அமெரிக்கன் ரியலிசம் சொல்லும் பாஸ்டன் நகரக் காட்சிகள்

அமெரிக்க வரலாற்றை, அவற்றின் நகரங்களின் கதையைத் தெரிந்து கொள்ள நம் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். இந்த பதிவு அதில் ஒரு முயற்சி.  அந்த முயற்சியினை துவங்கும் முன் நம்மை வரலாறு அறிய விரும்பும் ஆர்வலராக எப்படிப் பொருத்திப் பார்க்கலாம் எனக் காண்போம்.

இந்தியாவின் விவசாய பின்புலத்திலும், சோசியலிசத்திலும், தகவல் துறையிலும் புகுந்து வந்ததே நம் பலரது அனுபவத் தொகை. நம்முடைய அனுபவங்களை நீர் வண்ண பெட்டியின் வண்ணங்களாக கற்பனை செய்து கொள்ளுங்களேன். துவக்கத்தில் பெட்டிக் காலியாக இருக்கின்றது. அனுபவங்களை வண்ணங்களாக மாற்றி ஒவ்வொரு கட்டமாக நிரப்புவோம். நம்மிடம் என்னென்ன வண்ணங்கள் இருக்கின்றன? சமஸ்தான அனுபவம், சுதந்திர போராட்ட அனுபவம், விவசாய உலக அனுபவம், குறுவணிக அனுபவம், கைத்தொழில் அனுபவம், சோசியலிச முழக்கங்களின் அனுபவம், தகவல் துறை உலகின் அனுபவம்  உள்ளன. அதைத் தவிர நாம் இந்தியாவிலிருந்த நமது சொந்த  ஊரின் தன்மைக்கேற்ப ஒரு சில அனுபவம். அவ்வளவுதான்.

நமக்கு வணிகவிய அனுபவம் இல்லை, நமக்குத் தொழில் புரட்சி அனுபவம் இல்லை.  நமக்கு ஜாஸ்  யுகம் அனுபவம் இல்லை. நமக்கு பெரும் பொருளாதார மந்த நிலை அனுபவம் இல்லை. உலகப் போர்களில் வென்ற அனுபவம் இல்லை.  நமக்கு ஓட்டுரிமைக்குப் போராடிய அனுபவம் இல்லை. இது போலப் பல உதாரணங்கள் சொல்லலாம். நம் வண்ணப் பெட்டியில் பல வண்ணங்கள் குறைகிறது. இதை வைத்துக் கொண்டு அமெரிக்க வரலாற்றின் பெரும் வண்ணச் சித்திரம் தீட்டினால் முழுமையாக இருக்காது. 

பொதுவாக உலக நாகரிகங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள பெருங்கதையாடல்களுக்கு செல்லலாம்.  பிபிஎஸ் (PBS)  ஆவணப்படங்கள் போலத் தகவல்களை அறிந்து கொள்ளும் வழி. அது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால் பெருங்கதையாடல்கள் சம்பவங்களை அடுக்கும். அந்த வழி பெரும்பாலும் இடைவெளி இல்லாமல் தகவல்களை அளிக்கும். உணர்வு நிலைகளுக்கு அதில் முக்கியத்துவம் இருப்பதில்லை. இந்தப் பதிவில் அந்த வழியில் நாம் செல்லப்போவதில்லை.

அப்படியானால் இக்கட்டுரையில் என்ன வாசிக்கப் போகின்றோம்? நம்மைப் போல ரத்தமும், சதையும், உணர்வும் கொண்ட மனிதர்களைக் காண்போம். அமெரிக்க நகரங்களின் வேகம் சூடுபிடிக்கத் தொடங்கிய காலத்துக்கு போவோம்.  அவர்கள் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள், தோல்விகள், பதிவுகள் வழியே நாமும் நம் இடத்தினை கற்பனை செய்து பார்க்கலாம். 

கலைவழி வரலாற்று பார்வை என்பது வரலாற்றை அணுக இன்னொரு வழி. இந்த வழியில் குறைபாடுகள் உண்டு. இந்த வழியில் காலக்கோட்டில் உள்ள அனைத்து  சம்பவங்களையும் இடைவெளி இல்லாமல் அடுக்கி நிரப்புவதில்லை. பல இடங்களில் இடைவெளி இருக்கும். வாசகர்கள் தங்கள் பங்கில் யோசிக்கச் சொல்லும். கலை அனுபவம் பெறும் நமக்கு யோசித்து நிரப்புதல் பயன் தரும். ஓவியத்தின் உள்ளே சென்று அங்கு இருப்பவர்களோடு நின்று அந்தக்காட்சியைக் காணலாம். நாவல்களின் பாத்திரங்களோடு பேசி, முரண்பட்டு, ஆமோதித்து நம் இடம் என்னவென காணலாம்.

சமூக ஊடக யுகத்தில் யார் யாரோ தகவல்களை தொகுத்து வடிவம் கொடுத்து செய்து நம் தலையை நிரப்புகின்றார்கள். நாவலோ, ஓவியமோ நம்மில் உள்ள படைப்பூக்கத்தின் ஒரு பகுதியை கொண்டு தகவல்களை தொகுத்து வடிவம் உருவாக்கச் சொல்லும். நேரமிருந்தால் செய்து பார்க்கலாம். 

கலைவழி வரலாற்றுப் பார்வையின் பலம் வரலாற்றுக் காலத்தில் வாழ்ந்த மனிதர்களின் உணர்வுகள் வழியாகக் காலத்தினை எடுத்துக் காட்டுவது. இந்த பதிவின் நோக்கம் பாஸ்டனின் முழு வரலாறு சொல்வது அல்ல. பாஸ்டன் வழியே இக்கதை இட்டுச் செல்லும். அதில் காணும் காட்சிகள் வழியே வரலாற்றுச் சித்திரம் எழும். நகரங்களின் இயக்கத்தினை, அந்த சூழலில் வாழ்ந்த மனிதர்களின் உணர்வுகளிலிருந்து அறிய இயலும். பாஸ்டனின் விரிவான வரலாற்றினை படிக்க வேண்டுமெனில்  “The Atlas of Boston History”  என்ற புத்தகம் படிக்கலாம். வரலாறு அழகிய படங்களுடன் அதில் வரும்.

இனி பதிவுக்குள் செல்வோம். இந்த பதிவில் பாஸ்டன் பற்றிச் சொல்ல நாம் பயன்படுத்தப் போகும் ஓவியமும், நாவலும், அமெரிக்கன் ரியலிசம் என்ற இலக்கிய நகர்வினை சார்ந்தது. இந்த பதிவுக்குத் தேவையான இலக்கிய நகர்வினை அறிமுகம் செய்வதை இக்கட்டுரை செய்யும். இலக்கிய நகர்வினை ஆராய்ச்சி செய்வது, அதன் ஒட்டு மொத்த வரலாற்றினை விரிவாகப் பேசுவது என்பது இந்தக் கட்டுரையின் நோக்கமல்ல. அமெரிக்க இலக்கிய நகர்வினை பற்றி விரிவான வாசிப்புக்கு “From Puritanism to Postmodernism: A History of American Literature” என்ற புத்தகத்தினை வாசிக்கலாம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு முடியும் பொழுது, அமெரிக்கா தொழில் மயமாகி வந்தது. நவீன தொழில் வரவால்,  நகரமயமாக்கலும் வெகு வேகமாக நடந்து கொண்டிருந்தது. இவை பெரும் சக்திகள். இந்த சக்திகளின் வழியே புதிய பொருளாதார வழிகளை மக்கள் எதிர் கொண்டனர். இதைத்தவிர பத்தொன்பதாம் நூற்றாண்டு முடியும் நேரத்தில், விஞ்ஞான சிந்தனையும்,தொழில்நுட்ப வளர்ச்சிகளும் அதிகரித்து வந்தன. புறநிலை பார்வைக்கும், மனித அனுபவ அறிவுக்கும் முக்கியத்துவம் அதிகரித்தது. இந்த முக்கியத்துவம் கலையுலகையும் தொட்டது. புதிதாக உருவான முக்கியத்துவத்தினை, அதுவரை இருந்த உணர்ச்சிகளையும்,  லட்சியத்தினையும் கொண்டு கலையைக் காணும் முறை கைப்பற்ற முயன்றது. அந்த முயற்சியில் பல கேள்விகள் எழுந்தன. அந்தக் கேள்விகள் கலையுலகில் எதிர்வினையைத் தூண்டியது. அதன் விளைவாக அமெரிக்கன் எதார்த்தவாதம் என்னும் இலக்கிய நகர்வு உருவானது.  

அமெரிக்கன்  எதார்த்தவாதம் அன்றிருந்த அமெரிக்காவின் அன்றாட வாழ்க்கையையும் சமூகத்தையும் முடிந்தவரைத் தெளிவாகவும் புறவயமாகவும் சித்தரிக்க முயன்றது. “எதார்த்தவாதம்” என்ற சொல் லத்தீன் வார்த்தையான “realis” என்பதிலிருந்து உருவானது.  இதன் பொருள் “நம்பிக்கைக்கு உரிய உண்மையின் பிரதிநிதித்துவம்”  என்பதாகும். அமெரிக்க ரியலிசம் ஐந்து முக்கிய விஷயங்களில் மையம் கொண்டது. 

1. அன்றாட வாழ்வின் உண்மைகளைக்  காட்சியாக்குதல்

2. சமூகப் பிரச்சினைகள், சமூகத்தின் அடுக்குகளிடையே உள்ள நகர்வுகள் மீது கவனம் செலுத்துதல்

3. சிக்கலான உளவியல் கொண்ட மானுடத்தினை காட்சிப்படுத்துதல்

4. சூழல்களை விரிவாக விளக்குதல்

5. யதார்த்த மொழியைக் கையாளுதல்,  உணர்ச்சிகள் தெறிக்கும் மொழியைத் தவிர்த்தல்

அமெரிக்கன் எதார்த்தவாத பாணியில் பல ஓவியர்கள் இருந்தார்கள். நாம் 1885-ல் சைல்ட் ஹாசாம் (Childe Hassam)  வரைந்த “Boston Common at Twilight” என்னும் அமெரிக்க எதார்த்தவாத ஓவியத்தினை இங்குக் காணலாம். பாஸ்டனின் குளிர்கால மாலை. மங்கலான இருள்.  மென்மையான அந்தி சாயும் உணர்வு. குறைவாக அழகாய் ஒளிரும் விளக்குகள். இவை அனைத்தும் சேர்ந்து மனதுக்கு இனிய சூழலை உருவாக்குகின்றன. பாதசாரிகள் நடக்கின்றார்கள். குதிரை வண்டிகளைக் காணலாம். இவை காட்சிக்கு உயிர் தருகின்றது. மனிதர்கள் சூழ்ந்த நகர்ப்புற சூழலைக் காட்டுகின்றது.  

1878ல் பாஸ்டன் முதன் முதலில் மின்சார விளக்கினை பெறுகின்றது. 1885ல் வரையப்பட்ட இந்த ஓவியத்தில் மின்விளக்குகளைக் காணலாம். அன்றாட வாழ்க்கையைப் புறவயமாகச் சித்தரிப்பதில் இந்த ஓவியம் வெற்றி பெற்றுள்ளது. 

தெரு விளக்குகள் வரும் முன், அந்தி வந்த பின் நகரங்கள் மௌனனமாயின. மாலையில் கொண்டாட்டமும், மகிழ்ச்சியும், தொழிலும், வாழ்வும் நிகழ ஒளி அவசியமானது அல்லவா?  இன்றைக்கு உள்ள 9-5 வேலை என அறியப்படும்  மனநிலை உருவாகிக் கொண்டிருந்த காலம் அது. வேலைக்குப் பின்னர் அந்தியில் கொண்டாட்டங்களை நகரங்களில் இன்றைக்கும் காணலாம்.அதன் ஆரம்பம் எவ்வாறு இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்ய இது உதவும். இன்றைய 21ம் நூற்றாண்டில் நகரமயமாக்கப்பட்ட கலாச்சாரம் என்பதன் முக்கிய அடையாளங்களில் அந்தி நேர வாழ்க்கை அமைந்துள்ளது. அதன் துவக்கத்தினை இந்த படம் கைப்பற்றுகின்றது. 

மின்விளக்கு வரும் முன் தெருவிளக்குகளுக்கு நிலக்கரி வாயு பயன்படுத்தப்பட்டது. 1822ல்  “பாஸ்டன் கேஸ் லைட் நிறுவனம்” நிறுவப்பட்டது. அது பாஸ்டனில் எரிவாயு குழாய்களை நகரில் பதித்தது. அந்நிறுவனமே  தெரு விளக்குகளையும்  நிறுவியது. நிலக்கரியைக் கொண்டுஎரிவாயுவை ( உற்பத்தி செய்து தெருவிளக்குகளுக்கு அனுப்பி நகரில் ஓளி தந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஒவ்வொரு விளக்காக வந்து ஏற்றி அணைக்க வேண்டும். மின் விளக்குகள் வந்த பின் அந்தக் கஷ்டம் இல்லாமல் ஆகியது. ஒரு தொழில்நுட்பம் அதுவரை நகரங்களில் அந்திசாயும் வேளை பற்றி மனிதன் கொண்ட பார்வையை மாற்றி வைக்கின்றது. அதை இந்த ஓவியம் நமக்குக் காட்டுகின்றது. அது வரை விளக்கை ஏற்றி அணைத்துக் கொண்டிருந்தவருக்கு இனி வேலை இல்லை என என் மனதில் ஒரு வாக்கியம் ஓடியது. மாறாக மின் விளக்கு செய்ய வேலை வந்திருக்குமே அதன் எதிரொலியும் கேட்டது. ஓவியங்கள் வழியே நாம் கற்பனை செய்து பார்க்கலாம்.

படம் உதவி: விக்கிபீடியா

இந்த ஓவியம் காட்டிய சூழலை விரித்துக் காண்போம். குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பாக உணர அந்தி நேர விளக்குகள் உதவின. பூங்காக்களுக்கு மக்கள் வந்தார்கள். இரவுப் பள்ளிகள் உருவாயின. சாலைகளில் அந்தி வேளைகளில் நடமாட முடிந்தது. கடைகள், உணவகங்கள் தங்கள் வேலையை இரவிலும் தொடர முடிந்தது. தொழிற்சாலைகளுக்கு இரவு வேலைக்கும் செல்ல முடிந்தது. தொழிற் சாலையின் உற்பத்தி அதிகரித்தது. வேலை வாய்ப்பு அதிகரித்தது. குடும்பங்களுக்கு வருமானம் அதிகரித்தது. செல்வம் கூடியது. 1859ல் பாஸ்டனின் அந்தி நேர வாழ்க்கையைச் சித்தரிக்கும் சுவரொட்டி ஒன்று கீழே உள்ளது.  அதன்  மையம் தெருவிளக்கு. நகரங்கள் வளர்கையில், அதில் தொழில் நுட்பம் வளர்கையில் வாழ்வினை நாம் காணும் கோணங்கள் மாறும்.

இக்காலகட்டத்தின் நாவல்களும், சிறுகதைகளும் நகரங்களைக் கதைக்களங்கள் ஆக்கின. அமெரிக்காவின் பிற பகுதிகளிலிருந்து நகரை நோக்கி நகருபவர்கள், ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறுபவர்கள் என பெரும் அலை நிகழ்ந்தது. அவை அமெரிக்க ரியலிசத்தின் கருப்பொருள்கள் ஆயின.

கதைகளை வாசிக்கையில், ஓவியங்களைக் காண்கையில் கற்பனை செய்வது நல்லது. உலகை நாம் அறிய மூன்று உத்திகளை பயன்படுத்துவோம். தர்க்கம், கற்பனை, உள்ளுணர்வு என அந்த உத்திகளை சொல்லலாம். ஆகவே வாசிக்கையில் கற்பனை செய்து பார்த்தால் வாசிப்பின் சுவை கூடும். உலகை எளிதில் நம்முடன் இணைக்கும். 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியையோ, 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தினையோ இந்த பதிவின் பொருட்டு கற்பனை செய்து பார்க்கலாம். அது கடினமாகத் தோன்றுகின்றதா? ரொம்ப தூரமாக இருக்கின்றதா?  சின்ன விளையாட்டு ஒன்றினை முயற்சி செய்து பார்த்தால் எளிதில் தொட்டு விடலாம். அப்பாவின் பிறந்த நாள், தாத்தாவின் பிறந்த நாள், தாத்தாவின் அப்பாவின் பிறந்தநாள் என யோசித்தால் நான்கே தாவலில் அங்குச் சென்று விடலாம். நிறையத் தொலைவு இல்லை. அட அங்கேதானா என்று தோன்றும். 138 வருடம் பின்னோக்கி செல்ல வேண்டும். ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் எல்லாம் பின்னால் சென்று யோசிக்கத் தேவையில்லை. அதில் நம் வயதைக் கழித்தால் நூற்றுக்குக் கீழே போகவும் வாய்ப்புள்ளது. கற்பனை குதிரையில் நகர்ந்து பார்த்தால் எவ்வளவு அண்மையில் இதெல்லாம் நடந்துள்ளது எனத் தெரியும்.

1885 இல், வில்லியம் டீன் ஹோவெல்ஸின் (William Dean Howells) “The Rise of Silas Lapham”  நாவல் வெளிவந்தது. அது அமெரிக்க எதார்த்தவாதத்தின் முக்கிய நாவலாகக் கருதப்படுகிறது. இந்த பதிவு இந்த நாவலுக்கான விமர்சனம் அல்ல. நாவலின் ஒரு சில கற்பனைக் காட்சிகள் வழியே 1870களில் உள்ள அமெரிக்க வாழ்வைக் காணப் போகின்றோம். 

இக்கதை பாஸ்டன் நகரில் நடக்கின்றது. அந்த நேரத்தில் பாஸ்டன் பெரும் நகரமாக இருந்தது. ஆனால் அதன் செல்வாக்கானது  நியூயார்க் நகரத்துடனோ, அப்பொழுது வேகமாக வளர்ந்து கொண்டிருந்த சிகாகோ உடனோ போட்டியிட முடியாமல் இருந்தது. பாஸ்டனில் அந்நகரங்களை ஓப்பிட அந்த காலகட்டத்தில்  பெரும் தொழில்கள், புதிய மக்கள் குடியேற்றம் நிகழவில்லை.

இந்த நாவல் சிலாஸ் லப்பாம் என்பவரின் கதையைச் சொல்கிறது. இது ஒரு கற்பனைப் பாத்திரம். அவர் தனது சொந்த உழைப்பில், அறிவில் “கனிம வர்ணம் (Mineral Paint)” உற்பத்தி செய்யும் முறைகளைக் கண்டு பிடிக்கின்றார். வர்ணம் செய்யும் தொழிலில் சம்பாதித்து செல்வந்தராகிறார். நாவல் துவங்கும் பொழுது லப்பாம் “தி ஈவண்ட்ஸ் (The Events)” பத்திரிக்கைக்குப் பேட்டி தருகின்றார். அந்த பத்திரிக்கையில் “சாலிட் மென் ஆப் பாஸ்டன் (Solid Men of Boston)”  என்ற தொடர் வந்து கொண்டுள்ளது. அந்த தொடருக்காக பார்ட்லி ஹப்பார்ட் என்னும் நிருபர் லப்பாமை பேட்டி எடுக்கின்றார். லப்பாம் அதன்  வழியாக சமூக அந்தஸ்து  தனக்கு உருவாக வேண்டுமென நினைக்கிறார்.  செல்வம் இருக்கின்றது, செல்வாக்கு வேண்டுமே! 

லப்பாம் தன் செல்வம் குவியக் காரணம் தன்னுடைய வர்ணம்தான் என நம்புகின்றார். அதனால் தன்னுடைய சமூக செல்வாக்குக்கும் அதுவே அடையாளம் என நம்பினார். அந்த அடையாளமே தன்னை உயர்குடி  எனக் காட்டும் என நினைக்கின்றார்.  அந்த அடையாளத்தினை நிருபரிடம் கொண்டு போய் சேர்க்க முழு முயற்சி எடுக்கின்றார். அதனால் நேர்காணலில் வர்ணத்தின் தரம், பயன், அதன் மூலப் பொருள்கள் என விளக்கிச் சொல்கின்றார். பேட்டி எடுக்க வந்த நிருபரிடம் தனது வர்ணத்தினை அழகிய சிறிய ஜாடியில் பரிசாக வழங்குகின்றார். தன் அடையாளம் என நினைப்பதை மீள மீள முன் வைக்கின்றார். மீள மீள முன்வைப்பதால் தன் சமூக செல்வாக்கு உருவாகும் என நினைக்கின்றார். சுவருக்கு அடிக்கும் வர்ணம் அழகை உருவாக்கும் சாதனம் என்றாலும் அது சமூக அந்தஸ்து தரும் சாதனமாக இல்லை. அது உயர் ரசனையின் அடையாளம் இல்லை. இதை நிருபர் கவனிக்கின்றார். நிருபர் “one of nature’s noblemen” என லப்பாமினை பற்றிப் பதிவு செய்கின்றார். “Nature” என்பது “Primitive“ அதாவது “சரியாக இன்னமும் வளராதது”  என மேலை மனநிலையில் பொருள் வரும். அதன் வழியே “நாகரீகத்தின் துவக்க நிலையில் இருப்பவர்” நிருபர் சொல்கின்றார். லப்பாம் வெற்றிகரமான தொழில் முனைவர், செல்வம் ஈட்டத் தெரிந்தவர், ஆனால் அவர்  சமூகம் உயர்குடி என அங்கீகரிக்க அடையாளங்கள் இல்லாதவர் என அந்த நிருபர் பேட்டியின் வழியே சொல்கின்றார்.

பாஸ்டனின் உயர் அந்தஸ்து உள்ள குடும்பங்களில் சமூக செல்வாக்கு எப்படி வருகின்றது? வெறும் செல்வம் குவிப்பது மட்டும் அதற்கு போதுமா?   எந்த அடையாளம் ஒருவருக்கு சமூக செல்வாக்கு வந்து விட்டது எனச் சொல்லும்?  1870களின் லப்பாமுக்கு இதெல்லாம் கேள்விகளாக முளைக்கின்றன. பதில் தேடுகின்றார்.

துவக்கத்தில் லப்பாம் பாஸ்டனின் நங்கீன் சதுக்கத்தில் வாழ்கின்றார். பாஸ்டனில் இந்த பகுதியில் வசிப்பவர்கள் சாதாரணமானவர்கள்.  ஆகையால் பணக்காரர்கள் வசிக்கும் Back Bay பகுதியில் புதிய வீடு கட்ட துவங்குகின்றார். இந்த புதிய வீட்டின் மூலம் தங்கள் சமூக அந்தஸ்தை உயர்த்த முடிவு செய்கிறார். புதிய வீட்டின் கட்டுமானத்தில் தனது வெற்றியைப் பறைசாற்ற, தனது செல்வத்தை அறிவிக்க விழைகின்றார். அதைவிட முக்கியமாக, தன் ரசனையை நிலைநிறுத்த முழு முயற்சி எடுக்கின்றார். நன்கு திட்டமிட்டு  நூலகத்தினை அமைக்கின்றார். அந்தக் காலத்தில் வீட்டில் பெரிய நூலகங்கள் இருந்தால் அது உயர் ரசனையின் அடையாளம் என பாஸ்டனின் உயர்குடி குடும்பங்கள் நம்பின. ஆகவே அதைப் பார்த்த  லப்பாம் அதே போல நூலகம் தன் வீட்டில் உருவாக்க நினைத்தார். 

இது நடந்து கொண்டிருக்கும் பொழுது நகரில் உள்ள சமூக அந்தஸ்து கொண்ட இடங்களில் தனக்கென இடம் இல்லாது லப்பாம் தடுமாறுகின்றார். இந்த தடுமாற்றங்கள் பாஸ்டனின் பாரம்பரிய குடும்பங்கள் மீதும், அவர்கள் உருவாக்கிய சமூக அமைப்பின் மீதும் அவர் சொல்லும் விமர்சனம் வழியாகத் தெரிகின்றது.

லப்பாம் பாஸ்டனின் பாரம்பரிய பணக்காரர்கள் ஒருவரை ஒருவர் குறை சொல்லி புறம் பேசுகையில் கூட சேர்ந்து புறம் பேச இயலாது என நாவலில் சொல்கின்றார். கிசுகிசு சமூக தொடர்பை வலுப்படுத்தும். பிறரின் அனுபவத்தின் அடிப்படையில் உலகத்தைப் பற்றி மறைமுகமாக அறிய தனக்கு உதவக்கூடியது. பாஸ்டனின் பாரம்பரிய பணக்காரர்கள் அனைவரும் ஏதோ ஒரு விதத்தில்  சொந்த பந்தங்கள் ஆகின்றார்கள். அவர்கள் கிசுகிசு பேசிக் கொள்கையில் புதியவன் என்பதால் கூட சேர்ந்து பேசக் கூட முடியவில்லை என்கின்றார். ஏற்கனவே இருக்கும் சமூகத் தொடர்புகள் புதியவர்களை உள்ளே இழுத்துக் கொள்ளும் தன்மை இல்லாது இருந்தது என்கின்றார்.

கதையில் வரும் ப்ரோம்ஃபீல்ட் கோரி, அன்னா கோரி என்ற கதாபாத்திரங்கள் பாஸ்டனின் பழைய செல்வம் உடைய சமூகத்தினை சித்தரிக்கின்றன. அக்காலத்தில் அந்த பழைய செல்வந்தர்கள் அவர்களது  சமூக அடுக்கிலிருந்து கீழிறங்கிக் கொண்டுள்ளார்கள். அதை அவர்களது மகன் டாம் வழியே நாவல் சொல்கிறது. டாம் தனது தந்தையின் பழைய வாழ்க்கைக்குச் செல்ல விரும்பவில்லை. அவன் புதிதாக வந்துள்ள லப்பாமின் நிறுவனத்தில்  வேலைக்குச் செல்ல வேண்டும் என விரும்புகின்றான். “பணம் தற்போது முன்னணியில் உள்ளது, இதுவே நமது சகாப்தத்தின் காதல் கவிதை” என ப்ரோம்பீல்ட் கோரி கூறுவார். 

நாவலில் துணைக் கதையாக ஒரு காதல் கதை உள்ளது. இந்த துணைக் கதையில் புதிதாக உருவான செல்வத்துக்கும், பழைய செல்வத்துக்கும் நடக்கும் நகர்வுகள்  இன்னமும் தெளிவாகத் தெரிகிறது.  இதில் லப்பாமின் மகள்களில் ஒருவரை டாம் திருமணம் செய்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அலசப்படுகின்றன.

நாவலின் முடிவில் லப்பாம் தனது தவறான முதலீடு, தொழிலின் புதிய தொழில் நுட்ப வரவு போலக் காரணங்களால் செல்வத்தை இழந்து பாஸ்டன் நகர் நீங்குகின்றார். அவர் பாஸ்டன் வீடு தீ விபத்தில் எரிந்து போகின்றது. வீட்டுக்கான காப்பீட்டு ஒரு வாரம் முன் முடிவடைந்து இருந்தது. இழப்பின் மேல் இழப்பு. லப்பாம் வெர்மாண்ட் திரும்புகின்றார்.

அதன் பின் பாஸ்டனின் பாரம்பரிய குடும்பத்தினை சேர்ந்த டாம் கோரி லப்பாமின் மகளை மணந்து மருமகனாகின்றான். அவன் புதிய தலைமுறை நவீன அமெரிக்கன். பாஸ்டனின் பாரம்பரியப் பெருமையில் சிக்கி முடங்கவில்லை.  தென் அமெரிக்காவில் பல ஆண்டுகள் தங்கி தொழில் வளர்க்க கிளம்பினான். புதிய இரயில் பாதை நிறுவனங்கள், இயந்திர விவசாயத்தின் வளர்ச்சி என அன்றைக்கு வளர்ந்து கொண்டிருந்த அனைத்து தொழிலும் தான் புதிதாக முதலீடு செய்த வர்ணம் வணிகத்தினை விரிவு செய்யும் இலக்கு கொண்டிருந்தான். அவன் பெரும் பாதை நோக்கி அடுத்த அடி எடுத்து வைத்தான். லப்பாம் அவனுக்கு பெரும் உதாரணமாக இருந்தார். 

இந்த நாவலின் முடிவு டாம் பாஸ்டனின் பாரம்பரிய குடும்பத்திலிருந்து மாறும் காலத்திற்கு ஏற்ப புதிய வழிகளை நாடிச் செல்வதைக் காட்டுகின்றது. டாம் பழமையையும், புதுமையையும் ஒரே நேரத்தில் இணைக்கும் வழியாக நகருகின்றான். டாம் தத்துவம், கவிதை எனப் புத்தகங்கள் வாசிக்கத் தெரிந்தவன். வர்ணங்கள் என்னென்ன மனநிலையைப் பிரதிபலிக்கக் கூடியவை என உளவியல் நோக்க தெரிந்தவன். ஓவியம், சிற்பம் என மனித மனதின் வெளிப்பாடுகளை ரசிக்கத் தெரிந்தவன். அதே நேரம் லப்பாமின் வழியாகக் காலத்தினை புரிந்து கொண்ட தொழில் முனைவோன். புதிய நிலங்களுக்குப் போக அஞ்சாதவன். தன் காதலைப் பிரச்சனைகளுக்கு நடுவில் விடாமல் காப்பாற்றத் தெரிந்தவன். ஒரு விதத்தில் சிலாஸ் லப்பாம் என்னும் கருத்தாக்கம் டாம் வழியே உயிர் கொண்டு தொடருவதாகப் பார்க்கலாம் அல்லவா? மானச புத்திரன் என இந்திய மரபில் சொல் வரும். ஆங்கிலத்தில் “mind-born son” எனச் சொல்வார்கள். டாம் லப்பாமின் மருமகன் மட்டுமல்ல, மானசப்புத்திரனாகின்றான். லப்பாம் இக்கதையின் முடிவில் வேறு உயிரில் கருத்தியலாக எழுகின்றார். கருத்தியலின் ஆற்றல் வடிவமாகத் தொடருகின்றார்.

அமெரிக்க எதார்த்தவாதம் உருவாக்கிய நாவல் வழியே பாஸ்டன் நகரில் பயணித்தோம். தொழில் முனைவில் செல்வம் உருவாவது, கைவிட்டுப் போவது, அதன் அடுத்த தலைமுறை அதன் மேல் எழும்புவது, செல்வம் உருவாக்க வழியின்றி பழம் பெருமையில் சிக்கி கிணற்றுத் தவளை என ஆக இருந்த இளையத் தலைமுறை புதிய பார்வையிலிருந்து கற்றுக் கொள்வது  எனப் பல தளங்களைக் காண ஒரு கருவியாக அமெரிக்கன் எதார்த்தவாதம் உதவுகின்றது. 

இன்றைய அமெரிக்கா டெக்னாலாஜி யுட்டோப்பியா போல நினைக்கப்படுகின்றது. நாவல் படிக்கையில் 138 ஆண்டுக்கு முன் சென்றால் பாஸ்டனில் ஆட்டோமொபைல்கள் இல்லை. குதிரை வண்டிகள் உள்ளன. தொழிற்சாலைகள் உள்ளன. அவை வர்ணம் உற்பத்தி செய்தன. நீராவி எந்திரங்கள் இயங்கிக் கொண்டிருந்தன. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலம் நம்மிடம் இருந்து வெகுதூரத்தில் இல்லை. அங்கிருந்து இங்கு வர கற்பனை, தர்க்கம், உள்ளுணர்வு என்ற மூன்று தளத்திலும் அமெரிக்கா நிகழ்த்திய அறிதல் மிகப் பெரியது. தன் வண்ணப் பெட்டியை அனுபவத்தினால் நிரப்பியது.

இந்திய நாகரீகத்தில் பிறந்து வளர்ந்த நாம் நமது நாகரீகத்தின் நகரங்கள், செல்வ உருவாக்கம், நகரங்களில் உள்ள சமூக செல்வாக்கு, தொழில் முனையும் பார்வை பற்றி யோசிக்கலாம். இந்திய நாகரிகத்தின் செலாஸ் லப்பாம்கள், டாம் கோரிகளைக் கற்பனை செய்து பார்க்கலாம். தஞ்சை 19ம் நூற்றாண்டில் மாநகரம். பாஸ்டன் போல எனச் சொல்லலாம். மதுரையும் மாநகரம். அதைக் குறித்த கற்பனைகளை நாம் உருவாக்கவில்லை என்றால் என்ன நிகழ்கின்றது என்றே யோசிக்க இயலாது. இதைப் பிறர் மீதா, சூழலின் மீதோ சொல்லும் குற்றமாகக் கற்பனை செய்யாமல், விரிவாக்கப்பட வேண்டிய நிகழ்வாகக் கற்பனை செய்வதே அவசியம். கற்பனைகள் எதிர்காலத்தில் ஆற்ற வேண்டியதை சுய சிந்தனையுடன் இணைத்துக் கொடுக்கும். என்ன செய்ய வேண்டும் என திட்டப்படிவம் போடும்.  

துவக்கத்தில் சொன்னது போல இந்தியர்களுக்கு அனுபவங்கள் குறைவு. தங்கள் அனுபவத்துக்குள் அமெரிக்காவினை மடக்கிப் பிடிக்கின்ற முயற்சிகளே நடக்கும். அங்கே ஊரில் சோசியலிசம் சொல்லிக் கொடுத்த குழுச் சண்டை, ஏற்றத் தாழ்வு பேச்சுக்கள் வண்ணப் பெட்டியெங்கும் நிரம்பி உள்ளது. அதைக் கொண்டு வரலாற்று ஓவியம் வரைகையில் அது உண்மையை முழுமையுடன் கைப்பற்றுவதாக இருப்பதில்லை. 

அமெரிக்காவின் அனுபவத்துக்குள் போய் நின்று கற்றுக் கொள்ளுதலே அவசியம். அதற்கு நம் சிந்தனை என்னும் வண்ணப் பெட்டிக்கு அதிக நிறங்கள் தேவை. பிறகுதான் உண்மைக்காட்சியை மனதிலிருந்து எடுத்து வரைய இயலும். அமெரிக்கா 138 ஆண்டுகளில் பிரமாண்டமான உலக நாகரீகமாக எழும்பியது, இன்று உலகமே வரத்துடிக்கும் தேசமாக உருமாற்றி உள்ளது. இந்த ஓவியமும், நாவலும் அது நிகழ்ந்து  எப்படி என்பதை நோக்கி ஒரு சில அடிப்படை கேள்விகளை வாசிப்பவர் மனதில் தரவல்லது. 

வரலாறு என்பது ஞானம். ஞானம் அறிவாகி நம் உள்ளத்தினை, உடலின் செயலை மாற்றி அமைக்க வேண்டும். நகரங்களை எழுப்புதல், தொழில்களை எழுப்புதல், வணிகம் அறிதல், மொத்த மானுட அனுபவத்தினையும் பூசலாகக் காணாது இருத்தல் என கற்றுக் கொள்ள நிறைய உள்ளது. அடுத்த 138 ஆண்டுகளில் என்ன செய்ய வேண்டும் என இந்திய நாகரீகத்தவர் கற்பனை செய்ய ஒரு ஆசை வந்தால் போதும்.

இந்திய நாகரீகத்தின் மாநகரங்களை 21ம் நூற்றாண்டுக்குச் சாத்தியமுள்ள தொழில் நுட்பத்துடன், வசதியுடன் கற்பனை செய்து பார்க்கலாம். உதாரணத்துக்குத் தஞ்சையில் வசதி போதவில்லை எனத் தஞ்சையிலிருந்து சென்னைக்கு, சென்னையில் வசதி போதவில்லை எனச் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு என நகரலாம். நாளை அமெரிக்காவில் வசதி போதவில்லை எனச் செவ்வாய்க்கும் செல்லலாம். அது ஒரு வழி. இன்னொரு வழி இது என் நகரம், இதில் நான் உருவாக்கிக் கொள்ளப் போகும் வசதிகள் இவை இவை எனக் கற்பனை செய்யலாம். அதற்குத் தேவையான பொருளீட்டப் பழகலாம். வசதிகளை நோக்கிச் செல்லலாம். இது ஒரு வழி. இரண்டு வழிகளும் நம் முன் உண்டு. 138 ஆண்டுகளில் உருவாக்கிக் காட்டிய நாகரீகம் உதாரணமாக கண் முன் உள்ளது. 

எதையும் கலை வடிவில் வழியே புரிந்து கொள்வது மனிதருக்கு இயல்பிலேயே உள்ளது. நான்கு வயதுக் குழந்தையாக இருக்கையிலேயே நமக்குக் கதைகள் சொன்னால் புரியும், படம் காட்டினால் புரியும்.  நமக்கான உள்ளுணர்வுகள் அதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. வளரும் பொழுது வயதுக்கு ஏற்றாற்போல விரிவான காட்சிகளுடன் கூடிய கதைகளை, படங்களைப் புரிந்து கொள்ளும் பக்குவம் உண்டு. ஓவியங்கள், கதைகள் கற்பனையில் இன்னொரு வாழ்க்கையை நிகழ்த்துகிறன. இன்னொரு வாழ்க்கை சாத்தியங்களை அறிய உதவுகின்றது. வெறும் சம்பவங்களின் அடுக்காக வரலாற்றைக் காட்டாமல் உணர்வுகள் தளத்தில் கொண்டு வருகின்றது. இங்குப் பார்த்த நாவலும், ஓவியமும் இந்த இடத்தில் நமக்கு உதவுகின்றது.

இக்கதையை படிக்க இங்கே செல்லலாம். https://public.wsu.edu/~campbelld/wdh/rsl01.html


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.