அரா கவிதைகள் 

(1)

அன்பு
கருணை
சமரசம்
சமாதானம்
இன்னும் பிறவற்றையும் செலவழித்துவிட்டு
வலையைத் தூக்கிய வேடனென
மாங்ரோ காட்டிற்குள் புகுந்திடவும்
சந்தன மர புதையல் பெட்டி
பதுங்கிப் புதைந்திடும் சப்தம் கண்டு
திரும்பியதும்
மேல் வளையம் நெழிந்த பூட்டு மினுக்குகிறது

பெட்டிக்குள் இருக்கும்
புதையலைக் காண
பூட்டை உடைத்தாக வேண்டும்.
கருணையை செலவழித்துவிட்ட கருணாகரனாக
பூட்டைப் பார்க்கவும்
தலையும் முண்டமுமாக சாவியின்றி விழுந்து
பூட்டு செத்தது

கை கால் உதற கழுத்தை எவரோ
நெறிப்பதும்
குற்றவுணர்வின் குவியலில்
புதைபடுவதுமான எண்ணம்
புழுதி பறக்க சூழ்ந்திட
கண்முன்னிருக்கும் பிரமீடுக்குள்
கிரீடம் சூடியவனின்
வறண்டு உதிரும் சிரிப்புக்கான அர்த்தம்
தாகமெடுக்கிறது

கண்ணை மூடி இருள் கண்டு திறந்து
சந்தன வாடை கப்பென்று வீச
பெட்டியைத் திறந்தால்
முட்டைகளின் நறுமணம்

வண்ணங்கள் தீட்டப்பட்ட
ஓவியங்கள் வரையப்பட்ட முட்டைகளுக்குள்
அசையும் உயிரை அணைக்க தவமிருந்து
தலைமுடி வலித்து
வெறி
வேட்கை
ஆவல்
வேட்டை குணத்தோடு நிற்கிறேன்

வலையில் சிக்கிய காடை
ஒரு கண்ணிலும்
ஆடிக்கொண்டிருக்கும் முட்டைகள்
மறு கண்ணிலும்
மங்கலாய்த் தெரியுமளவு
விசிறியடிக்கப்பட்ட முட்டைக்குள்ளிருந்து
சூரியன்கள் பிறக்கின்றன
ஒளி சூழ்கிறது
பயம் சூழ்கிறது
கண்கள் கூசுவதால்
இருள் வடியும் கீறலை நோக்கிப் பாய
முடியவில்லை
அம்மணமாகிறேன்
அருவருப்புகள் மீதான வெளிச்சம்
என்னைக் குலைக்கிறது

வேறொரு முட்டையை எடுத்துடைத்தால்
சந்திரன்கள் பிறக்கலாம்
நட்சத்திரங்கள் பிறக்கலாம்
நெருப்பு பிறக்கலாம்
எத்தனை எத்தனை ஒளிக்கேயான
சாத்தியங்கள்
புதையைலைப் போட்டுவிட்டு
வலையைத் தூக்கச் செல்லும் தூரத்திற்குள்
நிழலாடிப் பறக்கும் சூரியன்
கண்ணுக்குள் பதிந்தது


(2)

சிலுவை கிராதி பொருத்தப்பட்ட
சாளரத்திற்குப் பின்னான
தள்ளு கண்ணாடிக் கதவு மூடப்பட்டது
இரவு நேரத்தில் மனப்பிறழ்வடையும்
ஓநாய் மனிதனின்
நவரச நடிகனின்
சிறைக்கூடான அறையின் கதவென அறியாது
மாட்டிக்கொண்ட வண்ணத்துப்பூச்சிக்கு
இலவச திடுக்கிடும் காட்சிகளாலான
ஓரங்க நாடகம் பார்க்கும் ஒற்றைநாள் இரவு
செதில் முள் நெஞ்சில் பாய்ந்து தைக்க
தடவிக்கொண்டே தொடங்கியது

பயத்தின் கவுச்சி வாடை
சுவர் முழுக்க சிலந்திக்கூட்டில்
தொங்கி ஆடுகிறது
அரைமணி நேரத்திற்கொரு முறை
சுற்றாமல் நின்றுவிடும் மின்விசிறி
நாடகக்காட்சிகளின் தொடக்கத்தையும் முடிவையும்
அறிவிக்கும் சைகை
மின்விசிறி மீண்டுமாக
சுழலத் தொடங்கும் இடைவெளியில்
ஓய்வற்ற பாவனைகளாலான
இறுகிய நாடகம் ஏறி இறங்கும்

பட்டாம்பூச்சியின் பயம்
பக்கவாட்டில் தள்ளும் கதவை
எதிர்நோக்கித் தள்ளுகிறது
எப்பயனும் இல்லை.
எப்பயணமும் இன்றிரவு இல்லை
சோர்வில் உட்கார்ந்தால்
திடுக்கிடும் காட்சிகளில் ஒளிந்துள்ள
சார்லி சாப்ளின் அசைவுகளும்
மிஸ்டர் பீனின் கிறுக்குத்தனமும்
கிச்சு கிச்சு மூட்டும் நேரத்தில்
மூச்சையடக்கி மூர்ச்சை கொள்ளும்
தேம்பல் ஒலி

கரப்பான்பூச்சி நடிகன் பட்டாம்பூச்சியை
வளைத்துப் பிடித்து
சதுர அறையில் நடிக்கிறான்
முழு இரவும் ஓய்வற்ற நிகழ்வில்
வியர்வை ஒழுக
பழுப்பேறிய கரப்பான் உடலைத்
தழுவ முடியாமல்
பட்டாம்பூச்சி வழுகிப் பறக்கும்

காலைப் பொழுதின் சூட்டில்
பூட்டிய அறையிலிருந்து
சுடச்சுட புதிய மனிதன் ஒருவன்
கதவைத் தள்ளித் திறக்க
ஒருமுறை கூட திரும்பாது
தப்பித்தோம் பிழைத்தோமென
முன்னோக்கி பறக்கிறது பட்டாம்பூச்சி
மீண்டும் முளைக்கிறது கரப்பான் சிறகு


(3)

துளியைக் கீறி பார்க்கிறேன்
பிளந்த துளிக்குள்
ஒரு முட்டை
பளபளத்து நெழியுமென
நான் பார்த்துக் கொண்டே
இருக்கிறேன்

பறக்கும் இறகின்
சிறு ரோமம்
வைத்து தான்
துளியைப் பிரித்தேன்

கிண்டிப் பார்க்க தேடினால்
ரோமத்தை
காணவில்லை
எங்கே போய் ஒளிந்ததோ

செம்பட்டையும் நரையுமாக
இடப்பக்க முகத் தாடையில்
நீண்டு தனித்தே தெரிந்த
மயிரைப் பிடுங்கி
கடாவும் போது
மயிர் வெந்து போனது

இப்போது மெல்லிய றெக்கைக்கு
நான் எங்கே போவது
மற்றொரு மயிரும்
அதே நிறத்தில் இல்லை
பிடுங்கி பார்ப்பதற்கு


(4)

அடித்து மூடும் மின்தூக்கியின்
கதவுகளான காதலில்
ஏறிச் செல்லும் பரவசமும்
தடுக்கி தடுக்கி கீழிறங்கும்
நொடிகளின் திகிலும்
குப்புறத் தள்ளுகிறது
கால்விரல்கள் தரையை முத்தமிட
படுத்திருக்கிறேன்
அடித்தளத்தில் பூத்த முற்கள்
நுனி விஷத்தின் வலுவலுப்பு மினுங்க
உடலெங்கும் ஏறுகிறது
கருநுனியின் விட்ட வளைவில்
குத்தி படலம் முழுக்க
செம்மை பாய்கிறது

வலப்பக்க தோள்பட்டை மச்சம்
இடப்பக்க தோள்பட்டை மச்சத்தோடு மடங்கி
உறவாடும் முன்பே
சதையின் புள்ளிகள் பிய்த்தெறியப்பட்டன
தரைத்தளத்திற்கும் கீழிறங்கி
அடக்கமாகச் செல்லும் பெட்டி
தன் விளக்குகளையெல்லாம்
வண்ணம் பிடுங்கி ஆட்டத்துடன் ஒளிர்கிறது
அடியில் கிடக்கும் முட்களுக்கு
மேலே கிடக்கும் கச்சா உடல்
முள்மேல் கை ஊன்றி ஏறுகிறது
நகக்கண்கள் பிய்ந்து
வண்டுகள் துளையிட்ட வெற்றுக் கனியின்
வாசம் பரவ ரத்தம் கட்டி நிற்கிறேன்

பாதங்கள் முழுக்க குழி விழுந்தன
சதைக்குள் இருக்கும் எலும்புகளை
முட்கள் அரமிட்டு ராவுகிறது
திக்கென தூக்கிப் போட்டு மேலேறும்
பெட்டிக்குள் இருந்த முட்கள் உள்வாங்கி
அமைதியுற
கைப்பிடி முழுக்க கறை தீட்டி வெளிவந்தால்
எவனோ ஒருவன் பார்த்து சிரிக்கிறான்
முன்னர் ஒருமுறை என்னோடு லிட்சி குடித்து
பாட்டிலேந்தி உடன் வந்தவனாக இருக்கலாம்
இது என்ன என்று ஏதேனும் தமிழ் அட்டையை நீட்டி
வாசிக்க கேட்டவனாக இருக்கலாம்
வள வள வென்று பேசிக் கூச்சலிடும் பழக்கத்தால்
பழக்கத்தைத் தொலைத்தவனாக இருக்கலாம்
எவரென்று மூளைப்பதிவு அழிந்துவிட்டது
மூளையில் குத்தப்பட்ட கூர் அம்பின்
உடல் மீது பூசப்பட்ட
நிணத்தில் அதன் நினைவுகள்
ஒய்யாரமிட்டிருக்கிறது

பாதக்குழிகளில் கற்கள் வைத்து
சிமெண்ட் அப்புகிறேன்
தண்ணீர் தெளித்துப் பூசுகிறேன்
பொத் பொத்தென நாய் விட்டையாய்
கவலையற்ற சிரிப்பு பிதுங்க
சூன்யமாக குழியின் ஓரத்தில்
கலவை விழுகிறது


Discover more from சொல்வனம் | இதழ் 367 | 24 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.