புத்தகம் அறிந்து கொள்வோம் – பேரரசு என்னும் கருத்தாடல் விற்கப்பட்ட விதமும், பிரிட்டன், அமெரிக்க உருவாக்கத்தில் இந்தியாவின் இடமும் 1600-1830

“பேரரசு என்னும் கருத்தாடல் விற்கப்பட்ட விதமும், பிரிட்டன், அமெரிக்க உருவாக்கத்தில் இந்தியாவின் இடமும் 1600-1830 (Selling Empire: India in the Making of Britain and America, 1600 – 1830)” என்ற புத்தகம் பற்றி இங்குக் காண்போம். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ரிவர்சைட் என்னும் ஊரில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California Riverside) வேலை செய்யும் ஜொனாதான் ஈகாட் (Jonathan Eacott) என்ற வரலாற்றுப் பேராசிரியர் இந்த புத்தகத்தினை எழுதினார். இந்த புத்தகம் 455 பக்கங்கள் கொண்டது. இந்த புத்தகம் 2016ம் ஆண்டில் நார்த் கரோலினா பல்கலைகழகத்தால் (Chapel Hill: University of North Carolina Press) வெளியிடப்பட்டது.
இந்த புத்தகத்தில் இந்தியாவின் பங்களிப்பினை இரண்டு வழிகளில் ஆசிரியர் வாதிடுகின்றார்.
1. அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் எழுச்சி அடைந்து, வீழ்ந்ததில் இந்தியாவின் பங்கு
2. அந்த வீழ்ச்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் மீண்டும் ஒரு பொருளாதார அதிகார மையமாகக் கட்டி எழும்பியதில் இந்தியாவின் பங்கு
பதினெழாம் நூற்றாண்டில் இங்கிலாந்து என இருந்தது, பின்னர் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் பேரரசு ஆனது. அதன் சம்பவங்கள், அக்காலத்திய அமெரிக்கச் சந்தை, அதில் இந்தியப் பங்கு ஆகியவற்றினை ஆராய்கின்றது.
இந்த நூலின் ஆசிரியர் பதினேழாம் நூற்றாண்டு காலகட்டத்தில் நன்கு வளர்ந்து இருந்த, இந்திய வணிக மையம் பிரிட்டிஷ், அமெரிக்க பேரரசுகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்று கூறுகிறார். பிரிட்டிஷ் பேரரசு துவக்கத்தில் இந்தியச் செழுமையையும், அதனால் உருவான வணிக தொடர்புகளையும் நகலெடுக்க வேண்டும் என முனைந்தது. பின்னர் அமெரிக்காவிலும் அந்தப் பார்வை வளர்ந்தது.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு உலக சந்தையின் கவனத்தினை கவர்ந்த பொருள்கள் என இந்த நூலாசிரியர் கீழ்கண்டவற்றினை குறிப்பிடுகின்றார்.
1.பருத்தி ஜவுளிகள்
2. பட்டு ஜவுளிகள்
3. விவசாயப் பொருள்கள் (அவுரி, மிளகு, இஞ்சி, கிராம்பு, ஜாதிக்காய், மாசி, இலவங்கப்பட்டை, குங்குமப்பூ, சோம்பு, கிச்சிலிக் கிழங்கு, சீரகம், கிராம்பு, பருத்தி)
4. மரச்சாமான்கள்.
5.வெடியுப்பு (Saltpetre)
இந்த புத்தகம் கல்லூரி மாணவர்களுக்கான மொழியில் வரலாற்றினை பேசுகின்றது. பக்கத்துக்குப் பக்கம் தனது வாதங்களுக்கான ஆதாரங்களை நூலாசிரியர் தொடர்ந்து முன் வைக்கின்றார். இந்த நூலானது எளிமையான மொழியும், வாசிப்பும் கொண்டது அல்ல.
கப்பல் ஆவணங்கள், நீதி மன்ற ஆவணங்கள், அக்காலகட்டத்தில் வெளியான புத்தகங்கள், இதர பதிப்பிக்கப்பட்ட குறிப்புகள், அரச செய்திகள், சட்டங்கள் ஆகியவற்றினை புத்தகம் முழுக்க நேரடியாக மேற்கோள் காட்டுகின்றது. மேற்கோள்களில் உள்ள ஆங்கிலம் பழைய காலத்தினை சேர்ந்தது. ஆகவே படிக்கச் சிரமம் தருகின்றது. இந்நூலில் உணர்வுகளைத் தூண்டும் மொழி அறவே கிடையாது.
வரலாற்று விரும்பிகள் அனைவருக்கும் இந்த நூல் பரிந்துரைக்கப்படலாம். உலகின் மிகப் பெரிய சாம்ராஜ்யங்களான அமெரிக்கா, பிரிட்டன் பற்றி அமெரிக்காவின் பார்வையை இந்த நூல் பேசுகிறது. இந்தியா இந்த நூலில் முக்கிய பாத்திரம் வகிக்கின்றது.
இனி புத்தகச் சுருக்கத்தினை காண்போம்.
பதினேழாம் நூற்றாண்டின் இங்கிலாந்தில் கம்பளி நெசவு எப்படி இருந்தது? அது குடும்பங்களால் நடத்தப்பட்டது. கம்பளித் தொழிலில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஈடுபட்டார்கள். ஆண்கள் தறியில் அமர்ந்தனர். பெண்கள் நூல் நூற்றார்கள். தொழில்முனைவோர்கள் பண்ணைகளில் ஆடு வளர்ப்போரிடம் இருந்து மூலப்பொருளை வாங்கினர். பின்னர் அதை நெசவு செய்வோரிடம் விநியோகித்து, உற்பத்தி செய்யப்பட்ட கம்பளியைப் பெற்றுக் கொண்டு விற்பனையை ஒழுங்கமைத்தார்கள்.
படம் உதவி: ஆக்ஸ்மினிஸ்டர் ஹெரிட்டேஜ்
அப்பொழுது இங்கிலாந்தின் முக்கிய உற்பத்தியாகக் கம்பளி ஜவுளி பொருள்களே இருந்தது. அதுவே அதன் முக்கிய வணிகப் பொருளாகவும் இருந்தது. அந்த காலத்தில்தான் இந்தியாவுடன் நேரடி வணிகம் அறிமுகமானது. ஆங்கிலேய நாகரீகத்துக்கு இந்தியப் பொருள்களின் சந்தை மதிப்பினை பற்றிய அறிவு பிறந்தது. இந்தியப் பொருள்களை வாங்கி ஐரோப்பாவுக்கு விற்று வணிகம் துவங்கினர். நல்ல லாபம் கிடைத்தது.
வணிகம் விரிய விரிய ஐரோப்பாவின் நிலத்தில் உற்பத்தி செய்ய முடியாத, அதே நேரம் ஐரோப்பாவே விரும்பும் இந்திய விவசாய பொருள்களின் உற்பத்தியை தாங்கள் எப்படிக் கைப்பற்றுவது என யோசித்தனர். அந்த விவசாய பொருள்களைப் பயிரிட நிலம் தேவைப்பட்டது. அதற்காக அட்லாண்டிக் கடல் பகுதிகளில் நிலத்தினை கைப்பற்றிக் காலனிகளை (Atlantic Colony) உருவாக்கினர். பிரிட்டிஷ் விவசாய நிலம் விரிவானது.
படம் உதவி: என்சைக்ளோபீடியா பிரிட்டானிக்கா
ஆரம்பக்கால அமெரிக்க காலனிகள் பிரிட்டிஷ் எதிர்பார்ப்பினை ஒட்டி இந்தியப் விவசாயப் பொருள் உற்பத்தியை தங்கள் நிலங்களில் முயன்றும், புகையிலை, சர்க்கரை நோக்கி விரிந்தும் சென்றனர். அதன் வழியே பிரிட்டிஷாரின் எதிர்பார்ப்புகளை ஓரளவுக்கு நிறைவேற்றின. அதை தவிர பிரிட்டிஷ் உற்பத்தி செய்த பொருட்களை காலனிகளில் பெருகிவரும் மக்கள்தொகை ஏற்றுக் கொண்டது. இதன் வழியே பிரிட்டனில் தனியார் செல்வம், அரசு கஜானா இரண்டும் நிரம்பியது.
ஆனால் அந்த நிலை தொடரவில்லை. நேரடியாகப் பிரிட்டனில் உற்பத்தி செய்த பொருட்களுக்கான தேவை காலனிகளில் குறையத் தொடங்கியது. அதற்கு மாறாக இந்தியாவில் இருந்து ஆங்கிலேயர் இறக்குமதி செய்த பருத்தி ஜவுளி பெரும் ஆதிக்கம் செலுத்தியது. இது பிரிட்டிஷ் கம்பளி ஜவுளி உற்பத்தியாளர்களை அச்சுறுத்துவதாகக் இருந்தது. இந்தப் பயம் வளர்ந்தாலும், மறுபக்கத்தில் பிரிட்டிஷ் வணிகர்கள் செய்த இந்திய பருத்தி ஜவுளி இறக்குமதி நன்கு வளர்ந்தது.
கிழக்கிந்திய கம்பனி இங்கிலாந்தில் இந்தியப் பருத்தி ஜவுளிக்கான நுகர்வோர் ஆசையை உருவாக்கியது. அன்றைய ஆங்கிலேய உயர் குடியினர் பருத்தி ஜவுளி மீது காட்டிய ஆர்வம், பருத்தி ஜவுளி அணிவது சமூக அந்தஸ்தினை கொடுக்கும் என்ற உயர்குடி அல்லாதவரின் எண்ணம் ஆகியவை சந்தையில் பருத்தி ஜவுளியைப் பிரபலமாக்கின என்கின்றார்.
இந்திய உற்பத்தியான ஜவுளியின் வண்ண/வடிவ செம்மைப்படுத்துதல், இந்தியப் பாணி மீதான கவர்ச்சி உணர்வைத் தூண்டுதல் போன்றவை நிகழ்ந்தன. இதனால் புதிய நுகர்வோர் நாகரீகம் உருவானது. அதை மூலதனமாக்கி, கிழக்கிந்திய நிறுவனம் ஆங்கில சந்தையில் பருத்தி ஜவுளியைக் கொண்டு சேர்த்தது. இதன் மூலம் இந்தியர்களின் உற்பத்திக்கான தேவை அதிகரித்தது.
1700 லிலும் 1721லிலும் அமலுக்கு வந்த பருத்தி ஜவுளி தடை சட்டங்கள் (Calico act) கம்பளி தயாரிப்பாளர்களுக்கு ஒரு தெளிவான வெற்றியாக அமையவில்லை. சட்டங்கள் ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து வண்ண பருத்தி ஜவுளியை இறக்குமதி செய்வதைத் தடைசெய்தன. கொஞ்சக் காலம் கழித்து பிரிட்டனில் அவற்றின் பயன்பாட்டுக்கும், அதை உடையாக அணியும் தடையையும் கொண்டு வந்தது. ஆனால் இந்தியத் தயாரிப்புகள் பிரிட்டனுக்கு வெளியே உள்ள ஆப்ரிக்க சந்தைகளுக்கு, அமெரிக்க காலனிகள் ஒரு சந்தையாகச் செயல்பட்டும் இதைச் சமன் செய்தது.
1770களில் உலக சந்தை எவ்வாறு இருந்தது என்பதை கீழ்கண்ட படம் காட்டும்.
படம் உதவி https://commons.princeton.edu/mg/european-empires-and-trade-c-1770/
அட்லாண்டிக் காலனியில் இருந்த மக்கள் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யவும், வண்ண பருத்தி ஜவுளிகளைப் பயன்படுத்தவும் அணியவும் முடியும். ஆனால் அட்லாண்டிக் காலனியால் நேரடியாக ஆசியாவிற்குக் கப்பல்களை அனுப்ப இயலவில்லை. ஐரோப்பாவின் பிற இடங்களிலிருந்து ஆசியப் பொருட்களை நேரடியாக வாங்கவோ முடியவில்லை. சட்டத் தடைகள் இருந்தன. கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவுடன் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட, பிரிட்டனிலிருந்து கொண்டுவரப்பட்ட பருத்தி ஜவுளிகள் பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் பிரிட்டிஷ், வட அமெரிக்க நுகர்வோர்களால் பெரிதும் பாராட்டப்பட்டன.
நூலாசிரியர் அட்லாண்டிக் காலனிகளில் பிரிட்டிஷ் பேரரசால் ‘பெரும் அரசொன்றின் அழகியல் (Imperial Aesthetics)’ உருவாக்கப்பட்டது என்கின்றார். நூலாசிரியர் பருத்தி ஜவுளி வழியாகப் பிரிட்டிஷ் படிநிலை சாம்ராஜ்யத்தை நிறுவுவதாகக் கருதுகிறார். இந்த படிநிலையில் இந்தியர்கள் உற்பத்தியாளர்களாக இருந்தனர், ஆனால் காலனியாக இருந்த அமெரிக்கர்கள் முதன்மை நுகர்வோர்களாக எதிர்பார்க்கப்பட்டனர். ஆங்கிலேயர் லாபம் கொள்பவர்களாக இருந்தனர்.
படம் உதவி: விண்டெர்த்தூர் மீயூசியம்
ஐரோப்பிய அரசுகள் உலகை வணிக ரீதியாக ஆளுவதில் முனைந்தன. வணிகம் பங்கு பிரிப்பதில் பிரச்சனை தரும். ஐரோப்பிய அரசுகள் பங்கு போடுவதில் போட்டிப் போட்டன. போட்டி போர் ஆனது. அதில் பிரிட்டிஷ்- ப்ரெஞ்ச் போர் ஏழாண்டு நடந்தது. ஏழாண்டுப் போரில் (1763) பிரான்சைத் தோற்கடித்த பின்னர், 140,000,000 பவுண்டு தேசியக் கடனை உருவாக்கி இருந்தது. போருக்குப் பின் அரசு வருவாயை அதிகரிக்க அதன் அரசு விரிந்த இடங்களில் கடும் வரிவிதிப்பினை நோக்கி பிரிட்டிஷ் அரசு சென்றது.
இதே காலக்கட்டத்தில் இந்தியாவில் ஆங்கிலேயப் பேரரசு உருவாகி எழுந்தது. அக்காலத்தில் வட அமெரிக்க காலனிகளுக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் “மெய் நிகர் பிரதிநிதித்துவம் (virtual representation)” தருவதாகச் சொல்லியிருந்தது. மெய் நிகர் பிரதிநிதித்துவம் என்பதில் ஆங்கிலேயப் பாராளுமன்றத்துக்கு நேரடியான தேர்தலில் வட அமெரிக்க காலனிகள் பங்கெடுக்க முடியாது. ஆனால் ஏற்கனவே இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வட அமெரிக்க காலனிகளின் பிரதிநிதித்துவமாகக் கூறப்பட்டது. இந்தியாவில் கைப்பற்றப்பட்ட பகுதிகளுக்கும் அதே போல மெய் நிகர் பிரதிநிதித்துவம் தருவதற்கு அன்றைக்கு வர்த்தக கழகத்தின் (Board of Trade) ஆணையராக இருந்த தாமஸ் வாட்லி போன்றவர்கள் பேசினார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர் அடைந்த வெற்றிகளை சுட்டிக் காட்டி அமெரிக்க காலனிகளுக்கு ஆசைக் காட்டப்பட்டது. அது வெற்றி அடையவில்லை. அமெரிக்க காலனிகளில் வசித்தவர்கள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இல்லாதிருப்பதை கடுமையாக எதிர்த்தார்கள்.
படம் உதவி: இன்டெர்னெட் ஆர்க்கைவ்
இந்தியாவில் அன்றைக்குக் கைப்பற்றி இருந்த நிலங்களிலிருந்து பிரிட்டனின் நிதி வருவாயில் 10 சதத்துக்கு மேல் வருவாய் கறக்கப்பட்டது. அதன் மதிப்பு அன்றைய பணத்தில் 1.7 மில்லியன் பவுண்டு என “The importance of British dominion in India in comparison with that in America” என்னும் புத்தகம் சொல்கின்றது. ஒட்டக்கறக்கும் இந்த முயற்சியில் இந்தியாவில் பஞ்சம் விளைந்து பலர் இறந்தார்கள். அந்த செய்திகள் அமெரிக்க காலனிகளில் பதட்டம் உருவாக்கியது. இந்த பிரிட்டிஷ் புத்தகம் இந்தியர்களை “அளவுக்கு அதிகமான பணிவும், அடிப்பணியும் தன்மையும் கொண்டு, சிக்கனத்துடன் கலை மற்றும் உற்பத்திகள் பற்றிய அறிவைக் கொண்டுள்ளவர்கள் (exceeding mild, pliant and frugal…and possessing the knowledge of arts and manufactures” என்று குறிப்பிடுகின்றது. அமெரிக்கர்களை “ஆணவமும் அடாவடித்தனமும், ஆட்சியில் பொறுமையின்மையும், கீழ்ப்படிதலையும் வெறுத்தவர்கள் (haughty and insolent, impatient of rule, disdaining subjection)” எனக் குறிப்பிடுகின்றது.
அதிக வரி விதிக்கப்பட்ட இந்திய இறக்குமதி பொருட்கள், இறக்குமதிக்கு எதிரான மனநிலையை வட அமெரிக்க காலனிகளில் வளர்ப்பதாக இருந்தது, அதுவே பின்னர் அமெரிக்கச் சுதந்திர புரட்சி போராக விரிவடைந்தது. ஐரோப்பிய வர்த்தகம் உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்கு இந்தியா ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது.
படம் உதவி: லைப்ரரி ஆப் காங்கிரஸ்
மேலே உள்ள “சுதந்திரத்தின் வெற்றி அல்லது அடக்குமுறையின் வீழ்ச்சி” என்ற ஓவியம் அன்றைய அமெரிக்க மனநிலையைப் பிரதிபலிக்கின்றது. அட்லாண்டிக் கடல் நடுவில் உள்ளது. ஒரு புறம் பிரிட்டிஷ் பேரரசில் மன்னர், பிரதம மந்திரி, கிழக்கிந்திய கம்பனியின் இயக்குநர்கள் உள்ளனர். மறுபுறம் அமெரிக்க காலனிவாழ் மக்கள் உள்ளனர். கிழக்கிந்திய கம்பனிக்காரர்கள் அமெரிக்காவிலும் தங்கள் போட்டியில்லாத வணிகம் உருவாக்கத் திட்டம் இடுகின்றனர். அவர்களது திட்டம் ஒரு பெட்டியில் உள்ளது. இந்த படம் அன்றைய மனநிலையைக் காட்டியது.
அமெரிக்கச் சுதந்திர புரட்சியின் மூலம் பிரிட்டிஷ் பேரரசு அட்லாண்டிக் காலனிகளில் ஒழிக்கப்பட்டது. ஆனால், பிரிட்டிஷ் பருத்தி ஜவுளி வணிகம், வெவ்வேறு வடிவங்களில் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வலுவாக ஆதிக்கம் செலுத்தியது.
சுதந்திரம் கண்ட அமெரிக்கா — இந்தியாவுடனான நேரடி வர்த்தகம், இயந்திரமயமாக்கப்பட்ட பருத்தி ஜவுளி உற்பத்தி இரண்டிலும் கவனம் திருப்பியது. அந்நிலையில் அமெரிக்க நுகர்வோரிடம் பருத்தி ஜவுளிக்கு இம்மியளவும் குறையாத தேவை இருந்தது. அந்தத் தேவையை அமெரிக்காவின் கவனம் பூர்த்தி செய்யவில்லை. அதைப் பிரிட்டனின் வணிகமே தொடர்ந்து பூர்த்தி செய்தது. இதற்குக் காரணம் மூன்று ஆங்கிலேயர்களின் கண்டுபிடிப்பு ஆகும்.
இதன் தொடர்ச்சி
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

One Reply to “கிழக்கும் மேற்கும்”