
Seated Sphinx Pink Marble, 2021
‘மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத் தாம நிரை தாழ்ந்த பந்தற்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம்’ பற்றி வாழ்ந்த வாழ்க்கை எத்தனைக் கீழ் நிலையில் சியாமளாவை வைத்துவிட்டது!
நகரின் மிகப் பெரிய மண்டபம். வண்ண விளக்குகள், ஜிகினாத் தோரணங்கள், வெள்ளைச் சட்டை அணிந்த பார்வையாளர்கள் இருக்கைகள், அதிலே மணமக்களைக் காட்டிலும் அதீத ஒப்பனையுடன் பார்வையாளர்கள், வரவேற்பிற்கெனத் தனியாக அமைக்கப்பட்ட மேடையில் தேவபுரி என மாறும் காட்சிகள், சீரொளியின் (Laser) துணை கொண்டு அந்த மேடையில் நடனமாடிச் செல்லும் தேவ நடன மாதுக்கள், நல்முத்துக்கள் பதித்த மேற்சட்டையுடனும், வெள்ளி ஜரிகை நூலால் பூக்கோலங்கள் வரையப்பட்ட செவ்வண்ண கீழாடையுடனும் சரவணன், இரத்தினங்கள் பொதிந்த தங்க மேலாடையும், கற்கள் இழைத்த மயில் கழுத்து கீழாடையும், சுமக்க முடியாத நகைகளுமாக சியாமளா…. பார்த்த விழிகளில் கண்ட வியப்பும், பொறாமையும் அவளுக்கு இன்னமும் நினைவிலிருக்கிறது.
‘சியாமளா சுப்ரமண்யத்திலிருந்து, சியாமளா சரவணனாகி விட்டாய். எஸ். எஸ்சிலிருந்து எஸ். எஸ்’ என்று நாத்தனார் உமா சிரித்த போது அவளுக்கு உகப்பாக இருக்கவில்லை.
வருகைப் பதிவேட்டில், அவளை முதன் முறையாக சியாமளா சுப்ரமண்யன் என அழைத்த போது அவள் அசையாமல் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் பாமா அவளை இடித்த போது எழுந்து நின்றாள். ‘எதை மறந்தாய், உன் பெயரையா, அப்பாவின் பெயரையா, இல்லை, காது கேட்காதா உனக்கு?’ என்று ஆசிரியர் கேட்ட போது, அவள் வகுப்பே சிரித்தது. அந்த அலை ஓயும் வரை காத்திருந்த அவள், ‘என் பெயர் சியாமளா; என்னை அப்படி அழைப்பதுதான் பிடிக்கும்’ என்றாள். பின்னர் தலைமையாசிரியை அவளைக் கண்டித்ததும், அம்மா தலையிலடித்துக் கொண்டதும், அப்பா மழுப்பி, மழுப்பி பதில் சொல்லி தன்னை அதே பள்ளியில் தொடர வைத்ததும், அது கல்லூரிச் சான்றிதழ் வரை ‘இன்னார் மகள் நீ’ என்று ஒட்டுப்பசையாக ஒவ்வாமை தந்ததும், நாத்தனார் உமா இப்போது கணவன் பெயருடன் இணைத்துச் சொல்லும்போது, அவள் சொன்ன பதில் நிழலாடுகிறது. “உமா, நான் சியாமளா”
‘என்னது, உமாவா? அக்கா என்று கூப்பிடு. என்ன மட்டு மரியாதையில்லாமல்? நீயா எனக்குப் பேரிட்டவள்?’ என்று அவள் பொரிந்து தள்ளவும் இவள் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நழுவினாள்.
“ஆமாம், தனக்கேன் இப்படி ஒட்டும் பெயர்கள் பிடிப்பதில்லை? இதில் என்ன நஷ்டம் வந்துவிட்டது அல்லது வந்துவிடப் போகிறது? சரவணன் எப்படியோ, அப்பா குறை சொல்ல முடியாதவர். அப்படியிருந்தும் ஏன் எனக்கு பெயரிணைப்பு பிடிக்கவில்லை? அந்த அளவிற்கா என் சுயம் முற்றியிருக்கிறது? பெயரில் தான் முற்றிலுமாக என்னை அறிகிறேனா? எனக்கு வேறு பெயர் வைத்திருந்தாலும் இப்படித்தான் நினைப்பேனா? ஆனானப்பட்ட அம்பாளையே, காளிதாசன் ‘மாதங்க தனயே’ என்றுதானே சியாமளா தண்டகத்தில் சொல்கிறான்? அந்த அன்னையை விட நான் உசத்தியா? ஆனால், என்னை சியாமளா என்று அழைத்தால் மட்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது. கொடுக்காக வரும் பெயர் என்னை மறைமுகமாகச் சீண்டுகிறது. ஏதோ ஒன்று பொங்கி அதை எதிர்க்கச் சொல்கிறது.” புகுந்த வீட்டில் நுழைந்து விளக்கேற்றி, உமாவுடன் சிறிது உரசிவிட்டு, சியாமளா இப்படியெல்லாம் நினைத்தது வரிவரியாய் அவளுள் எழுந்தது.
“ஃபேமிலி கோர்ட்டும், மாவட்டக் கோர்ட் வளாகமும் அந்தக் கல்யாண மண்டபத்திலிருந்து எத்தனை வேறுபட்டிருக்கின்றன? காரை உதிர்ந்த சுவர், பார்வையாளர் பகுதியில் காற்றில்லாமல் இரைச்சலாகச் சுற்றும் தொங்கு காற்றாடி, புழுதி நிறைந்த எழுத்தர், உதவியாளர்களின் மைகுத்துக்கள் வாங்கிய மேஜைகள், பழங்காலத்து நாற்காலிகள், அதில் நான்கில் மூன்றின் கீழ் செருகப்பட்ட அட்டைகள், பேனாவும், பேப்பரும் வாங்கித் தருமாறு அவர்கள் கேட்ட அவலம்” ஃபேமிலி கோர்ட்டும், டிஸ்ட்ரிக்ட் கோர்ட்டும், அப்படித்தானிருந்தது; இந்த ஹை கோர்ட் பரவாயில்லை, நாற்காலிகளின் கீழே அட்டைச் சொருகல்கள் இல்லை. காற்றாடியும் குறைந்த சத்தத்துடன் ஓடிக் கொண்டிருந்தது. சியாமளா ஏனோ தலையைச் சிலுப்பிக் கொண்டாள். இன்னமும் நேரமாகவில்லையா, நீதிபதியைக் காணவில்லையே? அவளுக்கும், வழக்குகளுக்கும் எந்தப் பிறவியின் தொடர்பு?
மீண்டும் புகுந்த வீட்டின் முதல் நாள் மாலையை அவள் நினைத்தாள்.
“சரவணன் தன்னை எப்படி அழைப்பார்- சியாமளா, ஸ்வீட்டி, ஹனி, ஷ்யாமா, எப்படி, எப்படி?”
‘ஏய், அந்த ஆஷ்ட்ரேயை எடு’ இதுதான் அவர் பேசிய முதல் வாக்கியம். அதை ஏன் அன்று எடுத்துக் கொடுத்தோம் என்று இன்றும் வருந்துகிறாள். எத்தனை முறை சொல்லியிருப்பாள், அவளுக்கும் ஒரு பெயர் இருக்கிறதென்று. விருந்தினர், நண்பர், பார்ட்டிகளில் சரவணன் நடந்து கொள்வதே வேறு விதம். அங்கெல்லாம், ‘ஹனி’ தான். வீட்டில் மேய்ப்பதென்னவோ மாடுதான். அவருடைய அப்பா தன் மனைவியை ‘விசாலம்’ என்றுதானே கூப்பிடுகிறார். சரவணன் மட்டும் ஏன் இப்படி?
‘ஏய்’களுக்கு அவள் எந்த ஏவல்களும் செய்வதில்லை. அப்படியும் வித்து முளைத்து எழுந்தது. மருத்துவ மனையில், சீமந்த விழாவில். எங்கெங்கு நோக்கினும் அவள் மிசஸ். சரவணன். அது ஒரு மரியாதை என்று கூட அவள் தன்னைத் தேற்றிக் கொண்டாள். அவள் ஆறு மாத கர்ப்பம். சரவணன் தன் வணிகத்தில் படு தோல்வி அடைந்தார். விட்டதைப் பிடிக்கிறேன் என்று சூது, மாது, குடி என்று அழிய ஆரம்பித்தார். வருண் பிறந்தான்.
‘நீ ஒரு தரித்ரம்; உன் புள்ள சனியன். அத்தனையும் முழுங்கிட்டு கொட்டக் கொட்ட விழிக்றது பீட.’
சரவணன் ‘ஏய்’யை விட்டுவிட்டு ‘சனியனே, எவன நெனச்சுண்டு கோட்ட கட்டிண்டு ஒக்காந்திருக்க?’ என்று பலமாக உதைத்ததில் அவள் இடுப்பு உடைந்தது. அப்பா வந்தார், மருத்துவம் செய்தார், மறைமுகமாக சரவணனுக்கு புத்தி சொன்னார், அம்மா வந்தார், அழுதார், பொறுத்துப் போகச் சொன்னார், செல்வந்தர்கள் வட்டரத்திலும் கூட மணமுறிவை எளிதில் ஏற்க மாட்டார்கள் என்றார்.
அவள் வேலை தேடிக்கொண்டாள் வெளியூரில். அங்கும் வந்து சரவணன் கொடுத்த தொல்லைகள் அவளை வாழ விடாமல் அடித்தன. போராடி மணமுறிவு பெற்றாள்; வருண் அவளுடன் இருக்கவும் தீர்ப்பானது.
இனி நிம்மதி என்று இருக்கையில் மீண்டும் மீண்டும் கோர்ட்டிற்கு வருகிறாள்.
கோர்ட்டில் திடீரென ஏற்பட்ட பரபரப்பில் அவள் நீதிபதி வந்துவிட்டார் என்று நிம்மதி அடைந்தாள்.
‘உங்களுக்கு வக்கீல் வேண்டாமா?’ என்றார் நீதிபதி.
வணங்கிவிட்டு ‘வேண்டாம்’ என்று சொன்னாள்.
‘பள்ளி நிர்வாகம் தானே எதிராளி? அவர்கள் சுருக்கமாக தங்கள் வாதத்தை வைக்கலாம்.’
‘ஐயா, இந்த அம்மையார்’ என்று அவர்கள் ஆரம்பிக்கும்போதே அவள் இடை புகுந்தாள். “என் பெயர் சியாமளா”
‘இப்படியெல்லாம் குறுக்கே பேசக்கூடாது. அதற்குத்தான் வக்கீலை வைத்துக் கொள்ளுங்கள்’ என்று சொன்னேன் என்றார் நீதிபதி.
‘இந்த அம்மையார் எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்வதாக என் கட்சிக்காரர் மனுவிலும் குறிப்பிட்டுள்ளார்.’
“பொதுவாகக் குற்றம் சுமத்த வேண்டாம். குறிப்பிட்ட நிகழ்ச்சி அல்லது கருத்து வேறுபாடு இருந்தால் மட்டும் சொன்னால் நல்லது.” என்றார் நீதிபதி.
‘சாரி, யுவர் ஆனர். இந்த அம்மா பள்ளியில் தன் மகனைச் சேர்க்கும் படிவத்தில், அவனது தந்தையின் பெயருக்கு எதிரே கறுப்பு மையால் கோடிழுத்திருக்கிறார்.’
“மிஸஸ் சியாமளா, இது விபரீத அர்த்தங்களைத் தரும் எனப் புரியவில்லையா?” என்றார் நீதிபதி.
‘அதைப் பற்றி கேட்ட பிரின்சிபாலிடம் சண்டை போட்டிருக்கிறார் இவர்.’
‘மன்னிக்கவும், யுவர் ஆனர். அவர் நாகரீகமாகக் கேட்கவில்லை. அப்பன் பேர் தெரியாத புள்ளயா என்று கேட்டுவிட்டு கெக்கக்கே என்று சிரித்தார். அப்போது என் குழந்தையும் உடனிருந்தான்.’
“அந்த பிரின்ஸ்பால் நிபந்தனையற்ற மன்னிப்பு கடிதமெழுதி, மூலத்தை மிஸஸ். சியாமளாவிடமும், நகலை கோர்ட்டில் சமர்ப்பிக்கும்படியும் இந்த கோர்ட் உத்தரவிடுகிறது. பொறுக்கிகள் பேசுவது போல் ஒரு கல்வி நிலையத்தின் முதல்வர் பேசுவதை நீதிமன்றம் ஒருக்காலும் அனுமதிக்காது.”
‘சாதாரணமான எதிர் வினை இது, கோர்ட்டார் அவர்களே. இதற்கெல்லாம் மன்னிப்பு கேட்பது..’ என்று இழுத்தார் ஏதிர்தரப்பு வக்கீல்.
‘அதுதானே பார்த்தேன், முதல்வர் அப்படிச் சொல்லவில்லையென்றோ, அப்படிச் சொன்னார் என்பதற்கு சாட்சி எங்கே என்றோ நீங்கள் கேட்டிருந்தால், வழக்கு மாறியிருக்கும். நீங்களே மாட்டிக் கொண்டீர்கள். முதல்வர் தன் கைப்பட மன்னிப்பு கடிதம் தர வேண்டுமென்று இந்தக் கோர்ட் உத்தரவிடுகிறது.”
‘மிகவும் நன்றி, யுவர் ஆனர்’ என்றாள் சியாமளா.
‘நடந்த விஷயங்களை தொகுத்துச் சொல்லுங்கள். நீங்கள் அட்வகேட் தானே? எத்தனை கேஸ்கள் தேங்கி நிற்கின்றன எனத் தெரியும் அல்லவா?’
‘யுவர் ஆனர், நாங்கள் கேட்பதெல்லாம், இந்த அம்மா, பையனின் தந்தை பெயரை எழுதி மறு விண்ணப்பம் செய்ய வேண்டுமென்பதே. கீழ்க் கோர்ட்டில் எங்களுக்குச் சாதகமாக வந்த தீர்ப்பை எதிர்த்து இவர்கள் இங்கே மேல் முறையீடு செய்திருக்கிறார்கள்.’
‘உங்கள் தரப்பை சுருக்கமாகச் சொல்லுங்கள், மிஸஸ்.சியாமளா.’
“யுவர் ஆனர். நான் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவள். மனம் நோகாமல், உடல் வாடாமல் வளர்ந்தவள். பெற்றோர் செய்து வைத்த திருமணம் தான். அது கானல் நீராயிற்று. என்னை மதிக்கவில்லை, என் பெற்றோரை மதிக்கவில்லை, என் பெயரே எனக்கு மறந்து விட்டது போன்ற ஜட வாழ்க்கை. வார்த்தையால் சூடுகள், வதைகள், உடலாலும் துன்புறுத்தப்பட்டேன். கர்ப்ப காலத்தில் உணவே இல்லாமல் தவித்துப் போனேன். என் மாமியார், மாமனார் இருவரும் ஒரு விபத்தில் இறந்து விட என் கணவரின் அத்துமீறல்கள் அதிகரித்தன. எனக்கு ‘லாங் கோவிட்’ என்று சொல்லி என் பெற்றோர், நண்பர்கள் யாரையும் வரவிடவில்லை. என் செல்போன் பறிக்கப்பட்டது. அறையில் வைத்து பூட்டப்பட்டேன்.
சரியான ஆடைகளில்லை. வருண் பிறப்பிற்கு முன்பாக சீமந்த விழா கொண்டாடினார். அதுவும் எப்படி, என்னை அறையில் உட்கார வைத்து, வாயில் கனமான முகக் கவசம் போட்டு, உடல் முழுதும் கவச அங்கி அணிந்த ஒரு கிழ வேதியரை மட்டும் என் அறையினுள் அனுமதித்து. மற்ற அனைவரும் ‘ஸ்கைப்பில்’ பார்க்க ஏற்பாடு செய்து பக்காவான திட்டம். நான் வெளியுலகைப் பார்த்ததே வருண் பிறப்பதற்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பிறகுதான். அங்கிருந்து பிறந்த வீட்டிற்குச் சென்றேன். சரவணன் மீண்டும் நடித்தார். என்னை சமாதானம் செய்து மீண்டும் அவருடன் வாழ அனுப்பினார்கள். கொடுமைகள், இம்சைகள். ஒன்றரை வயது வருணை அடிப்பார்; அவர் சேடிஸ்ட்டாக மாறிக் கொண்டிருந்தார். குழந்தையின் வாயில் புகையும் சிகரெட்டை வைப்பார். அதன் சாம்பலை வருணின் மேற்சட்டையில் தட்டுவார். தடுக்க நான் ஓடுவேன், எனக்கும் சூடு வைப்பார். அவன் பயந்து ஒடுங்க ஆரம்பித்தான். நினைத்துக் கொண்டு அலறுவான், மலங்க மலங்க முழிப்பான். என் குழந்தை, அதை நான் காப்பாற்ற வேண்டும். துணிந்து நான் வெளியேறினேன். எனக்கு விவாகரத்தும் கிடைத்து விட்டது. நான் தனியே வாழ்கிறேன். என் வருண் படிக்க வேண்டும், நல்ல பிள்ளையாக வளர வேண்டும். அவ்வளவுதான், நான் கேட்பது.”
‘அதற்கும், தந்தை பெயரை படிவத்தில் எழுத மறுப்பதற்கும் என்ன சம்பந்தம்?’
“ஒன்றரை வயதுக் குழந்தையை அடித்தவர், துன்புறுத்தியவர், சனியன், பீடை என்றெல்லாம் திட்டியவர், அவர் நிழலில் இருந்தால் வருண் பட்டுப்போவான் என்று தானே பிரிந்தே வந்தேன். இன்னமும் ஒட்டாக அவர் பெயர் எதற்கு?”
‘அரசிற்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. ஒருவருக்காக அதைத் தளர்த்த முடியாது. அடையாளம் என்பது காலங்காலமாக தந்தையின் பெயருடன் உள்ளது. பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களும், இன்னார் மகன் என்றுதான் குறிப்பிடப்படுகிறார்கள்?’
“மன்னிக்கவும், யுவர் ஆனர். மனிதருக்காக சட்டங்களா, அல்லது சட்டங்களுக்காக மனிதர்களா? நான் எனக்கான சலுகையாகத்தானே இதைக் கேட்கிறேன். பொதுவில் கேட்கவில்லையே? எந்த விதத்திலும் தகுதியில்லாத அவர் பெயரை என் பையனின் அடையாளமாக நான் ஏன் காட்ட வேண்டும்? நான் சியாமளா, அவன் வருண். என் பெயரை அவன் பெயருடன் ஒட்டச் சொல்லி கேட்கவில்லையே? நாங்கள் நாங்களாகவே இருந்துவிட்டுப் போகிறோமே.”
‘மிஸஸ். சியாமளா சொல்வது சரியான விஷயம். சரவணன் நடந்து கொண்ட முறையால் அவருக்கு இந்த கௌரவத்தை வழங்க முடியாது. வருணின் தந்தையின் பெயரை படிவத்திலோ, வேறு எந்த முறையிலோ கேட்பது நியாயமில்லை. மீறுபவர்கள் கோர்ட் அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவார்கள். அந்தப் பள்ளி உடனடியாக வருணுக்கு இடம் தர வேண்டும்., விரும்பினால் மட்டுமே கணவர், தந்தை பெயர் தரலாம் என்ற வகையில் படிவங்களைத் திருத்தி அமைக்க அரசிற்கு நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.’
வருண் அவளைப் பார்த்து ஏதோ புரிந்தது போல் சிரித்தான். அவனை அப்படியே கட்டித் தழுவ வேகம் வந்தது. அவனை ஒரு முறை தூக்கிக் கொண்டுவிட்டு கீழே விட்டாள். என்னதான் இடுப்பு எலும்பு பொருந்தியிருந்தாலும், அவள் எதையுமே தூக்கக் கூடாது.
அனலடிக்கும் கானலில் ஒற்றை மரம் ஒன்று நின்று கொண்டிருந்தது. ‘சுயம், கயம்’ என்று யாரோ ஒலி பெருக்கியில் பேசிக்கொண்டிருந்தார்கள். சுயம் சுகம் என அவள் நினைத்தாள். சற்றுத் தொலைவில் இதே மரத்தின் சிறு கன்று தலை நீட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 363 | 22 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
