பின்வரும் நிழல்

Lucy Bull (*1990)
Crooked Coda, 2020

எதையும் நினைக்கத் தோன்றாத ஒரு மனம் வேண்டும். அப்படி ஒன்று அமைந்துவிட்டால் அது போதும். எதார்த்தமாக வாழ்ந்து விடலாம். ஆனால் அது சாத்தியமே இல்லை. பலதையும் வரிசைப்படுத்தி குழப்பிக் கொள்வதில்லை மனம். அது பாட்டுக்கு இஷ்டத்துக்கு இழுத்துப் போட்டு யோசிக்கிறது. ஒன்றை சம்பந்தமே இல்லாமல் இன்னொன்றுடன் கோர்த்து விடுகிறது. அண்ணாச்சி கடையில் வாங்கிய கொண்டைக்கடலையில் இருந்த பூச்சிகளுக்கும், மல்லிகா அக்கா வீட்டுப் பூஜை அறைக்கும் என்ன சம்பந்தம்……. ஒன்றும் புரியவில்லை. 

கொஞ்சம் அமைதியாக இருக்க ஆசையாக உள்ளது. அதை எப்படி வசப்படுத்திக் கொள்வது. கண்களை மூடிக்கொண்டால் சாத்தியப்படுமா? நிச்சயமாக இல்லை. எத்தனையோ முறை அதையும் முயன்று பார்த்து தோற்றாகிவிட்டது. மனதை அதன் போக்கில் விட்டு விடலாம் சற்று நேரத்தில் தானாக அடங்கிவிடும் என்று பார்த்தால் அதிலும் தோல்விதான். 

நான் எழுந்து அமர்ந்தேன். இருளில் கொஞ்சம் வெளிச்சப் பிடிமானம் இருந்தது, தடுமாறும் முதியவருக்கு வாக்கிங் ஸ்டிக் போல. நான் மெல்ல நடந்து சன்னலருகே வந்தேன். திறந்த சன்னலின் வழியே தெரு அறைக்குள் வந்து விட்டிருந்தது. அத்தனை வெறுச்சோடிய தெருவைப் பார்த்ததே இல்லை. பகற்பொழுதில் எந்நேரமும் புழக்கத்தில் இருக்கும் வீதி அது. இப்போது  துடைத்து விட்டதுபோல்  கிடந்தது. லேசாக குளிர்ந்தது. நான் முந்தானையால் போர்த்திக் கொண்டேன். மஞ்சள் விளக்கொளியில் தெரு மனதைக் கவர்ந்து விட்டது. சந்தடியற்ற அமைதியை அது சுவீகரித்துக் கொண்டிருந்ததை நான் ரசித்தேன். 

” ரெண்டு மணிக்கு இதென்ன பேயாட்டம்…….?”

ஃபோட்டோவில் இருந்த கணவர் சிரிக்கிறார். அவருக்கான குரலைத் தருவதும் என் மனசுதான்.

“எதையும் யோசிக்காம வந்து படு….” 

அவர் தான் சொல்கிறார். படுத்தாலும் உடனே உறக்கம் வரப்போவதில்லை. இப்படித்தான் அடிக்கடி நள்ளிரவில் உறக்கம் கலைகிறது. அதன்பிறகு புடவைக்குள் கால்களை ஒடுக்கி படுத்துக் கிடக்க வேண்டியதுதான். ஏதோ ஒரு பால்காரரின் ஹாரன் ஒலி மெலிதாக கேட்டுவிட்டால் போதும். மனம் துள்ளிவிடும். விடியல் அவ்வளவு அழகானது. அது எனக்குள் ஒரு பூவை மலர்த்தி விடுகிறது. அதற்காகவே விடியலுக்குக் காத்திருப்பேன். பல சமயம் இரவுகள் பாட்டியின் ஒன்பது கெஜம் புடவை போல நீளமானவை. எரிச்சல் ஊட்டுபவை. அயற்சியைத் தருபவை. தூக்கம் வராத இரவுகளைப் பாம்பு விழுங்கட்டும் என்று சபிக்கிறேன். அனேக இரவுகள் இப்படி சபித்துக் கொண்டே இருக்கிறேன்.

” உனக்குத் தூக்கம் வரலைங்கறதுக்காக இப்படி கோவப்படக்கூடாது” என்கிறார் கணவர். 

என்னோடு சேர்ந்து மனசும் தூங்கும். என்னோடு சேர்ந்து அதுவும் விழித்துக் கொள்ளும். கோதையும், விமலனும் பேசியதைக் கொண்டு போய் வேறு ஒன்றோடு முடிச்சு போட்டு புதுவிதமாய் எதையாவது சொல்லும். நான் தலையை உலுக்கி எண்ணத்தை திசை திருப்புவேன். இருவரும் சிறு பிள்ளைகளாக இருந்தபோது கணவர் வேலை விஷயமாக அடிக்கடி வெளியூர் சென்று விடுவார். அப்போது இரவுகள் பயத்தைத் தருபவையாக இருந்தன. கோதையை ஒரு பக்கமும் விமலனை இன்னொரு பக்கமும் கிடத்திவிட்டு நான் நடுவில் படுத்துக்கொள்வேன். அப்படி படுப்பதை மிகவும் பாதுகாப்பாக உணர்வேன். பிள்ளைகள்  ஆளுக்கொரு காலை மேலே போட்டுக் கொள்வர். அது இன்னும் பலம். 

பவளமல்லியின் மணத்தோடு பொழுது விடிந்திருந்தது. கலா வாசல் தெளிக்கும் சத்தம் கேட்டது. விமலனின் ஏற்பாடு….

” பனி ரொம்ப அதிகமா இருக்கு.  நீ  இந்த பனியில வாசல் தெளிக்க வேண்டாம்மா. ஆள் போட்டுக்கலாம்” என்று அவன் வந்திருந்தபோது கலாவை அதற்கு நியமித்து விட்டுப் போனான்.

 கலா எட்டு வீடுகளுக்கு வாசல் தெளிக்கிறாள். வீட்டுக்கு ஆயிரம் வீதம் எட்டாயிரம் சம்பளம்.

” கையில குடுக்க முடியாட்டி பரவாயில்ல. ஜிபே பண்ணிடுங்க” என்பாள்.

மிட்டாய் தட்டு, சீதை முந்தானை, அகல் விளக்கு தவிர செவ்வாய், வெள்ளிக்குப் புள்ளியில்லா கோலம். 

” வேற ஏதாவது மாத்தி போடேன்” என்றால் சிரித்துக் கொள்வாள். 

” நினைச்சிக்கிட்டே வருவேம்மா. இங்க வந்ததும் மறந்துடுது. “

ஜன்னலைப் பார்த்து சொல்லிவிட்டு வாசல் பெருக்க ஆயத்தமாவாள். ஐம்பது வயசுக்காரி. மறதி வராமல் என்ன செய்யும். மூக்குக் கண்ணாடியை சதா சர்வ காலமும் தேடிக்கொண்டே இருக்கும் எனக்கு எந்த வயதில் மறக்க தொடங்கியது என்று ஞாபகம் இல்லை. விரத நாட்களில் குழம்பில் உப்பைப் போட்டுவிட்டு, ‘ உப்பு போட்டாச்சு’ என்று சத்தமாக சொல்லி விடுவேன். 

‘ யாருக்காக இப்படி கத்துற?’

மனசு கேட்கும். 

‘உனக்காகதான். இல்லாட்டி சாமிகிட்ட வச்சு நீர் வெளாவறப்ப சந்தேகத்தைக் கெளப்புவியே….’

வெளியே செல்லும்போது வீட்டைப் பூட்டிவிட்டு,

‘  பூட்டியாச்சு’ சொல்லவும் விளக்குகளை அணைத்துவிட்டு 

‘ அணைச்சாச்சு’ சொல்லவும் தவறிவிட்டால் நான் தொலைந்தேன்.கடைசியாக ஒரு அஸ்திரமுள்ளது.

‘ கடவுளே நீதான் என் வீட்டைப் பார்த்துக்கணும்.’ 

இதை எய்திய பிறகு சற்றுநேரம் அமைதியாக இருக்க முடியும். ஆனாலும் கடவுளின் மீதும் சற்று நம்பிக்கைக் குறைவுதான். அவரும் கவனக்குறைவாக இருந்து விட்டால் என்ன செய்வது. நானே எனது நம்பிக்கைக்குரியவள். அவசரமாய் வீடடைந்த பிறகே மனம் சமாதானப்படும். 

இருள் விலகவில்லை. காலைக்கடன் முடித்து காபி அருந்தும் வரை இருள் இருக்கும். நான் சோபாவில் கால்களை மடித்து அமர்ந்துகொண்டு காபியை சர்சர்ரென்று ஆற்றுவேன். அந்நாளின் முதல் சத்தம் அது. 

வீட்டில் எல்லாமே உள்ளது. விமலனும், கோதையும் போட்டி போட்டுக் கொண்டு அவ்வபோது எதையாவது வாங்கித் தந்து கொண்டேயிருப்பார்கள். 

” மிக்ஸி ரொம்ப சத்தம் போடுது. வாங்கி நாளாச்சுல்ல……”

ஒருமுறை சொல்லிவிட்டேன். அடுத்த நாளே உள்ளூரிலிருந்த தோழி மூலம் மிக்ஸி வாங்கி தந்துவிட்டாள் கோதை. இப்போதெல்லாம் பெண்கள் சரிசமமாக செய்கிறார்கள். 

” ரிப்பேருக்கு கொடுக்கணும்னு இருந்தேன். அதுக்குள்ள புதுசு வாங்கி அனுப்பிட்ட.” 

எனக்கு அங்கலாய்ப்பாக இருந்தது.

 “அத தூக்கிப் போடும்மா. எனக்கு பத்து வயசா இருக்கும்போது வாங்கினது. இன்னும் அத வச்சிக்கிட்டு ஏன் போராடணும்.” கோதை முடித்து விட்டாள். இந்த காலத்துப் பிள்ளைகள் எதையும் எளிதில் கடந்து விடுகிறார்கள். நானானால் தேங்கி நிற்கிறேன்.

நாலு இட்லி, மிளகாய்ப் பொடியோடு காலை ஆகாரம் முடிந்து விட்டது. மதியத்துக்கு சமைக்க வேண்டும். அது ஒன்றும் பெரிய காரியமில்லை. என் ஒருத்திக்கு அடுப்பிலேற்றி, இறக்க என்ன பெரிதாய் நேரமாகி விடப் போகிறது…….மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு முக்கால் மணி நேரம். அவ்வளவுதான். 

மணி பத்தாகி இருந்தது. கொல்லை வாசலில் வெயில் பெரிய தங்கத்தாம்பாளம் போல விரிந்து கிடந்தது. நான் படிக்கட்டில் அமர்ந்தேன். மார்கழி வெயில் உறுத்தாத ரகம். உடலை இதமாக வருடிக் கொடுக்கும். ஈரக்காற்றின் தழுவல் வேறு. எவ்வளவு சுகமாக இருந்தாலும் பத்து நிமிடங்களுக்கு மேல் தாக்கப்பிடிக்க முடிந்ததில்லை.

‘  எந்திருச்சு உள்ள போ…’

விரட்டும் குரலுக்குப் பணியக் கூடாது என்று தோன்றினாலும் அது முடிந்ததேயில்லை. எப்போதுமே நான் தோற்பது சாதாரணமாகிவிட்டது.

நான் ஒரு காலை நீட்டி இன்னொரு காலை மடக்கி முழங்காலை இரு கைகளாலும் கோர்த்து தாங்கிக் கொண்டு அமர்ந்திருந்தேன். சிங்க்கில் பாத்திரங்கள் கிடந்தன. சிறு, சிறு பாத்திரங்கள்தான். கால் மணிநேர வேலை. மாலை அதே போல் இன்னொரு கால் மணிநேரம். வீடு பெருக்க அரை மணி நேரமாகும். வாஷிங்மெஷினில் துணி துவைத்து உலர்த்தி மடிக்க அரை மணிநேரம். 

” உள் வேலைக்கு ஆள் வச்சிக்கோம்மா……” என்கிறான் விமலன். 

வேலைகளை இன்னொருத்தியிடம் தாரை வார்த்து விட்டு மனதிடம் என்னைத் தின்னக் கொடுக்கவா…….. ஏதோ ஒன்றை செய்து கொண்டிருக்கும் போது மனம் சற்று  சும்மாயிருக்கிறது. அது முடிந்ததுமே, அப்புறம்……. என்று பக்கத்தில் வந்தமரும் தோழி போல ஆரம்பித்து விடுகிறது.

வெயில் ஏறிவிட்டது. இனி அங்கு அமர முடியாது. கைகள் ஊன்றி எழுந்தேன். கொல்லை சின்னதுதான். வீடு கட்டும் போது கொல்லைக்கு இடம் விட்டு கட்ட வேண்டும் என்ற என்னுடைய பிடிவாதமே வென்றது. ஆற அமர உட்கார்ந்து காபி குடிக்க கொல்லைப்படிக்கட்டுகள் இல்லாமல் வாழ்வதெப்படி. கோடை வெயிலுக்கு கதவை திறந்து வைத்து விட்டால் மாலை நேரம் வெள்ளமாய் காற்று வரும்.

” உன் பிடிவாதத்தால எல்லாத்தையும் சாதிச்சிக்கற…” என்பார் என் கணவர். பிடிவாதம் அவசியமானது. ஆனால் எல்லா நேரங்களிலுமா என்றால் தெரியவில்லை. 

” தனியா இருக்க வேண்டாம்மா. எங்க கூட வந்துடு” என்று பிள்ளைகள் வற்புறுத்தியபோது ஒற்றை தலையசைப்பு சரியா என்றால் தெளிவில்லை. ஆனால் அங்கே போய் என்ன செய்வது……வேர் இங்கே புதைந்து கிடக்கிறது. அதை அகழ்ந்து அங்கே மீண்டும் நட முடியுமா? அது செட்டாகுமா? 

எல்லாமே ஒத்துப் போக வேண்டும் என்பதில்லை. சில விஷயங்களைப் பொறுத்து போய்விடலாம் என்றாலும் எதை என்று யோசிக்கும்போது குழப்பமாக உள்ளது. அங்கு குளிர் அதிகம் என்கிறார்கள். மைனஸில் போகுமாம். இங்குள்ள குளிரையே என்னால் சமாளிக்க முடியவில்லை. உலர் சருமப்பிரச்சனையால் தவிக்கிறேன். முதுகு சொரிய தனியாக சீப்பு ஒன்று வைத்திருக்கிறேன். வெளியே செல்லும்போது வலுக்கட்டாயமாக கைகளை கட்டிக் கொள்வேன். கைகளில் பாம்புத்தோல் போல கோடுகள் ஓடுகின்றன. அரிப்பு வேறு…. யாரும் பார்த்து விட்டால் அவமானமாக இருக்கும்.

‘ உன்னால அங்கேயெல்லாம் இருக்க முடியாது’ என்கிறது மனம்.

” உனக்கு ரொம்ப பிடிவாதம்மா….” என்றாள் கோதை.

” அம்மாவை தனியா விட்டுட்டுப் போகாதேன்னு பார்க்கிறவங்க எல்லாரும் சொல்றாங்க…..”

விமலன் கெஞ்சிப் பார்த்து விட்டான். நான் அசைந்து கொடுக்கவில்லை. காரணம் ஏதும் சொல்லவில்லை. நிறைய காரணங்களை கையில் எடுத்துக் கொடுக்கிறது மனம். எதையும் சொல்ல முடியாது. டைனிங் டேபிளை ஒழுங்குபடுத்துகிற சாக்கில் அமைதியாக இருந்து விட்டேன். 

டிவி எந்நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும். ஒரு சத்தம்……. வீட்டின் எந்த மூலையில் இருந்தாலும் மிகத் தேவையாக உள்ளது. கூட்டாளி இருப்பது போன்ற உணர்வு. ஏதாவது பழைய படம் பார்ப்பதுண்டு. கருப்பு, வெள்ளை படங்கள் என்றால் கொள்ளை இஷ்டம். தட்டில் போட்டுக்கொண்டு வந்தமர்ந்து விடுவேன். சில சமயம் பார்த்த படங்களையே பார்த்துக் கொண்டிருப்பேன் பார்க்காத பாவனையில். மதிய தூக்கம் எப்போதும் உண்டு. அந்த நேரம் வந்ததும் கண்கள் தானாக செருகிக்கொள்ளும். டிவியை நிறுத்திவிட்டு சோபாவில் கால்களை நீட்டி விட்டுக் கொள்வேன். 

தெருமுனையில் ஒரு சின்னஞ்சிறிய    பிள்ளையார் கோவில் உள்ளது. வெள்ளிக்கிழமைகளில் சிறு தூக்கில் எண்ணெய், திரி, தீப்பெட்டியோடு  கோவிலுக்குப் போவேன். பிள்ளையாரோடு சேர்த்து நாலைந்து புது முகங்களைப் பார்க்கும் உணர்வு துணுக்குச் சுடர் போல உள்ளே ஒரு சந்தோஷத்தை  மினுக்க செய்யும். அதற்காக காலை எழுந்ததிலிருந்தே ஆயத்தமாவேன். அன்று தலைக்குளியல் கட்டாயம் உண்டு. தலைக்கும் சேர்த்து நீர் ஊற்றிக் கொண்டால் புது நிறம் கிடைத்து விட்டது போல தோன்றும். காய வைத்த கூந்தலை தளரப் பின்னிக்கொள்வேன். மாலை உடுத்தப் போகும் புடவையை காலையே பீரோவிலிருந்து தேர்ந்தெடுத்து வைத்துவிடுவேன். அன்று திருவிழா கொண்டாட்டம்தான். 

அக்கம், பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் வேலைக்குச் செல்பவர்கள். எந்நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டே இருப்பவர்கள். பார்த்தால் ஒற்றை புன்னகையை உதிர விட்டு பதிலுக்கு சிரிப்பதற்குள் போயே இருப்பார்கள்.  

” செல்ஃபோனை எப்பவும் பக்கத்துல வச்சிக்கம்மா. நாலு ரிங் போயி நீ எடுக்கலைன்னா சொரேர்ங்குது.” விமலன் ஒருமுறை சொன்னான்

” நீ தனியாதான் இருக்க. உன்னை யாரும் வந்து எட்டி பார்த்துட போறதில்ல. அதனால பாத்ரூம் போகும்போது கதவை தாழ்போட்டுக்காத. அப்புறம் ஒரு சாவியை பக்கத்து வீட்டுல குடுத்து வை……”

இப்படிப்பட்ட அறிவுரைகள் அலைபேசியை வைக்கும் தருணத்தில் வந்து விழும். காட்சிகள் மாறிவிட்டன. தலையாட்டி கேட்கும் நிலை வந்துவிட்டது. அது கூட தேவலாம் என்றிருக்கிறது. தாங்கிக் கொள்ள தோள்கள் இருப்பதில் பாதுகாப்பாக உணர முடிகிறது. சுய சமாதானத்திற்கு வலுக்கட்டாயமாக இவற்றையெல்லாம் காரணம் காட்ட முடிகிறது. 

” நீ சொன்னேன்னா உடனே ஓடி வந்துடுவேன் ” என்பாள் கோதை. அதற்காக சொல்லிவிட முடியுமா…… பெரிய பதவியில் இருப்பவள். இரண்டு பிள்ளைகளை கவனித்தாக வேண்டும். பொறுப்பான குடும்பத் தலைவி. விடுபடல் சாத்தியமாகுமா……

” பத்து நாள் வந்து தங்கிட்டுப் போயேன்” என்று சொல்லலாம். தட்டாமல் வருவாள். அதற்கு அவள் எத்தனை முன்னேற்பாடுகளை செய்தாக வேண்டும். போக வர எவ்வளவு செலவாகும்……. நினைக்கும்போதே மலைப்பாக உள்ளது. பிள்ளைகள் நம்மிலிருந்து எப்போது அன்னியப்பட்டு போனார்கள். யோசிக்காமல் எதையும் பேசிவிட முடிவதில்லையே. 

” நான் உன் புள்ளம்மா. ஏன் தயங்குற…..?” என்பான் விமலன்.

எது தடுக்கிறது…. எப்போதிருந்து தடுக்க ஆரம்பித்தது. கேள்விகளுக்குப் பஞ்சமேயில்லை.

விடுமுறை நாட்களில் வந்து தஞ்சமடைகின்ற பேரப்பிள்ளைகளோடு இழைந்து கிடக்கும்போது வீடு புதிதாய் மிளிர்கின்றது. இரண்டு பொன் சிறகுகள் வேறு. அவ்வளவு நாட்களும் மனம் அதை எங்கே பதுக்கி வைத்திருந்திருக்கும்? கண்டறிய முடிந்ததேயில்லை.

” ரொம்ப செல்லம் கொடுக்கிறம்மா நீ…..” என்று விமலன் கோபப்படும்போது அம்மா எங்கு இருந்தாள். பாட்டியல்லவா இருந்தாள். ஒருமுறை கோதை இல்லாத நேரத்தில் அவள் மகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டாள். நான் அலறிவிட்டேன். கோதை எத்தனையோ தடவை விழுந்திருக்கிறாள். நான் இவ்வளவு பதறியதில்லை.  இன்று ஒரு நொடியில் குலை நடுங்கிவிட்டது. 

‘ அவ அம்மாவுக்கு தெரிஞ்சா என்ன நினைப்பாளோ. கவனமா பார்த்துக்காம இருந்தது உன் தப்பு தான்…..’

மனதிற்கு ஆயிரம் நாவுகள். சும்மா இருப்பதேயில்லை. நான் சோபாவில் சரிந்தேன்..

வடை மோர்க்குழம்பு சாப்பிட்டது வயிறு கனத்தது. ஒருத்திக்காக ஐந்தே ஐந்து வடைகள் தட்டி ஒரு சேர் அளவு மோர்க்குழம்பு வைத்து உருளைக்கிழங்கு காரம் போட்டு வறுத்து ருசியாய் சாப்பிட்டு ஆசையை தணித்துக் கொண்டேன். என்றைக்காவது திடீரென்று வேகம் வரும். பிடித்த மாதிரி செய்து அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுவேன். அதன் பிறகு திண்டாடுவேன். 

‘உனக்கு நாக்கு நீளம். அளவா சாப்பிட தெரியாது’ என்றது மனசு.

நான் கண்களை மூடிக்கொண்டேன். உடனே சட்டென தோன்றி விட்டது. இதுவும் இல்லாவிட்டால் எப்படி வாழ்வது…….

இந்த மனசு கூடவே வரும் நிழல் போல, பின் உலாவும் துணைபோல தனித்திருப்பவளின் பெரும் ஆறுதல். அது வேண்டும்தான். கொஞ்ச காலத்திற்கு கொஞ்சம் வாழ்ந்தாக வேண்டுமே…… உயிர்ப்போடு நடமாட இந்த மனசு வேண்டும். நான் வலது கையை நெற்றியில் வைத்து உறங்க முயற்சித்தேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.