உற்றிருந்தே
வேவு பார்க்கும்
நிழலோடென்
அல்லாடல்
சதா-
சபிக்கப்பட்டதாய்
சலித்து நான் –
சுமையாகிய
நிழலை
விடுவித்து விட்டாலென்ன?
தொலையட்டும் தொடராது
என்னிருளோ
என்னும் அது
தன்னிருளில்-
தொலைத்து விட
தொடர்ந்து வரும் நிழலை
அழைத்துப் போனேன்
மலையுச்சிக்கு.
உச்சியிலிருந்து
உருட்டி விட்டேன்.
என்ன விபரீதம்?
நிழலோடு
உருண்டேன் நானும்.
விடுவேனா?
இன்னொரு முறை
இழுத்துப் போனேன் நிழலை
மலையுச்சிக்கு.
முன்பு போல்
நிழலோடு உருண்டது தான் மிச்சம்.
திருப்பித் திருப்பி
இப்படியே.
என்ன அபத்தம்?
இனியொரு முறை
ஒரு கைபார்த்து விடலாம்.
இம் முறை
யார் வேதாளம்
யார் விக்கிரமாதித்யனென்று
தெரியவில்லை.
நிழலை
நான் சுமந்தேனா?
நிழல்
என்னைச் சுமந்ததா?
ஒரு மயக்கம்.
மலையுச்சியிலிருந்து
நிழலை உருட்டி விட
முன்பு போல் நானும்
நிழலோடு சேர்ந்துருளக்
கேலிக்கூத்தாகியது
கதை.
சிரிக்க வேண்டும்
போலிருந்தது எனக்கு.
சூதாடி
இது தான் கடைசி-
கடைசியாய் ஜெயித்து விடலாமென்று
கடைசி
கடைசியாயில்லாமல்
சூதாடுவது போல்
இது கடைசியென்று
மலையுச்சிக்கு நிழலைக்
கூட்டிப் போனேன்.
மறுபடியும்
நானும் நிழலும்
சேர்ந்துருள
இப்போது நிழலும்
நானும்
நிலைமை புரிந்தது போல்
குறிப்பாகியது.
நிழல் நானோ
நான் நிழலோ என்று
நிச்சிந்தையாகியது.
மறுபடியும்
முயல்வதில்
முன்பு போல்
சலித்தலின்றி
சலித்தலேயாகிச்
சலித்தலின் தெளிவில்
மகிழ்வின்மையின்
நிழல் படியாத
மகிழ்வின் சாயை
படிந்திருந்ததாய்த் தோன்றிற்று.
இப்போதெல்லாம்-
நிழலை நான்
கைத்தடி போல்
பிடித்துப் போக முடியாததால்
நிழலை
நாய்க்குட்டி போல்-
என்னோடு நான்
விடாது
திரும்பத் திரும்ப
முடிவில்லாது
அழைத்துச் செல்கிறேன்
விட்டு விட்டு வர-
மரணத்தை
விட்டு விட்டு வர
அழைத்துச் செல்வது போல்
அதை-
அத்துவானத்திற்கு.

குறிப்பு:
என்னைத் தொடர்ந்து வரும் என் நிழல் எந்நொடியிலும் ஒரு நாள் நான் முடிந்து விடுவேன் என்று இடைவிடாது வாழ்வின் அபத்தத்தை எனக்கு நினைவுபடுத்துகிறதோ, ஒவ்வொரு நாளும் மற்றுமொரு நாளாய் அன்றாடத்தில் கழியும் என் வாழ்வின் முன் காலம் ஏறிச் சறுக்கும் மலையாய் எழும்பி நிற்கிறதோ என்ற இப்படியான சிந்தனையோட்டத்தில் ஆல்பெர்ட் காம்யூவின் சிசிபஸின் தொன்மம்(The Myth of Sisyphus) என்ற நூலில் வரும் சிசிபஸின் சித்தரிப்பு எனக்கு நினைவாகியது. நம் பிரக்ஞையில் துயரார்ந்ததாகும் வாழ்வின் அபத்தத்திற்கெதிரான எதிர்வினையாய் தற்கொலையையோ அல்லது நித்தியம், மறுபிறவி போன்ற நம்பிக்கைகளில் புகலடைவதையோ மறுதலிக்கும் காம்யூ, விடாது வாழ்வை, அதன் அபத்தத்திலும், தீவிரமாய் நொடிக்கு நொடி வாழ்வதிலுள்ள எதிர்க்கிளர்ச்சியை (revolt) முன்வைக்கிறார். அந்த எதிர்க்கிளர்ச்சியின் படிமமாய் கிரேக்கத் தொன்மத்தில் வரும் சிசிபஸை முன்னுதாரணமாக்குகிறார். கடவுளரை எஜமானராக ஏற்காத சிசிபஸ், கடவுளரால்- பாறாங்கல்லை மலையுச்சிக்கு உருட்டிச் செல்ல, உச்சியிலிருந்து கீழுருள- இப்படி முடிவின்றி திருப்பித் திருப்பிச் செய்யும் ஓர் அபத்த வாழ்விற்கு சபிக்கப்பட்டாலும், ஒடிந்து போகாமல் விடாது வாழ்வதின் மீதான தன் தீவிரமான காதலில் தன் அபத்த வாழ்வுக்கு அர்த்தத்தை அளித்துக் கொள்கிறான். அதனால் தன் அபத்தச் செயலிலிலும் ”சிசிபஸ் மகிழ்ச்சியாகவே இருந்திருப்பானென்று ஒருவர் கற்பனை செய்து கொள்ள வேண்டுமென்று” காம்யூ தன் நூலின் கடைசி வரியாய் முடிக்கிறார். காம்யூ காட்டும் இந்த வெளிச்சத்தில் முதிய வயதில் முடிவதெல்லாம் தொடர்ந்து வாழ்வதையே என் நிழலின் நிலையாமையின் நினைவூட்டலுக்கு என் எதிர்வினையாய் முன்வைக்க முடிவதாகிறது.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
