சுகந்தம் கூட்டும் சொற்குவியல்

கண்ணயர்வின் பொழுதான  கண நெகிழ்ச்சி

கஞ்சி போட்ட இஸ்திரி ஆடையாக
வெளுப்பு விரைப்பில்
மொட மொடக்கிறது
அன்றாடங்கள்
யாவும்
அட்சரத்சுத்தமாக.
தளர்வுற்ற இரவுக்குள்
தலையணையில்
தலை கோத
ஏங்கத்தான் செய்கிறது
அலுப்பு கூட்டும்
மனம்
அங்கலாய்த்து.
எங்கு போனாய்
அம்மா
ஒழுங்கினை எனக்குள்விட்டு
தலை கோதாமல்
தவிக்கவிட்டென
நித்திரையில் மூழ்குவதற்குள்
அடுத்த நாள்
ஆடைகள்
அழைக்கிறது
விரைப்பு காட்ட
விடிந்து.


சுகந்தம் கூட்டும் சொற்குவியல்

ஆடை நேர்த்தியில்
வசீகரம் கூட்டும்
தேவதை சாயல்
தேட வைக்கிறது
தினசரிகளில் உன்னையும்
வரவாக்கிட.
தேர்ந்ததெடுத்து உதிர்க்கும்
வார்த்தைகளில்
கவனமிழக்கிறது
காலம் மறக்கும் பொழுதின்
இனிப்புகள் கூடிய
தித்திப்பாக.
உருகித் திளைக்கும்
காதல் வரிகளில்
உள்ளம் பூரிக்கிறது
நேசத்தில்
நெகிழும் நெஞ்சத்தை
ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுது
உன்னோடு
பயணிப்பதே
உத்தமமென.
யாவற்றுக்குமிடையில்
எங்கொளித்து
வைத்திருந்தாய்
இவ்வன்மத்தை
கண்டுணர முடியாதபடி
கவனமாக கவிதைகள் பேசி.
விருப்ப எண்ணிக்கையை
கூட்டும்
இவ்வேளையில்
கசிந்துருகி கிடக்கிறது
கமெண்ட் பாக்கிஸ்
ஏக்கப்பெரு மூச்சாக
எப்பொழுதும்
இதயம் தொடுமுன்
பொய் வார்த்தைகளை
நம்பிய பூரிப்பில்
யாவரும்
சுகம் கண்டு


இயலியலுக்கான இயங்கியல்

கரிசனத்தை நிகர்செய்திட உதிர்க்குமென் வார்த்தைகள்
எடையற்றதாக தவிக்கிறது
விட்டகல முடியாத விருப்பமென
உன்னதத்தில் லயித்து.
பிழைப்பிற்கான
பிரயத்தனத்தில்
மூழ்கும் பொழுதுகள்
யாவிலும்
வாய்க்கும் கோவப்பாடுகள்
நீயற்றதன் வெளிப்பாடென
சொல்லிட
எவ்வுபாயமுமில்லை
எய்கி நிற்கும்
வெறுப்பைத் தவிர.
பேசு பொருளாகுமென்பதை
பின்னுக்குத்தள்ளி
இரவு பகலற்ற
இன்மையின்
உச்சம் தொடுமொரு
நாளுக்காக
உயிர்த்துக் கிடக்கிறது
வானம் பார்த்து
வாஞ்சையோடு
இன்னல்கள் கடந்து
இணைந்தொழுக
தருணம்
பார்த்துக் கரைந்து



Discover more from சொல்வனம் | இதழ் 366 | 10 மே 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.