சலூன் சிந்தனைகள்

சலூன்காரர் சிவப்பு சட்டை போட்டிருந்தார். “வாங்க தோழர்” என்றார். ராமு மெதுவாக என்னிடம் “கிழிஞ்சுது.. வா போலாம்..” என்றான். நான் அவன் சொல்வதை கேட்பதாக இல்லை. “முடிச்சிட்டு போலாம்..” என்றேன்.

ராமு, “ஏற்கனவே இங்க அஞ்சு பேர் இருக்காங்க.” என்றதற்கு நான் ஒன்றும் சொல்லாமல் ஒரு ஸ்டூலில் சென்று அமர்ந்து கொண்டேன். ராமு வேறு வழி இல்லாமல் அருகில் வந்து நின்றான்.

சுவற்றில் மார்க்ஸ், காந்தி, வள்ளுவர், காமராஜர், விவேகானந்தர் என்று கலந்து கட்டிய படங்கள் தொங்கின. ராமு என்னை முழங்கையால் இடித்து அந்த சுவற்றை நோக்கி கண் காட்டினான். நான் இருக்கட்டும் என்பது போல் தலையாட்டினேன்.

கத்திரியின் சத்தம் தவிர சலூன் அமைதியாகவே இருந்தது. சலூனில் ஒரு ஓரத்தில் புத்தக அலமாரி ஒன்று இருந்தது. உயரமாக வைக்கப்பட்டிருந்த டிவி அனைத்து வைக்கப்பட்டிருந்தது. சிகை திருத்தம் முடிந்து ஒருவர் கிளம்பினார். வரிசை ஒரு ஆள் முன் நகர்ந்ததும் நான் பெஞ்சுக்கு முன்னேறினேன். ராமுவுக்கு ஸ்டூல் கிடைத்தது. அமர்ந்தவுடன் ராமு பேசத் தொடங்கினான். “அண்ணா! அந்த டிவிய போடுங்கண்ணா..” 

“அந்த டிவி கெட்டு கெடக்கு தோழர்..” என்றார் சலூன்காரர் .

“ப்ச்..” 

“புக்ஸ் பாருங்க.. இது லெண்டிங் லைப்ரரி தான்.” 

யாருமே அதற்கு பதில் சொல்லவில்லை. எல்லோரும் சங்கடமாகவே அமர்ந்திருந்தோம். 

ஒவ்வொரு நிமிடமாக எண்ணி கொண்டிருக்கும் போது தான் அவர்கள் உள்ளே வந்தார்கள். அப்பா மகனாக இருக்க வேண்டும். மகனுக்கு பதினெட்டு பத்தொன்பது வயது இருக்கலாம். அவனை அவன் அப்பா இரு கைகளிலும் ஒரு குழந்தையை ஏந்துவது போல் தூக்கிக்கொண்டு உள்ளே வந்தார். வந்தவர் யாரையும் பொருட்படுத்தாது நேராக சலூன் நாற்காலியில் அவனை கிடத்தினார். அவனது கால்களையும் கைகளையும் X வடிவத்தில் மடித்து வைத்தார். அவன் ஒல்லியாக இருந்தான். தாடை நீண்டிருந்தது. எதிலும் நிலைக்குத்தாத கண்கள் புது இடத்தை அங்குமிங்கும் பார்த்து அலைந்தது. மஞ்சள் கறை படிந்த அவனது பற்கள் அனைத்தும் ஒன்றோடொன்று முரண்பட்டு நின்றிருந்தது. ஒரு அந்தரங்கமான புன்னகை அவன் முகத்தில் நித்தியமாக அப்பியிருந்தது. வாயில் நீர் வடிந்து அவன் நெஞ்சில் வழிந்து கொண்டிருந்தது. அவன் அப்பா ஒரு கைக்குட்டையை எடுத்து அவன் வாயை துடைத்துவிட்டார். 

எல்லோரும் அமைதியாக அவனையே பார்த்துக்கொண்டு இருந்தனர். எனக்கும் கூட ஒரு துணுக்கு பட்டது. ஒரு உந்துதல்.

மனம் “உடல்.. உடல்..” என்றது.

ராமு அவரைப் பார்த்து “சார் வரிசையில்…” என்று ஆரம்பித்து முடிக்கும் முன்னரே நான் அவன் கைகளை பிடித்து அழுத்தி வேண்டாம் என்று ஜாடை காண்பித்தேன். ராமு கண்களை சுழற்றி என்னிடம் அதிருப்தியை வெளிப்படுத்தி, சரி போகட்டும் என்பதுபோல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டான்.

எங்களிடத்தில் உருவாகிய சலசலப்பை உணர்ந்த அந்த தந்தை எங்களை பொதுவாக நோக்கி, “நார்மல் பேபி சார். பொறக்கறப்ப எல்லா பேபி மாதிரி தான் சார் இருந்தான்..”  எல்லோரையும் நோக்கி சொல்ல ஆரம்பித்தவர் என்னை பார்த்து பேச ஆரம்பித்தார். “எல்லா பேபிக்கும் வர்ற நார்மல் காய்ச்சல் தான் சார்..”  எல்லோரும் வேறு வேறு திசையில் பார்த்துக் கொண்டிருப்பதை அப்போது தான் கவனித்தேன். நான் மட்டும்தான் அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். “ஒரு கேடுகெட்ட டாக்டர் இப்படி தப்பா வைத்தியம் பாத்துட்டான் சார். இல்லேன்னா இவன் நார்மல் பேபி சார்.”

பொதுவாக எனக்கு கவனிக்கும் திறன் அதிகம் என்று யாரோ சொன்ன ஞாபகம் வந்தது. நான் அவர் சொல்ல சொல்ல தலையாட்டி கொண்டிருந்தேன். அவர் தொடர்ந்தார், “இவனுக்கு ஒரு அண்ணன் இருக்கான். அவன் நார்மலான பையன். ஏதோ ஹேர் ஸ்டைல், அட்டாக் கட்டிங்ன்னு பண்ணிட்டு வந்துட்டான். இந்தா.. இவன் அதை தொட்டு தொட்டு காமிச்சு எனக்கும் வேணும் அப்படீங்கறான். அதான் சார் அவசர அவசரமா இங்க கூட்டி வந்தேன். என்னாங்குறீங்க…” 

நான் எதையும் ஆமோதிக்கவோ மறுக்கவோ இல்லை. என்றாலும் என் மனம் இப்போது பாவம்.. பாவம்.. பாவம்.. என்று உச்சாடனம் செய்ய ஆரம்பித்திருந்தது.

“ஆனா இப்போ எவ்ளோவோ பரவாயில்லை சார். ஆய் வந்தா கூட சொல்வான். இப்போகூட பாருங்க அட்டாக் கட்டிங் தான் வேணும்ங்கிறான்..” அவர் தொடர்ந்து என்னைப் பார்த்தே பேசிக் கொண்டிருப்பதைத் தவிர்ப்பதற்காக நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன். அவர் சலூன்காரரிடம் பேச ஆரம்பித்தார். என்ன மாதிரி கட்டிங் வேண்டும் என்று சொன்னார். சொல்லிவிட்டு மகனை நோக்கி திரும்பி “வெட்டிக்கலாம் டா..” என்று அதட்டினார். அவன் காதில் விழுந்ததா என்றே தெரியவில்லை. அவன் கை கால்கள் தனித்தனியாக செயல்பட்டுக் கொண்டிருந்தன. ஆகாயத்தில் ஏதோ வரைந்து கொண்டிருந்தன. அவனது ஒரு கண் இடது புறமும் மறு கண் வலது புறமும் நோக்கியிருந்தன. அவனது வாயில் உமிழ் நீர் வழிந்து கொண்டிருந்தது. கை கால் பரப்பி கிடந்தவனை மீண்டும் மடித்து நாற்காலியில் பதித்தார். அவன் சிரித்துக் கொண்டே திமிறினான். 

அந்த தந்தை, “டேய்.. இதோ என்ன மாதிரி உக்காரு பாப்போம்…” என்று பக்கத்து நாற்காலியில் அமர்ந்தார். “இந்த மாதிரி இந்த மாதிரி…” மகன் வேறு எங்கோ இருந்தான். அவர் சலூன்காரரை நோக்கி, “அவன் செட் ஆகுறதுக்கு நேரம் ஆகும். அவனுக்கு நம்பிக்கை வரலை. எனக்கு சவரம் செஞ்சு விடுங்க. அதை பாத்தா பேபிக்கு நம்பிக்கை வரும்..” என்றார்.

ராமு ஏதோ ஒரு குழந்தைக்கு சோறூட்டுவது போல் வலது கையை முன் நீட்டி குவித்து அவரிடம் பணிவாக, “சார், இத்தன பேரு லைன்ல இருக்கோம்..” என்றான். நான் அவன் கைகளை பிடித்து கீழிறக்கி, “பரவால்ல நீங்க முடிங்க மொதல்ல..” என்றேன். 

ராமு ஒன்றும் சொல்லாமல் அமர்ந்தான். அங்கிருக்கும் அனைவருக்கும் சேர்த்து நான் முடிவெடுத்தது போல் ஆகிவிட்டது. அதை நான் யோசித்து சொல்லவில்லை. அந்த கணம் என்னை அப்படிச் சொல்லத் தூண்டியது. அதே கணம் தான் ராமுவை ஆட்சேபிக்கவும் வைத்தது. அதை உணர்ந்த உடனே நான் அக்கம் பக்கம் பார்த்தேன். எல்லோரும் அவரவர் உலகத்தில் இருந்தனர். ஒருவன் மட்டும் என்னைப் பார்த்து தலையை ஆட்டி சிரித்துக்கொண்டிருந்தான். நான் ஏதோ கலவையான உணர்வால் உந்தப்பட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டேன். என் வலது புறம் ராமு அமர்ந்திருந்தான். அவனை நோக்கி முகத்தை இப்போது வைக்க இயலாது. எதிப்புறம் அந்த தந்தையின் முகம் சலூன் கண்ணாடியில் தெரிந்தது. அங்கேயும் பார்வையை வைத்துக்கொள்ள இயலாது. இடதுபுறம் இந்த புதிய ஆள் இன்னும் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் மேலே முகத்தை நிமிர்த்தி கண்களை மூடிக்கொண்டேன்.

சிறுது நேரம் கழித்து கண்களைத் திறந்தேன். இடதுபுறம் உள்ள அவன் இன்னும் என்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவனைப் பார்க்காமலேயே உணர்ந்தேன். எரிச்சலுற்றேன். அவனை நேர்கொண்டு பார்க்கையில் அதே போல் தலையை ஆட்டிக்கொண்டு இளித்துக் கொண்டிருந்தான். 

“என்ன சார். ஏன் என்னைப் பார்த்து சிரிச்சிக்கிட்டே இருக்கீங்க?” 

எல்லோரும் என்னைப் பார்த்தார்கள். சிறிது நேரம் அமைதி நிலவியது. சலூன்காரர் மீண்டும் கத்திரி போடா ஆரம்பித்தார். அந்த பையன் நாற்காலியில் அமர்ந்திருந்தான். எல்லோரும் மீண்டும் அந்த பையனை பார்க்க ஆரம்பித்தார்கள். அவனது அட்டாக் கட்டிங் முடிந்திருந்தது. 

அவனுடைய அப்பா ஏற்கனவே அவரது கட்டிங்கும் சேவிங்கும் முடித்திருந்தார். “அட்டாக் கட்டிங் சூப்பரா இருக்கு பாருடா..’ என்றார் அவனிடம். “பாக்குறான் பாருங்க.. பாருங்க..” பொதுவாக எங்களிடம் சொன்னார். சிலர் பார்த்தனர். சிலர் கவனிக்கவில்லை. சிலர் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்தனர்.

அந்த நேரம் பார்த்து ஒரு முதியவர் புதிதாக உள்ளே வந்தார். வந்தவர் முதலில் பார்த்தது அந்த பையனை. அவரிடம் ஒரு சின்ன ஸ்தம்பித்தல், பிறகு ஒரு அர்த்தமேற்றல், இறுதியாக சகஜ நிலை ஆகிய மூன்றும் ஒரு நொடிப் பொழுதில் அவர் முகத்தில் நிகழ்ந்து மறைந்ததை நான் நேரடியாக கண்டேன். இதேதான், இதுவே தான் எங்களுக்கும் நடந்தது. எனக்கும் நடந்தது. 

நான் உடனே திரும்பி அந்த அப்பாவை பார்த்தேன். அவர் ஏற்கனவே கண்டு கொண்டிருந்தார். இதுதான் நடக்கும் என்று அவருக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். 

வந்தவரிடம் அந்த அப்பா ஆரம்பித்தார், “நார்மல் பேபி தாங்க. பொறக்கறப்ப எல்லார் மாதிரியும் நார்மலா தான் இருந்தான். ரெண்டு மூணு வயசு வரைக்கும் நல்லா தான் இருந்தான். நல்லா நடந்து கொண்டிருந்தான். சாதாரண காய்ச்சல் தான். ஒரு பாலா போன டாக்டர் இப்படி பண்ணிட்டான்.. இவனுக்கு ஒரு அண்ணன் இருக்கான். அவன் நார்மல் பேபி. அவன் ஏதோ ஒரு அட்டாக் கட்டிங் வெட்டிக்கிட்டு வந்திருந்தான். அதைப் பார்த்த உடனே இவனும் வேணும்னு சொல்லிட்டான்னா பாத்துக்கோங்க..” என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டு சென்றார். 

வந்த முதியவருக்கு ஒன்றும் புரியவில்லை. எப்படி பதில் பேசுவது என்று வெறித்து நின்றார். பாவம். அவர் மையமாக தலையை ஆட்டிக் கொண்டு உள்ளே வந்து ஸ்டூலில் அமர்ந்தார். 

சட்டென்று நிறுத்திக் கொண்ட அந்த அப்பா தன் மகனை எப்படி தூக்கிக் கொண்டு வந்தாரோ அதேபோல் வெளியே தூக்கி கொண்டு சென்றார். உள்ளிருந்த நாங்கள் அனைவரும் ஒரே போல் வெளியே பார்த்தோம். அவர்களது கார் கிளம்பும் வரை எங்கள் கவனம் வெளியேவே இருந்தன. 

அவர்கள் சென்று மறையும் வரை அவர்களையே நாங்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். அவர்கள் மறைந்தார்கள். நாங்கள் அனைவரும் ஒரே நேரத்தில் திரும்பி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். 

“நார்மல் பேபி..” என்றார் சலூன் காரர்.

என்னைப் பார்த்து இளித்தவன் இளித்துக்கொண்டே, “ஹெலோ, ஐயம் ஹரி..” என்றான்.

நான் லேசாக சிரித்து வைத்தேன்.

மீண்டும் சலூன்காரர், “பாவம்..” என்றார்.

ஹரி சட்டென்று அவரைப் பார்த்து திரும்பி, “என்ன சார் பாவம்.. அந்த பையன் அப்படிப் பொறந்துட்டான். இதுல பாவம் என்ன புண்ணியம் என்ன?” 

“இல்ல.. ஒரு சின்ன அனுதாபம்.. இதுல என்ன தப்பு..” 

“தப்பு.. சரி.. பத்தி பேசல சார். நான் இந்த மாதிரி நிறைய பாத்துட்டு தான் இருக்கேன். அந்த பையனுக்காக வருத்தப்படுறேன். ஆனா அவனோட அப்பா இங்க என்ன பண்ணினாருன்னு பாத்தீங்களா? இங்க யாராச்சும் கவனிச்சீங்களா?” 

என் அருகில் அமர்ந்திருந்த ராமு ஆர்வமாக கை தூக்கி நான் கவனிச்சேன் என்றான். “தன்னோட பையன காரணம் சொல்லி வரிசை தாண்டி போனாரு. வரிசை தாண்டுறத ரொம்ப காலமா செஞ்சுகிட்டு வருவாரு போல.” 

“அதுசரி.. ஆனா அத நாம ஏன் அனுமதிச்சோம்.” 

“ஏன்னா, என்னோட நண்பன் பெரிய கருணாமூர்த்தி பாருங்க, அதை சரின்னு சொன்னாரு. நாமளும் எதுவும் சொல்ல முடியல..”  என்று என்னைப் பார்த்து சொன்னான் ராமு.

நான், “டேய்.. கொஞ்சம் மனிதாபிமானம் வேண்டாமா.. அந்த ஆளு மனசு எவ்ளோ கஷ்டத்துல இருக்கும். நாம எல்லாம் மனுசங்க தான். ஞாபகம் இருக்கட்டும்.”  என்று அந்த தந்தைக்காக வாதாடுவது போல் எனக்கா வாதாடினேன்.

ஹரி தொடர்ந்தான். “நீங்க சொல்றது சரிதான். ஆனா அவங்க ரெண்டு பேரும் இங்க இருந்தப்ப நாம எல்லாரும் ஒரு குற்றவாளி கூண்டுல நிறுத்தி வைக்கப்பட்டோம்ன்னு யாரவது உணர்ந்தீங்களா? இல்ல எனக்கு மட்டும் தான் அந்த மாதிரி தோணுதா?

ராமு “குற்றவாளியா? அந்த பையன் அப்படி இருக்க நாமளா காரணம். “கொஞ்சம் இடைவெளி விட்டு ஓ.. அப்படித்தான் அந்த பையனோட அப்பன் நினைக்கிறானோ? அதுக்காக நாம அவனுக்கு முன்னுரிமை கொடுக்கணுமோ? என்று ராமு அடுக்கிக்கொண்டு சென்றான். “எனக்கு என்ன சங்கட்டம்ன்னா இங்க ஒரு ஒழுங்கு இருந்துச்சு. வரிசை. அது ஒரு ஒத்திசைவு. அது குலைஞ்சு போச்சு. இப்போ யார் வேணுன்னாலும் தன்னோட குறையை முன்னிறுத்தி வரிசை தாண்ட முடியும்.” 

ஹரி ராமுவை மறித்து ஆரம்பித்தான். “அப்படியா சொல்லறீங்க? ஹ்ம்ம்.. அது ஒரு பார்வை. ஆனா இந்த வரிசை, ஒத்திசைவு எல்லாம் சலூன்க்காரர் கிட்ட இருக்குற அதிகாரத்தால இங்க நிலை நாட்டப் பட்டிருக்கு. ஏன்னா நாம இப்போ இருக்கிறது அவரோட இடம். அந்த அதிகாரம் இல்லாத இடத்துல இந்த ஒத்திசைவு இருக்கிறது இல்ல.” 

நான் இந்த உரையாடலில் விடுபட்டவன் போல ஆகிவிட்டேன். அதை சரிக்கட்ட உள் நுழைந்தேன். ஹரியைப் பார்த்துக் கேட்டேன். “நீங்க சொல்றதைப் பார்த்த அந்த பையனோட அப்பா இந்த அதிகாரத்தை நெகிழச் செய்ததாகத் தானே அர்த்தம். அது ஒரு முதிர்ச்சியான விஷயம் தானே..” 

“வெங்காயம்..”  ஹரி சிரித்தான். “பலம் இல்லாதவன் செய்யற தந்திரம்ன்னு நான் சொல்வேன். வலிமை இல்லாதவங்க கண்டுபுடிச்சது தானே இந்த மனிதாபிமானம். ஹாஹா..” 

எனக்கு சுள்ளென்று வந்தது. என்னை மறுத்துப் பேசியவனை நான் மடக்கியாக வேண்டும். “கருணையோ மனிதாபிமானமோ எளியவர்கள் கண்டுபிடிச்சதில்லை. தர்மம் தன்னை தானே சரி செஞ்சுக்கறப்ப நடக்கறது. அந்த கருணை இல்லைன்னா இந்த உலகம் இருக்காது. கடலோட கருணை, எரிமலையோட கருணை மாதிரி.” 

“சார் கவிதை எழுதுவாரோ?” ஹரியின் கேள்விக்கு ராமு, “அதெல்லாம் மனம்போல எழுதுவாரு.. படிக்கத்தான் ஆளில்லை. “

எல்லோரும் சிரித்தனர். நான், “அப்போ அந்த அதிகாரத்தை ஒத்துக்கனுன்னு சொல்லறீங்களா?” 

“உலக ஒழுங்கின் பொருட்டு ஒத்துக்களான்னு சொல்றேன்..”  என்றான் ராமு.

அதை நிராகரிப்பது போல் தலையை ஆட்டி ஹரி சொன்னான். “ரொம்ப சிம்பிள். வலிமையானவனுக்கு வழிய விடு.” 

எனக்கு சூடு தலைக்கேறியது. கெட்ட வார்த்தை ஒன்று சொல்ல வந்தேன். அந்நேரம் பார்த்து, தம்பிகளா நான் ஒன்னு சொல்லலாமா என்று சலூன்காரர் இடைவெட்டினார். 

நாங்கள் ஒருசேர அவரைப் பார்த்தோம். நாங்கள் அவரைப் பார்த்தவுடன் சிரிக்க ஆரம்பித்தார். அப்படியானால் ஏதோ வலுவாக சொல்ல வருகிறார். “தம்பிகளா நீங்க என்னமோ புதுசா சிந்தனையை கண்டுபுடிச்ச மாதிரி பேசிட்டு இருக்கக் கூடாது. என்ன சரியா..” 

“அப்படீன்னா நீங்க சொல்லுங்க..” ஹரி எதிர்த்தான்.

சலூன்காரர் குரலை செருமினார், “சிறிது நேரம் கண்களை மூடி தன்னை தொகுத்துக் கொண்டார். ஏதோ தருபவர் போல் என்னை நோக்கி கை காண்பித்து பிறரை நோக்கி ஆரம்பித்தார், “தம்பி சொல்ற கருணைங்கிறது, இயேசு சொன்ன கருணை. அதாவது எளிமையானவங்களுக்கு வலுவில்லாதவங்களுக்கு நாம் காற்ற அன்பு. அது இன்க்ளூசிவா இருக்கணும். அந்த உள்ளடக்கிய தன்மை எல்லா அதிகாரத்தையும் வெல்லும். அது கொண்டுவரக்கூடிய ஒழுங்கு எப்பவும் கலையப்படாத ஒழுங்கா இருக்கும்.” 

சிறிது இடைவேளை விட்டு ராமுவை கை காண்பித்து தொடர்ந்தார், “தம்பி சொல்ற ஒழுங்கு, பிளேட்டோ சொன்ன ஒழுங்குதான். அந்த ஒழுங்கு ஒரு உடோபியன் கருத்து.” ஹரியை நோக்கி, “இந்த தம்பி சொல்றது தத்துவ ஞானி நீட்சே சொல்ற அதிமனித தன்மை.

நீங்க திறமை, கருணை, ஒழுங்கு-ன்னு மூணு தரப்பை எடுத்து அதுக்கு வால்பிடிச்சு வாதாடுறீங்க. அதெல்லாம் டைலெக்ட்டிக்கலா முரண்பட்டு ஒரு இஙக்ளுசிவ் அன்பு உருவாகுமான்னு பாருங்க. நான் யாருக்கும் சப்போர்ட் பண்றேன்னு நினைக்க வேண்டாம்” என்னை கை காண்பித்து “தோழர் சொல்ற கருணை மூலமா தான் அந்த இஙக்ளுசிவ் அன்பு உருவாகும்.” எனக்கு சின்ன பதக்கம் குத்தியது போல் இருந்தது.

நான் வாயெடுப்பதற்குள் ஹரி தொடங்கியிருந்தான். “இன்க்ளூசிவான அன்பு, கருணை மூலமா உருவாகிற ஒழுங்குக்கு ஒற்றைப்படைத் தன்மை வந்து சேராதா? அது அதிகாரமா ஆகாதுன்னு என்ன நிச்சயம். அப்புறம் இங்க ஒரு முரண் இருக்கு. அதாவது நீங்க சொல்ற அந்த அன்போட விளைநிலம், அல்லது அதை ஒரு தனி ஆன்மா கண்டுகொண்ட முதல் இடம்ங்கிறது குடும்பம் தான். குடும்பம் அப்படின்னாவே அது எக்ஸ்க்ளுசிவ் அமைப்பு தான். அப்பா அம்மா பிள்ளைகள்ங்கிற பிரத்தியேக தன்மை. அங்க தான் அன்பு முதல்ல அடையாளம் காணப்படுகிற இடம், விளைகிற இடம். உள்ளடக்கிய தன்மைய வலியுறதால எல்லா பிரத்தேயகமும் சாவடிக்கப் படுது. பிரத்தேயகம் இல்லைன்னா அன்பு பாசம் கருணை மாதிரியான விழுமியங்களோட உருவாக்க ஆதார சூழ்நிலை இல்லாமல் போகிடும். அப்புறம் இஙக்ளுசிவ்ன்னு சொல்லி சர்வாதிகாரம் தான் கோலோச்சும்.” 

அங்கிருந்த வேறொருவர், “அப்போ வசுதெய்வ குடும்பகம் அப்படின்னு சொல்றது?” என்று கேட்டார்.

“சார் கொஞ்சம் சும்மா இருங்க. தனி குடும்பத்தோட விரிந்த தன்மை தான் இந்த உலகளாவிய குடும்பம்ங்கிற கான்செப்ட். இந்த மாதிரி எல்லா ஆதார உணர்ச்சிகளுக்கும் கருத்துக்கும் அதற்கு தகுந்த மாதிரி ஒரு உடோபியன் வடிவம் இருக்கு,. ஹ்ம்ம்.. காமம் அப்படிங்கற ஒரு அடிப்படை உணர்ச்சிக்கு காதல்ன்னு ஒரு உடோபியன் ஃபார்ம் இருக்கும். கோபத்துக்கு வீரம், அன்புக்கு கருணை, இந்த மாதிரி நிறைய இருக்கு.”  ஹரி இப்படி சொல்லி வரும்போதே அவனது அறிவு விஸ்தாரத்தை எல்லோரும் வியந்தனர். எனக்கு கெட்ட வார்த்தை வந்தது. அவனை எப்படியாவது மடக்கியாக வேண்டும்.

நான், “அப்படி எல்லாம் சொல்லிட முடியாதே.” என்றேன்.

“வேற எப்படி சொல்லுவீங்க?” 

“நீங்க புனிதம், உன்னதம் அப்படின்னு இந்த உலகத்தில் எதுவுமே இல்லைன்னு சொல்ல வரீங்களா… அப்போ மொராலிட்டி?” 

“மொராலிட்டி இருக்கு. ஆனா நீங்க சொல்ற கருணையோ, அவர் சொல்ற உலக ஒத்திசைவோ இல்ல. திறமையானவன் தன் திறமையை நிறைவேற்றுவது தான் மொராலிட்டி. அப்படி நிறைவேற்றப்படும் திறமை புதிய மதிப்பீடுகளை உருவாக்கும்.” 

சலூன்காரர், ” இது நீட்சே சொன்னது.”  என்றார்.

சற்று துணுக்குற்ற ஹரி, “சரி நீட்சே வேற என்னவெல்லாம் சொன்னாரு?”  என்றான். 

சலூன்காரர் திக்கினார். ராமு குறுக்கிட்டு, “அப்போ சமூகத்தில் இருக்கும் எல்லா தனி ஆளுமைகளும் அவங்கவங்க உச்சபட்ச திறமைகளை வெளிப்படுத்திக்கிட்டு இருந்தாங்கன்னா சமூக ஒழுங்கு எப்படி இருக்கும்? சமூக ஒழுங்கு இல்லாம திறமையை வெளிக்காட்டும் சூழல் ஒரு திறமையானவனுக்கு எப்படி வாய்க்கும்?” 

“எனக்கு ராமுவின் கேள்வி கொஞ்சம் குழப்பமா இருந்தது.”  ஹரி, “நீங்க சொல்றது புரியல.”  என்றான்.

அவன் அப்படி சொன்னது தான் தாமதம், ராமுவுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அவன் மேலும் கேட்டான், “சோசியல் ஹார்மனி இல்லாம திறமை எப்படி வெளிப்படும். அப்படியே வெளிப்பட்டாலும் அதை அடையாளம் சொல்ல சோசியல் ஹார்மனி வேணும். ஒரு யதார்த்த சமூகத்துக்கு நீங்க சொல்ற புதிய மதிப்பீடு ஒரு கருத்தாக தான் வந்து சேரும். அப்படி வந்து சேரும் கருத்தை சமூகம் ஒத்துக்கலைன்னா அந்த புதிய மதிப்பீட்டுக்கு என்ன பொருள்?” 

ராமு தொடர்ந்தான், “என்னைப் பொறுத்தவரை சமூக ஒழுங்கு தான் பிரதானமானது. அப்புறம் அதன் காரணமாத் தான் திறமை, கருணை மற்ற எல்லாம். சமூக அங்கங்களுக்கு இடையே நிலவும் முரணற்ற ஒழுங்குதான் நாம எல்லோரும் கனவு காணுகிற பொன்னுலகம். அதை அடையக்கூடிய வெவ்வேறு வழிகளைத்தான் மொராலிட்டின்னு நாம சொல்றோம்.”  

ராமு பல விஷயங்களை கலந்து கட்டி குழப்பி அடித்தான். என்றாலும் இந்த பதிலை நான் ஹரிக்கு மறுமொழியாக சொல்லியிருக்க வேண்டும். இந்தமாதிரி பதில் எனக்கு தோன்றாமல் போய்விட்டது. ராமு சொல்கிற ஒழுங்கிற்கு பதில் சோசியல் கிரேஸ், பெனெவெலென்ஸ்-ன்னு பல உணர்வுப்பூர்வமான சொற்களை நிரப்பி அடித்து விட்டிருக்க வேண்டும். என்றாலும் ராமுவுக்கு இப்போது அறிவார்ந்த திருப்தி தந்துவிடக்கூடாது. 

நான், “அதுல சென்ஸ் ஆஃப் ஜஸ்டிஸ் எங்க இருக்கு?”  என்றேன்.

“புரியல..”  என்றான் ராமு. எனக்குப் புது வேகம் பிறந்தது. “சமூக ஒழுங்கப் பத்தி பேசுற நீ, சமூக அடுக்கு பத்தி எதுவும் சொல்லல. சமூக அடுக்கில கீழ இருக்கவன் ஏன் இந்த ஒழுங்க ஒத்துக்கணும். இது அதிகாரத்தை நிலை நாட்டுற விஷயமில்லையா? புரட்சின்னு சொல்ற அதிகார தலைகீழாக்கம் நடக்கவே கூடாதுன்னு சொல்றியா?”  நான் சொல்லி வரும்போதே எனக்கு உருவாகி வந்தது. “அதனால தான் நான் சொல்றேன் மொராலிடீங்கறது எளியோர் மேல் கருணையோடு இருக்கறது.”  என்றேன்.

ஹரி இதற்கு எதிர்மொழி சொல்லக்கூடாது என்று விரும்பினேன், ஆனால் அவன் தொடங்கினான், “பிரதர்! அவர் சொல்ற சோசியல் ஹார்மனி-யும் சரி அதற்கு எதிரே நீங்க சொல்ற சோசியல் ஜஸ்டிஸ்-ம் சரி, ரெண்டும் உடோபியன் ஐடியா தான்.”  என்றான்.

எனக்கு பொத்துக்கொண்டு வந்தது. “அப்போ சமச்சுவம்.. இல்ல.. இது.. அந்த இது..”  எனக்கு சட்டென்று அந்த வார்த்தை பிடி கிடைக்கவில்லை. அப்புறம் கிடைத்தது. “அப்போ சமத்துவம்-ங்கிறது எல்லாம் வீண் வேலையா? அதுதான் சொல்ல வாரீங்களா?”  நான் கத்தினேன். 

“எஸ்ட்ரீம் பொசிசன் எடுத்து பழக்கமா உங்களுக்கு.?”  கேள்வி கேட்டால் அதற்கு வேறொரு கேள்வியையே பதிலாகத் தருகிறான் இந்த முட்டாள். அவனை தோற்கடித்தே ஆக வேண்டிய அக உந்துதல் என்னுள் பீறிட்டது. ஹரி மேலும் சொன்னான், “வர்க்க முரணை சுட்டிக்காட்டி திருத்த ஒரு தத்துவமும், அந்த தத்துவத்தால் வழிநடத்தப்படும் ஒரு வலிமையான தலைவனும் தான் தேவை.”  

அங்கிருந்த அந்த வேறொருவர், “எப்படி! ஹிட்லர் மாதிரியா அல்லது ஸ்டாலின் மாதிரியா. எத்தனை தலை கொடுத்து அந்த வர்க்க முரணை சரி செய்வீங்க?” 

அதை கேட்டவுடன். “அடடா.. ச்சை.. இதை நான் சொல்லிருக்க வேண்டிய பதில். சட்டென்று தோன்றாமல் போயிற்று..” 

அமைதியாக இருந்த சலூன்காரர் சட்டென்று, “சார் மார்க்சியத்தை தப்பா பேசாதீங்க..”  என்றார். “ஒரு தத்துவமா மார்க்சியம் சரியாத்தான் இருக்கு. அதை நடைமுறைபடுத்தும் முறைமைதான் தாப்பாகிடுச்சு.” 

“ப்ச..” 

“மார்க்சியத்தை போதுமான அளவு ஜனநாயகப் படுத்தல. அதற்கு நேர்மாறா மார்க்சிய சித்தாந்தம் கம்யூனிச கட்சியின் தனியுடமை ஆகிடுச்சு. கட்சி சித்தாந்தத்துக்கு வெளியே இருக்கும் பெரும் திரளை கையாள வன்முறைங்கிற முறைமை பிரயோகப் பாடுத்தீட்டாங்க.”  என்றார் சலூன்காரர்.

நான், “எங்கேயோ படிச்சுட்டு வந்ததை சரியா ஒப்பிச்சிடீங்க, நான் கைதட்டுறேன்; கால்ல கூட விழறேன். ஆனா இங்க பேசிகிட்டு இருக்குற விஷயத்துக்கும் நீங்க சொல்ற விஷயத்துக்கும் என்ன சம்பந்தம்? ஏதோ நானும் ஒன்னு சொல்றேன்னு ஏதாவது சொல்லக்கூடாது.” எனும்போது இப்போதுவரை கைநழுவிக்கொடிருந்த மையம் ஒன்று வசமானதின் திருப்தி வந்தது. 

“தம்பி.. நீங்க எல்லாம் எபிஸ்டோமொலொஜிக்கலா அப்ரோச் பண்றீங்க. நான் டைலெக்ட்டிக் அப்ரோச் பத்தி சொல்றேன். அதாவது அந்த தந்தையோட செயலை வலிமை, ஒழுங்கு, கருணைன்னு சில கூறுகளை முன்னிறுத்தி அலசுறீங்க. நான் ஹிஸ்டாரிக் டைலெக்ட்டிக் மெத்தெட் யூஸ் பண்ணி இந்த மொத்த நிகழ்ச்சியை புரிச்சுகிறேன். உதாரணமா உங்களோட நிலைப்பாடு தீசிஸ், அதோட எதிர் நிலைப்பாடு ஆன்டி தீசிஸ். ரெண்டு கலந்து புதுசா சின்தெசிஸ் உருவாகும்.”  என்று சொல்லி முடிக்கும்போது சலூன்காரருக்கு எதையோ வெற்றிகரமாக  நினைவுக்கு கொண்டுவந்த நிறைவு முகத்தில் தெரிந்தது.

எனக்கு தலை சுழற்றி அடித்தது. ” சார்.. என்ன நடந்தாலும் நமக்கு என்ன தெரியுமோ அதுக்கு தோதா ஏதாவது சொல்லக் கூடாது. சரி உங்க வழிக்கே வர்றேன். உடற்குறையுடன் குழந்தையைப் பெற்றெடுத்த அந்த தந்தையின் சோகத்துக்கு மார்க்சியத்தின் பதில் என்ன?”  என்றேன்.

“அது.. ”  என்று சலூன்காரர் திணறினார். எனக்கு இன்னும் வெற்றி பெற்ற உணர்வு வரவில்லை. இந்த வாக்குவாத எண்ணப் பெருக்கை அப்படியே நூல் பிடித்து பேசிப் பேசி வளர்த்தால் இங்குள்ள அனைவரையும் படிய வைத்து விடலாம் என்றிருந்தது. இதோ வெற்றி.. இதோ வெற்றி.. என்று மனம் எக்களித்தது.

“ஆனா அதுவா இங்க கேள்வி?”  என்று ஆரம்பித்தான் ஹரி. ” நீட்சேவின் அதிமனிதனா, பிளேட்டோவின் ஒழுங்கா, இயேசுவின் கருணையா, மார்க்ஸின் டைலக்டிக்ப் பார் வையா? எது மொராலிட்டி? அதுதான் கேள்வி.

எனக்கு வெடித்துவிட்டது. “டேய் சுன்னி..”  என்றேன். அவனை அதிர்ந்தான். “சாதாரண அடிப்படை மனித உணர்ச்சியை அறிவாளித்தனமா கையாளரேன்னு பேசிக்கிட்டே போற?” 

“உனக்கு மட்டும் தான் வார்த்தை பேச வருமா?”  என்று எழுந்தான் ஹரி.

நான் அவனை விட வேகமாக எழுந்து “உன்ன விட பலசாலி உன்ன மிதிக்கலாம் அதுதானே நீ சொல்ற மொராலிட்டி. இப்போ பாத்துரலாம் யார் பலசாலின்னு.”  கையை மடித்து விட்டேன். 

ஹரி அதிர்ந்து நின்றான்.

ராமு எழுந்து என்னை தள்ளி வெளியே கூட்டி வந்தான். சலூன்காரர் கூடவே வெளியே வந்தார். “தம்பி கோவிச்சுக்காதீங்க..” 

“பின்ன என்ன-ண்ணா. சாதாரண மனித உணர்ச்சியே இல்லதமாதிரி. அடிப்படை மனித உணர்ச்சி மேல இத்தனை தர்க்க சிந்தனை வைக்கணுமா? அந்த அப்பனை பாத்து சாரதாரணம அனுதாபப் படுற உணர்ச்சியை இத்தனை சொல் போட்டு மூடி மறைக்கணுமா?’

சலூன்காரர், ” இல்ல.. தம்பி. அந்த தோழர் தனி மனிதனோட அதிகாரத்தையே பெருசா நினைக்கிறாரு.. நீங்க பொறுமையா இருங்க, ஒரு சின்தசிஸ் உருவாகும். ” 

“போடா லூஸு..”  என்று கை ஓங்கினேன். சரியான சமயத்தில் ராமு என்னை தள்ளி விட்டான். கீழே விழுந்த நான் எழுந்து யாரையும் பார்க்காமல் எதிர் திசையில் நடக்க ஆரம்பித்தேன்.

மனம் சின்தசிஸ் என்ற சொல்லை பிடித்துக்கொண்டது.

சின்தசிஸ்.. சின்தசிஸ்.. சின்தசிஸ்.. என்று வாய் விட்டு சொல்லிக் கொண்டும் பற்களை வெருவிக் கொண்டும் நடந்தேன். 

ராமுவும் சலூன்காரரும் என் பின்னால் வருவது போல் இருந்தது. நான் வேகமாக நடையெடுத்தேன். சின்தசிஸ்.. சின்தசிஸ்.. என்று மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

ராமு வேகமாக என் பின்னால் வந்து என் தோளைத் பிடித்து நிறுத்தினான். மனம் சின்தசிஸ்.. என்றது. “எங்கடா போற..” என்றான். 

மனம் சின்தசிஸ்.. என்றது.

“சொல்லுடா..” என்றவனை அவனுக்கு பின்னால் வந்து சேர்ந்த சலூன்காரர் அவனைத் தொட்டு எதிர்பக்கமாக கை காண்பித்தார். ராமு அங்கே பார்த்தான்.

சின்தசிஸ் சொல்வதை நிறுத்திக் கொண்டு அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த திசை நோக்கி நானும் திரும்பினேன். அங்கே அந்த தந்தை ஒரு மருந்தகத்தில் வரிசை தாண்டி கொண்டிருந்தார். X வடிவத்தில் அவர் கையில் அந்த பையன்.

அதை பார்த்தவுடன் கோபாவேசமாக விறு விறுவென்று சென்று அவரைத் தொட்டேன். 

என்னை நோக்கி திரும்பியவர், நான் வாயெடுக்கும் முன்னதாகவே தயக்கமேதும் இல்லாமல் புதிதாக ஆரம்பித்தார், “நார்மல் பேபி தம்பி.. பொறக்கறப்ப நார்மலாத்தான் இருந்தான்..” அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே நான் அவரை பளாரென்று அறைந்தேன். நிலை தடுமாறி விழப்போனவரை ராமு தாங்கிப் பிடித்தான். அந்த நிலைகுலைவில் அவர் கையிலிருந்த X என் கைக்கு நழுவி விழுந்தது.

எல்லோரும் ஸ்தம்பித்து நின்றோம். அமைதியானோம். எழுந்து நின்ற தந்தை ஏதும் சொல்லாமல் தரையை நோக்கியே நின்றிருந்தார் 

சில வினாடிகள் சென்றது. என் கைகள் கனக்க ஆரம்பித்தது. பிறகு வலிக்க ஆரம்பித்தது. என்றாலும் அமைதியாக இருந்தோம். 

ஒரு மெல்லிய முணுமுணுப்பு. நான் அதை உணர்ந்து காதை அருகில் கொண்டு சென்றேன். அது வாய் திருகி, எச்சில் வழிய, இழுத்து இழுத்து “நா..மல்ல்..பிபி..” என்றது.


Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.