
அறையின் நீள அகலம்
உள்ளே இருக்கிறேன்
அறையின் கதவுகள் வெளியே பூட்டப்பட்டுள்ளது
சாளரங்கள் வழி தெரியும்
மரத்தின் கிளைகள் இலைகளில்
அமர்ந்து தூர பறக்கும் பறவை
அது எழுப்பும் ஒலிகள்
பெய்யும் மழையின் துளிகள்
காற்றின் பாதையில் திரும்பும் மேகம்
உள்வரும் நறுமணம் என
அவ்வளவுதான் என் கண்களுக்குத்தெரிகின்றன
அவ்வளவுதான் என் உலகமும்
மேலும் கதவின் திறவுகோல் துளைவழிகாணும்
சில மனிதர்களும்
தொடர் முயற்சி
எல்லோரையும் விட்டுவிட்டு
இந்தத் திசையில் நடக்க
எல்லா சொற்களையும் மறந்து
ஒரு சொல்லை உருவாக்க
எதையும் நினைக்காமல்
ஒரு நினைவை ஏற்படுத்த
திரும்பிப் பார்க்காமல் நடந்து வர
மரணத்தை இப்பொழுதே ஏற்க முடிந்தபொழுது
எல்லாவற்றையும் திறந்து பீறிட்டு வெளியே வரும்
திறவுகோலை கையில் கொண்டிருந்தேன்
பின் மின்னலென எதிர்ப்படுவேன்
முடிவுகள் தரும் வாழ்வு
வி
ழு
து
விட்டிருக்கும்
பிடுங்கி எறிய முடியாத மரமாய்
பெயர்க்க முடியாத மலையாய்
தேக்கித் தேக்கி நிரம்பும் குளமாய்
எதையும் கொடுக்காத பாலை மனலாய்
நீர்விட்டு தரையில் வந்து நீந்தாத மீன்களாய்
பாழடைந்து புதர்மண்டிய வீடாய்
இங்கேயே இருந்துவிடுகிறேன்
விட்டுவிடுங்கள்
என்னை வந்து எல்லாம் கடக்கும்
வந்து கடப்பன கடக்கட்டும்
சுமை
உடல் உள்ளத்தைப் பார்த்துக்கொள்வதற்கு
அது இங்கிங்கு இருக்க வேண்டும்
அதற்கு இதிது வேண்டுமென
எதையெதையோ செய்கிறேன்
உடல் உள்ளத்தைச் சுற்றி
இவரிவர்கள் இதிது
இருக்க வேண்டுமென
முன்னும் பின்னும் மேலும் கீழும்
இடதும் வலதும் குறுக்கும் நெடுக்கும்
ஓடிக்கொண்டே இருக்கிறேன்
எவ்வளவு முயன்றும் உடலையும் உள்ளத்தையும்
உரித்து தனியே வைக்க முடியவில்லை
உறங்கும்பொழுதும் கனவாய் வந்து
அணிந்துகொள்கிறது
விட்டு விலகுதல்
ஆம் நான் மட்டும்தான் எனக்கு
என் பதில்கள் கேள்விகளைச்
சொல்லித்தான் ஆக வேண்டும்
நான் உங்களுக்கு யாரென்பதை
அறிவித்துத்தான் ஆக வேண்டும்
என் முடிவுகளையும்
தெரிவித்துத்தான் ஆக வேண்டும்
என் பாதையும் இதுதானென
உங்களை விட்டுவிட்டு நடந்தே ஆக வேண்டும்
கடலுள் புகுந்து மீன்கொத்தும் பறவையாய்
காத்திருக்கிறீர்கள்
கொத்துகிறீர்கள்
முழுங்கி தொண்டையில் அலகில் தேக்குகிறீர்கள்
செரித்து உச்சியிலிருந்து கழிக்கிறீர்கள்
சினம்
என்னிடம் சில வினாக்களும் விடைகளும் மீதமிருந்தன
உன்னிடமும்
உன் முன்வைப்புகளுக்கு
ஒவ்வொரு முறையும் நான் பலியாக முடியாது
எல்லா முறையும் என்னை ஒப்புக்கொடுக்க முடியாது
இறப்பின்வழிதான்
என் வினாக்களையும் விடைகளையும்
உனக்களிக்க முடியும்
உன் நினைவில் என்னை நிலைபெறச்செய்ய முடியும்
இருப்பினும் தற்கொலை செய்துகொள்வதற்குமுன்
சந்தித்திருக்கலாம்
உன்னை ஒருமுறையேனும் கொல்ல
எல்லாவற்றிலும் படர்தல்
இலகுவாக மேலெழும்ப
எங்கும் உள் நுழைய
திசையாவும் திரும்பிக்கொள்ள
எங்கும் யாரிடமும் பிடிபடாதிருக்க
யாரின் கண்ணிலும் படியாதிருக்க
விரும்பியவாறு ஊடுருவி ஊடுருவி
எங்கெங்கும் நிலைத்திருக்க
யாவும் கண்டுகொள்ள
பிரபஞ்சத்தின்
எல்லா வெற்றிடங்களிலும் நிரம்ப
எல்லாவற்றையும் தழுவிக்கொள்ள
காற்றென உருமாறத்துடிக்கிறேன்
எல்லாமும் செய்து
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

நல்ல கவிதைகள் என்ற நிலையை தாண்டிய கவிதைகள் மேலும் எதிர்பார்க்கிறேன். நன்றி