
வெளிமானின் வெளிப்பாடு
தூறலைக் கைவட்டவனின் நிலை வினோதமானது
அவன் இசையின் ஒரு மீச்சிறு அலகைக்
கானகத்தின் சௌந்தர்ய விழியை
அலையடிக்கும் மண்ணோவியத்தைக்
கண்ணீர் தாரகையுற்ற இடத்தை
அவனால் நிரப்ப முடியவில்லை
எங்கெல்லாம் தூசு துகள்கள் ஒட்டியிருக்கிறதோ
அங்கெல்லாம் வெளிமானின் வெளிப்பாட்டைக் காணவியலாமல்
சரிந்து உடைகிறான்
அவனுக்குப் பகலொரு அனாதை
இருளொரு சூனியம்
விதிகளின் கட்டுப்பெட்டிகளுக்குள் மூழ்கியிருப்பவனைத்
தூறலும் கைவிட்டுத் தன்னளவில் இயங்குகிறது.
புதிய அத்தியாயம்
மையத்தைச் சரியாக உணர்ந்த ஒருத்தி
விளிம்பை நோக்கி அறைகூவல் விடுகின்றாள்
அவள் ஏகபோக இடையூறுகளால் துண்டாடப்பட்டு
மீண்டும் ஒரு கொதிநிலையை ஏற்படுத்துகிறாள்
அமிலத்தின் நாற்திசையும் வீரியத்தை வலுப்படுத்தினாலும்
தன் புதிய அத்தியாயத்திற்கு முகம் காட்டுகிறாள்.
நாட்குறிப்பு
என் நாட்குறிப்பில் சில பக்கங்கள்
நண்பனின் சந்தோஷத்திற்காகக் கொடுத்தேன்
சில பக்கங்கள் காயம் பட்டவர்களுக்காக் கொடுத்தேன்
சில பக்கங்கள் பாதை மறுக்கப்பட்டவர்களுக்காக் கொடுத்தேன்
சில பக்கங்கள் சுமை சுமந்து சோர்வடைந்தவர்களுக்குக் கொடுத்தேன்
சில பக்கங்கள் அடைகாக்கும் சிறகுகளுக்குக் கொடுத்தேன்
அது என்னவோ குன்றின் மேல் நதி பாய்வதைக் கண்டேன்
இசையின் மொழி நரம்பில்
நிலவு வங்கக் கடல் பார்த்து
ஆலாபனை செய்து கொண்டிருந்தது
இரலைமான் குட்டி என்னிடம் வந்து
உன்னால் பசும்புல் மேய்ச்சலை உண்டாக்க முடியுமா என்றது
நான் தண்ணீரண்டையில் சென்று
உள்ளங்காலிலிருந்து உச்சந்தலை வரை
குளிர்ச்சியை வாங்கிக் கொண்டிருந்தேன்
அன்று உடல் முழுக்க
பசும்புற்கள் புதர்ப் புதராய் மண்டிக் கிடந்தன.
மயிர் கத்தரிக்கப்பட்ட ஆடுகள்
மயிர் கத்தரிக்கப்பட்ட ஆடுகள்
சிதறடிக்கப்பட்டு ஓடுகின்றன
தேவ மகனின் தேவ குழந்தைகள்
பாடசாலையிலிருந்து வீடு திரும்பவில்லை
கனிந்த நீலோற்பலம் சாவதற்கு முன்
என்றும் இல்லாத அழகைக் கொண்டிருந்தது
மலைநாட்டின் பெண்ணொருத்தி
பண்டமாற்று செய்ய விரைந்து கொண்டிருந்தாள்
தேனையும் தினை மாவையும் வாங்கிக் கொண்டிருந்தவர்கள்
அவளை வலியப் புணரும் பொருட்டு அலைகிறார்கள்
நிஷ்டூரத்தின் உலைக்களத்தில் சிக்கியவள்
இடுப்பில் சொருகிய வாளெடுத்து வீசுகிறாள்
ஆணாதிக்கத் திமிர் பிடித்த குறிகள்
மண்ணில் வெட்டுண்டு துடிக்கின்றன.
வற்றிய முலைப்பால்
பளிச்சென்று தெரியும் வீடு ஈரத்தால் கட்டப்பட்டது
அந்த ஈரத்தைக் காண
நெடுந்தூரம் ஒட்டகங்கள் வரிசை கட்டி வருகின்றன
தாகத்தைத் தணிக்க பாலைவன விளக்கும் உடன் வருகிறது
கற்றாழைச் செடி வேரின் அடியிலிருந்து
பஞ்சகால உணவை வறட்சியிலும் ஈனுகிறது
இலந்தை முள்ளை இழுத்துக் கொண்டு ஓடும் சேரிப் பெண்
அம்மணக் குழந்தைக்கு முலைப்பால் ஊட்டுகிறாள்
அவளது வற்றிய காம்பு பல பொழுது
ஏழைக் குழந்தைகளுக்குக் கற்றாழைச் செடியாகிறது.
சிறு சிறு கற்களை அப்பங்களாக்கி
பழங்குடியில் பிறந்தவன்
முள் குத்திய காலுடன் நெடுநாள் நடந்தாலும்
அவனுக்கு
மலை ஒரு கடவுள்
வெய்யோன் ஒரு பித்து
நிழல் ஒரு தரிசனம்
தனித்தனியே பிரிந்தவொன்றைக் கலவையாக்கி
மலையுச்சிக்குக் கொண்டு செல்கிறான்
அங்கே
காய் ஒரு பங்கீடு
கனி ஒரு பங்கீடு
கிழங்கு ஒரு பங்கீடு என்றாலும்
சூரியன் தன் பங்கிற்குக்
சிறு சிறு கற்களை அப்பங்களாக்கி உண்ணத் தருகிறது.
ஆட்டுக் குட்டியின் கழுத்தை அறுத்து
ரத்தம் பிடித்துக் கொண்டிருந்தவனிடம்
அறத்தின் மேன்மையை எடுத்துரைத்தேன்
மேலும் பல ரத்தச் சொட்டுக்கள் தரையிறங்கிய வண்ணமிருந்தன.
உன்னை ஆற்றுப்படுத்த
இரவிலும் பகலிலும் சிறிதும் பெரிதுமான
பனிக்கட்டியைக் கொண்டு வருகிறேன்
இதைவிட வேறென்ன வேண்டும்.
(9)
பறவையின் வருகையும்
குழந்தையின் வருகையும்
சில பொழுது ஒன்று போல் இருந்தாலும்
ஓர் அழகைத் திறக்க சாவிகளற்ற கைகள் தேவைப்படுகின்றன.
(10)
கனவே கொஞ்ச நாளைக்குக் கைகூடாதே
கடல் மேல் நடக்க இருக்கிறேன்
(11)
என் பங்களிப்பு நீரை அள்ளித் தருவதுதான்
வாங்கும் போது பாதி நீரை விட்டு விடுகிறான்
கொடுக்கும் போதும் மிச்சத்தையும் விட்டு விடுகிறான்.
(12)
23 1/2 டிகிரி அச்சில் சுழல்வது
முதலில் பெண்ணாக இருக்கலாம்
பின் பூவாக இருக்கலாம்
பிறகு பூமியாக இருக்கலாம்.
(13)
கரும்பலகையில் ஒரு கோட்டை உருவாக்குதல்
அவ்வளவு கடினமாக இருக்கிறது
ஆனாலும்
ஒரு நேரான கோட்டை உருவாக்குதல்
காலத்திற்கும் அவசியமாகிறது.
(14)
நான் ஒரு பந்தயக் குதிரை
வாடகைக் குதிரையைப் புறந்தள்ளிவிட்டு ஓடுபவன்.
Discover more from சொல்வனம் | இதழ் 364 | 12 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
