
விருப்ப ஓய்வு பெற்ற பிறகு பொழுது போகவில்லை என்று இந்த முதலியார் திருமண மையத்தை ஆரம்பித்தேன். இந்தக் காலத்தில் யாரும் ஜாதி பார்ப்பதில்லை, இது ஓடாது என்று என் மனைவி சொல்லிக் கொண்டே இருந்தாள். காதல் திருமணங்கள் அதிகரித்துவிட்டனதான்; ஆனால் எனக்கும் தொழில் நன்றாகத்தான் நடக்கிறது. வாரம் நாலைந்து சம்பந்தமாவது ஏற்படுத்த முடிகிறது, இரண்டு இரண்டரை லட்சம் மாதாமாதம் வருகிறது. இரண்டு பேருக்கு வேலை தர முடிந்திருக்கிறது. என் மனைவி இப்போது நான் சொல்லித்தான் இதை ஆரம்பித்தார் என்று சொல்லிக் கொள்கிறாள்.
ஆனாலும் மனதில் ஒரு சின்ன வருத்தம். என் தாத்தா சபர்மதி ஆசிரமத்தில் கொஞ்ச நாள் இருந்தவர். என் சிறு வயதில் என்னிடம் அடிக்கடி உன் பையன்கள் காலத்தில் ஜாதி அறவே ஒழிந்துவிடும் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். ஆனால் இலைமறை காயாக இருந்தது இப்போது வெளிப்படையாகவே பேசப்படுகிறதோ என்று தோன்றுகிறது. அதுவும் வெளிநாட்டில் வேலை செய்யும் பையன்களும் பெண்களும் சொந்த ஜாதியில்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள்!
நானும் வாய்ச்சொல் வீரன்தான். என் பெண் நீயே மாப்பிள்ளை பாருப்பா என்ற சொன்னபோது சொந்த ஜாதியில் செங்குந்த கைக்கோள முதலியார் மாப்பிள்ளையாகப் பார்த்தேன். வேறு ஜாதியில் பார்த்தால் அங்காளி பங்காளிகள் கரித்துக் கொட்டுவார்கள், தொழில் படுத்துவிடலாம் என்ற பயம். என்ன செய்ய?
அன்று காலை அலுவலகம் வர தாமதம் ஆகிவிட்டது. வாசலில் பெரிய கார் ஒன்று நின்றிருந்தது. உள்ளே ஆஜானுபாகுவாக ஒருவர் காத்துக் கொண்டிருந்தார். ஆறடி உயரம். நல்ல கறுப்பு. வெள்ளையும் கறுப்பும் கலந்த முடி. நெற்றியில் விபூதி. பெரிய மூக்கு. அணிந்திருந்த கண்ணாடி, கழுத்தில் தொங்கிய மெல்லிய சங்கிலி, கூப்பிய விரல்களில் தெரிந்த வைர மோதிரம், வாசலில் நின்றிருந்த கார் எல்லாவற்றிலும் பணம் தெரிந்தது.
உதவிக்கு இருக்கும் பையனைப் பார்த்தேன். அவன் உடனே புரிந்து கொண்டு காஃபி வாங்கி வரப் போனான். “வணக்கம். உட்காருங்க. இங்கே சுந்தரேச ஐயர் ஓட்டல் டிகிரி காஃபி ரொம்ப ஃபேமஸ், பையன் இதோ வந்துடுவான்” என்று உபசரித்தேன்.
அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே போனோம். போகும்போதே “வணக்கம். என் பேரு சுப்பராயன். சவுத் ஆஃப்ரிக்காவில மளிகைக் கடை வச்சிருக்கேன். பூர்வீகம் தில்லயாடி. உங்களைப் பத்தி அங்காளி பங்காளிகள்ளாம் உயர்வா சொன்னாங்க. பொண்ணு தேடிட்டிருக்கேன்” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டார்.
“தில்லயாடி உங்க சொந்த ஊரா? இந்த தில்லயாடி வள்ளியம்ம அப்படிங்கறாங்களே, அந்த ஊரா?”
அவருக்கு குஷி கிளம்பிவிட்டது. “வள்ளியம்ம என் கொள்ளுப்பாட்டியோட சொந்த அத்ததானே! அவங்க கட்டின சீல ஒண்ணு இன்னும் எங்க வீட்டில இருக்கு. ஒரு மொற காந்தி எங்க வீட்டுக்கு வந்து பால் குடிச்சிருக்காரு. அவர் பால் குடிச்ச பித்தள தம்ளரு, அந்த சீல எல்லாம் எங்க வீட்டு பூச ரூம்ல வச்சு இன்னும் கும்பிடறோம்ல!” இதைப் பலரிடமும் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்பவர் என்று தெரிந்தது.
“சவுத் ஆஃப்ரிக்காவிலயே செட்டில் ஆயிட்டிங்களா?”
“ஆமாங்க, அஞ்சாறு தலமுறல குடும்பத்தில எல்லாரும் அங்க போய் செட்டில் ஆயிட்டோம். முதல்ல போனது வள்ளியம்மயோட மாமாங்கறாங்க. அப்புறம் எல்லாரும் ஒவ்வொருத்தரா போயாச்சு.” மீண்டும் வள்ளியம்மை. அவரைப் பற்றிப் பேசும் விருப்பம் உள்ளவர் என்று புரிந்தது.
பையன் காஃபியோடு வந்தான். காஃபியின் மணம் சுகமாக இருந்தது. “எனக்கு சக்கரை கிடையாது, நீங்க க்கரை போட்டுப்பீங்களா?” என்று கேட்டேன். “ஹான், ஒரு ஸ்பூன்” என்றார், பையன் அலமாரியிலிருந்து சர்க்கரை டப்பாவை எடுத்தான்.
“வள்ளியம்மையப் பத்தி சொல்லிட்டிருந்தீங்க” என்று எடுத்துக் கொடுத்தேன்.
“ஆமாங்க. எங்க வம்சத்துக்கே அவங்க குலதெய்வம் மாதிரிதாங்க. இன்னிக்கும் வள்ளியம்ம குடும்பம்னு எங்களுக்கு ஊரிலேயும் சரி, அங்க சவுத் ஆஃப்ரிக்காவிலும் சரி நல்ல மரியாதைங்க” என்று ஆரம்பித்தார். காஃபி வரும் வரையில் விடாமல் வள்ளியம்மையைப் பற்றி பேசிக் கொண்டே இருந்தார். எனக்கும் தாத்தாவின் நினைவால் இதில் எல்லாம் கொஞ்சம் ஆர்வம் உண்டுதான். காஃபியைக் குடித்துக் கொண்டே அவ்வப்போது ஊம் கொட்டிக் கொண்டு கேட்டுக் கொண்டிருந்தேன்.
பத்து நிமிஷம் கழித்து “நல்லா தமிழ் பேசறீங்களே?” என்று பேச்சை மாற்றினேன்.
“நான் இங்க பொறந்து வளந்தவந்தானே? அங்கே 92இல போனேன். அப்புறம் அஞ்சு வருசம் களிச்சு திரும்பி வந்து கல்யாணம் கட்டிக்கினேன். இப்போ என் அக்கா பையனுக்கு பொன்ணு தேடி இங்க வந்திருக்கேன்.”
“அங்கியே எதுவும் பாக்கலியா?”
“என் பொண்ணையே கட்டிக்கடான்னுதான் சொன்னோம். அது என்னாவோ உறவுல கட்டக்கூடாதாம். நான் என் மாமா பொண்ணதாண்டா கட்னேன்னு சொன்னா, அதான் புவனா கொஞ்சம் லூசா இருக்கான்னு சிரிக்கறான். அவன் ஒரு பொண்ண கூட்டிக்கிட்டு வந்தா நாங்க யாரும் முடியாதுன்னு சொல்ல மாட்டோம். அவன் அப்படி செய்யல. நாங்க அங்க பாத்த பொண்ணு எதுவும் அவனுக்கு பிடிக்கல. அவனே இந்தியாவில பொண்ணு பாருங்களேன்னு சொன்னான். நமக்கும் கொஞ்சம் சொத்து எல்லாம் விக்க வேண்டி இருக்குது. நீங்கதான் நம்ம சாதியில இந்த மாதிரி விஷயங்களில பெரிய கைன்னு சொன்னாங்க. அதான் உங்களப் பாக்க வந்தேன்.”
“பையனப் பத்தின விவரம்?”
“குமாரு டாக்டரா இருக்கான். ஒரே பையன். என் அக்காவும் மாமாவும் இப்ப இல்லே. நானும் என் வீட்டுக்காரியும்தான் அவனுக்கு அம்மா அப்பா மாதிரி. முப்பது வயசு ஆயிடுச்சு. நல்ல பணம் சம்பாதிக்கறான். நம்மூரு கணக்குப்படி மாசம் பத்து லச்சம் ரூபா சம்பாதிக்கறான். பெரிய வீடு, கார் எல்லாம் இருக்கு. ஒரே பையன். அவங்க அப்பாவும் நானும் சேந்து மளிகைக் கடை வச்சோம். அதுல அவன் பங்கு மாசம் ஒரு நாலு லச்சம் வரும். அந்த ஊரு கணக்குப்படியும் நல்ல பணம்தான்” என்றார். குரலில் பெருமை தெரிந்தது.
“நல்ல உயரம், என்னை விட ஒரு இஞ்ச் கம்மி. மாநிறம்தான், ஆனா பாக்க ராசா மாதிரி இருப்பான். என்னை மாதிரி கறுப்பு இல்ல. கெட்ட பளக்கம் எதுவும் இல்லே. டாக்டரே சிகரெட் பிடிக்க முடியுமான்னு கேப்பான். நல்லா தமிள் பேசுவான். ஃபோட்டோ கொண்டாந்திருக்கேன்.” என்று தொடர்ந்தார்.
“என்ன எதிர்பாக்கறீங்க?”
“பெரிசா எதுவும் இல்லீங்க. கொஞ்சம் அளகா இருக்கணும். படிச்சிருக்கணும். தஸ்ஸுபுஸ்ஸுன்னு இங்கிலீஸ் பேசத் தெரியணும். பணம் காசு பெரிசா இல்லாட்டாலும் கொஞ்சம் அந்தஸ்தா இருக்கணும். டாக்டரா இருந்தா நல்லது, ஆனா டாக்டர்தான் வேணும்னு இல்ல. அவ்ளோதான்.”
“நம்ம ஜாதியில டாக்டர் பொண்ணுங்க கொஞ்சம் கம்மிதான். எதுக்கும் ரெண்டு நாள் டைம் கொடுங்க” என்று கொஞ்சம் தயக்கமாகச் சொன்னேன். போன மாதம்தான் நாலு டாக்டர் பெண்களுக்கு சம்பந்தம் முடித்திருக்கிறேன், கைவசம் டாக்டர் பெண் எதுவும் இல்லை,
“நம்ம சாதிதான் வேணுன்றதெல்லாம் இல்லீங்க. நீங்க நம்ம சாதின்னு இங்க வரலீங்க, என் பங்காளி ஒருத்தர் உங்களைப் பத்தி உசத்தியா சொன்னதாலதான் வந்தேன். இங்க பாருங்க, நாங்க இருக்கறது சவுத் ஆஃபிரிக்கா. அங்க வெள்ளைக்காரன்தான் உசத்தின்னுதான் சட்டம் ரொம்ப நாளா இருந்துது. நெல்சன் மண்டேலா வந்த பிறகுதா எல்லாரும் சமமுன்னு சட்டம் போட்டிருக்காங்க. பணம் சம்பாதிக்கற வெறில அங்க இருந்தோம் ஆனா நிறைய அனுபவிச்சாச்சுங்க. மனுசன் எல்லாம் ஒண்ணுதாங்க, மகாத்மா காந்தியும் தில்லயாடி வள்ளியம்மயும் அதுக்குத்தான போராடினாங்க? அப்புறம் சாதி என்னா வேண்டிக் கிடக்குது? அளகு, படிப்பு, அந்தஸ்து இதெல்லாம்தாங்க பாக்கணும். அய்யர் பொண்ணானாலும் சரிதான் அரிஜன் பொண்ணானாலும் சரிதான். என்னா நாங்க சிக்கன் மீனு எல்லாம் சாப்பிடுவோம். அய்யர் பொண்ணுங்கன்னா அத தெளிவா சொல்லிடுங்க. அவ்ளோதாங்க!”
என்னைப் போல் வாய்ச்சொல் வீரர் இல்லை என்பது மகிழ்ச்சியாக இருந்தது. அப்புறம் எந்த ஜாதியாக இருந்தாலும் பரவாயில்லை என்றால் டாக்டரையே பிடித்துவிடலாம். ஐயர், பிள்ளைமார் யாராவது கிடைத்துவிடுவார்கள்.
“இப்பல்லாம் ஹரிஜன்னு சொல்றதில்லீங்க, தலித்துதான்.” என்று நான் இடைபுகுந்தேன்.
“அட சரி தலித்தோ கிலித்தோ. சாதி முக்கியமில்லீங்க, அவ்ளோதான்.”
“கேக்கவே சந்தோசமா இருக்குங்க. நம்ம ஊர்ல இப்படி சொல்றவங்க குறவுதான்.”
“நானும் இங்க இருந்தப்ப சாதி எல்லாம் பாத்த குடும்பத்துக்காரந்தாங்க. அது பாருங்க தில்லயாடிக்குள்ளே அங்காளி பங்காளிக்குள்ளேயே தகராறுதான். ஆனால் நூறு மைல் தாண்டி திருச்சிக்கு போனா நம்ம சாதின்னு யார் கிட்டயாவது போய் ஒட்டிக்கிடுறோம். மெட்ராசுக்கு வந்தா தஞ்சாவூர் திருச்சி ஜில்லாகாரங்க சிநேகிதம் பிடிச்சுக்கிடறோம். டெல்லிக்கு போனா? தமிள் பேசறவன் எல்லாம் சிநேகிதன். நாடு விட்டு நாடு போனா? இந்தியாக்காரன் எல்லாம் நம்மவன். இந்த மகாத்மா காந்தியவே எடுத்துக்கிடுங்க. அவர் சவுத் ஆஃபிரிக்கா போகலீன்னா ஒரு வள்ளியம்ம வீட்டு படியேறி பால் குடிச்சிருப்பாரா? குமாரு கூட தமிழ்ப் பொண்ணுதான வேணும்னு கேக்கறான்? அதாங்க இந்தியாவில வந்து பொண்ணு பாக்கறேன். நம்ம சாதில நல்ல பொண்ணு கிடச்சா வேணாங்கறது இல்ல. ஆனா நம்ம சாதிதான் வேணுங்கறதும் இல்ல.”
“ரெண்டு நாள் வேணாம் நாலு நாள் டைம் கொடுங்க. நான் வேற ஜாதிப் பொண்ணாவே பாக்கறேன். அது பாருங்க, என் கிட்ட சாதாரணமா நம்ம ஜாதிப் பொண்ணுங்க விவரம்தான் நிறைய இருக்குது. எந்த ஜாதியா இருந்தாலும் பரவாயில்லன்னு சொல்றவங்க கம்மி. நானே ஜாதி இல்லன்னு சொல்றவந்தான். ஆனா என் பொண்ணுக்கு நம்ம ஜாதிலதான் மாப்பிள்ள பாத்தேன். அதான் நீங்க சொல்றத கேக்கும்போதே சந்தோசமா இருக்குதுங்க. நான் வேற ஜாதிப் பொண்ணாவே பாக்கறேன். நானும் ஒரு கலப்பு திருமணம் செஞ்சு வச்சேன்னு ஒரு திருப்தி இருக்கும். வேற ஜாதிப் பொண்ணோட செட்டில் ஆச்சுன்னா எனக்கு நீங்க ஃபீஸ் கூட பாதி தந்தா போதும்.”
“நீங்க இப்படி சொல்றது எனக்கும் ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க. மாயவரம் பக்கம் நமக்கு கொஞ்சம் பூர்வீக சொத்து இருக்குதுங்க. அத வில பேசிட்டோம். அத முடிச்சுட்டு நான் அடுத்த செவ்வாய் வாக்கில வரேன். காஃபி பிரமாதம், தாங்க்ஸுங்க!” என்று சொல்லிவிட்டு எழுந்தார்.
மனதுக்கு நிறைவாக இருந்தது. வள்ளியம்மை வம்சாவளி. ஜாதி பார்க்காதவர். முனைந்து வேறு ஜாதியில் பெண் பார்க்க வேண்டும். கொஞ்சம் அலைய வேண்டி இருக்கும், இருந்தாலும் இதை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.
அடுத்த ஒரு வாரம் ஃபோனிலும் நேரிலும் ஒரு 15-20 பேரிடமாவது பேசி இருப்பேன். இரண்டு மூன்று இடம் கிட்டி முட்டி வரும்போது தென்னாப்பிரிக்கா, உயரப் பொருத்தம் சரிவரவில்லை என்று கை நழுவிவிட்டது. கடைசியாக ஒரே ஒரு சம்பந்தம் பொருந்தும் என்று தோன்றியது. சுப்பராயனுக்கு ஃபோன் செய்தேன், அவரே வருகிறேன் என்று சொன்னார். காஃபிக்கு ஏற்பாடு செய்துவிட்டு காத்திருந்தேன்.
அவர் நுழைந்ததும் நுழையாததுமாக அவரிடம் ஒரு ஃபைலை நீட்டினேன். “இந்த பொண்ணு பேரு வித்யாங்க. அய்யர் வூட்டு பொண்ணு. ஒரே பொண்ணு. இப்போ ஹவுஸ் சர்ஜன் பண்ணிட்டிருக்கு. அப்பா ஸ்டேட் பாங்க்ல மானேஜரா இருக்காரு. தில்லை நகர்ல் வீடு இருக்கு. பணம், அந்தஸ்து, அழகு எல்லாம் உங்களுக்கு சரி வரும்னு தோணுது. அவங்க வீட்ல உங்களப் பத்தி பேசினேன். அவங்களுக்கு முழு சம்மதம். பொண்ணுக்கு மாப்பிள்ளையையும் மாப்பிள்ளைக்கு பொண்ணையும் புடிச்சா போதுங்கறாங்க” என்று வேகவேகமாக சொன்னேன்.
“நாங்க சிக்கன் எல்லாம் சாப்பிடுவோம்னு சொன்னீங்களா?”
“பொண்ணோட அப்பா கல்யாணத்தில காடை பிரியாணி போட்டீங்கன்னா நானும் ஒரு வெட்டு வெட்டுவேன்னு சொன்னாருங்க”
“சிக்கன் துண்ற அய்யரா? பலே, பலே! பொண்ணு ஃபோட்டோ இருக்கா? அத குமாருக்கு அனுப்பிடுவோம்.”
“இதோ இங்கருக்கு” என்று அவரிடம் ஒரு கவரை நீட்டினேன். அவர் கவரைப் பிரித்து புகைப்படங்களை எடுத்தார். இரண்டு நிமிஷம் எதுவும் பேசவில்லை, மீண்டும் மீண்டும் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருந்தார்.
பிறகு மெதுவான குரலில் “இல்லீங்க இந்த பொண்ணு வேணாம்” என்றார்.
“என்னங்க, என்னாச்சு?”
“அய்யர் வூட்டு பொண்ணுன்றீங்க, பொண்ணு இவ்ளோ கறுப்பா இருக்கே? கொஞ்சம் கலரா, அழகா பாருங்க”
வள்ளியம்மை என்ன நிறத்தில் இருந்திருப்பார் என்ற எண்ணம் என் தலையைக் குடைந்தது.
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.

சுவாரஸ்யமான கதை. கடைசி இரண்டு வரிகளும் சூப்பர்!
சுவாரஸ்யமான கதை