
ஒரு அழையா விருந்தாளி
அர்த்த இரவில் நம் வீட்டினுள்
புகுந்தது போல்
நமக்குள் நுழைந்தது
பிரிவு.
இயல்பான ஒரு பொய்
தெரியக்கூடாத வேளையில்
நம்மை நாமே வார்த்தைகளால்
மீண்டும் மீண்டும்
கீறிக்கொண்டோம்.
எதிர்பாராத சிறிய துரோகம்
கண்ட அந்த ஒரு நாளில்
நம் இரு பிம்பங்களையும்
மாறி மாறி
உடைத்து நொறுக்கினோம்.
அன்று யாரோ ஒருத்தியைப்போல்
என் பின்னால் அமர்ந்திருந்தாய்
அலட்சியங்களை வீசும்
உன் பேச்சின் வாசம்
ஐந்து அடி தூரம் தாண்டியும் வீசியது.
என்னிடமிருந்து விடுபட
தேவை உனக்கொரு காரணம்
அதை உனக்கேற்றவாரு
செய்துகொண்டாய்.
ஒரு முறை
ஒரே ஒரு முறை
மன்னித்திருக்கலாம்.
கறை படிந்த நம் கரங்களை
அழுத்தி துடைத்துவிட்டு
மீண்டும் ஒரு புது உலகம்
வரைந்திருக்கலாம்
ஆனால் வேறு ஒன்றாக
நிகழ்ந்துவிட்டது
ஒரு கனவைப்போல.
இருந்தும்,
இனி மீண்டும் வரையும்
ஒவியத்தின் சாத்தியங்களை
இருவருமே விட்டுச் சென்றோம்.
ஏக்கத்துடன் நம் இருவரையும்
வெறித்துப்பார்க்கிறது
நாம் கையொப்பமிட்ட
அந்த வெள்ளைத்தாள்…
“ஏப்ரல் 6, 2023”