ராமு

“ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்”,  “ஆர்தர் ஹேய்லி”  எழுதிய ஆங்கில அரிச்சுவடி நாவல்களை தம்பிகட்கு அறிமுகப்படுத்தியவர். 

நெப்போலியன் ஹில், நார்மன் வின்சென்ட் பீல் ஆகியோரைப்பற்றி கேள்விப்படாமலேயே “பாசிட்டிவ் மெண்டல் ஆட்டிட்யூட்” உடையவர். அற்புதமான மெண்டர் (mentor).

“மாப்பிள்ளை பையனுக்கு ரயில்வே உத்யோகம், வருடாந்திரா பாஸில் இந்தியா முழுக்க ஊர் சுற்றலாம், பென்ஷன், “கால் காசு உத்யோகம் என்றாலும் கவர்ன்மெண்ட் உத்யோகம்”, உலக விபரங்கள் தெரிந்தவன், கீதாவிற்கு சூப்பர் பொருத்தம்”, என்று ஆனந்தப்பட்ட மாமா, மாமி, கல்யாணம் பேசி முடிக்க ஒரு நல்ல நாளில் சென்னையிலிருந்து திருச்சி வழியாக நல்லசேலம் கிராமம் வந்திறங்கினர். இப்போது ஊருக்கு மின்சாரம் வந்துவிட்டது. 

ஒரே குறை. கொல்லைக்கு வந்தால் கொல்லைப்புரம்தான் ஒதுங்க வேண்டும். அப்போதெல்லாம் கக்கூஸ் கிடையாது கிராமங்களில். “அதனால் என்ன, கீதா இங்கேயா இருக்கப்போறாள், மாப்பிள்ளைக்குத்தான் மெட்ராஸ் ட்ரான்ஸ்பர் ஆய்டுமே “ என்று மாமா மாமி சமாதானப்பட்டுக்கொண்டனர்.

 பருவ மழை பொழிந்து கிராமம் எங்கும்  பச்சைப் பசேல். மைத்துனர் கிராம கர்ணம் வேறு.  அவருடைய வயல்களையெல்லாம் சுற்றிப்பார்த்துவிட்டு ஒரு நல்ல நேரத்தில் திருமண பேச்சு வார்த்தையை தொடங்கி, அனைவரும் ஆஹா என்று சம்மதித்துவிட்டு அன்று மதியம் தடபுடல் விருந்து. விருந்து முடிந்து மாலை திருச்சி வழியாக சென்னை பயணம். 

விருந்தில் வடை பாயாசம் போளி என்றெல்லாம் அமர்க்களப்பட்டு, பல வருடங்கட்கு பிறகு, பல ஊர்களில் இருந்து வந்த உறவுகள், அதையும் இதையும் உற்சாகமாக அனைவரும் பேசிக்கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது இலையில் கடைசியாக வாழைப்பழம் பரிமாறப்பட்டது. மிகவும் ஆசாரமான பழக்க வழக்கம் கொண்ட மாமி வாழைப்பழத்தை சற்று பெரிய துண்டாக விண்டு “பல்லில் படக்கூடாது”, “கையில் எச்சல் படக்கூடாது” என்று வாயில் நேரடியாக போட்டுக்கொள்ள அது வழுக்கி தொண்டைக்குழியை அடைத்துக்கொள்ள, மாமி மூச்சு விடமுடியாமல், “ஆ! ஆ!“ என்று வாயைப்பிளந்து சில நொடிகளில்  சாகும் விளிம்பிற்கு வந்து  விட்டார். 

ஏதோ விபரீதம் நடக்கின்றது என்று அறிந்த ராமுவின் தமக்கை பத்மாவதி துணிச்சலுடன் மாமியின் வாயில் விரலை  விட்டு எப்படியோ தெய்வ பலத்தால் பழத்துண்டை  வெளியே எடுத்து போட்டாள். 

கல்யாணக்களை கலவரக்களையாகி களேபரத்தில்  முடிந்தது. 

ஒரு வழியாக மாமி ரெகவர் ஆகி, ஆசுவாசபடுத்திக்கொண்டு சற்று நேரம் கழித்து அனைவரிடமும் சொல்லிக்கொண்டு இருவரும் திருச்சி பஸ் பிடித்து சென்னை சென்றனர். 

ராமு ஆபீஸ்ஸில் இன்ஸ்பெக்ஷன் என்பதாலும், இது போன்ற தருணங்களில் மாப்பிளை தலையை காட்டக்கூடாது என்பதாலும் அவர் கிராமத்திற்கு வரவில்லை. 

நாட்கள் மாதங்களாகின. கிணற்றில் போட்ட கல்லாக கல்யாண பேச்சு மூச். ராமுவின் சித்தப்பாதான் கிராமத்து போஸ்ட் மாஸ்டர். தினமும் சென்னை தபாலை எதிர்பார்த்து எதிர்பார்த்து  ஏமாற்றம். 

ஒரு கட்டத்தில் ராமுவின் அம்மா “ பாதி வாழைப்பழத்தை அப்பிடியா ஒரு மனுஷி வாயில் லபக் என்று போட்டுக்கொள்வாள்” என்று மன்னியை அவ்வப்போது கோபித்துக்கொண்டே இருந்தாள்.

வேலையில்லா பட்டதாரிகள் இன்டர்வியூவிற்கு சென்றால் இன்டர்வியூ பண்ணும் மேனேஜர்கள் “ வீ வில் லெட் யு நோ“ என்று சொல்லி அனுப்பிவிடுவர்.

கடைசிவரை நாம் எதற்காக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பது பட்டதாரிக்கு தெரியவே தெரியாது. தெரிந்தாலாவது தன்னை மேம்படுத்திக்கொண்டு அடுத்த இன்டர்வியூவில் வெற்றி பெற முடியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால் அதே பட்டதாரி வேலை கிடைத்து  பின்னாளில் மேனேஜரானால் , அவரும் ஆள் எடுக்கும்போது “ வீ வில் லெட் யு நோ” என்றுதான் சொல்லி வழியனுப்பிவைப்பார். 

மாமா மாமியிடமிருந்து தபாலே இல்லை. 

“கல்யாணம் நிச்சயம் ஆயிடுத்தாமே” என்று பேசியவர்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியாத இடத்தில் நின்று கொண்டு கிசு கிசு பேச ஆரம்பித்து விட்டனர். அதுவும் கிராமம் என்றால் கேட்கவே வேண்டாம். 

தகுதியிருக்கோ இல்லையோ ஒரு சம்பந்தம் “முறிந்தது” என்றவுடனேயே  அரிவாளை தீட்டும் இன்றைய உலகில், பெண்ணும் ஆணும் சம்மதித்து நெருங்கிய உறவினர்களான இரு வீட்டார் சம்மதித்து, கடைசியில் ஒரு வாழைப்பழத்தால் ஒரு கல்யாணம் நின்று போயிற்று.

வாழைப்பழத்தில் வழுக்கிய திருமணத்தால் அவன் வேலை செய்யும் ரயில்வே உத்யோகத்துக்கு ஏற்ப  ராமுவின் வாழ்க்கையும் நாளடைவில் தடம் புரண்டது. 

திரும்பிப் பார்த்தால் திடீரென்று கீதாவைப்போல அவன் இரண்டு தங்கைகள்  திருமணக் கனவுடன் திமுதிமுவென்று நின்று கொண்டிருக்கின்றனர். சகோதரர்கள் இருவர் டிகிரி முடித்து விட்டு வேலை கிடைக்காமல் திண்டாடுகின்றனர். போதாக்குறைக்கு அறுபது ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு அறுபத்தி இரண்டாம் வயதில் அவர் அப்பாவுக்கும், சித்தப்பாவிற்கும் பாகப்பிரிவினை பிரச்சனை. 

மனதில் ஆறாக்காயம் பட்டவன் “எனக்கு கல்யாணமே வேண்டாம்” என்று சொன்னாலும் வீட்டுப்பெரியவர்கள் “டேய்! ஒண்ணு போனா ஒன்பது வரும்டா! உன் புத்திசாலித்தனம் என்ன, பர்சனாலிட்டி என்ன, உத்யோகம் என்ன, உன்னை கல்யாணம் பண்ணிக்க பொண்களா  இல்லை!” என்று ஆற்றுப்படுத்தி வேறு வரன்களை தேட முயற்சிக்க தவறி விட்டனர். 

இந்த விஷயத்தில் படிக்காத கிராமத்து மனிதர்கள் கெட்டிக்காரர்கள். ஒரு சம்பந்தம் முறிந்து விட்டது என்று சொன்னால் வேறு ஒரு பொருத்தம் பார்த்து சட்டு புட்டென்று கல்யாணத்தை முடித்து அந்த மன வலியிலிருந்து வெகு விரைவில் கடந்து போய் விடுவார்கள். 

வம்ச விருட்சத்தை எந்த பாத்திரம் தாங்கினால்தான் என்ன?

ஆனால் ராமு விஷயத்தில் பெற்றோரையும் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் அப்போதிருந்த குடும்ப சூழ்நிலை அப்படி. 

திருமண பந்தத்தில் அனைத்து தகுதிகளும் இருந்தும், ஒரு ஆண் நிராகரிக்கப்பட்டான் என்றால் அது அவன் ஈகோவில் விழுந்த சமூக சம்மட்டி அடி. அதை அறிவால்  அறிந்துகொள்ள முடியாதவர்கள்தான் அரிவாளை எடுக்கின்றனர். 

அரிவாளை தீட்டும் சமூகத்தில் பிறக்காது அறிவை தீட்டும் சமூகத்தில் பிறந்ததால் ராமு அந்த மானசீக வலியை பொறுத்துக்கொண்டு சமூகத்தில் வளைய வந்தார்.  

ஒரு ப்ரமோஷனில் மெட்ராஸ் ட்ரான்ஸ்பர் ஆகி ரங்கநாதன் தெரு பேரின்ப விலாசில் அறை எடுத்து ஆபீஸ் சென்று வந்து குடும்பத்திற்கு பணம் அனுப்பி வந்தார். 

சென்னை ஜன சமுத்திரத்தின் சமுத்திர சைஸ் கவலைகள், ஏக்கங்களில் அவர் துயரமும், நிராசையும் கரைந்து போயிற்று. 

காலம் கடந்தது. காலம் கடந்தேனும் ராமுவின் தங்கைகள் இருவரும் திருமணமாகி சகோதரர்கள் வேலை கிடைக்கப்பெற்று அவர்களும் சம்சாரியானர்கள். 

நல்லசேலத்திற்கு பத்திரிக்கை அனுப்பாமலேயே கீதாவுக்கும்  யாருடனோ போபாலில் கல்யாணமாகி  ஓரிரு குழந்தைகள் பெற்று, அவர் கணவரும் அகால மரணம்.

அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் வாழ்ந்து , அவர் மாமாவும், மாமியும் இப்பூவுலகில் இருந்து வயதுமுதிர்வால் விடை பெற்றுக்கொண்டனர். 

ராமுவும் ரிடையர்ட் ஆகி ஒரு நாள் தற்செயலாக கோடம்பாக்கம் வாத்தியார் தோட்டம்  வந்தார். 

அந்த பகுதியில் அடையாளம் தெரியா மாற்றங்கள். 

மாமா மாமி வாழ்ந்த வீடு விற்கப்பட்டு இடிக்கப்பட்டு விட்டது. அந்த இடத்தில் ஒரு பெரிய அபார்ட்மெண்ட்  எழுந்து நின்றது. 

ராமுவின்  மனத்தில் சுனாமி அலைகளாக கடந்த கால வாழ்க்கை. அவர் அந்த வீட்டிற்கு ஒரு முறை வந்தபோது, கிச்சனில் மாமி இருக்க, மாமா குளியல் அறையில் இருக்க, கீதாவுடன் முதல் ஸ்பரிசம்.

இன்னொரு முறை சொற்ப தூரத்தில் இருந்த “லிபெர்டி” சினிமாவில், வீணை எஸ். பாலசந்தரின் “நடு இரவில்” சினிமா செகண்ட் ஷோ பாரத்து  விட்டு கும்மிருட்டில் அப்போது வயலாக இருந்த கோடம்பாக்கம் ஏரியாவில், “திகில்” படம் பார்த்த பாதிப்பில் இருந்த கீதாவுடன்  அவளுக்கு ஆறுதலாக கை கோர்த்து வந்தது;  இருட்டில் வெள்ளை நைலெக்ஸ்  புடவையில் கீதா தேவதையாக மின்னியது;

மனிதனுக்கு உணர்வுகள் மறப்பதில்லை; மரிப்பதில்லை; 

மனிதன் மரிக்கும்வரை;


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “ராமு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.