இலாசடி – ககோலியன்

ஒரு குழுமத்தில் செங்கல் செய்யும் யந்திரத்தின் காணொளி  பகிர்ந்தார்கள். அது ஒரு நாளைக்கு ஒன்றரை லட்சம் செங்கல்கள் செய்யும்; 150 தொழிலாளர்கள் வேலையை அது ஒன்று மட்டுமே செய்யும். இது இந்தியாவில் கண்டுபிடித்த யந்திரம், இனி இந்தியாவில் வானளாவ உயரும் கட்டிடங்கள் எழும்பப் போகின்றன, எகானமி இன்னும் எப்பிஷியன்ட் ஆகப் போகிறது என்றெல்லாம் புளகாங்கிதம். 

செங்கல் சூளையில் வேலை செய்பவர்கள் கோடிங் கற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்றைக்கு சொன்னார்கள்- மனித ஆற்றல் இன்னமும் மேன்மையான வகைகளில் வெளிப்படும். அங்கேயும் வேகமாக ஆட்டோமேட் ஆகிறதே என்றால் அது க்ளுகோட், பிபிஓ மாதிரியான துவக்க கட்ட வேலைகளுக்கு தான் வேட்டு வைக்கும், இதனால் லிபரேட் ஆகும் மனித ஆற்றல் இன்னும் படைப்பூக்கமிக்க பணிகளுக்கு திரும்பலாம் என்று இன்று சொல்கிறார்கள்.

படைப்பாளிகள் என்னவென்றால் எங்கள் எழுத்தை ஏஐ திருடுகிறது, கதை எழுத மாட்டோம் என்று ஸ்ட்ரைக் செய்கிறார்கள், நடிகர்கள் ஒரு முறை தலை காட்டினால் அவர்கள் தலையை காலகாலத்துக்கும் பயன்படுத்திக் கொள்வோம் என்று ஸ்டூடியோக்கள் கன்டிஷன் போட்டு வாய்ப்பு தருகின்றன, ஓவியர்கள் தங்கள் ஓவியங்களை பாதுகாத்துக் கொள்ள வழக்கு தொடுக்கிறார்கள்.

இப்படி எல்லாவற்றையும் ஆட்டோமேட் செய்தால் அப்புறம் நாம் செய்ய என்ன வேலை இருக்கிறது? அரசாங்கம் வேலை வாய்ப்பு உருவாக்க வேண்டும் என்றால் அது எப்படி முடியும்? 

யாருக்கும் வேலை கிடைக்காது என்று சொல்லவில்லை. இன்று இந்திய மக்கள் தொகை 140 கோடியோ என்னவோ. ஆண் பெண் எல்லாரும் வேலை செய்வதால் வேலைக்கு செல்லும் வயதினர் எண்ணிக்கை இன்று எழுபது எண்பது கோடி இருக்கும் என்று நினைக்கிறேன். இத்தனை பேருக்கும் எப்படி வாழத்தகுந்த வருமானம் கொடுக்கும் வேலை வரப் போகிறது என்று தெரியவில்லை. அதெல்லாம் வரும் நீ ரொம்ப பயம் காட்டுகிறாய் என்பது ஒன்றுதான் படித்த பெருமக்களிடமிருந்து இதுவரை எனக்கு கிடைத்திருக்கும் ஒரே பதில். 

இத்தனை ரூபாய் முதலீடு போடுகிறோம், இத்தனை செங்கல் செய்கிறோம். எவ்வளவு குறைவான செலவில் எவ்வளவு அதிகம் செங்கல் செய்ய முடிகிறதோ, அவ்வளவு எப்பிஷியன்ட்டாக கம்பெனி நடக்கிறது. இது சரியான கணக்குதான். ஆனால் பல பத்து பில்லியன் டாலர் லாபம் காட்டும் பெருநிறுவனங்களும் இந்த மாதிரி கணக்கு போடுகின்றன, ஆட்குறைப்பு செய்கின்றன. அது கூட முதலீட்டாளர்கள் பார்வையில் சரியான கணக்குதான். 

நியோலிபரல்கள், அல்லது, முதலியர்கள், அல்லது எ/ஃ1 அல்லது டெக்னோ-ஆப்டிமிஸ்ட்டுக்கள் (சட்டைதான் வேறு, ஆள் ஒன்றுதான்) சொல்கிற மாதிரி வரியும் போடக் கூடாது, சந்தையிலும் தலையிடக் கூடாது, ரெகுலேஷன்கள் நீக்கப்பட வேண்டும், சப்சிடிகள் தரக்கூடாது, அரசமைப்பு குறுக வேண்டும், மக்களுக்கு பணம் போய்ச் சேர எதுவும் பண்ணக் கூடாது, எல்லாவற்றையும் சந்தை பார்த்துக் கொள்ள வேண்டும் என்றால் ஆட்டோமேட் ஆகும் உலகில்  மக்களின் வாழ்வாதாரத்துக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது? எல்லாரும் டேட்டா சயின்டிஸ்ட் ஆக முடியுமா? 

1) செயற்கை நுண்ணறிவுக்கு வேலிகள் போடக்கூடாது, மனித இனத்தை கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய இடத்துக்கு துரிதமாய்க் கொண்டு போய் சேர்க்க ரூல்ஸ் இல்லாத ஏஐ தேவைப்படுகிறது என்று நம்புபவர்கள் எ/ஃ (எஃபக்டிவ் அஃக்சலரேஷனிஸ்டுகள்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.