
அசோகமித்திரன் மறைந்து ஐந்தாண்டுகளுக்குப் பிறகும் அசோகமித்திரனைப் பற்றிப் பேசுகிறோம். இதிலிருந்து தெரியவில்லையா அசோகமித்திரனின் பங்கு நவீனத் தமிழ் இலக்கியத்தில் எவ்வளவு முக்கியமென்று.
தமிழில் முக்கியப் படைப்பாளியான புதுமைப்பித்தனை 40 ஆண்டுகளுக்குப் பிறகும் பேசுகிறோம். ஏன்? கல்கியைப் பேசுகிறோம். இன்னும் எல்லோரும் கல்கியைக் கொண்டாடுகிறார்கள். ஏன்? அதேபோல் அசோகமித்திரனும்.
அசோகமித்திரன் சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என்று எல்லாத் துறைகளிலும் தன் பங்களிப்பைச் செய்துள்ளார். இன்னும் கூட நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு முக்கியத்துவம் பெறுகிறது. அதற்குக் காரணம் என்ன?
புதிய வகை எழுத்துதான் காரணம். அசோகமித்திரன் ஆரம்பத்திலிருந்து புதிய வகை எழுத்தை அறிமுகப் படுத்தி உள்ளார்.
274 கதைகள் அடங்கிய தொகுப்பில் அசோகமித்திரன் எழுத்தின் தரம் நவீன உத்திக்கு இட்டுச் செல்கிறது என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.
ஆரம்பத்திலிருந்தே இவருக்கு இதுமாதிரி எழுத வந்து விட்டது.
இவர் கதைகளில் முக்கியமான அம்சமாக நான் கருதுவது, எளிதாக எல்லோருக்கும் புரியும்படி எழுதுவது.
இதைக் குறிப்பிடுவதால் மட்டும் இவரை நவீனத் தமிழ் இலக்கியத்தில் முக்கியமாகக் கருதக் கூடியவரா என்று சொல்ல முடியுமா?
முடியும். ஒவ்வொரு மனிதருக்கும் பலவித சிக்கல்கள் இருக்கும். அதைக் கேள்விப்பட்டவுடன் திறமையாகக் கதை ஆக்கி விடுகிறார் அசோகமித்திரன்.
ஒரு சாதாரண மனிதர். அவருடைய சாதாரண அனுபவம் கூட கதையாக முளைத்து விடுகிறது. அவர் அறையை விட்டு உடனே அவரால் எங்கும் சென்று விட முடியாது. ஆனால் கதைகள் அவரைச் சுற்றிச் சுற்றி வந்தவண்ணம் இருக்கின்றன. அவர் எழுதிக்கொண்டே போகிறார். 85 வயதிலும் கதைகள் எழுத அவரால் முடிகிறது.
அவருடைய புத்தகத்திலிருந்து இரண்டு கதைகளை மட்டும் எடுத்து வைத்துக்கொண்டேன். முதல் கதை 1956ல் எழுதிய ‘நாடகத்தின் முடிவு’ என்ற கதை. 1956ல் கலைமகளில் கி.வா.ஜ ஆசிரியர் பொறுப்பில் இக்கதை வந்ததாக என்னிடம் தெரிவித்திருக்கிறார். இக் கதை எழுதியபோது அசோகமித்திரனுக்கு வயது 23 அல்லது 24 இருக்கும்.
அதேபோல் இன்னொரு கதையை எடுத்துக்கொண்டேன். அக் கதையை அவர் 10.02.2016ல் எழுதியிருக்கிறார். ஆனந்தவிகடன் இதழில் இக் கதை வந்துள்ளது. இக் கதையின் பெயர் ‘அத்தை’. இக் கதையை எழுதும்போது அவருக்கு வயது 85. முதல் கதை எழுதிய ஆண்டிலிருந்து 60 ஆண்டுகள் கழித்து எழுதிய கதை இது. இத்தனை ஆண்டுகளும் மரணம் அடையும்வரை கதைகள் எழுதிக் கொண்டே வந்திருக்கிறார். கதைகளை எழுதுவதில் அவருக்கு அலுப்பே ஏற்பட்டதில்லை.
இதோ 60 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கதையைப் படித்தப்போதும், இப்போது எழுதிய கதையைப் படித்த போதும் எனக்கு என்ன தோன்றுகிறது. முதலில் ஆச்சரியம். முதல் கதையைப் படித்தப்போது அவருடைய தனித்துவம் தெளிவாகத் தெரிகிறது. கதையில் அவர் பயன் படுத்திய வார்த்தைப் பிரயோகம் அபாரமாக இருக்கிறது. கதையில் அவர் கொண்டுவரும் மௌனம் குறைவாக இருக்கிறது. ஆனால் வார்த்தைகள் அதிகமாக வெளிப்படுகின்றன.
‘ஆனந்தரின் உடல் வேதனையால் துடிதுடித்தது. கைகள் ஒன்றையொன்று
இறுகப் பிசைந்து கொண்டதனால் பல இடங்களில் இரத்தம் கசிய ஆரம்பித்தது’ என்கிறார்.
சரோஜா என்ற அந்தக் கதையில் வரும் கதாபாத்திரம் கீழ்க்கண்டவாறு பேசுகிறாள் :
‘வாழ்க்கையில் உன்னால் அடைய முடியாத இன்பங்களை இந்த நாடகத்தின் மூலம் அனுபவிக்க எண்ணினாய். அன்பே இன்னதென்று அறியாத உன் மீது யாரும் அன்புகொள்ள முடியவில்லை. உலகத்தில் மிக ஈனமான பெண்கூட உன்னை உள்ளன் போடு காதலிக்க இயலவில்லை…’ என்றெல்லாம் இக் கதை போய்க்கொண்டிருக்கிறது. ஆனாலும் இக் கதை இப்போதும் படிக்கப் படிக்க வேண்டாமென்று மூடி வைத்து விடலாமென்று தோன்றுவதில்லை. இதுதான் அசோகமித்திரன் திறமை. ஆனால் அசோகமித்திரன் இப்போது இந்தக் கதையை இப்படி எழுதி இருக்க மாட்டார். மேலும் அவரால் இது மாதிரி ஒரு கதையை அப்போது எழுதியதுபோல் எழுதியிருக்க முடியுமா என்பது தெரியவில்லை. நிச்சயமாக எழுதியிருந்தாலும் கதை வேறு விதமாகத்தான் இருக்கும்.
அசோகமித்திரன் அவருடைய 85வது வயதில் எழுதிய ‘அத்தை’ என்ற கதையை எடுத்துக்கொள்வோம். உண்மையில் இந்தக் கதை அவருடைய முதல் கதையைவிடச் சிக்கலானது. படிப்பவருக்குப் புரியும் என்று நிச்சயமாகக் கூற முடியாது. அவருடைய எல்லாக் கதைகளிலும் காணப்படும் கவர்ந்து இழுக்கும் தன்மை இக் கதையிலும் உண்டு.
இந்தக் கதையில் அவர் மௌனத்தைப் புதைத்து வைத்திருக்கிறார். கதையில் சொல்லாமல் பல விஷயங்களைச் சொல்கிறார். ஒரு விதத்தில் இந்தக் கதை அத்தையைப் பற்றித்தானா என்ற சந்தேகம் வரும். அத்தை, ‘ராமநாதன்’ என்கிற தம்பியின் புதல்வனைச் சுவீகாரம் எடுத்து வளர்த்து வருகிறாள். இந்தக் கதை திடீரென்று ராமநாதன் பக்கம் திரும்பி விடுகிறது. கல்யாணத்திற்காக அத்தையின் குடும்பம் தியாகராயர்
ராகவையா சாலைக்கு வருகிறது. அங்கு ராமநாதன் எங்கோ காணாமல் போய்விடுகிறான். அத்தைக் குடும்பம் கலவரப் படுகிறது. பின் ராமநாதனைப் போலீசு கண்டுபிடித்துவிடுகிறது. ஒவ்வொருத்தராக அந்தக் குடும்பத்தில் எல்லோரும் மறைந்துவிடுகிறார்கள். அத்தையின் பத்தாவது தினத்திற்குச் செல்கிறான் இந்தக் கதையின் நாயகன். அப்போது ராமநாதன் கேட்கிறான் : ‘‘என்னையும் அழைச்சிண்டு போ,’’ என்கிறான்.
அதைக் கேட்டு கதையின் நாயகனுக்குத் தூக்கி வாரிப் போடுகிறது. இந்த இடத்தில் கதை மௌனத்தில் கரைந்து விடுகிறது. ராமநாதனை அழைத்துப் போனதுபோல் தெரியவில்லை. ஆனால் சிறிது நாட்கள் கழித்து ராமநாதனும் இறந்து விடுகிறான்.
அசோகமித்திரன் இப்படித்தான் ஒரு கதையை முடிக்கிறார். பூடகமாக. படிப்பவர்க்குத் திரும்பத் திரும்பப் படிக்கத் தூண்டுவதுபோல. அவர் நிஜ வாழ்க்கையிலும் அப்படித்தான் இருந்திருக்கிறார். அவரை அவ்வளவு எளிதாகப் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் எளிதான மனிதர். இது மாதிரி ஒவ்வொரு கதையாக எடுத்து எப்போது வேண்டுமானாலும் படிக்கலாம். படித்துக்கொண்டே இருக்கலாம்.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் அசோகமித்திரனின் பங்கு உங்களுக்குப் புரிகிறதா?
‘துளிகளில் நிறையும் முழுமை’ என்ற தலைப்பின் கீழ் எழுத்தாளர் மோகன ரங்கன் அசோகமித்திரனைப் பற்றி எழுதிய கட்டுரை முக்கியமானது.
மோகனரங்கன் எழுதுகிறார் :
‘அசோகமித்திரனின் கதைகள் அவற்றின் செறிவான உருவம், துல்லியமான விவரிப்பு, குறிப்புணர்த்தும் தன்மை, உணர்ச்சி சமநிலை எனப் பலவிதத்திலும் நவீனத்துவத்தின் வரையறைக்குள் வடிவ ரீதியாகப் பிசிரின்றி பொருந்தக்கூடியவை.’
‘அசோகமித்திரன் என்ற மனிதர்’ என்ற தலைப்பில் ஆனந்த நடராஜன் எழுதியிருக்கிறார்.
‘என்னுடைய சிறுவயதில் 18வது அட்சக்கோடு, ஒற்றன், பிறகு அவருடைய சில சிறுகதைகள் ஆகியவற்றைப் படித்த பிறகு அசோகமித்திரன் என்ற பெயர் எனக்குள் எழுப்பிய பிம்பம் பிரம்மாண்டமானதாக இருந்தது. அசோகமித்திரன் என்ற அந்தச் சொல், பொன்னியில் செல்வனில் வரும் வந்தியத்தேவன் என்ற பெயர் எழுப்பும் ஒரு கம்பீரத்தை எனக்குள் எழுப்பியிருந்தது. முதன் முதலாக அவரை மேக்ஸ் முல்லர் பவனில் பார்த்தேன். நான் நினைத்து வைத்திருந்த மனிதருக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் அவர் பேசக் கேட்டபோது அந்தப் பெயருக்கே வேறு ஒரு அர்த்தம் வந்து பொதிந்து கொண்டது.’
அசோகமித்திரன் வாழ்க்கையை நேசிக்கிறவர் அதனால்தான் அவர் அவ்வளவு சிறப்பாக எழுத முடிகிறது.
அசோகமித்திரன் மாதிரி ஒரு எழுத்தாளர் இந்தியாவில் மற்ற மொழிகளில் இருக்கிறாரா என்று தெரியவில்லை. ஏன் உலக அளவில் கூட சொல்லலாமென்று தோன்றுகிறது.
அசோகமித்திரன் பற்றி எழுதும்போது பி.ஏ.கிருஷ்ணன் என்ற எழுத்தாளர் இப்படிக் குறிப்பிடுகிறார்.
‘அசோகமித்திரனின் கட்டுரைகள் உலகம் தழுவியவை. பல அரசும், சமூகமும், வாழ்க்கையும் அன்றாடம் நடத்தும் வன்முறைகளைப் பற்றிய கூரிய பார்வை கொண்டவை. அவரது கட்டுரைகளில் இந்த வன்முறைகளுக்கு எதிர்மறையாகக் கோபமோ, எரிச்சலோ, உலகை ஒரு கை பார்த்து விடுகிறேன் என்ற உத்வேகமோ தென்படுவதில்லை. ஆனால் இதுதான் நடந்தது என்று அவர் சொல்லும்போதே நடந்ததன் தாக்கம் நம் மீது நம்மையே அறியாமல் குளிர் காலத்தில் கவியும் பனிபோல கவிந்து விடுகிறது.’
அசோகமித்திரன் அவர்கள் ஆனந்த விகடனுக்கு 1985 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் கூறுகிறார் : ‘மனித இனமே ஒன்று’ என்ற ஒரே செய்தியைத்தான் என் முப்பதாண்டு படைப்புகள் கூறி வருகின்றன.
கிழக்குப் பதிப்பகம் அசோகமித்திரனுடைய கட்டுரைகளை இரண்டு பகுதிகளாகக் கொண்டு வந்துள்ளன. அதில் பின் அட்டையில் வெளியிட்ட தகவலை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
‘தமிழிலும் பிற மொழிகளிலும் பல்வேறு காலகட்டங்களில் வெளியான முக்கியமான நூல்கள் குறித்தும், ஏராளமான இந்திய, அயல்மொழி எழுத்தாளர்களின் படைப்புகள் மற்றும் வாழ்க்கை குறித்தும் அசோகமித்திரன் எழுதிய கட்டுரைகள் இந்நூலின் முக்கியப் பகுதி. நாடகம், சினிமா போன்ற நுண்கலைகள் குறித்த அவரது அக்கரைகள் தனிப்பகுதியாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது.’
அசோகமித்திரனின் கட்டுரைகள் ஒருபோதும் குரல் உயர்த்தாதவை. அவரது கதைகளில் காணப்படும் அமைதியும், விலை மதிப்பற்ற எளிமையும் அவரது கட்டுரைகளிலும் காணக்கிடைக்கின்றன.
அசோகமித்திரனின் ‘தண்ணீர்’ என்ற புத்தகத்தில் வண்ண நிலவன் இப்படிக் கூறுகிறார்.
‘அசோகமித்திரன் போல் இவ்வளவு இறுக்கமாக உணர்ச்சிகளையும் சம்பவங்களையும் பின்னிக் கதை எழுதும் படைப்பாளி, வேறு எந்த இந்திய மொழியிலாவது இருக்கிறாரா என்று தெரியவில்லை. இருக்கச் சாத்தியமில்லை என்றே என் உள்ளுணர்வு கூறுகிறது.’
ஒரு பேட்டியில் அசோகமித்திரன்.
‘என்னுடைய கதைகள் வாழ்க்கையில் இருக்கிறதுதான். அதுல வர பாத்திரங்களை ஏதோ ஒரு சமயத்திலே சந்திச்சுருக்கேன் நான் எழுதும் எழுத்து எல்லாமே அந்தப் பாத்திரங்களுக்கு நான் செலுத்துகிற ஒரு அஞ்சலிதான். என் படைப்பு எதை எடுத்துப் பார்த்தாலும் அது, அதில் வரும் மூலமாதிரிக்கு என்னுடைய அஞ்சலி, மரியாதை இல்லாவிட்டால் வாழ்த்து.’
‘ அசோகமித்திரனின் கதைகளைப் பொறுத்தவரையில் மரணம் உட்பட எந்த ஒரு நிகழ்விற்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை எனலாம்’ என்கிறார் மோகன ரங்கன்.
அசோகமித்திரனைப் புகழ்ந்து ஞானக்கூத்தனின் கட்டுரையில் ஒரு பகுதியைப் பார்ப்போம் :
‘தொடக்கத்திலேயே அசோகமித்திரன் படைப்புகள் குறித்து நண்பர்களிடையே நான் விவாதித்திருக்கிறேன். ‘நடையில்’ வெளியான ‘பார்வை’ என்ற கதை குறித்து நான், சி.மணி, ந. முத்துசாமி, வி.து. சீனுவாசன் ஆகியோர் விவாதித்திருக்கிறோம். இதன் தொடர்ச்சியாக தருமு சிவராமு ஒரு முறை, ‘அசோகமித்திரன் எழுதிய கதை ஒன்று எழுத்து பத்திரிகையில் வெளியானதால்தான் கவனிக்கப் பெற்றார்’ என்று சொல்ல அவரை நான் இகழ்ந்தேன். ‘அசோகமித்திரன் முன்னமேயே எழுதிய படைப்புகளால்தான் செல்லப்பாவின் எழுத்து கவனித்தது’ என்றேன். தொடர்ந்து அசோகமித்திரனின் உரைநடைதான் உண்மையான உரைநடை என்றும் சொன்னேன். ஏன் என்றால் அவர் உரைநடை செய்யுளைச் சிறிதும் பின்பற்றுவதில்லை.’
ஞானக்கூத்தன் கட்டுரையை முடிக்கும்போது, அசோகமித்திரன் தன் சொந்தப் படைப்புகள் பற்றி என்ன நினைக்கிறார் என்பது.
அசோகமித்திரன் சொற்களையே இங்குத் தருகிறார் ஞானக்கூத்தன்.
‘சுமார் முப்பதாண்டுகளுக்கு மேலாகத் தட்டுத் தடுமாறி எழுதிக்கொண்டு வருகையில், திடீரென ஒரு நாள் ஓர் எண்ணம் உதித்தது. தனித்தனியாக வெவ்வேறு தலைப்புகளில் வெவ்வேறு வடிவங்களாக எழுதினாலும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளதாகத்தான் எல்லாமே உள்ளது. இன்னும் சில நாட்கள் கழித்து, அது தொடர்பு இல்லை, ஒன்றையேதான் இவ்வளவு ஆண்டுகளாக எழுதி வருகிறேன், என்றும் தெரிந்தது. இந்த ஒளி கிடைத்தவுடன் இலக்கியத்துக்கும் இலக்கிய வாதிகளுக்கும் உள்ள உறவுக்குப் புதிய பரிமாணங்கள் புலப்படலாயின.’
நல்ல பாடகனின் பாட்டையோ, நல்ல பேச்சாளனின் பேச்சையோ கேட்கும்போது நம் உடம்பே தாம் யார் நிலைக்கு வந்து பின்பு மகிழ்ச்சியுடன் யதார்த்த ஸ்தானத்துக்குத் திரும்புவதுபோல் உள்ளது அசோகமித்திரனால் கிடைக்கும் வாசிப்பு அனுபவம்.
அசோகமித்திரன் ஏனோ தானோவென்று கதை எழுதுவதில்லை. கதைளைப் பற்றி முன் தீர்மானம் கொண்டவர். அப்படிப்பட்ட ஒருவர்தான் கதை எழுதுவதில் சாதனை புரிய முடியும். இன்றைய நவீனத் தமிழ் இலக்கியத்தில் பங்கு பெறும் ஒருவராக இருந்து வெற்றி பெற முடியும்.
அவர் எழுதுகிறார் :
‘கதைகளைப் பொறுத்தவரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனத்தில் உருவம் பெற வேண்டும். உருவமும் ஓரளவு மொழி நடையும் கதைக்குத் கதை மாறும். மாற வேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில் இந்த உருவம் அமைவது மிகக் கடினமான பகுதி. ஒரு படைப்பின் உருவத்துக்காக நாட்கணக்கில், மாதக்கணக்கில், வருடக் கணக்கில் காத்திருக்க வேண்டும்.’
அசோகமித்திரனின் எழுத்துக்கள் நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு மட்டும் அல்ல, அவர் ஒரு பிரபஞ்ச எழுத்தாளர். வருங்கால எழுத்தாளர்களுக்கு உள் ஒளி காட்டக் கூடிய எழுத்தாளர்.’