ஓயமாரி

Miriam Cahn (*1949)
Sans titre (13 + 14 + 18.07.2003), 2003

“ஐய்யா….ஐய்யா” என்றபடி வாசலிலே நின்றேன்.

உள்ளிருந்து வந்தவர், ‘உள்ள வாங்கோ…இருக்கார்’ என்றார். அவர் யாரென தெரியவில்லை. ‘வணக்கம்’ என்றபடி செருப்பை கழட்டி விட்டு உள்ளே வந்தேன். அவர் சிரித்தமுகமாக  ‘சார்… உள்ளே போங்கோ இதோ வரேன்’ என்றபடி போனில் யாரிடமோ பேசினார்.

அகலமான கல் வேய்ந்த திண்ணைக்கு அப்பால் அங்கணத்தில் முன்மதிய வெயில் வெண்ணிற திரைச்சீலை தொங்கிக்கிடப்பது போல தெரிந்தது. பக்கவாட்டில் நீளமான திண்ணை போன்ற அறையில் தாழ்வான கயித்து கட்டிலில் கர்ணன் அமர்ந்திருந்தார். அவருக்கு அறுபத்தைந்து வயதிருக்கும். அந்த இடத்தில் மின்விளக்கு அணைத்து வைக்கபட்டிருந்தது.

அவர் மடியில் சின்ன குழந்தை அமர்ந்திருக்க, அதை ‘பவுனு குட்டி வெளிய போய் விளையாடுன்னு’ இறக்கிவிட்டு, ‘வாப்பா, உட்காரு’ என்றார். அவர் அருகில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்தேன்.

அந்த குழந்தை  பார்த்து “வா” என கையசைத்தேன்.என்னை பார்த்தபடி மெல்லிய சிரிப்போடு கடந்து சென்றது.  “புதுசா இருக்கீல்ல, அதான் அது வரல. பழகுனா ஓட்டிகிட்டு போவே மாட்டா” என்றார்.அவர் முகத்தில் விளையாடும் குழந்தைகளுக்குரிய பொழிவு.

வரவேற்றவர் என் பின்னாலேயே வந்தபடி ‘இவர் பேரு வேணு…நேத்து உங்கள பாக்கனும்னு கேட்டாரு.அதான் இங்க வர சொன்னேன் ’ என்றார்.

“ஆஹான்” என்றபடி, என்னை உற்று கவனித்து, லேசான சிரிப்புடன், “கண்ணுல புர இருந்து இப்ப தான் ஆபரேஷன் பண்ணிருக்கேன். வெளிச்சம் படகூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாரு. அதான் உள்ளையே இருக்கேன்” என்றார்.

மெல்லிய சிரிப்புடன், கையிலிருந்த பழக்கூடையை அவரிடம் நீட்டினேன்.

அவரோ!, குழந்தையை போல சிரித்தபடி, பழக்கூடையை வாங்கி, “தம்பி, யாரு நீங்க ?” என்றார்.

“நான் ஒரு சினிமா உதவி இயக்குநர். அடுத்து  படம் போறேன். அதான் உங்க கதை, வாழ்க்கை எல்லாம் தெரிஞ்சுகிட்டு அதிலிருந்து கதை பண்ணலாம்னு வந்திருக்கேன்” என்றேன்.

“அட என்னப்பா நீ, சினிமான்னா பணக்காரங்க வாழ்க்கை, இல்ல ரவுடி வாழ்க்கை, இல்ல குடும்ப கதைன்னு பண்ணாம, என்னோட வாழ்க்கையை எடுக்குறேன்னு சொல்லுற?, அப்புடியே எடுத்தாலும் ஜனமெல்லாம் பார்க்குமா ?” என்றபடி சிரிக்க,

“சொல்லபடாத வாழ்க்கையை சுவாரசியமா  சொன்னா!, எல்லாரும் பார்க்க விரும்புவாங்க” என்றேன்.

பின்னாடி இருந்தவர் “சாருக்கு டீ வாங்கியாரேன்” என்றபடி சொல்லி வெளியே போக, “டேய் புகழு, அப்புடியே வடை சுடா இருந்தா வாங்கிட்டு வா” என்று கர்ணன் அவனிடம் சொன்னார்.

கண் விழிகளை சுழற்றி, அந்த அறையின் ஓரத்தில் இருந்த சங்கை கவனித்து, “நீங்க உபயோகபடுத்துனாதா ?” என்றேன்.

மெல்லிய சிரிப்புடன், “ஆமா…..” என்றவாறு, சங்கை கையில் எடுத்து, “‘புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்பல்விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்வல்லசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்செல்லாஅ நின்ற இத்தாவர சங்கமத்துள்…” என்று சிவப்புராண பாடல் பாடி, சங்கை ஊத ஆரம்பித்தார். இரண்டு நிமிடம் தொடர்ந்து ஊதி, நிறுத்தினார். அவரின் கண்கள் லேசாக கலங்கி இருப்பதை கவனிக்க முடிந்தது.

சட்டென்று, “என்னங்க, இந்த வயசுல தம் கட்டி இப்புடி ஊதுறீங்க. உடம்புக்கு எதாவது பிரச்சினை வர போகுது” என்றேன்.

“ஆஹ…..” என்று சத்தமாக சிரித்து, “தினமும் இரண்டு நிமிடம் சங்கு ஊதினால், எல்லா நோய்களும் நம்மை விட்டு ஓடிப்போய்விடும்.”  என்றார்.

“என்னங்க டாக்டர் மாறியெல்லாம் பேசுறீங்க” என்றேன்.

“ஆமா…. எங்க தாத்தா, அப்பாயி  ஏன் பல காலமா நாங்க வைத்திய குடும்பம்” என்றார்.

பின்னாடி டீ , வடையை ஏந்தியபடி புகழ் வந்து நின்று, எனக்கும், கர்ணனுக்கும் கிளாஸில் ஊற்றி கொடுத்தார்.

டீ கிளாஸை வாங்கி குடித்தபடியே, “வைத்தியம் நீங்க பார்ப்பீங்களா ?” என்றேன்.

அவரும் டீ குடித்தபடியே, ” வைத்தியம் மட்டுமில்ல. என்னோட தாத்தா ஒருத்தருக்கு உடம்புல காயம் ஏற்பட்ட பகுதியில் மருத்துவம் செய்யும்போது, அந்த இடத்தில் உள்ள மயிரை மழிக்கனும்கிறதுனால, அந்தக் காலத்திலயே  சவரம் செய்யுறதையும் தெரிஞ்சு வச்சுகிட்டாரு. அப்பறம், மருத்துவத் தொழிலைப் பார்த்து வந்த ஆதி மருத்துவர்கள், அரசாங்கத்தின் சட்டதிட்டம் காரணமாக, அத்தொழிலைத் தொடர முடியாமலே போச்சு. தாத்தா எங்கப்பாருக்கு சின்ன சின்ன கை வைத்தியம் மட்டும் சொல்லி குடித்தாரு. எங்க அப்பா நான் பொறந்தவுடனே செத்து போயிட்டாரு. எனக்கு 3 வயசு இருக்கப்பவே எங்க அம்மாவும் செத்துட்டாங்க. அப்பா அம்மா முக கூட எனக்கு தெரியாது. அவங்கள போட்டோ கூட எடுக்கல.மாமாகிட்ட தான்  வளந்தேன். காமராசர் முதலமைச்சரா இருந்த காலம். பள்ளி கூடத்துல குழந்தைகளுக்கு சாப்பாடும் போட்டு, படிப்பு சொல்லி குடுத்தாங்க. ஆனா நான் அப்போ போகாமலே இருந்துட்டேன். அப்பறம் கோவில்ல பம்பை, உடுக்கை வாசிக்க, ஈஸ்வரன், அம்மன் கோவில்ல சங்கு ஊதுற வேலைக்கும் போனேன். அப்பறம் பெரியவனானது அப்பறம் கோவில் வேலைக்கு போறதில்ல.
யாராவது இறந்து போயிட்டா!, சேதி சொல்லி, என்னைய கூப்புடுவாங்க.
இறந்தவங்க வீட்டுக்கு போய், இறுதி சடங்கு அவங்கவங்க சம்பிரதாயப்படி செஞ்சு வைப்பேன்.  இதிலுல, சைவ, வைணவ வீடுகளுக்கு ஏத்தபடி சடங்குகள் வித்தியாசபடும். சைவ வீடுன்னா திருவாசகத்தில், சிவபுராணம், கண்டபத்து, வாழாப்பத்து, பிடித்தபத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, சித்தர் பாடல்கள் இதெல்லாம் பாடுவேன். வைணவ வீடுன்னா திருப்பாவை, பெருமாள் தொடர்பான நாராயண நாதம் பாடுவேன். பொருள் தெரியுதோ, தெரியலையோ கத்துகிட்டு பாடி பழகிட்டேன்.

அதிலேயும் தெலுங்கு ஆட்கள் வீடுன்னா தெலுங்குலயே பாடல்கள் பாடுவேன். சைவ சமயத்திலேயே, தீட்சை பெற்றவங்க வீடுன்னா, அவங்க இறுதி சடங்குகள் ரொம்ப அதிகம். அவங்களுக்கு ஆறு கலசங்கள் வைச்சு, நீராட்டி, புதைக்கனும், அந்த இடத்தில் லிங்கம் வைக்கனும், அதுக்கு அபிஷேகம், பூஜை செய்யனும். அந்த தெருவுல  நிறைய பேருக்கு பழக்கமானேன். அதனால ஓயமாரி பக்கத்து தெருவிலேயே தனி வீடு எடுத்து தங்குனேன் ” என்றார்.

அவரின் கதையை கேட்டபடி,டீ குடித்து கிளாஸை கீழே வைத்து, “ஓயமாரியா ?” என்றேன்.

அவரும் டீயை குடித்து முடித்து,”ஓயமாரி சுடுகாடு கேள்விபட்டதில்லையா ?” என்றார்.

“ம்…. ” என்று மெல்ல தலையசைத்தேன்.

“நான் சின்ன வயசா இருந்தப்ப மாமா சொல்லுவாங்க, ‘பொணம் வராம இருக்கும். சுடுகாட்டுல வேல பாக்குறவங்க காசு இல்லாம பசில கிடப்பாங்க.அப்ப அங்க இருக்குற கல்லு சிலைய கோபத்துல செருப்பால அடிப்பாங்க. அப்பறம் பார்த்தா! ஓயாம பொணமா வர ஆரம்பிச்சதாம். நான் சடங்கு செய்ய ஆரம்பிச்ச காலத்திலேயே ஒருநாளைக்கு குறைஞ்சது ரெண்டு பொணமாவது வந்திரும். நான் இருந்தப்ப பல நாள் நிறைய பொணம் எரிக்க வரிசை கட்டி நிற்பாங்க. ‘காத்திருந்தாலும் ஓயமாரி சுடுகாட்டுலதான் பொணத்த எரிப்பேன்னு’,  ரெண்டு நாள் காத்திருந்து எரிச்சவங்களை பார்த்துருக்கேன். இப்ப தான் மிஷின் சுடுகாடு பக்கத்திலே கட்டிட்டாங்க. அதனால இப்ப எவ்வளோ பொணம் வந்தாலும், உடனே எரிச்சிடுவாங்க.

அதிலேயும் காசிக்கு அப்பறம் அரிச்சந்திர மகாராசாவுக்கு இப்ப கோவில் கட்டிருக்காங்க. மொதல்ல சிலை மட்டும் இருந்தது அங்கதான்.கால பைரவருக்கு, சனீஸ்வரன் கோவில்ன்னு எல்லாம் அங்க இருக்கு. முன்னாடி எல்லாம் “சுடுகாட்டு கோவில்ன்னு” யாரும் வரமாட்டாங்க. “அதுவும் பெண்கள் சுடுகாட்டிற்கு போகக்கூடாதுன்னு”  ஒரு ஐதீகமாக சொன்னாங்க.  இப்ப ஆணு,பொண்ணு, குழந்தைங்கன்னு எல்லாரும் வராங்க. பொணம் பாட்டுக்கு எரியும். இங்க தினம் பூஜ பாட்டுக்கும் ஆறு வேளையும்  நடக்கும்” என்றார்.

“தினம் பொணம் வரும்ன்னா? உங்களுக்கு இலாபம் தானே!” என்றேன்.

“ஆமா, பொல்லா லாபம்….” என்று கோபமானர். சில நொடிக்கு அமைதிக்கு பின், “சங்கு ஊதி, சுடுகாட்டுக்கு போய்ட்டு வரேன்னு  எனக்கு யாரும் பொண்ணு தரல. எங்கள மாறி இருக்கவங்களுக்கு முக்கிய தெருவுல வாடகைக்கு வீடு கூட தரமாட்டாங்க. அப்பதான் பேசாம படிச்சு, வேற  தொழில் பண்ணிருக்கலாம்னு நினைச்சேன்.
ஒரு வழியா பொண்ணு கிடைச்சு, கல்யாணம் பண்ணி, இரண்டு பசங்க பொறந்தாங்க. ஒருத்தன் இந்தா இவன்தான் புகழேந்தி. பழக்கடை வச்சிருக்கான்” என்று அவரை காட்டி, “இன்னொருத்தவன் அரிசந்திரன். அவன் பக்கத்து ஊர்ல தான் வேலை பார்த்துட்டு அங்கயே இருக்கான்” என்றார்.

” நீங்க ஏன் தொழில விட்டு வந்துட்டீங்க ” என்றேன்.

“அது ஒரு சோகமான சம்பவம் நடந்து போச்சு. அட, ஒரு நாளைக்கு ஆறு பொணத்துக்கு சடங்கு செஞ்சு, அந்த காலத்திலயே ஆயிரத்துக்கு மேல சம்பாதிச்சிருக்கேன்.ஆனா,
இந்த தொழிலுக்கு சமுதாயத்தில் சுத்தமா மதிப்பில்ல. ‘சங்கு ஊதுருவன் தானேன்னு’  ஏளனமா பார்ப்பாங்க. பல இறந்த வீடுகளுக்கு நாதம் பாடி, சங்கு ஊத போயிருக்கேன். எனக்கு வீட்டுக்கு வெளிய, இல்ல ரோட்டுல உட்கார வச்சு தான் சாப்பாடு போடுவாங்க. எங்கள மாதிரி ஆட்களை முறைவாசல் வழியாவே வர சொல்ல மாட்டாங்க. கொள்ளப்புறம் அப்புடி இல்லைன்னா, வீட்டுக்கு வெளியே நின்னு தான் சங்கு ஊதனும், சுடுகாட்டுக்கு கொண்டு வந்தப்பறம் சடங்கு பண்ணனும்.

இப்படிதான் ஒரு சாவு வீட்டில் சங்கு ஊதி, சடங்கு பண்ண, நானும் என் நண்பன் ராமனும் போனேன்.அங்க சும்மா… “ஊது.. ஊது..” என்று ஆளாளுக்கு விரட்டுனாங்க. மூச்சை இழுத்து ஊதுனோம். மதிய நேரமாச்சு.அவங்க சாப்பாடு குடுக்கவே இல்ல. அப்போதுதான் ஊதி முடிச்சிருப்பேன். புதிதாக சாவு வீட்டுக்கு வந்தவர் “என்ன சும்மா உட்கார்ந்திருக்க.. ஊது.. இன்னும் நெறய ஆளுங்க வரணும்” என்றார்.

“பசிய இருக்குன்னு” ராமன் சொன்னான். உடனே “முதல்ல ஊது, அப்பறம் கொட்டிகலாம்னு” கேவலபடுத்துனாங்க.
அவனும் தம் கட்டி சங்கு ஊதினான்.   “மேலே இருக்கிற சிவனுக்கு நீ ஊதுற சங்கு சத்தம் கேட்கணும். அப்பத்தான், செத்தவருக்கு மோட்சம் கிடைக்கும்.” என்று இஷ்டத்துக்குப் வம்பிழுத்தாங்க. நானும், அவனும் ரொம்ப நேரம் ஊதி, எனக்கு மயக்கமே வந்தது. அவன் ஊதினபடியே கீழ விழுந்து இறந்து போனான். போலீஸ்காரங்க வந்தப்ப, ‘சாப்பாடு தரல, அதிகமா வேலை வாங்குனாங்க.அதான் ராமன் செத்தான்னு’ நான் எவ்வளவோ சொன்னேன். ஆனா, காசு இருக்கபக்கம் தானே காத்தும் அடிக்கும். இந்த காவலும் சல்யூட் அடிக்கும். ‘ராமன் நிறைய குடிச்சிட்டு,சங்கு ஊதி செத்தான்னு’ கேஸை முடிச்சாங்க. அவன் குடும்பமும் ஊரைவிட்டே போயிட்டாங்க.ஆனா, உண்மைய சொல்லுறேன் ராமனும் சரி, நானும் சரி குடிக்கவே மாட்டோம்.

ராமன் சாவுக்கு நியாயம் கிடைக்க, எங்க சங்கத்திலே பேசினேன். நியாயம் கிடைக்கிற வரைக்கும். ‘சாவு வீட்டில இனிமே சங்கு ஊத கூடாது. யாருக்கும் சடங்கு செய்யகூடாதுன்னு’  கோரிக்கை வைச்சேன். ஆனா, யாரும் ஆதரவு தரவே இல்லை.
ஏற்கனவே “சங்கு ஊதுறவன் வரான்னு” வழியில் எங்களைப் பார்த்தாலே அபசகுனமாக நினைச்சு ஒதுங்கி போவாங்க. இப்போ, “இவனை சங்கு ஊத கூப்புட்டா!, தனி பொணமா போகாது. வேண்டான்னு”

அப்பறம் என்னை சங்கு ஊத, சடங்கு செய்ய யாரும் கூப்புடவே இல்ல. வேலையில்லாம, பணமும் இல்லாம ரொம்பவே சிரமப்பட்டேன்.

என் பொண்டாட்டிகிட்ட அக்கம்பக்கம் குடித்தனம் இருக்கவங்க பேச கூடமாட்டாங்க. என் புள்ளங்கள பள்ளி கொடத்துல ‘சங்கு ஊதுறவன் பசங்கன்னு’ கிண்டல் கேலி பண்ணிருக்காங்க. யாரும் கூட சேர்த்து விளையாட மாட்டாங்க. அதான் எங்க அடையாளத்தையே மாத்தி, அந்த ஊரை விட்டு தள்ளி, வேற வேலை பார்த்து இந்த ஊர்லயே இருந்துட்டேன்” என்றார்.

சின்ன குழந்தை அழுகையை ஓய்ச்சபின், ஏற்படுற அமைதி மாதிரி அவரின் கதையை கேட்டு, மௌனமாகவே இருந்தேன்.

சற்று நேரத்திற்கு பின், “உங்களுக்கடுத்து இந்த வேலையை உங்க பசங்க செய்யனும்ங்கிற எண்ணம்  உங்களுக்கு வரலையா ?” என்றேன்.

இந்த கேள்வி அவர் மனதை காயமாக்கியிருக்கும் என்பதை நான் உணர்ந்தேன். அப்போது அவர் என்னை பார்த்து, “நான் செஞ்ச தொழிலால, இந்த சமுதாயத்தில் கவுரவத்துடன் வாழ்றது வரை பல தளங்களிலும் சிக்கல் இருக்குது. அதுகாக நான் செஞ்சது மட்டமானது இல்ல. என்னை பொறுத்தவரை, எந்த தொழில் செய்தாலும், செய்யும் தொழில் தெய்வம். மாற வேண்டியது சமுதாய எண்ணங்கள். என்னோட பசங்க, விரும்பினால், இதில் ஈடுபடலாம்.  ஆனா அவங்க வேறு தொழிலுக்கு மாறிட்டாங்க” என்றார்.

அவரோட பதில், எனக்கு மன சசந்தோஷத்தை கொடுத்தது. ஆனாலும் மறு கேள்வி கேட்காம, நான் அமைதியானேன்.

என்னை கொஞ்ச நேரம் உற்று கவனித்து, “மதியானமாச்சு சாப்புட்டு தான் போகனும்” என்றார்.

மகிழ்ச்சியாக, “சரி” என்றவாறு தலையாட்டினேன்.

“என்னோட வாழ்க்கை கத, நீ சினிமாவா எடுப்பீயா ?” என்றார்.

“அதில என்ன சந்தேகம். நம்ம வாழ்க்கையை தான் எடுப்பேன். வேற சினிமா எடுக்கவே மாட்டேன்” என்றேன்.

அவர் சிரித்தபடியே, “சந்தோஷம்….. உங்கள பத்தி சொல்லவே இல்ல. உங்க ஊர் எதுங்க ?” என்றார்.

“இப்ப இருக்குறது சென்னை பக்கம். ஆனா என்னோட பூர்வீகம் ஓயமாரி தான்” என்றேன்.

“அப்புடியா… ஆனா, ஓயமாரி பத்தி தெரியாத மாதிரி கேட்டீங்களே ?” என்றார்.

“நான் விவரம் தெரியாத  வயசா இருக்கும்போது அப்பா இறந்துட்டாரு. வேற ஊருக்கு பொழக்க போயிட்டோம்” என்றேன்.

என் குடும்பம் பற்றி கேட்பார். அதுக்கு பதில் சொல்ல தயாரா இருந்தேன். அந்த சமயத்தில் பின்னிருந்த புகழேந்தி, “சரி வாங்க சார் சாப்பிட போகலாம்” என்று அழைக்க, கர்ணனும் உணவு உண்ண தயராக மெதுவாக எழும் நேரத்தில், “நீ ராமன் மகன் தானே ?” என்றார்.

“என்னை எப்படியோ தெரிந்து கொண்டாரே” என்ற ஆச்சரியத்தோடு, “ஆமாங்க” என்று வேகமாக சொன்னேன்.

“அப்பன் முஞ்சி அப்புடியே இருக்கு” என்றவாறு அவர் கடந்து செல்கையில், நிஜ வாழ்க்கையில் சில ஆச்சரியங்களை இப்படி தான் கடந்து போக வேண்டும் என்று எனக்குள் தோன்றியது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.