
“வானத்துக்கும் பூமிக்கும்ல குதிச்சா இவங்க சொன்னதுக்கு?”, என்று அம்மா தன் கைகளை மேலும் கீழும் ஆட்டி சொல்வதையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவள் அப்படிச் செய்தபோது, அதிலிருந்த அந்நியத்தன்மை என்னை ஏதோ செய்தது. கோவமான தருணங்களில் அம்மா வேறு ஆளாக மாறிவிடுகிறாள். “எதுவும் செய்ய மாட்டோம்னு சொல்லலையே? ஜீவா கல்யாணத்திலிருந்து, அது பொண்ணு காலேஜ் படிப்பு வரைக்கும் இவங்க தான பண்ணாங்க. இத சொன்னா, நீங்க ஒன்னும் சும்மா கொடுக்கலை அப்படின்னு சொல்லிட்டு விருட்டுன்னு போனா என்னண்ணா அர்த்தம்?” என்று அம்மா கதிரேசன் மாமாவைப் பார்த்துக் கேட்டாள்.
அப்பாவின் அருகில் மற்றொரு நாற்காலியில் ஏதோ ஒரு சிந்தனையில் இருப்பதைப் போல அமர்ந்திருந்த கதிரேசன் மாமா அம்மாவின் பேச்சு சட்டெனக் கேள்வியில் முடிந்ததை எதிர்பார்க்காததுபோல சுதாரித்து, “திமிரு, வேற என்ன?” என்றார்.
அப்பா தலையைக் குனிந்து நாற்காலியின் பிடியில் கைகளை இருத்தி விரல்கள் கோர்த்து அமர்ந்திருந்தார். அம்மாவின் பேச்சில் தன் பெருந்தன்மையை உணர்ந்து பெருமிதம் கொண்டது போல மடங்கியிருந்த அவர் கால்கள் தன்னியல்பாக ஒன்றோடு ஒன்று தொட்டும் விலகியும் அசைந்துகொண்டிருந்தன.
அவர் நேர் எதிரே கட்டிலில் அமர்ந்திருந்த மணவாளன் சித்தப்பா கைகளைக் கட்டிக்கொண்டு அவற்றைத் தன் பெருத்த வயிற்றில் நிறுத்தியிருந்தார். அம்மா பேசுவதையே பார்த்துக்கொண்டிருந்தவர் அவ்வப்போது நெற்றியில் படிந்திருக்கும் முடியை இடது கையால் மேலும் அழுத்திப் படியவிட்டுக்கொண்டார். அவர் அருகிலேயே கோதை சித்தி தரையில் சம்மணமிட்டு சமயம் கிடைக்கும் போதெல்லாம் என்னைப் பார்த்து, “இவங்ககிட்ட அப்பவே சொன்னேன். கேட்டாதானே.” என்று அருகில் அமர்ந்திருந்த சித்தப்பாவின் தொடையில் ஓங்கித் தட்டினாள்.
நான் அவர்கள் பேசுவதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதவன் போல அவ்வப்போது என்னிடம் வந்து விழும் கேள்விகளுக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமர்ந்திருந்தேன்.
“யாரு வக்கீலு?” என்று அப்பாவிடம் திரும்பி கதிரேசன் மாமா கேட்டார்.
“பரிமளாக்கிட்டா சொல்லிருக்கேன். கோர்ட்டுலதான வேலை பார்க்குது. யாரோ அதுக்கு தெரிஞ்ச மேடம் ஒருத்தங்க இருக்காங்களாம். கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லியிருக்கு.”
“நல்லது. அப்படியே செய். ஒன்னும் பயப்பட வேண்டாம். போய் வக்கீல்கிட்ட எடுத்துக்கிட்டு போய் பேசுங்க. எல்லாம் நல்லபடியா முடியும்” என்று சொல்லி சிறிது இடைவெளி விட்டு “அததுக்கு ஒரு நேரம் வரணும் என்னா?” என்று சிரித்துக்கொண்டே என்னைப் பார்த்துக் கேட்டார் கதிரேசன் மாமா.
நான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். சற்று நேரம் காத்திருந்து திரும்பி அம்மாவைப் பார்த்து “என்ன நான் சொல்றது?” என்றார்.
“ஆமா. ஆமா” என்றாள்.
“இப்படித்தான் இந்த விஷயம் முடியும்னு இருந்தா என்ன பண்ணமுடியும்?” என்றார்.
சட்டென அங்குச் சிறிது நேரம் அமைதி நிலவியது.
கதிரேசன் மாமா வலதுகையை மடக்கி நாற்காலியின் கைப்பிடியில் ஊன்றி விரல்களைத் தாடையில் தேய்த்துக்கொண்டிருந்தவரின் கண்கள் ஏதோ ஒன்றில் நிலைத்திருந்தது.பின் சட்டென “நானும் சுமூகமா எல்லாத்தையும் முடிக்கணும்னு ஆரம்பத்திலிருந்து முயற்சி பண்றேன். எப்பலேர்ந்து? இருபது வருசத்துக்கு முன்னலேர்ந்து. உங்க தாத்தா செத்ததுக்கப்புறம் சொத்தெல்லாம் பிள்ளைங்க அஞ்சு பேருக்கும் பாகப்பிரிவினை செய்ய வந்து நின்னப்பலேர்ந்து. அந்த மனுஷன் ஒழுங்கா உயில் எழுதி வச்சிருந்தார்னா ஒரு பிரச்சனையும் இருந்திருக்காது. எத்தனை தடவ பஞ்சாயத்து கூட்டுனோம். இவன் சரின்னு சொன்னா இவன் ஒத்துக்கமாட்டான், இவன் சரின்னு சொன்னா இவன் ஒத்துக்கமாட்டான்” என்று அப்பாவையும் சித்தப்பாவையும் மாறி மாறி கை காட்டினார்.
“இவனுங்க ரெண்டுபேரும் சரின்னு சொன்னா செத்துபோனானே உங்க சித்தப்பன் மணி அவன் எதையும் ஒத்துக்காம எழுதின மொத்த அக்ரிமெண்டையும் கிழிச்சுப்போட்டான். எல்லாத்துக்கும் மேல உங்க பெரியப்பன். அவரும் எல்லா ஆட்டமும் ஆடிட்டு போய் சேந்துட்டாரு. எத்தனை சண்டை எத்தனை களேபரம். ஒண்ணா ரெண்டா. ஒருதடவை அந்த தங்கராஜ் பய கட்டையால உங்க சித்தப்பன அடிச்சுப்போட்டான். தூக்கிகிட்டு ஓடு ஆஸ்பத்திரிக்கு. அவனுக்கு ஒண்ணுமில்லைன்னு டாக்டர் சொன்னதுக்கப்புறத்தான் எனக்கு உசிரே வந்தது. ஆனா ஒண்ணு முத்தரசு” என்று அப்பாவின் முதுகைத் தட்டி “இவ்வளவு களேபரத்துலயும் யார் வீட்டுலையோ பிரச்சனை மாதிரி இருப்பான் குட்டியப்பா பய. எதுக்கும் வாயத்தொறக்காம. அப்படியே கல்லு மாதிரி நிப்பான்”, என்று அவர் உடலை விறைப்பாக வைத்துக் காட்டி வெற்றிலை போட்டுக் கரை படிந்த காவி பற்கள் தெரிய வாய்விட்டுச் சிரித்துவிட்டு, “விவரம் கெட்ட பய. ஒரு நாள் நான் அவனை தனியா அழைச்சுக்கிட்டு போயி டேய் உனக்கு பாகம் பிரிக்கிறதுல்ல எதாவது வேணும்னா எங்கிட்ட சொல்லு நாளைக்கு வம்பா போயிடும்னு கேக்குறேன். கல்யாணம் பண்ணிவைங்கன்னு சொல்றான். நான் தலைல அடிச்சிக்கிட்டு வந்துட்டேன்”, என்று சொல்லிச் சிரித்தார்.
அங்கிருந்த மற்ற அனைவரும் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டு ஆளுக்கொரு புள்ளியில் நினைவை நிறுத்தி வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் குரல் சற்று தாழ்ந்து, “அதுக்கப்புறம் ஒவ்வொருத்தருகிட்டயும் தனித் தனியா தன்மையா பேசி கொஞ்சம் கொஞ்சமா எல்லாத்தையும் சரி பண்ணோம். எதுக்கு சொல்றேன்னா” என்று தன் வேஷ்டியை இழுத்து கால்களுக்கிடையில் சொருகிக்கொண்டு, “இவ்வளவு கதையும் குட்டியப்பா பொண்டாட்டிக்கு தெரியுமா? வீட்டுக்கு வந்து என் புருஷன அண்ணன் தம்பிங்க நாலுபேரும் ஏமாத்திட்டாங்க. பாகம் பிரிச்சது சரியில்ல. மறுபடியும் பிரிக்கணும்னு சொல்றா.” என்று வாய் சற்று திறந்துவைத்துக்கொண்டு ஆச்சரியப்படுவதுபோல ஒரு பார்வையைச் செலுத்தி என்னையே உற்றுப் பார்த்தார். பின்பு, “அண்ணன் தம்பிங்க எல்லாரும் இப்ப நல்லாருக்காங்கன்னா, படிச்சாங்க வேலைக்கு வெளியூருக்கு போனாங்க இப்ப நல்லாருக்காங்க. நீ கஷ்ட்டப்படுறன்னா அதுக்கு என்ன பண்ண முடியும்? எல்லாருக்கும் சரி சமமாதான பாகம் பிரிச்சது? யோசிக்கவேணாமா?” என்று பேசிவிட்டு ஆசுவாசப்படுத்திக்கொண்டார்.
இவ்வளவையும் நினைவில் வைத்திருக்கும் கதிரேசன் மாமா அவர் சொன்ன அத்தனை காட்சிகளிலும் நானும் சிறுவனாக ஒரு ஓரத்திலிருந்து கவனித்தேன் என்பதை மறந்துபோய் என்னிடம் இதைச் சொல்லிக்கொண்டிருந்தார். நாங்கள் இப்போது அமர்ந்திருக்கும் இந்த வீடு பாகப்பிரிவினை செய்தபின்பு பழைய வீட்டை இடித்துக் கட்டப்பட்டது. அந்தப் பழைய வீடு என் தாத்தா பூ வேலைகள் செய்து அவர் சொந்த உழைப்பில் கட்டியது. இப்போது அமர்ந்திருக்கும் இதே இடத்தில் சதுரமான பெரிய முற்றம் ஒன்று இருக்கும். முற்றத்தின் நீல வண்ண மூடியாய் வானமும் சதுரமாக வெட்டப்பட்டதுபோல முற்றத்தில் தெரியும். அத்துணை வெயிலும் முற்றத்தில் விழுந்து தண்ணீர் நிரப்பப்பட்டிருக்கும் பித்தளை அண்டாக்கள் மினுமினுத்துக்கொண்டிருக்கும். மழை நாட்களில் நான்கு மூலைகளிலும் இருக்கும் சாரத்தின் வழியே தண்ணீர் கொட்டுவதை திண்டில் அமர்ந்து நானும் அக்காள்களும் வேடிக்கை பார்ப்போம்.
இரவு நேரங்களில் முற்றத்தில் பாய் போட்டு யாரோ ஒருவர் நட்சத்திரங்களை என்னும் முணுமுணுப்பில் உறங்கிப்போவோம். கணவன் மனைவி ஐந்து பிள்ளைகள் என ஒரு குடும்பம் நிறைவாக வாழ என் தாத்தா கட்டிய அந்த பெரிய வீடு, அவருக்குப் பிறகு நான்கு பிரிவாகத் தட்டியாலும் அட்டைகளாலும் அடைக்கப்பட்டுப் பிரிந்தும் சண்டையிட்டுக்கொண்டும் அவர் பிள்ளைகள் வாழ்வார்கள் என்று நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.
இந்த நான்கு வீடுகளிலும் கலக்காமல் வெளியே திண்ணையில் கொசுவலை கட்டி படுத்து உறங்கி இருக்கும் இடம் தெரியாமல் இருந்தவர் தான் கடைசி சித்தப்பா ஜீவா. அவரை நாங்கள் குட்டியப்பா என்று அழைக்கத்தொடங்கி ஊரும் அவரை குட்டியாக்கி இருந்தது. நான்கு வீடுகளிலிருந்து ஏதேனும் ஒரு வீட்டிலிருந்து வரும் அழைப்புக்குக் காத்திருந்து சாப்பிட்டு, கட்டிய பூக்களைச் சைக்கிளில் வைத்துக்கொண்டு விற்கச் சென்றுவிடுவார். மெலிந்த தேகமும் சுருள் மயிர்கள் அடர்ந்த ஒல்லியான கால்களும் ஒடுங்கிய கன்னங்களும் உட்குழிந்த கண்களும் காதோரம் சுருண்டு கலைந்த கேசத்துடன் இருக்கும் குட்டியப்பா என் தாத்தாவின் சாயலைக் கொண்டு இருப்பதாக அம்மா சொல்லுவாள். இரவில் கொசுவலைக்குள் ஏதேனும் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கும் குட்டியப்பாவுக்கென்று இருந்த ஒரே ஆசை நடிகை அம்பிகாவைத் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதுதான்.
அவருக்கென்று இருந்த அந்த ஒரு தகரப் பெட்டியில் தீபாவளிக்கு அண்ணன்கள் யாரேனும் வாங்கி தரும் ஆடைகளும் கொஞ்சம் பணமும் பெட்டியின் மூடியின் உள்பக்கத்தில் தாத்தாவின் புகைப்படத்திற்குப் பக்கத்திலேயே நேர் வகிடெடுத்து தலை நிறைய முல்லைப் பூவும் கன்னத்தில் கைவைத்துக்கொண்டும் இருக்கும் அம்பிகாவின் படமும் இருந்ததை நான் ஒரு முறை பார்த்திருக்கிறேன். தரையிலிருந்த அப்பெட்டியை குத்துக்காலிட்டு அமர்ந்தவாறு அவர் ஒவ்வொரு முறையும் திறக்கும்போதும் அம்பிகா கன்னத்திலேயே கை வைத்துக் கொண்டு கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் அவரை மட்டுமே பார்க்கும் அந்த புகைப்படம் அவருக்குச் சிறு மகிழ்ச்சியைத் தந்திருக்கும். ஏன் அம்பிகாவைப் பிடிக்கும் என்ற கேள்விக்கு அவரால் ஒருபோதும் காரணத்தைச் சொல்லமுடியவில்லை. என் அண்ணன்கள் ஒருமுறை அவரை கேலி செய்தபோது அவர் ஒரு நாள் தான் காசு சேமித்து மெட்ராஸ் சென்று அம்பிகா தன்னை கல்யாணம் செய்துகொள்ளச் சொல்லி அவள் காலில் தங்கக் காசாகக் கொட்டுவேன் என்று தீவிரமான முகத்துடன் அவர் சொன்னபோது அது அவரால் முடியக்கூடும் என்றே எண்ணினேன்.
அதன்பின் ஒருமுறை அப்பாவுடன் சைக்கிளில் டவுனுக்கு சென்றபோது, அழுக்கு வேஷ்டியை முட்டி வரை மடக்கி வலது கையால் இடது கையை பின்புறமாகப் பிடித்துக்கொண்டு ஏதோ ஒரு சிந்தனையில் தகிக்கும் அந்த வெயிலில் செருப்பில்லாமல் வெறும் காலில் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தவரை அப்பா பார்த்துவிட்டு “போறான் பாரு பரதேசி மாதிரி” என்று திட்டியபோது அன்று சபதமிட்ட குட்டியப்பாவின் மீது எனக்குச் சற்று சந்தேகம் வந்தது. சில நாட்கள் கழித்து பூ விற்றுச் சேமித்த காசெல்லாம் காணாமல் போய்விட்டதாக வந்து அப்பாவிடமும் பெரியப்பாவிடமும் சொல்லி அழுதபோது அவர்கள் அவரை கண்டபடி திட்டி அவர் பொறுப்பில்லாமல் இருந்ததன் விளைவுதான் அது என்று சொல்லி அனுப்ப அவர் இரவு முழுவதும் விசும்பிக்கொண்டே உறங்கியபோது எனக்கு ஒட்டு மொத்தமாக அவரின் மீதிருந்த நம்பிக்கை போனது.
தாத்தாவிற்குப் பின் குட்டியப்பா மட்டும்தான் மரபான பூ வேலைகள் செய்யும் தொழிலில் ஈடுபட்டிருந்தார். அந்த நீண்ட திண்ணையில் ஜாதிமல்லி, காக்கரத்தான், ஜெவ்வந்தி, மரிக்கொழுந்து, நந்தியாவட்டை , மருக்கு, டிசம்பர் பூ, ரோஜா எனப் பலவிதமான வண்ண வண்ண பூக்களின் சிறு சிறு குவியல்களின் மத்தியில் அமர்ந்து பூக்களை ஜோடியாக எடுப்பதும் நாரில் வைத்து விரல்களால் வளைத்து சரக் சரக் என இழுப்பதுமாக ஒரு தாள நயத்துடன் சரம் சரமாக பூக்கள் கட்டுவதும் மாலைகள் சுற்றுவதுமாக அவர் வேறு ஒரு ஆளாக உருவெடுத்திருப்பார். பூ கட்டும்போது அவர் முகமும் கைகளும் வெவ்வேறு பாவனைகளும் அசைவுகளுமாக மாறி அதனுடன் உரையாடிக்கொண்டிருப்பதுபோல இருக்கும். பூக்களின் கலவையான அந்த மணம் எனக்கு எப்போதும் பிடித்தமான ஒன்று. நான் அங்கேயே அமர்ந்து தண்ணீரில் ஊறவைக்கப்பட்டிருக்கும் வாழை நார்களைப் பந்துபோல சுற்றியும், பூக்களின் குவியல்களிலிருந்து பூக்களை ஜோடியாக எடுத்து வைத்துக்கொண்டுமிருப்பேன்.
குட்டியப்பா மனிதர்களைவிடப் பூக்களைப் பற்றித்தான் நிறையப் பேசுவார். ஒவ்வொரு பூக்களைப் பற்றியும் விளையாட்டாக எதையாவது சொல்லிக்கொண்டேயிருப்பார். கனகாம்பரத்தின் அடிப்பக்க காம்பில் தேன் இருப்பதாகச் சொல்லி அதனை வாயில் வைத்து உறிஞ்சு பார்க்கச் சொல்வார். மருக்கின் வாசனையை நுகர்ந்துபார்க்கச் சொல்லி அதனை என் புத்தகத்தில் வைத்துக்கொள்ளச் சொல்வார். கோழிக்கொண்டை பூவை எடுத்து அவரின் முகத்தில் தேய்த்துக்கொண்டு ராஜரத்தினம் புடவை கடையில் கைகளில் வழுக்கிச் செல்லும் விலையுயர்ந்த ஒரு புடவையைப் போல இருப்பதாகச் சொல்வார். மதியம் ஆரம்பித்து அம்மா மாலை நேரத்தில் மாடத்தில் தெருவிளக்கு ஏற்றும் வரை அவருடன் எதையாவது கேட்டுக்கொண்டும் பேசிக்கொண்டுமிருப்பேன்.
ஒருமுறை, குட்டியப்பா “உலகத்திலேயே அழகான பூ எது?”
“எல்லாமே அழகான பூ தான்”
“இல்ல ஒன்னு இருக்கு. ரோஜாப்பூ”
“ஓ! அது பணக்காரங்க பூல்ல. அதான்.”
நான் புரியாமல் அவரை பார்க்க அரளி நந்தியாவட்டை செண்டு பூக்களை காட்டி “இதெல்லாம் ஏழைங்க பூ” என்றார்.
“ஏன் குட்டியப்பா அப்படி?”
“நந்தியாவட்டையும் அரளியும் அது பாட்டுக்கு ஏங்கவேணும்னாலும் வளரும்ல. யாரும் அதுக்கு பாத்து பாத்து தண்ணி ஊத்தவும் எரு வைக்கவும் இருக்கமாட்டாங்க. ரோஜா அப்படியில்லை. சொகுசால்ல வளரும்.” என்றார்.
“அப்ப ரோஜா பூதான் ஒசத்தி. ரோஜாப்பூ மட்டுமே இருக்கிற மாதிரி மாலைக்கட்டுங்க” என்றேன்.
“ஒசத்திதான். ஆனா ஒரு மாலையில நந்தியாவட்டைக்கும் அரளிக்கும் அதிகமான இடமும் ரோஜாவுக்கு குறைந்த இடமும் கொடுக்கணும். அதுதான் சமமாகவும் நியாயமாகவும் எல்லோருக்கும் கட்டுப்படியாகக்கூடிய விலையிலும் இருக்கும்னு தாத்தா சொல்லுவாங்க”, என்று அவர் கட்டிய அந்த மாலையை என்னிடம் தூக்கிக் காண்பித்தார். எனக்கு அந்த மாலை பிடிக்கவேயில்லை.
ஒவ்வொரு வார இறுதியிலும் எங்கள் வீடு பாகப் பிரிவினை பஞ்சாயத்தால் பரபரப்பாக இருக்கும். பாகத்தைப் பிரிக்க வீட்டில் பஞ்சாயத்து கூடும்போதெல்லாம் குட்டியப்பா பெரும்பாலும் கடைசி வரை இருக்க மாட்டார்.பூ வாங்குவதற்கோ கட்டுவதற்கோ வெளியே சென்றுவிடுவார். யாரேனும் அவரை கண்டுபிடித்து அழைத்து வர ஆள் அனுப்பப்பட்டுத் தயங்கியபடியே உள்ளே வருவார். கூட்டத்தின் முன்பு பெரியப்பா அவரை கண்டபடி திட்டி, முடியும் வரை இங்கேயே இருக்குமாறு சொல்லுவார். இறுதியாக நடந்த ஒரு பஞ்சாயத்தில் அந்த பெரிய வீடு நான்காகப் பிடிக்கப்பட்டு குட்டியப்பாவுக்கு அவ்வீட்டிலிருந்து சற்று தொலைவில் நான்கு சுவர்கள் கொண்டு கடையாக இருந்த ஒரு இடத்தையும், குட்டியப்பாவின் கல்யாண செலவை மற்ற நால்வரும் ஏற்றுக்கொள்ளவேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி குட்டியப்பாவிற்கு பல இடங்களில் பெண் பார்த்து ஒரு வழியாக ஒரு பெண்ணை தூரத்துச் சொந்தம் ஒன்றிலிருந்து கண்டுபிடித்தார்கள். அதற்குள் என் தாத்தா கட்டிய பெரிய வீடு இடிக்கப்பட்டு நீள வாக்கில் சிறு சிறு பொந்துகள் போன்ற வீடுகளாகக் கட்டப்பட்டு அவரவர்கள் குடியேறினர். அந்த சதுரமான முற்றம் வெறும் நினைவுகளாய் ஒவ்வொரு வீட்டிலும் சிறிது இருந்தது. அந்த பெரிய திண்ணையும் இப்போது இல்லாமல் போனதால் குட்டியப்பா அவருக்கு ஒதுக்கப்பட்ட கடையில் படுத்துக்கொண்டார்.
அந்த காலகட்டத்தில் மண்டல் கமிஷன் அறிக்கையை எதிர்த்தும் ஆதரித்தும் மிகப்பெரிய போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அது எங்கள் ஊருக்குள்ளும் பரவிப் பல அண்ணன்கள் உணர்ச்சி பொங்க ஆக்ரோஷமாகத் தெருவில் உரக்க மேடையில் பேசிக்கொண்டிருந்தனர். என் பெரியப்பா அன்றைய ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்ததால், அக்கடையை அவர்கள் போராட்டம் முடியும் வரை உபயோகித்துக்கொள்ளச் சொல்லிவிட, குட்டியப்பா அக்கடையின் ஒரு மூலையில் சுருங்கிக்கொண்டார். கட்சி உறுப்பினர்களிடையே நடக்கும் விவாதங்களும் ஆலோசனைகளும் சண்டைகளும் இரவும் தொடர அவர் தனிமையான இரவுகள் தொலைந்து போயின. அவரின் திருமண நாளுக்கான தேதி குறிக்கப்படுவது போராட்டத்தினாலும் கலவரத்தினாலும் தள்ளிக்கொண்டே போனது.
அப்போராட்டத்தின் தொடர்ச்சியாக, ஒரு நாள் பள்ளிக்கூடத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டு யாரோ ஒரு அரசியல் தலைவரை வரவேற்கக் கைகோர்த்தபடி தெருவில் நிற்கவைக்கப்பட்டிருந்தோம். தலையில் மொசு மொசுவென்று கோழிக்கொண்டை பூவில் செய்தது போன்றிருந்த சிகப்பு நிற குல்லாவும் கருப்பு நிற தடித்த கண்ணாடியும் நீண்ட தூய்மையான வெள்ளை நிற ஆடையும் அணிந்து கொண்டு கை கூப்பி எங்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவிப்பது போலப் புன்னகை செய்துகொண்டே பெரிய வாகனத்திலிருந்தவர் அதிலிருந்தவாறே ஹிந்தியிலும் அவ்வப்போது ஆங்கிலத்திலும் பேசிக்கொண்டிருந்தார். எங்களுக்கு என்ன பேசுகிறார் என்பது கொஞ்சமும் விளங்காமலிருந்தது. எங்கள் அருகிலிருந்த பெரியவர் ஒருவர் என் ஆசிரியரைப் பார்த்து, “என்ன சொல்லறாரு?” எனக் கேட்டார்.
அவர் சிறிது நேரம் மேடையில் பேசுபவரையே பார்த்துவிட்டு,”இங்க எல்லோரும் சமமில்லைன்னு சொல்லறாரு.” என்றார்.
சரியாக அவர் காதில் விழாததால், கையை காதின் மடல்களுக்கு அருகில் வைத்துக்கொண்டு அவர் அருகே சென்று என்ன சொல்லறாரு என்று மீண்டும் கேட்டார்.
என் ஆசிரியர் அவர் காதின் அருகில் சென்று, “எல்லோரும் சமமில்லைன்னு சொல்றாரு”
“ஒருத்தர் எல்லோரும் சமம்ன்னு சொன்னாரு. இவர் என்னனா சமமில்லைன்னு சொல்லறாரு. ஒன்னும் புரியல போ”, என்று சொல்லிக்கொண்டே சென்றார்.
பள்ளி அன்று சீக்கிரமாகவே விட்டுவிட நான் நடந்து வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தேன். அந்த வழியாக வந்த குட்டியப்பா என்னைக் கண்டதும் அவர் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்கு அழைத்துவந்தார். வரும்போது நான் அவரிடம் அந்த தொப்பி அணிந்த மனிதர் சொன்னதாக என் ஆசிரியர் சொன்ன வாசகத்தின் அர்த்தம் என்ன என்று குட்டியப்பாவிடம் கேட்டேன். அவருக்குத் தெரியவில்லை என்றார்.
போராட்டங்கள் ஓரளவு குறைந்திருந்தபோது எங்கள் வீட்டு அருகிலேயே இருந்த கோனார் சத்திரத்தில் குட்டியப்பாவின் திருமணம் நடந்தது. நான் குட்டியப்பாவை திருமணம் செய்துகொள்ளப்போகும் என் சித்தியை அவர்களின் திருமணத்திற்கு அன்று தான் பார்த்தேன்.என் ஆவல் எல்லாம் அவள் அம்பிகாவின் அழகுடன் இருக்கிறாளா என்று பார்ப்பதிலேயே இருந்தது. சரியான வெளிச்சமில்லாமல் இருந்த அந்த மண்டபத்தில் முதலில் சித்தியைப் பார்த்தபோது அவள் மணப்பெண்ணுக்குரிய அத்துணை அலங்காரத்துடன் குனிந்த தலையுடனே இருந்ததால் எனக்கு அவளைச் சரியாகப் பார்க்கமுடியவில்லை.
குட்டியப்பா சாதாரணமாக எப்போதும் போல யாரோ ஒருவரின் கல்யாணத்திற்கு வந்தது போலவே இருந்தார். புது வேஷ்டியும் சட்டையும் தோளில் மாலையுடன் கல்யாண கோலத்தில் இருப்பவரைக் கண்டு அங்கிருந்தவர்களின் முகங்கள் அடக்கமுடியாத சிரிப்பொன்று மெல்ல அவர்களின் உதடுகளின் வழியே கசிந்து ஒழுகுவதுபோலவே இருந்தது. சீர்காழியிலிருந்து வந்திருந்த மாமா ஒருவர் “பரவாயில்லை, குட்டியப்பாவுக்கும் ஒரு பொண்ணு கண்டுபிடிச்சி கல்யாணத்தை பண்ணிட்டீங்க” என்று அப்பாவிடம் கை குலுக்கியபோது அடங்கியிருந்த அத்துணை சிரிப்புகளும் வெடித்து வெளிவந்தது. குட்டியப்பா நாணத்தால் வெக்கி குனிந்துகொண்டார். நான் சித்தியைப் பார்த்தேன். குனிந்த தலையுடன் அவள் முகம் எந்த நேரமும் அழுதுவிடும் பாவனையில் இருப்பது போலவே இருந்தது.
பிறகு மறுநாள் விருந்தின் போது எதிர் வீட்டுப் பெரியம்மா குட்டியப்பாவை ஏதேதோ சொல்லி கேலி செய்து அனைவரையும் சிரிக்கவைத்துக்கொண்டிருந்தாள். என் எதிரே வளையல்கள் முணுமுணுக்கும் சத்தத்துடன் சித்தி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அவளைப் பார்த்தேன். அலங்காரமற்று, முகத்தில் மஞ்சள் பூசிக் குளித்திருந்தாள். உருண்டையான முகத்தில் சிறு பொறிகள் கொண்டு கன்னம் சற்று உப்பியும், வழித்து நேர் வகிடெடுத்ததில் பெரிய நெற்றியும் உதடுகள் கருமையாகச் சற்று வாளிப்பான உடல்வாகுடன் நிமிரும்போது அருகில் அமர்ந்திருந்த குட்டியப்பாவுடன் சற்று உயரமாக இருந்தவளைக் கண்டவுடன் எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. குட்டியப்பாவிடம் எந்த சோகமோ, வருத்தமோ இல்லை. அவர் அருகில் அமர்ந்திருந்த சித்தி ஏனோ சோகமாக இருந்தாள்.
கல்யாணத்திற்குப் பின்பு சில காலங்கள் என் சித்தப்பா வீட்டில் தங்கியிருந்தார்கள் அங்குதான் அவர்கள் தங்குவதற்கான அறை என்று ஒன்று இருந்தது. சித்தி குட்டியப்பாவிடம் சரியாகப் பேசாமல் அவரை தவிர்த்துக்கொண்டே இருப்பதாகக் கோதை சித்தி சொன்னாள். அப்போதிலிருந்தே மெல்ல உரசல்கள் ஆரம்பித்திருந்தன. பெரியளவில் பிரச்சனையைத் தவிர்க்க குட்டியப்பாவுக்கென ஒதுக்கப்பட்ட அந்த கடையில் தங்க வைக்கப்பட்டு குடித்தனம் செய்யத் துவங்கியிருந்தனர். அதன் பின்பு அவர்களுக்கிடையே நடக்கும் எதுவும் வெளியே கசியாமல் அவர்களின் வாழ்க்கை மிக ரகசியமாக அந்த நான்கு சுவர்களுக்குள் மட்டுமே நடந்தது. குட்டியப்பா எங்கள் வீட்டுக்கு வருவதும் குறைந்து போனது. அந்த கடையின் வெளியிலேயே ஒரு கடைவைத்து மீண்டும் பூக்கள் வியாபாரம் செய்யத் தொடங்கினார். அவ்வப்போது யாரேனும் சொந்தங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் மட்டுமே சித்தியைப் பார்க்க முடிந்தது. அவளின் கண்களிலிருந்த சோகம் வேறொன்றாக உருமாறி அவளின் முகம் மேலும் இறுக்கமாகியது. நாளடைவில் அவள் எந்த சொந்தங்களின் வீட்டுக்கும் வராமல் குட்டியப்பா செல்வதும் தடைசெய்யப்பட்டது என்று செய்திகள் மட்டும் வந்தன. மற்ற நான்கு குடும்பங்களும் பெரிதாகச் சிரத்தை எடுத்து அவர்களுடனான உறவைப் புதுப்பித்துக்கொள்ள முயற்சி எடுத்ததாகத் தெரியவில்லை. ஒரு நாள் குட்டியப்பா சித்தப்பாவிடம் சென்று வீடு பாகம் பிரித்தது சரியில்லை என்றும் மீண்டும் அதனை ஒழுங்காகப் பிரிக்கவேண்டுமென்றும் சித்தி சொல்லி அனுப்பியதாக வந்து சித்தப்பாவிடம் கூற சித்தப்பா ஏதேதோ சொல்லி அவரை திருப்பி அனுப்பிவிட்டார். இதை முதலில் அவ்வளவாக யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின்பு மெல்ல ஊரிலிருந்த மற்ற பெரியவர்களிடம் சென்று சித்தி முறையிடப் பிரச்சனை பெரிதாகி பின்பு வேறு ஒரு வடிவமாகி ஐந்து குடும்பங்களுக்கும் பகை சூழ்ந்து பிரித்து வைத்தது.
நான் என் பள்ளிக்கூடம் படிப்பு என்று என் கவனம் மாறி வீட்டில் நடக்கும் எதுவும் என் கவனத்திற்கு வராமல் போய்விட்டது. பின்பு நான் கல்லூரிக்குச் செல்ல என் நினைவில் குட்டியாப்பாவும் சித்தியும் சுத்தமாக மறைந்துபோனார். விடுமுறையில் வீட்டுக்கு வரும்போது ஏதேனும் விஷயங்களை அம்மா சொல்வாள்.
“குட்டியப்பாவுக்கு குழந்தை பிறந்திருக்கிறது. விட முடியுமா? என்னவோ போல இருந்துச்சி. அதான் நானும் கோதை சித்தியும் குழந்தையை பார்க்க வீட்டுக்கு போனோம். வீடு சகிக்கல. வீடாவா வச்சிருக்கா? இதுல சொத்தை மறுபடியும் பிரிக்கணுமாம்.” என்றாள்.
தாத்தாவின் சொத்து சரியாகப் பிரிக்கப்படவில்லை என்பதைச் சித்தி தொடர்ந்து இன்றும் சொல்லிக்கொண்டும் அதற்காகப் போராடிக்கொண்டுமிருந்தது ஆச்சரியமாக இருந்தது. எது அவளைச் சரியாகப் பிரிக்கப்படவில்லை என்பதாக நம்பவைக்கிறது என்று புரியாமல் இருந்தது. பின்பு அப்பாவிடம் ஒரு முறை இதைப் பற்றி கோவமாகக் கேட்டபோது, “அப்போதிருந்த ஊர் பெரியவர்கள் தாத்தாவின் உயில் படி பிரிக்க முடியாதென்பதால் சொத்து மதிப்பு கணக்கில் கொண்டு சரி சமமாகத் தான் ஐந்து பேருக்கும் பிரித்துக்கொடுத்தார்கள். அதனால் தான் மற்ற அண்ணன் தம்பியெல்லாம் ஒத்துக்கொண்டார்கள். அவனுங்களும் படிச்சவங்கதான. தப்பா இருந்தா எப்படி ரெஜிஸ்டர் பண்ணும்போது அவங்க எல்லோரும் சம்மதிச்சு கையெழுத்து போட்டிருக்க முடியும்? இதெல்லாம் தெரியாம அவ யார் பேச்சோ கேட்டுகிட்டு ஆடிக்கிட்டு இருக்கா. நீனும் படிச்சவன் தான. நீயே படிச்சு பாரு.” என்று இரண்டு காகித கட்டுகளை என்னிடம் தூக்கி எறிந்தார். ஒன்று பழுப்பு நிறத்தில் கரை படிந்து முனைகள் மடிந்து விலை குறைந்த பத்திரப் பதிவு ஸ்டாம்பில் நுணுக்கிய கையெழுத்தில் எழுதப்பட்டிருந்தது. மற்றொன்று நல்ல வெள்ளைத் தாளில் புதியதாக விலை அதிகமான பத்திரப் பதிவு ஸ்டாம்பில் அச்சிடப்பட்டு இருந்தது. நான் மேலும் குழப்பமடைந்து அதனை எடுத்து அப்பாவிடம் திருப்பி கொடுத்துவிட்டுக் கிளம்பிவிட்டேன்.
இன்று எனக்குத் திருமணமாகி குழந்தையும் பிறந்துவிட்டது. ஒன்றும் மாறவில்லை. சித்தி நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து எஞ்சியிருக்கும் அப்பாவுக்கும் சித்தப்பாவுக்கும் வழக்குப் பதிவு செய்திருந்த அறிவிப்பு வந்திருந்தது. அதைப் பற்றித்தான் இன்று பேசிக்கொண்டிருந்தனர். நாளை திருச்சியில் இருக்கும் பரிமளா அக்காவுக்குத் தெரிந்த வழக்கறிஞரைப் பார்க்க அப்பாவும் சித்தப்பாவும் செல்ல இருக்கிறார்கள். என் சிறுவயதில் பார்த்த அந்த பாகப்பிரிவினை சம்பந்தமான பிரச்சினை இன்றும் தொடர்வது மிகுந்த அயர்ச்சியைத் தந்தது. சமமாகப் பிரிக்கப்பட்ட சொத்தில் சித்தி என்ன குறையைக் கண்டுபிடித்து நீதிமன்றம் வரை வந்திருக்கிறாள் என்று புரியவில்லை. அவர்களின் பொருளாதார நிலை நீதிமன்றத்தில் வழக்கு நடத்துவதற்கு அளவு இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்தது. இருந்தாலும் எது அவளை இவ்வளவு தூரம் விடாப்பிடியாக முன் நகர்த்துகிறது என்பது புரியவில்லை. வெறும் சொத்துக்காக மட்டும்தான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறாள் என்பது என்னால் நம்பமுடியவில்லை.
சிறிது நாட்கள் கழித்து அப்பா அழைத்திருந்தார். ஒரே மாதத்தில் நீதிமன்றம் வழக்கை விசாரித்து இந்த சொத்து எல்லோர் சம்மதத்திலும் பிரிக்கப்பட்டு பதிவாளர் முன்னிலையில் பாகப்பிரிவினை பதிவு செய்து இருபது வருடங்கள் ஆகிவிட்டதால் இந்த வழக்கை விசாரிக்க இயலாது என்று நிராகரித்துவிட்டது என்று சொன்னார்.
அடுத்த முறை ஊருக்குச் சென்றபோது என் பையனை அழைத்துக்கொண்டு கோவிலுக்கு சென்றேன். போகிற வழியெங்கும் நான் அன்று சிறுவயதில் பார்த்த அந்த தொப்பி அணிந்திருந்த மனிதரின் நினைவஞ்சலிக்கான சுவரொட்டிகள் ஒட்டியிருந்தன. அவர் சொன்ன அந்த வாசகம் நினைவுக்கு வந்தது. இங்கு எல்லோரும் சமமில்லை என்று ஒரு முறை சொல்லிப்பார்த்தேன். பின்பு என் மனது வழியெங்கும் தொடர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருந்தது. கோவிலை விட்டுத் திரும்பி வரும்போது குட்டியப்பாவின் பூக்கடை வழியாக வந்தேன். அவர் கடையை ஒட்டி இருபுறமும் நிறையப் பூவேலைகள் செய்யும் கடைகள் நிறைந்து மினுமினுக்கும் ரோஜாப்பூ மாலைகளும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட விதவிதமான வண்ணங்கள் கொண்ட பூக்களை வைத்துக் கட்டியிருந்த மாலைகளும் தொங்கிக்கொண்டிருந்தன. குட்டியாப்பாவும் சித்தியும் அவர்கள் கடையில் அமர்ந்திருந்தனர். அக்கடையிருந்த இடம் பெரிய மாற்றமில்லாமல் சிமெண்ட் காரைகள் பெயர்ந்த சுவற்றுடன் அப்படியே இருந்தது. நான் அவர் கடையில் கூட்டமில்லாததால் நான் சாலையைக் கடந்து அவர் கடை நோக்கிச் செல்லும்போதே என்னைக் கண்டுகொண்ட சித்தியின் முகம் சட்டெனக் கடுமையாக மாறி எழுந்து கடையின் உட்புறம் இருளடைந்த பகுதிக்குள் சென்று மறைந்தாள். அந்த விரோதமும் சினமும் எங்கிருந்து எதனால் ஆரம்பித்தது என்பதை இப்போது என்னால் புரிந்துகொள்ளமுடிந்ததால் அவளின் செயலை கண்டு அவள் மீது பரிதாபமே ஏற்பட்டது.
குட்டியப்பா என்னைப் பார்த்ததும், “எப்ப வந்த? பையனா?” என்று கேட்டார்.
நான் “ஆமாம். முகுந்த், இங்க பாரு தாத்தா.” என்றேன். அவன் வாயில் விரல்களை வைத்துக்கொண்டிருந்தவன் அங்கிருந்த மின்சாரக் கம்பியில் அமர்ந்திருந்த காக்காவைப் பார்த்து அவரிடம் கை நீட்டிக் காட்டினான்.
குனிந்து அவன் கையை காட்டும் இடத்தை பார்த்துவிட்டு “ஓ! காக்கவா?” என்றார்.
“எப்படி இருக்கீங்க குட்டியப்பா?”, என்றேன்.
“ம் என்று தலையை ஆட்டிக்கொண்டே அங்கிருந்த வாளியிலிருந்த தண்ணீரை எடுத்து மாலைகள் மீது தெளித்தார்.
“பொண்ணு எப்பிடி இருக்கிறா? காலேஜ் படிச்சுக்கிட்டு இருந்தால? முடிச்சிட்டாளா?” எனக் கேட்டேன்
“இல்ல படிக்கிது” என்று சொன்னவர் சட்டென அவர் முகம் மாறி மீண்டது.
நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது என் அருகே ஒருவர் வந்து அங்கிருந்த மாலையின் விலையைக் கேட்க நான் சற்று ஒதுங்கி நின்றுகொண்டேன்.
என் அருகிலிருந்தவருக்கு அரளி நந்தியாவட்டை பூக்கள் நிறைந்தும் ரோஜாப்பூக்கள் குறைந்தும் இருப்பதுபோல இருந்த இரண்டு மாலைகளை எடுத்து அவரிடம் கொடுத்தார். நான், “இன்னும் தாத்தா சொல்லிக்கொடுத்த மாதிரியான மாலைகள் தான் கட்டுறிங்களா?” என்று சிரித்துக்கொண்டே கேட்டேன். “ஆமா” என்று சொல்லிக்கொண்டே கீழே அதுபோல இருந்த மாலைகளை ஒவ்வொன்றாக மேலிருந்து தொங்கிய சிறு சிறு கயிற்றில் இணைத்து முடிச்சுப்போட்டு தொங்கவிட்டார். நான் தொங்கும் அந்த மாலைகளையே பார்த்துக்கொண்டிருந்தேன். சட்டென மனது ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்த அந்த அரசியல் தலைவர் சொன்னதின் வாக்கியத்தை, தாத்தா அவர் பிள்ளைகளுக்கு மாலையின் வழியே சொல்லிக்கொடுத்த வாழ்க்கையின் முறைமையையும் இணைத்தபோது என் அகம் விழித்து ஒன்றைக் கண்டுகொண்டது. நான் திரும்பி குட்டியப்பாவை பார்த்தேன். அவர் அரளி, நந்தியாவட்டை, செண்டு எனச் சிறு சிறு குவியலாக இருந்த பூக்களின் மத்தியில் அமர்ந்திருந்தார். நான் என்னையும் அறியாமலே “அது தானே நியாயம்” என்றேன். அவர் முகம் மலர்ந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
