பேரன்பின் பிசாசு 

நாள்தோறும்
என் உறக்கத்தை மேய்ந்து
கொழுத்து வளர்கிறது
உன் பேரன்பின் பிசாசு
விடிகையில்
அறையெங்கும் நிரம்பி
மலையென பெருத்து
வெளியேற வழியின்றி
கடலாய் தவழ்ந்து
என்னருகில் மிதக்கிறது
நான் அதை
செல்ல பொம்மையாக்கி
குழந்தையாய் மோகித்து
ஆரத் தழுகிறேன் .


வளர்ப்பு விலங்கென
நாவைக் குழைத்து
விடாமல் துரத்தும்
மஞ்சள் வண்ண நினைவுகளைப்
அதே பழைய விசையுடன்
திசையெங்கும் கூடித் திரிகிறேன்
கோடையின் பெருவெயிலால்
இதயமெங்கும் பரவி
நீர்ச்சுண்ட வற்றுகிறாய்
கமலங்கள் செழித்த குளம்
வெடித்துப் பிளக்கிறது
மழைக்காலம் அற்ற
பாலைநிலமாய்
இனிதற்ற
இதமற்ற
இனிநான்.


கேட்பது யாதென்று
நானறியேன்!
தருவது எதுவென்று
நீயறிவாய் !
நிதம் தருவாய் !

வாழ்வது நானென்று
ஆனாலும்
செல்வது உன் வழியில் !
சேர்வது உன் மடியில்!

இதயம் ஈர்ப்பதும்
உயிரில் பூப்பதும்
எதிரில் மணப்பதும்
மலரினும் பேரழகு நீயன்றோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.