நிழல் மகன்

ராத்திரி பதினொரு மணிக்கு, ‘க்ய்’ என்ற சப்தம் வந்தது. சுற்றியும் முற்றியும் மேலும் கீழும் பார்த்தான். ஒன்றுமில்லை. அவனது அலைபேசித்திரையில் ஒரு ஒளி எழுந்து அணைந்தது. 

திரும்பிப்படுத்துக் கொண்டே, சாம்சங் செல்போனை எடுத்து, அவனுடைய பாஸ்வேர்டை அடித்தவுடன், 5 மெசேஜ்கள் படிக்காமல் இருக்கிறது எனக்காட்டியது. 

முதல் மெசேஜ்ஜில், அவனுடைய மனைவி ‘பணம் அனுப்புங்க, ஊருக்கு போய்ட்டேன்”,ஊறுகாய் வாங்கனும்” என்று ஆங்கிலத் தமிழில் எழுதியிருந்தாள். 

இரண்டாவதும், மூன்றாவதும் பஜாஜ் பைனான்ஸ் பிடித்தல். மொத்தமாக, 10,200 –ஐ இரு முறையாக கழித்திருந்தார்கள். டீலீட். நான்காவது, லென்ஸ் கார்ட்டுடையது. டீலீட். 

ஐந்தாவது மெசேஜ்  ராஜாவிடமிருந்து. இருவரும் ஒரே அலுலலகத்தில் அடுத்தடுத்த  அறையில் வேலை செய்கிறார்கள், 25 ஆண்டு காலமாக. என்னை விட ஐந்து ஆண்டுகள் சிறியவன்.  பழக்கம் பல ஆண்டுகளாக இருந்தாலும், மற்றவர்களைப் போல, கொஞ்சம் பழகியவுடன் “வாடா, போடா”- சொல்லாமல், எப்போதும் அவன் “அண்ணா” என்று மட்டுமே அழைப்பான். பண்பானவன். ஆபிஸில் எதுவாக ,இருந்தாலும் இவனுக்கு அது “மிஸ்டர் கூல்”.  நினைத்துச் சிரித்துக்கொண்டே மெசேஜ்ஜை படித்தான்.

“அண்ணா, என் மனைவி, இறந்துவிட்டார். இரவு. 10.55. நாளை காலை 11.00 மணிக்கு ஆத்மகூரில் நல்லடக்கம்” என்றிருந்தது. 

உண்மையா என்று மறுபடியும் பார்த்தான். எழுதியது அவன் தான். அவனுடைய நெம்பர்தான். மாற்றமில்லை. 22.55-க்கு அனுப்பியுள்ளான். 22.55:03-க்கு இவனுக்கு வந்துள்ளது. புரியவில்லை. ராஜாவுக்கு போன் செய்தான். எடுக்கவில்லை. மறுபடியும் செய்தான். “அண்ணா, உண்மை”. சொல்லிவிட்டு ‘கட்’ செய்துவிட்டான். 

மனம் ஒப்பவில்லை. என்ன? என்ன?. என்ன கொடுமை. இவனுக்கா? நம்ம ராஜாவுக்கா? மனம் பதறியது. நேற்று தானே வீட்டுக்கு வந்து சொல்லிவிட்டு போனாளே? என்ன ஆகியிருக்கும்? மனம் துடித்தது.  

முதலில் அவன் தேடியது அவனுடைய காரை.  நம்ம கார் எங்கே? தேடினான். மகனுடைய மோகக்கார். பாத்ரூம் போனாலும் காரில் தான் போவேன் என்கின்ற டைப். இல்லை எடுத்துக்கொண்டு போயிருக்கிறான். எங்கிருக்கிறானோ, நடுநிசிநாயகன்? நேரத்துக்கு வரமாட்டான். கிடைக்க மாட்டான்.  மகனுக்கு போன் செய்தான். 

“சொல்லுங்க டாடி, நான் வந்திட்டிருக்கேன், பி.இ.எஸ். தாண்டிட்டேன். ஒரு அஞ்சு நிமிசம்” சொல்லிவிட்டு போனை துண்டித்தான். 

ஊரிலிருந்த மனைவிக்கு போன் செய்தான். எடுக்கவில்லை. ஒரு வேளை தூங்கிவிட்டாளோ? நினைக்க நினக்க அவளிடமிருந்து பதில் போன் வந்தது. எடுத்துக்கொண்டே, “நான் ஆத்மகூர் போகணும். ரத்னா செத்திட்டா.  ராஜா போன் செஞ்சான். கிளம்பனும்”. 

சொல்வதற்குள் இடை மறித்து, பெரிய குரலில், என்ன சொல்றீங்க. ஒன்னும் புரியலே. அவளுக்கு என்னாச்சு? நேத்து தானே, பார்த்தோம். அடக்கடவுளே. ராமா.” அழ ஆரம்பித்தாள். 

“சரி. முதல்ல அழுகையை நிறுத்து. நீ  கார்லே வந்திரு. நான் முதல்ல போறேன். அப்புறமா நீயும் பையனும் பாப்பாவும் வாங்க, அவசரமில்ல” சொல்லிவிட்டு, அப்பாவின் பெட்ரூம் கதவைத் தட்டினான். 

அம்மா கதவை திறந்தவுடன், படுத்துக்கொண்டே, “யாருப்பா, இறந்தாங்க”. கேட்டார்.

அப்பா, நம்ம ராஜா சம்சாரம்… 

முடிப்பதற்குள், வெளியில் பேசியதை கேட்டவர்கள் போல, “கண்டிப்பா போயிட்டு வா. உன் மகனை நம்பாதே. அவன் இப்போதைக்கு வரமாட்டான். எவன் கூடயாவது சுத்திட்டிருப்பான். நீ கிளம்பு சாமி. நான் பாத்துக்கறேன்” .

என்ன செய்வது? முதலில் கூகுள்-பேயில், எவ்வளவு பணம் வங்கியில் இருப்புள்ளது என்பதைப் பார்த்தான். 67,000/ இருந்தது. மகனுக்கு போன் அடித்தான். எடுக்கவில்லை. வந்துவிட்டோனோ. தெரியவில்லை. வெயிட் பண்ண ஆரம்பித்தான். 

அதற்கிடையில், கார் கிடைத்தாலும், ஓட்டத் தெரியாத தான் எப்படி போவது – யோசித்தான். செல்போனில் தேடினான். அபி – கார் டிரைவர் இருந்ததை- அழைத்தான்.

“அபி”

“வணக்கம் சார்.இன்னேரத்தில கூப்பிடிங்க”

“ஆமாம்பா. ஆத்மகூர் போகணும். வரமுடியுமா? 

சரிங்க சார். காலையில வரட்டுமா?

“இல்லைப்பா, கொஞ்சம் எமர்ஜென்சி. இப்ப கிளம்பனும்”

ஏன், சார்? 

நீ வாப்பா கார்ல போகும்போது பேசிக்கலாம். 

சரி, சார். உங்க காரா, என்னோட காரா

ஏம்பா?

இல்லை. என்னோட கார்ன்னா சீக்கரமா போயிடலாம். 

மகனுக்கு போன் செய்தான். எடுக்கவில்லை. ஒரு மணி ஆகிவிட்டது. காத்திருக்காமல், ‘அபி’ வாங்க போகலாம் என்றான். அவனுக்கு வழி நெடுகிலும். மனம் ராஜாவையே சுற்றியது. அதற்குள் கே.ஜி.எப் வந்து விட்டது.  

“சார் ஒரு டீ சாப்பிடலாமா? -அபி கேட்டான்.

உம்.

ரெண்டு டீ, அவனே பணமும் கொடுத்துவிட்டு, வாங்கிவந்தான். குடிக்க மனமில்லை. ராஜாவையும்  மகனையும் நினைத்துக்கொண்டான். என்ன செய்வார்களோ?

35 ஆண்டுகால பழக்கம். இவன் கோவை. ராஜா கர்னூல்.  ராஜாவின் அப்பா ஒரு பாரஸ்ட் ஆபிசர். சிறு வயதில் அப்பாவை இழந்தவன். ஒரு அக்கா, மூன்று அண்ணன்கள். மூத்த அண்ணன் பேங்கில் வேலை செய்கிறார். இவன் குப்பத்தில். ஒரு பல்கலைக்கழகத்தில் வேலை செய்கிறான்.  

இறந்த மனைவி ரத்னா பரமசமுத்திரத்தில்  டீச்சராக, அதுவும், பெண்கள் உறைபள்ளியில் வேலை செய்தாள். அவளும் கர்னூல்காரி. ஜொன்ன ரொட்டியில் கெட்டிக்காரி. கடப்பா காரதோசை செய்வதில் எக்ஸ்பெர்ட். அவளுடைய மிளகாய் ஊறுகாயிக்கும் கோங்குராப் பச்சடிக்கும் நானும், என் மகளும் மாத சந்தாதாரர்கள். 

என் மகளின் ஒரு போன் காலில் மிளகாய் ஊறுகாய், ராஜா மூலமாக வீட்டுக்கு வந்து விடும். ஒரு வார்த்தை யாரிடமும் சொன்னதில்லை. சொல்லவும் மாட்டான். அவ்வளவு டீசன்ட். 

“நாக்கு ஆட பிட்ட லேதன்னா (எனக்கு பெண் குழந்தையில்லை அண்ணா). தைராய்டு. மீ தம்புடுக்கு செப்பண்ணா (உன் தம்பிக்கு சொல்லண்ணா) வாடே பணி செய்யாலா (அவன்தான் வேலை செய்யனும்) சொல்லிவிட்டு, என் மனைவியோடு சேர்ந்து சிரிப்பாள். 

அப்பவும், ராஜா சிரித்துக் கொண்டு, “ ஐ வில் டிரை அண்ணா” சொல்லிவிட்டு சிரிப்பான். ஏன் சொந்த விசயங்களை பேசுகிறாய்” -மனைவியிடமும், ஏன் கேட்கிறீர்கள் என்று அவர்களிடமும் கேட்டதில்லை. அவ்வளவு டீசன்ட். அவனுடைய வாட்சப்-ஸ்டேடஸ் கூட ‘எனி டைம் அவைல்அபுள்” என்று தானிருக்கும். 

வண்டி, அனந்தபூரைக் கடந்தபோது, அபி, அவன் தோளைத் தட்டி எழுப்பி, “சார்.பின்னாடி போய் படுங்க. முன்னாடி உட்கார்ந்து தூங்காதீங்க” என்றவுடன் மணியைப் பார்த்தான். காலை நான்கரை மணியாகிவிட்டது. கேஜிஎப்பிலிருந்து 130 கிலோ மீட்டர் வேகத்தில் பறந்து வந்துள்ளான். புதுக்கார். 

“மெல்ல போ. அபி. ரொம்ப வேகம் வேண்டாம். விடியக்காலை. விபத்துக்கள் நடக்கும் நேரம்” சொன்னதற்கு, “சார், யாருமேயில்லை. என்னைத் தாண்டி ஒரு ஆம்னிவண்டிகூட போகவிடலே, தைரியமாக வாங்க சார், நான் கேரண்டி”. பத்து வருடமாக அவனுக்கு வண்டி ஓட்டுபவன். சின்ன பாப்பாவுடன் ஹைதாராபாத் வந்தவன். எப்போதும் டிரைவிங்கில் நம்புபவன்..

போன் வந்தது.அவன் பையன். “டாடி எங்கிருக்கீங்க, நான் வீட்டுக்கு வந்துட்டேன், சொல்லுங்க டாடி”. பதில் சொல்ல விருப்பமில்லாமல், “ஒன்னுமில்லைப்பா அப்புறமா பேசறேன்”  வைத்துவிட்டான்.

“வெங்கியா, சார்?. இப்பதான் எனக்கு மெசேஜ் கொடுத்திருக்கான். திருப்பதியிலிருந்து பிரண்ஸ் ஓட குப்பம் வர ரொம்ப லேட்டாகும், பார்த்துப் போங்கன்னு”. 

ஒரு வேலையை ஒழுங்கா செய்ய மாட்டான். நாய் வாய் வைத்தமாதிரி எல்லா பருக்கையையும் மோந்து நக்கிப் பார்த்து தின்பது. எப்படி வாழப் போறானோ? கவலையுடன் மன வலியும் வந்தது. ராஜா மகனை நினைத்தான் விஸ்வா.  

குப்பத்தில் குப்பம்-பப்ளிக் ஸ்கூலில், பத்தாவதில், 500க்கு 453 மார்க்-கை அசால்ட்டாக எடுத்துவிட்டு +1 படிக்கிறான். செம சார்ப். மரியாதைக்காரன். அவன் வீட்டு இரண்டாவது மகன். அவன் அம்மா வீட்டு சாப்பாடு பிடிக்காது என்றால், ஸ்கூல் நண்பர்கள் நான்கு பேருடன் வீட்டுக்கு வந்து “ஆன்டி, சாப்பாடு போடுங்க” என்பான். அவன் மனைவி ஒரு மாதம் கழித்து சொன்ன செய்தி: “விஸ்வா வீட்டுக்கு வந்துட்டு போனான்”. அந்தளவுக்கு குடும்பப் பழக்கம். என்ன செய்வானோ? தெரியவில்லை. மனம் குழம்பியது,

“சார். கர்நூல் வந்தாச்சு. ஒரு டீ சாப்பிடலாம், சார்”. மணி பார்த்தான். காலை 7 மணி. கடையில் ஆளுக்கொரு டீ சாப்பிட்டுவிட்டு, ஆத்மக்கூருக்கு வழி கேட்டான் கையால் காண்பித்தான். போர்டில் 70 கிலோமீட்டர் இருந்ததை காண்பித்தது. 

வண்டி ஆத்மக்கூருக்கும், மனம் குப்பத்திற்கும் ஊஞ்சலாடியது.“ராஜா, அப்பாவுக்கு கொஞ்சம் மருந்து செலவு, பணம் கொடு”.  

எவ்வளவு அண்ணா? சொல்லிமுடிப்பதற்குள், கூகுள் மேசேஜ் வந்திருக்கும். பலமுறை. பணம் வாங்கியதைப் பற்றி ஒருத்தரிடமும் சொல்லமாட்டான். அவ்வளவு டீசென்ட். 

ஆத்மகூரை வண்டி அடைந்த போது, காலை எட்டரை. போனில் அவன் வீட்டு வழி தெரிந்துகொண்டு, சென்ற போது, மஞ்சள் பூசிய முகத்துடன், ஒரு பனிக்கட்டியில் படுத்திருந்தாள், என் தங்கை ரத்னா. கலங்கி மாலை சார்த்தி வணங்கினேன். நேற்றிருந்தவர் இன்றில்லை என்பது உலக உண்மைகளுள் ஒன்று. அனுபவித்திருக்கிறேன். தூங்குபவள் போல படுத்திருந்தாள்.

“என்னடா. ஆச்சு? ராஜா கைபற்றி கேட்டான். அண்ணன் மகளுக்கு கல்யானம். போறேன்னு தான்டா” சொன்னீங்க. 

தழுதழுத்தக் குரலில், “ஆமாண்ணா, ரிசப்சன். பயங்கர ஜாலியா இருந்தா. திடீர்ன்னு நெஞ்சு வலிக்குது, சரிஞ்சுட்டான்னா”. எனக்கு ஒன்னுமே புரியலை. ரெண்டு ஆஸ்பத்திரிக்கும் கொண்டு போனோம் -எல்லாம் முடிஞ்சுபோச்சு. ரத்னாவைப் பார்த்தேன். 

ராஜாவின் அண்ணன்களையும், அம்மாவையும் முதல் முறையாக ஒரு சாவில் சந்தித்தது நெருடினாலும், ரத்னாவும் அவனும் அவனைப் பற்றி அவர்களிடமும் சொல்லி வைத்திருக்கிறார்கள். என் மனைவி ஒதினா. அவன் ராஜாவின் அண்ணன். 

அவள் தெலுங்கிலும், என் மனைவி தமிழிலும் மூச்சு முட்டாமல் எப்படி பேசிக்கொண்டு புரிந்து கொண்டார்களோ? ஒரே சிரிப்பு மழையாக இருக்கும். அக்கா,  ஒதினி (அண்ணி), ஆன்டி, அம்மா இதெல்லாம் அவள் என் மனைவியைப் பார்த்து சொன்ன சொற்கள் -ஞாபகம் வந்தன. 

எல்லாம் முடிந்து, அவனும் குப்பம் வந்துவிட்டான். ஒரு மாதம் கழித்து, ராஜாவும்  அலுவலகம் வந்தான். மத்தியானச் சாப்பாடும், காலை டிபனும் என் மனைவி பேக் செய்து தர ஆரம்பித்தாள். மூன்று மாதம் ஓடியது. 

ஒரு நாள், என் மனைவி, நான் ஒன்னு சொல்லட்டுமா? என்றாள்.

‘உம்”. சீக்கரமா ராஜாவை ஒரு கல்யாணம் பண்னச்சொல்லுங்க. பையன் காலேஜுக்கு போறதுக்கு முன்னால, நீங்க சொன்னா கேட்பான். “

“லூசாடி, அவனோட பையனுக்கு வயசு பதினெட்டு. அடுத்த வருசம் காலேஜ்டி. எவண்டி பொண்ணு கொடுப்பா? ஒளராதே. மூடிட்டு உன் வேலையைப் பாரு”. கத்திவிட்டேன். 

ஒரு வாரம் கழிந்தது. மறு படியும் அதே டாபிக். “ஏண்டி, உனக்கு சோறு கொடுக்க கஷ்டமாயிருக்கா” என்றேன்.

அதில்லிங்க. ஒரு பொம்பளை இல்லாம, ரெண்டு ஆம்பளைங்க மட்டும் இருக்கிற வீடு எப்படி இருக்கும்ன்னு உங்களுக்கு தெரியுமா?

என்ன சொல்றே? 

போய் பாருங்க. வேலைக்காரி ஆடறா. சம்பளமும் கொடுத்து, அவனோட பொருளெல்லாம் போகனுமா?

என்னடி சொல்றே.

“அய்யோ. முழுசா பேச விடுங்க. ராஜா மேலே ஒரு தப்பில்லை. புஷ்பக்கா வீட்ல வேலை செஞ்சுட்டு பணம் காணாமப் போச்சுன்னு நிறுத்துனாங்க இல்லை, அந்த வேலைக்காரியோட சின்னப்பொண்ணு, ரத்னாவோட பச்சைப் புடவையைக் கட்டிட்டு மார்க்கெட்டுக்கு வந்ததை நான் பார்த்தேன். மனசுக்கு ரொம்ப கஷ்டமாயிருச்சு.”

“சரி பேசறேன்” அலுவலுகம் வந்ததும், 

“ராஜா”.

அண்ணா

“கொஞ்சம் பேசனும்”. 

“சரிண்ணா”, சொல்லிவிட்டு வந்தான்.

ரத்னாவுக்கு உன்னோட இருந்த காலம் முடிஞ்சுபோச்சு. உனக்கும், உன் பையனுக்கும் உங்களோட காலமும், வாழ்க்கையும் இருக்கு. ரெண்டாவது கல்யணம் பண்ணிக்கறதைப் பத்தி யோசிக்கக் கூடாது”. 

“சரின்னா, அம்மாவும் அண்ணாவும் போனவாரம் இதைப்பத்தி பேசுனாங்க. அவங்களும் இங்க வரமாட்டாங்க”. அவன் மனதை புரிந்து கொண்டேன். கஷ்டமாயிருக்கு என்பதைக் கூட  சொல்லாத அளவிற்கு டீசென்ட். 

அவங்க யாரும் இங்க வரமாட்டாங்க. புரியது. அண்ணா – பையன் தான் — இழுத்தான்.   

நீங்க ரெண்டு பேரும் உன்னோட கல்யாணம் பத்தி மனம் விட்டு பேசுங்க..

என்ன பேசறதண்ணா? அடுத்த வருசம் எனக்கு கல்யாணம் பண்ற வயசு, உனக்கு என்ன கேட்குதான்னு  பையன் கேட்பானோ-ன்னு நினைச்சாலே … இழுத்தான்.  அவனுக்கு ரெண்டு கெட்டான் வயசு. 

நீ ஏன் கவலைப்படறே.. முடி. கங்கணம் கட்டி முடி..

“சரி-ண்ணா”, சொன்னவன்,  ஒரு நான்கு மாதம் கழித்து, பையன் டிகிரிக்கு ஹைதராபாத் பல்கலைக் கழகத்திற்கு போய்விட்டதாகவும், தான் ஒரு பெண் பார்த்துவிட்டு வந்ததாகவும் சொன்னான். 

என் மனைவியும், அவனும் ஒசூரில் சென்னை சில்க்ஸில் அவனுடைய இரண்டாம் திருமணத்திற்கு, வேட்டி சேலை எடுக்க சென்றார்கள். என் மனைவி ரொம்ப சந்தோசமாக இருந்தாள். 

கல்யாணத்திற்கு மறுபடியும் காரில் கர்நூல்  போனோம். இப்போதும் அபிதான். என் மகன் பி.இ.ஏஸ் மருத்துவமனையை இன்னுமும் தாண்டிக் கொண்டுயிருக்கிறான். 

கர்நூல். பயங்கர வெயில். ஒரு மலை மேல், ஏ.சி. ரூமில் கல்யாண ஹால். என் மனைவி மூச்சு வாங்கி வாங்கி மேலே ஏறினாள்.

அங்கே விஸ்வா, அவன் அப்பாவைப் போல, ரொம்ப டீசண்ட்டாக,  தன் அப்பாவின் திருமணத்திற்கு வருபவர்களையும், அவனுடைய தந்தையின் மணக்கோலத்தையும், எல்லோரின் மகிழ்ச்சியையும்,  தன் கையால் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தான். ராஜா மகனுக்கு கீர்த்தி பெரிசு என்றாள், என் மனைவி. 

“தீர்க்காய்சு பவ, விஸ்வா, நிழல் மகனே. ” நினைத்துக் கொண்டேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “நிழல் மகன்”

  1. இந்த சிறுகதையின் மொழிநடைக்குப் பாராட்டுக்கள்.. ரியலிசம் என்று கூறுவோமே அதைப் பொருத்தமாகப் பயன்படுத்தியுள்ளார் படைப்பாளர்.. உண்மைக்கும் கதைக்கும் வித்தியாசம் இல்லாத அளவு இடைவெளி இல்லாமல் ஆக்கிவிட்டார் படைப்பாளி…. கம்ப்யூட்டர், செல்போன் போன்ற நவீன வாழ்வில் தவிர்க்கவே முடியாத கருவிகளையும் உள்ளடக்கிக் பேசுகிறது இந்த கதை.. தமிழரும் தெலுங்கரும் ஓர் உறவாகச் சித்தரிக்கும் இந்த கதை இப்போதைய காலத்திற்குக் கட்டாய தேவையும் கூட… நவீன கால வாழ்க்கையில் மரபார்ந்த பாசமான உறவு உள்ளார்ந்த அன்பை அழுத்தமாகப் பதிவு செய்வதுதான் இந்த கதையின் வெற்றி.. வாழ்க்கையில் மனைவியை இழந்தவன் மீது அன்பு செலுத்தி அவனையும் எல்லோரையும் போல வாழ வைக்க வேண்டும் என்ற கதாமாந்தரின் எண்ணம் வெற்றிப் பெறுவதாக அமைக்கப்பட்டுள்ளது….. துயரமும் துயரத்தில் இருந்து விடுபடுவதுமே வாழ்க்கை..என்ற கருத்தைச் சரியாகக் காலத்திற்கு ஏற்றபடி அமைந்திருக்கும் இந்த சிறுகதைக்குப் பாராட்டுக்கள்

Leave a Reply to T. Vishnukumaran Thangakan nadarCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.