- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 1
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 2
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 3
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 4
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 5
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 6
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 7
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 8
- அது ஒரு கணினி நிலாக்காலம் – பகுதி 9
- ”பலகை, டிவி எல்லாம் வருதுன்னு கேள்விப்பட்டேன்”

இன்று, மின்னஞ்சல் என்பது ஒரு பெரிய விஷயமாக யாரும் நினைப்பதில்லை. வாட்ஸாப் என்பது, அதிகம் கணினியைப் பயன்படுத்த தெரியாதவர்கள் கூட இன்று சகஜமாகப் பயன்படுத்துகிறார்கள். மின்னஞ்சலுக்கு எந்த மென்பொருளைப் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்டால், பலருக்கு அதன்பெயர் கூடத் தெரியாது. ஜிமெயிலா அல்லது அவுட்லுக்கா அல்லது யாஹூவா என்று இன்று கேட்டால், வரும் செய்திக்கு பதிலளிக்கிறேன். அது என்ன மென்பொருள் என்றெல்லாம் எனக்குக் கவலையில்லை என்றே பெரும்பாலும் பதில் வரும். ஆனால், மின்னஞ்சலின் ஆரம்ப நாட்கள், இன்றுடன் ஒப்பிட்டால், மிகவும் வேடிக்கையானவை.
90 -களில், லோடஸ் என்ற நிறுவனம் நோட்ஸ் (Lotus Notes) என்ற மென்பொருளை அறிமுகப் படுத்தியது. இந்த மென்பொருளை நிறுவி நான் வேலை செய்த நிறுவனத்தில் பயனர்களிடம் போராடிய தருணங்கள் இன்று வேடிக்கையாக இருக்கலாம். ஆனால், அந்த காலத்தில், மிகவும் நொந்து போகும் ஒரு விஷயமாக இருந்தது. இந்த நோட்ஸ் மென்பொருளில், ஒத்துழைப்பு மற்றும் மின்னஞ்சல் போன்ற விஷயங்கள் அடக்கம். ஒத்துழைப்பு என்பதெல்லாம், தூரத்துக் கனவு – மின்னஞ்சலை வேலை செய்ய வைத்து பயனர்களுக்கு பயன்பெறச் செய்வதற்குள் போதுமென்றாகிவிட்டது. சில உரையாடல்கள் இந்த வேடிக்கையை வெளிச்சம் போட்டுக் காட்டும்.
(ப)யனர்: தொலைப்பேசியில், “ஆர்டர் பதிவு செய்வதில் உதைக்குது சார். சேவ் (Save) செய்ய முடியல”
நான்: ”அந்தப் பிரச்சினையை ஒரு மின்னஞ்சலாக அனுப்பிருங்களேன்”
ப: “என்ன சார், அநியாயம் இது? போன வாரம் வரை, கூப்பிட்டா உடனே வருவீங்க. இப்ப எதுக்கு சார் இந்த ஈமெயிலெல்லாம்?”
நான்: “மேலிடத்து உத்தரவு. எந்தப் பிரச்சினையும் ஈமெயில்ல வந்தாதான் நாங்க வேலை செய்யணும்னு!”
ப: “உங்களுக்கே நல்லாயிருக்கா இது? நான் ஆர்டர் நடுவுல மாட்டிகிட்டு தடுமாறரேன். நீங்க ஈமெயில்னு புதுசு புதுசா கடுப்பேத்தறீங்களே”
நான்: ”ஒண்ணு செய்வோம். இந்த முறை அங்க வந்து சரி செய்யறேன். ஆனால், உடனே நீங்க ஒரு ஈமெயில் அனுப்பிருங்க”
ப: ”எனக்கு இந்த ஈமெயிலெல்லாம் வராது. நீங்க ஒண்ணு செய்யுங்க. வேலைய முடிச்சு, நீங்களே ஒரு ஈமெயில் அனுப்பிருங்க”
நான்: “சார், அது நீங்கதான் அனுப்பணும். நான் எனக்கே அனுப்பக் கூடாது”
ப: “என் வேலையும் ஆகட்டும், உங்க வேலையும் ஆகட்டும். நீங்க இப்படி செஞ்சுறுங்க. வேலையை முடிச்சு, என்னுடைய கம்ப்யூட்டரிலிருந்து உங்களுக்கு நீங்களே ஈமெயில் அனுப்பிடுங்க!”
இப்படி தட்டிக் கழிப்பது அந்நாட்களில் மிகவும் சகஜம். இன்னொரு தருணத்தில், இப்படி ஒரு உரையாடல்.
ப: ”சார், இந்த மென்பொருளில் ஒரு சின்ன மாற்றம் செய்தால் என்னுடைய வேலையைப் பெரிதாகக் குறைக்கும். செஞ்சுறுங்க, சார்!”
நான்: “பிரச்சினை என்ன, அதைத் தீர்பதற்கு, உங்களது ஆலோசனை என்ன, என்று விவரமாக ஒரு ஈமெயில் அனுப்பிருங்க. நாங்க இதை கலந்து ஆலோசித்து, சரி செய்ய முயற்சிக்கிறோம்”
ப: ”என்ன சார், அநியாயம்! நீங்க ஐடி டிப்பார்ட்மெண்டா, இல்லை போலீசா? நீங்க கேக்கறத பார்த்தா ஏதோ FIR போடச் சொல்லுவீங்க போல இருக்கே!”
நான்: ”அப்படியெல்லாம் இல்லை சார். எப்படியும் நீங்க எல்லாத்தையும் எங்கிட்ட சொல்றீங்க. அதை ஒரு ஈமெயிலா அனுப்பச் சொல்றோம். அவ்வளவுதான். ரொம்ப பெரிசு படுத்த வேண்டாமே”
ப: ”உங்களுக்கே தெரியும். நான் கணக்கர். எனக்கு, கணக்கு சரியாக வரும். விவரமா இங்கிலீஷ்ல எழுதச் சொன்னா உதைக்கும். தப்பும் தவறுமா நான் ஈமெயில் அனுப்பி, அதை ஐடி -ல ஒரு கேலி கூத்தா ஆயிடக் கூடாது இல்லையா?”
நான்: “ஒன்னும் கவலைப் படாதீங்க சார். நாம என்ன ஷேக்ஸ்பியர் நாடகமா எழுதறோம்? என்ன செய்யணும்னு உங்க கைப்பட எழுதிய ஈமெயில் எங்களுக்கு வேணும். அவ்வளவுதான். அப்படியே ஏதோ குறை இருந்தாலும், அதைப் பெரிசுபடுத்த எங்களுக்கு நேரமில்லை. ஒண்ணு செய்யுங்க. ஈமெயில் எழுதிட்டு எனக்கு போனில் படிச்சு காட்டுங்க. ஏதாவது தவறு இருக்கும்னு பட்டா சரி செஞ்சுடலாம்”
இப்படி பயனர்களிடம், ஈமெயில் அனுப்பக் கெஞ்ச வேண்டும்!
இன்னொரு முறை, ஒரு பயனருடன் நடந்த மிகவும் வேடிக்கையான நிகழ்வு நினைவுக்கு வருகிறது.
ப: “எதுக்கு சார், இந்த ஈமெயில்னு புதுத் தொந்திரவு எல்லாம் கொண்டு வந்து எங்க உயிர வாங்குறீங்க?”
நான்: “கொஞ்சம் விவரமா சொல்லுங்க என்ன பிரச்சினைனு…”
ப: ”இன்னிக்கு, என் வேலை எதுவுமே நடக்கலை. இந்த ஈமெயிலோட நாள் முழுவதும் போராடி வெறுத்துப் போச்சு சார். அந்த மானிட்டரை போட்டு உடைக்கலாம்னு கோபம் பத்திகிட்டு வருது. உங்க எல்லாருக்கும் பதில் சொல்றதுக்குள்ள நான் மேல போய் சேந்துருவேன் சார்!”
நான்: “உங்களோட கோபம் ஈமெயில் மேலன்னு தெரியுது. ஆனால், என்ன பிரச்சினைனு புரியல சார். இன்னும் கொஞ்சம் விவரம் குடுங்களேன்”
ப: ”தலைவர் போன வாரம், மீட்டுங்குல, விலை மாற்றத்தை அறிவிச்சார் இல்லையா? நீங்களும் அந்த மீட்டிங்கிற்கு வந்தீங்கன்னு நினைக்கிறேன்”
நான்: “வந்தேன். அதுக்கும், உங்க ஈமெயில் பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?”
ப: “எல்லா சேல்ஸ் மற்றும் டீலர்களுக்கும் புதிய விலை, மற்றும் அதன் விவரங்களை என்னை அனுப்பச் சொன்னார், இல்லையா?”
நான்: ”ஆமாம்”
ப: “ஒன்னு இல்ல, ரெண்டு இல்லை, 92 சேல்ஸ் சம்பந்தப்பட்டவர்கள், மற்றும் 20 டீலர்கள் – மொத்தம் 112, பேருக்கு விவரம் அனுப்ப வேண்டும். தலைவர் இதை ஒரு ஈமெயிலாக அனுப்பச் சொன்னார்”
நான்: “நல்ல ஐடியாதான். அதுக்கென்ன?”
ப: “தலைவருடன் சும்மா ஒத்து ஊதாதீங்க சார். படற எங்களுக்குத்தான் தெரியும் கஷ்டம். என்னிடம் விட்டிருந்தா, ஒரு ரெண்டு பக்கம் டைப் செய்து, நகல் எடுத்து எல்லோருக்கும் அனுப்பியிருப்பேன். மொத்தம் ஒன்றரை மணிநேரம் கூட ஆகாது. இந்த ஈமெயில் போல நாள் முழுவதும் ஆகாது”
நான்: “எப்படி ஈமெயிலில் நாள் முழுவதும் ஆகும் என்பது புரியவில்லை. எப்படி அனுபிச்சீங்கன்னு கொஞசம் விவரமா சொல்லுங்களேன்”
ப: “எல்லாம் சொல்லிக் கொடுத்த மாதிரிதான் அனுப்பிச்சேன். விவரத்தை டைப் செய்து ஒருவருக்கு அனுப்பி விட்டேன். அதன் பிறகு, அந்தச் செய்தியை காப்பி செய்து அடுத்தவருடைய ஈமெயிலுக்கு அனுப்பினேன். இப்படி 112 ஈமெயில் அனுப்பவதற்குள் நாள் முழுவதும் ஆகிவிட்டது. எனக்கு விடுமுறை வேண்டும். மிகவும் களைப்பாக்கி விட்டது இந்த ஈமெயில்”
நான்: “என்னிடம் ஒரு வார்த்தை அனுப்புவதற்கு முன் கேட்டிருக்கலாம். ஒரு ஈமெயில் அனுப்புவதற்கும், 112 ஈமெயில் அனுப்புவதற்கும் எந்த நேர வித்தியாசமும் இருக்கக்கூடாது”
ப: “அதெப்படி சாத்தியம்?”
நான்: “நீங்கள் To முகவரி மட்டுமே பயன்படுத்தறீங்க. அதுக்குக் கொஞ்சம் கீழே வந்தா Cc முகவரின்னு இருக்கும், Cc என்றால், Carbon Copy. நீங்கள், 111 பேரின் மின்னஞ்சல் முகவரியை அங்கு பதிவு செய்து அனுப்பினால், அத்தனை பேருக்கும் மின்னஞ்சல் போய் விடும். உங்களுக்கும் நேரம் மிஞ்சியிருக்கும். Cc என்பதற்கு கீழ், Bcc என்று ஒரு வஸ்து உண்டு. அது Blind Carbon Copy. நீங்கள் அனுப்பும் செய்தி ஒன்றாக இருந்தாலும், படிப்பவருக்கு, நீங்கள் வேறு யாருக்கு அனுப்பியுள்ளீர்கள் என்று தெரிய வராது”.
இந்த நிகழ்விற்குப் பின், இந்தப் பயனர் ஒரு மிகப் பெரிய மின்னஞ்சல் விரும்பியாக மாறினார். இன்று வாட்ஸாப்பில் எங்கோ உலகின் ஒரு மூலையில் செய்திகளை ஃபார்வோர்டு செய்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்!
Discover more from சொல்வனம் | இதழ் 362 | 08 மார் 2026
Subscribe to get the latest posts sent to your email.
