நவீனப் போர்விமானங்கள்

முதல் உலகப் போரிலிருந்து இரண்டாம் உலகப் போரையும் தாண்டிப் போர்விமானங்கள் எப்படி வளரத் தொடங்கின என்பதைக் கட்டுரைத் தொடரின் இரண்டாம் பகுதி விவரித்தது.

இரண்டாம் உலகப்போர் இறுதியில் இருந்த போர்விமானங்களைப் பற்றிய சில விவரங்கள்:

  • அப்பொழுதைய விமானங்களின் வேகம்  — இரண்டாம் உலகப் போர் இறுதிவரை உருவாக்கப்பட்ட விமானங்களின் வேகம் – அதிகபட்சம்  மணிக்கு 659 மைல் (1055 கி.மீ) செல்லக் கூடிய, ராக்கெட் விசையில் செல்லும், 1944ல் ஜெர்மனியால் வடிவக்கப்பட்ட மெஸ்ஸர்ஷ்மிட் எம்.இ 163 பின்பற்றித் துரத்தும் போர்விமானத்திலிருந்து — குறைந்தபட்சம் 205 மைல்வரை (330 கி.மீ) செல்லும் — 1935ல் உருவாககப்பட்ட ஜெர்மனியின்  ஹைங்க்கல் எச்.இ 51 தரைப்படையைத் தாக்கும் போர்விமானமாகவும் இருந்தன.[1]  இப்படி இருப்பினும், புதிதாக உருவாக்கப்பட்ட விமானங்களே அதிகபட்ச வேகத்தை எட்டின.  ஆனால், அச்சமயம் ஜெர்மனி தோல்வியடைந்து இரண்டாம் உலக்ப்போர் முடிவடைந்துவிட்டது.
  • ஜெர்மனியுடன் சேர்த்து, பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், ஸ்வீடன், இத்தாலி, பிரான்ஸ், செக்கஸ்லவோகியா, சுவிட்சர்லாந்து, பின்லாந்து, யுகோஸ்லாவியா, நெதர்லாந்து, ரொமேனியா, ஆஸ்திரேலியா, போலாந்து ஆகிய நாடுகள் போர்விமானங்களை உருவாக்கின.
  • இருப்பினும், அனைத்து நாடுகளின் போர்விமானங்களும் சிறப்பானவை என்று சொல்ல இயலாது.  ஜெர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளே அதிகமாகப் போர்விமானங்களை உற்பத்தி செய்து பயன்படுத்தின.
  • அவை செல்லும் தூரம் – அதிகபட்சம் 1942ல் உருவாக்கப்பட் ட மெஸ்ஸர்ஷ்மிட் எம்.இ 264 உளவறியும், குண்டுவீசும் போர்விமானம் 9321 மைல்கள் செல்லக் கூடியது.  இது விசிறி (ப்ரொபெல்லர்) எந்திர விமானம்.  ஆனால் மூன்றே விமானங்களே தயாரிக்கப்பட்டன.  அவையும் நேசநாடுகளின் தாக்குததால் அழிந்தன.[2]
  • அதிகமாகத் தயாரிக்கப்பட்ட போர்விமானம் இல்யூஷின் ஐ.எல்-2. ரஷ்யா 36000க்கும் அதிகமான விமானங்களை இரண்டாம் உலகப் போருக்காக உருவாக்கியது. மிகவும் உறுதியான இந்த விமானத்தைப் பறக்கும் டாங்க் என்று அழைத்தனர்.[3]

சென்ற பகுதியில் வல்லரசாகிய அமெரிக்கா, ரஷ்யா வெவ்வேறு கொள்கைகளைப் பின்பற்றியதால், அவற்றுக்குள் போட்டி ஏற்பட்டு, மூன்று குழுக்கள் – முதலாளித்துவ (NATO), பொதுவுடைமை, கூட்டுசேராத என்ற குழுக்கள் கொண்ட அமைப்புகள் உருவாகின என்று அறிந்தோம்.

அமெரிக்காவுடன் கூட்டுசேர்ந்த முதலாளித்துவ நாடுகள் முன்னேறிய அல்லது மேற்கு வட்டார நாடுகள் என்ற பெயரைப் பெற்றன.

பொதுவுடமை நாடுகள், கிழக்கு வட்டார நாடுகள் எனப் பெயர்பெற்றன.

கூட்டுசேராக் குழு அடங்கிய நாடுகள் மூன்றாம் உலக நாடுகள், அல்லது வளரும் நாடுகள் என அழைக்கப்பட்டன. 

முதலில் சொல்லப்பட்ட முன்னேறிய நாடுகள் தங்கள் போர்த்திறனை வளர்த்துக்கொள்ளத் தொடங்கின. உடனே பொதுவுடமை நாட்டின் தலைமை நாடான ரஷ்யாவும் போட்டியாகத் தன் போர்த்திறனை அதிகரித்ததோடு அல்லாமல், தன்னுடன் சேர்ந்த நாடுகளுக்கு அதை வழங்கியது.

ஆனால், மூன்றாம் குழுவான கூட்டுசேரா நாடுகள், மேற்கு வட்டார நாடுகளால் சுரண்டப்பட்டு, தன்னாட்சி பெற்ற நாடுகள் ஆகும். அவற்றை அடக்கி ஆண்ட வல்லரசு நாடுகள் தங்கள் போர்விமான வடிவமைப்பு அறிவு, உற்பத்தித் திறனை அவற்றுக்கு அளிக்கவில்லை.  எனவே, அந்த நாடுகளிடம்  அத்திறன்களோ, அவற்றை உடனே பெறுவதற்கான செல்வமோ இல்லை.  அவை, தங்களுக்கு நிகராக முன்னேறுவதை எந்த வல்லரசுகளும் விரும்பவும் இல்லை.

அந்த நாடுகளில், 1948, 1962 போர்கள் இந்தியாவுக்குக் கற்பித்த பாடம், தனது இராணுவத் திறமையுடன் போர்விமானத் திறமையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என உணர்த்தியது.  அதற்காக அது எந்தெந்த முயற்சி எடுத்து எதுவரை வளர்ந்தது என்பதைப் பற்றி அறியவேண்டுமானால் அது ஒரு தனிக் கட்டுரையாகத்தான் இருக்கும்.

இரண்டாம் உலகப் போரில் சீனாவின் கண்ணில் விரலைவிட்டு ஆட்டியதும், அமெரிக்காவின் பெர்ல் துறைமுகத்தில் போர்விமானத் தற்கொலைத் தாக்குதல் மூலம் பல போர்க்கப்பல்களை முழுகடித்ததுமான ஜப்பான், அமெரிக்காவால் 1945ல் இரண்டு அணுகுண்டுத் தாக்குதல்களுக்கு ஆளாகியது.  அத் தாக்குதல் ஏற்படுத்திய உயிர்ச்சேதம், கதிர்வீச்சுச் சேதம் அதை முடக்கிப் போட்டது.  இராணுவத்தை அதிகரிக்கமாட்டோம், வல்லரசாக மாட்டோம், அமைதி நாடாவோம் என்ற முடிவை எடுக்கவைத்தது.  அதனால், அது போர்விமான வடிவமைப்பிலோ, உற்பத்தியிலோ, கவனம் செலுத்தவில்லை. 

நாடுகளிடையே சண்டை வராமல் தடுக்கவும், அப்படித் தொடங்கும் சண்டையை நிறுத்தவும் ஜூன் 26, 1945ல் 51 நாடுகள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையை (United Nations) நிறுவின,[4]  அதற்குச் சட்டாம்பிள்ளைகளாக அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்சு, சீனா (இப்பொழுதைய டைவான்) ஆகிய ஐந்து நாடுகள் அமைந்தன. 

இச்சூழலில் எந்த வல்லரசும் போரில் ஈடுபட விரும்பவில்லை.  ஆனால், அப்படி ஒரு போர் வராமல் தடுக்கவும், அதற்காகத் தம்மை வலிமைப் படுத்திக்கொள்ளவும் விரும்பின. அதற்குப் போர்விமானங்களே சிறந்த கருவிகள் என்றும் உணர்ந்தன.

போர்விமானங்களின் வகைகள்:

இரண்டாம் உலகப் போரிலேயே போர்விமானங்கள் பலதரப்பட்டவையாக இருந்தன. அவையாவன:

  • உளவு விமானம்
  • தாக்குதல் விமானம்
  • குண்டுவீசும் விமானம்
  • இராணுவப் போக்குவரத்து விமானம்
  • எரிபொருள் நிரப்பு விமானம்
  • கப்பற்படை விமானம்
  • ஹெலிகாப்டர் விமானம்

இருபத்தொன்றாம் நூற்றாண்டுடன் பார்க்கும்போது, இருபதாம் நூற்றாண்டின் பாதிவரையான காலத்தில் போர்விமானத்தின் தேவைகள் குறைவு.  போருக்காகவே அனைத்து விமானங்களும் வடிவமைத்து உற்பத்தி செய்யப்பட்டன. 

ஆனால், பனிப்போரில் உளவறிவது மிகவும் தலையான ஒன்றாக இருந்தது.  அப்படி உளவறிவதற்கு விமானங்கள் மிக உயரத்தில் அதிக நேரம் பறக்கவேண்டியிருந்தது.  அப்படிப்பட்ட விமானங்களுக்கு அவை பறக்கும்போதே எரிபொருள் நிரப்பவேண்டும்.  அந்த உயரத்திலிருந்து எதிரிநாட்டின், அதாவது, மாற்றுக்கொள்கை நாட்டின் இராணுவ அசைவுகளையோ, தளவாடக் கிடங்குகள், அணு உலைகள், இன்ன பிறவற்றின் இருப்பிடங்கள் இவற்றைப் படம் பிடிக்கவும் காமிராவின் சக்தியை அதிகப்படுத்தவும், அவற்றைத் தானாக இயக்கவும் நுண்ணறிவு பெறவேண்டிவந்தது. இரண்டாம் உலகப் போரில் விமானங்கள் குண்டுவீசும் போது, அவற்றைத் துல்லியமாகக் குறிபார்த்து எறியவோ, குண்டை இலக்கை நோக்கிச் செல்ல வழிநடத்தும் கருவிகளோ இல்லை.

அப்பொழுதிருந்த ராடார்கள் மேகங்களால் மறைக்கப்படும் எதிரியின் போர்விமானங்களை இனம் கண்டுகொள்ளப் பெரிதாக உதவின. அப்பொழுதுள்ள ராடார்களும் மிகவும் எடையுள்ளதாகவும், இயக்குவதற்குச் சிக்கலானதாகவும் இருந்தமையால், தனித் திறமையுள்ள இன்னொருவரின் தேவையும் இருந்தது. எனவே, ஐரோப்பாவில் அதற்காகவே, ‘வழியறிபவை (path-finder)’ என்றழைக்கப்பட்ட தனி விமானம், போர்விமான அணிவகுப்பில் முன்னே சென்று தகவல் கொடுத்தன.[5]

   உடனே, அப்படிப்பட்ட விமானங்கள் பறப்பதை அறிந்து, அதை வீழ்த்த ராடார் உளவிகளும், தரை-விண் குண்டுகளை இயக்க ராடார் பொறுத்தப்பட்ட இயக்கிகளும் கண்டுபிடிக்கப்பட்டன.  அத்துடன் எதிரி விமானங்களின் ராடார் இயக்கத்தைத் தடுக்கும் கருவிகளும் (radar jammers) பொருத்தப்பட்டன.

அவற்றை வடிவமைத்துச் சோதனை செய்யும் தேவையும் ஏற்பட்டது.  அப்படி முன்னேற்றமடைந்த ராடார் நுண்ணறிவே, (1991ல் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்ததால்,) அமெரிக்காவுக்கும், ஈராக்குக்கும் நடந்த பாலைவனப் புயல் (Desert Storm) போரில் அமெரிக்காவுக்கு எதிர்பார்க்காத அளவுக்கு வெற்றியை ஈட்டித் தந்தது.[6]

விரைவாகச் செல்லும் போர்விமானங்கள் வடிவமைப்பு நிலையிலும், அதன் முன்மாதிரியாக ஒன்றிரண்டும் இருந்தன.  ஆனால், போரில் அவை அதிகமாக உபயோகிக்கப்படவில்லை.  அவற்றையும் சீரமைத்து தரத்தை உயர்த்த ஆய்வுகள் மும்முரமாகத் தொடங்கின.

மற்றநாடுகள் எந்தவித முன்னேற்றத்தை எட்டுகின்றன என்பதை அறிந்து அதைவிட அதிக முன்னேற்றத்தை எட்டி அடைய, போட்டி நடந்துகொண்டே இருந்தது.

அதுபோல, வல்லரசுகள் நட்புநாடுகளில் இராணுவப் பாசறைகளை (military bases) அமைத்தன,  அமெரிக்கா உலகெங்கும் 80 நாடுகளில் மொத்தம் 750 இராணுவப் பாசறைகளை அமைத்துக் கிட்டத்தட்ட ஒரு லட்சம் வீரர்களை அங்கு நிலைநிறுத்தியுள்ளது.[7],[8] ஆனால், ரஷ்யாவோ, இருபதே நாடுகளில்தான் இராணுவப் பாசறைகளை அமைத்துள்ளது.[9]

அங்கு தளவாடங்களையும், வீரர்களையும் கொண்டுசெல்லப் பெரிய போர்விமானங்களும் தேவைப்பட்டன. அவற்றின் அமைப்பிலும் அளவுகடந்த முன்னேற்றம் ஏற்பட்டது.

அதுமட்டுமல்ல, மிகவும் விலைமதிப்புள்ள விமானங்களை இழப்பதை எந்த நாடும் விரும்பவில்லை.  (இதற்கு விதிவிலக்கு இந்தியாவும், சிரியாவும் வைத்திருக்கும் மிக்-21 போர் விமானம்தான். அது கிட்டத்தட்ட ஒன்றரை இலட்சத்திலிருந்து இரண்டரை இலட்சம் டாலர் விலையில் கிடைக்கிறது.[10]) ஆகவே, ராடார் மூலம் கண்டறியாத அளவுக்கு முன்னேற்ற விரும்பி அதையும் வடிவமைப்பதில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வெற்றிகண்டன,[11],[12],[13]  அதை மறைவியக்க விமானங்கள் (steath planes) என்று குறிப்பிடுகின்றனர்.

இன்னும் விவரித்துக்கொண்டே போகலாம். அதைச் சற்று நிறுத்திவைத்து, முதலில் குறிப்பிட்ட பலதரப்பான விமானங்களின் பரிமாண வளர்ச்சியைத் தனித்தனியாக அலசுவோம்.  அதற்குமுன் விமான வளர்ச்சிக்கு உதவிய ஜெட் எந்திரங்களைப் பற்றிச் சுருக்கமாக விளக்கம்:

பயணிகள் செல்லும் விமானத்தின் ஜெட் எந்திரம் இரண்டு பகுதிகளைக் கொண்டது.  முதலாவது பகுதி காற்றழுத்தி (air compressor). இரண்டாம் பகுதி டர்பைன் என்னும் காற்றுப் பெருக்கி.  இந்த இரண்டும் ஒரே அச்சில் பற்சக்கரங்கள் உதவியுடன் இணைக்கப் பட்டுள்ளன. 

காற்றழுத்தியிலும், டர்பைனிலும் நிறைய விசிறித் தகடுகள் (turbine blades or vanes) உள்ளன.  காற்றழுத்தி டர்பைனைவிட மெதுவாகச் சுழலும்.  அது சுழலும்போது வெளியிலிருக்கும் காற்றை அதன் விசிறித் தகடுகளை அழுத்தி, உள்ளே இருக்கும் டர்பைனுக்கு அனுப்புகின்றன.

அங்கு எரிபொருள் செலுத்தப்பட்டு பற்றவைக்கப்படுகிறது.  உள்நுழையும் காற்று விரிவடைந்து டர்பைன் விசிறியைச் சுழற்றுகிறது.  அதை டர்பைனை விசிறித் தகடுகள் வேகமாக வெளியில் உந்தித் தள்ளுகின்றன.  அப்பொழுது பலூனிலிருந்து காற்று வெளிச் செல்லும்போது பலூன் முன்னால் தள்ளப்படுவதுபோல ஜெட் எந்திரம் முன்னே தள்ளப்படுகிறது.  அது தான் பிணைக்கப்பட்டிருக்கும் விமானத்தின் இறக்கையை முன்னால் தள்ளுகிறது. 

போர்விமானத்திற்கு அதிகப்பட்ட உந்துவிசை மிகவும் விரைவிலும், சிறிய அளவிலுள்ள ஜெட் எந்திரம் மூலம் தேவைப் படுவதால், பின் எரிப்பி (after burner) என்ற அமைப்பு அதற்கு உதவுகிறது.  டர்பைனிலிருந்து வெளிவரும் காற்றுடன் எரிபொருள் சேர்த்து எரித்து விரிவாக்கப்பட்டு வெளியே தள்ளப்படுகிறது.  இந்த அமைப்பு பயணி விமானங்களில் இருக்காது.

இவ்வளவு சிக்கலான அமைப்புள்ள போர்விமான ஜெட் எந்திரங்கள் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, பிரிட்டன் முதலிய நாடுகளால் தயாரிக்கப்படுகின்றன.  சீனா மற்ற நாடுகளின் ஜெட் எந்திர அமைப்பை நகலெடுத்துத் தயாரிக்கிறது.  ஆனால், அந்த எந்திரங்கள் அதிக நாள்பட உழைப்பதில்லை.[14]

ஜெட் எந்திரங்களுக்குப் புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்கள் அமெரிக்காவிலுள்ள ஜெனரல் எலக்ட்ரிக், பிராட் அன்ட் விட்னி, சி.எஃப்.எம். இன்டர்னேஷனல், பிரிட்டனிலுள்ள ரோல்ஸ் ராய்ஸ்,[15] பிரான்சிலுள்ள ஸாஃப்ரான், ரஷ்யாவின் சுகோய், யு.எம்.பி.ஓ நிறுவனங்கள் ஆகியவை.[16]

உளவு விமானம்

இவை மிக உயரத்தில் பறந்து எதிரியின் நாட்டை நோட்டம்விடும் தன்மை படைத்தவை.  இக்காலத்தில் சிறந்த உளவு விமானங்கள் கிட்டத்தட்ட் 58000 அடியிலிறுந்து 85250 அடிவரை (எவரெஸ்ட் மலையைப்போல கிட்டத்தட்ட இரண்டிலிருந்து மூன்று மடங்கு) உயரம்வரை பறந்துசென்று உளவு பார்க்க வல்லவை.  இவை 36லிருந்து 48 மணி நேரம் விண்ணில் இடைவிடாது பறக்கக்கூடியவை. அமெரிக்காவைச் சேர்ந்த லாக்ஹீட் மார்ட்டின் கம்பெனியின் யு-25 குறிப்பிடத் தக்க விமானங்களில் ஒன்று.[17]

இப்பொழுது இந்த உளவுப் பணியை செயற்கைக் கோள்கள் மிகவும் செவ்வனே செய்துவருகின்றன.  அவை தரையில்  இருப்பவற்றைக் கிட்டத்தட்ட பத்து செ.மீ, அதாவது நான்கு அங்குல அளவுவரை தெளிவாகக் காட்டவல்லவை.  ரகசியமாக இருக்கவேண்டிய இதை முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் தன்னறியாமல் வெளியிட்டுவிட்டார்.[18]

தாக்குதல் விமானமும், குண்டுவீசும் விமானமும்

இந்த இரண்டுரக விமானங்களை ஒன்றாகச் சேர்க்கக் காரணம், இப்பொழுது அவை இரண்டும் ஒன்றாகிப் பலசெயலி (multi-role) விமானங்களாக ஆகிவிட்டன.  மேலும், ஒலியை விட வேகமாகச் செல்லும் திறமையும் இவற்றுக்கு உண்டு. 

தாக்குதல் விமானம் எதிரி விமானங்களோடு மோதி அழிக்க உதவுகிறது.  அது விண்ணிலிருந்து விண்ணில் தாக்ககூடிய ஏவுகணைகளை (air to air missiles) வைத்திருக்கும்.  இவை எதிரி விமானத்தின் எந்திரங்களிலிருந்து வெளிவரும் வெப்பக் காற்றைத் தொடர்ந்து சென்று, அந்த வெப்பக்காற்று வெளிவரும் இலக்கை அடைந்து, வெடிக்கும்.  இதை வெப்பம் தேடும் ஏவுகணை (heat seeking air to air missles) என்பர்.[19]  இவற்றில் சில விமான எந்திரங்களிலிருந்து வெளியேறும் வெப்பக் காற்றின் அகச்சிவப்பு (infra-red) நிறத்தைத் துரத்திச் சென்று தாக்கும்.  இவ்வகை ஏவுகணைகளைல் சிறந்ததை அமெரிக்கா, பிரான்சு, பிரிட்டன், ஜெர்மனி, ரஷ்யா முதலிய நாடுகள் தயாரிக்கின்றன.

இந்த ஏவுகணைகளிலிருந்து தப்பிக்கப் போர்விமானங்கள் தீச்சுடர் எழுப்பும் எரிகணைகளை அனுப்பிக் கடுக்காய் கொடுக்க முயல்கின்றன.[20]

தற்பொழுதைய பலசெயலி விமானங்களில் சிறப்பானவற்றின் பெயர்களூம், அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களும், நாடுகளும் கீழே:[21]

  1. எஃப்-22 ராப்டர்                                 —         லாக்ஹீட் மார்ட்டின்         —         அமெரிக்கா
  2. எஃப்-35 லைட்னிங் 2                       —         நார்த்ருப் க்ரூம்மன்            —         அமெரிக்கா
  3. சுகோய் எஸ்.யு-57                              —         சுகோய்                                  —         ரஷ்யா
  4. செங்டு ஜே-20                                     —         செங்டு                                   —         சீனா
  5. எஃப்/ஏ-18 சூப்பர் ஹார்னெட்      —         போயிங்                                —         அமெரிக்கா
  6. சுகோய் எஸ்.யு-35                              —         சுகோய்                                  —         ரஷ்யா
  7. டஸ்ஸோல் ரஃபேல்                        —         டஸ்ஸோல்                          —         பிரான்சு
  8. யூரோஃபைட்டர் டைஃப்யுன்       —         பி.ஏ.ஈ சிஸ்டம்ஸ்               —         பிரிட்டன், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின்
  9. எஃப்-16 ஃபால்கன்                           —         ஜெனரல் டைனமிக்ஸ்      —         அமெரிக்கா
  10. மிக்-35                                                   —         மிகோயன்                            —         ரஷ்யா

இராணுவப் போக்குவரத்து விமானங்கள்

இதன் தேவை முன்பே விளக்கப்பட்டது.  இவை இராணுவத் தேவைகளுக்கு மட்டுமன்றி, இயற்கையின் சீற்றத்தால் பாதிக்கப்படுவோருக்கு உதவவும், அவர்களைப் பாதுகாப்பான இடத்திற்கு உடனே கொண்டுசெல்லவும், உணவின்றித் தவிப்போருக்கு உணவு, உடை, மருந்துகள் எடுத்துச்செல்லவும் பயன்படுகின்றன.  இவற்றில் சிறந்து விளங்கும் ஐந்து பெரிய விமானங்களைப் பற்றி காண்போம்.

தற்போது முதலிடத்தை வகிப்பது, ரஷ்யாவின் அன்டொனோவ் ஏ.என்-124 என்னும் நான்கு ஜெட் எந்திரங்கள் உள்ள விமானம்.  இதைவிடப் பெரிய அன்டொனோவ் ஏ.என்-225 விமானம், 2022ல் ரஷ்யாவின் உக்ரேனியப் படையெடுப்பின்போது அழிக்கப்பட்டது.[22] இவ்விமானம் 1987லிருந்து பணிபுரிகிறது.  மொத்தம் 54 விமானங்கள் உள்ளன.  இது மொத்தம் 150 டன் எடையை ஏற்றிச்செல்ல வல்லது.

அடுத்தது அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் சி-5எம் சூப்பர் காலாக்சி விமானம்.  இதுவும் 4 ஜெட் எஞ்சின்கள் உள்ளது.  1969லிருந்து உற்பத்தி செய்யப்பட்ட 131 விமானங்களில் இன்னும் 125 உபயோகத்தில் உள்ளன.  இவை 2030வரை உபயோகத்தில் இருக்கும். இதைவிட அதிக பளுதூக்கும், வேகமாகச் செல்லக்கூடிய 52 விமானங்களுக்கு அமெரிக்க இராணுவம் உத்தரவு கொடுத்துள்ளது.

நான்கு டர்பைன் விசிறியுள்ள (turbo-prop) அன்டொனோவ் ஏ.என்-22 விமானம் உலகத்திலேயே மிகப்பெரிய டர்போ-பிராப் விமானம் என்ற பெயரைத் தட்டிச் செல்கிறது.  1965ல் இது உபயோகத்துக்கு வந்தபோது இதுதான் உலகின் மிகப்பெரிய போக்குவரத்து விமானமாக இருந்தது. இது 80 டன்வரை பளு ஏற்றிச்செல்லக்கூடியது. ஆறே விமானங்கள்தான் இன்னும் பறந்துகொண்டிருக்கின்றன.

அமெரிக்க விமானப் படையின் முக்கிய பளுதூக்கி போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் சி-17 குலோப் மாஸ்டர் 3 (Globe Master III) என்னும் விமானம்தான்.  1995ல் செயலுக்கு வந்த இவ்வகை விமானங்கள் 250 தயாரிக்கப்பட்டன. இது கிட்டத்தட்ட 50டன் பளுதூக்க வல்லது.

இதற்கு இணையாக சீனாவின் சியன் ஒய்-20 விமானத்தையும் குறிப்பிட வேண்டும்.  இது 60லிருந்து 66 டன்வரை தூக்கவல்லது.  இப்பொழுது போரிட்டுக்கொள்ளும் ரஷ்யா, உக்ரைனின் உதவியுடன்தான் வடிவமைத்து உருவாக்கப்பட்டது, இந்த ஜெட் பளுதூக்கி விமானம்.  இது முதன் முதலாக 2013ல் செயலுக்கு வந்தது.  இதை இயக்குவது ரஷ்யாவில் செய்யப்பட்ட டி-30 கே.பி.டி2 ஜெட் எஞ்சின்களே!  ஆகவே, இந்த விமான உற்பத்திக்கு ரஷ்யாவைத்தான் சீனா நம்பியுள்ளது.[23]

உலகில் மிகவும் அதிகமாகத் தயாரிக்கப்பட்ட போக்குவரத்து விமானம், ரஷ்யாவுடைய இல்யூசின் 2-76 விமானம்தான்.  இன்னும் 800 விமானங்கள் பறக்கின்றன. 50 டன் பளுதூக்கும் இவை தரக்குறைவான விமானதளங்களிலும் ஏறி இறங்கும் தன்மை வாய்ந்தவை. சைபீரியக் குளிரிலும், ஆர்ட்டிக் பகுதிகளிலும் இயங்கவல்லவை.

எரிபொருள் நிரப்பும் விமானமும், கடற்படை விமானமும்

முதலாவது, போக்குவரத்து விமானத்தின் ஒரு பிரிவு.  இரண்டாவது, தாக்கும் விமானத்தின் ஒரு வகைதான்.  எனவே, அதைப்பற்றி மேலும் விவரிக்கப் போவதில்லை.

ஹெலிகாப்டர் விமானம்

ஹெலிகாப்டரை எப்படி விமானம் என்று சொல்லலாம் என்ற கேள்வி எழுகிறதல்லவா?  விமானத்தின் முன்னால் இருக்கும் விசிறியை மேலே வைத்துவிட்டுச் சுழற்றினால், காற்று கீழே தள்ளப்படுகிறது. விமானம்  மேலெழும்புகிறது.  அது விசிறியுடன் சேர்ந்து சுழலாமலிருக்க அதன் வாலிலும் ஒரு விசிறியை வைத்து அதைச் சுற்றும் திசைக்கு எதிராகச் சுழலச் செய்தால் அது விமானத்தை நிலைப்படுத்துகிறது.

இந்தக் கருத்து, எண்ணம், ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறிய இகோர் சிகோர்ஸ்க்கி என்பவருக்கு உதித்தது.

அவர் அப்படிப்பட்ட ஒரு விமானத்தை வடிவமைத்து உருவாக்கி, 1939ல் செப்டெம்பர் 14ம் தேதி கனெக்டிகட் மானிலத்தில் உள்ள ஸ்டிராட்ஃபோர்ட் என்னும் ஊரில் சில கணங்கள் பறக்கவிட்டார்.[24] அதன் மேம்படுத்தப்பட்ட மாதிரியான ஆர்-4 1940ல் 250லிருந்து 300 மைல் (40-480 கி.மீ) வேகத்தில்  பறந்தது. 

அதுதான் உலகத்தில் முதன்முதலாக இரண்டாம் உலகப்போரில் கலந்துகொண்ட முதல் ஹெலிகாப்டர்.  1944 ஏப்ரல் 25ல், மிகவும் மோசமான இடத்தில் உடைந்து விழுந்த விமானத்திலிருந்தவர்களை, விமானி கார்ட்டர் ஹார்மன் ஒய்.பி-ஆர்4 ஹெலிகாப்டரை உபயோகித்து மீட்டார்.[25]

அதற்குப்பின் ஹெலிகாப்டரின் சிறப்புத் தகுதிகளை அறிந்த வல்லரசுகள் அதன் வடிவமைப்பை முன்னேற்றத் தொடங்கின.  அமெரிக்காவில் அரிசோனா மானிலத்தில் தயாரிக்கப்படும் அபாச்சி ஹெலிகாப்டர்தான் உலகிலேயே தலைசிறந்த போர் ஹெலிகாப்டராக விளங்குகிறது.  இந்தியாவும் இதைத் தன் பாதுகாப்புக்காக வாங்கியுள்ளது.

ரஷ்யாவின் கே-52, மி-28என், அமெரிக்காவின் அபாச்சி ஏ.எச்-64, ஐரோப்பாவின் யூரோகாப்டர் டைகர், ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்டுச் சீனாவால் தயாரிக்கப்படும் சீ-10 (Z-10) ஆகியவை குறிப்பிடத் தகுந்த போர் ஹெலிகாப்டர்களாகும்.

இப்பொழுது ஆளில்லாமல் இயங்கும், ஆண் தேனீ (drone) என்று அழைக்கப்படும் விமானங்களும் உள்ளன.  ராடார் கண்ணில் மண்ணைத் தூவி, கீழாகப் பறந்து குறிப்பிட்ட இலக்குகளைக் குறிபார்த்துத் தாக்கவும், உளவறியவும் இவை உபயோகமாகின்றன.  இவைகளை ஆளில்லா விண்ணூர்திகள் (Unmanned Aerial Vehicles – UAV) என்றும் அழைக்கிறார்கள். 

இவற்றின் உபயோகம் பற்றிக் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், இந்தப் பத்தாண்டு இறுதிக்குள் (2030) அமெரிக்க அரசு இதற்காக 3800 கோடி டாலர்கள் செலவழிக்கத் திட்டமிட்டிருக்கிறது.  அவெஞ்சர், ஆர்.க்யூ-7, நார்த்ரப் குரும்மனின் எக்ஸ்-47ஏ, எம்.க்யு-9 ரீப்பர், எம்.க்யூ-1 பிரிடேட்டர் ஆகியவை குறிப்பிடத் தக்கவை.[26]

மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு விமான வகைகளைப் பற்றியும் தனித்தனியாக விரிவான கட்டுரைகள் எழுதலாம்.  இருப்பினும், இக்கட்டுரைத் தொடரின் நோக்கம் போர்விமானங்களின் பரிமாண வளர்ச்சி குறித்தது மட்டுமே என்பதால், இக்கட்டுரையை இத்துடன் நிறைவு செய்ய வேண்டியுள்ளது.

இப்பரிணாம வளர்ச்சி இத்துடன் நின்றுவிடப் போவதில்லை. வளர்ச்சி என்றுமே தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.  இந்த வளர்ச்சி உலக அமைதிக்கு வழிகோலும் என்றே நம்புவோம். 

ஏனெனில், இராணுவத்திற்காக ஏவப்பட்ட செயற்கைக் கோள்களும், அதனுடன் தொடர்புகொண்டு வழிநடத்தப்படுவதற்காக ஏற்பட்ட ஜிபி;எஸ். கருவிகளும் இன்று ஊடகங்களுக்காகவும், நமது கார்களை வழி நடத்தவும், கைபேசிகள் மூலம் திசை அறியவும், இன்னும் பலப்பலவற்றுக்கும் உபயோகப்படுகின்றன; ஜப்பானில் அமெரிக்கா வீசிய அணுகுண்டின் அறிவு, அணு உலைகள் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்து மக்கள் வாழ்வில் விளக்கேற்றி உதவுகிறது.

இந்தப் பரிமாண வளர்ச்சி இறுதியில் உலக அமைதிக்கும், நன்மைக்கும் வழி வகுக்குமாக!

(முடிந்தது)


[1]      WW2 Fighters Ranked by Speed, Military Factory, https://www.militaryfactory.com/aircraft/ww2-aircraft-ranked-by-speed-fighters.php

[2]     Messerschmitt Me 264 (Amerika Bomber), Military Factory, https://www.militaryfactory.com/aircraft/detail.php?aircraft_id=759

[3]      World War II Aircraft by Numbers, by Peter Suciu, National Interest, Mar 21, 2021, https://nationalinterest.org/blog/buzz/world-war-ii-aircraft-numbers%E2%80%94-fastest-longest-range-180826

[4]      UN Membership, Dag Hammerskjold Library, UN.Org, https://research.un.org/en/unmembers/founders

[5]      Radar Charts from the Bombing of Dresden, by Roger Connor, National Air and Space Museum, Oct 24, 2013, https://airandspace.si.edu/stories/editorial/radar-charts-bombing-dresden

[6]      How Operation Desert Storm Changed Air Warfare Forever, by Warrior Maven, National Interest, Jan 13, 2022, https://nationalinterest.org/blog/reboot/how-operation-desert-storm-changed-air-warfare-forever-199455

[7]      Infographic:  US military presence around the world, by Mohammad Hussein and Mohammed Haddad, Aljazeera, Sep 10, 2021, https://www.aljazeera.com/news/2021/9/10/infographic-us-military-presence-around-the-world-interactive

[8]      How Many US Military Bases Are There in the World? by Everett Bledsoe, fact checked by Brain Bartell, The Soldiers Project, Apr 1, 2023, https://www.thesoldiersproject.org/how-many-us-military-bases-are-there-in-the-world/

[9]      How Many Military Bases Does Russia Have Overseas? by Everett Bledsoe, fact checked by Brain Bartell, Apr 2, 2023, The Soldiers Project, https://www.thesoldiersproject.org/how-many-military-bases-does-russia-have/

[10]     6 ‘Top Gun’-Style Fighter Jets You Can Buy for Less Than the Price of a Supercar, by Howard Walker, Robb Report, July 6, 2021, https://robbreport.com/motors/aviation/gallery/fighter-jets-sale-1234622620/

[11]    B2 Spirit Steath Bomber, Northrup Grummen, https://www.northropgrumman.com/what-we-do/air/b-2-stealth-bomber/  

[12]    Russia unveils new stealth fighter jet to compete with F-35, By Vladimir Isachnekov, 21 July 2021, https://www.timesofisrael.com/russia-unveils-new-stealth-fighter-jet-to-compete-with-f-35/

[13]    China’s first stealth jet looks an awful lot like the US’s first stealth fighter, by Benjamin Brimelow

Nov 19, 2020. https://www.businessinsider.com/how-china-j20-stealth-jet-compares-to-us-f22-fighter-2020-11?op=1

[14]  Engine Trouble: Why China’s Home-Made Engines Aren’t Good Enough for Its Air Force by Robert Farley and J. Tyler Lovell, The National Interest, March 14, 2020, https://nationalinterest.org/blog/buzz/engine-trouble-why-chinas-home-made-engines-arent-good-enough-its-air-force-133147  

[15]    Who are the world’s largest aricraft enginee manufactures? by Aerotime Team, Aerotime Hub, Oct 14, 2022, https://www.aerotime.aero/articles/32417-who-are-the-world-s-largest-aircraft-engine-manufacturers

[16]      Su-35 Flanker-E Multirole Fighter, Airforce Technology, Apr 9, 2021, https://www.airforce-technology.com/projects/su-35/

[17]   Reconnaissance Aircraft, By Lloyd R. Jenkinson, and James F. Marchman III, Science Direct, March 2003, https://www.sciencedirect.com/topics/engineering/reconnaissance-aircraft

[18]     Trump Accidentally Revealed The Amazing Resolution Of U.S. Spy Satellites, by Jonathan O’Callaghan, Science, Sep 1, 2019, https://www.forbes.com/sites/jonathanocallaghan/2019/09/01/trump-accidentally-revealed-the-amazing-resolution-of-u-s-spy-satellites/?sh=75897cf13d89

[19]     The world’s most effective air-to-air missiles, Airforce Technology, Jun 1, 2019, https://www.airforce-technology.com/features/featurethe-worlds-most-effective-air-to-air-missiles-4167934/

[20]     Why flares are the first line of defense for military aircraft in flight by Ruddy Cano, We Are the Mighty, Jun 9, 2022, https://www.wearethemighty.com/articles/why-flares-are-the-first-line-of-defense-for-military-aircraft-in-flight/

[21]     Top 10 Best Fighter Jets in the World, by Auto Journalism, Apr 11, 2021, https://autojournalism.com/top-10-best-multirole-combat-fighter-jet-in-the-world/

[22]     Top 10 Largest Military Transport Aircraft, Military Today, http://military-today.com/aircraft/top_10_cargo_aircraft.htm

[23]     மேற்படிக் குறிப்பு

[24]     World’s First Helicopter, Connecticut History.org, https://connecticuthistory.org/worlds-first-helicopter-today-in-history/

[25]     First Combat Helicopter, By: History.com Editors, History, May 30, 2012, உpdated: Auக் 28, 2018, https://www.history.com/topics/inventions/first-combat-helicopter-video

[26]     12 Military Drones Employed by the US Military, by Rob V, OMK, Mar 30, 2023, https://www.operationmilitarykids.org/military-drones/  

Series Navigation<< போர்விமானங்களின் பரிணாம வளர்ச்சி – 1

One Reply to “நவீனப் போர்விமானங்கள்”

  1. // அந்த நாடுகளில், 1948, 1962 போர்கள் இந்தியாவுக்குக் கற்பித்த பாடம், தனது இராணுவத் திறமையுடன் போர்விமானத் திறமையையும் வளர்த்துக்கொள்ளவேண்டும் என உணர்த்தியது. அதற்காக அது எந்தெந்த முயற்சி எடுத்து எதுவரை வளர்ந்தது என்பதைப் பற்றி அறியவேண்டுமானால் அது ஒரு தனிக் கட்டுரையாகத்தான் இருக்கும் //

    முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக முக்கி முக்கி நம்மால் தேஜாஸ் என்ற லகுவகை போர்விமானம்தான் உருவாக்க முடிந்திருக்கிறது. அதிலும் இஞ்சின் தொடங்கி 50%-க்கும் அதிகம் வெளிநாட்டு தயாரிப்புகள்.

    எஞ்சினைப் பொறுத்தவரை, காவேரி எஞ்சினை என்னென்னமோ செய்தும் அது தேவையான 95 kN thrust-ஐ தர இயலவில்லை. 2 மில்லியன் டாலர்கள் ஆலோசனைக்கட்டணம் தந்து ஃப்ரெஞ்ச் நிறுவனம் ஒன்றை அமர்த்தி அதை மேம்படுத்த ஆலோசனை தரச்சொன்னோம். என்னவாயிற்று என்று தெரியவில்லை. கேட்டால் ‘ஓ, இஞ்சின் தொழில்நுட்பமெல்லாம் பெரும் சிக்கலானது (அதென்னவோ உண்மைதான். இவ்விஷயத்தில் மேற்குலகு கிட்டத்தட்ட 100 ஆண்டுகால ஆய்வு கொண்டது), நமக்கெல்லாம் அது வாய்க்காது’ என்று ஒரே பாடல்.

    கடைசியாக, ஒரு 45-50 kN thrust தரும் ஒரு dry variant-ஐ தயாரித்துவிட்டு காவேரி எஞ்சினுக்கு வெற்றிகரமாக மூடுவிழா நடத்திவிட்டார்கள் என்று நினைக்கிறேன். தேஜாஸ்-ன் அடுத்த பதிப்பான AMCA-க்கு காவேரி எஞ்சின்தான் என்று முதலில் வீராவேசம் பேசிய DRDO இப்போது, GE இஞ்சின் என்று சொல்லிவிட்டது.

    ஏதோ நமக்கு இருக்கும் பொருளாதார வலிமை, சீனாவை எதிர்க்க இந்தியாவின் தேவை போன்ற புவிசார் அரசியல் மாற்றங்களால், இதுவரை இஞ்சின் தொழில்நுட்பப் பரிமாற்றத்திற்கு முறுக்கிக்கொண்டிருந்த பிரிட்டனும் அமெரிக்காவும், இப்போது இறங்கி வந்திருக்கிறார்கள்.

    ஆத்மநிர்பார் எல்லாம் வெளிநாட்டுக்காரன் ஆய்வு செய்து வடிவமைத்தவற்றை உள்ளூரில் தயாரிக்க மட்டும்தான், நாமாக ஆய்வு வடிவமைப்புக்கெல்லாம் வக்கில்லை போல.

Leave a Reply to பொன்.முத்துக்குமார்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.