தாவிதின் திருப்பாடல்கள் அல்லது சங்கீதங்கள்

விவிலியத்தில் மூன்றில் ஒரு பங்கு கவிதைகள். பல விவிலிய புத்தகங்களிலும் கவிதைகள் இருந்தாலும் யோபு, சங்கீதங்கள்(திருப்பாடல்கள்), சாலமோனின் பாடல்கள், பழமொழிகள், சபை உரையாளர் (Ecclesiastes) , சலமோனின் ஞானம், சீராக்கின் ஞானம் ஆகியவை முழுமையாகவே கவிதை நூல்கள். இவற்றில் சாலமோனின் பாடல்கள் அல்லது இனிமைமிகு பாடல்கள் காதல் இரசம் கொண்டவை அவை பொது இலக்கியங்களில்  அதிகம் மேற்கோள் காட்டப்படுவதுண்டு. ‘நமக்குப் பார்க்காம் முந்திரித் தோப்புகள்’ எனும் எம். டி. வாசுதேவன் நாயரின் மலையாள திரைப்பட தலைப்பு இனிமைமிகு பாடல்களின் வரியாகும், அக்கதையின் நாயகனின் பெயர் சாலமன். அண்மையில் வெளிவந்த கவிஞர் சாம்ராஜ் எழுதிய  ‘கொடை மடம்’ நாவல் இனிமைமிகு பாடலின் ஒரு வரியில் துவங்குகிறது. ‘கிலயாதின் மலைச்சரிவில் இறங்கி வரும் வெள்ளாட்டு மந்தை போன்றது உன் கூந்தல்’. முன்பு ‘சங்கீதங்கள்’ என்றும் புதிய மொழிபெயர்ப்பில் அதிருப்பாடல்கள் என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள Psalms புத்தகம் யூத மற்றும் கிறித்துவ வழிபாட்டில் முக்கிய பங்குவகிக்கிறது.. 

பல காலகட்டங்களில் எழுதப்பட்ட பாடல்களின் தொகுப்பாக சங்கீதங்கள் புத்தகம் அமைந்துள்ளது. ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்ட150 பாடல்களைக் கொண்டது சங்கீதங்கள் புத்தகம். இப்பாடல்கள் யூதர்களின் சடங்குகளில் பாடப்பட்ட பாடல்கள் என்பதால் இவை நீண்ட காலங்களாக புழக்கத்தில் இருந்தன.

சுருக்கமான யூத வரலாறு

இப்பாடல்கள் எந்த காலகட்டத்தில் எழுதப்பட்டவை என்பது குறித்த தோராயமான அனுமானங்களே உள்ளன. யூத விவிலியத்தின் (பழைய ஏற்பாட்டின்) காலகட்டம் தொன்மக் காலம், இனத்தந்தையர்களின் காலம், முதலாம் திருத்தலக் காலம், இரண்டாம் திருத்தலக் காலம் என பிரிக்கப்படலாம். தொன்மக் காலம் என்பது படைப்புக் கதையில் துவங்கி ஆதாம் ஏவாள், காயின் ஆபேல், நோவாவின் பெட்டகம் மற்றும் பாபேல் கோபுரம் ஆகிய கதைகளை உள்ளடக்கியது. இதன் பின்னர் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகிய மூன்று யூத இனத்தந்தையரின் கதைகள் வருகின்றன. பின்னர் மோசே (மோயீசன் அல்லது மோசஸ்) இன்னொரு இனத்தந்தையாக வருகிறார். அடுத்து வருவது . நீதிபதிகள் எனப்படும் குழுத்தலைவர்களின் காலம். சாம்சன், கிதியன், ரெபெக்கா போன்ற பல நீதிபதிகள் அல்லது நீதியரசர்கள் இஸ்ரயேலின் தலைவர்களாகச் செயல்படுகின்றனர். அடுத்து சவுல் இஸ்ரயேலின் முதல் அரசராகிறார், பின்னர் தாவீதும் சாலமனும் அடுத்தடுத்து அரசர்களாகின்றனர். சாலமன் பொ.யு.மு 957ல் முதல் திருத்தலத்தைக் கட்டினார். இதிலிருந்து முதல் திருத்தலக் காலம் துவங்குகிறது.  சாலமனுக்குப் பின்ன்னர் இஸ்ரயேல் இரண்டாகப் பிரிந்து வடக்கே சமாரியாவைத் தலைநகராகக் கொண்ட இஸ்ரயேல் எனும் நாடாகவும் தெற்கே எருசலேமைத் தலைநகராகக் கொண்ட யூதா எனும் நாடாகவும் பிளவுபட்டது.  பொ.யு.மு 722ல் அசிரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றி அங்கிருந்த யூதர்களை சிதறடிக்கித்தனர். இஸ்ரயேலின் 12 இனக்குழுக்களில் 10 இனக்குழுக்கள் இப்படையெடுப்பிற்குப் பின் தொலைந்துபோனதாகக் கருதப்படுகின்றனர். பொ.யு.மு 586ல் பாபிலோனியர்களால் யூதா கைப்பற்றப்பட்டு திருத்தலம் இடிக்கப்பட்டது பொ.யு.மு 538ல் பெர்சிய பேரரசர் சைரஸ் யூதர்களை திருப்பி அனுப்பி கோயிலைக் கட்ட உதவியும் செய்கிறார். இந்த இரண்டாம் கோவில் பொ.யு 70ல் உரோமையர்களால் இடிக்கப்பட்டது.

இக்காலகட்டங்களில், குறிப்பாக பாபிலோனிய அடிமைத்தழை வரைக்குமான நிகழ்வுகளின் தாக்கங்களை  சங்கீதங்களில் காணலாம். ஆனால் இவை வரலாற்றைப் பாடுபவையாக அல்லாமல் வழிபாட்டுப் பாடல்களாகவே உள்ளன.  யூதர்கள் எகிப்திலிருந்து வெளியேறும்போதே வழிபாடும் சடங்குகளும் ஒருங்கிணைக்கப்பட்டு அவற்றிற்கான சட்டங்களும் உருவாக்கப்பட்டு முறைப்படுத்தப்பட்டன (லேவியர் மற்றும் இணைச்சட்டம் நூல்கள்). 

உள்ளடக்கத்தின்படி சங்கீதங்கள் பல்வேறு வகைப் பாடல்களாக பகுக்கப்படுகின்றன. புலம்பல்கள், புகழ்ச்சி, நன்றியறிதல், மனம்வருந்துதல், பகைமைபாராட்டல், வரலாற்றுப்பாடல்கள், மலையேற்றப்பாடல்கள் என்ற வகைகளில் அவை அடையாளப்படுத்தப்படுவதுண்டு. பிற வகையிலும் சங்கீதங்கள் பகுக்கப்படுவதுண்டு.. 

First Council of Nicaea

எழுதியவர்கள்

கிட்டத்தட்ட எல்லா சங்கீதங்களிலும் அப்பாடல் யாரால் எழுதப்பட்டது என்ற குறிப்பு உள்ளது. இது உண்மையில் அவரால் எழுதப்பட்டதா அல்லது பிறரால் எழுதப்பட்டு அவருக்கு சாட்டப்பட்டதா என்பது விவாதத்திற்குறியது. விவிலியத்தில் சில பகுதிகள் ஒரு குறிப்பிட்ட ஆசிரியரின் பெயரின் கீழ் எழுதப்பட்டாலும் அவை பிறரால், குறிப்பாக ஆசிரியரைப் பின்பற்றியவர்களால் எழுதப்பட்டவையாகவும் உள்ளன. 

சங்கீதங்களை எழுதியவர்களில் முதன்மையானவர் தாவீது அரசர். யூதர்களின் புகழ்பெற்ற அரசரான தாவீது இசை ஞானமும் பாடற்திறனும் கொண்டவராக விவிலியத்தில் குறிப்பிடப்படுகிறார். முதல் பகுதியில் இடம்பெற்றுள்ள சங்கீதங்கள் பலவும் தாவீது எழுதியதாக கருதப்படுபவை. ஆசாப் எனும் அவைப்பாடகர் சில பாடல்களை எழுதியுள்ளார்.  கோராகின் மகன்கள் அல்லது கோராகியர்கள் சில பாடல்களை எழுதியுள்ளனர். இவர்களின் தந்தை கோராக் மோயீசனுக்கு (மோசஸ்/மோசே) எதிராக கலகம் செய்து கடவுளால் தண்டிக்கப்பட்டவர்கள், ஆனால் இவரது பிள்ளைகளைக் கடவுள் தண்டனையிலிருந்து தப்புவித்தார் என்று விவிலியம் குறிப்பிடுகின்றது. எசக்காயா எனும் யூத நாட்டு அரசர் ஏழு பாடல்களை எழுதியுள்ளார்.. இவர் காலத்தில் யூத கலாச்சாரம் மறுமலர்ச்சியை அடைந்தது, குறிப்பாக யூத விவிலியத்தின் பல பகுதிகள் எசக்காயாவின் காலத்தில் தொகுக்கப்பட்டன. பல நூல்கள் முழு வடிவம் பெற்றவைதும் இவர் காலத்தில்தான். ஈதன்(ஏத்தான்) எனும் தாவீதின் அவைஞானியின் ஒரு பாடல் இடம்பெற்றுள்ளது (திபா 89) , இதைப்போல ஏமான் என்பவருக்கும் ஒரே பாடல்தான் உள்ளது (திபா 88), இவர் யார் என்பதில் தெளிவில்லை, யூகங்களே உள்ளன. சாலமன் அரசருக்கு ஒரு பாடலும் (127), மோயீசனுக்கு ஒரு பாடலும் (90) உள்ளன. சில பாடல்களின் ஆசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை.

பண்பாட்டு ஊடாட்டங்கள்

விவிலிய எழுத்தாளர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தின், அப்பகுதிகளின் சமகாலப் பண்பாடுகளின் ஊடாட்டங்கள் வழியே தங்கள் எழுத்துக்களை உருவாக்கியிருப்பது இலக்கிய ஒப்பீடுகளில் தெரிய வருகிறது. வளம்பொருந்திய பிறை (வளப்பிறை!) வடிவ பகுதி என்றும் நாகரிகத்தின் தொட்டில் எனவும் அறியப்படுகிற மெசப்படோமிய பகுதிகளில் பல பண்பாடுகள் துவங்கி வளர்ந்தன. சுமேரிய வெட்டெழுத்து வெகுவாக பயன்பாட்டில் வந்தது. மதம் அல்லது மதங்கள் பலவும் பெருவடிவம் பெற்றன. சிலருக்கேனும் முறையான கல்வி இருந்தது. இன்று வாசிக்கப்படும் இசைக்கருவிகளில் பெரும்பாலானவை இப்பகுதியில் (அதிகம் எகிப்து) கண்டுபிடிக்கப்பட்டவை. பல விலங்குகளும் தாவரங்களும் வேளாண் பயன்பாட்டில் கொண்டுவரப்பட்டன. உலகின் முதல் காவியமான மெசபடோமியர்களின் கில்கமேஷ், பாபிலோனிய படைப்புத் தொன்மமான எனுமா எலிஸ் ஆகியவை இப்பண்பாடுகளின் மத்தியில் உருவானவை. அவற்றின் தாக்கம் விவிலியத்திலும் உள்ளன என்று பல ஆய்வார்களும் குறிப்பிடுகின்றனர். இவற்றுடன் பல உதிரி கவிதைகளும், வழிபாட்டுப் பாடல்களும் இப்பண்பாடுகளில் உருவாகி வந்தன. இவற்றையும் விவிலிய எழுத்துடன் ஒப்பிட முடியும். உதாரணமாகக் கீழ்க்காணப்படும் எகிப்திய சூரியக் கடவுள் வாழ்த்துப்பாடலைச் சொல்லலாம்.

“அடி வானின் உதயத்தில்அழகுக் கதிர் பரப்பி நின்றாய்.
உயிரோட்ட ஒளி வட்டமே வாழ்வின் அகரமே
கீழ்வானில் நீ எழுந்தபோது உனது ஒளிக் கரத்தால்
இவ்வுலகை அருள்பொழிவு செய்தாய்.
மேல்வானில் நீ துயின்றபோதோ,
இவ்வுலகம் இருள்போர்வையைபோர்த்திக் கொண்டது.
இவ்வுலகில் மௌனம் ஆட்சி புரிகின்றது.
படைத்தவனுக்கோ அதுஅடிவானில் அயர்ந்துள்ளது.
உன்அடிவானத் தோற்றத்திலே இவ்வுலகு ஒளி (உயிர்) பெற்றது.
ஒளிப் பிழம்பாழ் பகலில் ஒளிர்பவனேஉன் ஒளி கண்டு மனிதன் விழித்தெழுகின்றான்.
உன் புதுப்பிறப்பால் அவன் கரங்கள்உனை வழிபட இணைகின்றன.
உன்னால் உயிர்பெற்று ஒளிபெற்றஇவ்வுலகம் பணி செய்யச் செல்கிறது.
விலங்கினத்திற்குப் பசி அடங்கியதால்நிறைகின்றது மனதில் நிறைவுணர்வு.
செடி கொடிகள் பசுமை சிரிப்பை உதிர்க்கின்றன.
புல்லினங்களின் பசுமையான இராகங்கள்உம்மைப் புகழ்ந்தேத்த எழுகின்றன.
உம்மை வழிபடச் சிறகு விரித்துப் பறக்கின்றன.மாந்தரை இவ்வுலகில் படைத்தீர்.
இவ்விரண்டையும் உமக்காய்ப் படைத்தீர்.
அனைத்தையும் ஆள்கின்றீர்.எழுந்தருளும் ஆண்டவா!
என் நெஞ்சத்தில் வீற்றிருக்கும் நாயகா.’

சங்கீதம் 114 இப்பாடலுக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. பல உவமைகளும், பண்பாட்டுக் குறிப்புகளும் யூதர்களின் சமகாலப் பண்பாடுகளின் எழுத்துக்களுடன் ஒத்துப்போகின்றன. இருப்பினும் யூதர்கள் தங்களுக்கென்று உருவாக்கிய ஓர் இறை, இறைவன் இயற்கைக்கு அப்பாற்பட்டவன், ஆணும் பெண்ணும் கடவுளின் சாயலில் படைக்கப்பட்டவர்கள் போன்ற பல தனித்துவமான இறையியல் அம்சங்கள் விவிலியக் கவிதைகளில் காணப்படுகின்றன.

“The Holy Bible (1950),” by Doug Keyes © The artist. Courtesy Klompching Gallery, Brooklyn, New York

கவிதை நயம்

‘உருவகம் என்பது உண்மையை உணர்ச் செய்யும் பொய்’ என்பது பிக்காசோவின் சொல். பழங்காலக் கவிதைகள் என்ற முறையில் சங்கீதங்களில் பல எளிய, அடிப்படையான, இயற்கை சார்ந்த உருவகங்களும் படிமங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. முதல் பாடலின் முதல் இரு வரிகள் இவ்வாறு உள்ளன.

1 நற்பேறு பெற்றவர் யார்? – அவர்
பொல்லாரின் சொல்லின்படி நடவாதவர்;
பாவிகளின் தீயவழி நில்லாதவர்;
இகழ்வாரின் குழுவினில் அமராதவர்;

2 ஆனால், அவர் ஆண்டவரின்
திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்;
அவரது சட்டத்தைப்பற்றி
இரவும் பகலும் சிந்திப்பவர்;

முதல்வரியில் ‘தீய+வழி’ என்பது பூமியில் உள்ள ஒரு பாதையோ வழியோ அல்ல. அது ஒரு உருவகம். இகழ்வாரின் குழு என்ற ஒன்று ஒருங்கிணைக்கப்படவில்லை மாறாக அது ஒரு கற்பனையான கூட்டம். இரண்டாம் வரியில் ‘இரவும் பகலும்’ என்பது ‘எப்போதும்’ என்ற பொருளில் வருவதையும் காணலாம். இவை அடிப்படையான, மொழியிலேயே வார்த்தைகளாக உருவாகிவரும் உருவகங்கள். எல்லா மொழிகளிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும் வார்த்தைகள் பலவும் இயற்கையில் நிகழ்பவற்றைக் குறிக்கும் சொற்களைக் கொண்டு சுட்டப்படுவதைக் காணலாம். உள்ளம் கொதிக்கிறது, நெஞ்சம் நிறைந்தது போன்றவை இயற்பியல் ரீதியானவை அல்ல என்பதால் அவையும் உருவகங்களே. 

இதே பாடலில் கீழ்வரும் உவமைகளும் அமைந்துள்ளன.

3 (நல்லோர்) நீரோடையோரம் நடப்பட்ட
மரம் போல் இருப்பார்;
பருவகாலத்தில் கனிதந்து,
என்றும் பசுமையாய் இருக்கும்
அம்மரத்திற்கு ஒப்பாவார்;
தாம் செய்வதனைத்திலும்
வெற்றி .பெறுவார்.

4 ஆனால், பொல்லார் அப்படி இல்லை;
அவர்கள் காற்று அடித்துச் செல்லும்
பதரைப்போல் ஆவர்.

எளிமையான இயற்கை சார்ந்த உவமைகளாக கனிதரும் மரம் மற்றும் பதர்கள் அமைந்துள்ளன. இவ்விரு உவமைகளும் பின்னர் இயேசுவால் பயன்படுத்தப்பட்டவை. புதிய ஏற்பாட்டில் சங்கீதங்களின் உவமைகளும், வரிகளும் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற ‘ஏலி ஏலி லாமா சபக்தானி’ சங்கீதம் 22ன் முதல் வரியாகும்.

மேலுள்ள வரிகளில் விவிலியத்தின் மற்றொரு அழகியல் கூறான Parallelism  காணப்படுகிறது. இதை தமிழில் இணைவரிகள் என மொழிபெயர்க்கலாம். இவை நேரிணையாக இருக்கவேண்டியதில்லை எதிரிணையாகவும் இருக்கலாம். அதாவது மேலுள்ள கவிதையில் நல்லவர், பொல்லார் எனும் இரு கருத்துக்கள் எதிரிணையான வரிகளில் சொல்லப்படுகின்றன. நேரிணையான வரிகள் ஒரு கூற்றை அழுந்தச் சொல்லப் பயன்படுத்தப்படுகின்றன.

ஆண்டவரே, என்மீது
சினங்கொண்டு
என்னைக் கண்டியாதேயும்;
என் மீது சீற்றம்கொண்டு
என்னைத் தண்டியாதேயும்;

சங்கீதங்களில் எதிரிகள் அல்லது பிறன் குறித்த அச்சமும், அவநம்பிக்கையும் பல பாடல்களில் வெளிப்படுகின்றன. பழைய இனக்குழுக்களின் இயல்பான அச்சம் இது. இந்திய துவக்ககால வேதங்களிலும் பிறன் குறித்த அச்சம் வெளிப்படுகிறது. இவற்றில் எதிரிகள் வேடர்களைப்போலவும் இஸ்ரயேல் அல்லது அப்பாடலின் நாயகன் வேட்டையாடப்படும் எளியவரைப்போலவும் விவரிக்கப்படுகின்றனர். மறைந்திருந்து தாக்குதல், அம்பு எய்து வீழ்த்துதல், வலை விரித்தல், குழி வெட்டுதல் போன்ற வேட்டைச் செயல்கள் எதிரிகளின் செயல்களாக வர்ணிக்கப்படுகின்றன. சிங்கம் தாக்குவதைப்போல எதிரிகள் தங்களைத் தாக்குகின்றனர் என்பதுவும் ஒரு பரவலான உவமையாக வருகின்றது. சிங்கம் ஒரு கொடிய தாக்கும் விலங்காக பல பாடல்களில் குறிப்பிடப்படுகிறது. எதிரிகளை சபிப்பது, கடவுள் அவர்களை நீதித்தீர்ப்பிட்டு  தண்டிக்க வேண்டுவது போன்ற வரிகள் பலவும் இப்பாடல்களில் காணக்கிடைக்கின்றன. பல வரிகள் அக்காலத்தின் வன்முறையான போர்க்குணங்களையும் சுட்டிக்காட்டுபவையாகவும் உள்ளன. 

8 பாழாக்கும் நகர் பாபிலோனே!
நீ எங்களுக்குச் செய்தவற்றை
உனக்கே திருப்பிச் செய்வோர்
பேறுபெற்றோர்!

9 உன் குழந்தைகளைப் பிடித்து,
பாறையின்மேல் மோதி அடிப்போர்
பேறுபெற்றோர்!

கடவுள் குறித்த பல உருவகங்களும் உள்ளன அவை நான்கு பொதுவான வகைப்பாடுகளில் உள்ளன. 1. கடவுள் என் அடைக்கலம் 2. கடவுள் என் மேய்ப்பர். 3. கடவுள் என் மீட்பர் 4. கடவுள் என் அரசர் என்பவை. கடவுள் என் அடைக்கலம் என்பதில் அவரே என் கற்பாறை, என் அரண் போன்ற உருவகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. கற்பாறைகள் பாதுகாக்கும் மறைவிடங்களாகவும், நிலையானவையாகவும் கருதப்பட்டன. பறவை தன் சிறகுகளின் கீழ் தன் குஞ்சுகளைக் காப்பதுபோல போன்ற உவமைகளும் உள்ளன. துவக்க காலத்தில் மேய்ப்பர்களாக இருந்த யூதர்களுக்கு ஆடு, மேய்ப்பன் என்பவை மிக அணுக்கமான உவமைகளாக இருந்தன. இன்றளவும் இவ்வுவமைகள் புகழ்பெற்றுள்ளன. தாவீதின் பாடலான சங்கீதம் 23 இவ்வுவமைக்குப் புகழ்பெற்றதாகும். இதன் இரண்டாம் பகுதியில் கடவுள் அரசருக்கு முடி சூட்டும் அரசராக உருவகப்படுத்தப்படுகிறார். 

1 ஆண்டவரே என் ஆயர்;
எனக்கேதும் குறையில்லை.

2பசும்புல் வெளிமீது எனை அவர்
இளைப்பாறச் செய்வார்;
அமைதியான நீர்நிலைகளுக்கு
எனை அழைத்துச் செல்வார்.

3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;
தம் பெயர்க்கேற்ப
எனை நீதிவழி நடத்திடுவார்;

4 மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்
நான் நடக்க நேர்ந்தாலும்,
நீர் என்னோடு இருப்பதால்
எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;
உம் கோலும் நெடுங்கழியும்
என்னைத் தேற்றும்.

5 என்னுடைய எதிரிகளின் கண் முன்னே
எனக்கொரு விருந்தினை
ஏற்பாடு செய்கின்றீர்;
என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;
எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

6 உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்
உம் அருள் நலமும் பேரன்பும்
என்னைப் புடைசூழ்ந்து வரும்;
நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.

தாவீது ஆடு மேய்ப்பவரும் அரசருமாய் இருந்ததாக விவிலியம் கூறுவதை இத்துடன் இணைத்துப் பார்க்கலாம். கடவுளைத் தந்தை என உருவகிக்கும் பாடல்வரிகளும் சில உள்ளன. (திபா 80:15 உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்!) கடவுள் தந்தையானவர் என்பது புதிய ஏற்பாட்டிலேயே அதிக துல்லியமும் விரிவும் பெற்றது.

செயற்கைப் பொருட்களாக வில், அம்பு, வாள்கள், கண்ணிகள் போன்ற ஆயுதங்களும் மட்பானை போன்ற உருவகங்களும் வருகின்றன. தங்க இழைகள் பொறித்த ஆடை போன்ற குறிப்புகளும் காணப்படுகின்றன. விவிலியத்தின் மற்றொரு பகுதியில் தங்க இழை செய்யப்படும் வழிமுறையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆடுகளில் செம்மறி ஆடுகளும் வெள்ளாடுகளும் உவமைகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. வெள்ளாடுகள் என்பவை வெள்ளை நிற ஆடுகள் அல்ல மாறாக பல வண்ணங்களை உடைய Goat ஆகும். கறுப்பு மற்றும் செம்பட்டை வண்ணங்களிலும் இவை உள்ளன என்பதால் முதலில் குறிப்பிடப்பட்ட சாலமன் பாடலின் கூந்தல் உவமைக்கும் இது பொருத்தமாய் அமையும். காளைகள், மேச்சல் விலங்குகள், காடெருமை, காட்டுக் கழுதைகள், எருமைகள் மற்றும் மான்கள் குறிப்பிடப்படுகின்றன (‘கலைமான்கள் நீரோடையத் தேடுவதைப்போல என் மனம் இறைவனை நாடுகிறது.’ ) காட்டுப்பன்றிகள், சிங்கம், மற்ரும் முயல்களும் உவமைகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன.

பல வகைப் பூச்சிகளும் நல்ல தேனீக்களும், ‘கெட்ட’ தேனீக்களும் உவமைகளாக வருகின்றன. தவளைகள், வெட்டுக்கிளிகள், விஷப்பாம்புகள் ஆகியவையும் உவமைகளாக உள்ளன. பலவகைப் பறவைகளும் பருந்து, கழுகு போன்ற வேட்டைப்பறவைகளும் உவமைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன்.

எண்பதாவது திருப்பாடலின் இரண்டாம் பகுதி இஸ்ரயேலை திராட்சைக் கொடியாக, ஒரு படிமமாகச் சொல்கிறது.

8 எகிப்தினின்று திராட்சைக்செடி
ஒன்றைக் கொண்டுவந்தீர்;
வேற்றினத்தாரை விரட்டிவிட்டு
அதனை நட்டு வைத்தீர்.

9 அதற்கென நிலத்தை
ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்;
அது ஆழ வேரூன்றி
நாட்டை நிரப்பியது.

10 அதன் நிழல் மலைகளையும்
அதன் கிளைகள்
வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.

11 அதன் கொடிகள் கடல்வரையும்*
அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின.

12 பின்னர், நீர் ஏன்
அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?
அவ்வழிச் செல்வோர் அனைவரும்
அதன் பழத்தைப் பறிக்கின்றனரே!

13 காட்டுப் பன்றிகள்
அதனை அழிக்கின்றன;
வயல்வெளி உயிரினங்கள்
அதனை மேய்கின்றன.

14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்!
விண்ணுலகினின்று
கண்ணோக்கிப் பாரும்;
இந்த திராட்சைக் கொடிமீது
பரிவு காட்டும்!

15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,
உமக்கென நீர் வளர்த்த மகவைக்
காத்தருளும்!

முன்பு குறிப்பிட்ட ‘ஆண்டவர் என் ஆயன்’ (திபா 23) பாடலில் யூத கவிதையழகின் மற்றொரு அணி வெளிப்படுகிறது. அதை ஆங்கிலத்தில் கையாசம் (Chiasm) என்கின்றனர். கிரேக்கத்தில் X எனும் எழுத்தின் உச்சரிப்பை ஒட்டி இவ்வார்த்தை அமைந்துள்ளது. இதில் முதல் வரியும் கடைசி வரியும் ஒப்பிடும் வகையில் அமைந்துள்ளன, அடுத்தது இரண்டாம் வரியும் கடைசிக்கு முந்தைய வரியும் ஒப்பிடும் வகையில் அமைந்துள்ளன. இப்படிச் சென்று நடுவில் ஒரு வரி பொதுவாக இவற்றின் மையக் கருத்தாக அமைந்திருக்கும். இப்பாடலில் முதல் வரியும் கடைசி வரியும் கடவுளிடம் தான் பாதுகாப்பாகவும் செழிப்பாகவும் உணர்வதைக் காட்டுகிறது. இரண்டும் ஐந்தும் உண்பது குடிப்பது குறித்த வரிகள். மூன்றாம் வரியும் நான்காம் வரியின் இறுதிப்பகுதியும் ஆண்டவரின் ஆட்சியின் நீதியைக் குறித்தவை. நான்காம் வரி மைய வரியாக அமைந்துள்ளது. புதிய ஏற்பாட்டில் மத்தேயுவின் புத்தகம் முழுவதும் இவ்வடிவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

மற்றொரு கவிதை அழகியலான எழுத்து வரிசையில் துவங்கும் வரிகளில் எழுதும் பாணியும் இப்பாடல்களில் உள்ளன. தமிழில் வரிசையாக அ, ஆ, இ, ஈ எனும் எழுத்துக்களில் துவங்கும் வரிகளைக்கொண்டு எழுதப்படும் கவிதகளைப்போல எபிரேய எழுத்து வரிசையில் இவை எழுதப்பட்டுள்ளன. ஆனால் மொழிபெயர்ப்புகளில் இவை அப்படி வெளிப்படுவதில்லை. 

பாடப்படும் விதம்

இப்பாடல்கள் எப்படி பாடப்படவேண்டும் என்பது பல பாடல்களில் குறிப்பாக தரப்பட்டுள்ளது. ஆனால் அந்த இராகங்கள் அல்லது பாடும் முறைகள் கிறித்துவுக்கு முன்பே வழக்கொழிந்து போய்விட்டன. சில பாடல்கள் கேள்வி, பதில் என்கிற வகையில் அமைந்துள்ளன. இவையும் பிற பாடல்களும் ஒருகுழு அல்லது ஒரு பாடகர் ஒரு வரியைப் பாட பிறர் அடுத்த பகுதியைப் பாடுவதாக அமைந்திருக்கலாம் என்று கருதுகின்றனர். குறிப்பாக மலையேற்றப்பாடல்கள் எருசலெம் கோவில் இருக்கும் மலைப்பகுதியில் திருப்பயணிகள் ஏறுகையில் இப்படி பதிலுக்குப்பதில் பாடியபடி ஏறியிருப்பார்கள் எனும் அனுமானம் உண்டு.

சில பாடல்களில் வரும் இசைக்குறிப்புக்கள் இவ்வாறு உள்ளன

திபா 22  (பாடகர் தலைவர்க்கு: ‘காலைப் பெண்மான்’ என்ற மெட்டு; தாவீதின் புகழ்ப்பா)

திபா  80 (பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா)

திபா 30 (புகழ்ப்பா; திருக்கோவில் அர்ப்பணப்பா; தாவீதுக்கு உரியது)

திபா 34 (தாவீதுக்கு உரியது; அவர் அபிமெலக்கின் முன் பித்துப் பிடித்தவர் போலத் தம்மைக் காட்டியபோது அவன் அவரைத்துரத்திவிட, அவர் வெளியேறினார்; அப்போது அவர் பாடியது)

பல பாடல்களுக்கு இடையே ‘சேலா’ எனும் குறிப்பும் வருகிறது.இதன் உண்மையான பயன்பாடு தெரியவில்லை என்றாலும் இலக்கிய ஆய்வின்படி சேலா பாடலின் வரிகளில் வரும் மாறுபாடு ஒன்றைக் குறிப்பதாக வருகிறது என்கின்றனர். பேசுபொருள் அல்லது பேசுபவர் மாறும்போது சேலா குறீப்பிடப்படுகிறது

முக்கியத்துவம்

சங்கீதங்கள் யூத வழிபாட்டிலும், கிறித்துவ வழிபாட்டிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல்வேறு கொண்டாட்டங்கள் அல்லது சடங்குகளின்போது குறிப்பிட்ட பாடல்கள் பாடப்படும்படி மரபுகள் உருவாகியுள்ளன. கத்தோலிக்க வழிபாட்டில் எல்லா திருப்பலிகளிலும் சங்கீதம் ஒன்றை பதிலுரைப்பாடலாக வாசிக்கும்படி, அல்லது பாடும்படி அமைக்கப்பட்டுள்ளது பலநேரங்களில் இவற்றிற்குப் பதில் வேறு கோவில் பாடல்கள் (தியானப்பாடல்) பாடப்படும்.  

குர் ஆன் தாவூதுக்குக் (தாவீது/டேவிட்) கடவுளால் வெளிப்படுத்தப்பட்ட நூலாக சபூர் எனும் நூலைக் குறிப்பிடுகிறது இது சங்கீதங்கள் புததகம் என்று நம்பப்படுகிறது. பல இஸ்லாமிய அறிஞர்கள் திருப்பாடல்கள் புத்தகத்தின்மீது மதிப்பு கொண்டுள்ளனர் ஆயினும் அது இஸ்லாமிய புத்தகமாக வாசிக்கப்படுவதில்லை. 

அகுஸ்தினார் (அகஸ்டின் – 4ம் நூற்றாண்டு) போன்ற இறையியலாளர்கள் சங்கீதங்களை இறையியல் வாதங்களுக்காகவும் பயன்படுத்தியுள்ளனர். புதிய ஏற்பாட்டில் சங்கீதங்கள் பலமுறை இயேசுவால் மேற்கோள் காட்டப்படுகின்றன. அதேபோல சங்கீதங்கள் சில வரலாற்று நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றன உதாரணமாய் யூதர்கள் பாபிலோனுக்கு அடிமைகளாய் கொண்டுசெல்லப்பட்டபோது அவர்களின் துயரத்தைச் சுட்டிக்காட்டும் ‘பாபிலோனின் ஆறுகளருகே அமர்ந்து, நாங்கள் சீயோனை நினைத்து அழுதோம்.’ (திபா 137). இப்பாடலின் இசைவடிவம் ‘By the rivers of babylon’ எனும் போனி’எம் குழுவினரின் பாடலாகும். திருப்பாடல்கள் துவக்ககால ஆங்கில இலக்கியத்தில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. 

இவற்றை தமிழ் சங்கப் பாடல்களுடன் ஒப்பிடுகையில் கவித்துவம் குறைவானதாகவே உள்ளன. இவை வழிபாட்டுப்பாடல்களாய் இருப்பதாலும், காலத்தல் சில நூற்றாண்டுகள் முந்தையவை என்பதாலும் இவ்வாறு இருக்கலாம்.  சங்கப்பாடல்களின் திணைவகைகளும் அவை பயன்படுத்தப்படும் விதமும் மிக ஒருங்கிணைந்த நேர்த்தியைக் காட்டுகிறது. செய்யுள் வடிவத்திலும் சங்கப்பாடல்களில் பல பாவகைகள் உள்ளன. இந்திய, தமிழ் நிலப்பரப்பின் வேற்றுமைகளும் கலாச்சார வேறுபாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கலாம். மேலும் வளமான பிறை நிலம் என அழைக்கப்பட்ட பகுதியில் துவங்கிய நாகரிகங்கள் பல போர்களாலும் ஆக்கிரமிப்புகளாலும் பிற காரணங்களினாலும் வரலாற்றில் பின்னடைவை சந்தித்தன, குறிப்பாக யூதர்கள் பொ.யு.மு 586 முதல் பிற நாட்டவரின் ஆட்சியின்கீழ் வாழ்ந்த இனமாக மாறினர்.

சங்கீதங்கள் மிக எளிமையானவையாகத் தோன்றினாலும் யூத, கிறித்துவ இறையியலின் பின்னணியில் மிக ஆழமான அர்த்தங்களைத் தரக்கூடியவையும், வழிபாடும், மன்றாட்டும், மனந்திரும்புதலும் நிறைந்தவையாகவும் உள்ளன. குறிப்பாக கைவிடப்பட்ட மனிதனின் குரலாகவும், எளியவர்களின் ஏக்கங்களாகவும் வரும் வரிகள் என்றென்றும் ஆறுதல் தருபவை.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.