
ஒரு மலட்டு ஆரஞ்சு மரத்தின் பாடல்
என்னிலிருந்து
என் நிழலை வெட்டி வீழ்த்து
விறகு வெட்டியே
கனிகள் இன்றி வெறுமனே வாழும்
கடும் வாதையிலிருந்து எனக்கு விடுதலை கொடு
பகல் என்னைச் சுற்றி
நடந்தபடி
வளையமிடுகிறது
இரவு நிறைந்த தன் நட்சத்திரங்களில் என்னை நகலெடுக்கிறது
கண்ணாடிகள் சூழ
நான் ஏன் பிறந்தேன்?
என்னை நானே பார்த்துக் கொண்டிராமல் வாழவே விரும்புகிறேன்
எறும்புகளும்
ஒட்டு முட்செடிகளுமே என் இலைகளாகவும் எண்ணில் அமரும் பறவைகளாகவும் இருப்பதையே நான் கனவு காண்பேன்
எண்ணிலிருந்து
என் நிழலை வெட்டி வீழ்த்து
விறகு வெட்டியே
கனிகள் இன்றி என்னை நானே பார்த்துக் கொண்டு வாழும் கடும் வாதையிலிருந்து எனக்கு விடுதலை கொடு
மூலக் கவிதை: The song of barren orange tree
அதிகாலைக்கு முன்பு
காதலைப் போல
வில்லாளர்களும் கண்ணற்றவர்களாக இருக்கிறார்கள் .
பசும் இரவுகள் மீது மனதை துளைத்து
செல்லும் வழிபாட்டு பாடல்களின் ஓசை கவிகிறது.
கதகதப்பான லில்லி மலர்களின் வெம்மை தடங்களை அவை விட்டுச் செல்கின்றன
நிலவுக் கப்பலின் அடித்தளம் ஊதா நிற மேகங்களை உடைத்து பயணிக்கிறது அவற்றின் அம்பறாத் தூணிகளில் பனித்துளிகள் நிரம்புகின்றன .
ஆம் எப்போதும் வில்லாளிகள் விழியற்றவர்களாகவே இருக்கிறார்கள்.
மூலக்கவிதை: Before the dawn
அதிகாலையில் மரணித்தல்
நான்கு நிலவுகள் தகிக்கும் இரவு
ஒரே ஒரு மரம்
அதன் ஒரே ஒரு நிழல் அங்கே ஒரே ஒரு பறவை.
உன் உதடுகளின் வழித்தடத்தை
என் தேகத்தில் தேடுகிறேன் காற்றை தீண்டாமல் முத்தமிடுகிறது
நீர் தாரை
போதிய அளவிற்கு வெண்மை நிறமாக தோற்றமளிக்கும் மெழுகினால் ஆன எழுமிச்சை பழம் ஒன்றைப் போல உள்ளங்கையில் வைத்து தாங்கிக் கொண்டிருக்கிறேன்
நான்
நீ எனக்கு அளித்த நிராகரிப்பை
நான்கு நிலவுகள் தகிக்கும் இரவு
ஒரே ஒரு மரம்
அங்கே
ஊசி முனையில் சுழன்று கொண்டிருக்கிறது
என் நேசம்
மூலக்கவிதை: Died at dawn

Federico García Lorca
ஒரு ஸ்பானிஷ் கவிஞர், நாடக ஆசிரியர் மற்றும் நாடக இயக்குனர் ஆவார். García Lorca தேசியவாத போராளிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கருதப்படுகிறது 19 ஆகஸ்ட் 1936 அன்று.
தமிழாக்கம்: ஆமிரா
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.

நல்ல மொழிபெயர்ப்பு. மேலும் எதிர்பார்கிறோம்.
அழகிய கவிதைகள் .. இன்னும் சில கவிதைகள்….