களத்திர ஸ்தானம்

கொரோனாவின் தயவில் இரண்டு வருடங்களாக சென்னையை விட்டு விலகி திருநெல்வேலி வாசம். ‘வெஸ்டிபியூல்’ ரயில் வண்டி போல நீளமான அக்ரஹாரத்து வீட்டின் பின்கட்டில் வீட்டடி வேலையாய் இருந்த சாயங்கால நேரம். முன்கட்டில் நிழலாட்டம் தெரிந்து வீட்டிற்குள் வெளிச்சம் குறையவும்,  நிமிர்ந்து பார்த்தேன். 

“யாருடா…தண்டுவா? அடையாளமே தெரியல…இப்பிடி குண்டாப் போய்ட்டயே…என்ன பண்றே இப்போ?”

“சுந்தரைப் பாத்துட்டு சேவை குடுத்துட்டுப் போலாம்னு வந்தேன். சௌக்கியமா பாட்டி?”

“எப்பயும் உள்ள சௌக்யம்தான். இந்தக் கால்வலியோட காசிக்கும் போயிட்டு வந்தாச்சு..இனிமே என்ன? வெல்லச் சேவையா? புளிச்சேவையா?”

வெளியே வர வர பாட்டியின் எம்.ஆர்.ராதா குரல் நெருங்கி நெருங்கி ஒலித்தது.

“எலுமிச்சை சேவை..சாப்பிட்டுப் பாத்துட்டு சொல்லுங்கோ..”

“போன தடவ சாப்பிட்டதே வயதுக்கு ஒத்துக்கலை. யாரு, அம்மா பண்ணாளா..?”

ஏதோ சொல்ல ஆரம்பித்த தண்டுவை கையமர்த்தி ‘ஆமாம் பாட்டி..அவா அம்மாதான்..உள்ள வா, தண்டு’ என்று அழைத்துச் சென்றேன். ‘பெரியவா சின்னவா மரியாதையில்லாத…இவனை விஜாரிச்சா இவனுக்கென்ன?’ என்று ஏதோ  பாட்டி  புலம்பிக்கொண்டிருந்தது  காதில் விழுந்தது.

தண்டு என்கிற தண்டபாணி. சுப்ரமணிய சர்மா பிள்ளை. விஸ்வநாத சர்மா பேரன். கௌசிக கோத்திரம். என்னோடு படித்தவன். என்னைப்போலவே அவனுக்கும் கல்யாணம் ஆகவில்லை. செத்துப்போன அப்பா அழித்தது போக மீதமுள்ள சொத்துக்களை அழிப்பதே முழுநேர வேலை. இதெல்லாம் பாட்டிக்கும் தெரியும். இதுபோக அவனுடைய அப்பா, தாத்தா ஜாதகங்களே அத்துப்படி. ஒவ்வொருதடவையும் புதிதாய்ப் பார்ப்பதுபோலவே விசாரித்தால்…

‘போகட்டுண்டா.. வயசானவா..’ என்பது போலத் தலையாட்டினான் தண்டு. “ஏதோ விடுகதை போடுவாளே…அதிகாரி விட்டா…” 

ஆரம்பித்துவிட்டான்..சிலபேர் இப்பிடித்தான் எத்தனைநாள் கழித்துப்பார்த்தாலும் அதே ஜோக்குகளோ, ‘அனெக்டோட்’  டுகளோ…திரும்பத்திரும்ப…அப்பிடி ஒரு ஆள் தண்டு. இவன் ஹாலில் போய் உட்கார்ந்தவுடன் என்ன சொல்லுவான் என்று எனக்குத் தெரியும். 

“என்னமா வீபூதி மணக்கறது..” என்று சொல்லாவிட்டால் அவன் கொண்டுவந்த சேவையை அப்படியே உங்களுக்குத் தந்துவிடுகிறேன். பாட்டி எதையாவது சொல்லுவாள்? அதெல்லாம் நன்றாகத்தான் இருக்கும். 

நாங்கள் சின்னப்பிள்ளைகளாக இருந்தபோது ஒவ்வொரு ‘சதஸ்’ சிலும் இவள் தவறாது போடுகிற விடுகதை “அதிகாரி விட்டா அமிர்தவஸ்து, தலையாரி விட்டா தலையைவெட்டு, அது என்ன?” வேறு வழியில்லாமல் அவன் ஆரம்பித்த விடுகதையை சொல்லி முடித்தேன்.

இங்கிருந்து பார்க்கும்போது ஹால் பளீரென்று நாடகமேடை போல ஒளிவீசிக்கிடந்தது. வழியெல்லாம் இருட்டு.

 
“பாத்து… இடிச்சுக்காம… மண்டை பத்திரம்….அதுசரி…சேவை பிசினஸ் எப்பிடி போயிண்டிருக்கு?” சேவை பிசினஸ் ‘நைஸ் ஆக்சிமோரான்’ என்று தோன்ற வீட்டின் இருட்டு கொடுத்த சுதந்திரத்தில் சிரித்துக்கொண்டேன்.

“சேவையாவது, பிசினஸாவது? எனக்கு ஒரே கஸ்டமர் நீங்க மட்டும்தான்”

 “என்ன தண்டு… ஒண்ணரை லட்சம் போட்டு மிஷின் வாங்கினயே?”

“அதுல பண்ணதுதான் இது..என்ன பண்ண? மெஷின் கெட்டுப்போகாம இருக்க மாசத்துக்கொருக்க பண்ணிக்கிறேன். எல்லாப்பயலுகளும் புரோட்டா புரோட்டான்கறான்கள்”

“பாத்து..அதுக்காக புரோட்டா பண்ற மிஷினை வாங்கிடாத? கேக்கவே கஷ்டமா இருக்கு….ஆஸ்பத்திரி ஆர்டர்லாம் இருக்குன்னு சொன்னயேப்பா?”

“இருக்கு. ஆனா தெனம் வேணும்கறா. அதெல்லாம் ஆள் போட்டு பண்ணனும் சுந்தர். எனக்கும் வயசாகலயா? நான் என்ன பண்ணமுடியும் சொல்லு?”

ஒண்ணும் பண்ணமுடியாது என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டேன். இதெல்லாம் இந்த மிஷினை ஆர்டர் பண்ணும்போதே தெரியாதா என்ன? “பெத்த வயத்துல பெரண்டையைத்தான் கட்டிக்கணும் சுந்தர்” என்று அவனுடைய அம்மா புலம்பியது நினைவுக்கு வந்தது. “இந்தோ இருக்கு பாத்தியா, விதம் விதமா சர்பத் போடற மிஷின். ஒரு லட்ச ரூபாய். அப்பிடியே தூங்கறது. நமக்கெல்லாம் பிசினஸ் வேண்டாண்டா.. எங்காவது வேலைக்குப்போன்னு அடிச்சுண்டேன். போன ரெண்டாம் மாசம் வேலைய விட்டுட்டு வந்தாச்சு. ராத்திரி படுத்துக்கறச்சே ஒண்ணே ஒண்ணுதான் வேண்டிக்கறேன் பகவான்ட்ட. காலம்பற எழுந்துருக்கப்படாது. அது மட்டும்தான் என் பிரார்த்தனை.”

“ஆத்துல யாராவது பெரியவாள பேசச் சொல்லலாமே மாமி..”

“பெரியவாள்ளாம் போய்ச்சேந்தாச்சு…போனவாளுக்கு பேசற தகுதியும் கிடையாது.. நல்ல பிள்ளைகளைப் பெற குடுப்பினையில்லப்பா…அந்தக்காலத்துல பெரியவா எழுதிவெச்ச சொத்தைக்கரச்சுதான் எல்லாம் நடந்துண்டிருக்கு. குந்தித் தின்றால் குன்றும் மாளும்னு இருக்கு. நீங்கள்லாம் செத்த சொல்லப்படாதாப்பா”

“நான் சொல்லிச் சொல்லி சண்டையே வந்துருத்து மாமி. போதாக்கொறைக்கி எங்க அம்மா வேற சொன்னா. ஆத்துக்கு வர்றதையே நிப்பாட்டிண்டுட்டான்.இப்பத்தான் ரெண்டு மாசமா வரான்”

“என்ன சொல்லறது போ..சுய புத்தியும் கிடையாது. சொல்புத்தியும் கிடையாது. அவா அப்பா கொணம்..தலையெழுத்துப்போல நடக்கட்டும்”

அப்பா ஏற்கனவே நிறைய சொல்லியிருக்கிறார். ” இவன் தாத்தாவுக்கு ஊத்துமலை ஜமீனிலேர்ந்து பூஸ்திதி தானமாவந்தது. ஒழுங்கா நிர்வாகம் பண்ணியிருந்தா பத்து தலைமுறைக்கு ஒக்காந்து சாப்பிடலாம். அவர் அழிச்சதுபோக மிச்சத்தை பிள்ளை காலிபண்ணினார். வேடிக்கை என்னன்னா இவனோட அப்பா செத்துப்போற கொஞ்ச நாளைக்கு முன்னால அவரோட வாரிசு இல்லாத அத்திம்பேர் வீடையும் கொஞ்சம் சொத்தையும் இவர் பேருக்கு எழுதிவெச்சுட்டு போய்ச்சேந்தார். இவனுக்கும் யாராவுது எழுதிவெப்பாளாயிருக்கும்? நமக்கு கடனைத்தான் எழுதிவைக்கறேங்கறா..”  ஒருவேளை நானும் ராஜுவும் எழுதிவைப்போமோ, என்னவோ?  

வீட்டில் அம்மா சமைக்கும்போதே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வருவது. தேவையில்லாத பொருட்களை, தேவையில்லாத நேரத்தில் தேவைக்கு அதிகமாக வாங்குவது என்று என்று தண்டுவின் ஊதாரித்தனத்தை அப்பாவிடம் சொன்னபோது “இதென்ன பிரமாதம். இவனோட அப்பா இருக்காரே, சரி இருந்தாரே..நிலையா ஒரு வருமானம் கிடையாது. தென்காசிலேந்து டாக்சி வெச்சுண்டு மெட்ராஸுக்கு கிரிக்கெட் டெஸ்ட் மேட்ச் பாக்கப்போவார்” என்றும் பாட்டி “இதைச் சொல்ல வந்துட்ட, அவனோட தாத்தா மேலப்பாவூர்ல ஒரு தாசிய வெச்சுண்டிருந்தார். ஊருக்கே தெரியும். அவ யார் தெரியுமா?…” என்று சொல்லி அப்பாவிடம் திட்டு வாங்கியதும் நினைவுக்கு வந்தது.  பெண்கள் கூடுகிற இடத்தில் இவள் ஒரு ‘வெண்ணிறஆடை மூர்த்தி’ என்று என் சொந்தக்காரப்பெண்கள் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.  

“என்னப்பா தண்டு..அம்மா எப்பிடி இருக்கா?..மாசாந்திர சேவையா?” என்று தூக்கை வாங்கி அடுக்குளுக்குள் கொண்டு போனாள் அம்மா.

அம்மா காப்பியைக் கொண்டு வைத்ததும், தண்டு தலைவலி போல நெற்றியைப் பிடித்துக்கொண்டு ‘ஐயோ மாமி, ஜானகிராம்ல பஜ்ஜி போட்டிருப்பான் சுடச்சுட. வாங்கிண்டு வந்தா காப்பியும் பஜ்ஜியுமா சாப்பிடலாம். சுந்தர் வர்றியா ஒரு எட்டு போய்ட்டு வந்துருவோம்’  

‘இல்லப்பா..கால் இருக்கு..’

இப்பிடித்தான் போனமுறை வந்தபோது வீட்டில் இருக்கும் நாலுபேருக்கு ஒரு டஜன் பஜ்ஜி வாங்கி வைத்துவிட்டுப் போய் விட்டான். பாதியையும்  தூரப்போட்டோம்.

“தண்டு மொகத்துல வித்தியாசத்தைக் கவனிச்சேளா? ” என்றாள் அம்மா திடீரென்று. அப்போதுதான் கவனித்தேன். கண்ணுக்குக் கீழே இருந்த பெரிய மறுவைக் காணவில்லை.

‘மாமிதான் கரெக்ட்டா கண்டுபிடிச்சா..இப்பதான் பத்துநாளைக்கி முன்னால ‘ரிமூவ்’ பண்ணிண்டேன். பூர்ணகலா தியேட்டர் பக்கத்துல. இவனைக்கூட போ போங்கறேன். மாட்டேங்கறான். இப்ப லேசா தேமல் மாதிரி இருக்கு. அதுவும் சரியாயிடும்ங்கறான்”

எனக்கும் ஒரு மறு உண்டு. ஆனால் எடுக்கும்போது வலிக்குமோ? என்ற பயம் உண்டு.

“சும்மா பத்துநிமிஷம் கடுகடுன்னு இருந்தது. அப்பறம் சரியாயிடுத்து. சும்மா தெனம் இம்புட்டு தேங்காயெண்ணை தடவினா போறும். நீதான் ரொம்ப பயப்படறே?”    

‘என்ன தண்டு..ஜாதகம் ஏதும் வந்ததா?’ என்று வழக்கமான கேள்வியைக் கேட்டாள் அம்மா.  ‘ஒனக்கெதுக்கு தேவையில்லாம..அவன் திருப்பிக்கேட்டா என்ன பண்ணுவ?’ என்று நினைத்துக்கொண்டேன்.

‘இல்லை மாமி, ‘பிசினஸ்’ னாலே ஓடறா?’

என் அண்ணன் ராஜு ‘லேப்டாப்’ புக்குப் பின் மறைந்து கொண்டு சிரித்துக்கொண்டிருந்தான். ‘நீ பிசினஸ் பண்ற அழகப் பாத்தா, ஓடினவா திரும்பவந்து நாலுஅடி அடிச்சுட்டு ஓடுவா’ என்று சொல்ல முடியாமல் ‘ஆறிடப்போறது, காப்பி குடி தண்டு’ என்றேன்.

நான், ராஜு, தண்டு எல்லோரும் நாற்பது கடந்த, துணைக்கான தேடலில் இருப்பவர்கள் அல்லது இருந்தவர்கள் என்றுகூடச் சொல்லலாம். என் அண்ணனைப் பொறுத்தவரை இனிமேல் வாய்ப்பில்லை என்றே முடிவு செய்துவிட்டான். ‘இவன் மட்டும் வேலைக்குப் போயிருந்தான்னா ஜாதகத்தை எடுத்துருப்பேன். இப்பிடிப் பண்ணிட்டானே’ என்று பார்க்கும்போதெல்லாம் புலம்புவாள் தண்டுவுடைய அம்மா. இதெல்லாம் தெரிந்திருந்தும் அம்மா கேட்டது அனாவசியம் என்று தோன்றியது. ஆனால் தண்டுவிடம் வேறு என்னதான் பேசமுடியும்?

சாளரத்தின் வழியே கொட்டிக்கொண்டிருந்தது சூரிய ஒளி. கொண்டையா ராஜுவின் கைவண்ணத்தில் எல்லா தெய்வங்களும் பிரேம் போட்ட காலண்டர் படங்களில் இருந்து அருள்பாலித்த வண்ண வண்ணமோ, (அம்மாவின் பார்வையில்) அருள்பாலிப்பதுபோல் நடித்தவண்ணமோ காட்சியளித்தனர். 

 ‘எனக்கு வீபூதி இட்டுக்கும்போதெல்லாம் ஒங்காத்து ஞாபகம் வந்துரும்…விபூதியப் போட்டு மொழுகினாப்பல.. சும்மா கும்முன்னு வீடே மணக்கறதே?’ என்றான் தண்டு. நான் சொன்னேனா இல்லையா? ‘தாத்தா சாஸ்திரிகள்ல்யா, அதான் சிமிண்டுக்கு பதிலா வீபூதியைப் போட்டே கட்டிட்டார்’ என்றான் ராஜு  சிரிக்காமல். 

” அண்ணாக்கு ஜோக்குதான் எப்பயும்.. மாமி, காபிபொடி வேணும்னாச் சொல்லுங்கோ, சிக்மங்களூருலேர்ந்தே நேர வரவழைச்சுத் தரேன். நம்ம தோஸ்த்து ஒத்தன் இருக்கான்.  ஜானகிராமுக்கே சப்ளை பண்றான்”

“நம்ம மீனாட்சி தம்பி…” என்றவன் என்னைப்பார்த்து. சின்முத்திரையை காண்பித்து ‘அப்…பிடி இருக்கும்’ என்றான்.  (“குண்டப்பா விஸ்வநாத் இயான் போதத்தை அடிப்பான் பாரு ஸ்கொயர் கட்டு, அப்…பிடி இருக்கும்?” என்று அவன் அப்பா காட்டிய அதே சின்முத்திரை, அதே முகக்கோணல் என்றார் அப்பா அவன் போன பிறகு.)

அம்மா அவன் சேவை கொண்டுவந்த தூக்கில் வீட்டில் போட்ட வடாத்தைக் கொடுத்து ‘எதிர் சேவை’ செய்தாள்.    ஜானகிராமுக்குப் போட்டியாக இன்னொரு ஓட்டல் ஆரம்பிக்கும்வரை பேசிவிட்டு “நாளைக்கு ஆத்துக்கு வா, சுந்தர், டீடைலா சொல்றேன்” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டான் தண்டு.

கொண்டுவிட வாசல்வரை சென்றேன். ரேழி உள்ளைத்தாண்டியதுமே ஆரம்பித்துவிட்டான். ” நான் போறதா முடிவுபண்ணிட்டேன். வர்றயா இல்லையா? உனக்கென்ன கேடுங்கறேன்…” வேகமாக ஹாலையும், திண்ணையையும் நோக்கிவிட்டு, மெதுவாகப் பேசும்படி சைகை செய்தேன். கொஞ்ச நாட்களாகவே ஃபோனில் பேசும்போதெல்லாம் தாய்லாந்து போவதைப்பற்றித்தான் பேச்சு.

“இதப்பாரு..உனக்கும் எனக்கும் இந்த ஜென்மத்துல கல்யாணம்ங்கிறது கிடையாது..அதுக்காக அப்பிடியே விட்டுர்றதா..ஒரு அனுபவம் வேண்டாமா..? இப்ப விசா வேற கிடையாது.ரொம்ப சீப்பா முடியும்”

“எப்பிடிப்பா.. ஊர் பேரைச் சொன்னாலே எல்லாரும் சந்தேகப்படுவா?”

“பிரம்மா கோயிலுக்குப் போறேன்னு சொல்லு…” தண்டுவின் பொதுஅறிவு பிரமிக்கவைத்தது.

ஹெல்மெட்டுக்குள் தலை அரித்தாற்போன்ற முகக்குறிப்போடு சற்றுநேரம் பார்த்துவிட்டு அசடு வழிந்தேன்.

தலையிலடித்துக்கொண்டு ‘இன்னும் பதினஞ்சுநாள் டயம் இருக்கு கன்பார்ம் பண்ண..சீக்கிரம் முடிவெடு’ என்றுவிட்டு வேகமாக வீட்டைவிட்டு வெளியேறினான்.    

இருட்டுக்குள் பின்னிருந்து ராஜுவின் குரல்கேட்டு தூக்கிவாரிப் போட்டது. தண்டு பேசினத்தைக் கேட்டிருப்பானோ? “முன்னெல்லாம் ‘ரிட்டயரிங் அட் பிப்டி’ ங்கற வார்த்தை அப்பப்ப காதுலவிழும், ஒன் நண்பன் ‘பார்ன் ரிட்டையர்ட்’  எப்பிடிடா இதல்லாம்? மெட்றாஸ் வந்தான்னா, சுஸ்வாத் போண்டா, கங்கோத்ரி சமோசான்னு தேடித்தேடி சாப்பிடுவான். உள்ளூர்காரன் எனக்கு அதெல்லாம் என்னன்னே தெரியாது. நல்ல பெயர் பொருத்தம் வேற, தண்டு…தண்டம்……”

உள்ளே வந்தவுடன் “ஓ….இந்த தண்டு இருக்கறதெல்லாம் ஆவா அடிச்சு மாவாக் கரைச்சுரும் போலிருக்கேடா… இருக்கற காசைக் கட்டுசெட்டாச் சேத்துவெச்சுண்டு விருத்தி பண்ணிக்கத் தெரியல, ஒரு வேலைய ஸ்திரம் பண்ணிக்கத் தெரியல..இப்பிடியிருந்தா யாரு பொண்ணு குடுப்பா?” என்றாள் அம்மா.

“வேலைல இருந்துண்டு காசு சேத்து வெச்சிருக்கற உன் பிள்ளைகளுக்கு குடுத்துட்டாளா, என்ன?” என்றான் ராஜு.

“ஆனா, அவனோடது யோகஜாதகம்னு சொல்லுவா அம்மா, இல்லையாம்மா?” என்றேன் பேச்சை மாற்றும்விதமாக..

“ஆமாமா…களத்திரஸ்தானம் நன்னாயிருக்கு.. ஏழுல படுசுத்தம்… அவனுக்கு கல்யாண பாக்கியம் கண்டிப்பா உண்டு. மேலப்பாவூர்ல இவனோட தாத்தாவுக்கு இன்னொரு குடும்பம்  உண்டு. பிள்ளைமார் சாதிப்பொண்ணு. அந்த வகைல ஒரு அத்தை உண்டு அவனுக்கு. அவளுக்கு ஒரு பொண் உண்டு. அவளைப்பிடிச்சுப் போட இவனோட அம்மா படாதபாடு படறா….கெட்டிக்காரி …அநேகமா முடுச்சுடுவள்னு நினைக்கறேன். நீ வொடனே மீனாட்சியப் பாரு. அவா அப்பாக்கு நம்ம அப்பாதான் ‘பாங்குல’ வேல பண்ணிவெச்சார். திரும்பத் திரும்ப ஞாபகப் படுத்திண்டே இரு. ஏதாவது சம்பந்தம் வரும். முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார்…சரி, போயி ராத்திரிப் பாட்டைப் பாக்கணும்..” என்று அடுக்களைக்குள் சென்றாள் அம்மா. இப்பிடியா சங்கதி? பய ஒரு வார்த்தை சொல்லலியே?

அம்மா நகண்டதும் “அடையார்..கிண்டின்னுண்டு..இவனோட தாத்தாவுக்கு மேலப்பாவூர்ல இருந்த மாதிரி கீழப்பாவூர்ல பொடலங்கா சாஸ்திரிகளுக்கு ஏதும் ‘கனெக்சன்’ இருக்கான்னு பாட்டிய கேட்டுப்பாரு, இவனை மாதிரி அத்தை பொண்ணு இருந்தா நீயே பண்ணிக்கோ” என்று கிண்டலடித்துக்கொண்டிருந்தான் ராஜு.

அம்மாவின் இந்த ‘டயலாக்’ அடிக்கடி கேட்பதுதான். அதுவும் சொந்தக்காரர்கள் திருமணம் எதற்காவது போய்வந்தால் என்னுடைய பாடு திண்டாட்டம்தான். ‘எப்பிடியாவது முயற்சி பண்ணிப்பாரு. ஒன்னோடது ‘சந்நியாசி’ ஜாதகம் இல்லைன்னு கோவிந்தன் சொல்லிருக்கான்’ என்று வேப்பிலையடித்து விரட்டி விடுவாள். நானும் ஒரு சுற்று போய்விட்டு ‘வெறுங்கை வேங்கடமா’க வந்து நிற்பேன். எப்போதும் நடப்பதுதான்.  எனக்கு ஜாதகத்திலேயே கோளாறு. தேவையில்லாத இடத்தில் தேவையில்லாத கிரகங்களின் சேர்க்கை. அப்படியும் பொருத்தமான பெண் ஜாதகங்கள் அமையாமலில்லை. ஆனால், எல்லோரும் என்னைவிட படித்த, நிறைய சம்பாதிக்கக்கூடிய பெண்கள். வயது, சம்பளம், தகுதி எல்லாமே குறைவாக உள்ள பெண்கள் அபூர்வமாக அமைந்தாலும் பெண்கள் வீட்டிலிருந்து யாரும் முதல் அழைப்பை விடுப்பதில்லை. மாறி மாறி அழைத்துப் பேசி வெறுத்துப்போயிருந்தார் அப்பா. அதற்கும் தட்டிக்கழிக்கும் பதில்தான். என் பிள்ளைகள இப்பிடி கைவிட்டுட்டேளே, தெய்வங்களே? என்று அம்மா ஹாலில் நின்று மேலே நோக்கி அவ்வப்போது கையை விரிப்பாள் நாடகப்பணியில். கொஞ்சம் படிச்சுட்டா..என்ன திமிரு சனியன்களுக்கு…எங்க காலத்துல பெறந்துருக்கணும் நீங்கள்லாம்..என்று அடுக்களையில் தனியாகப்புலம்பிப்  பார்த்திருக்கிறேன். ஜோதிடர்களின் ஆலோசனைப்படி ஒரு பரிகாரஸ்தலம் விடாமல் சென்றுவந்தும் ஒன்றும் அமையவில்லை. கடைசியாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாணம் செய்துவைத்ததோடு மேற்கொண்டு அந்தப் பரிவர்த்தனையை நிறுத்திக்கொண்டேன். ‘எரியும் மனசுகளும் குளிரும் திருமனசுகளும்’ என்று ஏதோ கவிதை எழுதிய ஞாபகம். 

அப்பாவும் பலவாறாக முயற்சி செய்து தோற்று ஒருமட்டோடு நிறுத்திக்கொண்டார். ராஜு நாற்பது தாண்டியவுடன் வயதைக் காரணம் காட்டி இந்த ஆட்டத்திலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டான். இத்தனைக்கும், எங்கள் மூன்று பேரில் சம்பளமும் அழகும் மட்டுமே தகுதியாக இருந்தால் ராஜூவுக்கு எப்பொழுதோ திருமணம் முடிந்திருக்கவேண்டும். சம்பளமும், அழகும் எனக்கு அவனில் பாதி. எனக்கும் இரண்டு மாதத்தில் நாற்பது  வயது முடிகிறது. ஒரு விதத்தில் ‘அப்பாடா’ என்றுதான் இருக்கிறது.  

நான் மீனாச்சியைப் பார்ப்பதற்குள் மேலும் ஒரு மாதம் ஆகிவிட்டிருந்தது. சென்னைக்குப் போய்விட்டு ஒரு மாதம் கழித்து நேற்றுதான் வந்திருந்தான்.  

என்னதான் இணையத்தில் திருமணப் பரிவர்த்தனைகள் நடந்தாலும், திருநெல்வேலி போன்ற சிறுநகரங்களில் மீனாட்சி சுந்தரம் போன்ற திருமண ‘புரோக்கர்’களின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது. மீனாச்சியைப் பார்க்க அவனுடைய இல்லம் கம் அலுவலகத்தில் ஏகக்கூட்டம். ‘அதுதான பெரியவாளோட ஆங்கை’ என்று யாரிடமோ சத்தமாக அளந்துவிட்டுக்கொண்டிருந்தான். முன்னறையிலேயே ‘சரிதான் பொத்து’ என்பது போன்ற முத்திரையோடு ‘பெரியவா’ படத்தைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. சென்னை அலுவலகத்திலும் இதே படம்தான்.

கண்ணாடித் தடுப்புக்குள்ளிருந்து ‘ஐந்தே நிமிடம்’ என்று சைகை செய்தான் மீனாச்சி. பாரதியார் படித்த பெருமையுடைத்தான திருநெல்வேலி மதுரை திரவியம் தாயுமானவர் மேனிலைப்பள்ளியின் பெருமையை உடைக்க முயற்சித்ததால் பாதியிலேயே வெளியேற்றப்பட்டவன். பொழுதுபோகவில்லையென்றால் பெருமாள் ஐயா இவனை புத்தகத்திலிருந்து வாசிக்கச்சொல்லி, அவன் தப்பும் தவறுமாக உச்சரிப்பதை வைத்து வகுப்பிற்கு வேடிக்கை காட்டுவார். இன்றைக்கு இவன் வாயிலிருந்து வருகிற வார்தையைக் கேட்க கூட்டம் கூட்டமாக ஆட்கள். அநேகமாக அவரும்கூட வந்திருப்பாராய் இருக்கும். ஒரு பெரிய ஜோதிடரிடம் ‘அப்ரசண்டி’, கேட்டரிங் என்று ஏதோதோ செய்து ஒரு வழியாக இதில் நன்றாகவே காலூன்றிவிட்டான்.    

ஒரு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்பு கூட, அதாவது நியாயமாக எனக்கு கல்யாணமாகியிருக்கவேண்டிய காலகட்டத்தில், காதலித்துத் திருமணம் செய்துகொள்வது என்பது குறைவுதான். ‘மத்த பொண்களை ஏறெடுத்தும் பாக்க மாட்டான்’ என்று பெற்றவர்கள் பெருமைப்பட்ட காலம். அதனால்தானோ என்னவோ பெண்களும் இப்போது  ‘பழிக்குப் பழி’ வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் .  ஆச்சரியம் என்னவென்றால் இணையதளங்களில் எனக்கு பல வருடங்கள் முன்னால் பதிவு செய்திருந்த பெண்களுக்கும் இன்னும் கல்யாணம் ஆகவில்லை. கல்யாணம் என்கிற அமைப்பின் மீதுள்ள அவநம்பிக்கையா? சியாமளா என்றொரு பெண். இவர் பெயர் இல்லாத திருமண பரிவர்த்தனைத் தளங்களே இல்லை. வயது ஐம்பத்திரெண்டு. ஒழுங்காக கல்யாணம் நடந்திருந்தால் அவர் பெண்ணுக்கே கல்யாணம் முடிந்திருக்கவேண்டும். யாருக்காக, எதற்காகக் காத்திருக்கிறார்கள்? முதலில் பகுமானமாக அந்தந்த சாதிக்கான இணையதளங்களில் பதிவு செய்யும் ‘மாப்பிள்ளைகள்’ வயது ஏற ஏற ‘கேஸ்ட் நோ பார்’ ல் வந்து முடிவது சாதாரணம். நான் மீனாட்சிசுந்தரத்தைப் பார்க்கவந்ததும் அதன் காரணமாகத்தான். அதுவும் அம்மாவின் ‘தொணதொணப்பு’ தாங்காமல்தான். பண்ணையார் கிட்டாவய்யர் பரம்பரையை இன்னொரு தலைமுறைக்காலம் நீட்டித்துவிட கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறாள்.

என்பக்கத்தில் அமர்ந்திருந்தவர் அவருடைய பையனுக்கு பெண்தேடும் படலத்தின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்துகொண்டிருந்தார். ‘ஒரே வார்த்தை சாதகம் பொருத்தமில்ல” “இவன் பாத்துவெச்ச கல்யாணமா ஒவ்வொரு மண்டபத்திலயும் நடக்குதுங்கிறீங்க. அம்புட்டும் லவ் மேரேஜ்ஜூ. நம்ம பயலுக்கு அதுக்கு வக்குல்ல. என்ன செய்ய? இவன வந்து உருவ வேண்டியிருக்கு”  தலையாட்டிக் கேட்டுக்கொண்டிருந்தேன். இருபது நிமிடங்களுக்குப் பிறகுதான் மீனாச்சியைப் பார்க்க முடிந்தது. வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு வந்த நோக்கத்தைப் பக்குவமாகக் கூறினேன்.

“ஐயையோ…நீ வேற? இங்கியே அத்தன பயகளும் கைல பிடிச்சுட்டு சுத்துதானுக….வாய்ப்பே கெடயாது..இருந்தா உனக்கா இல்லைனு சொல்லப்போறேன். இந்தா..இவளை ஏமாத்திக் கூட்டிக்கிட்டுப் போனாத்தான் உண்டு. மாமாவைக் கட்டிக்கிடுத்தியாட்டி…தினம் ஆரஞ்சுமிட்டாய் வாங்கித்தருவா….”

பெரிய மனதோடு தலையாட்டி என்னைக் கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதம் தெரிவித்த ஓரமாக விளையாடிக்கொண்டிருந்த  அந்தப்பெண்ணுக்கு நாலு வயது இருக்கும். யாரோ அவனுடைய சொந்தக்காரப் பெண் போல.

“ஏ மீனாச்சி”..என்று சிரித்துக்கொண்டே தலையிலடித்துக்கொண்டேன்  என்றாலும் மனதுக்குள் சந்தோஷமாகத்தான் இருந்தது.

“காலைலேர்ந்து ஒரு பொண்ணு வீட்டுக்காரன் வரல பாத்துக்கோ. தொண்ணூறு பையன் ஜாதகம் வந்தா பத்து பொண்ணு ஜாதகம் வருது. என்னத்தச் சொல்ல போ.. ஒரலும்  ஒலக்கையுமா செய்யச் சொன்னா வெறும் ஒலக்கையாச் செஞ்சு போட்டுருக்கு, கிறுக்குக் கூதி புள்ள..ஒலக்க வேணும்னா சொல்லு…என்று கண்ணடித்த மீனாச்சியைப் பார்த்து ‘அப்பிடி ஏதும் பிடிச்சிட்டயா என்ன?’ என்று கேட்க நினைத்து கேட்காமல் சிரிப்பதைத் தவிர ஏதும் செய்ய முடியவில்லை. சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு ‘வந்தா சொல்றம்லே…நம்பிக்கை எளக்காத…நாப்பதெல்லாம் ஒரு வயசா…’ என்று விடை கொடுத்தான் மீனாச்சி. என் மூஞ்சியில் நானே துப்பிக்கொள்ள முடியாமல் எச்சிலை முழுங்கிக்கொண்டேன்.

அப்போதுதான் சுவற்றில் மாட்டியிருந்த மீனாச்சியின் கல்யாண போட்டோவைப் பார்த்தேன். நான் பார்ப்பதை கவனித்த மீனாச்சி  ‘தப்பா நெனச்சுக்காத சுந்தரு, நம்ம மேலப்பாவூர் அத்தை பொண்ணுதான், கண்டிப்பா முடிக்கணும்னு ஒரே ப்ரெசருபாத்துக்க, கொரானா காலம் வேற, ஐம்பது பேருக்குமேல கூப்பிட முடியல. இங்கதான் டீச்சரா இருக்கா. தண்டு சொல்லிருப்பானே…அவனுக்கும் சொந்தம்தான்..என்ன பாக்குற, அது பெரிய கதை…மேலப்பாவூர் அத்தைய ரெண்டாம்கல்யாணம் பண்ணினவரு தண்டுவோட தாத்தா’ என்றான் சிரித்துக்கொண்டே. பாட்டி சொன்ன கதைதான். அப்போதுதான் கவனித்தேன். பொம்பள வேஷம் போட்டுக்கொண்டு மீனாச்சியின் பக்கத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் தண்டு. படிக்கிற காலத்திலேயே இவனுக்கும் அவனுக்கும் ஆகாது. பிடிக்காத ஒருவனின் சாயலில் மனைவி அமைவதென்றால்…என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. ‘சங்கத்துல இருந்து ஒருவழியா தப்பிச்சுட்ட’ என்று சமாளித்துவைத்தேன்.


Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026

Subscribe to get the latest posts sent to your email.

3 Replies to “களத்திர ஸ்தானம்”

Leave a Reply to சுப்பராம்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.