அரவு உறை புற்று

“டடக் தடக்.. டடக் தடக்..”

“தடக் தக்..தடக் தக்..”

“லடக் டடக்..லடக் டடக்..”

மார்கழி மாதம் ஆதலால், காலையிலேயே தறிக்கு ஆட்கள் வந்து விட்டிருந்தனர். வாட்டு சத்தங்கள் வித விதமாய் வாட்டுக் கயிற்றின் நீள அளவு மற்றும் பொட்டி பலகையில் இருக்கும் தக்கை கயிற்றின் அளவுகளுக்கு ஏற்பவும், நாடாவின் வயதிற்கு ஏற்பவும் உருவாகி ஒலித்துக் கொண்டிருந்தது. பாயில், வாட்டு சத்தத்தில் சற்று துயில் கலைந்து உருண்டுக் கொண்டிருந்தேன். 

“பக்கத்தில் டம்ளர் தரையில் வைக்கும் ஓசை கேட்டது.

“டேய் ரமேசு.. ஏந்து காபியக் குடி, அப்பா கிளம்பிட்டாரு” என்றாள் அம்மா.

காலேஜ் முடிந்து வீட்டில் வெட்டியாக சிலகாலம் இருந்திருந்தாலும், அக்காவின் கல்யாணத்திற்கு பிறகு உறவினர்களின் கண்களை உறுத்த ஆரம்பித்திருந்தது. அப்பாவின் கெடுபிடி கடந்த ஆறு மாத காலமாக அதிகரித்திருந்தது.

நான் எழுந்து கூடத்தில் மாட்டியிருந்த பெரிய கடிகாரத்தை பார்த்தேன். மணி ஆறரையை நெருங்கிக் கொண்டிருந்தது.

இன்று நாடா வாங்க போக வேண்டுமென்று அப்பா சொல்லியது நினைவு வந்தது. எங்கள் வீட்டின் பின்புறம் வீட்டை ஒட்டியது போல் இருக்கும் தறிக்கொட்டகையில் பன்னிரண்டு தறிகள் ஓடியது. இப்போதெல்லாம் தறிக்கு முழுநேர ஆட்கள் கிடைப்பது பெரும் பாடு. பெரும்பாலான இளைஞர்கள் காஞ்சிபுரத்தை சுற்றி புதிது புதிதாக முளைத்திருக்கும் தொழிற்பேட்டைகளில் இருக்கும் கம்பெனிகளில் வேலைக்கு போய் விடுவார்கள். தறியை விட முடியாதவர்கள் பெரும்பாலும் நாற்பது, ஐம்பதை தாண்டியவர்கள் தான். அவர்களால் எந்த வேலைக்கும் செல்ல முடியாது என்பது, சொந்த தொழிலில் இருக்கும் வசதிக்கு அவர்கள் பழகியது தான் காரணம். சில நாட்களுக்கு முன்பு எதிர் வீட்டிலிருக்கும் மஞ்சுவின் அப்பாவை, அவரது மனைவி கழுத்தை பிடித்து தள்ளி வேலைக்கு அனுப்பினாள். இரண்டே மாதத்தில் அவரின் சூப்பர்வைசருடன் சண்டை போட்டு விட்டு, “உன் வேலையும் வேணாம் பூலும் வேணாம், கால்குழில போய் “லொட்” டுன்னா என் சோற நாலு நாய் தின்னுட்டு போவும் டா” என்று வேலையை உதறி விட்டு வந்ததை அவரே பெருமையாக வீட்டிற்கு வந்து அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். முன்பெல்லாம் சரியாக தொழிலுக்கு வரும் ஆட்களுக்கு மட்டுமே தறி கொடுப்பார் அப்பா. கறாரான ஆள். இப்போது பாதி தறிகளுக்கு முழு நேர ஆட்கள் இல்லை. 

கோல்கட் பல் பொடியை கையில் கொட்டி, பிரஷ்ஷால் பல்லை தேய்த்துக் கொண்டே வெளியில் வந்தேன். 

வெளியே திண்ணையில் குளித்து முடித்து, நெற்றியில் பட்டையொடு, இடுப்பில் வேட்டியும் தோளில் வெளுத்துப் போன சிவப்பு துண்டை அணிந்து கொண்டு, சிறிய நைந்துபோயிருந்த கந்த சஷ்டி கவசத்தை கையில் வைத்துப் படித்துக் கொண்டிருந்தார். அது அவரது வழக்கம். 

நான் வருவதை கவனித்து தலை உயர்த்திப் பார்த்தார். புருவத்தை குவித்து

“மார்கழி மாசத்துல ஏழு மணி வரைக்கும் தூங்குறியே, கெக்களப்புள்ளையாட நீ? மூதேவி வடியுதுடா மூஞ்சியில.” என்றார்.

“ஆறறை தான் ஆகுது” என்று தயங்கிய குரலில் சொல்லிக் கொண்டே திரும்பினேன்.

“டேய்.. பிள்ளையார் பாளையம் போகனும், ஞாபகம் இருக்கா?”

“ம்ம்..” என்று மட்டும் சொன்னேன்.

“சீக்கிரம் குளிச்சிட்டு கிளம்பு”

நான் பதில் எதுவும் சொல்லாமல் உள்ளே வந்தேன். 

“ரமேசு.. அப்பாவ சாப்ட கூப்டு, இட்லி ரெடி”அடுப்பங்கறையிலிருந்து அம்மாவின் குரல் வந்தது.

நான் கேட்காதது போல் குளியலறைக்கு போய் கதவை மூடிக்கொண்டேன். நான் வருவதற்குள் அப்பா சாப்பிட்டுவிட்டிருந்தார். நானும் வேகவேகமாக சாப்பிட்டு விட்டு, காப்பி கலர் பேன்ட் மற்றும் பெரிய கட்டம் போட்ட அரைக்கை சட்டையணிந்து கொண்டேன். 

அப்பா, உள்ளறையிலிருந்து வெளியே வந்து, என்னை பார்க்காமலே “போலாமா?” என்றார். நீலக்கலர் சட்டையணிந்திருந்தார். சட்டைப்பை உப்பி புடைத்திருந்தது. தோளில் சற்று நீளமான வெள்ளை நிற குட்டை.

வெளியே வாசலுக்கு வந்தவர் உள்ளே திரும்பி “கற்பகம்” என்று அழைத்தார்.

முந்தானையால் கைகளை துடைத்துக்கொண்டே அம்மா வந்து “மதியம் சாப்பாட்டுக்கு வந்துருவிங்கள்ல” என்று கேட்டாள்.

“சுருக்கா வந்திருவோம். அங்க என்ன மாமியா வீட்டுக்கா போறேன். அந்த நாயக்கரு வந்தான்னா தறி பாக்கிய குடுத்துட்டு கணக்க முடிச்சிக்க சொன்னேனு சொல்லு. ஒரு நல்ல நாள்ல கூட ஒரு வாட்டு போடாம என்ன தல போற வேல அவனுக்கு” என்றவாறு செருப்பைக் காலில் மாட்டிக்கொண்டு “சரி வர்றோம்” என்றார்.

நான் வெறுமனே அம்மாவை பார்த்து விட்டு, செருப்பை மாட்டிக்கொண்டு அப்பாவின் பின்னால் நடந்தேன்.

அப்பாவை விட நாயக்கருக்கு நான்கு வயது குறைவு. அவரது சிறு வயதில் விவசாயம் அவ்வளவு நம்பகமான வருமானம் தரும் வேலையாக இல்லாததால், வெவ்வேறு சாதிகளிலிருந்தும் தறித் தொழிலை கற்றுக் கொள்ள ஆட்கள் வந்தனர். சில பேர் தறித் தொழிலை இறுதி வரை பற்றியும் கொண்டனர். அவர்களில் நாயக்கரும் ஒருவர். அப்பாவின் நம்பகமான ஆள். இருவத்தைந்து வருடங்களாக அப்பாவிடம் தறி நெய்பவர். அடிக்கடி கடிந்து கொண்டாலும் அப்பாவிற்கு நாயக்கரின் மீது தனிப்பட்ட அபிமானம் உண்டு என்பது அம்மாவிற்கும் தெரியும். 

வீட்டின் தெருவின் முனையில் இருக்கும் பிள்ளையார் கோயிலை நடந்த வேகத்திலேயே வணங்கிக்கொண்டு, இடப்புறம் திரும்பி வேகவதி ஆற்றிற்கு எதிர்ப்புறமாக நடந்து, சிறிது தூரத்தில் வலது புறமாக இருக்கும் முருகன் காலனியையும், மிலிட்டரி மைதானத்தையும் இணைக்கும் பாலத்தின் மீதேறி நடந்து, மைதானத்தை கடந்து பச்சையப்பா காலேஜ் பஸ் ஸ்டாண்டை அடைந்த அப்பாவை மௌனமாக பின் தொடர்ந்து கொண்டிருந்தேன்.

பஸ் ஸ்டாண்டின் அருகில் இருந்த சக்தி டீக்கடையில் நடராஜ் அண்ணா இருந்தார். அப்பாவை பார்த்து “மோலியாரே சௌக்கியமா? கடப்பக்கம் ஆளையே காணமே” என்றார். டீக்கடயில் இரண்டு பெருசுகள் டீயை சுவைத்துக் கொண்டிருந்தார்கள். மேஜையின் மீது இருந்த பெரிய தட்டில் பாதிவரை கடலை வடைகளும், மீதி பாதியில் நாலைந்து உளுந்து வடைகளும் இருந்தன.

நடராஜ் அண்ணாவின் வீடு, எங்கள் வீட்டிற்கு இரண்டு தெரு தள்ளி தான் அமைந்திருந்தது. என்னை விட இருபது வருடங்கள் பெரியவர். அவரும், அவரது அப்பாவும் முன்பு எங்கள் வீட்டில் தறி நெய்தவர்கள் தான். சின்ன வயதில் பார்த்திருக்கிறேன்.

“ம்ம் சௌக்கியத்துக்கு என்ன.. வடிவு வந்துட்டாளா வீட்டுக்கு?” என்றார்.

“போன வாரம் அவங்க அம்மா வீட்டுக்கு போனம்.. சனியன் தலைக்கு மேல எகிர்றா..  அவ அம்மா எடுத்து சொன்னா கூட இவ வரிஞ்சி கட்டிகிட்டு நிக்கிறா.. போவட்டும் கழுத.. பாப்போம் மோலியாரே… இல்லனா அத்து வுட்றுவோம்”

“டேய் வாய மூட்றா..காலயில பேசறான் பேச்சு ஒண்ணு.. நீ பண்ணது நியாயமாடா…” என்றார் அப்பா.

“ம்ம் எங்க தான் இல்லாதகிது மிஸ்டேக்கு… உங்கள மாதிரி ஆளுங்க தான் இன்னும் நியாயத்த பேசறீங்க… ”

“சரிவுடு.. உங்கம்மா பாடு தான் கஷ்டம்.. இந்த வயசுலயும் ஒத்தயில அல்லாடறா.. ”

 “பக்கத்துல யாரு, உங்க கொடுக்கா?” என்றார்.

“ஆமா, அவனுக்கு காலேஜ் முடிஞ்சிடுச்சில்ல, இனிமே இருக்குற தொழில விவரமா புடிச்சிக்கணும்னு பாக்கறேன்”

“இப்ப யாரு கால்குழில எறங்கி லொட்டு லொட்டுனு தட்டிட்டு இருக்கறாங்க, பையன கம்பெனில வேலைக்கு அனுப்பாம, தொழில படிக்கணும்கிறீங்களே.”

“யாரு இவன போக வேணாம்கிறாங்க.. இவனால முடியாதுங்கிறானே.. கூட அவன் கொஞ்சம் வெளில நாலு பேர்ட்ட பேசி பழகல பாரு. சத்தமா ஒரு வார்த்தை பேச மாட்டேங்க்றான்”

அப்பா என்னை பத்தி அப்படி வெளியாளிடம் பேசியது எனக்கு அவர் மீது எரிச்சலை உருவாக்கியது. நான் கொஞ்சம் தள்ளி சென்று நின்று கொண்டேன். ஆனாலும் அவர்கள் பேசியது நன்றாகவே எனக்கு கேட்டது.

“அதெல்லாம் காலம் போக போக தானா வந்துரும், இன்னும் இளசு தான..”

“எப்பவும் ஒரே யொசனையா புளிய மரத்த பாத்துக்கிட்டு உக்காந்துக்கிடறான்.. ஒரு விஷயம் பேசணும்னா ஆயிரத்தெட்டு வாட்டி வாய்க்குள்ள போட்டு மொல்றான்”

“முனி எதாச்சும் அடிச்சிருக்குமோ?”

“அதெல்லாம் மந்திரிச்சி பாத்தாச்சி. எப்படி இவன் காலத்த தள்ளப் போறான்னு நெனச்சா, எனக்கு ஒன்னும் புரில.

“மோலியார் மவுனுக்கு சொல்லியா குடுக்கனும்.. எல்லாம் தன்னால வரும் வுடுங்க..”

 “அது என்னம்மோ, புக்கு புக்கா கையில வச்சிட்டு வேற உக்காந்துக்குறான்..நாலு மனுஷங்கள பாத்து பழகுனா தான..”

……………

“இன்னமும் என்ன நோட்டுல கிறுக்கல் வேண்டி கிடக்கு.. சின்ன புள்ளையாட்டம்… ”

இப்போது அப்பாவின் மீதான எரிச்சல் கோவமாக மாறியது. திரும்பி வீட்டுக்கு சென்று விடலாம் போல தோன்றியது. காலேஜை விட்டு நான் வீட்டுக்கு வந்து ஒரு வருடம் கடந்திருந்தது. என்னுடைய ஒவ்வொரு செயலையும், அசைவையும் அவர் கவனித்துக் கொண்டு இருப்பது போல தோன்றியது.

நல்ல வேளையாக பஸ் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கண்டக்டர் விசிலூதி “காலேஜ்.. காலேஜெல்லா இறக்கிக்க..… போட்டும்…ரைய்..ரைய்ய்..” என்றார். 

நான் ஏறிப்போய், இடது புறமாக காலியாக இருந்த சீட்டின் ஜன்னலோரத்தில் அமர்ந்தேன். அப்பா எனது அருகில் அமர்ந்து, சற்று எக்கி வேட்டியின் இடுப்பு மடிப்பில் சுற்றி வைக்கப்பட்டிருந்த பளபளப்பான பொடி டப்பாவை எடுத்து ஆள்காட்டி விரலால் மூடியின் மேற்புறம் தட்டினார். மூடியை மெதுவாக கழற்றி டப்பாவை சற்று சரித்து கட்டை விரல் மற்றும் ஆள் காட்டி விரலின் நுனிப் பகுதியை மட்டும் உள் நுழைத்து சிறிது பொடியை எடுத்துக்கொண்டு டப்பாவை மூடி வேட்டியில் செருகிக்கொண்டார். நான் வெளியில் வேடிக்கை பார்த்துக்கொண்டே எண்ணத்தை ஓட்டிக்கொண்டிருந்தேன்.

அப்பாவிற்கு ஊரில் நல்ல பெயர் தான். அவர் சொல்லிற்கு மரியாதை உண்டு. அனுபவ அறிவால் எந்த விஷயத்தையும் எளிதாக செய்யக்கூடியவர். கணக்கு வழக்குகளிலும் நல்ல தேர்ச்சி உண்டு. பதினைந்து வயதில் தறி ஏறியவர். நல்ல உழைப்பாளி. சிக்கனமான வாழ்க்கையினால் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறி இப்போது கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு நல்ல வருமானம் பார்க்கிறார். என்னையும் எப்படியாவது தறிக்கொட்டகையினையும், கொடுக்கல் வாங்கலையும் பராமரித்துக் கொள்ள உருவாக்கி விட வேண்டும் என்று அவர் நினைப்பது எனக்கும் தெரிந்திருந்தது. அப்பா எப்போதும் சிடுசிடுப்பாக முகத்தினை வைத்திருப்பார். புவனகிரியம்மன் கோயில் கமிட்டியிலும் அவர் உண்டு. நான் எப்போதும் அவரின் சிடுசிடுப்பை மட்டுமே பார்த்திருக்கிறேன். ஒரு போதும் தன் பக்கத்தை விட்டு கொடுக்க மாட்டார். அதனால் அவருக்கு “வண்டிப்பாவு” என்ற பெயர் ஊரில் இருந்தது.  அப்பாவின் கோரை முடிகளும் அதற்கு ஏற்றாற் போல் சற்று சொரசொரப்பாக இருக்கும். 

பஸ் டோல்கேட்டை தாண்டி வரதராஜ பெருமாளின் நீண்ட மதில் சுவருக்கு இணையாக போய்க்கொண்டிருந்தது. பஸ்ஸின் வேகத்தில் பெருமாள் கோயிலின் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் சுவரினை பார்ப்பது எனக்கு தலை சுற்றுவது போல் இருந்தது. அருகில் அப்பா சற்று இழுத்து மூக்கு உறிஞ்சும் சத்தம் கேட்டது. எரியும் கண்களை தேய்த்துக் கொண்டே குனிந்து கொண்டேன். அண்ணா வீட்டை தாண்டும் போது கவனித்திருக்கவில்லை.

பார்வை தெளிந்த போது பஸ் செட்டி தெருவை தாண்டியிருந்தது.  டி கே நம்பி சாலையில் சென்று ரங்கசாமி குலத்தின் வழியாக காந்தி ரோட்டை அடைந்து தேரடியில் நின்றது. சுற்றிலும் தகர பலகைகளால் மூடப்பட்டிருந்த தேரினை, தகரம் இணையாமல் மூலைகளில் மட்டும் இருக்கும் துவாரத்தின் வழியே பார்த்தேன். உள்ளே தெரிந்த தேரின் சிறு பகுதியில் ஒரு குதிரை காலை நீட்டிக் கொண்டு பறப்பது போல் தெரிந்தது. அதற்கு சற்று மேலே கண்களை பெரிதாக உருட்டிக்கொண்டு பெரிய வயிற்றினை உடைய பூதம் இருந்தது. தேரடியில் இருந்து புறப்பட்டு, ஜவுளிகடை சத்திரத்தை கடந்து, பச்சையப்பன் பள்ளியை ஒட்டிய மூங்கில் மண்டபத்தின் வலது புறமாக காமராஜர் சாலையில் திரும்பி சென்றது. சிறிது நேரத்தில் அண்ணா பேருந்து நிலையம் வெளிப்புறமாகவே இறங்கிக் கொண்டோம். பெரும்பாலான கடைகள் இன்னும் திறந்திருக்கவில்லை. 

அங்கிருந்து நெல்லுக்கார தெரு வழியாக ஒன்னரை கிலோமீட்டருக்கும் மேல் நடக்க வேண்டியிருந்தது. காலையில் பனியின் ஈரப்பதம் இன்னும் அதிகமாகவே இருந்தது. எனக்கு அந்த குளிரான காலை நடை மனதிற்கு இனிமையாக இருந்தது. கச்சபேஸ்வரர் கோயிலை தாண்டும் போது எதிரில் இருந்த யஜூர் வேத பாட சாலையிலிருந்து வேதம் ஓதும் சத்தம், ராஜவீதியில் செல்லும் வண்டிகளுடன் சத்தங்களோடு கலந்து லேசாக கேட்டது. நேராக கைலாசனாதர் கோயில் செல்லும் சாலையில் நடந்து கொண்டிருந்தோம்.

மனதில் எண்ணங்கள் பலவாறாக ஓடியது. நடராஜன் அண்ணாவிடம் காலையில் அப்பா பேசியது நினைவிற்கு வந்தது. மனம் அதற்கு எதிர்வினையாற்ற தொடங்கியிருந்தது. 

என்னால் சிறு வயதில் மற்றவர்களோடு நன்றாக விளையாடவும், பேசவும் முடிந்தது. ஆனால் இப்போது தயக்கமும், கேள்விகளும் என்னை முழுமையாக ஆட்கொண்டுவிட்டது. காலேஜின் பாதி நாட்களிலிருந்து நான் கொஞ்சம் கொஞ்சமாக தனியனாகிவிட்டேன். ஒவ்வொரு செயலிற்கும் எதிரில் இருப்பவரின் எதிர்வினை எப்படி இருக்கும் என்றும், எது சரி, எது தவறு என்றும் கேள்விகள் தொடங்கியது. பின்பு சரி, தவறென்ற பிரிவு எப்படி உருவாகியது, எப்படி முடிவு செய்கிறார்கள், ஒவ்வொரு செயலையும் விமர்சிக்கும் முன்னால் எப்படி விமர்சிப்பவர் முடிவு செய்கிறார். ஒருவர், அவரின் பார்வயை மட்டுமே கருத்தில் கொண்டு தவறென்று சொல்வதை, எப்படி என் பார்வயை வைத்து ஏற்றுக்கொள்வது என்று சிந்தனை சென்றது.  ஒரு செயலின் அனைத்து பக்கங்களையும் சிந்தித்து புரிந்து கொள்ள முடியுமா, என்ற எண்ணம் வந்தது. ஒரு செயலுக்கு எத்தனை கோண்ங்கள் இருக்கும்? அப்படி சிந்தித்து கொண்டே இருந்தால் எத்தனை காலம் ஆகும். எளிய தர்க்கங்களாக ஆரம்பித்த இந்த பிரச்சனை வேறு விதமாக மாறியது மனிதன் என்பது தர்க்கம் மட்டுமேயானவானா? என்று தோன்றியபோது. நிச்சயமாக இல்லை என்று எனக்கு தெரிந்ததிருந்தது. நான் செய்யும் பல செயல்களுக்கு எந்த விதமான தர்க்கமும், சில நேரங்களில் நியாயமும் இருந்ததில்லை. பெரும்பாலானவை அந்தந்த நேரத்தில் எடுக்கும் முடிவுகள். பெரும்பாலும் எனது விழைவினால், ஆணவத்தினால், பயத்தினால், எனது நலனுக்காக எடுத்தவை. அவற்றில் சில, மற்றவர்களை பாதிக்கும் போது கூட நான் தயங்கவில்லை என்று எண்ணும் போது கூசியது. சில நேரங்களில் என்மீது வெறுப்பும் கூட உண்டாகியது. அப்படியே தனியனாகிப்போயிருந்தேன். பின்பு முடிவுகளை ஒத்திப் போட ஆரம்பித்தேன். மற்றவர்களும் எனது செயலில் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்களின் முடிவிற்காக காத்திருந்தேன். காலேஜின் இறுதி வருட எனது குழுவின் ப்ராஜெக்டில் கூட எனது வேலை மற்றவர்கள் சொல்வதை ஏற்பதும், ஏவும் வேலைகளை செய்வதும் தான். இதனால் என்னை இளப்பமாக மற்றவர்கள் எண்ணுவது தெரிந்தது. ஆனால் அவர்களின் அந்த எண்ணத்தை மாற்ற நான் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என்னை பாதிக்கும் விஷயங்களின் போது கூட எதிர்க்காமல் ஒதுங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தேன். மற்றவர்களின் செயல்களில் பதுங்கி இருக்கும் சுய நலன்களும், விழைவுகளும், ஆணவங்களும், வஞ்சங்களும் புலனாகும்போது நான் என்னுடைய பழைய நாட்களை நினைத்துக் கொள்வேன். கண்கள் மங்குவது போல ஆகி, புற உலக விஷயங்களில் ஈடுபாடு இல்லாமல் ஆகியது. 

எப்போதோ ஒரு நேரத்தில் எனது எண்ணங்களை நானே கவனிக்க ஆரம்பித்திருந்தேன்.  என் எண்ணங்கள் பல திசைகளிலும் சிதறிக்கொண்டே இருந்தது. பெரும்பாலான நேரங்களில் தனியனாக இருந்ததால், பல நேரங்களில் என் எண்ணங்களைக் கண்டு எனக்கே பயமாக இருக்கும். இந்த எண்ணங்கள் தான் உண்மையில் நானா? என்று எண்ணி வருந்தியிருக்கிறேன். எண்ணங்கள் மூளையின் நரம்புகளில் தானே உருவாகிறது? ஆனால் இதயத்தை பிய்த்து வெளியே எறிய வேண்டும் போல் இருக்கும்.

என் எண்ணத்தின் படி தான் நான் நடந்து கொள்ள வேண்டுமா? என் எண்ணங்களையும் அது செல்லும் வழியினையும் என்னால் தீர்மானிக்க முடியுமா? என்று முயற்சி செய்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு நேர்மனதோடு ஒரு செயலை செய்யும்போதும் மனதில் கள்ளம் சிறு துளியேனும் எட்டி பார்க்காமல் இருந்ததில்லை. அதை மறைத்துக் கொள்ள மட்டுமே என்னால் முடிந்திருந்தது. அப்படியே வீட்டில் சும்மா செயலற்றவனாகவே இருந்தேன். செயலற்றவனாக இருப்பதை பற்றி கேள்விகள் பெருக்கெடுத்தன. இத்தனை எண்ணங்களும் சிந்தனைகளும் என்னை செயலற்றவனாக மட்டுமே ஆக்குகின்றன என்று தோன்றியது. 

எண்ணங்களை அடியோடு மறக்க செய்வதற்காகவே வேலைகளில் ஈடுபட பலமுறை முயற்சித்திருக்கிறேன். முதலில் தார் சுற்றுவது போன்ற சிறு வேலைகள். தார் சுற்றுவது என் கவனத்தை முழுவதுமாக கவர்ந்து வைத்திருக்க போதிய வேலையாக இல்லை. தார் சுற்றுவதில் ஒரு லயத்தை அடைந்து விட்டால் போதும். குழலினை ஊசியில் செருகி நூல் டப்பாவிலிருந்து இழையை கொண்டு வந்து தாரினை சுற்ற ஆரம்பித்துவிட்டால், தாரினை நிறுத்தும் வரையில் எண்ணங்கள் அலை பாய தொடங்கி விடும்.

நூலிழைப்பது சற்று சிக்கலான வேலை தான். ராட்டினத்திலிருந்து வரும் நூலினை டப்பாவில் இரண்டு அல்லது மூன்று பிரிவாக ஒரே நேரத்தில் ஏற்றி இழைக்க வேண்டி இருக்கும். நூலும் பல சிக்கல்களாக பிண்ணிக் கொண்டும் ஒட்டிக் கொண்டும், லூப்பு போட்டுக் கொண்டும் அடிக்கடி அறுந்து விடும். ஆனால் சில நாட்கள் பழகியதும், இத்தனை சிக்கலான வேலைக்கு மத்தியிலும் எண்ணங்கள் அலை பாய்வது தொடர்ந்தது.

கண நேரம் கூட கண்ணெடுக்க முடியாத அச்சு புனைப்பதிலும் கூட சில நாட்கள் கடந்ததும், எதிரில் இருக்கும் சிறு தட்டில் இருந்து சாம்பலை எடுப்பதும், சரியான இழையினை அச்சிலிருந்து விரல்கள் தேர்வதும், பாவிலிருந்து இழையை கிள்ளி எடுத்து நுமுட்டுவதும் அனிச்சை செயல்கள் போல் மாறிவிட்டது. எண்ணங்கள் அதன் போக்கில் விரிவதை தடுக்க முடியாமல் ஒவ்வொரு கணமும் அவஸ்தையில் வதைந்து கொண்டிருந்தேன்.

 சற்று நேரத்திற்கு முன்னால் கூட நடராஜ் அண்ணாவோடு அப்பா என்னை பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது உருவாகிய எண்ணத்தை செயல் படுத்தியிருந்தால் நான் இன்னேரம் ஜெயிலில் அல்லவா இருந்திருப்பேன்.

அனைத்து எண்ணங்களும் செயலாக மாறாது என்பது பெரும் ஆறுதலை தந்தது. வேண்டும் என்றே நான் இந்த எண்ணங்களை உருவாக்கி அதிலேயே திளைக்கிறேனோ? தெரியவில்லை.

ஒவ்வொரு செயலையும் சிந்தித்து அதன் ஒவ்வொரு படியையும் முன்கூட்டியே கணித்து செயல்படுவது என்பது பெரும்பாலும் தவறாகவே முடிந்தது. அப்படியே செயல்பட்டாலும் அது ஏதோ கணக்கு போடுவது போல் சலிப்பாக இருந்தது. நல்ல எண்ணங்களை மட்டும் தெரிவு செய்து அதை மட்டும் செயல் படுத்தினாலும், எண்ணத்தை தெரிவு செய்த உடனே அது எனக்கு அந்நியமாக மாறிவிடுகிறது.

இறுதியில் நான் கண்டடைந்த வழி புத்தகத்தில் மூழ்குவது. அனைத்து புத்தகங்களிலும் அல்ல. நாவல்களில் மூழ்கும்போது மட்டுமே எண்ண ஓட்டங்கள் தடை படுவதை என்னால் உணர முடிந்தது. அற்புதமான நாவல்களில் மூழ்குவது பெரும் ஆசுவாசத்தை அளித்தாலும், நாவல் முடிந்தவுடன் உண்டாகும் வெறுமையை சுவைப்பது நீண்ட நேரம் நீடிப்பதில்லை. மீண்டும் எண்ணங்கள் பெரும் எண்ணிக்கையில் என்னை சூழ்ந்து கொள்வது பதற்றத்தை உண்டாக்குகிறது.

பிள்ளையார் பாளையத்திற்காக மஞ்சள் நீர் கால்வாயை ஒட்டி இடது புறமாக திரும்பி நடந்து இடப்புறம் அமைந்திருந்த திருஞானசம்பந்தரின் சிறிய கோயிலுக்கு எதிர்ப்புறமாக சாலையை கடப்பதற்காக அப்பா நின்றார். நான் திரும்பி ஞானசம்பந்தரின் கோயிலை பார்த்தேன். கருவறையில் இருந்த சிலைக்கு முன் ஒரு அகல் ஏற்றப்பட்டிருந்தது. “மணிவளர் கண்டரோ மங்கையை வாட மயல் செய்வதோ இவர் மாண்பே” என்ற வரி என்னுள் எழுந்தது. முயன்று பார்த்தும் பாடலின் முதல் வரி நினைவிற்கு வரவில்லை. அவரது கோயில் திருக்கச்சி மேற்றளீஸ்வரர் கோயிலின் நேர் எதிரே அமைந்திருந்தது. சாலையை கடந்து திருமேற்றளீஸ்வரர் ஆலயத்தை தாண்டி சிறிது தூரம் சென்று வலதுபுறம் அமைந்த ஒரு ஓட்டு வீட்டின் வாசலில் நின்று அப்பா “ராமைய்யா..ஓவ் ராமைய்யா” என்று குரல் கொடுத்து விட்டு வெளியிலிருந்த திண்ணையில் அமர்ந்தார்.

வந்தவர் “யாரு..கோபாலு மோலியாரா.. வாங்க.. ஏன் அங்கயே நின்னுடீங்க” என்றார்.

பின்பு அவரிடமிருந்து பால மரத்தில் செய்யப்பட்ட நாடாக்களை நன்கு பரிசோதித்து நான்கு புதிய நாடாக்களையும் மூன்று பூச மரத்தில் செய்யப்பட்ட தக்கை கட்டைகளையும் பேரம் பேசி வாங்கிக் கொண்டு, மரத்தை பிசிறுகளை தேய்க்க உதவும் ஒரு பட்டைசீல் அட்டையை இனாமாக எடுத்துக் கொண்டு எழுந்தார். உள்ளே தெரிந்த கடிகாரத்தில் மணி ஒன்பதை தாண்டியிருந்தது. நான் வெறுமனே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். என் கவனம் எதிலும் படியவில்லை. அப்பா இந்த மாதிரியான தொழில் சம்பந்தப்பட்ட இடங்களை அறிமுகம் செய்து வைப்பதற்காகத்தான் என்னையும் அழைத்து சென்றிருந்தார் என்பது எனக்கு புரிந்திருந்தது.

சாலைக்கு வந்ததும், நடந்து கொண்டே என்னை நோக்கி திரும்பி “சாமி கும்பிட்டிட்டு போவோம்” என்று சொல்லிவிட்டு விரைந்தார்.

என்னிடம் பதிலை எதிர் பார்க்கவில்லை என்பது எனக்கு தெரியும். நான் பின் தொடர்ந்தேன். மேற்றளீஸ்வரர் கோயிலுக்கு நான் இதற்கு முன்பு வந்த ஞாபகமே எனக்கு இல்லை. காமாட்சியும், ஏகம்பரும், வரதராஜரும் தான் நிறைய கூட்டங்களை இழுப்பவர்கள். மற்ற பெரும்பாலான கோயில்களில் ஒன்றிரண்டு பேர் தான் இருப்பார்கள். கால பூஜை முடிந்துவிட்டால் நாம் உள்ளே செல்லும்போது ஐயர் எழுந்து கூட வராத கோயில்களும் இருந்தன. 

நான் மேற்றளீஸ்வரர் கோயிலைப்பற்றி அறிந்திருந்தேன். மேற்றளீஸ்வரர் தான் மூலவர் என்றாலும், இன்னொரு மூலவராகவும் ராஜ கோபுரத்தை தனக்கு மட்டுமே கொண்டு அவரை விட பிரகாசத்தில் இருந்தார் ஓதஉருகீஸ்வரர். அவருக்கு முன்னால் இரு பாதங்கள். விஷ்ணுவின் பாதங்களாக சொல்லப்படுவது. கோயிலை வணங்கிவிட்டு பிரகாரத்தை சுற்றி வந்தேன். அப்பா வேகமாக சுற்றிக்கொண்டு வெளியேறினார்.  நான் கோஷ்ட மூர்த்தியாக இருந்த தக்ஷிணாமூர்த்தியின் முன்னால் நின்றிருந்தேன். நான்கு கைகளில் நாகமும், சூலமும், சுவடியும், அருளலும் கொண்டு முயலகனின் மீது காலைவைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார். முயலகனின் இரு புறமும் முனிவர்கள் வணங்குவது போல் அமர்ந்திருந்தார்கள். என் கண்கள் கால்களின் கீழ் மிதிபட்டிருக்கும் முயலகனின் மீது பதிந்தது. சற்றே கைகால்கள் நீண்டு வளராது, உள்ளிருந்து பெரும் சுமையால் அழுத்தப்பட்டவனைப் போலிருந்தான். கைகளில் நாகம் இல்லை. திடீரென்று எனக்கு அமர்ந்திருந்த தக்ஷிணாமூர்த்தி எழுந்து அவனை மிதித்து கூத்தாட வேண்டும் போலிருந்தது. நான்கு கைகள் போதாது, எட்டு கைகள் வேண்டும், சடை அனல் திரிகளாக மாற வேண்டும், சாந்த முகம் வேண்டாம், கனல் போல் சிவந்திருக்க வேண்டும், நடனத்தின் ஒவ்வொரு அடியிலும் முதுகு நன்றாக மிதிபட வேண்டும். கைகளில் நாகம் இருந்து அவனை கொத்தி முழுவிஷத்தையும் அவன் தலைக்குள் செலுத்த வேண்டும்.  தப்ப முயலப்போவதில்லை முயலகன். ஒவ்வொரு முறை மிதிபடும் போதும் அவன் இன்புறுவான். ஆம் அப்படித்தான் இருக்கும்.  

“டேய் ரமேசே…..” 

அப்பாவின் குரல் என்னை கலைத்தது. வேகமாக நடக்க ஆரம்பித்தேன். பெருமாள் சன்னதிக்கு முன் இருக்கும் மண்டபத்தில் அமர்ந்திருந்தார். நான் சென்றதும் ஒரு சொல்லின்றி எழுந்து பேருந்து நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார். வெயில் அதிகரித்து புழுக்கத்தை உண்டாக்கியது. நான் திறந்துவிட்ட கடைகளை வேடிக்கை பார்த்தவாறு அவரை தொடர்ந்தேன்.

பேருந்து நிலையத்தில் இருந்த ஒரு சிறிய ஓட்டலில் மசால் தோசை சாப்பிட்டு விட்டு காலியாக நின்று கொண்டிருந்த 212எச் பஸ்ஸில் ஏறி நான் முன்பு போலவே இடது புறமாக பஸ்ஸின் நடுவில் இருந்த சீட்டில் ஜன்னலோரம் அமர்ந்து கொண்டேன்.

அப்பா ட்ரைவர் வரும் வரை கீழே நின்று கொண்டிருந்தவர், பின்பு ஏறி எனது அருகில் அமர்ந்தார்.

பேருந்தின் இருக்கைகள் பெரும்பாலும் நிரம்பிவிட்டன. அப்பா சற்று நெம்பி உடலை பின்புறமாக சாய்த்து வேட்டியின் மடிப்பில் இருந்த பொடி டப்பாவை எடுத்து திறந்து பொடியை கையில் எடுத்துக் கொண்டார்.

பஸ் ரயில்வே ரோடு வழியாக ஜவுளிக்கடை சத்திரத்தை தாண்டி ரங்கசாமி குளத்தினை அடைந்திருந்தது.

“அச்ச்…அச்ச்சி……அ..அச்ச்” என்று வெடி சத்தத்தோடு அப்பா மூன்று நான்கு முறை தும்மியதில் பஸ்ஸே அதிர்ந்தது போல் இருந்தது. பின் சீட்டிலிருந்து முனுமுனுப்பான சத்தம் கேட்டது.

முன் சீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த இருபத்தைந்து முப்பது நிரம்பிய இருவரும் திரும்பி அப்பாவை பார்த்தார்கள். அப்பா தோளில் போட்டிருந்த குட்டையால் மூக்கினை துடைத்துக் கொண்டு வேறேங்கோ பார்ப்பது போல் தலையை திருப்பிக் கொண்டிருந்தார்.

என் முன்னால் இருந்தவன் அவனது பக்கத்தில் இருப்பவனின் சட்டையை தொட்டு மெதுவான குரலில் ஏதோ சொன்னான்.

நான் அப்பாவிற்கு நேராக முன் சீட்டில் இருந்த இளைஞனின் சட்டையை சற்று எக்கி பார்த்தேன். வலது கைப்புறம் இருந்த சட்டையில் பொடியும், மூக்கிலிருந்து வந்த கோழையும் சேர்ந்து சிதறி பரவியிருந்தது. அவனது கையிலும் நிச்சயமாக பட்டிருக்க வேண்டும். வலது புறம் சீட்டுகளில் உட்கார்ந்திருந்தவர்களின் பார்வையும் அந்த இளைஞனனின் மீது குவிந்தது. 

அவன் வலது புறம் கழுத்தை ஒடித்து சட்டையில் பட்டிருக்கும் பொடியும் மூக்குக் கோழையும் கலந்த கறையைப் பார்த்தான்.

எனக்கு சற்று பய உணர்வு வந்தது. அதே நேரத்தில் அவன் சட்டையிலிருக்கும் பொடியில் இருந்து ஏதோவொரு நெடி அவன் தலைக்குள் ஏறிக்கொண்டிருப்பது போல் தோன்றியது. அவன் தலை அந்த நெடியை உள் வாங்கி உயர்ந்தது. திரும்பி அப்பாவை பார்த்தேன். அவர் இடப்புறமாக திரும்பி எனது ஜன்னலின் வழியே கோயிலை வேடிக்கை பார்த்துக்கொண்டு வந்தார். நான் ஜன்னலின் வழியே பார்த்த போது வழக்கத்தீஸ்வரர் கோயில் கடந்து சென்றது. இல்லை இது மணிகண்டீஸ்வரர் கோயில். வழக்கத்தீஸ்வரர் கோயிலின் எண்ணம் எப்படி வந்தது என்று தெரியவில்லை. அது மூங்கில் மண்டபத்தின் அருகே உள்ளது 

“என்னய்யா பப்ளிக்ல இப்படி தான் தும்முவிங்களா” என்று கனமான குரலில் கேட்டான் அந்த இளைஞன்.

“என்ன” என்றார் அப்பா. கரகர குரலில் எந்த உணர்ச்சியும் இல்லை.

“என்ன என்னனு கேக்குறீங்க, செய்றத செஞ்சிட்டு”

“என்ன செஞ்சிட்டாங்க”

“என் சொக்கா மேல பூரா தும்மி வச்சிருக்கியே, இதா பாரு” 

“தும்மல் வந்தா தும்ம தான் செய்வாங்க”

“உன்ன யாரும் தும்ம வேணாம்னு சொல்லல.. என் மேல யேன் தும்முன”

“பொடிய போட்டு அடுத்தவன் சட்டைல தும்மி வைக்கிறியே, நியாயமாய்யா” என்றான் அருகில் இருந்த இன்னொரு இளைஞன்.

நான் திரும்பி அப்பாவை பார்த்தேன். அவர் இயல்பாகவே இருப்பது போல் தோன்றியது. எனக்கு மூளைக்குள் ஏதோ சுற்றுவது போல் இருந்தது.

“தும்மல் வந்தா தும்ம கூடாதா…” என்றார் சற்று சத்தமாக.

“யோவ் இப்ப இவன் சட்டையில தும்மிட்டையே, எவன் தோய்க்கிறது இத”

“மூக்க மூடிக்கிணு தும்முறதுக்கு என்ன” என்றான் பொடிக்கறை பட்டவன்.

“துண்டு போட்டிருக்கல்ல”

“உனக்கு வேணும்னா, நீயும் துண்டு போட்டுக்கோ” என்றார் அப்பா.

அப்பா பதில் சொல்ல வேண்டிய கேள்வி இதில்லை என்று தோன்றியது. அது அவருக்கும் தெரிந்து தானிருக்கும்

பின் இருக்கையில் இருந்து சில தலைகள் எட்டி பார்த்தது. கண்டக்டர் வந்து பார்த்துவிட்டு தலையில் அடித்துக் கொண்டு டிக்கெட் கிழிக்கும் வேலையை தொடர்ந்தார்.

“மூக்க மூடிக்கினு தும்ம வேண்டியது தான பெருசே”

“உன் மூக்குல இருக்க அழுக்கெல்லாத்தையும் அடுத்தவன் மேல தும்மி வச்சிட்டு, என்னமோ சத்தமா பேசற”

“இப்ப நீயும் தான்யா சத்தமா பேசற” என்றார் அப்பா.

“எப்படி ஆயிருக்கு பாரேன்” என்று வலது பக்கத்திலிருந்து பெண்ணின் குரல் ஒலித்தது.

 “யோவ் கொஞ்சமாச்சும் அறிவிருக்கிறா மாதிரி பேசுய்யா, ஏன் தும்மினனு கேட்டா அதுக்கு பதில சொல்லாம”   என்றான் இளைஞன்.

“டேய் தும்மல் வந்தா தும்ம தான் செய்வாங்க.. யேன் நீ தும்ம மாட்டியா?”

“அதுக்கு என்மேல தான் தும்முவியா? இங்க பாரு சொக்கா எப்படி ஆயிருச்சினு. அறிவிருக்காயா உனக்கு?” 

“எனக்கு புத்தி இல்ல தான்டா” என்றார் அப்பா.

எனக்கு அவரின் பதிலில் லேசான திருப்தி உண்டாயிற்று.

அப்பா தொடர்ந்தார். “நாங்க எல்லாம் புத்தி இல்லாதவங்க தான்.”

“தோள்ல போட்டிருக்க துண்ட வச்சி தும்ம வேண்டியது தான”

பஸ் டோல்கேட்டை நெருங்கி இருந்தது.

“நீ தான் புத்தி இருக்கிறவனாச்சே, மடயன் கிட்ட ஏன் பேசுற..”

அப்பா வெகு தூரம் பேச்சினை திருப்பி கொண்டு போய்விட்டிருந்தார்.

“பாத்தா பெரிய மனுஷன் மாதிரி இருந்துகிட்டு பேசுறது எல்லாம் சரியா இருக்கா”

“டேய் நான் பெரிய மனுஷன் இல்ல. நீ தான் புத்தியிருக்கிற பெரிய மனுஷங்க. நாங்க மாடு மேய்க்கிற அறிவு இல்லாதவன், மடையன், நீ யேன்யா எங்க கிட்ட பேசுற, பேச்ச விடு” என்றார் அப்பா.

……….

“மடையனாமே…. மடையன்”

பஸ் டோல்கேட் நிறுத்ததிலிருந்து புறப்பட தயாராகி இருந்த நேரத்தில், நான் அப்பாவின் கையைப் பற்றி வேகமாக இழுத்துக் கொண்டு கீழே இறங்கினேன். எங்களுடையது அடுத்த நிறுத்தம் தான். 

அப்பா “டேய் டேய்.. என்னடா பண்ற..” என்று கத்திக் கொண்டிருந்தார்.

இறங்கியதும் நான் பற்றியிருந்த அவரது கையினை விட்டு விட்டு, வீட்டினை நோக்கி திரும்பி பார்க்காமல் விரைந்தேன்.

ஏனென்று தெரியாமல் உடலெல்லாம் எரிவது போல் இருந்தது. அது அப்பாவின் மீது வந்த எரிச்சல் இல்லை என்று உள்மனது சொன்னது. உடலின் மீது ரத்தம் வழிய கீறிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. எவ்வளவோ சிந்தித்தும் என்னுள் அப்பவின் கையை பற்றிக் கீழிறக்கும் எண்ணம் எப்படி உருவாகி செயலாகியது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.

சற்று தூரம் நடந்ததும் சுவாசமும் சிந்தனையும் சீராகியிருந்தது. ஓதஉருகீஸ்வரரின் பாதங்கள் மனதில் தோன்றியது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.