
இரு வாரங்களுக்கு முன் (ஜூலை 2023) இந்திய பயணம் மேற்கொண்ட போது விமானம் துருக்கி கடந்து அரேபிய பாலைவனத்தை எதிர் கொண்டது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியின் அழகிய மலைப்பகுதிகள் பின் செல்ல பெரும்பாலை கண் முன் விரிந்தது. ஒவ்வொரு முறையும் கிழக்கு நோக்கி பயணிக்கும் போது கதிரோனின் உதயம் காணக் கிடைப்பதே இல்லை. விமானம் கதிரவனை அதிவிரைவில் எதிர்கொண்டு எழுந்து நிலை கொள்கிறான். முதலில் இறுக்கமான மணற்பாறை அமைந்த நிலப்பரப்பை கடந்து கண்கள் அகட்டி காத்திருக்க பழுப்பு வெண்பாலை விரிந்து வந்து அணைத்துக்கொண்டது.
ஒவ்வொரு முறையும் அதைக் காணும்போது நடப்பது போலவே போலவே அத்தருணத்திலும் மனம் எழுச்சியடைந்து உடன் நெகிழ்ந்து அடங்கியது. தொடுவானம் புலப்படாமல் பாலையின் புழுதி அதன் மேலேயே போர்த்திக் கிடந்தது. சிறிது நேரம் கழித்து பாலை கீழே தெளிவடைந்து வெண்மஞ்சள் ஒளியேந்தி பெரும் பரப்பாக அசைந்தும் அசைவிழந்தும் காட்சியளித்தது. பரவசமூட்டும் சித்திரம் அது.
தினம் ஐந்து முறை அஸான் ஒலிக்கும் நிலம். அஸானால் தினம் தினம் உயிர்ப்பிக்கப்படும் நிலம். நபிகள் நாயகம், கதீஜா, ஃபாத்திமா, அபூபக்கர், அலி, ஹூசைன் என்று அகத்தில் விரியும் வரலாற்று நாயகர்கள். இசுலாமும் பாலையும் அங்கே மென் மணலும் தூசும் போல ஒன்றோடு ஒன்று கலந்தவை. ஊரில் இறங்கியவுடன் வியப்புடன் படித்தது அஜிதன் எழுதிய அல் கிஸா குறுநாவல் கோவை புத்தக கண்காட்சியில் வெளியிடப்படும் செய்தி. கோவைக்கு உடனே செல்ல முடியாது போனாலும் நாவல் வெளியிதப்பட்ட அன்றே கிண்டியில் வாசிக்க கிடைத்தது.
பெரும்பாலையில் துவங்கி இன்று வரை ஆயிரத்து முன்னூறு வருடங்களாக உபாசிக்கப்படும் நிகழ்வு ஒன்று இசையால், வரலாற்றின் துயரத்தால், காதலால் அதீத உருவகம் கொண்டு எழுச்சியடையும் கதை. படிக்கத் துவங்கிய உடனே உள்ளிழுத்து வாசகரை அஜ்மீர் நகரத்தின் மேலே ஒரு மேகம் போல நிலை கொள்ள வைத்து விடுகிறது. அங்கிருந்து நாம் காண்பது மக்கள் செறிவு பல ஆறுகள் போல் ஒழுகும் காட்சி. மையமாக குவாஜா மொய்னுத்தீன் சிஷ்டியின் தர்கா. பலவித மார்க்கங்களின், மரபுகளின் வழி வந்த மக்கள் தன்னிலை மறந்து ஒன்று கூடும் மந்திரத்தன்மை உள்ளடக்கிய புனித தலம்.
கீழே ஹைதர் சுஹாரா எனும் இள உள்ளங்கள் ஒன்றையொன்று கண்டு கொள்வது மொஹர்ரம் மாதம் பத்தாம் நாள் அஷுரா இரவு உஸ்தாத் படே குலாம் அலிகானின் இசை நிகழ்ச்சியில். மேடையில் உஸ்தாத் பிறை நிலவொளியில் மர்ஸியா என்னும் இரங்கற்பாவை துவங்குகிறார். கர்பலா நிலத்தில் இமாம் ஹூசைன் தன் முடிவை எதிர்கொள்வது உஸ்தாதின் குரலில் எழுந்து செவி சாய்ப்பவர்களின் உள்ளத்திரையில் துல்லியமான காட்சிகளாக உருமாறுகின்றன. சுன்னி ஷியா பிளவு நிகழப் போவதற்கு முகாந்திரமான நாள். பின்னால் ஷியா பிரிவினர் தங்கள் தனி வரலாற்றை, தங்கள் தனி மார்க்கத்தை நோக்கி அடியெடுத்து வைக்க துணித்த நாள். பெரும் துயரத்திலிருந்து தங்களை மீட்டு எழுப்பிக் கொள்வதற்கான உறுதியை அளித்த நாளும் கூட. அஜ்மீரின் நட்சத்திரங்கள் மண்டிய இரவில் அக்கதையை பரவசத்துடன் கேட்டுக்கொண்டிருக்கும் திரளில் இருக்கும் ஹைதரும் சுஹாராவும் அந்த கூட்டிணைவில் ஒரு பகுதியாகிறார்கள், ஒருவரையொருவர் உன்னிப்பாக அறிந்து கொண்டே. எளிய ஈர்ப்பாக துவங்கியது இசையால், கூட்டு நனவிலியின் வெளிப்பாட்டால், இறையின் கருணையினால் பெரும் காதலாக மலர்கிறது.
முழுவதும் உயர் விழுமியங்கள் மட்டுமே நிறைந்த கதை அஜிதனின் கவித்துவம் செறிந்த மொழியில் கனவுத்தன்மையுடன் மென்மழைச் சாரல் போல வெளிப்படுகிறது. உன்னத உணர்வு நிலைகலளை வாசக மனங்களில் தோற்றுவித்துக்கொண்டே வரும் இந்த ஆக்கம் தற்போதைய தழிலிலக்கிய சூழலில் குறிப்பிடத்தக்க ஒன்று. கோவையில் பிறகு அஜிதனை சந்தித்து பேசியபோது ஆஜ்மீர் சென்ற அனுபவம் அவர் முன்அனுமானங்களை மாற்றிப் போட்டது என்றும் ஜெயமோகன் எழுதிய குமரித்துறைவி நாவலை முன் மாதிரியாக கொண்டு அல்-கிஸா எழுதினார் என்றும் கூறினார். ஹம்ஸா எனப்படும் ஃபாத்திமாவின் கை காலங்களை ஊடுருவி வரும் பண்டைய சின்னம் அஹ்லுல் பைதையின் குறியீடாக அட்டை படத்தில் அமைந்திருப்பது சிறப்பு.
அழகிய இந்த சிறு ஆக்கம் அடிப்படைவாதங்களின் கூச்சல்கள் மட்டுமே ஒலிக்கும் இச்சூழலில் பெரும் ஆறுதல் அளித்த ஒன்று. இதை எழுதியதற்காக அஜிதனுக்கு நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.
உங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஹுஸ்டன் சிவா.
ஒரே ஒரு முக்கியமான பிழை புரிதல் மட்டும் திருத்தப்பட வேண்டும். கர்பலா போர் ஷியாக்களுக்கும் சுன்னிகளுக்கும் இடையில் ஆனது அல்ல. அந்த பிரிவு அதற்கும் நூறு இருநூறு வருடங்கள் கழித்து அப்பாஸித் கலீபா உருவான பின்பே தெளிவாக தோன்றியது. ஹுஸைனின் இறப்பை அனைத்து இஸ்லாமியர்களும் மாபெரும் அற மீறலாகவும் குற்றமாகவுமே பார்க்கின்றனர்.
ஹுஸைனையோ அலியின் பிற வழி தோன்றல்களையோ சுன்னி இஸ்லாமியர் இமாம் (முற்றதிகாரம் கொண்ட மதத் தலைவர்) என ஏற்றுக்கொள்ளவில்லை என்பது மட்டுமே வேறுபாடு. சில ஷியா இமாம்களை சுன்னிகள் முக்கியமான ஞானிகளாகவும் கருதியுள்ளனர்.
நன்றி
அஜிதன்
திருத்தத்துக்கு நன்றி அஜிதன். நீங்கள் கூறுவது சரி தான். கர்பலா போர் பிறகு நிகழப்போகும் பிரிவினைக்கு முகாந்திரம் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.