப் போயிட்டியா?” என்று அவரது மார்பின் மீது தலை சாய்த்துப் படுத்து அழுதாள்.
“காமாட்சி… காமாட்சி…” என்று அம்மாவின் குரல் வந்த திசையில் திரும்பிப் பார்த்தாள். அம்மா அருகில் இல்லை. ஆனால் அம்மாவின் குரல் மட்டும் மிக அருகில் கேட்டது. அவளது உடல் திடீரெனக் குலுங்கியது. சட்டென முழிப்பு வர, அம்மா அவளை எழுப்பிக் கொண்டிருப்பதை உணர்ந்தவள் எழுந்து அமர்ந்தாள். “என்ன தூக்கம்?. மொகங் கழுவிட்டு வா, போகலாம்” என்று கட்டளை இட்டுச் சென்ற அம்மாவையே பார்த்துக் கொண்டிருந்தாள் சில மணித்துளிகள்.
அப்பா இறந்த பிறகு அம்மா தன் உலகைக் குறுக்கிச் சுருக்கிக் கொண்டாள். இதயத்தைக் கடினமாக இறுக்கிக் கொண்டாள். அதற்கான அர்த்தம் அந்த சிறு வயதில் காமாட்சிக்கு விளங்கவில்லை. அப்பா இல்லாத அந்த வெற்றிடம் மிகவும் பாரமாக இருந்தது அவளுக்கு. அவளைக் ‘குட்டி’ என்றழைக்க எவருமில்லை. ஞாயிற்றுக்கிழமைகள் பெருஞ்சுமையாக மாறின. காலியான கயிற்றுக் கட்டிலையும் எதிர் கொள்ள முடியவில்லை. வேப்பமரம் கூட காற்று வீச மாட்டேன் என உறைந்துவிட்டதைப் போல் தோன்றியது அவளுக்கு. அவர் இல்லாமல் ஏதோ மாய வெளியில் பயணிப்பது போல் இருந்தது. அவரைத் தேட முயன்றாள். அப்பாவின் சாயலோடு இருந்த சொந்தங்களைக் காணும் பொழுது மகிழ்ச்சி அடைந்தாள். ஆனால் அவர்களுள் அவளது அப்பா இல்லை என்பதை உணர எண்ணற்றக் கசப்பான நிகழ்வுகளை அவள் கடந்து வர வேண்டியிருந்தது. அவர்களோடு தன்னையும் ஒன்றாக்கிக் கொள்ள முயற்சித்து, முயற்சித்துத் தோற்றுப் போனாள். ‘நீ எவ்வளவு முயன்றாலும் எங்களில் ஒன்றாக முடியாது’ என ஒவ்வொரு முறையும் பல்வேறு வகைகளால் நினைவுருத்தப்பட்டாள். அப்பா இல்லாத அந்த வெறுமையின் ஆழம் நீண்டு கொண்டே செல்வது கண்டாள். அண்ணன்களும் அக்காள்களும் கட்டுப்பாடுகளைத் தாண்டி தங்களால் இயன்றவரை அரவணைத்த போதிலும் காமாட்சிக்கு ஏனோ எல்லோரையும் விட பெரியம்மாவின் மனதில் இடம் பிடிக்கவே மனம் ஏங்கியது. ஆனால் பெரியம்மாவிற்கோ காமாட்சியின் மீது விஷேச வெறுப்பு இருந்தது. குறிப்பாக அவளது நினைவில் இன்னமும் வலியூட்டிக் கொண்டிருக்கும் நிகழ்வுகளில் ஒன்று, தன் அம்மாவின் கையில் ஆசிட் பாட்டிலைக் கொடுத்து அவர்களது வீட்டுக் கழிவறையைக் கழுவச் சொன்னதும், உணவருந்தும் பொழுது கீழே அமரச் செய்து பிரத்யேகமாக ஒடுங்கிய தட்டில் உணவு பரிமாரப்பட்டதும் தான். அப்பொழுதெல்லாம் காமாட்சி நினைத்து ஏங்குவது, ‘அப்பா உயிரோடு இருந்திருந்தால்…’
அப்பா உயிரோடு இருந்திருந்தால் யாரும் ஒரு சொல் அவளை சொல்ல விட மாட்டார். அம்மா கண்டித்து அவள் அழுதால் கூட தாங்க மாட்டார். அதனால் அப்பாவின் முன் அம்மா, காமாட்சியை ஏதும் சொல்ல மாட்டாள். ஒரு முறை பேருந்து நிலையத்தில் அப்பா-அம்மாவோடு காமாட்சி நின்றிருக்க அவர்களைக் கடந்து சென்ற பக்கத்து வீட்டுக்காரர் வணக்கம் சொல்லி பேச்சுக் கொடுத்தார் அப்பாவிடம். அப்பொழுது காமாட்சியைப் பார்த்து “என்ன காமாச்சி, மஞ்சள் இவ்ளோ பூசி இருக்க. மஞ்சள் அள்ளி பூசினா நீ வெள்ளை ஆயுடுவன்னு யாராவது சொன்னாங்களா?” என்று அவர் கேலி செய்ய, அப்பா கடுஞ்சினங் கொண்டு, “என்ன தைரியம் இருந்தா எம் பொண்ண என் முன்னாடியே கேலி பண்ணுவ” என்று அடி பொறட்டி எடுத்தார் அவரை.
அவளது வாழ்க்கைப் பயணத்தில் எத்தனையோ வசை வார்த்தைகள் அப்பாவைப் பற்றிக் கேட்க வேண்டி இருந்தது. அவர்கள் சொல்வதும் உண்மையாகவே இருந்திருக்கலாம். மனிதர்களின் பிம்பம் பல்வேறு வகையானது. அவன் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது. அவர்கள் கண்ட அப்பா எப்படி என்பது பற்றி காமாட்சிக்குக் கவலை இல்லை. உடனிருக்கும் அனைவரையும் அன்பால் அரவணைக்கும் தன்மை ஒரு சிலருக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. அவளைப் பொறுத்த வரையில் அப்பா ஓர் பாச நீர் வீழ்ச்சி. அவர் அன்பால் அரவணைக்கும் காற்று. அந்த நீர் வீழ்ச்சியில் நனைந்து, காற்றை சுவாசித்தவர்களால் இதை மறுக்க இயலாது. மற்றவர்களுக்காக மறுப்பினும் அவர்களது ஆழ் மனதில் அவ்வன்பிற்கு நன்றி செலுத்தாமல் இருக்க இயலாது.
வயது முதிர்வு அடைந்து கொண்டே வரும் பொழுது சிந்தையிலும் அது பிரதிபலித்தது காமாட்சிக்கு.
அப்பா ஒரு சுலபமான துரித உணவாக அனைவரது உரையாடல்களிலும் இருப்பது ஆச்சரியமாக இருந்தது அவளுக்கு. அதற்கு இரு காரணங்கள் என்று புரிந்து கொண்டாள். ஒன்று அப்பாவின் வாழ்க்கை, தெளிந்த ஆற்று நீரின் அடியில் தெளிவாகத் தெரியும் கற்களைப் போல. எந்த ஒளிவும் மறைவும் இருந்ததில்லை. அரிதாரங்கள் இல்லாமல் வெளிப்படையாக வாழ்ந்த மனிதன். அதனால் தன்னை யோக்கியவான்களாகக் காட்டிக் கொள்ள அப்பாவின் வாழ்க்கை பயன்பட்டது சிலருக்கு. இரண்டு, ‘செல்வம்’ அவரது பெயரில் இருந்தது ஆனால் பாக்கெட்டில் இல்லை.
பதினாறு தினங்கள் முன்பு காமாட்சி அவளது அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டிருக்கும் பொழுது அம்மா கைப்பேசியில் அழைத்தாள், பெரியம்மா இறந்துவிட்டார்கள் என்று. எந்த அதிர்வும் ஏற்படவில்லை காமாட்சியின் மனதில். அவளுக்கே அது வியப்பாக இருந்தது. சிறிது குற்ற உணர்வாகவும் இருந்தது. ஒரு வேளை அப்பாவின் இழப்புக்குப் பிறகு வேறு எந்த இழப்பும் அவளை பாதிக்கவில்லையா? இல்லை, பெரியம்மா பெரிதாக அன்பு காட்டாததாலும், தன்னை மகளாக ஏற்றுக் கொள்ளவில்லை என்பதாலும் வலிக்கவில்லையா என்று புரியவில்லை அவளுக்கு. பெரியம்மாவைச் சுற்றி நின்று அவர்களது இரு மகன்களும் இரு மகள்களும் புலம்பிக் கொண்டே கண்ணீர் வடிக்கும் காட்சி கூட அவளது விழி வழியே கண்ணீரை வரவழைக்கவில்லை.
இன்று பெரியம்மாவை அடக்கம் செய்த பதினாறாம் நாளும் வந்துவிட்டது. அவர்களது வீட்டை அடைந்ததும், வழக்கம் போல் அம்மா சமையலறைக்குள் மறைந்தாள்.
வராண்டாவில் இருந்த பெரியப்பா, ‘பூசாரியை அழைத்து சடங்கு நடந்து கொண்டிருப்பதாகவும், அவர்களது நான்கு பிள்ளைகள் மட்டும் ஒரு அறையில் பூஜையை நடத்திக் கொண்டிருப்பதாகவும்’ கூறினார். காமாட்சி வீட்டின் உள்ளே சென்றாள். பூஜை நடந்து கொண்டிருந்த அவ்வறையைக் கடக்கும் பொழுது ஏதோ ஒரு விசை அவளை நிற்கச் செய்தது. “காமாட்சி” என்று யாரோ அவளை அழைப்பது போலத் தோன்ற, நின்றாள். தலை சுற்றுவது போல் உணர்ந்தாள். அருகில் இருந்த தூணைப் பிடித்து சாய்ந்து கொண்டாள். மீண்டும் அந்தக் குரல் கேட்டது. கண்களை மூடி அக்குரலை அடையாளம் காண முயன்றாள். பெரியம்மாவின் சிரித்த முகம் மங்கலாகத் தோன்றியது. மொட்டை மாடியில் அமர்ந்திருந்த பெரியம்மா தன் அழகான பல் வரிசையைக் கொண்டு சிரித்தார். தான் பெற்ற பிள்ளைகள் நால்வருக்கும் நிலாச் சோறு ஊட்டிக் கொண்டிருந்த பெரியம்மாவைக் கண்டாள். தனக்கும் அவ்வுணவில் பெரியம்மாவின் கையால் ஒரு உருண்டை கிடைக்குமா என்று ஏங்கிக் கொண்டே அவர்கள் அருகில் செல்லச் செல்ல இதயத்தின் துடிப்பு அதிகரிப்பது போல் உணர்ந்தாள். மீண்டும் “காமாட்சி” என்று தன்னை அழைக்கும் குரல். இது அக்காவினுடையது. கண் விழித்துப் பார்த்தாள்.
பூஜை நடந்து கொண்டிருந்த அறையின் கதவு திறந்திருந்தது. அக்கதவருகில் அக்கா நின்றிருந்தாள். நான்கு பேரின் முகத்திலும் ஒரு வித அதிர்ச்சி பரவியிருந்தது. நால்வரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களின் பார்வையின் அர்த்தம் புரியவில்லை காமாட்சிக்கு. அங்கிருந்து நகர்ந்து போவதா வேண்டாமா என்று குழப்பமாக இருந்தது. கதவைப் பிடித்தபடி நின்றிருந்த பெரியம்மாவின் முதல் மகள் கரம் நீட்டினாள்,
“காமாட்சி, உள்ள வா மா” என்று. அவளது கரம் பற்றி உள்ளே சென்றாள் காமாட்சி. அவர்களோடு அவளும் பூஜையில் கலந்து கொண்டாள்.
பூஜை முடிந்ததும் ஏன் அவளை உள்ளே அழைத்தார்கள் என்று அண்ணன்களும் அக்காள்களும் பகிர்ந்து கொண்டார்கள்.
‘உங்க அம்மாவுக்கு எத்தனை பிள்ளைகள்?’ என்று பூசாரி கேட்க, நான்கு என்று அக்கா கூறியிருக்கிறாள். அதை மறுத்த அண்ணன், ஐந்து பிள்ளைகள். முதலில் ஒரு பெண் பிள்ளை பிறந்து ஒரு வருடத்தில் இறந்துவிட்டதாகக் கூறியிருக்கிறான். உடனே பூசாரி அந்தப் பெண்ணின் இடத்தில் ஒரு பெண்ணை நிறுத்தி பூஜை செய்ய வேண்டும். கதவைத் திறந்ததும் உங்கள் கண்ணில் படும் முதல் பெண்ணை உள்ளே அழைத்து வரும்படி சொல்லியிருக்கிறார். அக்கா கதவைத் திறக்கும் பொழுது நின்றிருந்தது, காமாட்சிசுந்தரி.
காமாட்சியை நால்வரும் அணைத்துக் கொண்டு, “கடைசியா அம்மா உன்னய தன் மகளா ஏத்துக்கிட்டாங்க பாரு. சித்தப்பா கண்ட கனவு உண்ம தான். நீ எங்க அக்கா காமாட்சிசுந்தரி தான்” என்று கூறி அழ, அவர்களின் அணைப்பிற்குள் அவள் கண் மூடி மூழ்கும் பொழுது , அப்பாவின் பிம்பத்தை உணர்ந்தாள். ‘எல்லாமே காலம் உணர்த்தும் டா குட்டி’ என்ற அப்பாவின் சொற்களும், காலையில் தன் சிந்தையின் கடைசி அறையில் ஒளித்து வைத்திருந்த அம்மாவின் வார்த்தைகளும் ஒரு சேரக் கலந்திட காமாட்சியின் கண்களிலும் நீர் பெருக்கெடுத்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
