ஜம் என்று இருக்க வேண்டும்

வெளியில் கிளம்பினாலே
ஜம் என்று இருக்க வேண்டும்
என்பது அப்பாவின் கூற்று
திரையரங்கின் அனைத்து நாட்களிலும்
டிக்கெட்டைக் கிழிக்கும்
அவரின் கைகளுக்குள் வந்துசேரும்
தினச் சம்பளத்தின்
கசங்கிய தாள்களை அம்மாவிடமும்
கசங்காத தாள்களை என்னிடமும் பார்க்கலாம்
வீடடைய நடுச்சாமம் ஆகுமென்பதால்
சோறெடுத்துச் செல்லும்
வயர்கூடையில் டார்ச்லைட் இருக்கும்
எடுத்துப்போக மறந்துவிட்டேனென்று
சொல்லும் அதிகாலையில்
முட்டிக் காயம் சாட்சியாகும்
ரசிகர் காட்சிகள் நிகழும் தருணங்களில்
எவரெவரின் நகப் பிறாண்டல்களையெல்லாமோ
வீட்டிற்கு எடுத்து வருபவரின்
முகத்தை மட்டுமே பார்க்கும்
பக்கத்து வீட்டார்கள்
“உங்கப்பவா பாக்குறப்பலாம் ஜம்முனு இருக்காறே?” என்கிறார்கள்
உண்மையிலேயே ஜம் என்றுதான் இருக்கிறீர்களா அப்பா?

Josep Maria de Sucre, Angoisse au XXème siècle, 1942

Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.