மௌனம்

பனிவிழுங்கி
காற்றுத்தீண்டி
சலசலக்கிற நதி
அறியாது
யுகாந்திர
கனம்சுமந்த
கூழாங்கல் மௌனத்தை.


நீ பேசாமல்
மௌனம் காக்கிற
சாத்வீக நேரங்களில்
எல்லாம்
என் மனம்
வாளெடுத்து
பெரும்போர் தொடுத்து
கொன்று சாய்க்கிறது.


எத்தனை ஆண்டுகளுக்குப் பின்
சந்திக்கிறோம் நாம்
முதன்முறையாக பார்த்தது போல
அதே பட்டாம்பூச்சி
காலம் கொஞ்சம் கனிந்திருக்கலாம்
இரங்கி வந்து தணிந்திருக்கலாம்
உன் கூட்டில் நானும்
என்உயிரில் நீயும்
நெகிழ்ந்திருக்கலாம்
உச்சிக்குளிர்தலில்
அரும்பு உனக்காகவும் எனக்காகவும்
அருகருகே மலர்ந்திருக்கலாம்
வினாக்கள் இல்லை
விடைகள் மட்டுமே
இங்கு
புள்ளிகளின் வடிவத்தில்.


கவிந்த இருளில்
நிலவின் விழுதுகள்
மின்னல் கீற்றொன்று
படர்ந்த யாமம்
பேரமைதியைத்
தழுவிய
புல்லாங்குழல்
பிரசவித்தது
வனத்தின் ஓசை


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.