
“என்னம்மா சொல்றே? கேள்விக்கு “அம்மா, நான் படிக்கணும். சொந்த கால்ல நிக்கனும். அப்பறந்தான் கல்யாணம்” எத்தனை முறை சொல்றது, ப்ளீஸ், மா. புரிஞ்சுக்கங்க”
“சொந்த கால்ல நிக்கறதுன்னா?” – கேட்ட அப்பனை ஒரு முறைமுறைத்து விட்டு, “சனியன், வீட்ல உட்கார்ந்துட்டு உயிரை எடுக்குது. ரிட்டையரானாலும் கேள்விக்கொம்பன். எப்ப பார்த்தாலும் ஒரே கேள்வி. எனக்கு கல்யாணம் பண்ணிவைச்சுட்டு என்ன பண்ணப்போகுதும்மா? சும்மா, சும்மா, தொண தொணன்னுட்டு, கல்யாணம், கல்யாணம். கல்யாணம். வேறே பேச்சேயில்லை. ஒரே அக்கப்போரு” மனதிற்குள் பேசிக்கொண்டு, “சரிங்கப்பா” – மகளுக்கு தலையை சீவிக்கொண்டிருந்தாள் அவள் அம்மா. என் மனைவி. நான். ஒரு மூவர் குடும்பம்.
என் மனைவியும், மகளும் பெரும்பான்மையான விசயங்களில் ஒரே குழு. என்னிடம் சில விசயங்களில் ஒரு குழுவாக இருப்பார்கள். நானும் என் மகளும் சில விசயங்களில் ஒரே ஒரு குழுவாக இருப்போம். நானும் என் மனைவியும் சில விசயங்களில் ஒரே குழு, குறிப்பாக, இருவரும், அவளுடைய கல்யாண விசயத்தில் ஒரே ஒரு குழு.
என் மகளும், மனைவியும் தேவைப்பட்டால் தனித்தனி குழுவாகவும் இருப்பார்கள். நாங்கள் மூவரும் ஒத்துப்போகாமல் தனித்தனிக் குழுவாக சில விசயங்களில் இருப்போம். இருப்பது மூவர். குழுக்களோ ஐந்து.
என் மகள் டிகிரி முடித்து ஏழு வருடமும், எம்.ஏ முடித்து அய்ந்து வருடங்களும், காம்படீட்வ் எக்சாம் பயிற்சி எடுத்து நான்கு வருடங்களும் ஆகிவிட்டன. பரிட்சை எழுத ஆரம்பித்து நான்கு வருடம் ஆகிவிட்டது.
இன்றோடு – 05-03-2024, நான் ஓய்வு பெற்றும் ஆறு மாதமாகிறது. பென்சனும் தள்ளித்தான் கிடைக்கிறது. ஒரு மாசமும் நாளும் ஒழுங்காக கிடைக்கவில்லை இந்த அய்ந்து மாதத்தில் இரு முறைகள் மட்டுமே கிடைத்தன – சேர்த்து சேர்த்துக் கொடுக்கிறார்கள். ரொம்ப சிரமம். சொந்த வீடு வைத்துள்ள எனக்கே இந்த கதி. எல்லாம் காலம். முப்பதாம் தேதி. ‘டான் பென்சன்’ பணம் விழும் நாள் வருடங்கள் எல்லாம் ஓடிவிட்டன. அதெல்லாம் பென்சனர்களின் காலம். சிதம்பரம் சும்மாவே இருக்க மாட்டார். சரி. பெரிய பணக்கார குடும்பம்.
ஏழைக கஸ்டம் தெரியுமா?. உங்க சர்வீஸுக்கு ஏற்ப உங்க அடிப்படைப்பணம் இவ்வளவு தான்னு பென்சனை கொடுக்கறதுக்கு உட்டுபுட்டு, பென்சனுக்கு மேலே, அரியர்ஸ், டி.ஏ. கி.யே. எல்லாம் கொடுத்து, பணச்சுமையை அதிகரிக்கற வேலைதான் தொழிலாளர் நலன்ங்க பேரில் காங்கிரஸ் கவர்மென்ட் பண்ணுச்சு. அதுவும் அதி தீவரமாக. என்ன பயன்?
இப்ப, பாரு. நேர் எதிர். உன் சம்பளம், உன் முதலீடு. ஆனா, உத்தரவாதமில்ல. அவர்களின் அச்சு இயந்திரத்தில் வேலை செய்கிறோம். அவர்கள் சொன்ன படி மாற்றங்களுக்கு உட்பட வேண்டும் – மனம் சொல்லிப்பழகிக் கொண்டது.
என் மகள் தாமரையை ஒருவன் கையில் புடித்துக்கொடுத்து விட ஆறு வருடமாக போராடிக் கொண்டிருக்கிறோம், நானும், என் மனைவி லட்சுமியும். கல்யாண பேச்சு அவள் டிகிரி முடிக்கும்போதே ஆரம்பித்தோம். எனக்கும் சர்வீஸ் இருக்கிறது. அதுக்குள் திருமணம் முடிந்தால், நல்லது என்று நினைத்தோம்.
“அம்மா, நான் படிக்கணும். சொந்த கால்ல நிக்கனும். அப்பறந்தான் கல்யாணம்” சொல்ல ஆரம்பித்தவள், ‘எக்சாம், கம்படீடிவ் எக்சாம், குரூப் ஒன்னு, குரூப் இரண்டு, ஆர்.பி.ஐ, பேங், குரூப் – ஒன்னு – பட்டியல் நீண்டது – அவளுடைய வயதும்.
‘அஞ்சு மார்க்கலே போச்சு’ என்பதிலிருந்து ‘ஒரு மார்க்ல போச்சு’ வரைக்கும் அவளுடைய பதில்களாக வந்தன. எனக்கே வெட்கமாக இருந்தது – பக்கத்து வீட்டு வசந்த் கேட்ட போது. இந்த அஞ்சையும் ஒன்னையும் எப்ப என் மகள் விடுவாள் – தோணியது, மனதில்.
அவளும் ஒரு போட்டித் தேர்விலும் வெற்றி பெறவில்லை. வயதும் கூடியது. இது எங்கள் வீட்டு நிலை. எங்கள் வீட்டில் இன்று மட்டும் நடக்கும் பேச்சல்ல. கடந்த நான்கு வருடங்களாக நடக்கும் பேச்சுக்களின் பல வடிவங்களில் ஒன்று ” எப்பம்மா, கல்யாணம்?” பதிலும் ஒரு ரெடிமேட்: சொந்த கால்ல நின்ன பிறகு”. என் பார்வைக் கேள்வியும் ஒன்றே தான்: சொந்த கால்ல நிக்கறதுன்னா, என்ன அர்த்தம்?”.
அவளின் அனுபவத்திற்கு ஏற்ப பதிலும் மாறிக்கொண்டே வருகிறது: கல்லூரி படிப்பின் போது, “காலைத் தூக்கி இப்படி” என்று காட்டிச்சொன்னதிலிருந்து, ‘கார் ஓட்டத் தெரியனும்’, ‘வாலிபகல்ல தூக்கனும்’, ‘விஜய் மாதிரி அழகா இருக்கனும்’, ‘பணம், பண்பு, பாசத்தோட இருக்கனும்’, ‘சொந்த வீடு இருக்கனும்’, ‘ஆரோக்கியமா இருக்கணும்’, ‘கடன் இருக்கக்கூடாது’, ‘சும்மா திட்டக்கூடாது’, ‘ரொம்ப பொசசிவ்வா இருக்கக்கூடாது’, ‘பெத்தவங்களுக்கும் பணம் தரணும்’, ‘தனிக்குடித்தனம் வேண்டும்’, ‘தனிக்குடித்தனம் வேண்டாம்’, ‘ஒரே பையனாயிருக்கனும்’, ‘பொண்ணுங்க யாரும் இருக்கக்கூடாது’, ‘ரொம்ப குண்டா இருக்கக்கூடாது’, ‘தண்ணி அடிக்ககூடாது’, ‘தம் அடிக்கக் கூடாது’ ‘ஹைட்டா இருக்கணும்’, ‘அவள் வயசை விட ரொம்ப வயசான பையான இருக்கக்கூடாது’, கற்களை திருமண வழியில் ஏராளமாக வைத்திருந்தாள்.
கற்கள் ஒவ்வொன்றையும் ஏறி ஏறி என் மனைவி மிதித்து தள்ளுவாள். அவள் அவளை சமாளிக்கின்ற விதமே, ஒரு அலாதி இன்பம் தரும் தருணமாக இருக்கும். “ஒரே பையனாயிருக்கணும்” – நிபந்தனைக் கல்லை வீசிய போது,
“ஏன், உன் புருசனோ, இல்லா உன்னோட மாமியாரோ, மாமனாரோ உடம்பு சரியில்லாம படுத்தா எவன் வந்து தூக்குவான்? பக்கத்து வீட்டுக்காரனா? என்னடி, பேசறே. யோசிக்கறே. புத்தி பாரு. அளவான சொந்தம் பந்தம் இருக்கணும்டி” – ‘சும்மா ஆளில்லாத வீட்ல போயி மாட்டிக்காத, காபியும் ஆத்தாதே, யாருக்கு ஆத்தன காப்பியை கொடுப்பே? புரிஞ்சுதாடி, சனியனே”. என் மகளிடம் பதிலே வராது.
இப்படி வந்து கொண்டிருந்த போது தான், ஒரு நாள், திடீரென, “அம்மா, நான் மெட்ராஸ் போயி ஐ.ஏ.எஸ் படிக்கிறேன்” புது வெடிகுண்டை வீசினாள். என் மனைவியின் மௌனத்தை அன்று தான் பார்த்தேன். ஒன்றுமே சொல்லவில்லை. “சாயந்தரம் பார்க்கலாம்” – என்பதோடு நிறுத்திவிட்டாள்.
அவள் வெளியே போனபின்பு, “என்னங்க, என்னங்க, அத்தான்” – சிரிப்போடு அழைத்தாள். அவள் “அத்தான்” அழைப்பு, “பண மேட்டர்” என்பதற்கான ஒரு சமிக்ஞை.
“சொல்லும்மா”
நம்ம பொண்ணுக்கு கல்யாணம் ஆகனும்னா, அவ கொஞ்சம் நாளைக்கு வெளிய போயி இருந்தா நல்லாயிருக்கும். நான் நினைக்கறே. நீங்க வரவேண்டாம். இங்கேயே இருங்க. அவள கல்யாணத்துக்கு ரெடிபண்ணிட்டு நான் சொல்றே, அப்புறமா பேசி ஒரு முடிவெடுப்போம்.”
“புரியலை”
“நான் தனியா மெட்ராஸ் போயி ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துக்கறேன். நீங்க இங்கேயே இருங்க. சாப்பாட்டுக்கு கங்கோஜம்மா வந்து ஒரு தக்காளி கொஜ்ஜையும், நாலு சப்பாத்தியை சுடச்சொல்றேன். காலையிலெ கடையில டிபன் சாப்பிடுங்க. மத்தியான சாப்பாடு உங்க தங்கச்சி வீட்லிருந்து வர்ர மாதிரி பாத்துக்கலாம்” சொல்லிவிட்டு, என் மகள் வந்தவுடன், தலைகீழாக,
“அப்பா, வேண்டாங்கறாரு. நீ மட்டும் போயி, லேடிஸ் ஆஸ்டல்ல தங்கி படிம்மா” – ரொம்ப நுணுக்கமா பேசி காரியத்தை முடிச்சுட்டா. இதைக்கேட்டுட்டு பெப்பரப்பே-ன்னு முழிச்சேன்.
இரவில் நானும் அவளும் சாப்பிட்டுவிட்டு பேசிய போது, “என்னடி, ரிவர்ஸ்டேன்ட், எனக்கு புரியலையே?” -கேட்டதற்கு, “கொஞ்ச நாளைக்கு பொறுமையா இருங்க. பின்னாடி புரியும்” – பதிலாக வந்தது.
தாமரை மெட்ராசுக்கு சென்றுவிட்டாள். அவள் இல்லாத வீட்டில் நான் மட்டும் காபி ஆத்திக் கொண்டிருந்தேன். மனிதநேய அறக்கட்டளையில் சேர்ந்தும் விட்டாள். பாவம். துரைசாமி, செய்வதெல்லாம் உண்மையான அறிவுப்பணி. கடமைச் சனாதானி. புத்திர சோகத்தில் இருக்கின்ற அவருக்கு, நானும் அதில் இருந்தவன் என்ற முறையில், மனதில் எழும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொண்டே, என் மகளை அவரிடம் ஒப்படைத்தேன். அவர் உருவாக்காத ஐ.ஏ.எஸ்ஸா? என் மகளே அவருக்கு ஒரு மகன்தானே.
என் மனைவி, மெட்ராசுக்கும் மேட்டுப்பாளையத்திற்கும் இடையே ஓடும் நீலகிரி எக்ஸ்பிரஸில் ஒரு டிக்கெட்டை குத்தகைக்கு எடுத்துக்கொண்டாள். என்ன செய்வது? என் மகள் தன் சொந்தக் காலில் நிற்க, நான் விட்டுக்கொடுத்து வாழ்வது குடும்பக் கடமைச் சனாதானியின் வேலையல்லவா?
அவளுக்கு என் மனைவி பார்த்து பார்த்து செய்தாள். கேட்டு கேட்டு ரசித்தாள். ஒரு முறை கூட கல்யாண பேச்சையே அவள் எடுக்கவில்லை – ஒரு வருடமாக. தேர்வு முடிவுகள் வெளிவந்தன. என் மகள் தேர்ச்சி பெறவில்லை. பிரிலிம்ஸ்ஸில்யே அவுட்.
தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் என்னையும் அழைத்தாள். சென்னையில் கடற்கரையில் நான், அவள், அவள் உட்கார்ந்திருந்தோம். மெல்லமாக, பேச்சை நகர்த்தினாள்.
“அம்மா, வயசாகுது. நீ படிக்கணும்ன்னு ஆசைப்பட்டே. நல்ல நல்ல மாப்பிள்ளைகளாக வந்து வந்து போகுது. ஒரு ஆம்பளைத்துணை தேவையில்லை. அவசியமும் இல்லை. நான் ஒத்துக்கறேன். கல்யாணமே பண்ணிக்காம கூட வாழலாம். நீ படிம்மா. இங்கே தங்காதே. வேளச்சேரியில அப்பாவுடைய நண்பர் சிகாமணி வீட்லே தங்கு. நிர்மலாஆன்டிக்கு நான் போன் பண்ணி பேசினேன். அவங்க வீட்டுக்கு போகலாம். நீ ரெடியா இரு” – கையிலிருந்த கடல் மணலைத்தட்டிவிட்டு எழுந்தாள்.
“இல்லம்மா. வேண்டாம். நான் முடிவு பண்ணிட்டேன். கல்யாணம் பண்ணிக்கறேன். அவர்கிட்ட பேசுங்க”
யாரும்மா, அவரு?
“அவரும் ஐ.ஏ.எஸ் அகாடமி வச்சு நடத்திட்டிருக்காரு. அவர் எம்.ஏ.எம்.பில் முடிச்சுவரு. பி.எச்.டி. படிச்சுட்டு இருக்காரு, மெட்ராஸ் யுனிவர்சிட்டியிலே. ஆந்தரபாலஜிப்பா. உணவைப்பத்தி ஆராய்ச்சி பண்றாரு. சரியான ஆளு. மோத்தேபாளையம் சொந்த ஊராம். இங்கேயே வந்துட்டாங்களாம்.
பயங்கர அறிவாளி. நாட்டு நடப்பு, அரசியல் பொருளாதாரம் எல்லாமே அத்துப்படி. அறிவுப்புருசன் – நான் நினைச்ச மாதிரியே.
“அறிவுப்புருசன்னா” என்ன அர்த்தம்? – கேட்க நினைத்தவன், என் மனைவியின் தொடைக் கிள்ளலால் மௌனமானேன்.
“அப்பா, அவர் நல்லா புரிஞ்சுக்குவாரு. இங்க வந்து ஒரு நாள் பாடம் நடத்தினாரு. சூப்பர். அப்பவே, நான் இடம் மாறி அவருடைய அக்கடெமியில சேர்ந்துட்டேன். சூப்பரான, அறிவுப்பா. எனக்கு அவரை ரொம்ப புடிச்சுருக்கு.
நீங்களே பேசி முடிங்க, அவர் பேரு கலியமூர்த்திப்பா, அறிவுப்புருசன், நான் நினைச்சமாதிரியே – சொன்னபோது முதல் முறையாக நாணினாள். என் மகளுக்கு காதல்குழைவு ஏற்பட்டுவிட்டது. என் மனைவி புரிந்து கொண்டாள்.
திருமணமும் அவள் விருப்பப்படியே நடந்தது. எல்லா வித சீர்வரிசைகளையும், ‘வேண்டாம், வேண்டாம்’ , ‘உங்க இஸ்டம்’, ‘நாங்க கேட்கலை’, ‘நீங்க உங்க மகளுக்கு கொடுக்கிறீங்க’, ‘நாங்க தலையிட மாட்டோம்’, ‘உங்க பொண்ணு, அவளோட இஸ்டம்’, ‘மாப்பிள்ளைக்கு வேண்டாம், பொண்ணு அவருக்கு இருந்தா நல்லாயிருக்குன்னு ஃபீல் பண்றா’ வகையறா மூலம் வசூல் வேட்டையாடப்பட்டது. நிலமில்லாமல், எல்லாம் சேர்ந்து 25 லட்சமாணது – ‘மகளின் மனமகிழ்ச்சிக்கு முன்னால், வயதான நமக்கு குறைவான பணம் போதும்’ அடிப்படையில்.
மறு வீடும் முடிந்தது. மகளும் மருமகனும் சென்னையிலே தனிக்குடித்தனம் வந்துவிட்டனர். நாட்கள் தொலைபேசி-பேச்சில் கழிந்தன. கரைய ஆரம்பித்தன.
தினசரி போனில் அதை எப்படி செய்வது, இதை எப்படி செய்வது – சமையலை என் மனைவி இங்கேயிருந்து செய்முறை விளக்கம் தருவாள். அவ்வளவு அழகாக இருக்கும். ஒரு ஆறு மாதம் போயிருக்கும்.
திடீரென, ஒரு நாள், என் மகள் எனக்கு போன் செய்து, “அப்பா, நான் ரொம்ப கஸ்டப்படறேன். என்னை கூப்பிட்டுபோங்க’-ன்னு சொன்னாள்.
சோகமான முகத்துடன் வந்த என் மகள் ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில், “அறிவாமா, அறிவு, மயிறு அறிவு, அறிவை மட்டும் வைச்சுட்டு என்ன பிரயோசனம்’ – கத்தினாள்.
என்னம்மா, பிரச்சனை? சொல்லுமா?
அடிச்சானா? ‘இல்லை’-ப்பா. திட்னானா? ‘இல்லை’-ப்பா.
‘மன உளைச்சல்’ கொடுத்தானா? ‘இல்லை’-ப்பா? உடல் பிரச்சனையா? ‘இல்லை’-ப்பா?
அப்புறம் என்னதான்டி, உன் பிரச்சனை? – அவள் அம்மா கேட்டாள்.
“அறிவு”
என்னடி சொல்றே?
ஆமா, மெனுப்படிதான் சாப்பாடு செய்யனும். கொஞ்சம் கூட மாறக்கூடாதுப்பா!
அதிலென்னடி பிரச்சனை? ஆசைப்பட்டதை செஞ்சு கொடுக்கவேண்டியதானே?
அதான் பிரச்சனையே?
என்னம்மா, சொல்றே? புரியலையே …
கேட்டவுடன், அழுது கொண்டே, அவளுடைய ஆன்ட்ராய்டு போனை ஆன் செய்து எக்சல் சீட்டை ஒப்பன் செய்தாள். அதில், உணவு அட்டவணை ஆயிரம் நாளுக்கு – கீழ்க்கண்டவாறு இருந்தது.
| காலை | மதியம் | இரவு | செய்முறை | |
|---|---|---|---|---|
| நாள் – ஒன்று | கம்பு தோசை | கோதுமைக்களி | சப்பாத்தி | தமிழர் முறை மட்டும்/தமிழர் பொருட்கள் மட்டும் |
| நாள் – இரண்டு | ராகி தோசை | அரிசி | சோளம் | தமிழர் முறை மட்டும்/ அயலர் பொருட்கள் மட்டும். |
| நாள் – மூன்று | ராகி வடை | ராகி களி | ராகி சோறு | அயலர் முறை மட்டும்/ தமிழர் பொருட்கள் மட்டும் |
| நாள் – 100 | கம்பு – இட்லி | சோளக் களி | அரிசிச்சோறு | அயலர்முறை மட்டும்/ அயலர் பொருட்கள் மட்டும் |
| நாள் – 200 | இறால் புட்டு | நண்டு கொழம்பு | கோழிக்கறி சோறு | அயலர்-தமிழர் முறை மட்டும்/ அயலர் பொருட்கள் மட்டும் |
| நாள் – 1000 | மீன் குழம்பு | மீன் வறுவல் | நண்டு சோறு. | அயலர்-தமிழர் முறை மட்டும் /தமிழர் பொருட்கள் மட்டும் |
இதைக்காட்டிவிட்டு, ‘சமையல் செய்ய வேலைக்காரி வேண்டாமாம். நானே கையால் அரைத்து ஊற வைத்து, வறுத்து, வணக்கி, துவைத்து, சுட்டு, பொசுக்கி, இடித்து, சேர்த்து, கிளரி, சூடாக்கி, வேகவைத்து, கொதிக்க வைத்து, பிசைந்து, நீக்கி, பொரித்து, வதங்கி, வதக்கி, ஆவியோடு, ஆவியில்லாமல், எண்ணெய் போட்டு, எண்ணெய் போடாமல் – ‘அய்யோ, அம்மா, தலைசுத்துது’ – காட்டின முறையில் மட்டுமே செய்து தரவேண்டுமாம் – அதுவும் மூன்று வருடங்களுக்கு, எந்த விதமான மாற்றமும் கிடையாதாம்’ – அழுதுகொண்டே மூக்கைத் துடைத்தாள்.
‘ஒண்ணுமே புரியலையே’? நானும் மனைவியும் கேட்டோம்.
“எனக்கே அந்த டேபிள் புரியலைம்மா? உனக்கு எங்கம்மா புரியப்போகுது?” – கோபத்தில் போனை வேகமாக மூடிவிட்டு,
“நான் என்ன சமையல்காரியா? எல்லா பொருட்களையும் அமேசான் மூலம் தருவித்து, எல்லாம் என் கையால செஞ்சு, தயாரிச்சு முடிக்க ஒரு நாளே போகுதும்மா, சமையல் கட்டு, சமையல் கட்டு – எல்லா நேரமும் – சொல்லி வெம்பினாள்.
வெம்மல் குறைந்ததும், “என்னம்மா, இது? நீயும் தான் உனக்கு தெரிஞ்ச மாதிரி, எனக்கும் அப்பாவுக்கும் சமைக்கறே. நாங்க வாயைப்பொத்திகிட்டு சாப்படுறோம். நான், எனக்கு தெரிஞ்ச மாதிரி சமைச்சா, அதிலென்ன? மாறாத முறை, கிறைன்னுட்டு? கடுப்பா இருக்கும்மா.
நான் என்ன சமையல்காரியா? கேள்வியைக் கேட்டவுடன், அவள் அம்மா ஒரு சிரிப்பு சிரித்தாள்.
அந்த சிரிப்பில், அவள் பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி- ஒரு புருசன், அறிவுப்புருசனாக இருந்தாலும், மனைவி ஒரு சமையல்காரியே – என்பதைப்போல தோன்றியது எனக்கு மட்டும்தானா?
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

சிறப்பான கதை.
நன்றி, அய்யா.