
“ர்ர்ர்ர்ய்ய்ய்ங்ங்ங்ங் ர்ர்ர்ர்ய்ய்ய்ங்ங்ங்” என்று ராட்டினத்தை சுழற்றி தார் திரித்துக் கொண்டிருந்தாள் கமலா.
பரூட்டத்திலிருந்து பட்டு இழை துள்ளி, சுழன்று சிறு குழல்களின் வயிற்றினை உப்ப வைத்து பிள்ளையார் தொப்பை அளவுக்கு ஆகிவிடாமல் மிதமான அளவில் சிறு கொழுக்கட்டை போல் உருவாகிக் கொண்டிருந்தன. ஏற்கனவே தயாரிக்கப்பட்ட தார்கள் ராட்டினத்தின் அடிக்கட்டையின் மீது வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.
“லச்சுமி” என்று அழைத்தாள்.
அருகில் விளையாடிக் கொண்டிருந்தவள் “ன்னா ம்மா” என்றவாறே வாயில் சரிகை கட்டையினை கடித்துக்கொண்டு வந்து நின்றாள்.
“எங்கையும் போவக் கூடாது. வீட்டுக்குள்ள தான் விளாடணும். சரியா?” என்றாள்.
“சேரிம்மா” என்று சொன்னவள் தறிக்கொட்டகையின் மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்த அலுவுகளிலிருந்து சிறிய உடைந்த பெத்தயை எடுத்துக் கொண்டாள்.
கமலாவிற்கு தறியின் அருகில் அவளை வைத்துக் கொள்ள முடியாது என்பது தெரியும். பல முறை இழைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் அறுத்துவிட்டு இருக்கிறாள். கீழே தொங்கும் பேட்டு கம்பியினை ஆட்டி சத்தம் வர செய்து விளையாடிக் கொண்டிருந்த போது சட்டென்று கம்பியை பிடித்து தொங்கி டொய்ன் அறுந்து கீழே கரையில் விழுந்ததில் நிறைய இழைகள் அறுந்து அதை சரி செய்ய அரை நாள் ஆகியது. அறுந்த இழைகளை ஏத்திய பின்பும் நுமுட்டு போட்ட இடம் சேலை பார்டரில் அசிங்கமாக தெரிந்து அந்த முறை சொசைட்டியில் திட்டு வாங்க நேர்ந்தது. அந்த சேலை உடனே விற்காவிட்டால் டேமேஜ் சேலையாக கணக்கு கொடுத்து விடுவதாக மானேஜர் மிரட்டியிருந்தார். நல்ல வேளையாக அப்படி எதுவும் நிகழவில்லை.
தன் கண்பார்வை படும் இடத்தில் அவளை வைத்துக் கொண்டே தறி நெய்வது என்பது சவாலான விஷயம். லச்சுமியின் அப்பா வரும் வரை சமாளித்தாக வேண்டும்.
தார் திரிக்கும் ஊசியை கழற்றி உயரே மாடத்தில் வைத்தாள். மால்சரடை கழற்றி ராட்டின சக்கரத்தின் ஓரத்தில் கட்டிவிட்டு ராட்டினத்தை ஓரம் தள்ளி வைத்தாள். காலி பரூட்டத்தை ஆணியில் மாட்டிவிட்டு, பரூட்டம் சொருகி வைத்திருந்த தாப்பாக்கட்டையை பாவுக்கு கீழாக இருந்த இடைவெளியில் நுழைத்தாள்.
லட்சுமி என்ன செய்கிறாள் என்று பார்த்தாள். வளைந்த கம்பியினை சரிகை கட்டையினுள் நுழைத்து உடைந்த மூங்கில் பெத்தையின் மீது ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தாள்.
அவள் விளையாடிக்கொண்டிருந்த அறையின் மூலையில் இருந்த அடுப்பங்கறைக்கு சென்ற கமலா, கேஸ் அடுப்பை பற்ற வைத்து பாலை கொதிக்க வைத்து ஒரு டம்ளரில் ஊற்றி வைத்து விட்டு, தனியாக அரை டம்ளரில் டீத்தூளை போட்டுக் கொண்டாள்.
லச்சுமியை நெருங்கி பால் டம்ளரை வைத்து விட்டு, “குடிச்சிட்டு இங்கயே விளாடிக்கினு இருக்கணும்” என்று மீண்டும் ஒரு முறை சொன்னாள்.
அவளை அண்ணாந்து பார்த்து வாயை அகல திறந்து சிரித்தாள்.
அப்படியே அள்ளி லச்சுமியை தூக்கி, கண்ணத்தில் முத்தம் கொடுத்து இறக்கி விட்டாள் கமலா.
லச்சுமி விளையாட தொடங்கியதும் நகர்ந்து தறிக்கொட்டகையினுள் வந்தாள்.
மணி மூன்றரையை நெருங்கிக்கொண்டிருந்தது. அவர் வர நேரம் தான். இப்போது தறியில் புகுந்தாள் ஐந்தரை வரை நெய்வது அவள் வழக்கம். அதுவரை அவனுக்கு ஓய்வு.
தான் சுற்றி வைத்த தார்களை அள்ளிக்கொண்டு போய் தார் சட்டியில் போட்டு விட்டு, பனைமரத்தின் காலினை பற்றிக்கொண்டு ஏறி தறித்தழ்ப்பாளைதிண்ணையில் உட்கார்ந்து கால்குழிக்குள் காலை விட்டு மிதி மீது வைத்துக் கொண்டாள்.
மென் மூங்கிலை குடைந்து செய்யப்பட்டு வழுவழு வென்று இரு முனையும் கூறாக இரும்பு பூண் பொறுத்தப்பட்டிருந்த நாடாவின் உள்புறம் இருக்கும் வில்லினை அழுத்தி காலி குழலை எடுத்து தார் சட்டியின் பக்கத்தில் போட்டு விட்டு, தார் சட்டியிலிருந்து ஒரு தாரினை எடுத்து நாடாவின் கம்பியில் புகுத்தி வில்லை குழலின் கழுத்தோடு பொருத்தினாள்.
அரை சாணாவது தள்ளிவிட வேண்டும் என்று நினைத்துக்கொண்டு, வாட்டுகளை பாய்ச்சிக் கொண்டிருந்தாள். அச்சிமரம் தட்டும் ஓசையும், மாறி மாறி மிதிக்கும் மிதிகளின் சத்தமும், நாடா பாவிற்குள் புகுந்து இழைகளுடன் உரசி உருவாக்கும் ஸ்ஸ்ர்ர்ரன்ற ஓசையும், பேட்டு கம்பிகள் ஒன்றோடொன்று உரசி சலசலக்கும் ஓசையும், சுங்கினை சரியாக கணக்கிட்டு எடுத்து இழுத்து செருகும் மெல் ஓசையும் வந்து கொண்டிருந்தது.
சற்று நேரம் கழிந்ததும், லட்சுமியின் நினைவு வந்து, “லச்சுமி” என்று கூப்பிட்டாள். பதில் வராததால் மீண்டும் உரக்க “லச்சுமீ… ” என்று கத்தினாள்.
“ன்னம்மா” என்று சொல்லிக்கொண்டே ஒரு கையை மட்டும் நீட்டிக் கொண்டு வந்தாள். நீட்டிய கையில் பட்டு துக்கு பஞ்சு மிட்டாய் போன்று இருந்தது.
“அதை ஏண்டி எடுத்த” என்றாள்.
“விளாட”
“பட்ட எடுத்து விளாடதனு சொல்லிருகேன்ல, வந்தேன்னா ஒத வாங்குவ, ஒழுங்கா கீழ்மாடத்துல வச்சிட்டு குடிக்க தண்ணி எடுத்துட்டு வா” என்றால் கமலா.
நீட்டிய கையை மடக்காமலே திரும்பி சென்று சற்று நேரத்தில் தன் இரு கைகளாலும் தண்ணீர் செம்பின் கழுத்து பகுதியை பிடித்து கொண்டு வந்தாள் லச்சுமி.
அதை வாங்கிக்கொண்டு “என் தங்கம், போய் விளாடு” என்றாள் கமலா.
நகராமல் அங்கேயே நின்றுக்கொண்டிருந்த லட்சுமி கையை உயர்த்தி “ம்மா ப்பா எப்ப வவ்வாரு?” என்றாள் மெதுவாக.
“ஏண்டி? என்ன வாங்கியார சொன்ன உங்க அப்பாகிட்ட”
“கீம் பன்னு” என்று வாயில் விரல் வைத்தாள்.
“இப்ப வந்திருவாரு, நீ இங்கயே விளயாடிட்டிரு”
தண்ணீர் குடித்துவிட்டு மாங்காய் புட்டாவில் ஆழ்ந்தாள். ஒரு மாங்காய் புட்டா தலை கீழாக அடிப்பகுதியில் துவங்கி, நடுப்பகுதி பருத்து பின்பு மெலிந்து, வலது புறமாக வளைந்து அதன் நுனி சற்று சுருண்டு உருவாகி முழுமையடைந்தது. சேலையின் இருபுறமும் விசையை ஏற்றி குத்தி பலவையை திருப்பி பனை மரத்தில் கோலினை சொருகி நிறுத்தினாள். அழுக்கு படாமல் இருப்பதற்காக சேலையின் மீது கட்டப்பட்டிருந்த வெள்ளை வேட்டியை ஏற்றி விசைக் கட்டையோடு பிணைத்தாள்.
தகரம் மீது தட்டும் சத்தம் எங்கோயிருந்து மென்மையாக அவளை வந்தடைந்தது.
“லச்சுமி” என்று அழைத்தாள்.
மீண்டும் தகரக் கதவின் மீது குச்சியினால் தட்டுவது கேட்டது.
சட்டென்று பொறி தட்டி, தறியில் இருந்து எழுந்து, பின் வாசல் வழியாக தறிக்கொட்டகையை ஒட்டி தனித்தனி அறைகளாக கட்டப்பட்டு இருக்கும் குளியலறை மற்றும் கழிவறை இருக்கும் இடத்தை நோக்கி விரைந்தாள். முருகன் காலனியில் இருக்கும் சொசைட்டியினாள் தரப்பட்ட அனைத்து வீடுகளும் அதே மாதிரியான அமைப்பு கொண்டவை தான்.
நெருங்குவதற்குள், கதவின் தாழ்ப்பாளை ஆட்டும் ஒலி கேட்டது.
“எங்கடி இருக்க” என்றவாறு வந்தவள் லட்சுமியை காணாமல் திகைத்தாள்.
சற்று தள்ளி சென்று “லச்சுமி” என்று மீண்டும் குரல் கொடுத்தாள்.
“ம்ம்மா” என்று மென் சத்தம் அவளை வந்தடைந்தது.
ஒரு வீட்டிற்கும் மற்றொரு வீட்டிற்கும் இடையில் உள்ள சந்தில் எட்டி பார்த்து “ஏய்ய் லச்சுமீஈ” என்று அழைத்தாள்.
மரக்கதவின் மீது இருபுறங்களிலும் பாதி வரை தகரம் பதிக்கப்பட்டிருந்த கதவு தட்டப்படும் ஓசை கேட்டு கழிவறையின் பக்கம் மீண்டும் வந்தாள்.
கழிவறை வெளிப்புறமாக தாளிடப்பட்டிருந்தது. பார்வையை குளியலறையின் பாதி தகரம் பதிக்கப்பட்ட கதவின் பக்கமாக நகர்த்தினாள். கதவு சாத்தியிருந்தது. ஆனால் வெளிப்புறமாக தாழிடப்படவில்லை. கீழே பித்தளை தோண்டி கவிழ்த்து வைக்கப் பட்டிருந்தது.
குளியலறை கதவின் மீது கை வைத்தவாறு “லச்சுமீ” என்றாள்.
உள்ளிருந்து சற்றே பொதிந்த குரலில் “ம்ம்மா” என்று சத்தம் வந்தது.
பதற்றமானாள் கமலா. வெளிப்புறம் இருந்த தாழ்ப்பாள் அவளுக்கு எட்டியிருக்காது. ஆனாள் தோண்டியை உபயோகித்து அதனை திறந்திருகிறாள். இதுவரை இப்படி நடந்ததில்லை. கதவின் உள் தாழ்ப்பாள் அவ்வளவு உயரமான இடத்தில் அமையவில்லை. அதை அவளால் சாத்திக் கொள்ள முடியும்.
பதற்றத்துடன் “லச்சுமீ கதவ தொறடீ” என்றாள்.
உள்ளிருந்து ஜக்கில் தண்ணீர் மொள்ளும் சத்தம் கேட்டது.
குளிக்கிறாளா! சொசைட்டீ வீடுகளில் இருக்கும் குளியலறைகள் மேல் தளத்திலிருந்து இடைவெளி விடாமல் கட்டப்பட்டிருப்பவை. கழிவறைக்கும் குளியலறைக்கும் உள்ள சுவற்றில் ஒரு ஜாலி மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. அதன் வழியாக பார்த்தால் குளியலறையின் பாதிவரை மட்டுமே பார்வை எட்டும். என்ன செய்வது என்று புரியவில்லை.
“லச்சுமீ, லச்சுமீஈஈ.. என்னடி பண்ற?? கதவ தொற” என்று அலறினாள் கமலா.
உள்ளேயிருந்து “விளாட்றேன்மா” என்ற மெல்லிய பதில் வந்தது.
“தொறடீ கதவ, தொற” என்று கதவை தட்டினாள்.
“தாப்பாள தொற டீ, தாப்பாள தொற…..லச்சுமீமீ”
பக்கத்து வீட்டில் பட்டு இழைத்துக் கொண்டிருந்த மல்லிகா மூன்று சிமென்ட் கொப்புகளையும் பரூட்டத்தையும் அப்படியே வைத்து விட்டு, வெளியே வந்து “என்ன கமலா லச்சுமீ லச்சுமீ னு கத்தினுக்கிர” என்றாள்.
“அக்கா பாத்ரூம்குள்ள போய் கதவ சாத்திக்கிட்டாக்க இந்த பொண்ணு” என்று அழாத குறையாக சொன்னாள்.
“அடிப்பாவி, கொழந்தய பாக்காம என்னடி பண்ணிட்டிருந்த” என்றாள் மல்லிகா.
கமலா “லச்சுமீ லச்சுமீ, யேய்ய்ய்..” என்றாள்
“லச்சுமீ கண்ணு, லச்சுமீ கண்ணு, அத்தை வந்திருக்கேன் வாடீ” என்றாள் மல்லிகா.
“த்தை அஇதை” என்றது லட்சுமி.
“கதவ தொறடீ செல்லம், பப்பு கொண்டாந்திருக்கேன்”
“ப..ப்பு”
“ஆமா, தொற கதவ”
….
“தாப்பாள தொற மா… தாப்பாக்கட்டையை இந்த பக்கமா தள்ளு”
….
ஜக்கிலிருந்து தண்ணீர் கீழே ஊற்றும் சத்தம் கேட்டது.
“தறில இருந்து இறங்கி வர்றதுக்குள்ள, இப்படி பண்ணீட்டாளே” என்ற கமலாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்திருந்தது.
“கொழந்தய வுட்டுட்டு அப்படி என்னடி வேல, செல்வம் எங்க?” என்றாள் மல்லிகா.
“லச்சுமீ, லச்சுமீமா.. கதவ தொற டீ செல்லம்” என்று கதவை தட்டியவள் “அவரு பஜாருக்கு போயிருக்காரு”
பெரிய துணிப்பையின் வாய் சணல்பிரியால் கட்டப்பட்டு சைக்கிளின் பின் கேரியரில் வைத்து, அதனை ஒரு கையால் பிடித்தவாறு ஒரு கையில் ஹாண்ட்பாரை பிடித்து ஒட்டிக்கொண்டு, சுடு மணல் நிறைந்த மிலிட்டரி க்ரௌண்டை தாண்டி, காஞ்சிபுரத்திலிருந்து அழுத்தி பிழிந்து வெளியேறிய அழுக்கு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்த வேகவதியை கடந்து தனது வீட்டின் முன்புறமாக சைக்கிளை கொண்டு வந்து நிறுத்தினான் செல்வம்.
சைக்கிள் வந்த சத்ததை கொண்டே ஊகித்த கமலா “என்னங்க, இங்க ஓடியாங்களேன்” என்று சத்தமாக அலறினாள்.
“தாப்பாள தொற மா, அப்பா வறாரு பாரு… கதவ தொற…”
நிதானமாக வந்த செல்வம் பையை சுவற்றில் சாய்த்து விட்டு “ஏன் கத்துற, உங்கப்பன் கழுத பால லிட்டர் கணக்குல குடுத்துட்டாண்டீ” என்றான் செல்வம்.
அழுதுகொண்டே “சீக்கிரமா வாங்க” என்றாள்.
அதற்குள் மல்லிகா, “ஏம்பா உன்பொண்ணு உள்ள போயி பூட்டிகிட்டாப்பா” என்றாள்.
“என்னது.. லச்சுமீயா? எங்க..”
“பாத்ரூம்ல” என்றாள் கமலா.
“நீ என்னாடி பண்ணிட்டிருந்த?.. லச்சு..லச்சுமா…..லச்சுக் கண்ணு” என்று கதவை தட்டினான்.
“ப்பா, ப்பாஆ…”
“கதவ தொறடீ பட்டுப்பொண்ணே”
“கீம் பன்னு” என்று உள்ளிருந்து குரல் வந்தது.
“வாங்கியாந்திருக்கேண்மா.. நீ கதவ தொறந்து வா, சாப்டலாம்”
“அந்த தாப்பாள தொற மா”
அதற்குள், எதிர் வீட்டிலிருந்து ஒலித்துக் கொண்டிருந்த நூல் தரியின் வாட்டு சத்தம் நின்று டிரவுசர் மட்டுமே அணிந்து கொண்டு பாதி நரைத்த தலையும் உடல் முழுவதும் வியர்வையுமாக கோபால் வந்து சேர்ந்திருந்தார்.
“என்னடா செல்வம், டப்பு டப்புனு தட்டிகிட்டு கெடக்கிற”
பாத்ரூம் பக்கமாக தலை திருப்பி “கொழந்த உள்ள மாட்டிக்கிட்டா மாமா”
“அடப்பாவி, எப்டிடா? கதவ ஒடடா மொதல்ல, மூச்சி அடைக்கபோது பாப்பாக்கு”
கதவை உடைக்க எதாவது கிடக்கிறதா என்று சுற்றித் தேடினான்.
ஊர்தி கயிற்றை திருகும் தடித்த கட்டையை கொண்டு வந்து தாழ்ப்பாள் இருக்கும் இடத்தில் ஓங்கி இடித்தான். அது தகரத்தில் பட்டு காதை கிழிக்கும் ஒலி எழுப்பியது.
உடைத்து விட்டால் முன்னூறுக்கு குறையாமல் செலவு பிடிக்கும். தன் வருமானத்தில் அது பெரிய தொகை என்று அவனுள் ஒரு எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது.
“ம்ம்மா…ம்மாஆ……” என்று உள்ளிருந்து குழந்தை அழும் சத்தம் வந்தது.
“யோவ்..ஒடச்சா கொழந்த மேல தான் வுழும்” என்றாள் மல்லிகா “இது தகரம் அடிச்சிருக்கு, அடிக்கிற சத்தத்துல லச்சுமி பயந்துடுவா”
“பயப்படாதம்மா, ஒண்ணுமில்ல, ஒண்ணுமில்ல” என்றாள் கமலா.
“ம்மா….மாஆ…ம்மாஆ….”
“ஒண்ணு இல்ல கண்ணு, சத்தம் வராது நின்னு போச்சி பாரு” என்றான் செல்வம்.
கதவை உடைக்கும் முயற்சி நிறுத்தி வைக்கப்பட்டது.
மீண்டும் மீண்டும் மாறி மாறி ஒவ்வொருவரும் கதவை தட்டி அழைத்தார்கள், கதவை திறக்க சொல்லி கெஞ்சினார்கள். பக்கத்து வீடுகளிலிருந்து கிட்டத்தட்ட அனைவரும் வந்து விட்டார்கள். அவர்களும் எவ்வளவோ முயன்று பார்த்தார்கள், என்னென்ன வழிகளிலோ தழ்ப்பாளை திறக்க சொன்னார்கள். லட்சுமியை கோவப்பட்டு திட்ட கூட செய்தாள் கமலா. கதவு மட்டும் திறந்து கொள்ளவே இல்லை.
நேரம் ஆக ஆக அந்த கதவு கொடூரமாக ஆகிக்கொண்டே இருப்பது போல் தோன்றியது செல்வத்திற்கு. அவன் தகரத்தின் மீது இடித்த இடத்தில் உருவாகியிருந்த பள்ளத்தில் மாலை சூரியனின் கதிர் பட்டு கண் கூசியது.
கண் மங்கலாக தெரிவது போல் இருந்தது அவனுக்கு. மரப்பலகையின் மேல் அடித்த தகரம் மறைந்து முழு கதவும் கெட்டி இரும்பால் ஆனது போல் தோன்றியது. கதவின் பளபளப்பு அதிகரித்துக்கொண்டே செல்வது போலவும், எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரிப்பது போலவும் தோன்றியது, கூர்மையான மெல்லிய ஒளியை எதிரே நிற்பவர்கள் மீது பாய்ச்சி கொல்லத் துடிப்பது போலவும், மங்கலாக அதன் மேற்புறம் தெரியும் அனைவரையும் அது விழுங்கிவிடுப் போகிறது என்றும் தோன்றியது.
அது வேறு எங்கோ கூட்டி செல்லும் பாதையின் வழி போலவும், ஏதோ ஒரு உலகத்தின் கதவு போலவும் தோன்றியது அவனுக்கு.
கமலா தன் முழு சக்தியையும் இழந்திருந்தாள். அவளால் நிற்பதே கடினமாக இருந்தது.
அருகிலிருந்த தொடக்கப்பள்ளியில் மணி அடிக்கப்பட்டது.
கையில் இருந்த மஞ்சப்பையை சுழற்றிக்கொண்டும், துள்ளி குதித்தும் வந்து கொண்டிருந்த, ஒன்றாம் வகுப்பில் சில நாட்களுக்கு முன்பு சேர்ந்திருந்த பாபுவிற்கு தன் வீட்டின் பின்னால் கூட்டமாக இருப்பதை பார்த்ததும் ஒன்றும் புரியவில்லை.
வீட்டினுள் நுழைந்ததும் பையை போட்டு விட்டு, சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்ட பையில் நீட்டிக்கொண்டிருந்த முருங்கைக்காயையும் வெளியில் தெரிந்த நீயூஸ் பேப்பர் பொட்டலத்தையும் பார்த்துக்கொண்டே, பின் பக்கமாக வந்தான். அவன் கண்கள் அம்மாவை தேடியது.
அம்மா பாத்ரூமிற்கு முன்பு அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். லச்சுமியை காணவில்லை. அவன் அம்மாவின் அருகில் சென்று தோளை பிடித்துக்கொண்டான்.
மெதுவாக அம்மாவின் காதருகே குனிந்து “என்னாச்சுமா?” என்று கேட்டு விட்டு எல்லாரையும் பார்த்தான்.
அவள் அழுகையை தவிர ஒன்றும் சொல்லவில்லை. பக்கத்து வீட்டு மல்லிகா அத்தை அவனிடம் “உன் தங்கச்சி உள்ள மாட்டிக்கிட்டா டா” என்றாள்.
“நீ போய் கூப்டு லச்சுமிய” என்றாள்
பாபுவிற்கு ஒன்றும் புரியவில்லை. சுற்றி முற்றி பார்த்துவிட்டு “எங்க?” என்றான்.
“பாத்ரூம்லடா” என்றாள் மல்லிகா.
பாபு நகர்ந்து, மழமழப்பான மங்கலாக உருவம் தெரியக்கூடிய தொட்டால் ஜில்லென்றிருக்கும், தன் முகத்தை அந்த தகரத்தோடு அழுத்தி பதித்துக்கொள்ள விரும்பும் பளபளக்கும் ஒளி நிரம்பிய அந்த கதவின் மீது ஒரு கையை வைத்து “லச்சுமீ” என்று அழைத்தான்.
உள்ளேயிருந்து “ண்ணா…” என்று பதில் வந்தது.
சற்று தயங்கிக்கொண்டே “லச்சுமீ… என்ன பண்ற?” என்றான் பாபு.
“வி..விளாறேன், சரிட்ட மெக்குது” என்றாள்.
“லச்சுமீ…. அண்ணா சொன்ன செய்வல்ல.. டப்பு பண்ணி டிப்பு பண்ணு” என்றான்.
சட்டென்று திறந்து கொண்டது மூடியிருந்த கதவு. சாய்ந்த சூரியனின் கதிர்கள், நொடிப்பொழுதில் பாத்ரூமை நிரப்பியது. வாளியிலிருந்த தண்ணீரில் பட்டு நீரின் குலுங்கள்கள் அறையின் சுவரில் பிரதிபலித்தது. வாளியில் சரிகை கட்டை மிதந்து கொண்டிருந்தது. லட்சுமி ஒரு கையில் உடைந்த மூங்கில் குச்சியோடும் மறு கையில் இரும்பு கம்பியோடும் நின்றுக் கொண்டிருந்தாள்.
செல்வத்தின் இதய துடிப்பு ஒரு கணம் நின்று துடித்தது. அனைவரிடமிருந்தும் நிம்மதி மூச்சு வெளிவந்து காற்றோடு கலந்தது.
“அம்மாஆஆஆ……………..” என்ற அலறல் கேட்டு திரும்பினான் செல்வம். பக்கத்தில் நின்றுக்கொண்டிருந்த பாபுவின் முதுகில் கமலாவின் ஐந்து விரல்களும் பதிந்திருந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
