
அதன் தொடக்க காலத்திலிருந்தே தமிழ் நாவல் பல்வேறு கதையாடல்களுக்கு இடம் தந்து வந்திருக்கிறது. தமிழினத்தின் மெய்யியல் உருவாக்கத்தில் நாவலும் பங்களிப்புச் செய்திருக்கிறது. நாவலாசிரியரின் காண்பாடும், நாவலில் அமைந்திருக்கும் காண்மறை அம்சங்களும் அதன் இலக்கியத்தரத்தைத் தீர்மானிக்கின்றன. இனக்குழு சமுதாயங்கள் தமிழ் நாவல் உலகத்தில் மிகத்தாமதாகவே நுழைந்தன. இலக்கிய வரலாற்றில் அவற்றின் இடம் பற்றியும், அப்பின்னணியிலிருந்து வரும் நாவல்கள் ஆவணப்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் பற்றியும் இக்கட்டுரை பேசுகிறது. மிகுதியும் 1970-லிருந்து 2020 வரையிலான காலகட்டத்து நாவல்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றன.
கணியன் பூங்குன்றனார் அளவுக்கு பக்குடுக்கை நன்கணியார் தமிழர்களால் அறியப்பட்டவர் அல்லர். ஆனால் நன்கணியாரின் மெய்யியல்1 பூங்குன்றனார் அளவுக்கே முக்கியத்துவம் வாய்ந்தது. இவ்வுலகத்தின் இயல்பு உணர்ந்தவர்கள் இன்னாதவற்றில் இனிமை காணும் பண்பைப் பெற்றிருப்பார்கள் என்ற நன்கணியாரின் பாடல் தமிழ்ச் சமூகத்தின் மெய்யியலை மேலும் வலியுறுத்திக் கூறுகிறது. எத்தனை நீண்ட மரபுடைய சமூகமாக இருந்தாலும் அதன் மெய்யியல் கால மாற்றங்களுக்கு உட்படுவது இயல்பானது. மெய்யியலை சுருக்கமாக ஒரு தனிமனிதனின் – ஒரு சமூகத்தின் வாழ்வு நோக்கு எனச்சொல்லலாம். ஒரு பொருளின் வெளித்தோற்றத்திற்கும், அதன் உண்மையான பண்புக்குமுண்டான இடைவெளியைக் கண்டுபிடிக்கும் சத்தியத்தேடலே மெய்யியலாகிறது. இந்தத் தேடலில் கலை,இலக்கியத்தின் பங்கு முதன்மையானது. கிரேக்க, ரோமானிய நாகரிகங்களிலும், இந்திய நாகரிகத்திலும் தொன்மங்கள் இலக்கியத்தின் பகுதியாகக் கருதப்பட்டன. அதற்கும் ஒரு படி மேலாக நடப்பியல் வாழ்க்கையிலிருந்து, நிலவியல் பின்னணியிலிருந்து உருவாக்கப்பட்ட சங்க இலக்கியம் உலக மெய்யியல் வரலாற்றில் தனித்த இடத்தைப் பெற்று வந்திருக்கிறது.
ஓர் எழுத்தாளனின் மெய்யியல் ஒரு சமூகத்தின் மெய்யியலாகிறது. இருபதாம் நூற்றாண்டின் தமிழர் மெய்யியல் 1930-களிலிருந்து தான் உருக்கொண்டது. பாரதியார் என்ற ஒரு தனி மனிதரிலிருந்து வெளிப்பட்ட இந்த மெய்யியல் மணிக்கொடி என்னும் இதழ் வழியாக சமூக மெய்யியலாக மாறியது. அரசியல் தன்மான உணர்வு, இந்திய ஒருமை, காந்தீயம் வழி வந்த தனிமனித அறம் என்பவை இந்த மெய்யியலின் பாகங்களாக இருந்தன. இதற்கு இணையாக 1920-களிலிருந்தே திராவிட மெய்யியல் என்னும் இனம் சார்ந்த ஒரு மெய்யியலும் உருவாகி வளர்ந்து வந்தது. இரண்டும் தமிழ் மண்ணிலிருந்தே உருவாகியிருந்தாலும் பல தளங்களில் இரண்டுக்குமான வேறுபாடுகள் தெரிந்தன. 1920-களிலிருந்து வெளிப்பட்டு வந்த இந்த வேறுபாடுகள் 1960-களில் கூர்மையடையத் தொடங்கின. பகுத்தறிவு, பெண்ணுரிமை, சமயம் என்னும் அடிப்படைகளில் தனித்த அடையாளம் கொண்டதாக திராவிட மெய்யியல் இனம் காணப்பட்டது.
1970-களுக்குப் பிறகு அரசியல் அளவில் நிலைகொண்ட திராவிட மெய்யியல் 2000-க்குப் பிறகான கணினி யுகத்தில் மேலும் தன்னை உறுதிப்படுத்திக்கொண்டது. இந்த அரை நூற்றாண்டுக் காலகட்டத்தில் (1970-2020) தமிழ்ச்சமூக அமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன. முதல் தலைமுறைக் கல்வி பெற்றவர்கள் கிராமத்திலிருந்து நகர்மய நாகரிகத்துக்குள் நுழைந்த பிறகு உருவான இரண்டாம், மூன்றாம் தலைமுறையினர் ஏற்கனவே பொது வெளியில் நிலவிலிருந்த பண்பாடு, சமயம் என்பவற்றோடு தமக்கு ஒவ்வாமை இருந்ததை உணர்ந்தார்கள். ஒரு புதிய மெய்யியலை உருவாக்குவது அல்லது ஏற்கனவே இருந்த மெய்யியலில் மாற்றங்களை ஏற்படுத்துவது என்பவை காலத்தின் தேவையாக இருந்தன. இந்தத் தேவையை இலக்கிய வடிவங்கள், குறிப்பாக நாவல் வடிவம் வெளிப்படுத்தியது.
தென் தமிழகத்திலிருந்து வெளியான புத்தம் வீடு (1964) தலைமுறைகள் (1968) என்னும் நாவல்கள் இந்தத் தேவைக்கு கட்டியம் கூறின. இந்த நாவல்கள் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையை, பிரச்சினைகளைப் பற்றி மட்டும் பேசாமல் குறிப்பிட்ட சமூகங்களின் கதையைக் கூறின. வேறு மொழியில் சொல்வதானால் இந்த நாவல்கள் மூலமாக தமிழ் இனக்குழுக்கள் தமிழ் நாவலுக்குள் வந்தன. 1942-ல் வெளிவந்த நாகம்மாள் நாவலும் அதற்குப் பின் வந்த சண்முகசுந்தரத்தின் நாவல்களும் இனக்குழு சமுதாயத்தின் பிரதிபலிப்புக்களாகவே இருந்தன.
இதே காலகட்டத்தில் வந்த வேறுபல நாவல்களும் இருக்கும்போது இந்த நாவல்களைப் பற்றி மட்டுமே நாம் ஏன் பேச வேண்டும்? காரணம் இருக்கிறது. வெறும் இனக்குழு சமுதாயத்தைப் பற்றிய நாவல்கள் என்பதற்காக மட்டும் இந்த நாவல்கள் பேசப்பட வேண்டியதில்லை. இவற்றில் அமைந்திருக்கும் அழகியல் அம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொண்டு தான் பேச வேண்டும். எந்த ஒரு கலைப்படைப்பிலும் முதன்மையாக அமைந்திருக்க வேண்டியது காண்மறை அம்சங்களேயாகும். வெளிப்படையாகச் சொல்லப்படாத. ஆழ்மனதால் அறிந்து, உணர்ந்து அனுபவிக்க முடிகிற அம்சங்களே காண்மறை அம்சங்கள். மெய்யியலில் ஒரு பொருளின் தன்மை அதற்குத் தானாக வந்து அமைவதில்லை. அதனோடு தொடர்புடையவர் ஏற்படுத்திக்கொள்ளும் உறவின் மூலமாகவே அதனின் பண்புகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஒரு நாவலில் அமைந்து நிற்கும் காண்மறை அம்சங்கள் மூலமாக நாவலாசிரியர் தனது காண்பாடு (தரிசனம்) என்ன என்று காண்பிக்கிறார். ஆக இந்தக் காண்மறை அம்சங்களும், காண்பாடும் ஒரு நாவலின் இலக்கியத்தகுதியைத் தீர்மானிக்கின்றன. ஆர்.சண்முகசுந்தரம், ஹெஃசிபா ஜேசுதாசன், நீல.பத்மனாபன் ஆகியோர் இத்தகுதியைப் பெற்றவர்கள் என்பதை காலம் நிரூபித்திருக்கிறது. ஒரு எடுத்துக்காட்டுக்காகவே இவர்களது பெயர்கள் சுட்டப்படுகின்றன. பட்டியல் இன்னும் நீளமானது. இது 1970 வரையிலான காலகட்டம்.
இதே காலகட்டத்தில் காலனி ஆதிக்கத்திலிருந்து பிரிந்த பல ஆப்பிரிக்க நாடுகளில் இது போன்ற நாவல்கள் வெளிவந்தன. நைஜீரியாவின் சினுவா அச்செபே, வோலி சோயிங்கா, கென்யாவின் தியோங்கோ ஆகியோரது எழுத்துக்கள் உலக அளவில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஆப்பிரிக்க நாடுகள் இந்தியாவை விட அதிகமாக இனக்குழு சமுதாயங்கள் கொண்ட நாடு. ஆனால் இலக்கியப் பாரம்பரியத்திலும், பண்பாட்டுப் பாரம்பரியத்திலும் தமிழ்நாடு அளவுக்குப் பழமையானவை அல்ல. அல்லது அவர்களது மரபுகள் தமிழ்நாடு அளவுக்கு ஆவணப்படுத்தப்படவில்லை. இதனாலேயே அங்கே மதமாற்றம் எளிதாக நடந்தது. கென்யாவில் 85 சதவீதமும், நைஜீரியாவில் 49 சதவீதமும் கிறித்தவர்களாக மதம் மாற்றப்பட்டிருக்கிறார்கள். மதமாற்றம் பெரிய அளவுக்கு அவர்களது படைப்பாக்கத்தை ஆக்கிரமித்திருக்கிறது. இது ஒரு புற மத இடையீடு. தமிழ்நாட்டில் இது அகமத இடையீடாக மாறியிருக்கிறது. தெய்வம் ஒன்று தான். வழிபாட்டு முறை வேறு. குடியேற்றங்களுக்கு மதமும் ஒரு காரணமாக இருக்கிறதென்பதை கி.ராஜநாராயணனின் கோபல்லகிராமம் (1976) நாவல் காண்பித்தது. பெரும்பான்மையான நாட்டார் இலக்கியங்களில் மதவெறி காரணமாக, நீளும் அதன் கரங்களிலிருந்து தங்களின் பெண்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக இனக்குழு சமுதாயங்கள் புலம் பெயர்ந்திருக்கின்றன. இனக்குழுக்களுக்கென்று சொல்லப்படும் கதைகள் மனிதரிடம் ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. இதுவே ஒரு கட்டத்தில் மானுடவியல் வண்ணத்தை, கலாச்சார மானுடவியல் வண்ணத்தைக் கொடுத்து விடுகின்றன. ராஜநாராயணனுக்குப் பிறகு எழுத வந்த பூமணி, சோ.தருமன், சி.எம்.முத்து, சோலை சுந்தரப்பெருமாள் ஆகியோரது நாவல்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த வகையான நாவல்களில் மானுடவியல் அம்சங்கள் இடம் பெறுகிற அளவுக்கு காண்மறை அம்சங்களும், காண்பாடும் இடம் பெறுவதில்லை. மானுடவியல் வண்ணம் சார்ந்து எழுதப்படும் நாவல்களைப் போலவே
தன்னுணர்வு சார்ந்து எழுதப்படும் நாவல்களிலும் காண்பாடும், காண்மறை அம்சங்களும் இல்லாத நிலையில் அழகியல் அம்சங்கள் குறைந்து வெறும் விவரணைகளாகிப் போகின்றன. தமிழில் எழுதப்படும் நாவல்களுக்கும், தமிழர் வாழ்க்கையைப் பற்றி எழுதப்படும் நாவல்களுக்குமிடையில் வேறுபாடுகள் இருக்கின்றன. இலக்கியப்படைப்பு என்ற வகையில் இரண்டும் ஒரே தட்டில் நிறுத்தப்படும் என்றாலும் தமிழர் வாழ்க்கையைப் பற்றி எழுதப்படும் நாவல்கள் இலக்கியப்படைப்பு என்பதோடு சமூக, பண்பாட்டு ஆவணங்களாகவும் இருக்கின்றன.
சிலிர்ப்பு, தவிப்பு, வெறுமை என்ற மூன்று சட்டகங்களில் ஒட்டு மொத்த தமிழ் நாவல் வரலாற்றை அடக்கி விட முடியும். நமது மொழியில் இப்படியெல்லாம் எழுத முடியுமா, நமது தமிழ் வாழ்க்கையில் இத்தகைய அம்சங்கள் இருக்கின்றனவா என்கிற சிலிர்ப்பு பிரதாப முதலியார் சரித்திரம் நாவலிலிருந்து தொடங்குகிறது. சமூகங்கள் நிலை கொண்ட பிறகு,வெளியுலக வாழ்வுக்கு தங்களைப் பொருத்திக்கொண்ட பிறகு அதன் காரணமாக எதிர்கொள்ளும் சவால்கள் தவிப்பை ஏற்படுத்துகின்றன. சாதி, வர்க்க முரண்பாடுகள் இந்தத் தவிப்புக்குக் காரணமாக அமைகின்றன. ரகுநாதன், செல்வராஜ், சின்னப்ப பாரதி ஆகியோரது நாவல்களில் இந்தத் தவிப்புத் தெரிந்தது. இவை எதுவும் இல்லாமல் தனது ஆன்ம விசாரணைகளை மட்டுமே மையமாக வைத்து எழுதப்படும் நாவல்களை லா.ச.ராமாமிர்தம் படைத்திருந்தார். ஆன்ம விசாரணையாக இல்லாமல் வாழ்க்கை விசாரணையாக தனது நாவல்களை அமைத்துக்கொண்டவர் அசோகமித்திரன். வாழ்க்கை விசாரணையின் உச்சத்திற்கே சென்று இறுதியில் அங்கே வெறும் வெறுமையையே கண்டவர் நகுலன். கல்லில் நார் உரிப்பதைப்போல வாழ்வின் இறுதி மரணம் என்றால் அந்த மரணம் எப்படித்தான் இருக்கும் என்று பார்க்க முயன்றவர் இடைவெளி நாவலை எழுதிய சம்பத். இவையெல்லாம் எந்த இனக்குழுவோடும் சம்பந்தப்படவில்லையென்றாலும் மனிதனின் தீர்க்க இயலாத, விடை காண முடியாத பிரச்சினைகளை புனைகதைக்குள் கொண்டு வர முயற்சித்தவை. எந்த மொழிக்கும் வளம் சேர்ப்பவை
உலக இலக்கியத்தில் மிக முக்கியமான நாவல்கள் மதத்தை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கின்றன. மதத்தை விமரிசித்தும், வாழ்க்கையின் சிக்கல்களையும், முடிச்சுக்களையும் அவிழ்ப்பதற்கான சூத்திரங்களை அதில் காணமுடியாதது குறித்தும் நாவல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் அப்படி எழுதிய நாவலாசிரியர்கள் காணாமல் போய்விட்டார்கள். மதம் எல்லா வடிவங்களிலும் இன்னும் மனிதனுக்கு உள்ளும், வெளியிலும் நடமாடிக்கொண்டு தானிருக்கிறது.
மதத்தை வெறும் சடங்காகவும், ஒழுக்க நெறிமுறைகளுக்கு ஒரு அரணாகவும் பார்ப்பதைத் தவிர்த்து, அதனைத் தனது ஆழ்மனதின் விசாரணைக் கூடமாகவும், மன அமைதிக்கான எல்லாக்கூறுகளையும் இழந்த பின்னே சரணாகதி அடையக்கூடிய இடமாகவும் வைத்துப் பார்த்தவர் தி.ஜானகிராமன். அவரது அம்மா வந்தாள் (1966) தமிழ் மொழியில் எழுதப்பட்டதாக இருப்பினும் உலக இலக்கியத்திற்கு ஒரு பங்களிப்பாகக் கருதப்பட வேண்டிய நாவல். எவ்வளவு தான் நுட்பமாகவும், காத்திரத்துடனும் எழுதப்பட்டிருப்பினும் எந்தப் புனித நூலையும் தாண்டிச் செல்லும் வேகத்தைக் கொண்டது வாழ்க்கை என்பது ஜானகிராமனின்முடிவு. இத்தனைக்கும் மதத்தைப் புறக்கணிக்கிற மாதிரியோ அல்லது மத நம்பிக்கையை புண்படுத்துகிற மாதிரியுமான அணுகு முறையோ அவரிடம் இல்லை. தனது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மதத்தை நம்புகிற அளவுக்கு இயற்கை வடிவங்களையும் அவர் எழுத்துக்கள் நம்புகின்றன. ஆனால் உருவாகும்போதே சபிக்கப்பட்டதல்லவா மனித வாழ்க்கை? ஓடி வரும் நதியானால் என்ன? ஓசை எழுப்பும் பறவையானால் என்ன? இயற்கை என்ன செய்ய முடியும்? எதனோடும் வருத்தம் கொள்ளாதது ஜானகிராமனின் எழுத்து. தண்டபாணிக்கு அவர் மனைவி அலங்காரத்தம்மாள் மீது என்ன வருத்தம் இருந்தது? மற்ற குடும்ப உறுப்பினர்கள் கூட யார் அந்த அம்மாவை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள்? யாரும் யாருடனும் வருத்தப்பட்டுத்தான், கோபப்பட்டுத்தான் என்ன ஆகப்போகிறது? அவர்களது
நடமாட்டம் தொடர்ந்து போய்க்கொண்டே இருக்கிறது. இயற்கை என்பதை வெறும் மரமாகவும், செடியாகவும் பார்க்காமல் இயல்பு என்ற பொருளில் பார்க்கிறார் ஜானகிராமன். அவர் அளவுக்கு காவிரி நதியை கௌரவப்படுத்திய கதாசிரியர் தமிழில் வேறு யாருமில்லை. அதே சமயம் ‘நீ தானே எல்லாப்பாவங்களுக்கும் மௌன சாட்சி’ என்று காவிரியை நொந்து கொள்ளவும் தவறவில்லை. பாவத்தைக் கழுவவா புண்ணியத்தைத் தேடவா என்ற மனிதனின் கேள்விக்கு எந்த நதியும் பதில் சொல்வதில்லை. எல்லாமும் காண்மறை அம்சங்களாகவே இருக்கின்றன.
இந்த காண்மறை அம்சங்கள் சுமதியின் கல்மண்டபம் (2001) நாவலில் வேறு ஒரு தளத்தில் செயல்படுகின்றன. வைதீகம் வேறு. வைதீகத்தை நடத்தி வைக்கிறவர்கள் வேறு. வைதீகம் எப்போதும் புனிதம் கெடாமலே இருக்கிறது. ஆனால் வைதீகத்தை நடத்தி வைக்கிறவர்களும், அதனால் பலன் பெறுகிறவர்களும் புனிதத்திற்கும், புனிதமின்மைக்குமிடையில் தடுமாறிக்கொண்டேயிருக்கிறார்கள். இந்தத் தடுமாற்றத்தின் ஒரு எல்லையைத் தொட்டுக் காண்பிக்கிறது கல்மண்டபம். பரதுக்கத்தைத் தன் துக்கமாக நினைப்பது தான் வைதீகத்தின் சாரம். அப்படி நினைக்கும்போது வைதீகம் மனுஷாளின் தேவைக்கு ஏற்ப தன் பொருளை நேர்த்து, நிமிர்த்தி வளைத்துக் கொடுக்கும். கொடுக்க வேண்டும். அப்படி நடந்திருந்தால் அதற்கு எந்தக் காலத்திலும் எதிர்ப்புத் தோன்றியிருக்காது. அது ஏன் நடக்காமல் போகிறது என்பதற்கான காரண காரியங்களைச் சொல்ல முயற்சிக்கிறது கல்மண்டபம். அம்மா வந்தாள் நாவலுக்கும், கல்மண்டபம் நாவலுக்குமான இயங்குதளத்தில் தென்படும் தமிழ்ச் சமூகம் பெருவாரித்தமிழ்ச் சமூகம் அல்ல. ஆனால் பெருவாரித் தமிழ்ச்சமூகம் அக்கறை கொள்ள வேண்டிய, கவலைப்பட வேண்டிய பல அம்சங்கள் இரண்டு நாவல்களிலும் உள்ளன. பெருவாரியாக இருந்தாலும், சிறுவாரியாக இருந்தாலும் எல்லாம் மனித சமூகத்தின் அங்கங்கள் தானே!
இந்தப் பெருவாரிச்சமூகத்திலிருந்து தான் கலகக்காரர்கள் தோன்றுகிறார்கள். அவர்கள் தங்கள் சமூகத்திற்கெதிராகக் கலகம் செய்வதில்லை. சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுக்க வரைகோடுகளுக்கெதிராகக் கலகம் செய்கிறார்கள். இதைத் தனது இரண்டு நாவல்கள் மூலமாகக் கொண்டு வந்தவர் ப.சிங்காரம். கடலுக்கு அப்பால் (1959) புயலிலே ஒரு தோணி (1972) என்ற இரண்டு நாவல்களும் தமிழ்ச்சூழலுக்கு அப்பால் அந்நிய தேசங்களில் நடக்கும் கதைகளாக இருப்பினும் ஒரு தமிழனின் முறை சாரா வாழ்வும், அந்த முறைசாரா வாழ்விலிருந்து கிடைக்கும் காண்பாடும் தனித்த பங்களிப்புகளாகத் தெரிந்தன. எந்த சூழலில் வாழ நேர்ந்தாலும் தமிழ்த்தனம் என்ற ஒரு பண்பு எந்தக் கலகக்காரனிடமிருந்தும் ஒரேயடியாக விலகி நிற்பதில்லை. கலகக்காரனின் செயல்பாடு எளிதில் கவனம் பெற்று விடுகிறது. ஆனால் பெருவாரிச்சமூகத்தின் செயல்பாடுகள் அதன் இயக்கங்கள் என்பவை ஒரு வரலாற்றாசிரியனை எதிர்ப்பார்த்துக் காத்திருக்கின்றன.
தமிழ்ப் பெருவாரிச்சமூகம் நிலவியலுக்குத் தகுந்த மாதிரி பிரிக்கப்பட்டிருந்தது. நிலவியலுக்குத் தகுந்த மாதிரியான உணர்வுகளும் உரிப்பொருளாக வரையறுக்கப் பட்டிருந்தன. இதில் நெய்தலும் ஒன்று. பிணையும் உறவுகளும், பிரியும் உறவுகளும் ஏற்படுத்தும் சோகங்களை நமது நெய்தல் திணை மக்கள் அளவுக்கு யார் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்? ஆனால் இரங்கலும், இரங்கல் நிமித்தமுமான செய்திகளோடு மட்டுமே ஒரு சமூகத்தைச் சுருக்கிக் கொள்வது முறையாகாது, எந்தச் சமூகத்திற்கும் அதற்கென்று மரபுகள் இருக்கின்றன. அதற்கென்று வரலாறு இருக்கிறது. தமிழினத்திற்கான பொது வரலாற்றை விட ஒவ்வொரு நிலத்திற்குமான இந்தத் தனித்த வரலாறுகள் பண்பாட்டு வரலாற்றுக்கு மிகவும் அவசியமானவை. புனைகதைப் படுத்தப்பட்ட வரலாறு அதிக தாக்கத்தை உண்டு பண்ணுகிறது. ஜோ டி குரூஸ் தனது ஆழி சூழ் உலகு (2004), கொற்கை (2009) என்ற இரண்டு நாவல்கள் மூலமாக மட்டுமல்லாமல் தனது அரசியல் மற்றும் பண்பாடு சார்ந்த சில அறிவிப்புகளாலும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். மரபு என்னும் பெருவெளியின் முன் நின்று கொண்டு தங்களது வாக்குமூலங்களைக் கொடுக்கும் ஜானகிராமன், சுமதி போன்ற நாவலாசிரியர்களுக்கும், ஜோ டி குரூசுக்குமிடையில் வேற்றுமைகள் இருப்பதாகத் தோன்றினாலும் ஓர் இன வரலாற்றின் பண்பாட்டுப் பகுதிகள் என்ற அளவில் இவை தத்தமக்குரிய இடத்தைப் பெறுகின்றன.
எந்த இனத்திலும் வேற்றுமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அந்நியக் குடியேற்றத்தின் போதும், பொருளாதார ஏற்றத்தாழ்வின் சூழ்நிலையிலும் இந்த வேற்றுமைகள் மேலும் கூர்மையடைகின்றன. இப்படி வரலாற்றின் தொடர்பற்றுப்போன நாவிதர் சமூகம் பற்றியும், அவர்களிடமிருந்த மருத்துவத் தொழில் பற்றியும் மீட்டுருவாக்கிச் சொன்னது முத்துநாகு எழுதிய சுளுந்தீ நாவல் (2018). முறையான வரலாறு இல்லாத ஒரு சமூகத்தில் வரலாற்றின் ஒரு பகுதியை ஒரு புனைகதை எடுத்துச்சொல்கிறது. அதன் மூலமாக ஒரு வரலாற்று ஆவணமாகவும் ஆகிறது. இது ஒரு புதிய நிகழ்வு
பண்பாடு என்பது ஓரினத்தின் பெருமிதத்துக்குரிய ஓர் அம்சம் எனக்கருதுதல் பொதுவெளியின்பாற்பட்ட ஒரு கருத்தாக்கம். அது சரிதான். ஆனால் அதே இனம் தனக்கென்று ஒரு மெய்யியலையும் உருவாக்கி வைத்துக் கொள்கிறது. அந்த மெய்யியல் அந்த இனத்தின் பெருமிதத்தைக் குறிப்பதற்காக மட்டும் உருவாகிக் கொள்வதில்லை. வாழ்வியலின் சிக்கல்களைத் தாண்டிச்செல்வதன் மூலமாக எவ்வாறு மனிதத்தைத் தக்க வைத்துக்கொள்வது என்ற நோக்கத்தையும் உட்கொண்டதாக இருக்கிறது. வாழ்பனுபவம் மூலமாக அந்த இனத்து மனிதர்கள் கண்டறியும் உண்மைகளின் அடிப்படையில் அந்த மெய்யியல் உருவாகிறது. மத்தாப்பிலிருந்து தெறிக்கும் விதம் விதமான ஒளிச்சிதறல்கள் போல தான் படைக்கும் கதை மாந்தர்கள் மூலமாக அந்த மெய்யியலை ஒரு எழுத்துக் கலைஞனால் படைத்துத் தர முடியும். அப்படிப்பட்ட கதைகளைப் படைத்தவர் தான் இமையம். அவரது நாவல்களான கோவேறு கழுதைகள் (1994), ஆறுமுகம் (1996), செடல் (2006) ஆகியவை ஒரே மெய்யியலின் பல்வேறு முகங்களைக் காண்பித்தன. இந்த முகங்கள் அசலான தமிழ் முகங்கள். காலம் துடைத்துப் போட்ட எச்ச தொச்சங்களைக் காண்பிக்கிற முகங்கள். ஆனால் ஒருபோதும் புறக்கணித்து விட முடியாத முகங்கள். இமையத்தின் கதைகள் நெடுகிலும் தென்படும் இந்தக் கதை மாந்தர்கள் மூலமாக சமகாலத்தமிழ் நாட்டின் அரசியல், சமூக, கலாச்சார முகங்களும் காணக்கிடைக்கின்றன. அந்த வகையில் இவரது எழுத்துக்கள் பல ஆவணங்களின் மூலங்களாகின்றன.
ஆவணப்படுத்துதல் நாகரிக வரலாற்றின் பிரிக்க முடியாத அம்சம். சினம், வன்மம், வீரம் முதலியவை மனித வரலாற்றில் தேவையான அளவு ஆவணப்படுத்தப் படுத்தப்பட்டுள்ளன. பகைவரை வெற்றி கொள்வதற்கான கருவிகளாக இவை கருதப்பட்டன. இதற்கு மாறாக ஒத்துழையாமையைக் கருவியாகக் கொண்டு பகைவரை வென்றெடுக்கும் முறையை மகாத்மா காந்தி இருபதாம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தினார். எங்கோ நடப்பதாக நினைத்துக்கொண்டிருந்த மெய் காக்கும் போராட்டம் என்னும் இந்த ஒத்துழையாமைத் தத்துவப் போராட்டம் தமிழ்நாட்டில் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைத் தன் சொந்த அனுபவமாக அமைத்து மூன்று பாகங்களாக சி.சு.செல்லப்பா எழுதிய சுதந்திர தாகம் (1997) நாவல் ஒட்டு மொத்த மனித நாகரிகத்தின் புதியதொரு பகுதியை ஆவணப்படுத்தியிருக்கிறது. இந்த நாவலின் அழகியல் அம்சங்கள் குறித்து எத்தகைய கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இதன் நேர்மையை யாரும் சந்தேகிக்க முடியாதபடி, ஒதுக்கித்தள்ள முடியாதபடி எழுதியிருக்கிறார் சி.சு.செல்லப்பா.
ஆவணப்படுத்துதல் என்கிற நோக்கத்திற்காக கவனிக்கப்பட வேண்டிய வேறு இரண்டு நாவல்கள் ப.க.பொன்னுசாமி எழுதிய படுகளம் (2008) மற்றும் திருமூர்த்தி மண் (2021) ஒரு முன்னாள் துணை வேந்தர், தேர்ந்த அறிவியல் ஆய்வாளர் தான் எழுதும் நாவலுக்கு நூற்றாண்டுப் பழமையான ஒரு மொழி நடையைப் பயன்படுத்தியிருக்கிறார் என்பது ஆச்சரியம் தான். 1930-களில் கன்னட எழுத்தாளர் குவெம்பு எழுதிய கதைகளின் மொழிநடை இதைவிடச் சிறப்பாக இருந்தது. இரண்டு நாவலாசிரியர்களுமே வேளாண் சமூகத்தைப் பின்புலமாகக் கொண்ட கதைகளையே எழுதினார்கள். மொழி நடையில் குறை இருந்தாலும் ஒரு சமூகத்தின் வரலாற்றை நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறார் என்ற அளவிலும், இத்தகைய பதிவுகள் இலக்கிய வரலாற்றுக்கு அவசியமானவை. இப்படிப்பட்ட நாவல்களை ஒதுக்கித் தள்ள முடியாததற்குக் காரணம் இருக்கிறது. தமிழ் நாட்டின் சமூக மேற்பரப்பு நகர்மயமாகி விட்டாலும் அதன் அகப்பரப்பு இன்னும் இனக்குழு சமுதாயப் பண்புகள்
கொண்டதாகவே இருக்கிறது. பெரும்பாலும் வாய்மொழிப் பண்பாடு கொண்டதாகவும், தொன்மங்களில் நம்பிக்கை கொண்டதாகவும் இருக்கும் தமிழ் இனக்குழு சமுதாயத்திலிருந்து அரிதாக வெளிவரும் புனைகதைகள் பரவலான கவனம் பெறவில்லை.
உலக இலக்கியப்பரப்பில் அதிகம் பேசப்படுகிற நாவல்கள் எல்லாமும் ஐரோப்பா அல்லது லத்தீன் அமெரிக்க நாடுகளிலிருந்து வெளிவந்தவையாக இருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டின் தலைசிறந்த நாவலாசிரியர்களாககருதப்படும் லத்தீன் அமெரிக்க நாவலாசிரியர்கள் இனக்குழு சமுதாயத்திலிருந்தும் அவற்றின் மெய்யியலிருந்தும் வெகுதூரம் வந்து விட்டார்கள். அர்ஜெண்டினாவின் போர்ஹெஸ் நாட்டார் வழக்காற்றியலில் ஈடுபாடு காட்டினாலும் அவரது படைப்புகள் குறிப்பிட்ட நிலவியல் தன்மை கொண்டிருப்பதைத் தவிர்த்து அகிலத்தன்மை கொண்டவையாக இருக்கின்றன. மெக்சிகோவின் யுவான் ருல்ஃபோ, போர்ச்சுக்கீசிய நாட்டின் சரமேகோ ஆகியோர் தங்களது மொழி நடையிலும், காண்பாட்டிலும் அகிலத்தன்மையையே கைக்கொள்கிறார்கள். தங்களது படைப்புகள் மூலமாக அவர்கள் வெளிப்படுத்தும் மெய்யியலும் எந்த ஒரு இனக்குழுவினதுமாக அல்லாமல் அகிலத்தன்மை கொண்டதாக இருக்கின்றன. தமிழ் நாடும், தமிழினமும் அந்த இடம் சேர்வதற்கு இன்னும் பயணிக்க வேண்டியதாக இருக்கலாம்.
முடிவுரை
இலக்கிய வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டமும் ஒரு மெய்யியலை உருவாக்குகிறது. விரிவான கதையாடலை நிகழ்த்துவதால் நாவல்கள் மெய்யியல் உருவாக்கத்திற்குப் பெரும் பங்களிப்புச் செய்கின்றன. இனக்குழு சமுதாயப் பின்புலத்தில் எழுதப்பட்ட தமிழ் நாவல்கள் அவற்றுக்கென்று மெய்யியலை உருவாக்கித் தந்திருக்கின்றன. அவற்றுக்கு அப்பால் உருவான மெய்யியல்களும் தமிழ் நாவல்களில் உள்ளன. மெய்யியலுக்கென்று எந்த வண்ணமும் இல்லை. அது தோன்றும் இடமும் முக்கியமில்லை. அது மெய்யியலாக இருக்க வேண்டும். அதுவே முக்கியம்.
ஓர் இல் நெய்தல் கறங்க, ஓர் இல்
ஈர்ந் தண் முழவின் பாணி ததும்ப,
புணர்ந்தோர் பூ அணி அணிய, பிரிந்தோர்
பைதல் உண்கண் பனி வார்பு உறைப்ப,
படைத்தோன் மன்ற, அப் பண்பிலாளன்!
இன்னாது அம்ம, இவ் உலகம்;
இனிய காண்க, இதன் இயல்பு உணர்ந்தோரே.
பக்குடுக்கை நன்கணியார் (புறம்:194)
(10-03-2023 அன்று கோயம்புத்தூர் பூ.சா.கோ.அர.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி ஒழுங்கு செய்திருந்த ‘பன்முக நோக்கில் நவீனத்தமிழிலக்கியம்’ என்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)
BALANCED AND MUCH NEEDED ESSAY. EXPECTING MORE FROM YOU